ரமண சரிதம் – 33

அஞ்ஞான இருளில் மூழ்கி, நம் இயற்கையான அமைதியையும், ஆனந்தத்தையும் இழந்து விட்டதாக நினைத்துத் திண்டாடும் உலக மக்களின் மீது பெருங்கருணை கொண்டு, எங்கும் நிறைந்திருக்கும் ஒளி ஓர் உருவம் தாங்கி எழுபதாண்டு காலம் நம்மிடையே நடமாடி வந்தது. ஒரு நாள் அத்திருமேனியை மண்ணிலே போட்டுவிட்டு, அது மீண்டும் அகண்டாரத்தில் சுயஞ்சோதியாகப் பிரகாசிக்கத் திருவுளம் கொண்டது.

மகாத்மாக்கள் ஒரு நாள் மறைந்து விடுகிறார்கள். அவர்களுடைய வரலாறுகளைக் கேட்டு, அவர்கள் விட்டுச் சென்ற பொருள்களைக் கண்டு ஓரளவு ஆறுதல் அடையலாம் அவர்களுடைய வாழ்க்கையோ சம்பந்தப்பட்ட பொருள்களைப் பார்த்து மகிழ்வது மனித இயல்பு. ஆனால், அவர்களுடைய வாழ்க்கையின் பொருளை புரிந்து கொள்ள முயல்வது மனிதனின் லட்சியமாக இருக்க வேண்டும்.

ஸ்ரீ தட்சிணாமூர்த்தி அஷ்டகத்தை எப்போதும் வாயில் முணுமுணுத்துக் கொண்டே வீட்டுக் காரியங்களைச் செய்து வந்த அழகம்மை, உலக மாயை அகல மௌனத்தாலேயே ஞானம் புகட்டிய மகனைப் பெற்றாள்.

உடல் தந்த அன்னைக்கு ஞானத் துறவு தந்தார் தெய்வ மகனான ரமணர். ஆனால், உலக நியதிப்படி, சாஸ்திர முறைப்படி அவர் துறவறம் பூண்டவரல்ல.

மதுரையிலிருந்த மகனை “ஓடி வா” என்று தம்மிடம் அழைத்துக் கொண்ட அருணாசலத் தந்தையே அவருக்கு குருவாக இருந்து, ஞானத் துறவு தந்தார். திருவருணையில் காலடி எடுத்து வைத்த அன்றே வேங்கடராமன், உடை, உடைமகளோடு உடலையும், மனத்தையும், சிந்தனையையும் தமக்குச் சொந்தமில்லாதவை என்று உதறியெறிந்து, உண்மை நிலையில் உணர்ந்த ஞானத் தபோதனராக திகழ்ந்தார்.

எல்லா ஆசிரமங்களையும் கடந்து ஒப்புயர்வற்ற நிலையில் வாழ்ந்து கொண்டிருந்த அவரைக் காவியுடுத்தும் ஒரு சந்நியாசியாக்கி விட வெண்டும் என்று, முறைப்படி சந்நியாசம் ஏற்றிருந்த ஒரு சாது நினைத்தார். அவர் மெத்தப் படித்த வித்தகர். சாத்திரங்களுக்குப் புறம்பாக வாழ விரும்பாதவர். ஒரு மடாதிபதியின் முக்கிய சீடரும் கூட.

விரூபாட்ச குகையில் பகவான் “பிராம்மண சுவாமி”யாக இருந்த சமயம் அது. அவர் நிலையையும் புகழையும் அறிந்து அந்த சந்நியாசி மலையேறி வந்தார். பகவான் தனிமையில் இருக்கும் நேரமாகப் பார்த்து சாத்திர முறைப்படி சந்நியாச ஆசிரமம் மேற்கொள்ளும்படி அவரிடம் கேட்டுக் கொண்டார். பகவான் அதற்கு ஒப்புக் கொள்லவில்லை. அந்த சந்நியாசி விடுவதாக இல்லை. சாத்திரங்களிலிருந்து எத்தனையோ மேற்கோள்களை எடுத்துக் காட்டி, மூன்று மணி நேரம் வாதாடினார். அதற்காக பகவான் எங்கும் வர வேண்டாம் என்றும், குகையிலேயே ஆசிரமம் தருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் உறுதியளித்தார். அவர் காவியுடை உடுத்துக் கொள்ள விரும்பாவிட்டால் கோவணத்தையாவது காவித் துணியில் அணிந்து கொண்டால் போதும் என்று மன்றாடினார். ஆனால், பகவானோ சற்றும் அசைந்து கொடுக்கவில்லை. மனித வேடத்தையே களைந்து, தன்னையே சுயபிரகாசமாய்த் தரிசித்து விட்டவருக்கு இந்த ஒப்பனையெல்லாம் எதற்கு?

வந்த சந்நியாசி நம்பிக்கையிழக்கத் தயாராயில்லை. தாம் கூறியவற்றைப் பற்றி நன்றாக சிந்தித்துப் பார்க்கும்படி பகவானிடம் கேட்டுக் கொண்டார். மறுபடியும் மாலையில் வந்து பார்ப்பதாகவும், அப்போது பகவான் தமது இறுதியான முடிவைத் தெரிவிக்கலாம் என்றும் சொல்லி விட்டுச் சென்றார்.

அவர் சென்றதும் குகைக்கு ஒரு வயோதிகர் வந்தார். அவர் தாம் கொண்டு வந்த புத்தகை மூட்டையொன்றை பகவானின் அருகில் வைத்து விட்டு, “இதைக் கொஞ்சம் பார்த்துக் கொள்ளுங்கள், நான் சற்று வெளியே போய் விட்டு வந்து இதை எடுத்துக் கொண்டு போகிறேன்” என்று கூறினார். பகவானும் தலையசைக்கவே, அந்த வயோதிகர் மூட்டையை அங்கேயே வைத்து விட்டு வெளியே சென்றார்.

அவர் சென்ற பிறகு, அந்த மூட்டையில் என்னென்ன புத்தகங்கள் இருக்கின்றன என்று பார்க்கும் ஆவலில் மேலேயிருந்த புத்தகத்தைக் கையிலெ டுத்தார் பகவான். அது வடமொழியிலிருந்த அருணாசல புராணம். புத்தகத்தைப் பிரித்துப் பார்த்தார். முதலில் கண்ணில் பட்ட சுலோகத்தைப் படித்தார். அதில் பரமேசுவரன் கூறுகிறான்:

“அருணாசலத்தைச் சுற்றி முப்பது மைல்களுக்குள் வாழ்பவர்களுக்கு நானே குருவாக இருக்கிறென். அவர்களுக்கு பந்தங்களிலிருந்து விடுதலை பெற ஞானமுக்தி அளிக்கிறேன்.”

இந்த சுலோகத்தை ஒரு துண்டு காகிதத்தில் எழுதி வைத்துக் கொண்டார் பகவான். பின்னர், அந்தப் புத்தகத்தை மூட்டையில் வைத்து, முன் போலவெ கட்டி விட்டு கண்களை மூடிக்கொண்டார். மறுபடியும் கண்களைத் திறந்து பார்த்த போது, அந்த மூட்டையை அங்கு காணவில்லை. அந்தப் பெரியவரையும் அதற்குப் பிறகு பகவான் பார்க்கவேயில்லை.

சொன்னபடி மாலையில் சந்நியாசி வந்தார். “என்ன முடிவு செய்தீர்கள்?” என்று பகவானைப் பார்த்துக் கேட்டார். பகவான் பதில் ஒன்றும் பேசாமல் அந்தத் துண்டு காகிதத்தை எடுத்து சந்நியாசியிடம் தந்தார். அதைப் படித்துப் பார்த்த சந்நியாசி மறு பேச்சு பேசவில்லை. பேசுவதற்கு என்ன இருக்கிறது? வந்த வழியே சென்று விட்டார்.

முறைப்படி துறவறம் மேற்கொள்ளாத ரமண பகவான் ஒரு ஜீவன் முக்தராக விளங்கினார். அதை ஒரு கணம் மறந்து, அவரை ஒரு சாதாரண மனிதராக நினைத்துப் பார்ப்போம்.

மகனாய்ப் பிறந்தவன், தன்னைப் பெற்று வளர்த்த தாய்க்குக் காட்ட வேண்டிய நன்றியையும், ஆற்ற வேண்டிய கடமையையும் மிகத் தெளிவாகக் காட்டிச் சென்றிருக்கிறார் ரமண பகவான். தாயின் புலம்பலைச் சற்றும் பொருட்படுத்தாமல், முதலில் பிடிவாதமாக இருந்த பகவான், பின்னர் விட்டுக் கொடுத்து, தாயை தம்முடன் தங்கச் செய்தது ஏன் என்று சிந்திக்காமல் இருக்க முடியுமா?

முற்றும் துறந்த முனிவர்களானாலும், ஜீவன் முக்தர்களானாலும், ஆன்ம ஞானிகளானாலும் தாய் தாய்தான். மகன் மகந்தான். அன்பும், கருணையுமே உருவான் தாயின் பாசத்திற்கு முன், பாசங்கலைச் சுட்டெரித்த வைராக்கிய மனிதனும் தன் கடமைகளைத் தட்டிக் கழிக்க முடியாது என்று, பந்த பாசங்களைக் கடந்து, கர்மாக்களைத் துறந்து வாழ்ந்த மகரிஷி, உலகிற்கு எடுத்துக் காட்டினார் என்றே கருத வேண்டியிருக்கிறது.

கந்தாசிரமத்திலிருக்கும் போது அழகம்மை ஒரு கணம் கூட மகனை விட்டு பிரிந்திருக்க மாட்டேன் என்று கூறி விட்டார். வேறு எங்காவது போனால் அங்கு இறந்து போய் விடுவோமோ என்ற பயம் அவருக்கு. மானாமதுரைக்கு வந்து தன் புதிய வீட்டில் காலடி எடுத்து வைத்து விட்டுப் போகும்படி மகள் அலமேலு கெஞ்சியபோது கூட அவர் மறுத்து விட்டார். “என்ன ஆனாலும்ச் அரி, உன் மடியில்தான் சாவேன். நீ என் பிணத்தை புதரிலே தூக்கிப் போட்டாலும் சரி, நான் இங்கேதான் சாவேன்” என்று மகனிட்ம அடிக்கடி கூறுவார். அந்த அன்னை அதைப் பிள்ளைப்பாஸ்ம் என்று வைத்துக் கொண்டாலும்ச் அரி, அடைக்கலம் என்று கருதினாலும் சரி, தனக்கு நற்கதியருள வெண்டிய பொறுப்பை மகனின் மீது சுமத்தி விட்டார் அழகம்மை. பகவானால்கூட அந்தக் கடமையைத் தட்டிக் கழிக்க முடியவில்லை.

விரூபாட்ச குகையில் இருக்கும் போது சமையல் என்பதே கிடையாது. எச்சம்மால் ஏதோ ஆகாரம் கொண்டு வருவார். அதைத் தாயும் மகனும் சாப்பிடுவார்கள். பாத்திரங்களைக் கழுவி வைத்து விட்டு அழகம்மை படுத்து விடுவார்.

ஒரு நாள் அந்தத் தாய்க்கு அஞ்ஞானம் அதிகமாகி விட்டது. மகன் எதை எதையோ சாப்பிடுகிறானே, வாய்க்குப் பிடித்ததாக ஒன்றுமே இல்லையே, அவனுக்கு அப்பளம் என்றால் உயிர் ஆயிற்றே, நம் கையாலேயே சுட்டு, பொரித்துப் போட்டால் என்னவென்று அழகம்மைக்குத் தோன்றியது. ஆனால், மகனிட்ம சொன்னால் ஒப்புக் கொள்ளமாட்டான். அவனுக்குத் தெரியாமல் செய்ய வேண்டும், என்று எண்ணிச் செயல்படத் தொடங்கினாள்.

எனக்குத் தெரியாமல் முதலியார் பாட்டியிடமும், எச்சம்மாளிடமும் அப்பளத்திற்குத் தேவையானவற்றை தயார் செய்து வைக்கும்படி ரகசியமாகச் சொல்லி விட்டு ஒரு நாள் கீழேயிறங்கிப் போனாள் அம்ம. அவள் உண்மையாகவே எங்கே போகிறால் என்பதைப் பார்ப்பதற்காக நான் வெளியே வந்து மரத்தடியில் நின்று கொண்டிருந்தேன். அவள் யார் யாரிடமோ போய் எல்லா சாமாங்களையும் சேகரித்துக் கொண்டு ஒரு பெரிய பாத்திரத்தோடு திரும்பி வந்தாள். எனக்கு ஒன்றுமே தெரியாது என்று அவளுக்கு நினைப்பு, பாவம்! நான் எதுவுமெ தெரியாதது போல் கண்களை மூடிக் கொண்டு உட்கார்ந்திருந்தேன். எல்லாவற்றையும் பத்திரமாக ஒரு இடத்தில் வைத்தாள். தரிசனத்திற்கு வந்தவர்களெல்லாம் போய் விட்டார்கள். ராத்திரி, எதையோ சாப்பிட்டு விட்டு நான் படுத்துக் கொண்டேன். ஆனால் தூங்கவில்லை. கண்களை மூடித் தூங்குவது போல் பாசாங்கு செய்தேன்.

அம்மா, மெதுவாக, சப்தம் போடாமல் மணை, அப்பளக் குழவி, அரிசி மாவு, அப்பள உருண்டை எல்லாவற்ரையும் எடுத்து வைத்துக் கொண்டு அப்பளம் இடத் தொடங்கினாள்.

இருநூறு அப்பளத்திற்கு உருண்டைகள் இருந்தன. அவ்வளவையும் அவளால் இட முடியுமா? சாமர்த்தியமாக, மெள்ளப் பேச்சைத் தொடங்கினாள். “இதோ பாருப்பா, எனக்குக் கொஞ்சம் ஒத்தாசை பண்ணேன்” என்றாள்.

அவள் இப்படிக் கேட்க வேண்டும் என்றுதான் நான் காத்துக் கொண்டிருந்தேன். இந்த விஷயத்தில் நான் விட்டுக் கொடுத்தால் பிறகு இன்னொன்றை ஆரம்பித்து விடுவாள். இந்த வழக்கத்தை உடனெ நிறுத்தி விட வேண்டும் என்று நினைத்தேன்.

“ஏம்மா, நீதான் எல்லாத்தையும் விட்டு விட்டு இங்கே வந்துட்டியே, இன்னும் ஏன் இந்த அஞ்ஞானமெல்லாம்? வாய்க்கு ருசி ருசியா சாப்பிடணுமா? இங்கே என்ன கிடைக்கிறதோ அதைச் சாப்பிட்டால் போதாதா? உனக்கு ஒரு ஒத்தாசையும் செய்ய மாட்டேன். நீயே பண்ணி நீயே தின்னுக்கோ”, என்றென்

அவள் கொஞ்சம் நேரம் பேசாமல் இருந்தாள். மறுபடியும், அப்பனே, கொஞ்சம் ஒத்தாசை பண்னுப்பா, என்று கெஞ்சினால். நான் பிடிவாதமாக மறுத்து விட்டேன். அவளோ விடவில்லை. என்னைக் கூப்பிட்டுக் கொண்டேயிருந்தாள். பார்த்தேன். அவளுடன் வாதம் செய்து பயனில்லை என்று புரிந்தது. “சரி, நீ அந்த அப்பளத்தை இடு, நான் வேறே ஒரு அப்பளம் இடுகிறேன்” என்று சொல்லி விட்டு, பகவான் புதுமையானதோர் “அப்பளப் பாட்”டைப் புனைந்தார்.

அன்னை அப்பளங்களை இட்டு முடிப்பதற்குள் மகன் அப்பளப் பாட்டைப் பாடி முடித்து விட்டார். “நீ அந்த அப்பளத்தைச் சாப்பிடு, நான் இந்த அப்பளத்தைச் சாப்பிடுகிறேன்” என்றார் சிரித்துக் கொண்டே.

பகவானின் ஒவ்வொரு பாட்டும் எதையோ ஒன்றைக் காரணமாக வைத்து இயற்றப்பட்டதுதான். “அருணாசல அட்சரமண மாலை”, “அருணாசல பஞ்சரத்னம்”, “அருணாசல நவமணி மாலை”, “உபதேச உந்தியார்”, “ஆன்ம வித்தை”, “உள்ளது நாற்பது”, “உள்ளது நாற்பது – அனுபந்தம்” என்று எத்தனியோ பாடல்களை இயற்றியுள்ளார். வெதாந்தங்களின் சாரமான ஆன்ம வித்தையைப் பற்றியும், ஆன்ம விசாரத்தைப் பற்றியும், தத்துவ விளக்கம் தரும் அப்பாடல்களை கங்கைப் பிரவாகத்திற்கு ஒப்பிட்டால், அதில் ஒரு கரண்டி நீரை எடுத்து பாமர மக்களுக்கு அளிப்பது போள் இந்த அப்பளப்பாட்டை இயற்றித் தந்திருக்கிறார் பகவான்.

அன்னைக்கு ஞான உபதேசம் செய்வதைச் சாக்காக வைத்துக் கொண்டு, உலக விவகாரங்களில் ஈடுபட்டுக் கொண்டே “நான் யார்?” என்ற ஆன்ம விசாரம் செய்து ஞானம் பெற்று முக்தியடையும் முறையைச் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

                  பல்லவி

அப்பள மிட்டுப் பாரு, அத்தைச்

சாப்பிட்டுன்னாசையைத் தீரு

                   அநுபல்லவி

இப்புவி தன்னிலேங்கித் திரியாமற்

சற்போ தகச் சற்குரு வானவர்

செப்பாது சொன்ன தத்துவமாகிற

வொப்புயர் வில்லாவோர் மொழியில் படி

                  சரணம்

தானல்லா வைக்கோச க்ஷேத்ர மிதில்வளர்

தாளென்று மாளமாந் தான்ய வுளுந்தை

நானாரென் ஞான விசாரத்திரிகையி

னல்ல வென்றே புடைத்துப் பொடித்து

சத்சங்க மாகும் பிரண்டை ரசத்தொடு

சமதம மாகின்ற ஜீரக மிளகுட

னுபரதி யாகுமவ் வுப்போ டுள்ள நல்

.வாசனை யாம்பெருங் காயமுஞ்சேர்த்து

நன்னெஞ்சி னானா வென்று கலங்காம

லுண்முக வுலக்கையா லோயாதிடித்து

சாந்தமாங் குழவியாற் சமமான பலகையிற்

சந்ததஞ் சலிப்பற சந்தோஷமாகவே

மோனமுத் ரையாகு முடிவில்லாப் பாத்ரத்தில்

ஞானக்னி யாற்பாயு நற்பிரம்ம நெய்யதி

னானது வாகவே நாளும் பொரித்துத்

தானே தானாக புஜிக்கத் தன்மய.

ஆன்ம விசாரணையை அப்பளமிடுவதற்கு ப்பிட்டு அதனால் ஏற்படும் ஆன்மானுபவமே அதைச் சாப்பிடுவதாகும் என்றும், அந்த அனுபவத்திற்குப் பிறகு மெற்கொண்டு ஆசை ஏற்படாத பரிபூரண ஆனந்தம் கிட்டுகிறது என்றும் பகவான் இப்பாட்டில் கூறுகிறார்.

உலகத்தில் துயரப்பட்டு அலையாமல் ஞான குருவான தட்சிணாமூர்த்தி மௌனத்தாலேயே கூறும் “அதுவே நான்” என்ற தத்துவத்தின்படி ஆன்ம விசாரம் செய்வோம்.

ஐந்து கோசங்களால் ஆன இந்த உடலில் உற்பத்தியாகும் “நான்” என்னும் அபிமானமான அகந்தைதான் உளுந்து, “நான் யார்?” என்ற விசாரணைதான் எந்திரம். அதில் போட்டு “உடல் நானல்ல” என்று உடைத்துப் பொடி செய்ய வேண்டும்.

இந்த மாவில், நல்ல சேர்க்கை என்ற பிரண்டை சாற்றையூற்றிக் கலந்து, மனவடக்கம், புலனடக்கம் என்ற ஜீர, மிளகுத் தூளையும், உலக விவகாரங்களில் நாட்டமில்லாத உப்பையும், நல்வாசனை என்ற பெருங்காயத்தையும் சேர்க்க வேண்டும்.

பின்னர், கல்நெஞ்சு என்ற உரலில் போட்டு, சற்றும் கலக்கமின்றி, “நான் யார்?” என்ற உள் விசாரணை என்னும் உலக்கையால் ஓயாமல் இடித்து, சமத்துவம் என்ற பலகையில் சாந்தம் என்னும் குழவியினால் அப்பளம் இட வேண்டும்.

மோன முத்திரையாகிய எல்லையற்ர பாத்திரத்தில், ஞானாக்கினியால் கொதிக்கும் பரபிரம்மம் என்ற நெய்யில் “அதுவெ நான்” என்ற அப்பளத்தைப் பொரித்து நின்ரு, தன்மயமாகி ஆனந்தத்தில் திளைத்து அகமகிழ வேண்டும்.

அருணாசல ரமணனாக, அருணாசல மகிமையை, உலகிர்ற்கு உணர்த்தில் கொண்டிருந்த பகவான், உடல் பந்தத்திலிருந்து இறுதியாக விடுதலை பெற வேண்டிய நாள் நெருங்கி விட்டது. அழிய வேண்டிய உடல், அழிக்க முடியாத நோயை வரவழைத்துக் கொண்டது.

இயற்கைக்கு உட்பட்ட அந்த அழிவை, ஆன்மாவான் பகவான் ஒருவிதச் சலனமுமின்றி பார்த்துக் கொண்டிருந்தார்.

ஆனால் பக்தர்களும் வைத்தியர்களும் இயற்கையை எதிர்த்துப் போராட நினைத்தார்கள். “அதை சும்மா விட்டு விடுங்கள். நடப்பது நட்ககட்டும்!” என்று மன்றாடிப் பார்த்தார் பகவான். அது அவருடைய ஞான நிலை. “பகவானின் உடல் அழிவதைப் பார்த்துக் கொண்டிருக்க முடியுமா? மனித முயற்சியெல்லாம் செய்து அவரைக் காப்பாற்றுவோம்” என்றார்கள் பக்தர்கள். அது அவர்களுடைய அஞ்ஞான நிலை.

பகவானின் இடக்கை முழங்கைக்கு மேல் நெல்லிக்கனி அளவில் சிறு கட்டியாகத் தோன்றிய சார்கோமா என்ர ஒருவகைப் புற்று நோய், ஓராண்டு காலம் பகவானின் உடலை வருத்தியது. மறைவது போல மறைவதும், பின்பு முன்பை விட கொடூரமான வடிவம் எடுப்பதுமாக அந்நோய் மருத்துவர்களுடன் கண்ணாமூச்சி விளையாடி, அண்ணலின் ரத்தத்தை உறிஞ்சி இரக்கமற்ற அரக்கனைப் போல் அவரது திருமேனியை அணு அணுவாக அரித்துக் கொண்டிருந்தது.

பகவான் பார்த்துக் கொண்டிருந்தார்.

மேல் நாட்டு அலோபதி, ஹோமியோபதி, மூலிகை வைத்தியம், மளையாள வைத்தியம், வங்கால வைத்தியம் என்று எல்லா முறைகளையும் எதிர்த்து நின்று போராடினான் அந்தக் கொடிய அரக்கன்.

அந்தப் பயங்கரப் போரை ஒரு சாட்சியைப் போல் சாந்தமாகப் பார்த்துக் கொண்டிருந்தார் பகவான்.

பக்தர்கள் நம்பிக்கை இழக்கவில்லை. பூஜைகள், ஹோமங்கள், அபிஷேகங்கள், ஆராதனைகள், பாராயணங்கள், சூரிய நமஸ்காரங்கல் போன்றவற்றை ஓயாமல் நடத்தினார்கள்.

எல்லாம் நல்ல காரியங்கள்தானே, நடக்கட்டும், என்று அவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தார் பகவான்.

பகவானைப் பார்க்க வரும் கூட்டம் பெருகிக் கொண்டிருந்தது. “இனி எத்தனை நாள் இந்தப் பொன்னுடலைப் பார்க்க போகிறோமோ” என்ற கவலையுடன் வந்தவர்களுக்கெல்லாம் தரிசனம் கொடுத்துக் கொண்டிருந்தார் அந்த கருணாமூர்த்தி. உடற்தளர்ச்சியோ உள்ளத்தில் அயற்சியோ உயிரை வாட்டும் வலியோ என்னவானாலும் தரிசனம் நின்று போய் விடக்கூடாது; வந்தவர்கள் ஏமாறக் கூடாது. அவர்கள் பேராவலோடு வந்திருக்கிறார்கள். அவர்களைத் தடுக்க நான் யார்? நீங்கள்தான் யார்? என்று கட்டுப்பாடுகளையெல்லாம் தகர்த்தெறிந்து கடைசி வரை தரிசனம் தந்து கொண்டிருந்தார் பகவான். இந்த உடல் என்னுடன் ஒத்துழைக்கும் வரையில் என் அன்றாட அலுவல்களை விட மாட்டென், என்று பிடிவாதமாகவே இருந்தார். கைகள் நடுங்க, கால்கள் தளர, தலையாட, ஆசிரமத்தில் அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தார். கீழே விழுந்து விடுவாரோ? என்று பயந்தவர்கள் பகவானை அணைத்த மாதிரி அருகிலேயே சென்றார்கள்.

அரக்கனின் ஆதிக்கம் வலுத்தது. உடலின் சக்தி குறைந்து கொண்டு வந்தது. இரண்டடி எடுத்து வைப்பது கூட பகவானுக்குப் பெரும்பாடாகி விட்டது நான்கு பேர் பிடித்துக் கொள்ளாமல் நகரவே முடியாத நிலை ஏற்பட்டு விட்டது.

பகவான் நினைத்துக் கொண்டார்.

“சின்ன வயதிலிருந்து இந்த உடலை என்ன பாடு படுத்தினேன்? எத்தனை வருத்தினேன்? எத்தனை பட்டினி போட்டேன்? அப்படியிருந்தும் இத்தனை வருஷங்கள் இந்த கால்கள் எவ்வளவு உழைத்திருக்கின்றன. மலையை எத்தனை தரம் சுற்றி வந்திருக்கும்! இப்போது இதற்கு வயதாகி விட்டது. போதாக்குரைக்கு பொல்லாத நோய் வேறே வாட்டுகிறது. பாவம், இது இப்போது தள்ளாடுகிறது, என்று கடும் நோயில் வாடிய பகவான்தம் உடலைக் கண்டு பரிதாபபட்டார்.

ஆனால், வருடக்கணக்கில் பகவானுடன் மலையிலும், காட்டிலும் நடந்தவர்கள், அவரது தற்போதய நிலையைக் கண்டு பரிதாபபட்டார்கள். அவர் படும் சிரமத்தைக் கண்டு கண் கலங்கினார்கள்.

அவர்களுக்கு ஆறுதல் அளிக்கிறார் பகவான்.

“சரீரமே சுமைதான். ஆனால், வரவர இது எனக்கு ரொம்ப பாரமாகிக் கொண்டிருக்கு, நாலு பேர் சுமக்க வெண்டிய சுமையை நான் ஒருவனே எத்தனை நாள்தாந்தூக்கிக் கொண்டு அலைய முடியும்?”

பக்தர்களின் கண்களிலிருந்து தம் உடல் சீக்கிரமே மறையப் போவதை எத்தனையோ முறை குறிப்பால் உணர்த்தி விட்டார் பகவான். வரப்போகும் அதிர்ச்சியைத் தாங்கிக் கொள்வதற்கு அவர்களை மெள்ள மெள்ளப் பழக்கிக் கொண்டிருந்தார். அந்தச் சின்னஞ்சிறு குழந்தைகளின் துயரத்தைக் குறைக்க பெரும்பாடு பட்டார். எத்தனை கருணை! எத்தபரிவு! எத்தனை பெரிய பொறுப்பு! எல்லாம் சரீரம் எடுத்து வந்ததன் விளைவுதானே?

பாசத்தை வேரோடு அறுத்து விட்ட ஞானிகள் தங்களையறியாமல்  நம்மிடையே பாச உணர்வு வளரக் காரணமாய் இருந்து விடுகிறார்கள். அவர்கள் கட்டையாய் மதிக்கும் சரீரத்தை நோய் தாக்கும்போது, அவர்கள் தாங்கிக் கொள்கிறார்கள். ஆனால் நம்மால் தாங்க முடிவதில்லை. நாம் படும் வேதனையைக் கண்டு அவர்கள் நமக்குச் சமாதானம் சொல்ல வெண்டியிருக்கிறது.

1950-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் திருவண்ணாமலைப் பகுதியில் நில நடுக்கம் ஏற்பட்டது. வரப்போகும் மாறுதலை இயற்கை அன்னை உள்ள குமுறலுடன் உலகிற்கு அறிவித்து விட்டாள்.

பகவானின் உடல் அந்தச் சிறிய அறையில் படுத்து விட்டது. வெளியில் முடிவற்ர க்யூவில் நின்றிருந்த பக்தர்களுக்கு அந்நிலையிலும் பகவான் தரிசனம் தந்து கொண்டிருந்தார்.

ஏப்ரல் மாதம் 14-ந் தேதி, வெள்ளிக்கிழமை.

ஆசிரமத்தில் ஒரே பரபரப்பு.

டாக்டர்கள் வந்து போய் கொண்டிருக்கிறார்கள். பகவானின் நாடித் துடிப்பு திருப்திகரமாக இல்லை. கண்களில் பஞ்சடைந்திருக்கிறது. சுவாசம் பயங்கரமாக இயங்கிக் கொண்டிருக்கிறது.

பகவான் ஒரு சாட்சியாக இதையும் பார்த்துக் கொண்டிருந்தார். அவருக்கு நினைவு தப்பவேயில்லை.

மாலை நெருங்க நெருங்கக் கூட்டம் அதிகமாகியது. ஆசிரமவாசிகள் எல்லோரும் வெளியே உட்கார்ந்திருக்கிறார்கள். நான்கு ஐந்து பேர் மட்டும் உள்ளெ பகவானின் அருகில் இருக்கிறார்கள். உள்ளே ஒரு விசிறி ஆடுவது மட்டும் வெளியில் இருப்பவர்களுக்கு தெரிகிறது. அந்த விசிறி அப்படி ஆடிக் கொண்டிருக்கிற வரையில் நம்பிக்கையும் இருக்கிறது.

எல்லோரும் சேர்ந்து பாடுகிறார்கள் :

ஆருணாசல சிவ, அருணாசல சிவ,

அருணாசல சிவ, அருணாசல சிவ,

அருணாசல சிவ, அருணாசல சிவ,

அருணாசல சிவ, அருணாசல சிவ.

உணவு பிச்சையெடுப்பதர்காக முன்பு பகவான் புனைந்த பாட்டைப்பாடி, உயிர்ப்பிச்சை கேட்கிறார்கள் பக்தர்கள்.

மாலை 6.40. மாவட்ட மருத்துவ அதிகாரி டாக்டர் கரம்சந்தானி அறையினுள் செல்கிறார். பகவானின் உடலைப் பரிசோதித்துப் பார்க்கிறார். நாடித் துடிப்பு மிக லேசாகிக் கொண்டிருக்கிறது. உதடுகள் உலர்ந்து விட்டிருக்கின்றன. ஒருவித இரைச்சலுடன் மூச்சு வந்து கொண்டிருக்கிறது. பகவான் கண்களை மூடிக் கொண்டிருக்கிறார்.

“பகவானே, கொஞ்சம் பழரசம் கொடுக்கட்டுமா?” குனிந்து மெள்ளக் கேட்கிறார் டாக்டர், இரு முறை கேட்கிறார்.

இரு முறையும் “வேண்டாம்” என்று தலையை அசைக்கிறார் பகவான்.

தமது கையால் பழரசம் அருந்த வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொண்டு பகவானின் அருகிலேயே நிற்கிறார் கரம்சந்தானி. கடைசி மூச்சு நிற்கப் போகும் அந் நேரத்திலும் பக்தரின் உள்ளத்தை புண்படுத்த விரும்பவில்லை கருணைத் தெய்வம்.

“வேண்டும்” என்பது போல் தலையை அசைத்து, வாயைத் திறக்கிறார் பகவான். மூன்று ஸ்பூன் பழரசம் தருகிறார் டாக்டர். மும்முறையும் வாயைத் திறந்து பழரசத்தை விழுங்குகிறார் பகவான்.

மணி 8.35. நாடித் துடிப்பு மட்டும் இருந்து கொண்டிருக்கிறது. சுவாசம் கண்டு விட்டது. உடல் படும் வெதனையை முகத்தில் சுருக்கங்கல் வெளிப்படுத்தின.

எல்லாவற்றையும் பகவான் தெளிவாகப் பார்த்துக் கொண்டிருந்தார்.

பகவானின் முகத்தையே பார்த்துக் கொண்டு அசைவற்று நின்றிருந்த டாக்டர் கரம்சந்தானி மனத்தில் நினைத்துக் கொள்கிறார்.

“ஐயோ, பகவானுக்கும் இந்த நிலையா? நம் கர்ம வினைகளையெல்லாம் இவர் அனுபவிக்கிறாரே? வேதனையை இவரால் குறைத்துக் கொள்ல முடியாதா?

ஆது பகவானுக்குத் தெரிகிறது. தம் நிலை கண்டு மற்றவர் வேதனைப்படுவதா?

8.46. நாடித் துடிப்பு நின்றுவிட்டது. நீண்ட கடினமான மூச்சு, மெல்லிய இழையாக லேசாக இயங்கத் தொடங்கியது. ஒன்றையொன்று மெதுவாகத் தொடர்ந்து மெள்ள மெள்ள அடங்கியது. கடைசி மூச்சும் மௌனமாக விடைபெற்றது.

பகவான் பார்த்துக் கொண்டிருந்தார். மணி 8.47.

வானில் பிரகாசமான ஜோதி ஒன்று தோன்றியது. புண்ணியம் செய்தவர்களெல்லாம் அன்று அதைத் தரிசித்தார்கள். நம்பிக்கையற்றவர்களின் உணர்வில் அது மின்சாரமாகப் பாய்ந்து அவர்களை உலுக்கியது. தெற்கேயிருந்து புறப்பட்ட அச்சுடரொளி வடக்கே, அருணாசலத்தின் உச்சியில் போய்த் தங்கியது.

ரமண ஜோதியும், அருணாசல ஜோதியும் ஒன்றாகியது. அப்பேரொளி பாரெங்கும் பிரகாசித்தது!!