ஊருக்குப் புறப்படுவதற்கு முன் மகரிஷியின் அருள் தமக்குப் பரிபூறணமாகக் கிடைத்த நிகழ்ச்சியை பால் பிரண்டன் “ரகசிய இந்தியாவில் ஒரு தேடல்” என்ற நூலில் வெகு அற்புதமாக விவரித்திருக்கிறார்.
திருவண்ணாமலையை விட்டுப் புறப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு அவர் உடலில் திடீரென்று ஒரு குளிர் நடுக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அவருக்கு வியர்த்துக் கொட்டியது. காய்ச்சல் வருவதற்கான அறிகுறிகள் தோன்றின. உடனே, தரிசன அறைக்கு விரைந்து, மகரிஷியின் முன்பு கண்களை மூடி தியானத்தில் அமர்ந்தார். சற்றைக்கெல்லாம் மகரிஷியின் உருவத் தோற்றம் அவர் மனக் கண்முன் தோன்றியது. மகரிஷி கூறியிருந்ததை நினைவுபடுத்திக் கொண்டு, உருவத்தை மறந்து, மகானின் உருவமற்ற ஆன்ம சொரூபத்தில் தம் மனத்தை லயிக்கச் செய்தார். எண்ண ஓட்டங்கள் அடங்கி, மனம் ஒரு நிலைப்பட்டது. ஏதோ ஒரு புதுமையான வலிமை மிக்க சக்தி அவருள் புகுந்து அவரை மிக வேகமாக இழுத்துச் சென்றது. அங்கு பேரமைதி நிலவியது. இன்பமயமான உணர்வில் மிதந்தார் அவர்.
அந்நிலையில் மனத்தில் தோன்றித் தோன்றி மறையும் எண்ணங்களைக் கூர்ந்து கவனித்தார். அவர் எண்ணங்களின் பிடியிலிருந்து தப்பித்துக் கொள்ள வேண்டும் என்று அவருக்குத் தோன்றியது.
பின்னர் அவருக்கு ஏற்பட்ட அனுபவங்களை பால் பிரண்டனின் சொற்களிலேயே சுருக்கமாகக் காண்போம்.
காலம் காலமாக எண்ணங்களின் கொடூர ஆட்சிக்கு உட்பட்டு வாழும் நாம், எவ்வாறு அவற்றிடமிருந்து விடுபடுவது? எண்ண ஓட்டங்களையே நிறுத்தி விட வேண்டுமென்று மகரிஷி ஒரு போதும் கூறவில்லை.
“எண்ணங்கள் எங்கிருந்து புறப்படுகின்றன என்று பார்த்துக் கொண்டே அதன் மூலத்திற்குப் போ. அந்நிலையில் உன் உண்மையான சொரூபம் வெளிப்படுவதற்காக் காத்திரு. அதாற்குப் பிறகு உன் எண்ணங்கல் தாமாகவெ மடிந்து விடும் என்று மகரிஷி அடிக்கடி கூறியிருக்கிறார். எனவே அப்போதிருந்த நிலையில், எண்ணங்களின் பிறப்பிடத்தைக் கண்டுபிடித்து விட்டதாக நான் நினைத்து பின்னர் நிகழ்ப் போவதற்காக, பாம்பு இரைக்காகக் காத்திருப்பது போல் தயாராகக் காத்திருந்தேன்.
அடுத்த என்ன நடக்கும் என்று மகரிஷி கூறியது போலவே என் அனுபவங்கள் அமைந்திருந்தன. எண்ண அலைகள் குறைந்து அடங்க ஆரம்பிக்கின்றன. பகுத்தறிவு செயலிழந்து போகிறது. இதுவரை அனுபவித்தறியாத ஓர் அபூர்வ உணர்விற்கு நான் ஆளாகிறேன். உடலைப் பற்றிய நினைவோ, எண்ணங்களைப் பற்றிய உணர்வோ அற்றுப் போகிறேன்.
இறுதியில், எதிர்பார்த்தது நடந்தே விடுகிறது. மெழுகுவர்த்தி கரைந்து அணைவது போல், கடைசி எண்ணமும் அழிந்து போகிறது. ஆழ்ந்த தூக்கத்தில் ஏற்படுவது மனம் எண்ண எழுச்சிகளற்ற நினைவுக்குள் அடைக்கலமடைகிறது. சலனமற்ற நிலையில் நான் யார் என்பதும், என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதும் எனக்குத் தெரிகிறது. “நான்” மாறிவிட்ட , பிரகாசமான் ஒரு புதிய “நான்”. இதுவரை நானாக இருந்த அற்பமான உருவம் மறைந்து, தெய்வீகமானதொரு “நான்” உதமயமாகிறது. அப்போது சிறையிலிருந்து வெளி உலகிற்கு வருவதூ போல் விவரிக்க முடியாத சுதந்திர உணவு பெறுகிறேன்.
நம் உலகின் நினைவே எனக்கு இல்லை. இந்த பூமி என் கண்களிலிருந்து மறைகிறது. பிரகாசமான ஒளிக் கடலின் நடுவில் நான் இருக்கிறேன். அந்தப் பேரொளியிலிருந்து தான் எல்லா உலகங்களும் தோன்றுவதாக நான் உணர்கிறேன். நான், புதிய “நான்” பிரும்மானந்தத்தின் மடியில் மைதி பெறுகிறேன். அனைத்தையும், அனைவரையும் அணைத்துக் கொள்ளும் அழிவில்லாப் பேரின்பு என்னுள் ஆட்கொள்கிறது.
மரிஷியிடமிருந்து இறுதியாக விடை பெற்றுச் சென்ற காட்சியை மிக உருக்கமாக விவரிக்கிறார் பால் பிரண்டன்.
அந்த வேளை சூரியன் மறைந்து விட்டான். பால் பிரண்டன் எல்லோரிடமிருந்து விடை பெற்றுக் கொண்டு விட்டார். இனி மகரிஷி ஒருவரிடம்தான் சொல்லிக் கொள்ல வேண்டும். தம்முடைய உயிருக்குயிரான பகுத்தறிவை விட்டுக் கொடுக்காமல், ஆன்மீகத் துறையில் ஓரளவிற்கு வெர்றி பெற்றதில் அவருக்கு பரம திருப்தி. ஆனால் அந்த திருப்தி சிறிது நேரமே நீடித்திருந்தது.
தம்மை வழியனுப்ப மகரிஷி சற்று தூரம் நடந்து வந்ததைக் கண்டதும் அவர் நெஞ்சம் நெகிழ்ந்து விட்டது. பகவானை விட்டுப் பிரிய மனமில்லாமல், உணர்ச்சி வசப்பட்டார். மகரிஷி அவர் மனத்தை எப்படியோ கவர்ந்து விட்டார். அவர் மீது வெறறி கொண்டு விட்டார். “ஓரு விதத்தில் எனக்கு அவர் விடுதலை அளித்திருந்தார். ஆனால், மற்றொரு விதத்தில் என்னை அவர் அடிமைப்படுத்தி விட்டார். கண்ணுக்குத் தெரியாத இரும்புக் கொக்கிகளால் ஆன்மாவுடன் என்னை இறுக்கமாகப் பிணைத்துக் கொண்டு விட்டார்” என்று கூறுகிறார் பால் பிரண்டன்.
தன் மனத்தில் எழுந்த எண்ணவெழுச்சிகளை வெளியிட முடியாத காரணத்தால் விடை பெற முடியாமல் சற்று நேரம் தயங்கித் தயங்கி நின்றார் அவர். வானத்தில் ஆயிரமாயிரம் நட்சத்திரங்கள் மின்னிக் கொண்டிருந்தன. கிழக்கில் பிறைச் சந்திரன் வெள்ளியிழையாக ஒளி பரப்பிக் கொண்டிருந்தான். இடப்புறத்தில் மினிமிப் பூச்சிகள் கண்சிமிட்டிக் கொண்டிருந்தன. பனை மரங்கள் நிழற்படங்களாக நின்று கொண்டிருந்தன.
பால் பிரண்டனுக்கு உள்லத்தளவில் பெரிய மாற்றம் ஏற்பட்டு விட்டது. காலச் சக்கரம் சுழலும் போது மீண்டும் ஒருமுறை அருணாசலத்திற்கு வருவோம் என்ற நம்பிக்கை அவரிடம் வேரூன்றியது. இந்திய மரபுப்படி, இருகரங்குவித்து விடைபெற்றார். சிரித்துக் கொண்டே மகரிஷி பால் பிரண்டனையே உற்றுப் பார்த்தார். ஒரு வார்த்தையும் பேசவில்லை.
கடைசியாக ஒருமுறை பகவானைப் பார்த்தார் பால் பிரண்டன். அந்த மங்களான விளக்கு வெளிச்சத்தில், கண்கல் ஜொலிக்கும் அந்த நெடிய உருவத்தை நோக்கி மீண்டும் ஒரு முறை கும்பிட்டார். “சென்று வா” என்பது போல் பகவான் தமது வலக்கரத்தை அசைத்தார்.
காத்துக் கொண்டிருந்த வண்டியில் ஏறி அமர்ந்தார் பால் பிரண்டன். வண்டிக்காரன் சாட்டையைச் சொடுக்கினான். சொன்ன பேச்சைக் கேட்கும் அந்த மாடுகள், “தோட்டத்தை விட்டு நகர்ந்து கரடுமுரடான பாதையில் வேகமாக ஓடின. மகரிஷியைப் பற்றிய இனிய நினைவைப் போன்று அந்த இரவில் வழியெங்கும் மல்லிகையின் நறுமணம் தொடர்ந்தது.
ஸ்ரீ ரமண மகரிஷி இந்து மத குருவல்ல. அவர் மனித குலத்திற்கே பொதுவான குரு. அவர் மத குரு அல்ல. மனித குரு. இந்துவாகப் பிறந்தாலும், சாதி, குல, மதப் பேதங்களின்றி அனைவரது அஞ்ஞான இருளைப் போக்க, அருணாசல ஒளியாக இருந்து ஆன்ம தரிசனம் அருளவே அவதரித்தவர்.
மகரிஷி மலையில் வாசம் செய்த போது ஓரிரு வெல்ளைக்காரர்கள் அவரைத் தரிசிக்க வந்திருந்த பொதிலும், பால் பிரண்டன் வந்து சிறிது காலம் தங்கிய பிறகுதான் பகவானைப் பற்றி மேல் நாட்டினர் அறியும் வாய்ப்புக் கிட்டியது. ரமணாசிரமத்தில் தான் பெற்ற அனுபவங்களையும், பகவானைப் பற்றிய தமது கருத்துக்களையும் பற்றி பால் பிரண்டன் தமக்கே உரிய நடையில் சுவையாய் எழுதியுள்ளதைப் படித்த எத்தனையோ மேல் நாட்டினர் மகரிஷியைப் பற்றி மேலும் அறிய ஆவல் கொண்டனர். அவரைத் தரிசிக்க ரமணாசிரமம் வந்தர். அது மட்டுமல்ல, மேல் நாட்டினரைப் போலவே பகுத்தறிவிற்கே முதலிடம் தந்து, ஆன்ம விசாரனத்தைப் பற்றி அலட்சியமாகப் பேசி வந்த இந்துக்களில் பலர் கூட பால் பிரண்டனின் புத்தகங்களைப் படித்து விட்டு ரமண பக்தர்களானார்கள்…..! வெளி நாட்டினர் புகழ்ந்த பிறகுதான் நமது மகான்களின் பெருமை நம்மவர்களில் சிலருக்குத் தெரிகிறது!
பால் பிரண்டனுக்குப் பிறகு, பகவானின் “நான் யார்” தத்துவத்தையும், “அருணாசல மகிமை”யையும் வெளியுலகிற்குப் பரப்பியவர் ஆர்தர் ஆஸ்போர்ன் என்னும் ஆங்கிலேயப் பண்பாளர். குடும்பத்தோடு ஆசிரமத்திலேயே தங்கிவிட்ட அவர் ஒரு முனிவரைப் போல் தன்னலமற்ற தன்னடக்கத்துடன் வாழ்ந்து பகவானின் திருவடிகளை அடைந்தார்.
எண்பது வருடங்களுக்கு முன் இங்கிலாந்தில் தலைமையாசிரியர் ஒருவரின் மகனாகப் பிறந்தார் ஆர்தர். பிரெஞ்சு நாட்டு சிந்தனையாளரும் வேதாந்தியுமான செனிகினோ என்பவரின் புத்தகங்களைப் படித்தார் அவர். “இருப்பது ஒன்றுதான்” என்ற அவருடைய தத்துவ போதனை ஆர்தரைக் கவர்ந்தது. அது உண்மை என்று அவருக்குத் தோன்றியது. “இருப்பது ஒன்று” தான். அதைத் தவிர இரண்டாவது வஸ்து இல்லையென்றால் “நான் யார்” என்ற கேள்வி அவருள் எழுந்தது. இருக்கும் பொருளிலிருந்து வேறுபட்டவனாக “நான்” இருக்க முடியாது. எனவே தன்னையறிந்து கொண்டால் இரண்டும் ஒன்றுதான் என்பதைத் தெரிந்து கொண்டு விடலாம். இந்த ஆன்ம விசாரத்திலேயே தமது வாழ்க்கை முழுவதும் ஈடுபட்டிருந்தார் ஆர்தர்.
போலந்தில் இருக்கும் போதே அவர் ரமண மகரிஷியைப் பற்றிக் கேள்விப் பட்டிருந்தார். அவருடைய போட்டோ ஒன்றையும் பார்த்திருக்கிறார். பின்னர் பாங்காக் பல்கலைக் கழகத்தில் அவர் ஆசிரியராகப் பனியாற்றிய போது மகரிஷியின் புத்தகங்கள் சிலவற்றைப் படித்தார். இருப்பினும் ஆன்ம சாந்திக்கு ரமணர் காட்டிய வழி நடைமுறைக்கு ஒவ்வாதவிய என்றே நினைத்திருந்தார்.
இரண்டாவது உலக்ப போரின் போது ஜப்பானியரால் கைது செய்யப்பட்டார். போர் நின்றதும் விடுதலையாகி ரமணாசிரமம் வந்தார்.
ஒரு நாள் அந்த அதிசய நிகழ்ச்சி நடந்தது. அன்று ஏதோ ஒரு பண்டிகைப் பெருவிழா. ஆசிரமத்தில் ஒரே கூட்டம். வெளியே பகவான் கட்டிலில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். ஆர்தர் முதல் வரிசையில் அமர்ந்திருக்கிறார். மகரிஷியின் ஒளிமிகு கண்கள், ஆர்தரின் கண்களை ஊடுறுவுகின்றன. அதன் சக்தியை வார்த்தைகளில் விவரிக்க இயலாது.
“நான் தான் சொல்லி விட்டேணே, இன்னும் அறிந்து கொள்ளாமல் இருக்கிறாயே?” என்று பகவான் கேட்பது போலிருந்தது.
பின்னர் நிசப்தம். ஆழ்ந்த அமைதி, இன்பம், ஆனந்தம், பேரானந்தம். குருவின் கருணையும், அருளும் இருந்தால் என்ன நடக்கும் என்று வாழ்க்கையில் முதன் முறையாக உணர்ந்து கொண்டார் அவர். அவர் இதயத்தில் பகவான் மீது பேரன்பு மலர்ந்தது. பகவானின் சக்தியும், ஆன்மீக எழிலும் அவருக்குப் புரியத் தொடங்கியது. மறுநாள் மகரிஷியின் எதிரில் அமர்ந்து “நான் யார்?” என்ற ஆன்ம விசாரத்தில் இறங்கி விட்டார் அவர். தன்னிச்சையாக அவ்விதம் செய்ததாக முதலில் நினைத்தார் அவர். பின்னர்தான், பகவானுடைய கண் பார்வை தம் மன ஓட்டத்தை மாற்றியமைத்திருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டார் அவர்.
திருவண்ணாமலைக்கு வந்த பிறகு, ஆர்தர் தம்பதிக்கு அந்த இடத்தை விட்டுப் பிரியவே மனமில்லை. பாங்க்காக் பல்கலைக் கழகத்திற்கு மீண்டும் போவது முடியாத காரியம். இங்கிலாந்திற்குத் திரும்பிச் செல்லவும் விரும்பவில்லை. பிரிட்டிஷ் அரசாங்கம் தங்கள் பிரஜைகளுக்கு உதவ முன் வந்தது. ஆனால் ஆர்தர் தமக்கு எந்த உதவியும் தேவையில்லை என்று கூறி விட்டார். கடைசிக் கப்பலும் புறப்பட்டுச் சென்று விட்டது.
குடும்பத்தைப் பற்றியோ, வருவாயைப் பற்றியோ, எதிர்காலத்தைப் பற்றியோ சிறிதும் கவலைப்படமால் பகவான் தரிசனத்திலேயே எல்லாக் கவலைகளையும் மறந்து நிம்மதியாக இருந்தார் ஆர்தர். மகரிஷி மௌனத்தாலேயே தமக்கு வழிகாட்டி வருவதை உணர்ந்தார். “நான் யார்?” “நான் யார்?” என்ற ஆத்ம விசாரம் செய்யச் செய்ய உள்ளே இருக்கும் அந்தாராத்மாவே வெளியே பகவானாகக் காட்சியளிப்பதை உணர்ந்து கொண்டார் அவர்.
பகவான் உடலை விட்டுப் பிரிந்த பிறகு, அவர் காட்டிய வழியில் ஆத்ம விசாரத்தில் ஈடுபட்டு, பரம ஞானியாகவும், தபஸ்வியாகவும் இருந்து வந்தார் ஆர்தர். பகவானைப் பற்றி பத்திரிகைகளுக்கு அருமையான கட்டுரைகள் எழுதினார். அவற்றின் தொகுப்பே “ரமண அருணாசல” என்ற சிறு நூல். அதைத் தவிர ரமணரின் உபதேசங்கள், ஆத்ம விசார மார்க்கம், மகரிஷி இயற்றிய பாடல்களின் தொகுப்பு முதலிய நூல்கள் வெளியிட்டிருக்கிறார். அவை பல ஐரோப்பிய மொழிகளில் பெயர்க்கப் பட்டு, பல புது அடியார்களை அருணாசலத்திற்கு அழைத்து வந்திருக்கின்றன.
“மலைப்பாதை” என்ற பெயரில் ஆசிரமத்திலிருந்து ஒரு பத்திரிகை வெளி வரத் தொடங்கியது. ஆர்தர் அதன் ஆசிரியரானார். அதன் தலையங்கங்களில் தன் ஆத்மானுபவங்களை அப்படியே வடித்துத் தந்தார். அன்பர்களின் கேள்விகளுக்குத் தக்க விடைகள் தந்து ரமண தத்துவத்தை உலகெங்கும் பர்பபினார். ரமண குருவே தமக்குள் இருந்து தம்மை ஒவ்வொரு பணியிலும் ஈடுபடுத்தி இயக்கிக் கொண்டிருப்பதாக நினைத்து, பரிபூரண சரணாகதியுடன் வாழ்ந்த அந்த பரம பக்தர், ஒரு நாள் ரமண ஜோதியோடு கலந்து விட்டார். இறுதி மூச்சு பிரியும் முன் அவர் வாய், “நன்றி, நன்றி” என்று முணுமுணுத்துக் கொண்டிருந்ததாக திருமதி லூசியா ஆர்தர் கூறுகிறார்.
பால் பிரண்டனின் தூண்டுதலின் பேரில், அவரிடம் ஒரு கடிதத்தைப் பெற்றுக் க்ண்டு இந்தியாவிற்கு வந்தார் கிராண்ட் டஃப் என்ற மற்றொரு ஆங்கிலேயர். அவருக்கு அப்போது எழுபது வயதிருக்கும். அந்தத் தள்ளாத வயதில், ஆறாயிரம் மைல்கள் கடந்து, கப்பலிலும், ரயிலிலும் பயணம் செய்து, முற்றிலும் மாறுபட்ட பழக்க வழக்கங்களுக்குட்பட்டு, ஆன்ம ஞானமும், மனச்சாந்தியும் பெற வேண்டும் என்ற தீராத வேட்கையின் காரணமாகத் திருவண்ணாமலைக்கு வந்தார் அவர்.
மனப்பக்குவம் பெற்றுப் பழுத்த பழமாகி விட்டிருந்த கிராண்ட் டஃப், பகவானின் கருணையினால் நொடிப் பொழுதில் சத்திய தரிசனம் பெற்று விட்டார். உண்மைப் பொருளே மகரிஷியின் உருவில் தம் முன்னே நடமாடிக் கொண்டிருப்பதைக் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் உணர்ந்து கொண்டு விட்டார் அவர். அந்த தெய்வீக சந்நிதியில், ஆன்மீக சாந்தி நீரூற்றாகப் பெருக, பேரமதி பெற்று சில நாட்கல் ஆசிரமத்திலேயே தங்கினார். அந்நிய மண்ணில் பிறந்தாலும், நம் வேத பாராயணத்தை மெய்மறந்து கேட்டு, அவர் இன்புறுவது வழக்கம்.
ஒரு நால் தமது குடும்ப விஷயங்களைப் பற்றி பகவானுடன் உரையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவர் தம் தாயின் மீது தமக்குள்ள எல்லையற்ற பக்தியைப் பற்றிக் கூறி, “அவருக்கு எவ்விதம் நான் நன்மை செய்யலாம்?” என்று பகவானைக் கேட்டார். அந்தக் கேள்வியை ஒரு காரணமாக வைத்துக் கொண்டு உயர்ந்த தத்துவ உபதேசம் ஒன்றை செய்தருளினார் மகரிஷி.
“தாயார் என்பவர் யார்? நாம் பிறப்பதற்குக் காரணமானவரையே தாயார் என்றழைக்கிறோம். அதாவது நமது “உடல்” உற்பத்தியாவதற்குக் காரணமான மற்றொரு உடலைத் தாய் என்கிறோம். ஆனால், உடலா நாம்? இல்லை. உடலில் இயங்கும் அறிவாகிய ஜீவனே நம என்று எடுத்துக் கொண்டால், அந்த அறிவின் பிறப்பிடமாகிய ஆன்ம சைத்தன்யமே நமது உண்மையான தாய். “நான்” என்கிற நினைவு எங்கிருந்து பிறக்கிறது என்று தேடிச் சென்று உள்ளத்தில் பிரகாசிக்கும் ஆன்ம சொரூபத்தை நம் தாயாக அடையாலம் கண்டு ஆன்மா ஞானம் பெற வேண்டும். அவ்வாறு சுய தரிசனம் பெறுவதே, நம் அன்னைக்கும், நமக்கும், பிறருக்கும் செய்யும் பெரிய நன்மையாகும்.
இதே கருத்தை வலியுறுத்துவதற்காக யோக வாசிஷ்டத்திலிருக்கும் ஒரு கதையைக் கூறினார் மகரிஷி.
ஓரூரில் இரு சகோதரர்கள் இருந்தனர். . அவர்களுடைய தாய் தந்தையர் இறந்தபோது, அதைக் குறித்து இளையவன் மிகத் துயரமடைந்தான். மூத்தவன், தம்பியப் பார்த்து, “நம் பெற்றோர் மறைந்து விட்டதைக் குறித்து ஏனப்பா வருந்துகிறாய்? அவர்கள் எங்கெயும் போய்விடவில்லை. நமக்குள்ளேதான் இருக்கிறார்கள். நம்மைக் காட்டிலும் வேறாக அவர்கள் இல்லை. இம்மாதிரியான வேற்றுமை எண்ணங்களுக்கெல்லாம் காரணம் நம் மனமே. “நான்” என்ற அகந்தையே எல்லா எண்ணங்களுக்கும் அடிப்படியயாக அமைகிறது. அகந்தையோ, மாறாத உண்மைப் பொருளாம் ஆன்ம சொரூபத்திலே தோன்றும் கற்பனை. நாம் கானும் எல்லா உலகங்களும், தாய் தந்தையரும், உற்றார் உறவினரும், பிறரும், நிஜ சொரூபத்தில் தோற்றங்களாதலால் யாரைக் குறித்தும் எதைக் குறித்தும் நாம் சற்றும் வருந்த வேண்டியதில்லை இந்த உண்மையை உணர்ந்து விட்டால் பின்னர் துக்கம் என்பதேயில்லை” என்று அவனைச் சமாதானம் செய்தார்.
ஒரு சமயம் பகவானிடம் நெருங்கிப் பழகும் வாய்ப்புக் கிடைத்த அன்பரொருவர், “பகவான் வெளி நாட்டவரிடம் மட்டும் தனியன்பும், கருணையும் காட்டி அருள் புரிகிறார்” என்று உரிமையோடும், நகைச்சுவையோடும் கூறினார். அதைக் கேட்ட பகவான், “நீங்களே பாருங்கள். கிராண்ட் டஃப்புக்கு எழுபது வயதாகிறது. இருக்கும் இடத்தில் சுகமாக இருப்போம் என்று காலம் தள்ளாமல், ஆறாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து எத்தனையோ சிரமங்களைத் தாங்கிக் கொண்டு இந்த கோவணாண்டியைத் தேடி வந்திருக்கிறார். உண்மையை அறிய வேண்டும் என்ற ஆர்வமும், ஆன்ம சாந்தியைப் பெற வேண்டும் என்ற சிரத்தையும் அவரிடம் தீவிரமாக அவரிடம் இருப்பதுதானே இதற்குக் காரணம்? என்று கூறி ஞானம் பெறுவதற்கு உள்ளத் தூய்மை எத்தனை முக்கியமானது என்பக்தை எடுத்துக் காட்டினார்.
எஸ். எஸ். கோகன் என்ற யூதர், ஐம்பதாண்டுகளுக்கு முன் இந்தியாவிற்கு வந்து இந்தியக் குடிமகனாகி பல ஆண்டுகள் பம்பாயில் தம் தொழில் ஈடுபட்டிருந்தார். இள வயதிலிருதே ஆன்மீகத் துறையில் நாட்டம் கொண்டிருந்த அவர், சென்னை அடையாறு தியாசாஃபிகள் சங்கத்தில் சில காலம் தங்கியிருந்தார். பௌத்த மதத்தைப் பற்றியும், வெதாந்த மார்க்கத்தைப் பற்றியும், ஆராய்ச்சிகள் செய்தார். ஆனால், தாம் எதிர்பார்த்த சக்திகளோ, ஆன்மீக வளர்ச்சியோ அவருக்கு ஏற்படவில்லை. இறுதியாக, ரமணாசிரமத்திற்கு வந்து பகவானைத் தரிசித்த பிறகுதான் அவருக்கு மன அமைதி ஏற்பட்டது. 1930-ம் ஆண்டு பதிநான்கு நாட்கள் தங்குவதற்காக ஆசிரமத்திற்கு வந்தவர், பதினான்கு வருடங்கள் தங்கினார். மகரிஷியின் மகா நிர்வாணத்திற்குப் பிறகும் சில ஆண்டுகள் ஆசிரமத்திலேயே இருந்து வந்தார்.
கோகன், பகவானின் மகா சமாதிக்குப் பிறகு, “குரு ரமணா” என்ற அருமையான சிறு நூல் ஒன்று எழுதியிருக்கிறார்.
பால் பிரண்டனின் புத்தகத்தைப் படித்து விட்டு, 1935-ம் ஆண்டு மகரிஷியைத் தேடி வந்தார் சாட்விக் என்ற ஆங்கிலேயர். ஓய்வு பெற்ற பின்னர், சொத்தையும் வீட்டையும் அப்படியே விட்டு விட்டு, அருணாசலத்தை நாடி வந்த இவர் ஞான மலையின் மறுபதிப்பாக, மனித உருவில் வீற்றிருந்த பகவானை தஞ்சமென அடைந்து, தம்மை அந்த பிரும்ம சாகரத்தில் கரைத்து, 1962-ல் அவர் திருவடிகளிலேயே தம் உடலைத் துறந்தார்.
அருணாசல மகிமைக்கு மங்காப் புகழ் கூட்டிய சாது அருணாசலாவின் சமாதி ரமணாசிரமத்தில் இருக்கிறது. அதை தரிசிக்கும் போது, ஜாதி, மத, இன வேற்றுமைகள் நம் மனத்தை விட்டு அகன்று விடுகின்றன. இப்பரந்த உலகையும், மனித குலத்தையும் சகல ஜீவராசிகளையும் படைத்து, காத்து வரும் பேரருட் சக்தியின் மாட்சியைத் தெள்ளென உணர்கிறோம். அந்த ஞான சக்தியின் கலங்கரை விளக்காக ஓங்கி நிற்கும், அருணாசலத்தை, நம் உள்ளத்தில் ஒளிரும் ஆன்ம சக்தியாகவே தரிசிக்கிறோம்.
“நான்” என்ற அகங்காரத்தைக் கொன்று விட்டால் ஆன்ம தரிசனம் பெறலாம் என்ற தத்துவத்தை, காண்பவர் மனத்தில் பதியும்படி, புதுமையான முறையில், தம் குடிலுக்குப் பக்கத்திலேயே, சாட்விக் தமது அகந்தைக்கு இரண்டடி அடி உயரத்தில், ஒரு சிறு மாடத்தை சமாதியாக எழுப்பியிருக்கிறார். நான்முகனும், திருமாலும் தங்களது வலிமையைப் பற்றித் தங்களுக்குள் போரிட, சிவபெருமான் அவர்களது அகந்தையை அடக்கி, ஞான ஒளியாக ஓங்கி நின்ற அருணாசலமாகவே, எனக்குத் தொற்றமளிக்கிறது.
அகந்தையைக் கொன்று, ஆன்ம சொரூபத்தைத் தரிசித்து, முக்தி பெறுவதுதான், ஸ்ரீ ரமண பகவானின் “நான் யார்?” என்ற தத்துவ விசாரத்தின் பலனும், முடிவும் ஆகும். கிருஸ்தவ மதத்தின் அடிப்படைத் தத்துவமும் இதுதான் என்பதை பகவான் ஒரு முறை, சாது அருணாசலாவிடம் விளக்கிப் பேசியிருக்கிறார்.
ஏசு கிருஸ்து சிலுவையில் அறையப்பட்ட நிகழ்ச்சிக்கு, பகவான் தந்த விளக்கம் கிருஸ்தவ மதத்தில் பிறந்த சாட்விக்கின் உள்ளத்தில் ஆழமாக பதிந்து விட்டிருந்தது. “நான்” என்ற அகந்தையே சிலுவையில் அறையப்பட்ட ஏசு. பின்னர் கிருஸ்துவின் உண்மையான சொரூபம் விழித்தெழுந்தது. “நான்” அழிந்த பிறகு தம்முள்ளே இருக்கும் ஆண்டவன் தரிசனம் ஆகிறான்.
பகவானின் இந்த விளக்கத்தை மனதில் கொண்டுதான் சாட்விக் தமது அகந்தைக்கு சமாதி எழுப்பியிருக்க வேண்டும்.
ஆன்ம தரிசனம் பெறுவதற்கு, மத மாற்றமோ, இட மாற்றமோ, புறச்சின்னங்களில் மாற்றமோ தேவையேயில்லை. சாட்விக் சாது அருணாசலாவாகி, ஓர் இந்துவைப் போலவே உடைகளை மாற்றி, திருநீறும், குங்குமமும் தரித்துக் கொண்டிருந்தாலும், இறுதிவரையில், உள்ளத்தளவில் அவர் ஓர் உண்மையான கிருஸ்தவராகவே இருந்திருக்கிறார். அவரவர் சார்ந்துள்ள மதத்தின் அடிப்படைத் தத்துவங்கள் இரத்தத்தோடு கலந்து ஜீவத் துடிப்போடு இயங்கி ந அன்றாட வாழ்வோடு இணைந்து விட்டால், மனிதருக்குள் மத வெறியும், இனச் சச்சரவுகளுக்கும் இடமேயிருக்காது ஓர் எடுத்துக்காட்டாக விளங்குகிறது, சாட்விக் போன்ற ஞானிகளின் வாழ்க்கை வரலாறுகள்.
வேலூர் மருத்துவமனையில் உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கிறார் சாது அருணாசலா. நினைவு போவதும், வருவதுமாக இருக்கிறது. தன் வயம் இழந்து ஏதேதோ பேசுகிறார். சிறுகச் சிறுக அந்தப் பேச்சும் அடங்கி விடுகிறது. ஆனால், சுற்றிலும் இருப்பவர்களை அவர் அடையாளம் கண்டு கொள்கிறார்.
“பகவான் உங்களுடன் இருப்பதை உணர்கிறீர்களா?” என்று அருகிலிருக்கும் ஒருவர் கேட்கிறார்.
“ஆம்” எங்கிறார் சாட்விக் மிகத் தெளிவாக.
ஜீவன் ஒடுங்கிக் கொண்டிருக்கிறது. மூச்சு அடங்கிக் கொண்டிருக்கிறது. தொண்டை உலர்ந்து, நா ஈரமிழந்து, பேச்சும் நின்று விடுகிறது. கண்கலில் பஞ்சடைந்து விடுகிறது. காது மந்தமாகிக் கொண்டிருக்கிறது. உடல் செத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் அவரது ஆன்மா விழித்துக் கொண்டே இருக்கிறது. மிக லேசான புன்னகைக் கீற்று ஒன்று அவர் உதடுகளில் நெளிகிறது.
“இன்று ஈஸ்டர்” என்று முணுமுணுக்கிறார் அந்த உத்தமக் கிருஸ்தவர்.
“இன்று ஈஸ்டர் இல்லை. இன்னும் ஐந்து நாட்கள் இருக்கின்றன” என்று எடுத்துச் சொல்கிறார் கட்டிலின் அருகில் நின்றிருந்த ஒரு நண்பர்.
சாட்விக்கின் முகம் சட்டென்று மலருகிறது. மிகத் தெளிவாகவெ பேசுகிறார் அவர்.
“பண்டிகைக்கு இன்னும் ஐந்து நாட்கள் இருப்பது எனக்குத் தெரியும். ஆனால் எனக்கு இன்றுதான் ஈஸ்டர்”.
ஏசு கிருஸ்து சிலுவையில் ஏற்ற்ப்பட்டது வெள்ளிக் கிழமையன்று. அவர் மீண்டும் உயிர் பெற்றெழுந்தது ஞாயிற்றுக்கிழமையன்று. அந்நாலைத்தான் கிருஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகையாகக் கொண்டாடுகிறார்கள்.
பொய்யான “நான்” இறந்து, மெய்யான “நான்” விழித்தெழுவதுதான் ஈஸ்டர்.
ஆன்ம தரிசனம் பெறும் ஞானிகளுக்கு அவ்வேளைதான் ஈஸ்டர்.
அகந்தைக்கு சமாதிஎ ழுப்பிய சாது அருணாசலா, ஆன்ம தரிசனம் பெற்றார், உடலைத் துறந்து, மெய்ப்பொருளாகி விட்டார்.
பாவானின் தாயார் மலையில் வந்து தங்கிய நாட்களிலிருந்து தொடங்கிய அன்னதான நற்பணி இன்றும் ரமணாசிரமத்தில் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.