தரிசனத்திற்கு வருபவர்களெல்லோரும் வயிறார சாப்பிட்டார்களா என்பதில் பகவான் எப்போதுமே மிகவும் அக்கறையாயிருப்பார். அவர்களில் ஒருவராக அவர்களோடு அமர்ந்துதான் சாப்பிடுவார். சாப்பிடும்போது எல்லோர் இலைகளையும் கவனிப்பார். “அவருக்கு இன்னும் கொஞ்சம் குழம்பு ஊற்று, அதோ அவருக்கு கத்தரிக்காய் தானாக போடு!” என்று அன்புடன் “பந்தி” விசாரிப்பார்.
பகவானுக்கென்று யாராவது ஏதாவது சமையல் செய்து எடுத்து வந்தால், அதில் எல்லோருக்கும் கொஞ்சம் கொஞ்சம் பரிமாற வேண்டும். தரிசன அறையில் இருக்கும் போது, வெளியூர்களிலிருந்து வரும் பக்தர்கள் “பகவானுக்குப் பிடிக்குமே” என்று தின்பண்டங்கள் கொண்டு வந்தால், அதைப் பிரசாதமாக அங்கிருப்பவர்களுக்கெல்லாம் கொடுக்கச் சொல்லி விட்டு பின்னர்தான் தாம் எடுத்துக் கொள்வார். தின்பண்டங்கள் மட்டுமல்ல. பகவானுக்கு லேகியம் போன்ற நாட்டு மருந்துகள் கொண்டு வந்தாலும் எல்லோருக்கும் பங்கிட்டுக் கொடுக்கச் சொல்லுவார்!
“பகவானுக்கு உடம்பு சரியில்லை. அதற்காகக் கொண்டு வந்த மருந்து இது” என்று யாராவது கூறினால், “ஏன், எனக்கு மட்டும்தான் உடம்பு சரியில்லையா? பாவம் அவர் கூடத்தான் இளைத்துப் போயிருக்கிறார். அவரும் சாப்பிடட்டுமே!” என்பார் அந்தக் கருணைக்கடல்.
ஒரு சமயம் ஆசிரமத்தில் அரிசிக்குத் தட்டுப்பாடு வந்து விட்டது. அப்போது பகவான் சில பச்சிலைகளின் பெயர்களைக் கூறி அவற்றைப் பறித்து வரும்படி கூறினார். அவற்றையெல்லாம் சேர்த்து ஒரு கூட்டாகச் செய்யச் சொன்னார். எல்லோரும் சாப்பிட அமர்ந்த போது எல்லோர் இலையிலும் அந்தக் கூட்டை நிறையப் போடச் சொல்லி, ஓர் உருண்டை, அளவு சாதத்தைப் பரிமாறச் சொல்வார்.
பின்னர், ஒவ்வொரு பச்சிலையிலுள்ள உணவுச் சத்தையும், உடலுக்குத் தேவையான என்ன்னென்ன மருந்து வகைகள் அவற்றில் இருக்கின்றன என்பதையும் எல்லோருக்கும் எடுத்து விளக்குவாராம்!
ஆழியும் இந்த உடல் நாம் அல்ல. அதனுள் இருக்கும் அழிவற்ற ஆன்ம வஸ்துவே உண்மையான நாம் என்று உணர்ந்து உபதேசித்தருளிவரும் மகா ஞானிகளும், மகாத்மாக்களும் பிறரின் உடல்களைப் பேணிக் காப்பதில் பரம கருணாமூர்த்திகளாக இருப்பதைக் காண்கிறோம். தாங்கள் பட்டினி கிடந்து, பசியால் வாடி வதங்கினாலும், தங்களை நாடிவரும் அடியார்க் திருக்கூட்டத்தின் வைறு வாடுவதை அவர்கள் ஒருபோதும் அனுமதிப்பதில்லை.
ஸ்ரீ காமகோடி ஆசாரிய சுவாமிகளின் இந்த எல்லையற்ற கருணையைப் பற்றிப் பலரும் கூறியிருக்கிறார்கள். சுவாமிகள் யாத்திரை செல்லும் இடத்தில் தங்கும்போது, தமது ஆகாரத்தைப் பற்றி சிறிதும் கவலையின்றி, உடன் வரும் சிப்பந்திகளும், பக்தர்களும் ஆகாராம் சாப்பிட்டார்களா என்று அன்போடு விசாரிப்பார்கள். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் இவர்களது ஆகாரத்திற்கு ஏதாவது ஏற்பாடு செய்யச் சொல்லி, அவர்கள் சாப்பிட்ட பிறகுதான் அந்த இடத்தை விட்டுப் புறப்படுவார்.
ஆசிரமத்தின் சாப்பாட்டு அறையில் பகவான் சினிமாப்படங்கல் பார்த்து ரசித்த நிகழ்ச்சிகளைக் குஞ்சு சுவாமி ரசனையோடு விவரிப்பார். பட்டினத்தார், நந்தனார், ராமராஜ்யம் போன்ற பண்பும் பக்தி ரசமும் நிறைந்த திரைப்படங்களைப் பகவானுக்காகப் போட்டுக் காண்பிப்பார்கள். பகவாஉம் உற்சாகம் பொங்கும் சிறுவனைப் போல் சிரித்தும், அழுதும், கை தட்டியும், “அடேடே” என்றும் “ஆகா” என்றும் ரசித்து அவற்றைப் பார்த்தாராம். எல்லாம் தத்ரூபமாக இருக்கே, நிஜமாகவே மழை பெய்கிறதே! என்று படம் பார்த்துக் கொண்டே ஏதாவது பேசிக் கொண்டிருப்பாராம். எல்லாம் தெரிந்த ஞானவான், ஒன்றுமே தெரியாத விளையாட்டுச் சிறுவனைப் போல் காட்சி தருவாராம். “இந்த உலகமும், அதில் நாம் பார்க்கும் காட்சிகளும், அனுபவிக்கும் இன்பமும், துன்பமும் சினிமாவைப் போல் தோன்றி மறையும் ஒரு மாயக் காட்சியே, சத்தியமாய், நித்தியமாய் இருப்பது பிரும்மம் ஒன்றே” என்று உபதேசித்தருளவே மனித உருவில் நடமாடிக் கொண்டிருந்த பகவான், எதிலுமே தம்மை சம்பந்தப்படுத்திக் கொள்ளாமல், சச்சிதானந்த சாட்சியாஹ்ய் இருந்து புரிந்த பல்வேறு லீலைகளில் சினிமாவை ரசித்ததும் ஒன்று.
அச்சமயத்தில் ஆசிரமத்தில் ஒரு இளம் துறவி இருந்தார். அவர் எந்நேரமும் கண்களை மூடி தியானத்தில் ஆழ்ந்திருப்பது வழக்கம். சினிமாக் காட்சி நடைபெறப்போகிறது என்றும், அதைப் பகவான் பார்க்கப் போகிறார் என்றும் கேள்வியுற்ற அவரும் அதைக் காண வந்தார். “சினிமாக் காட்சி தொடங்கியது முதல், அவர் தம் கண்களை மூடி பகவானின் முன்பு அமர்ந்து, இறுதிவரை தியானத்தில் மூழ்கியிருந்தார். அன்று காட்சி முடிந்ததும், பகவான், அந்த இளம் துறவியின் பெயரைக் குறிப்பிட்டு “எல்லாரையும் விட, இவர்தான் இந்த சினிமாவை நன்றாக ரசித்துப் பார்த்தார்” என்று பகவான் நகைச்சுவையோடு கூறினாராம்.
ஸ்ரீ ரமணாசிரமத்தில், திரு முருகனாரைத் தரிசிக்கும் பாக்கியம் அச்சமயத்தில் பலருக்கும் கிடைத்தது. தமிழறிஞரான அவருக்கு பகவானின் அருள் கிடைத்தது உள்ளத்தில் கவிதை ஊற்றுப் பெருக்கெடுத்தது, ரமணானுபவமும், ரமணலீலைகளும், ரமண தத்துவோபதேசங்களும், அருட்பாக்களாக, வற்றாத ஜீவ நதியாகப் பெருக்கெடுத்து ஓடியது. கவிமலர்களை மாலைகளாகத் தொகுத்து, பகவானின் மலர்ப்பாதங்களில் சமர்ப்பித்து, தம் வாழ்வை உயர்த்தி, அதனால் உலகோர் உய்ய வழி வகுத்துத் தந்த அந்தப் பெருந்தகையைப் பற்றி கேட்டுப் பயனடைவது முக்கிய்ம்.
பகவானின், சாமாதிக்குப் பிறகு, ஒரு சமயம், நீராடி விட்டு, உடையைக் கூட மாற்றிக் கொள்ளாமல், ஒரு முழத் துண்டோடு கட்டிலில் அமர்ந்திருந்தார் திரு முருகனார். பரிசுத்தமாய், பழுத்த பழமாய், அமுதம் பொழியும் பார்வையோடு அமைதியாய் அமர்ந்திருந்தார் முருகனார். பகவானைப் பற்றி ஏதாவது சொல்லுங்கள் என்று கேட்டால், ஏதாவது கேட்டால், தெரிந்ததைச் சொல்கிறேன் என்பார் அம்முதியவர். வயதின் முதிர்ச்சியால் உடலின் தளர்ச்சியால், குரலில் ஓர் அயர்ச்சி இருந்தாலும், உள்லத்தில் பொங்கியெழுந்த உறுதி மிக்க உணர்ச்சி கண்களில் பொங்கியெழுவதைக் காணலாம். எத்தனையோ அனுபவங்கள், எத்தனையோ காட்சிகள், ஒரு கேள்விக்குப் பதிலாகச் சொல்லி விட இயலாத பல தகவல்கள்.
ரமணானுபவத்தைப் பருகிப் பருகி அந்த அனுபவப் பெரும் பேறெ உயிர் மூச்சாக வாழ்ந்து கொண்டிருந்த அவர் “என்ன சொல்வதென்றே எனக்குத் தெரியவில்லை. அதைப் பற்றியெல்லாம் பெசுவதற்கு ஒன்றுமேயில்லை. எல்லாம் அனுபவங்கள். கிடைத்தற்கரிய அந்த ஆத்மானுபவத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்” என்று சொல்வார் அவர்.
ஏதாவது ஒரு நிகழ்ச்சியைக் குறித்து கூற முடியுமா என்று கேட்டால், தெளிவாக பதில் கூறமாட்டார். சும்மா கிடப்பதே சுகம் என்று இருந்தார் முருகனார். ஸ்ரீ ரமண பகவானின் மெய்யடியார்களில் திரு முருகனாரும் ஒருவர்.
நம் அறிவையும் மீறிய பரம் பொருளுக்கு நம்மை முழுமையாக அடிமையாக்கிக் கொள்ளும் போது, நம்மை ஒரு கருவியாகக் கொண்டு, அப்பேரொளி சுடர் விட்டுப் பிரகாசிக்கும் அதிசமயத்தைக் காணலாம். அத்தகைய சரணாகதியால் அரிய சாதனைகள் புரிந்து, பெயரையும், புகழையும் ஏற்க விரும்பாமல், விளம்பர உலகிலிருந்து ஒதுங்கி அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் முருகனாரின் இயற்பெயர் சுப்பிரமணிய ஐயர் என்பது. தந்தை கிருஷ்ணய்யர். இராமநாதபுரத்தைச் சேர்ந்தவர். எனவே, தூய தமிழில் இவரது பெயர் “முகவைக் கண்ணன் முருகனார்” என்று மாறியது.
இள வயதிலிருந்தே சிறந்த தமிழ் பயிற்சி பெற்றிருந்த இவர், தமிழ் பேரகராதிக் குழுவில் ஓர் உறுப்பினராகைருந்து நற்பணியாற்றியிருக்கிறார். பின்னர் சென்னை நார்த்விக் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் தமிழ் பண்டிதராக பணியாற்றியிருக்கிறார்.
அப்போது பகவானைப் பற்றிக் கேள்விபட்டு, 1923-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் விடுமுறையின் போது திருவண்ணாமலைக்கு வந்தார். அருணாசலேசுவரைத் தரிசித்தார். அடுத்து அருணாசல ரமணரைத் தரிசிக்க வேண்டும். மகான்களைக் காணச் செல்லும்போது, வெறுங்கையோடு போகலாமா? ஆலயத்திலேயே அமர்ந்து ஒரு செய்யுளைப் புனைந்தார். அதை எடுத்துக் கொண்டு ரமணாசிரமத்திற்குச் சென்றார்.
முருகனார் வரப்போவதை முன்பே அறிந்திருந்தவர் போல் மகரிஷியும், தம் குடிலிலிருந்து வெளியே வந்து அவருக்குத் தரிசனம் தந்தார். முருகனாரின் கையிலிருந்த காகிதத்தைக் காட்டி, “இது என்ன?” என்று கேட்டார்.
முருகனார் பகவான் திருமுகத்தை நோக்கினார். அதுவரை கண்டறியாத ஓர் அனுபவத்தைப் பெற்ற முருகனார் கையிலிருந்த காகிதத்தைப் பிரித்தூ படிக்க முயன்றார். அவர் கைகள் நடுங்கின. குரல் எழும்பவில்லை. கண்களில் நீர் வழிந்தது. அருகிலிருந்தவர் “திருச்சந்நிதியில் படித்து சமர்ப்பிப்பதற்காக இவர் செய்யுட்கள் இயற்றி வந்திருக்கிறார்” என்றார்.
“படி” என்றார் பகவான்.
படிக்க முயன்றார் முருகனார். தாம் எழுதிய செய்யுளைத் தாமே சரிவர படிக்க முடியாமல் திணறிப் போனார்.
“அதை என்னிடம் கொடு” என்று கேட்டு வாங்கிக் கொண்டார் பகவான். அதை ராக பாவத்துடன் உரக்கப் படித்தார். முதன் முறையாக பகவான் வாய் விட்டுப் படிப்பதைக் கேட்டு இதர பக்தர்கள், இந்த அரிய நிகழ்ச்சியைப் பேரதிசமயமாகக் கண்டு களித்தனர்.
பார் வளர் கயிலைப் பருப்பதம் நீங்கி
பண்ணவர் சூழலை விட்டு
வாரொளி மணி போல் வாசகர் வாக்கை
வளர் செவிமடுத்திட விரும்பி
யேர்வளர் பெருந்தண் டுறையடைந்தாற்போ
லிழிசினேன் புன்சொலும் வேட்டுச்
சிவன ரருணைச் செழும்பதி சேர்ந்தாய்
தேசிக ரமண மாதேவே
என்ற அந்தச் செய்யுளை நயமுடன் படித்து முருகனாரின் கவிதைத் திறனுக்கு புனிதத் தன்மையைக் கூட்டுவித்தார் பகவான்.
“கயிலை மாமலையையும், தேவர் திருக்கூட்டத்தையும் விட்டு, மாணிக்கவாசகரின் சொல்லை விரும்பி சிவபெருமான் மண்ணுலகிய அடைந்தாற் போல், இழிந்தவனாம் இவனது சொல்லையும் விரும்பி இவ்வுலகையுற்ற ரமண குரு தேவா” என்ற கருத்துடைய இச்செய்யுள், பிற்காலத்தில் திருவாசகத்திற்கு ஈடான துதிப்ப் பாடல்களை இவர் இயற்றப் போவதற்கு அறிகுறியாக அமைந்துவிட்டிருந்தது.
அன்று முதல் முருகனார், பகவானை அடிக்கடி தரிசித்து, அந்த தரிசனத்தின் பயனாய் அவ்வப்போது பல துதிப் பாடல்களை இயற்றி வந்தார். மார்கழி மாதம் ஒரு நாள், “அண்ணாமலை ரமணன் அன்பர்க் கருண்மாரி கண்ணாலே பெய்யும் கருணைத் திறம்பாடி” எனத் தொடங்கும் ஒரு பாடலைக் கூறி பகவானின் மலரடிகளில் சமர்ப்பித்தார். திருவாச திருவெம்பாவையையொத்திருந்த இப்பாடல்களைக் கேட்ட பகவான், “திருவாசகப் போக்கிலெயே துதிகள் எழுதலாமே!” என்று அருளுரை வழங்கினார். இதைக் கேட்ட முருகனார், “மாணிக்கவாசகர் எங்கே, நான் எங்கே” என்று நடுக்கத்துடன் கூறினார்.
அந்த கணம் அவ்வாறு பதில் கூறினாலும், சென்னைக்குத் திரும்பிய பின்னர், “திருவாசகப் போக்கிலேயே துதிகள் பாடலாமே” என்ற பகவானின் யோசனையை தமக்கிடப்பட்ட கட்டளையாகவே முருக்சனார் உள்ளத்தில் தோன்ற, ஆரம்பித்தது “திருவெம்பாவை” “திருப்பள்ளியெழுச்சி” என்னும் துறைகளில் ரமணஸ்துதியை இயற்றத் தொடங்கினார். நாளடைவில் பகவானைத் தரிசித்த போதெல்லாம், பக்திப் பரவசத்தில் திருவாய்மொழி, தேவாரம், திருப்புகழ் போன்ற தெய்வப் பாடல்களின் வழியைப் பின்பற்றி பல பதிகங்கள் இயற்றினார்.
ஒரு சமயம், “அண்ணாமலை ரமணன்” என்ற திருநாமம் ஒவ்வொரு பாடலிலும் வரும் “உயிருண்ணிப் பத்து” என்னும் பதிகத்தை முருகனார் எழுதிக் கொண்டிருந்த போது, அருகிலிருந்த விசுவநாத சுவாமி, “முகவாபுரி முருகன்” என்று நகைச்சுவையோடு குறிப்பிட்டார். அதைக் கேட்டுக் கொண்டிருந்த பகவான், விசுவநாத சுவாமியைப் பார்த்து அச்சொல் வரும்படி ஒரு செய்யுளை இயற்றுமாறு அவரைப் பணித்தார். பகவான் கட்டளை இட்டு விட்டால் முயற்சியில் ஈடுபட வேண்டியதுதானே! விசுவநாத சுவாமி ஒரு செய்யுளைப் புனைந்தார்.
அகத்தாமரை மலர்மீதுறை
யருணாசல ரமணன்
நகைத்தானுற விழித்தாமரை
செகுத்தானென துவிரை
மிகத்தானருள் கரத்தானென
முகவாபுரி முருகன்
செகுத்தாருய வகுத்தான் முறை
திருவாசக நிகரே
இப்பாசுரத்தின் கடைசி வரி பகவானால் இயற்றப் பெற்றது. முருகனாரின் துதிப்பாடல்கள் திருவாசகத்திற்கு நிகரானவை என்பது பகவானேலேயே ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டது. ஏற்றம் கொடுப்பவரும் அவரே, ஏற்றுக் கொள்பவரும் அவரே.
குரு பக்தியின் பெருமைக்கு ஒஓர் இலக்கணமாகவும், சரணாகதித் தத்துவத்திற்கு ஓர் இலக்கியமாகவும் திகழ்ந்தவர் திரு முருகனார். எத்தனை தெய்வங்கள் இருந்தாலும், எத்தனை ஞானிகள் இருந்தாலும், எல்லா நாமரூபங்களிலும் மனத்தை அலையவிடாமல், சற்குரு ரமணரின் திருநாமத்தையும், திருவுருவத்தைய்யும் மட்டுமே மனத்தில் நிறுத்தி, தம்மை உயர்த்திக் கொண்டு, உலகோர் உய்ய கவி மழை பொழிந்தவர் இத்தெய்வப் புலவர்.
பாரதத்தில் எத்தனையோ மகா புருஷர்கள் இருக்கிறார்களே, அவர்களையெல்லாம் தரிசிக்க வேண்டாமா? எத்தனையோ தலங்களும், தீர்த்தங்களும், மூர்த்தங்களும் இருக்கின்றனவே, அங்கெல்லாம் சென்று புண்ணியம் பெற வேண்டாமா? என்று அன்பர்கள் கேட்டால், அதற்கு முருகனார், “நான் அங்கெல்லாம் சென்று என்ன காணப் போகிறென்? ஞான சூரியனான ரமணரின் தரிசனத்தால், காணவேண்டியவற்றையெல்லாம் கண்டு விட்டேன்” என்ற ஒரே பதிலைத்தான் கூறுவார்.