ரமண சரிதம் – 28

ஒருவரனைப் பற்றி, ஓரகத்திரு; குருமூர்த்தியொன்றே திருமூர்த்தி, என்ற பேருண்மைப்படி, எந்நேரமும் ஆனந்தமயமான ரமணானுபவத்தில் தோய்ந்து மூழ்கித் திளைத்துக் கொண்டிருந்தார் முருகனார்.

பகவானின் உபதேசக் கருத்துக்களையும், பக்தர்களின் கேள்விகளுக்கு அவர் தந்த பதில்களையும், வட மொழியில் “ரமண கீதை”யாக ஆக்கித் தந்தவர் காவிய கண்ட கணபதி முனி. திரு முருகனாரோ, ரமணோபதேசங்களைத் தீந்தமிழ்ப் பாக்களாக ஆக்கித் தந்திருக்கிறார். ஆற்று வெள்ளமெனப் பாய்ந்து, பாரெங்கும் ஆன்ம லாபமெனும் பயிர் செழிக்கச் செய்து வந்த முருகனார் இயற்றிய செய்யுட்கள் நாற்பதினாயிரத்துக்கும் அதிகமானவை. காலஞ்சென்ற “ரமணபாதாநந்தா” என்ற ரமண பக்தர் இவற்றில் பாதி செய்யுட்களை ரமண சந்நிதி முறை, ஸ்ரீ ரமண சரணப் பல்லாண்டு, குருவாசகக் கோவை, ஸ்ரீ ரமண தேவ மாலை, ஸ்ரீ ரமணானுபூதி முதலிய பல்வேறு தலைப்புகளைக் கொண்ட நூல்களாகத் தொகுத்து வெளியிட்டிறுக்கிறார். இவற்றைத் தவிர சுமார் பதினைந்தாயிரம் பாக்கள் பல்வேறு தலைப்புக்களில் தொகுக்கப்பட்டு நெருங்காலும் அச்சேறாமல் இருந்திருக்கின்றன.

முருகனாரது உள்ளத் தாமரையில் ரமணரருள் எனும் தேன் ஊறியதன் காரணமாக அவரது நாவில் ஆற்றலும், அறிவுஞ்செறிந்த அருட்பாக்கள் பிறந்தன. பண்டைச் சங்ககாலப் பெருந்தமிழ் புலவரின் ஏற்றமிகு நடை முருகனாரிடம் தவழ்ந்து விளையாடுகிறது. வள்ளுவப் பெருந்தகையின் தெள்ளிய கருத்தோட்டமும், மாணிக்கவாசகரின் மணியொளியும், அப்பர் பெருமானின் அருட்கனிவும், சுந்தரரின் சௌந்தர்ய வாக்கும், ஞானசம்பந்தரின் மோகன வாசகமும் ஒருங்கிணைந்து மிளிரும் அமுதக் கடலாய்த் திகழ்கிறது முருகனாரின் “றமண சந்நிதி முறை” என்ற செந்தமிழ்த் துதிநூல்.

இதுவரைக் கேட்டறியாத எளிய முறையில் ஆன்மஞான ரகசியப் பேருண்மைகளையெல்லாம்  பகவான் ரமணர் தமது அனுபவத்திலிருந்து எடுத்துக் கூறியது தாய் மொழியாகிய தமிழில் தான். இது தமிழ்ப் புலவர் முருகனாருக்கு மட்டுமின்றி தமிழ் மொழிக்கும் பெரும் பாக்கியமாக அமைந்து விட்டது.

பகவானிட்மைருந்து அவ்வப்போது உபதேசக் கருத்துக்களும், ஆழ்ந்த அறிவுரைகளும் தோன்றும் போது, அவை சீரிய செந்தமிழ்ப் பாக்களாகஃப்வும், வசனமாகவும் மலர்ந்து வரும். அவற்றைக் கேட்டுக் கொண்டிருக்கும் பிற மொழியினர், “பகவான் என்ன கூறுகிறார்?  தயவு செய்து மொழி பெயர்த்துச் சொல்லுங்கள்” என்று கேட்டு அவற்றை அறிந்து கொள்ல வேண்டியிருந்தது.ஆனால் அவற்றின் சரியான பொருளை நேரிடையாகக் கேட்டு உணரும் பேறு, அங்கிருந்த தமிழர்களுக்கே கிடைத்தது. அவர்களுக்குள்ளும் திரு முருகனார் ஒருவரே பகவானது தமிழ் பேருரைகளின் சரியான பொருளைக் கண்டறிந்து பிறர்க்கும் எடுத்துக் கூறவல்லவராயிருந்தார். அல்ல, அல்ல, அவற்றைப் புரிந்து கொள்வதற்கு பகவான் அவருக்கு அருளாசி வழங்கினார் என்று கூறுவதே பொருத்தமும், உண்மையுமாகும்.

ஒவ்வொரு நாளும் பகவான் திருவாய் மலர்ந்தருளிய அரிய ஆன்மீகக் கருத்துக்கள் ஒவ்வொன்றையும், இனிய, அழகிய தமிழ் வெண்பாக்கலாகச் செய்து பகவானிடம் சமர்ப்பிப்பார் முருகனார். அவ்வுபதேசக் கருத்துக்கள் சரியாக அமைந்தனவா என்பதைப் பகவான் பார்த்து ஒப்புதல் அளித்த பின்னர், அவற்ரைக் கோவையாகத் தொகுப்பார். அவை மொத்தம் 1254 செய்யுட்களான “திருவாசகக் கோவை” என்ற நூலாயிற்று. ஆன்ம போதனைகளின் சகல ரகசிய விளக்கங்களும் ஒருங்கே தொகுக்கப்பெற்று விளங்கும் ரமணோபதேச நூல் ஒன்று இருக்குமாயின் அது குருவாசகக் கோவையே!

ஸ்ரீ ரமண மகரிஷியின் உபதேசங்களுள்  முக்கியமானவையாகக் கருதப்படுவது “உபதேச உந்தியாரு”ம் “உள்ளது நாற்பது”ம். இவ்விரண்டு அரிய செல்வங்களும் உலகிற்குக் கிடைப்பதற்குக் காரணமாயிருந்தவர் முருகனாரே.

ஒரு காலத்தில் பல ரிஷிகள் ஒரு காட்டில் வசித்து வந்தனர். தாங்கள் தவறாமல் செய்து வந்த சடங்குகளின் மூலம் அவர்கள் அரிய சித்திகளைப் பெற்றிருந்தனர். இவ்வழியிலேயே முக்தி நிலையும் பெற்று விடலாம் என்று அவர்கள் நினைத்தார்கள். ஆனால் அது நேராது என்று அவர்கள் உணரவில்லை. ஏனெனில், கர்மாவின் பலனும் கர்மாவாகத்தான் இருக்கும். அது கர்மாவை அழிக்க உதவாது. சடங்குகள், சக்தியைத்தான் கொடுக்கும். ஆன்ம சாந்தியை அளிக்காது. சிவபெருமான் இந்தப் பேருண்மையை அந்த ரிஷிகளுக்கு உணர்த்த வேண்டும் என்ற நோக்கத்துடன் ஒரு சாதுவாக அவர்கள் முன் தோன்றினார். மகாவிஷ்ணு ஓர் அழகிய பென்ணுருவில் அவருடன்  வந்தார். காட்டிலிருந்த ரிஷிகளெல்லாம் அந்த ஆரணங்கைக் கண்டு மனத்தைப் பறி கொடுத்து, அதனால் நிலை தடுமாறிப் போய், சக்தியிழந்து தவித்தனர். ரிஷி பத்தினிகளும், சாதுவிடம் கருத்திழந்தனர். இதைக் கண்டு கோபமுற்ற ரிஷிகள் மந்திரத்தால் ஒரு யானையையும், புலியையும் உருவாக்கி சாதுவாக வந்த சிவபெருமானின் மீது ஏவி விட்டனர். சிவபெருமானோ எளிதாக அந்த மாய யானையையும், புலியையும் கொன்று அவற்றின் தோல்களை உரித்து உடையாகப் போர்த்திக் கொண்டார். தங்களைவிட வலிமை மிக்க ஒருவர் இருக்கிறார் என்பதை அப்போதுதான் ரிஷிகள் உணர்ந்து, ஈசுவரனின் கால்களில் விழுந்து மன்னிப்புக் கேட்டு, தங்களுக்கு நல்லுபதேசம் செய்தருளும்படி மன்றாடிக் கேட்டுக் கொண்டனர்.

இப்புராணக் கதையை முருகனார் கவிதையாக எழுதினார். இறுதியில் சிவபெருமான் ரிஷிகளுக்கு உபதேசம் செய்தருளும் பகுதியைத் தாம் எழுதாமல் பகவானிடம் சென்று, அதை எழுதித் தரும்படி வேண்டிக் கொண்டார். மானிட உருவில் அமர்ந்திருந்த தட்சிணாமூர்த்தி, சீடரின் வேண்டுகோளுக்குச் செவிசாய்த்தார். பகவானால் முப்பது பாக்களில் அருளப்பட்ட இந்த உபதேசத்திற்குத்தான் “உபதேச உந்தியார்” என்று பெயர் வழங்கப்பட்டது. கர்ம, பக்தி, யோக, ஞான மார்க்கங்களைத் தெளிவாக விளக்கும் இந்த நூல், ஆத்ம விசாரம்தான் எல்லாவற்றையும் விடச் சிறந்தது என்று கூறுகிறது. உபதேசவுந்தியாரை சமஸ்கிருதம், தெலுங்கு, மலையாளம் முதலிய மொழிகளில் பகவானே மொழி பெயர்த்திக்கிறார். அதற்கு உபதேச சாரம் என்று பெயர். இது ஒரு வேத நூலாகக் கருதப்படுகிறது. தினமும் பகவானின் சந்நிதியில் வேத பாராயணத்துடன், உபதேச சாரமும் ஓதப்பட்டு வந்தது.

“உள்ளது ஒன்றுதான்” என்ற அத்வைத ஞானமே ரமண தத்துவத்தின் ஜீவ நாடி. “நான் யார்?”  என்ற ஆன்ம விசாரத்தின் முடிவும் அதுதான். பகவானின் சொந்த அனுபவத்தில் தோன்றிய அந்த தத்துவத்தின் விளக்கத்தை செய்யுள் வடிவில் சுருக்கமாக ஆக்கித்தர வேண்டுமென்று முருகனார், பகவானிட்ம வேண்டிக் கேட்க, பகவானும் அவ்வப்போது செய்யுட்களை இயற்றித் தந்தார். அவற்றையெல்லாம் முறைப்படுத்தித் தொகுத்து “உள்ளது நாற்பது” என்ற அரிய நூலை உருவககியவர் முருகனாரே.

“உள்லது நாற்பது”வில் அனுபந்தமாக பகவான் மேலும் நாற்பது செய்யுட்களும் படைத்துத் தந்திருக்கிறார்.

காவிய கண்ட கணபதி முனி “உள்ளது நாற்பது” என்ற நூலை வட மொழியில் மொழி பெயர்த்து, “சத் தர்சனம்” எனப் பெயரிட்டார். முனிவரின் முக்கிய சீடரும், பகவானின் பக்தர்களில் ஒருவருமான ஸ்ரீ கபாலி சாஸ்திரிகள், காவிய கண்டரின் ரமண கீதைக்கு, விளக்க உரை எழுதியது போலவே, “சத் தர்சன”த்திற்கும் ஒரு விளக்க நூல் எழுதியிருக்கிறார்.

கோபாலகிருஷ்ண பாரதியாரின் “ஐயே மெத்தக் கடினம்” என்ற நந்தனார் கீர்த்தனத்தை பின்பற்றி முருகனார் ஒரு பல்லவியும், அனுபல்லவியும் எழுதினார்.

                   பல்லவி

ஐயே! யதிசுலபம், ஆன்மவித்தை

ஐயே! யதிசுலபம்.

                  அநுபல்லவி

நொய்யார்தமக்களங்

கையா மலகக்கனி

பொய்யா யொழியமிகு

மெய்யா யுளதான்மா (ஐயே)

இதைப் பகவானிடம் காட்டி, அப்பாட்டிற்கான சரணங்களை எழுதித் தரும்படி கோரினார். பகவானும் ஆன்ம வித்தையின் தத்துவத்தையும்,, பலனையும் விளக்கும் வகையில் ஐந்து சரணங்கள் எழுதித் தந்தார். பகவானின் சரணங்களில் விழுந்து பெற்ற சரணங்களோடு கூடிய அந்த கீர்த்தனை, ஆன்ம வித்தையைத் தெளிவாக விளக்கும் அரிய படைப்பாகும்.  திரு முருகனாரின் “திரு ரமண சரணப் பல்லாண்டு” என்ற நூல் உருவாவதற்குக் காரணமானக இருந்தவர் திரு தேவராஜ முதலியார் என்னும் ரமண பக்தர். திருவாசகத்திலிருக்கும் போற்றி அகவலை அவர் அடிக்கடி பகவானுக்கு முன் பாடிப் பரவசப்படுவது வழக்கம். ஒரு நாள் அருகிலிருந்த முருகனாரிடம், “இதைப் போலவே நீங்களும் ஒவ்வௌர் அடியும் சரணம் என்று முடியும்படி பகவானின் மீது ஓர் அகவல் இயற்றுவதுதானே! அது ரமண பக்தர்களுக்கு மிக்க பயனுள்லதாக இருக்குமே” என்று கூறினார்.  சில மாதங்களுக்குள் “சரணம் பல்லாண்டு” உருவாகி, ஸ்ரீ ரமணபாதாநந்தரது நன்முயற்சியால் அது நூலாகவும் வெளி வந்தது. இந்நூல் ஸ்ரீ ரமண பகவானின் திருவடிகளில் சூட்டப்பட்ட நன்மலர் மாலையாகும்.

இந்நூலின் முற்பகுதியாகிய “சரணத் திருவகவல்” அறுநூற்று அறுபத்தாறு அடிகள் கொண்டது. எதுகை, மோனை நயங்களுடன், பொருட்களையும், ஓசை இன்பமும் நிரம்பப் பெற்றது. இந்த அகவல் தேவராஜ முதலியாரின் விருப்பத்திற்கிணங்கப் பாடப் பெற்றது என்பதை, “ஆவலாயிவ்வோ ரகவ விசைப்பித்த தேவராயன் மகிழ் தேவா சரணம்” என்ற அடிகளில் முருகனார் புலப்படுத்துகிறார்.

பிற்காலத்தில் காஞ்சிபுரத்தில் வசித்து வந்த தேவராஜ முதலியாரை நேரில் பார்த்தவர்கள் எல்லையற்ர மனச்சாந்தியைப் பெறுவது வழக்கம். அவரிடம், ரமண மகரிஷியின் அருகில் இருந்த அனுபவத்தைப் பற்றிக் கேட்கும் போது, அவர் உள்ளத்தில் ஆனந்த வெள்ளம் பொங்குவதையும், அதன் அடையாளமாக அவர் முகம் பூரித்து மலர்வதையும் கண்டவர்கள் பலர்.

அவர், “என்னைப் பொறுத்தவரையில் பகவான் எனக்குத் தாயும், தந்தையும், தஞ்சமும், தெய்வமுமாவார்”. நான் அவருடைய செல்லக்குழந்தை” என்பார் முதலியார்.

“ஆமாம், பகவானுக்கு நான் கடிதம் எழுதினால், “அம்மையப்பா” என்றுதான் தொடங்குவேன். கடைசியில் “ரமண சேய்” என்றுதான் கையெழுத்திடுவேன். அதைப் பகவானும் ஏற்றுக் கொண்டார். தரிசன அறையில் யாராவது “அம்மையப்பா” என்று வரும் பாடலைப் பாடினால் பகவான், அறையில் நான் இருக்கிறேனா என்று பார்ப்பார். என்னைப் பார்த்து லேசாகச் சிரிப்பார். அன்று நான் அங்கில்லாவிட்டால் மறுநாள் என்னைக் கண்டதும், முதல் நாள் பாடியவரைப் பற்றியும், அந்தப் பாட்டைப் பற்றியும் கூறுவார். பகவானின் கருணையே, கருணை….” என்று கூறி விட்டு, பழைய நினைவுகளில் ஆழ்ந்து விடுவது அவர் வழக்கம்.

தொடக்கத்தில் அவர் பகவானைத் தரிசித்தது பற்றிக் கேட்கும் போது, “1900-ம் ஆண்டு முதன் முதலில் பகவானைத் தரிசித்தேன். பகவானுக்கு அப்போது பகவானுக்கு இருபத்தோரு வயது. எனக்கு பதினான்கு வயது. ஒரு சமயம்க்திருக்கோயிலுக்குப் போயிருந்த நான், அங்கேயிருந்து என் உறவுக்காரங்களோட கார்த்திகை தீபத் தரிசனத்திற்காக திருவண்ணாமலைக்குச் சென்றேன். அப்போது மலைமீதிருந்த பிராம்மண சுவாமியைப் பார்க்க எல்லோரும் போனார்கள். நானும் போனேன். அவர் அப்போ விரூபாட்ச குகையிலே இருந்ததா ஞாபகம்.  பகவான் அப்போதெல்லாம் யாரோடும் பேசும் வழக்கமில்லை. கண்ணை மூடிக் கொண்டு தலையைக் குனிந்து கொண்டு பேசாமல் உட்கார்ந்திருந்தார். கொஞ்ச நேரம் அவர் சந்நிதியில் நின்று விட்டுத் திரும்பி விட்டேன்.

பிறகு, பதினான்கு வருஷங்கள் கழித்து, 1914-ம் வருஷத்தில, மறுபடியும் நான் திருவண்ணாமலைக்குச் சென்றேன். என் உறவினரான வேலப்பாடி குப்புசாமி முதலியார், பகவானிடம் அடிக்கடிப் போய் வந்து கொண்டிருந்தார். நான் அப்போது சித்தூரில் வக்கீலாக தொழில் புரிந்து கொண்டிருந்தேன். வேலூரிலிருந்து வந்திருந்த குப்புசாமி முதலியார், பகவானைத் தரிசித்து விட்டு வரலாம் என்று என்னை அழைத்ததால் அவருடன் சென்றேன். அப்போதும் பகவான் விரூபாட்ச குகையில்தான் வாசம் செய்து கொண்டிருந்தார். நாங்கள் சென்ற போது, பகவான் குகைக்கு வெளியே அமர்ந்திருந்தார். அப்போது பகல் இரண்டு மணியிருக்கும். அங்கு வேறு யாருமேயில்லை. பகவானுக்கருகில், இரண்டு மூன்று குரங்குகள் மட்டுமெ இருந்தன.

அன்று பகவான் குரங்குகளின் வாழ்க்கையைப் பற்றி என்னிடம் நிரம்ப நேரம் பேசினார். அவற்றின் பழக்க வழக்கங்களைப் பற்றியும், குணாதிசயங்களைப் பற்றியும் வர்ணித்தார். பிரானிகளின் வாழ்க்கையைப் பற்றி இவர் அத்தனை நுணுக்கமாக ஆராய்ந்து வைத்திருந்ததைப் பார்த்து நான் ஆச்சரியப்பட்டேன். அன்று பகவான் வேறு ஒன்றுமே பேசவில்லை. நானும்க் அவரிடம் எதைப் பற்றியும் கேட்கவில்லை. இரண்டு மணி நேரம் அவரோடு இருந்ததைப் பற்றியும், அவர் பேசியதைக் கேட்டுக் கொண்டிருந்ததைப் பற்றியும் ரொம்பவும் சந்தோஷப்பட்டுக் கொண்டு ஊருக்குத் திரும்பி விட்டேன். அதற்குப் பிறகு நான்கைந்து வருஷங்கள் கழித்து பகவான் கந்தாசிரமத்திற்கு மாறிய பிறகு, அங்கு சென்று தரிசித்தேன். பின்னர் அவ்வப்போது ஆசிரமத்திற்குப் போய் வந்தேன். எத்தனையோ கஷ்ட நஷ்டங்களுக்கிடையிலே பகவானின் தரிசனத்தாலும், உபதேச மொழிகளாலும் வாழ்க்கையில் சாந்தி பெற்றேன். 1942-ம் ஆண்டு முதல் ஆசிரமத்திலேயே தங்கி விட்டேன். 1965-ம் ஆண்டு வாக்கில் உடல் நலம் குன்றிவிட்ட காரணத்தால், அங்கிருந்து வெளியேறி உறவினர்களின் இல்லங்களில் தங்கி காலங்கடத்தி வருகிறேன்.”

பழைய நிகழ்ச்சி ஏதாவது  ஒன்றை நினைவு படுத்திக் கூற முடியுமா என்று கேட்டால், “எத்தனியோ இருக்கு. எதைச் சொல்லுவது என்றே தெரியவில்லை” என்று கூறுவார்.

திருவண்ணாமலைக்கு அநேக முறை சென்றிருந்தும், தேவராஜ முதலியார் கிரி பிரதட்சணம் செய்ததேயில்லை. ஒன்பது மைல் சுற்றி வருவது அவருக்கு வீண் வேலையாகத் தோன்றியது. அதனால் நற்பயன் ஏற்படும் என்ற நம்பிக்கையும் அவருக்கில்லை.

ஒரு சமயம் பகவானைப் பார்த்து “பகவானே, எல்லோரும் கிரிப் பிரதட்சணம் செய்கிறார்களெ, தாங்களும் முன்பெல்லாம் கிரிவலம் வரும் வழக்கம் உண்டு என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதனால் என்ன பயன்? அப்படி ஏதாவது பலன் ஏற்பட வேண்டுமானால், அதில் நமக்கு நம்பிக்கையிருக்க வேண்டாமா? உள்ளத்தில் நம்பிக்கையில்லாமல் மலையைச் சுற்றி வருவதால் என்ன நன்மை விளையும்?” என்று கேட்டார்.

அதைக் கேட்டு பகவான் பொறுமையோடு கூறினார் :

“நம்பிக்கையிருக்கிறதோ இல்லையோ, நாம் விரும்புகிறோமோ இல்லையோ, சிலவற்றுக்கு சில இயல்பான தன்மைகள் உண்டு. அதன் பலன் இருந்துதான் தீரும். நெருப்பு இருக்கிறது. அதில் ஒரு குழந்தை கையை நீட்டினால் அது விரலை சுடத்தான் செய்யும். நெருப்பின் தன்மையைப் பற்றி குழந்தை அறிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. அதைப் போலவே அருணாசலத்தை வலம் வந்தால் நமக்கு நம்பிக்கையிருக்கிருந்தாலும், இல்லாவிட்டாலும், அதற்கான பலன் கிடைத்துதான் தீரும். நீ வேண்டுமானால் ஒருமுறை சுற்றி விட்டு வா. பிறகு உன்னை அது மீண்டும் இழுக்கிறதா, இல்லையா பார். அதனால் உனக்கு சாந்தி கிடைப்பதை நீயே உணருவாய்.”

பகவான் கூறியபடியே அருணாசலத்தை வலம் வரத் தொடங்கினார் தேவராஜ முதலியார். அவரை அறியாமலே அவருக்கு ஆனந்தமும் மனச்சாந்தியும் ஏற்பட்டன.

பொருளற்றது என்று நினைத்த கிரிப் பிரதட்சிணத்தில் பிறருக்கு புரிய வைக்க முடியாத பயனைப் பெற்றார் தேவராஜ முதலியார்.

கடல் அலைகள் ஒரு நாள் ஓய்ந்தாலும் ஓயலாம். ஆனால், வாழ்க்கைக் கடலில் அடிக்கும் துன்ப அலைகள் என்றுமே ஓயாது. அவற்றால் தாக்குண்டு மூச்சுத் திணறும் நிலையிலும், நிலை குலையாமல் வாழும் அருங்களையைப் பழகுபவர்கள்தான் உண்மையிலேயே வாழ்ந்தவர்களாவார்கள். அவ்வாறு துன்பங்களை லேசாக்கிக் கொண்டு வாழ்வந்தற்கான மன நிலையைப் பெறுவது அத்தனை எளிதல்ல. தெய்வத்தின் துணையும், குருவருளும் இருந்தால் தான் அத்தகைய ஞானத்தைப் பெற முடியும்.

தேவராஜ முதலியாருக்கு குடும்ப வாழ்க்கையில் அடுத்தடுத்து துன்பங்கள் நேர்ந்தன.  மூத்த மகளின் தோல்வியுற்ர திருமண வாழ்க்கை, நோயுற்ற மனைவியின் அகால மரணம், திடீரென்று பறிபோன அரசு வழக்கறிஞர் உத்தியோகம், எல்லாவற்றுக்கும் மேலாக தீராத உடல் நோய் இவற்றின் தாக்குதல்களால் மன நிம்மதியற்றிருந்தவருக்கு பகவான் ரமணரின் தரிசனம் தெம்பையும், நம்பிக்கையையும் அளித்தது. அவ்வப்போது ஆசிரமத்திற்கு வந்து போய்க் கொண்டிருந்தவர், ஓய்வு பெற்ற பின் அங்கேயே தங்கிவிட்டார். பகவானின் கருணைக் கடாட்சத்தாலும், அருளோபதேசத்தாலும் மனவமைதி பெற்று, ஆசாபாசங்களை வென்று, பற்ற பெருந்துறவியாய் உயர்ந்தார். தம் வாழ்வில் நேர்ந்த இந்த அற்புத மாற்றத்தை தமது நூலில் தமக்கே உரிய எளிய முறையில் விளக்கியிருக்கிறார் முதலியார். பகவானின் அருளைப் பெற்றதற்க்கு அடையாளமாக “பகவான் ரமணர் பற்றிய என் நினைவு அலைகள்” என்ற தமது சிறு நூலில் அவர் ஓர் அற்புத நிகழ்ச்சியைக் கூறுகிறார்.

1939-ம் ஆண்டில், கோடை விடுமுறையின் போது, ஆசிரமத்தில் தங்கியிருந்தார் முதலியார். ஒரு நாள் காலை அவர் கண்னில் மணல் புகுந்து அவரை மிகவும் வாட்டியது. ஆசிரமத்திற்கு எதிரே ஒரு வீட்டில் வசித்து வந்த டாக்டர் மெல்கோட் என்பவரிடம் காட்டினார். அவர் கண்ணைப் பரிசோதித்து விட்டு, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சில ஆயுதங்களின் உதவியால் அதை வெளியே எடுக்க முயலுவதாகக் கூறினார். திருவண்ணாமலையில் அதற்கான வசதிகள் இல்லாவிட்டால், சென்னைக்குச் செல்ல வெண்டியிருக்கும் என்றும்,  நேரம் கடத்தினால் கண் பார்வையயே இழக்க நேரிடும் என்றும் எச்சரித்தார். அதற்குள் ஆசிரமத்திற்கு வந்திருந்த சில பக்தர்கள் அங்கு கூடி விட்டனர். அதில் ஒருவர், கண்ணில் தூசி விழுந்ததால் பார்வையிழந்தவர். அவரைக் கண்டதும், முதலியார் பயந்தே விட்டார். “பகவானே, இப்படியொரு சோதனையா? அமைதியையும், ஆனந்தத்தையும் நாடி வந்த இடத்தில், நான் இப்படியொரு அவதிக்குள்ளாக வெண்டும் என்பது  தங்கள் சித்தமா?” என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டார். பின்னர் டாக்டரிடம், “நான் கண்ணில் கொஞ்சம் விளக்கெண்ணய் விட்டுப் பார்க்கிறேன். அப்படியும் அந்தக் துகள் வெளியே வரா விட்டால் நாம் ஆஸ்பத்திருக்குப் போவோம்” என்று கூறினார். அதற்கு டாக்டரும் ஒப்புக் கொண்டார்.

இருவரும் பகவான் அமர்ந்திருந்த அறைக்குச் சென்றனர். மனத்தில் பிரார்த்திக் கொண்டெ முதலியார் நமஸ்காரம் செய்து விட்டு எழுந்தார். தமது கண்ணுக்கு நேர்ந்த விபத்தைப் பற்றி பகவானிடம் ஒன்றுமே கூறவில்லை. பின்னர் அங்கிருந்த பணியாளிடம் விளக்கெண்ணெய் கேட்டு வாங்கிக் கொண்டு, டாக்டருடன் தமது இருப்பிடத்தை நோக்கி நடந்தார்.

சற்றுத் தொலைவு சென்றவுடன், முதலியாருக்கு கண்னில் இருந்த வலி சற்றுக் குறைந்தது போல் தோன்றியது. உறுத்தலும் அவ்வளவாக இல்லை. அதைப் பற்றி டாக்டரிடம் கூறினார். அதைக் கேட்டு மெல்கோட் ஆச்சரியப்பட்டார். ஆனால் அவருக்கு முழு நம்பிக்கை ஏற்படவில்லை. முதலியாரை அறைக்குள் அழைத்துச் சென்று மீண்டும் பரிசோதித்துப் பார்த்தார். டாக்டரால் தம் கண்களை நம்பவே முடியவில்லை. அந்தத் துகள் அங்கேயில்லை. அது எப்படி மறைந்தது என்றே தெரியவில்லை.

முதலியாருக்கு விளக்கெண்ணெய் விட்டுக் கொள்ல வேண்டிய அவசியமே இல்லாமல் போய் விட்டது. கண்ணில் உறுத்தலோ, வலியோ சிறிதும் இல்லை. டாக்டர் ஆச்சரியத்துடன், “அது எப்படிப் போயிற்று என்றே எனக்குப் புரியவில்லை. எல்லாம் பகவானின் அற்புத லீலையாகத்தான் இருக்க வேண்டும்” என்றார்.

இவ்வாறு ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், தமக்கிருந்த மனக் குழப்பத்தையும், குறுக்கிட்ட இடர்களையும் நீக்கி, அருட்ச்சக்தியை வெளிப்படுத்திய ஞானகுரு பல சித்திகள் பெற்ற மகான் என்ற தமது கருத்தை வெளியிட்டிருக்கிறார் தேவராஜ முதலியார். இமைப் பொழுதில் எந்த அற்புதத்தையும் நிகழ்த்திக் காட்டக் கூடிய அரிய சக்திகளைப் பெற்றிருந்தும், எதையுமே வெளியில் காட்டிக் கொள்ளாமல், பக்தர்களின் மனத்தை ஆன்ம விசாரத்தில் திருப்பி  ஞான மார்க்கத்தின் மூலம் முக்தி பெறுவதையே முக்கியமாக பகவான் உபதேசித்து வந்தார் என்றும் எடுத்துக் காட்டியிருக்கிறார்.

ஸ்ரீ தட்சிணாமூர்த்தியைப் போல், மௌன குருவாக, உலகோருக்கு உபதேசித்தருளிய பகவான், தம் வாழ்நாளெல்லாம் அடியார்களுடன் அளவளாவி மகிழ்ச்சியூட்டி வந்திருக்கிறார். பழைய நிகழ்ச்சிகளை சுவை குன்றாமல் நினைவு கூர்த்திருக்கிறார். ஊர்க் கதைகள் பேசி உற்சாகப் படுத்தியிருக்கிறார். பத்திரிகைச் செய்திகளைப் படித்துப் பிறருடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார். அவ்வாறு பகவானிடமிருந்து தாம் கேட்டறிந்த பல செய்திகளைக் குறித்து வைத்துக் கொண்டு, தமது நூலில் சேர்த்திருக்கிறார் முதலியார். திருவண்ணாமலைத் தலத்தில் இன்றும் அற்புதங்கள் நிகழ்ந்து வருகின்றன என்பதை உணர்த்துவதற்காக பகவான் கூறிய நிகழ்ச்சிகளை விவரித்திருக்கிறார் முதலியார்.