ரமண மகரிஷிக்கு அருணாசலத்தில் நேர்ந்த மற்றொரு அற்புத அனுபவத்தையும் மறக்க முடியாது.
விரூபாட்ச குகையிலிருந்து பகவானும் ஓரிருவரும் பச்சையம்மன் கோயிலுக்கு அடுத்துள்ள குளத்தில் நீராடுவதற்காக, எண்ணெய், சீக்காயுடன் புறப்பட்டார்கள். நீராடி முடித்த போது மணி பத்தாகி விட்டது. கடுமையான வெய்யில் காய்ந்து கொண்டிருந்ததால், திரும்பி மலையேறுவது சற்றுக் கடினமாக இருந்தது. உடன் வந்த பழனிச்சமியும், வாசுதேவ சாஸ்திரியும் முன்னால் சென்று விட்டனர். பகவான் மெள்ள நடந்து வந்தார். ஆமைப்பாறையின் அருகில் வந்ததும் அவருக்குத் தலையைச் சுற்றியது. பிறகு என்ன நடந்தது என்பதை பகவானே சொல்லக் கேட்போம் :
“திடீரென்று இயற்கைக் காட்சிகள் கண்களிலிருந்து மறைந்து, பிரகாசம் மிக்க ஓர் வெண்மையான திரை தோன்றியது. இயற்கைத் தோற்றம் மெள்ள மறைந்ததையும், வெள்ளித் திரை கண் முன்னால் தோன்றியதையும் மிக நன்றாக உணர முடிந்தது. இதே நிலையில் மேலும் நடந்தால், கீழே விழுந்து விடுவேனோ என்று அஞ்சி அப்படியெ நின்று விட்டென். பின்னர், திரை விலகி பார்வை தெளிவடைந்தது. நான் நடக்கத் தொடங்கினேன். இரண்டாவது முறையாக மயக்கத்தில் தலை சுற்றியது. உடனே அருகிலிருந்த பாறையில் சாய்ந்து கொண்டேன். தெளிவான பார்வை மீண்டது. ஆனால், சற்றைக்கெல்லாம் பழையபடி தலையைச் சுற்றத் தொடங்கவே அப்படியே கீழே உட்கார்ந்து விட்டேன்.
அப்போது வெண் திரை என் பார்வையை முழுமையாக மறைத்து விட்டது. என் தலை நீரில் மிதப்பது போல் ஓர் உணர்ச்சி மேலிட்டது. ரத்த ஓட்டமு, சுவாசமும் நின்று விட்டது. உடலில் நீலம் பாய்ந்து விட்டது. மரணத்திற்கே உரிய மாற்றம் அது. கணத்திற்கு கணம் அங்கங்களில் கருமை நிறம் ஏறிக் கொண்டிருந்தது.
என் நிலையைக் கண்ட வாசுதேவ சாஸ்த்ரி நடுங்கியே விட்டார். நான் இறந்து விட்டதாகவே முடிவு செய்து, என்னை மார்போடு அணைத்துக் கொண்டு, ஓவென்று ஓலமிடத் தொடங்கிவிட்டார்.
அவருடைய உடல் நடுங்கிக் கொண்டிருந்ததையு, அவர் என்னை இறுகப் பற்றிக் கொண்டிருநததையும் என்னால் உணர முடிந்தது. அவர் அழுதது என் காதில் விழுந்தது. அவர் கூறிய வார்த்தைகளின் பொருளும் எனக்குப் புரிந்தது.
என் உடலின் நிறம் படிப்படியாக மாறியதை நான் கண்டேன். என் இதயத் துடிப்பு நின்று போனதை அறிந்தேன். கைகால்கள் சில்லிட்டுப் போனதையும் உணர்ந்தேன்.
ஆனால், அந்த மரண நிலையிலும் என் எண்ண ஓட்டங்கள் அப்படியே இருந்தன. எனக்குப் பயம் என்பதே தோன்றவில்லை. என் உடலுக்கு நேர்ந்த கதியைப் பற்றி எனக்குச் சிறிதும் வருத்தம் ஏற்படவில்லை.
பாறைக்கருகில் அமர்ந்த உடனே நான் கண்களை மூடிக்கொண்டு விட்டேன். நான் பாறையின் மீது சாய்ந்து கொள்ளவில்லை. ரத்த ஓட்டமும், சுவாசமும் நின்றபோது கூட நான் அசையாமல் அமர்ந்திருந்தேன். இதே நிலையில் அப்படியே பத்து பதினைந்து நிமிடங்கள் இருந்திருப்பேன்.
சட்டென்று என்னுள்ளே ஒரு மின் அதிர்ச்சி பாய்ந்தது போல் உணர்ந்தேன். அடுத்து, ரத்த ஓட்டமும், சுவாசமும் மீண்டன. உடலெங்கும் குப்பென்று வியர்த்துக் கொட்டியது. பழைய நிறம் திரும்பியது. கண்களைத் திறந்து பார்த்தேன் நான் சாதாரணமாகத்தான் இருந்தேன். எல்லோரும் விரூபாட்ச குகைக்குப் போய்ச் சேர்ந்தோம்.
என் இதயக் துடிப்பும், மூச்சுக் காற்றும் நின்று போன அனுபவம் இது ஒன்றுதான்.
பதினாறாவது வயதில் தமது மரணத்தை ஒத்திகை பார்த்துக் கொண்டார் பகவான். உடல் அழிந்தாலும் ஆன்மா சாகாமல் விழித்திருக்கிறது.அழியாத, நிலையியான , அந்த ஒன்றுதான் உண்மையான “நான்”என்று அப்போது உணர்ந்து கொண்டார்.
முப்பத்திரண்டாவது வயதில், மேலே விவரிக்கப்பட்ட அதிசய அனுபவத்தின் போது தம் மரணத்தையே நேருக்கு நேர் சந்தித்தார் பகவான். பேச்சு, மூச்சு அடைத்துப் போய், இதயத் துடிப்பும் நின்று போய், தம் உடல் விகாரம் அடைந்த காட்சியை நம் சட்டை முள்ளில் சிக்கிக் கிழிந்து போவதை நாம் காண்பது போல் அத்தனை சாதாரணமாக, தம் உடல் மடிவதைப் பார்த்தார் ஜீவன் முக்தரான பகவான்.
முப்பத்தெட்டு வருடங்களுக்குப் பிறகு அவர் தமது உடலை சட்டையைப் போல் கழற்றி எறிந்த அதிசயத்தையும் உலகம் கண்டது. சுமையைத் தூக்கும் கூலியாள், குறிப்பிட்ட இடம் வந்ததும், பணி முடிந்தது என்று எத்தனை நிம்மதியுடன் அந்தப் பாரத்தை எடுத்துக் கீழே வைப்பானோ, அத்தனை நிம்மதியுடன் தன் உடற்சுமையைக் கீழே இறக்கி வைத்து விட்டு ரமண ஜோதி, அருணாசல ஜோதியுடன் கலந்து விட்டது.
ரமணர் என்பது ஒரு தத்துவம். ஒரு சத்தியம். உலக மக்களுக்காக அது மனித உருவம் தாங்கி, அதனுள் தன்னை அடக்கிக் கொண்டு, அதன் கட்டுப்பாடுகளுக்குத் தன்னை ஆட்படுத்திக் கொண்டு, எழுபதாண்டுகள் மாயா லீலைகள் புரிந்து விட்டு, மீண்டும் அருவமாகி விட்டது. நம்மைப் போலவே, அந்த உடலுக்கு நோய் வந்தது. வலியும், மரணமும் இவரது உடலுக்குத்தான். உடலிலிருந்து என்றொ பிரிந்து விட்டு, தன்னிச்சையாக, சச்சிதானந்த ஒளியாக விளங்கிக் கொண்டிருந்த ரமணர், அந்த நோயை, வலியை, மரணத்தை தனக்கொரு சம்பதமுமின்றி ஒரு காட்சியைப் போல பார்த்துக் கொண்டிருந்தார்.
இடக்கை முழங்கியில் பெரிய கட்டுடன் படுத்திருக்கிறார் பகவான்.
“பகவானே, உங்களுக்குமா இப்படியொரு கதி? தாங்கள் மனது வைத்தால் இதைக் குணப்படுத்திக் கொள்ள முடியாதா? அஞ்ஞானத்தில் மூழ்கிய பக்தர்கள் ஆகையால், பாசத்துடிப்பால் கெஞ்சுகிறார்கள்.
பகவான் சிரித்துக் கொள்கிறார்.
“நான் மனது வைப்பதா? எனக்குச் சொந்தமான மனம் ஒன்று இருக்கிறதா? அதையும் “அதில்” கரைத்தாகிவ் இட்டதே. சங்கற்பம் செய்வதற்கு நான் யார்?”
“பகவானே, எத்தனையோ அற்புதங்களை நிகழ்த்திக் காட்டியிருக்கிறீர்களே! எத்தனையோ பேருடைய தீராத நோய்களைக் கடைக்கண் பார்வையாலே குணப்படுத்தியிருக்கிறீர்களே, தங்களுடைய நோயைக் குணப்படுத்திக் கொள்ள முடியாதா?” பக்தர்கள் நெஞ்சம் குமுறக் கேட்கிறார்கள்.
பகவான் சிரித்துக் கொள்கிறார்.
“நோயா, எந்த நோயைச் சொல்கிறீர்கள்? இந்த உடலே ஒரு பெரிய நோய் ஆயிற்றே. இது போனால் எல்லாம் சரியாகி விடும்.”
நாங்காவது முறையாக அறுவை சிகிச்சை முடிந்து, வலுவிழந்து படுத்துக் கொண்டிருக்கிறார் பகவான். அமைதியான முகத்தில் சட்டென்று சலனக்குறி தோன்றுகிறது. அருகில் நின்றிருந்த அன்பரின் இதயம் வலியால் துடிக்கிறது.
“பகவானே……வலிக்கிறதா?”
புன்னகைக் கீற்று உத்டட்டின் விளிம்பில் நெளிய மெல்லிய குரலில், நிதானமாகப் பேசுகிறார் பகவான்.
“வலியிருக்கு”
ஆப்போதும் “உடலுக்கு வலி இருக்கிறது” என்றுதான் கூறுகிறார் சத்தியஞானி. “எனக்கு வலிக்கிறது” என்று கூறவில்லை.
பகவானின் உயிர் உடலை விட்டுப் பிரிய இரண்டு மணி நேரம்தான் இருக்கிறது. துயரத்தில் ஆழ்ந்த ஆசிரமவாசிகளும், இதர பக்தர்களும், செய்வதறியாமல் ஆங்காங்கே மௌனமாக நின்று கொண்டிருக்கிறார்கள்.
அப்போது மயில் ஒன்று தொலைவிலுள்ள மரத்தில் அமர்ந்து “கோ”வென்று கதறுகிறது. அது பகவானின் காதுகளில் விழுகிறது. அருகிலிருந்தவரிடம் கருணைக்கடல் கடல் கேட்கிறது.
“மயில் ரொம்ப நேரமாகக் கத்தறதே, அதற்கு ஆகாரம் போட மறந்து விட்டீர்களா?”
மயிலுக்கு வாய் இருந்தால் அலறியிருக்கும்: “பகவானே, எனக்குப் பசியும் இல்லை, தாகமும் இல்லை, வரப்போகும் உங்கள் பிரிவை நினைத்துத்தான் கதறுகிறேன்…..”
இறுதி நாட்கள்ள் எல்லா மருத்துவ முறைகளையும் முயன்று பார்த்தாகி விட்டது. குணப்படுத்த முடியாத அளவுக்கு நோய் உடல் முழுவதும் புரையோடு விட்டது. இரத்தம் வற்றிப் போய், உடல் வெளிறிப் போயிருந்தது. பகவானின் உடல் மறையப் போவது நிச்சயமாகி விட்டது. சுற்றி இருப்பவர்களின் முகத்தில் படரும் வேதனைக் கோடுகளைப் பார்த்த பகவான் சிரித்துக் கொள்கிறார்.
“நான் இறந்து விடப் போவதாக எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் “நான்” போக மாட்டேன். “நான்” எங்கே போகமுடியும்? இங்கேதான் இருக்கப் போகிறேன்.”
ஏங்கிருந்தோ வந்தாலல்லவோ, வேறெங்கோ போவதற்கு? எங்குமே இருப்பது, வேறு எங்கு போக முடியும்? இருப்பது அது ஒன்றுதானே! அதைத்தவிர வேறு ஒன்று இருக்கிறது என்று நினைப்பவர்களுக்குத்தானே பிரிவும் மரணமும்?
“நான் எங்கே போவது” இங்கேதான் இருக்கப் போகிறேன்.”
எத்தனை சத்தியமான வாக்கு? பகவான் எங்கும் இருக்கிறார். ரமணாசிரமத்திலுள்ள சலவைக்கல் சமாதியில் மட்டுமா அவர் இருக்கிறார்? தரிசன அறையில் மட்டுமா இருக்கிறார்? அங்கிருக்கும் படங்களிலும், சிலைகளிலும் மட்டுமா அவரைக் காண்கிறோம்?
றமணரைக் காணத் துடிப்பவர்கள், ஒவ்வோர் உயிரினத்தின் ஜீவத் துடிப்பிலும் அவரைக் காணலாம். நம்மை எல்லாவற்றிலும், எல்லாவற்றையும் நம்மிலும் காண்பவர்கள் ரமணரை எந்நேரமும் தரிசித்துக் கொண்டிருக்கலாம். உள்லங்கள் தோறும், இல்லங்கள் தோறும் ரமணரைக் காண பழகியவர்கள் ரமணாசிரமம் சென்றுதான் அவரைத் தரிசிக்க வேண்டும் என்பதில்லை.
ஆனால், அந்த மனப்பக்குவம் ஏற்படுவதற்கு இம்மதிரியான புனித ஆத்மாக்கள் உடலுருவில் உலவி வந்த புண்ணைய மண்ணை மிதிக்கவும், அந்தச் சூழ்நிலையில் தங்கி, அப்பேரமைதியைப் பருகி, சிந்தனையைச் செம்மையாக்கி, உள்ளத்தைத் தூய்மைபடுத்திக் கொள்ள வேண்டியது மிக மிக அவசியமாகிறது.