அருகேயிருந்தும் அண்ணாமலை சுவாமி ரமணாசிரமத்திற்குச் செல்லவெயில்லை. பகவானின் சமாதி ஆலயத்தை தரிசிக்கக் கூட சென்றதில்லையாம்.
“என்ன, பகவான் தேகத்தைத் துறந்த தினத்தன்று கூட நீங்கல் அங்கே போகவில்லையா?” என்று ஆச்சரியத்துடன் கேட்டால், இல்லே” என்று அடக்கத்துடன் பதிலளிப்பது அண்ணாமலை சுவமிகள் வழக்கம்.
சுவாமிகளிடம் ஒரு பழைய டயரி இருந்தது. அதில் பக்தர்களுக்குப் பகவான் அவ்வப்போது கூறிய உபதேச மொழிகளை எழுத்தி வைத்திருந்தார். அவர், தாம் கேட்ட கேள்விகளுக்கு பகவான் அருளிய விளக்கங்களையெல்லாம் குறித்து வைத்திருந்தார். சுவாமிகள் தமது அரிய நிதியாகக் கருதிய அந்த டயரியில் இருந்து சில ரத்தினங்கள்:
ஒருவர், பகவானின் பாதங்களைத் தொட்டு நமஸ்கரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு அருகில் நெருங்கினாராம் அப்போது பகவான் அவரைப் பார்த்து, “பகவானின் பாதம் நெஞ்சில்தான் இருக்கிறது. அதை விடாமல் பிடித்துக் கொள்வதே சுகம். என் காலைப் பிடித்தால் ஏமாந்துதான் போவாய். இது ஒரு நாள் மறைந்து போகும். நம்முள்ளே இருக்கும் பாதத்தைப் பூஜிப்பதே உயர்ந்த பூஜையாகும்.”
ஓரு சமயம் அண்ணாமலை சுவாமிகள் பகவானிடம், “நாம் உலக விவகாரங்களில் இருந்து கொண்டெ பக்தி பண்ண முடியுமா?” என்று கேட்டார். அதற்குப் பகவான் உடனே பதில் சொல்லவில்லை. பத்து நிமிடங்கள் கழித்து பகவானின் தரிசனத்திற்க் வந்த சில பெண் குழந்தைகள் அவர் முன்னிலையில் கும்மியடித்துப் பாட ஆரம்பித்தார்கள். “தயிர் கடைவோமே கண்ணன்தனை மறவாமல்” என்று அப்பெண்கள் பாடியதைச் சுட்டிக் காட்டிய பகவான், “என்ன ஓய், நீ கேள்விக்கு இதுதான் பதில். இதுவே கர்ம யோகம்” என்று சொல்லி அருளினார்கள்.
ஒருவர், பகவானிடம் “இந்த உலகத்தில் கெட்டவர்கள் அதிகமாக இருப்பதால்தான் இத்தனை கஷ்டங்கள் இருக்கின்றன. இந்நிலையில் நல்லவர்கள் எப்படிச் சுகமாக இருப்பது?” என்று கேட்டார். அதற்கு பகவான், “நாம் எல்லோரையும் நல்லவர்களாகவே கருத வேண்டும். கெட்டவர்கள் கெடுதல் செய்து நம்மைத் தங்களிடத்தில் வராதே என்று தடுத்து உதவுகிறார்கள். நல்லவர்கள் நமக்கு நல்லது செய்து நன்மை செய்கிறார்கள். கெட்டவர்கள் நமக்குக் கெடுதல் செய்து நன்மை செய்கிறார்கள்” என்றார்.
“நமஸ்காரம் என்பது என்ன? நம் மனதையும் தேகத்தையும் கடவுளுக்கு அர்ப்பணம் செய்யும் பாவனையாகச் செய்வதுதான் நமஸ்காரம். அந்த பாவத்தை அடியோடு விட்டு விட்டு, “சாமிக்கு ஒரு கும்பிடு மட்டும் போட்டு விட்டால் அவரை வசியப்படுத்தி விடலாம். பிறகு நாம் நம் இஷ்டப்படி எது வேண்டுமானாலும் செய்யலாம்” என்று நினைப்பது தவறு. சாமி ஒரு போதும் ஏமாந்து போகமாட்டார். சுய நலத்திற்காக கள்ளக் கும்பிடு போடுபவர்கள்தான் கடைசியில் ஏமாந்து போவார்கள். மனத்தில் சுத்தமாக இருப்பதே பெரிய நமஸ்காரம்.”
“முற் பிறவியில் தாங்கல் யார், எப்படியிருந்தோம், எங்கள் வரலாறு என்ன என்பதெல்லாம் ஏன் தெரியவில்லை?” என்று சிலர் பகவானிட்ம கேட்டார்கள். அதைக் கேட்டு பகவான் சிரித்தார். “போன ஜன்மத்தின் வரலாறு இருக்கட்டும். இந்த ஜன்மத்தில் “நான் யார்?” என்று தெரிந்து கொண்டால் பொதும். கடவுள் நம் மீதுள்ள கருணையினாலேயே நம் முன் ஜென்ம விவரங்களை மறைத்து வைத்திருக்கிறார். ஏனென்றால், முன் ஜென்மத்தில் தான் ஒரு புண்ணியவானாக இருந்தோம் என்று ஒருவனுக்குத் தெரிந்தால் அவன் இப்போது கர்வம் அடைவான். பாவி என்று தெரிந்தால், ஐயோ! நான் பாவி, எப்படி கடைதேறுவேன் என்று ஏக்கம் அடைந்து உயர்வதற்கான முயற்சிகளைச் செய்யாமலெயே இருந்து விடுவான். ஆகையால் போன ஜன்மத்து விவரமெல்லாம் தெரியாமல் இருப்பதே நல்லது, என்றார்.
கேள்வி: பகவானே, நான் வேத சாஸ்திரங்கள் எவ்வளவோ படித்திருக்கிறென். அதில் எனக்கு ஆத்ம ஞானம் வரவில்லையெ, ஏன்?
பகவான்: சாஸ்திரத்திலே ஆன்ம ஞானம் இருந்தால்தானே உங்களுக்கு ஆன்ம ஞானம் வரும்? சாஸ்திரத்தைப் பார்த்தல் சாஸ்திர ஞானம் வரும். ஆன்மாவைப் பார்த்தால் ஆன்ம ஞானம் வரும்.
ஒரு நாள் மலையில் பகவான் நடந்து கொண்டிருந்தபோது அண்ணாமலை சுவாமிகளும் உடன் சென்றிருந்தார். அப்போது பகவான் இடக்கை விரலிலும், வலக்கால் விரலிலும் ப்ளாஸ்திரி போட்டிருந்ததைப் பார்த்து, “பகவானே, கத்தி பட்டதா?” எனக் கேட்டார் அண்ணாமலை சுவாமிகள். அதற்குப் பகவான், “இல்லை, கை போய் கத்தியில் பட்டது, கால் போய் கல்லில் பட்டது” என்றார் சிரித்துக் கொண்டே.
கேள்வி: சத்சங்கம் என்றால் என்ன?
பகவான்: சத்சங்கம் என்றால், ஆன்ம சங்கமே. அது முடியாதவர்களுக்குத்தான் சத்துக்களான சாதுக்களின் சங்கம் வேண்டும்.
கேள்வி: சத்சங்கம் ஒருவனுக்கு எப்போது வாய்க்கும்?
பகவான்: சாதுக்களின் நல்லுறவும், சேர்க்கையும் வாய்ப்பது முன் பிறவியின் புண்ணியத்தின் பலனெ. முற்பிறவியில் அனேக வருடங்கள் ஈஸ்வர பூஜை, ஜபம், தபஸ், தீர்த்த யாத்திரை முதலியவற்றை முறையாகச் செய்தவர்களுக்குத்தான் சற்குரு வாய்ப்பார்.
இத்தனை புண்ணியங்கள் செய்து அருணாசல ரமணனை இப்பிறவியில் சற்குருவாகப் பெற்று, அவரோடு பேசிப் பழகி, நற்தொண்டாற்றி, நல்லுபதேசம் பெற்று, தன் நிலையில் வாழும் நல்லோர்களைக் காண்பதும் நன்றே; நலமிக்க அவர்கள் சொல் கேட்பதும் நன்றே; அவர்கள் குணங்கள் உரைப்பதும் நன்றே; இணங்கியிருப்பதும் நன்றே.
திருவண்ணாமலையில் சித்த புருஷர்களும், யோகீசுவரர்களும் இன்றும் வாசம் செய்து கொண்டிருக்கிறார்கள். மலையில் வடப்புறத்தில் ஒரு பெரிய ஆலமரத்தடியில் ஐந்து ஞானிகளுடன் அருணகிரி யோகீசுவரராக மகெசுவரனே தவம் இயற்றிக் கொண்டிருப்பதாக அருணாசல புராணத்தில் கூறப்பட்டிருக்கிறது.
ஸ்ரீ ரமண மகரிஷிகளுக்கு அந்தப் புனித மரம் ஒரு நாள் தரிசனம் ஆயிற்று. ஆனால், அதை நெருங்க முடியாமலே அவர் திரும்ப வேண்டியிருந்ததாயிற்று. அந்த நிகழ்ச்சியைப் பகவானே விவரிக்கக் கேட்போம் :
“ஓரு நாள் விரூபாட்ச தேவர் குகையிலிருந்து கீழிறங்கி வந்து மலையை வலம் வருவதற்காகப் புறப்பட்டேன். சுற்றி முடித்ததும், பச்சையம்மன் கோயிலுக்கு அருகிலுள்ள குறுக்குப் பாதை வழியாக மலை ஏற வேண்டும் என்று எனக்குத் தோன்றவே, அவ்வழியே சென்றேன். அது ஓர் அடர்ந்த காட்டுப்பாதை. எங்கும் இருள் மண்டிக் கிடந்தது. அப்போது என் எதிரில் ஒரு பெரிய ஆல இலை காற்றில் அடித்துக் கொண்டு வந்தது. அதைக் கவனித்தேன் பல ஆல இலைகளை ஒன்றாகச் சேற்த்துத் தைக்கப்பட்ட சாப்பாட்டு இலையை போல் அந்த இலை அத்தனை பெரியதாக இருந்தது. எனக்கு உடனே அருணாசல புராணத்தில் கூறப்பட்டிருக்கும் பெரிய ஆலமரம் நினைவுக்கு வந்தது.
நான் பார்த்த இலை அந்த மரத்திலிருந்துதான் விழுந்திருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றியது. அந்த இலை வந்த திசையிலேயே சென்றால் அந்த மரத்தைக் காணலாம் என்று நினைத்து அவ்வழியில் ஏறிச் சென்றேன். உச்சியில் ஒரு பிருமாண்டமான மரம் இருப்பது கண்ணுக்குத் தெரிந்தது. அதை நோக்கி நான் நடந்து கொண்டிருந்தபோது, என் தொடை அருகிலிருந்த ஒரு புதரில் இடித்தது. உடனே அதிலிருந்த குளவிகள், கூட்டமாக வந்து என்னைத் தாக்க ஆரம்பித்தன. அவற்ரின் கூட்டைக் கலைத்ததற்காக எனக்குக் கிடைத்த தண்டனையாகவே அதைக் கருதி நான் பயணத்தைத் தொடராமல் அங்கேயே நின்று விட்டென். குளவிகள் என்னை வேறு எங்கும் கொட்டவில்லை. என் தொடையில் புதர் இடித்த அதே பகுதியில் ஓயாமல் கொட்டின. குளவிகள் பறந்து சென்ற பிறகு, நான் மீண்டும் நடக்கத் தொடங்கினேன். ஆச்சரியமென்னவென்றால் அப்போது என் மனத்தில் ஆலமரத்தைப் பற்றிய எண்ணமே மறைந்து விட்டது. ஏழு சுனை இருக்குமிடத்திற்குப் போக வேண்டும் என்றே அப்போது தோன்றியது. ஆனால், போகும் வழியில் மூன்று ஆழமான நீரோடைகள் இருந்தன. என் தொடையோ வீங்கியிருந்தது. தாங்க முடியாத வலியுடன் எப்படியோ ஓடைகளைக் கடந்து ஏழு சுனையை அடைந்தேன்.
அங்கிருந்து மெள்ள இறங்கி வந்து, மாலையில் சடைச்சாமி குகைக்கு வந்து சேர்ந்தேன். அது வரையில் நான் ஒன்றும் சாப்பிடவில்லை. சுத்த பட்டினி. அங்கே கொடுத்த பழங்களையும் பாலையும் சாப்பிட்டு விட்டு, அங்கிருந்து விரூபாட்ச குகைக்கு வந்து அன்று இரவு அங்கேயே தங்கினேன். என் கால் ரொம்ப வீங்கி விட்டிருந்தது. சடைச்சாமியும், மற்றவர்களும் அதைக் கவனிக்கவேயில்லை. ஆனால், பழனிச்சாமி என் காலைப் பார்த்து விட்டு என்னவென்று கேட்டார். நான் நடந்ததையெல்லாம் கூறினேன். மறுநாள் என் காலிலும் தொடையிலும் அவர் நல்லெண்ணெய் தடவி விட்டார். குளவிகள் கொட்டிய இடங்களிலெல்லாம் கம்பி ஆணிகள் போல் முட்கள் தைத்திருந்ததைக் கண்டு, சிரமப்பட்டு ஒவ்வொன்றாக எடுத்து ஏதோ சிகிச்சை செய்தார் அவர். இரண்டு மூன்று நாட்களில் வீக்கம் வடிந்து விட்டது.
அதற்குப் பிறகு, ஆலமரத்தைப் பார்க்க வேண்டும் என்று நான் முயலவேயில்லை. அப்படி ஓர் எண்ணமெ எனக்குத் தோன்றவில்லை.
பகவானுக்கு ஏற்பட்ட இந்த அனுபவம் குறித்து குஞ்சு சுவாமிகள் கூறும் போது, அவர் அந்த ஆலமரத்தைத் தேடி தாமும் வேறு சிலரும் சென்ற வேடிக்கையான நிகழ்ச்சியை கூறியிருக்கிறார்.
“ஆலமரத்தைத் தரிசிப்பதற்காக காலை ஆறு மணிக்கு புறப்பட்டவர்கள் மலையில் பன்னிரண்டு மணிவரை சுற்றித் திரிந்தும் ஒன்றுமே தென்படவில்லை. எங்கோ வழி தவறிப் போய்விட்டார்களாம். அது மட்டுமல்ல, சித்த பிரமை பிடித்தவர்கள் போலாகி, வாயில் வந்தபடி உளறத் தொடங்கினார்கள். கையில் எடுத்துச் சென்ற ஆகாரத்தைப் புசிக்க வேண்டும் என்றுகூட தோன்றவில்லை. பட்டியால் வாடி, எங்கேயிருக்கிறோம் என்றோ, எந்த வழியாக ஆசிரமத்திற்குச் செல்ல வேண்டும் என்றோ தெரியவில்லை. திக்குத் தெரியாத காட்டில் திண்டாடி திணறித் தவித்தார்கள். கடைஸ்யில் குஞ்சு சுவாமிகள், “பகவானே, எங்களை எப்படியாவது காப்பாற்ற்டி, தங்களைத் தரிசிக்கும்படிச் செய்யுங்கள்” என்று பிரார்த்திதுக் கொண்டார். அப்போதுச் அற்று தொலையில் ஒருவன் விறகு வெட்டிக் கொண்டிருந்தது தெரிந்தது. அவனை அழைத்து, அவன் உதவியுடன் மூண்று ஓடைகளைக் கடந்து ஏழு சுனைக்குச் சென்று மாலையில் ஆசிரமத்திற்குத் திரும்பினார்கள்.
அப்போது ஆசிரமத்தில் பாராயணம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. எனவே, தாழ்வாரத்திலிருந்தபடியே பகவானுக்கு ஒவ்வொருவராக நமஸ்கார்ம செய்து விட்டுப் போய் விட்டார்கள். இதைப் பகவான் கவனித்தது அவர்களுக்குத் தெரியாது. கடைசியாகச் சென்ற குஞ்சு சுவாமிகளிடம் “என்னிடம் சொல்லாமல் ஏன் ஆலமரத்தைத் தேடிக் கொண்டு போனீர்கள்? இரண்டு பேர் நமஸ்காரம் பண்ணி விட்டு ஓடி விட்டார்கள். நீயோ ஒன்றுமே தெரியாதவன் போல் வந்து நிற்கிறாய். என்னிட்ம சொல்லியிருந்தால் அங்கே போக வேண்டாம் என்று சொல்லியிருப்பேனே, இதென்ன விஷமம்?” என்று அன்புடன் கடிந்து கொண்டார்.