ஸ்ரீ ஆதி சங்கரர் அவதரித்த கேரளத்தில், கொல்லம் அருகில் உள்ள ஒரு கிராமத்தில், 1906-ல் பழனி ஆண்டவரின் பக்தரான வைத்தியநாதனுக்கும், செல்லம்மாளுக்கும் மகளாக பிறந்தாள் ஜானகி. சிறு வயதிலிருந்தே நற்பண்புகளோடும், நல்லொழுக்கங்களோடும் வளர்ந்த அப்பெண், பக்தவிஜயம், பாகவதம், ராமாயணம் போன்ற புனித நூல்களில் ஆழ்ந்து, எந்நேரமும் ஆண்டவனின் சிந்தனையிலேயே லயித்திருப்பாள். வீட்டுக் காரியங்களிலும், ஆண்டவனின் வழிபாட்டிலும், தோத்திரப் பாடல்களிலுமெ மனத்தை செலுத்தி வந்த அவளுக்கு திருமணத்தில் நாட்டமேயிருக்கவில்லை. அவள் கன்னிப் பெண்ணாகவெ இருந்து விடலாம் என்ற கனவு கண்டாள். ஆனால், அவள் கனவு பலிக்க வில்லை.
தனது பதினான்காவது வயதில், 1919-ம் ஆண்டில் டாக்டர் கணபதி ஐயருக்கு இரண்டாந்தாரமாக வாழ்க்கைப்பட்டாள் ஜானகி. தன் எண்ணத்திற்கு மாறாக திருமணம் ஆகி விட்டாலும், தன் மன நிலையைப் புரிந்து கொண்ட கணவனுக்கு வாழ்க்கைப்படும் பேறு பெற்றாள். மனைவியின் தூய வாழ்க்கைக்கும் பக்தியுள்ளத்திற்கும் உறுதுணையாகவும் நின்றார் கணவர். பக்தியுள்ளத் தாம்பத்ய வாழ்வில் மங்கலம் துலங்கியது. மகிழ்ச்சி பொங்கியது. மக்கட் பேறு மலர்ந்தது.
ஐந்தாறு ஆண்டுகள் கடந்தன. ஜானகியின் வாழ்வில் மாற்றங்கள் தோன்றவாரம்பித்தன. பிறர் எண்ணங்களை அறிவது, நடக்கப் போகும் நிகழ்ச்சிகளை முன்பே உணர்வது போன்ற சில அபூர்வ சக்திகள் தோன்றின. அவளுடைய பக்தி உறுதியாயிற்று.
1934-ம் ஆண்டு கணபதி ஐயரின் வீட்டுக்கு ஒரு சாது வந்தார். தன் வழக்கப்படி அவரை இன்முகத்துடன் வரவேற்று அன்புடன் உபசரித்தாள் ஜானகி. அந்த சாது, ஜானகியை த் தமக்கு சமமான மற்றோர் ஆசனத்தில் அமரச் சொல்லி, “உனக்கு என்ன வேண்டும் கேள்” என்றார். “சுவாமி, எனக்கு இந்த வாழ்க்கையிலேயே விடுதலை வேண்டும். பந்த பாசங்களற்று, அஞ்ஞானம் அகன்று, முக்தி நிலையடைய வேண்டும். குருநாதர் ஒருவரின் கருணையிலிருந்தால் தான் அது முடியும். எனவே, எனக்கொரு சற்குருவைக் காட்டியருள வேண்டும்” என்று கேட்டாள் அன்னை ஜானகி. அந்த சாது தன் சுய உருவைக் காட்டி, “நான் சிக்கில் சிங்காரவேலன் தாயே, உனக்காக உலகில் ஒரு குரு அவதரித்திருக்கிறார். அவர் அருணாசலத்தில் இருக்கிறார். அவர் பெயர் ரமண மகரிஷி. அவரைத் தரிசித்து, அவரையே குருவாக ஏற்றுக் கொள். உனக்கு எல்லா நலன்களும் உண்டாகும்” என்று கூறிச் சென்றார்.
அன்றையிலிருந்து ஜானகிக்கு ஸ்ரீ ரமண பகவானைத் தரிசிக்க வெண்டும் என்ற பேராவல் மேலிட்டது. குடும்ப அலுவல்கள் காரணமாகவும், கணவரின் வேலை காரணமாகவும், திருவண்ணாமலைப் பயணத்தை ஒத்திப் போட்டுக் கொண்டே வந்தாள். அன்னையினுள் இயங்கிய தெய்வீகச் சக்தி சுடர் விட்டுப் பிரகாசிக்கத் தொடங்கியது. ஆனால், ஆன்மீக மலர்ச்சியின் அனுபவங்களைத் தாங்கிக் கொள்ளக் கூடிய பக்குவம் ஜானகியின் உள்ளத்திற்கோ, உடலுக்கோ இருக்கவில்லை.
இனியும் நாட்களைக் கடத்தக் கூடாது என்று 1935-ம் ஆண்டில் கணபதி ஐயரும், ஜானகியும், ரமணாசிரமத்திற்குச் சென்றார்கள். பக்தர்களோடு பக்தர்களாக தரிசன அறையில் அமர்ந்திருந்தாள் ஜானகி. பொறுமையிழந்து போனார். தம் நிலையைப் பகவானிடம் நேரில் சொல்ல்விட வேண்டும் என்று அவர் துடித்தார். பகவானிடம் ஒரு வார்த்தை கூடப் பேசாமலேயே அன்று இரவு ஊருக்குத் திரும்ப நேரிடுமோ என்று எண்ணிய போது அவருக்கு துக்கம் துக்கமாக வந்தது.
“என்னை ஆட்கொண்டிருக்கும் அபூர்வ சக்தியைத் தாங்க முடியாமல் நிலை தடுமாறிப் போய் மூளை குழம்பி விட்டால் என்ன செய்வது? எனக்கு குருவின் துணை கிடைக்குமா? பகவான் என்னை சிஷ்யையாக ஏற்றுக் கொள்வாரா? நான் குருவல்ல, எனக்குச் சீடரும் கிடையாது என்று பகவான் யாரிடமோ கூறியிருக்கிறாராமே” என்றெல்லாம் பலவாறு சிந்தித்துக் குழம்பிக் கொண்டிருந்தால் ஜானகி. அப்போது அன்னையின் உள்ளக் குமுறலை அறிந்தவர் போல், பகவான்ச் சட்டென்று எழுந்து வெளியேறினார். சாதாரணமாக, பாராயணம் முடிவதற்குள் பகவான் இவ்வாறு எழுந்து போவது வழக்கமில்லை.
பகவான் தம்மிடம் கொண்டுள்ள கருணையின் அடையாளமாகவே இதைக் கருதிய் ஜானகியும், வெளியே வந்தார். சற்றைக்கெல்லாம் மாட்டுக் கொட்டில் பக்கமிருந்து பகவான் திரும்பிக் கொண்டிருந்தார். அதுதான் தக்க தருணம் என்று எண்ணிய ஜானகி மகானின் மலரடிகளில் விழுந்தார். பணியாள் ஒருவன் அவரைத் தடுக்கப் போனான். பகவான் அவரைப் பேசாமல் ஒதுங்கி இருக்கச் சொன்னார்.
எழுந்து நின்ற அன்னை ஜானகியின் உடல் நடுங்கியது. கண்ணீர் வழிந்தோடியது. தமது ஆன்மீக அனுபவங்களைப் பகவானிட்ம கூறினார். ஆன்ம தரிசனத்தையும், முக்தியையும் வேண்டி நிற்பதாகக் கூறினாள். சித்தம் தடுமாறிப் போகாமல் இருப்பதற்காகத் தமக்குக் குருவாக இருந்து துணை புரியும்படி மன்றாடினார். கருணைக் கடல் அபயம் அளித்தது.
“உனக்குக் குரு கிடையாது என்று ஏன் நினைத்துக் கொண்டிருக்கிறாய்? நானிருக்கப் பயமேன்? நான் உன் குருவாக இருந்து காப்பாற்றுகிறேன். உனக்கு ஒரு கெடுதலும் வராது.”
அருணாசல ரமணன் அன்னையின் உள்ளத்தில் குடியேறினார். சரணாகதிக்கு, சத்தியப் பொருள் அடிமையாகியது.
இரண்டாண்டுகள் கழித்து, ஜானகி மாதாவுக்கு, மேலும் பல அற்புத அனுபவங்கல் ஏற்பட்டன. குண்டலினி சக்தி அவருள் ஒளியாய் விசுவரூபம் எடுத்து, ஒலியாய்த் தாக்கி, மண்டையைப் பிளந்தது. உள்ளும், புறமும் பரம்பொருள் ஜோதியாய்த் தரிசனம் தந்தது. பல்வேறு தெய்வங்கள் திவ்வியத் தோற்றமளித்து லீலைகள் புரிந்தன. அருள் வெள்ளப் பெருக்கில் மூழ்கிய அன்னை, திக்குமுக்காடிப் போனார். உடல் நலம் குன்றியது. படுத்த படுக்கையாகி விட்டார்.
ஒரு நாள் இரவு, படுக்கையிலிருந்த ஜானகியின் உடல் மேல் நோக்கிக் கிளம்பி அந்தரத்தில் நின்றது. அருகில் படுத்திருந்த உறவினள் ஒருத்தி, “இதென்னம்மா வேடிக்கை!” என்று கூச்சலிட்டாள். அதைக் கேட்ட மாதா, “இம்மாதிரியான மாயா ஜால சித்து வேலைகள் செய்து காட்டுவதில் எனக்கு விருப்பமில்லை. பிறரை பிரமிக்க வைக்கும் அற்புதங்களை நான் நிகழ்த்திக் காட்ட வேண்டாம்” என்று கூறினாள். அடுத்த கணம் அவரது உடல் படுக்கையில் இறங்கி விட்டது.
தம்முள் இயங்கிய அபூர்வ சக்தியை நிதானப்படுத்தும் நோக்கத்தோடு, உடல் மெலிந்து பலவீனமுற்ற நிலையிலும் பகவானைத் தரிசித்து வர, திருவண்ணாமலைக்குச் சென்றாள் ஜானகி மாதா. கருணாமூர்த்தியின் எதிரில் கை கூப்பி நின்றாள். அருட் பெருக்கை நிதானப்படுத்தி நேர்ப் பாதையில் திருப்பும் ஆற்றல் பெற்ற சற்குரு, ஆன்மீஅ அணையாக இருந்து அன்னையை அருள் பாலித்தார். கருணை பொழியும் கண் நோக்காலேயே ஆர்ப்பரிக்கும் குண்டலினி சக்தியை ஒரு நிலைப்படுத்தி அமைதி நிலவச் செய்தார்.
கணவர் ரிடையர் ஆன பிறகு1941-ம் ஆண்டு முதல் தஞ்சை கணபதி நகரில் சொந்த வீட்டில் குடியேறினாள். 1954-ல் கணவரை இழந்தாள். அது முதல் தாம் அருணாசல ஜோதியில் கலக்கும் 1969-ம் ஆண்டு வரை குருதேவி ஜானகி மாதா கனகாம்பர வர்ண உடை அணிந்து, சந்நியாசியாகவே வாழ்ந்தார். பக்தர்களுக்கு அன்பும், ஆதரவும் காட்டி தெய்வமாகத் துணை புரிந்திருக்கின்றார். பலருக்குக் கனவில் தோன்றி ஆசி வழங்கியிருக்கிறார். ராமனாகவும், கிருஷ்ணனாகவும், முருகனாகவும், அன்னபூரணியாகவும், அகிலாண்டேசுவரியாகவும் , காமாட்சியாகவும், பார்வதி தேவியாகவும் தரிசனமளித்திருக்கிறார். இன்னல்களைக் களைந்திருக்கிறார். நோய்களைத் தீர்த்து வைத்திருக்கிறார். “கடமையைச் செய், பகவானை நம்பு, நற்கதி கிடைக்கும்” என்பதே அவர் அனைவருக்கும் அருளிய உபதேசமாகும்.
குருவிடம் சரணடைந்து அவரைப் பரிபூரணமாக நம்பி விட்டால், அவர் ஒரு போதும் நம்மைக் கை விட மாட்டார் என்பதற்கு ஜானகி மாதாவின் வாழ்க்கையில் பல நிகழ்ச்சிகள் நடந்துள்ளன. அவற்றில் ஒன்றை பற்றி மாதாவின் மகஃஜ்ல் பத்மாவதி சீதாபதி என்னிடம் விவரித்தார்.
பத்மாவதியின் மூன்று வயது மகனுக்குக் கண்களில் புண் ஏற்பட்டு, பார்வையே போய் விட்டது. எத்தனையோ மருத்துவர்களைப் பார்த்து விட்டார்கள். எத்தனையோ வைத்தியம் செய்தாகி விட்டது. ஒன்றும் பலனளிக்கவில்லை. இனி ஒரு வைத்தியத்திற்கும் குணமாகாது. குழந்தைக்குக் கண் பார்வை திரும்பாது, என்று மருத்துவ நிபுணர்களும் கூறி விட்டார்கள்.
மகள் மாதாவிடம் தஞ்சமடைந்தாள். மாதாவோ, குருவிடம் சரணடைந்தாள்.
“பத்மா, பகவானிடம் வேண்டிக்கொள். கண் கண்ட தெய்வம் நிச்சயம் கண்களைக் கொடுக்கும்” என்றார் ஜானகி மாதா.
மாதா குறியபடியே பகவான் ரமணரைக் குறித்துப் பிரார்த்திக் கொண்டாள் அந்தத் தாய். மனிதன் கை விட்ட பிறகு, பிரார்த்தனையைத் தவிர வேறு வழி ஏது?
பக்தர்களின் வேண்டுகோலைப் பகவான் புறக்கணிப்பாரா? அனைவரும் ஆச்சரியம் அடையும்படி அந்த அதிசயம் நடந்தது.
அண்ணாமலை கார்த்திகை தீப தினத்தில் ஜோதி தரிசனத்தன்று, அந்தக் குழந்தைக்கு திடீரென்று கண் தெரிந்தது. அருணாசலத்தில் தோன்றிய ஒளி, இருள் அகற்றி இவர்கள் வாழ்வுக்கு ஒளி வழங்கியது.
குழந்தையை அழைத்துக் கொண்டு, ரமணாசிரமம் சென்ற தாய், பகவானின் பெருங்கருணையால் நிகழ்ந்த அதிசயத்தைக் கண்ணீருக்கிடையே கூறினாள்.
பகவான் சிரித்தார். எல்லாம் தெரிந்தவர், “ஓகோ, அப்படியா?” என்று கேட்டார், ஒன்றும் தெரியாதவர் போல.
திருவண்ணாமலை ரமணாசிரமத்திற்கு மேற்கே பெலாக்கொத்து என்ற இடத்தில் ஓர் ஆசிரமம் இருக்கிறது. அங்கு அண்ணாமலை சுவாமிகள் என்ற சாது இருந்தார்.
தென்னாற்காடு மாவட்டத்தில், விருத்தாசலத்திலிருந்து திருச்சி செல்லும் பாதையில் உள்ல கொண்டங்குறிச்சியில் 1910-ம் ஆண்டு வாக்கில் பிறந்த செல்லப் பெருமாள் தம் இருபதாவது வயதில் ரமணாசிரமத்திற்கு வந்தார்.
பகவானிடம் மனத்தைப் பறி கொடுத்து, அவரது தொண்டிற்கெ தன்னை அர்ப்பணித்துக் கொண்டார் அந்த இருபது வயது இளைஞர். பத்து நாட்கள் கடந்தன. பகவான் இளைஞரைப் பார்த்து, “நீ எப்போது வரப்போகிறாய், என்று காத்துக் கொண்டிருந்தேன், ஐயா….” என்று திருவாய் மலர்ந்தருளினார். “என்ன, பகவான் என்னை எதிர்பார்த்துக் கொண்டிருந்தாரா? எனக்கும், பகவானுக்கும் பூர்வ ஜன்மத் தொடர்பு இருக்கிறதா? என்ன பாக்கியம் செய்தேன்” என்று புளகாங்கிதம் அடைந்தார் இளைஞர் செல்லப் பெருமாள்.
தாய்ப் பறவை குஞ்சுப் பறவையைப் பழக்கி வளர்ப்பது போல், குறிப்பால் உணர்த்தியே செல்லப் பெருமாளை ஞான அமுது ஊட்டி வளர்த்தார் பகவான். கல்வியறிவில்லாதவனுக்கு, தமிழ் எழுதமும், படிக்கவும் பயிற்றுவித்தார். பாடல்களைக் கற்றுத் தந்தார். குளிக்கும் போதும், உணவு உட்கொள்ளும் போதும், மாலையில் நடக்கும் போதும் அரிய கருத்துக்களைக் கூறியருளினார். தஞ்சம் என்று வந்தவர்களுக்கு அவரவர் நிலைக்கேற்ப உபதேசம் செய்தருளி மாயத்திரையை மெல்ல மெல்ல விலக்கி, கை தூக்கி விட்டு கரையேற்றும் கருணாமூர்த்தியாயிற்றே அருணை வள்ளல்! அன்னாரின் அடிமைகளில் ஒருவர் ஆனார் செல்லப் பெருமால், பின்னர் அண்ணாமலை சுவாமிகளாக மாறினார்.
உடல் உழைப்புக்கு வாய்ப்புத் தந்து பக்தனின் உள்ளத்தையும், பண்படுத்திக் கொண்டிருந்தார் பகவான். இருப்பினும் அண்ணாமலை சுவாமிகளுக்கு நிம்மதியில்லை. கருணைத் தெய்வத்தின் அரவணைப்பு இருப்பினும், ஆசிரமத்தின் நிர்வாகத்தினர் தம் மீது வீண்பழி சுமத்தித் துன்புறுத்தியதை நினைத்து வருந்தினார். அமைதியான வாழ்வுக்கு அங்கு நிலவிய சூழ்நிலை பெரும் தடையாக இருந்ததை உணர்ந்து மிகவும் வேதனைப்பட்டார். அங்கிருந்து போய் விடுவதே நல்லது என்று அவருக்குத் தோன்றியது.
சில நாட்களுக்கெல்லாம் ஆசிரமத்திலிருந்து விலகி, பக்கத்திலுள்ல பெலாக்கொத்தில் ஒரு குடில் அமைத்துக் கொண்டு வாசம் செய்வது என்பது அவர் முடிவு. அண்ணாமலை சுவாமிகள் அதைப் பகவானிடம் கூறிய போது, பகவானின் முகம் மலர்ந்தது. “ரொம்ப் நல்லது, ரொம்ப நல்லது, ரொம்ப நல்லது” என்று மகிழ்ச்சியோடு மூன்று முறை கூறி ஆசி வழங்கினார். ஒன்பது ஆண்டுகள் குருநாதனின் திருவடி நிழலாய் இருந்து விட்டுப் பிரிந்து செல்வது என்பது எளிதா? பகவானே ஆசி வழங்கி விட்டதால் சுவாமிகளுக்கு மனப்பளு சற்றுக் குறைந்தது. பெலாக்கொத்தில் இருந்து கொண்டே பகவானடிஹ் தரிசித்துக் கொண்டும், உபதேச மொழிகளைக் கேட்டுக் கொண்டும் நாட்களைக் கடத்தி வந்தார் அண்ணாமலை சுவாமிகள்.
அதற்குப் பிறகு மிகவும் தீவிரமான கட்டுப்பாட்டை விதித்தார் பகவான். அண்ணாமலை சுவாமியை, அந்த இடத்தை விட்டு எங்கும் போக வேண்டாம் என்று கூறி விட்டார். தம்மைத் தரிசிக்கக் கூட ரமணாசிரமத்திற்குவ் அரவேண்டாம் என்று கண்டிப்பாகச் சொல்லி விட்டார். எத்தனை கடுமையான தடை உத்தரவு! அண்ணாமலை சுவாமிகள் அந்தச் சோதனையிலும் வெற்றி கண்டார். உயிரே போவதானாலும் குரு வாக்கை மீறலாமா? அது ஆண்டவனின் கட்டளையை மீறுவதற்கு ஒப்பாகுமே.
பகவான் அவ்வப்போது பெலாக்கொத்துக்கு வந்து அண்ணாமலை சுவாமியிடம் உரையாடி விட்டுப் போவது வழக்கம். ஒரு நாள் திடீரென்று அங்கு வந்த பகவான், “உன்னை தரிசித்து விட்டுப் போகலாம் என்றுதான் வந்தேன்!” என்றாராம். இதைக் கேட்டதும் பெரிய அபசாரம் செய்து விட்டது போல் துடிதுடித்துப் போனாராம் அண்ணாமலை சுவாமிகள். அவர் நிலையைக் கண்ட பகவான், “நான் சொன்ன வார்த்தைக்கு நீ கட்டுப்பட்டிருக்கிறாயே, உன் பக்தி ஒசந்ததில்லையா? அதுக்காகத்தான் அப்படிச் சொன்னேன்” என்றாராம்.