இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் இந்தியாவின் பல பகுதிகளில் சுற்றியலைந்து விட்டு, பல யோகிகளையும், சாமியார்களியும் சந்தித்து விட்டு, பம்பாய்க்குத் திரும்பினார் பால் பிரண்டன். ஓயாத அலைச்சலால், அலுப்பும், அசதியும் மேலிடவே, ஐரோப்பாவுக்கே திரும்பி விடுவது என்று முடிவு செய்தார். அத்தனை மகான்களைத் தரிசித்தும், அவர்களிடம் விளக்கங்கள் கேட்டும் அவருக்கு சாந்தியெ கிடைக்கவில்லை. எது மெய்? எது பொய்? யாரை நம்புவது? யாரை நம்பாயமல் இருப்பது? என்பது போன்ற கேள்விகள் அவர் மனைத்தைக் குழப்பின.
கப்பல் பிரயானத்திற்கு டிக்கெட்டும் வாங்கி விட்டார். இன்னும் மூன்று நாட்களில் புறப்பட வேண்டும். மன உளைச்சலுடன் கடற்கரையில் அமர்ந்திருந்தவரிடம் உள்ளுணர்வு உறுத்திற்று.
“ஆமாம், நீ இந்தியாவை விட்டுப் புறப்பட்டுப் போகிறாயே, நீ சந்தித்த ஒரு மகானுமா உன் மனத்தைக் கவரவில்லை?”
அப்போது மௌனமாக அமர்ந்து அருட்பார்வையால் தம்மை ஆட்கொண்ட ரமண மகரிஷியின் முக மண்டலம் அவருக்கு அடிக்கடி நினைவுக்கு வந்தது. இருப்பினும் நம் விஷயத்தில் மகரிஷி அதிக அக்கறை காட்டவில்லை என்ற குறையும் அவருக்கு இருந்தது.
அதை அறிந்த அவரது மனசாட்சி, “மகரிஷி உன்னிடம் அலட்சியாமாக இருந்தார் என்று எப்படிக் கூறுகிறாய்? நீ அங்கே அதிக நாட்கள் தங்காமல் அவசரப்பட்டு ஓடி வந்து விட்டாயே” என்று அவரை இடித்துக் காட்டியது.
இதற்குப் பிறகு திருவண்ணாமலைக்குத் திரும்புவது பற்றி அவர் மனத்தில் பெரும் போராட்டம் புயல் வீசியது. ஏதோ ஒரு சக்தி மகரிஷியிடம் மீண்டும் போகும்படி அவரைத் தூண்டிக் கொண்டேயிருந்தது. இறுதியில், “உன் பயணத் திட்டங்களை மாற்றிக் கொண்டு, நீ மகரிஷியிடம் போய்த்தான் ஆக வேண்டும்” என்று உள்ளிருந்து ஒரு மெல்லிய குரல் கூறியது.
அதை எதிர்த்துப் பேச முடியாமல் பால் பிரண்டன் கப்பல் டிக்கட்டை ரத்து செய்து விட்டு, தமிழகத்தை நோக்கி மீண்டும் பயணமானார்.
சென்னையில் நாவலாசிரியர் கே.எஸ். வேங்கடரமணியை அவர் சந்தித்தார். ஐரோப்பாவுக்குப் புறப்படத் திட்டமிருந்ததைப் மாற்றி, மகரிஷியைக் காண தாம் மீண்டும் வந்த விவரத்தை அவரிடம் விளக்கிக் கூறினார் பால் பிரண்டன்.
அதைக் கேட்ட வேங்கடரமணி, “நீங்கள் திருவண்ணாமலைக்கே திரும்பி வருவீர்கள் என்று எனக்குத் தெரியும்” என்றார் சிரித்துக் கொண்டே.
“உங்களுக்கு எப்படித் தெரியும்” என்று ஆச்சரியத்துடன் கேட்டார் பால் பிரண்டன்.
“அன்று செங்கற்பட்டில் சங்காராசாரிய சுவாமிகளிடம் தாங்கள் விடை பெற்ற பிறகு என்னிடம் சுவாமிகள் தனியே பேசிக் கொண்டிருந்தாரே, உங்களுக்கு நினைவிருக்கிறதா” என்று கேட்டார் வேங்கடரமணி.
“ஆமாம், அந்த நிகழ்ச்சி இப்போது நினைவுக்கு வருகிறது” என்றார் பால் பிரண்டன்.
அப்போது சுவாமிகள், “வேங்கடரமணி, உன் நண்பர் இந்தியா முழுவதும் சுற்றுவார். பல யோகிகளைத் தரிசிப்பார். பல ஆசாரியர்களுடன் பேசுவார். ஆனால் கடைசியில் மகரிஷியிடமே திரும்பி வருவார். மகரிஷி ஒருவரே அவருக்கு ஏற்ற குரு” என்று என்னிடம் கூறினார்.
இந்தச் சொற்கள் பால் பிரண்டனின் இதயத்தைத் தொட்டன. சங்காராசாரிய சுவாமிகளின் தீர்க்கதரிசனத்திற்கு இதை விட என்ன சான்று வேண்டும்? தாம் சரியான பாதையில் போய்க் கொண்டிருக்கிறோம் என்பதற்கு இதுவே அடையாளம் என்று எண்ணி மகிழ்ந்தார் பால் பிரண்டன்.
தமது பிறந்த நாட்டுக்குப் புறப்பட்டுச் செல்ல திட்டமிட்டிருந்த பால் பிரண்டனை பேரருட் சக்தியொன்று மீண்டும் அருணாசலத்திற்கே அழைத்து வந்தது. உண்மையை அறிய வேண்டும் என்று உள்ளத் தூய்மையோடு எண்ணுபவர்களுக்கு அந்தச் சக்தி நல்வழி காட்டுகிறது. அந்த ஆன்ம சக்தியே குருவாக இருந்து அவர்களை உயர்த்தியும் விடுகிறது.
ரமணாசிரமத்திற்கு வந்த பால் பிரண்டன், தரிசன அறைக்குள் நுழைகிறார். புலித்தோல் ஆசனத்தில் அன்பே வடிவாக அண்ணல் ரமண பகவான் அமர்ந்திருக்கிறார். கீழே சில பக்தர்கள் உட்கார்ந்திருக்கின்ரனர். பங்கா வின் ஒலி கேட்கிறது. ஊதுபத்தியின் நறுமணம் கமழ்கிறது.
பகவானைப் பார்க்கிறார் பால் பிரண்டன். முதன் முதலில் தாம் அந்த அறைக்குள் வந்த போது, அசையாமல் ஆடாமல், சமாதியில் ஆழ்ந்திருந்த மகரிஷியை அருணாசலமாகவே தரிசித்ததை ஒரு கணம் நினைவு படுத்திக் கொண்டார் அவர். அப்போது வேறு உலகத்தில் நிலைத்து விட்ட மகரிஷியின் பார்வைக்கும் தற்போது இவ்வுலகில் நிலவிய பார்வைக்கும் உள்ள வேற்றுமையை உணர்ந்தார். முன்பு தாம் வந்து அமர்ந்ததைக் கூட, அறியாமல் நிட்டையில் ஆழ்ந்திருந்த பகவான், தற்போது, தாம் வணங்கிய பொது கனிவோடுபார்த்து புன்முறுவல் பூத்துக் கருணையோடு வரவேற்ற காட்சி பல பிரண்டனின் இதயத்தைத் தொட்டது.
தம்மைச் சீடராக ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக் கொள்வதற்காகவே அவர் வந்திருக்கிறார். தம் வேண்டுகோளுக்கு மகரிஷி நிச்சயம் செவி சாய்ப்பார் என்ற நம்பிக்கை அவருக்கு முழுமையாக இருந்தது. அந்த நம்பிக்கையோடும், தைரியத்தோடும் மகரிஷியை அணுகினார். தமது சுற்றுப்பயண அனுபவங்களைப் பற்றி சுருக்கமாகக் கூறி விட்டு, தம்மைச் சீடராக ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டார். சுற்றி வளைக்காமல், நேரிடையாகவே, சட்டென்று கேட்டு விட்டார் அவர்.
மகரிஷி பதில் கூறவில்லை. மாறாக, அவர் திருவதனத்தில் புன்னகையொன்று அரும்பியது.
பால் பிரண்டன் விடவில்லை. இன்னும் சற்று அழுத்தமாக அதே கேள்வியை மீண்டும் கேட்டார் அவர்.
இறுதியில் மகரிஷி பேசினார்.
“குருவாவது சீடராவது? தன்னை உணர்ந்து கொள்ளாதவன் மனத்தில்தான் இம்மாதிரியான பேத உணர்ச்சிகள் தோன்றும். ஆன்ம சொரூபத்தை உணர்ந்து கொண்ட ஞானியைப் பொறுத்த வரையில் குரு என்றும் சீடர் என்றும் வெவ்வேறு நபர்கள் கிடையாது. ஞானி எல்லோரையும் ஒரே நோக்குடந்தான் பார்க்கிறான்.”
இதைக் கேட்டு விட்டு, தமக்குக் குருவாக இருக்க மகரிஷி ஒப்புக் கொள்ள மறுக்கிறார் என்றே நினைத்தார் பால் பிரண்டன். தம் வேண்டுகோளுக்குச் செவி சாய்க்கும்படி என்னவெல்லாமோ கூறி மன்றாடிப் பார்த்தார் அவர். பதிலளிக்கும் வகையில் பகவான் தமது நிலையை விளக்கிக் கூறினார்.
“நீ உன்னுள்ளேயே உன் குருவைக் காண வேண்டும். இந்த சரீரத்தை குரு என்று நினைக்காதே. இது அழியக்கூடியது.”
தம் கேள்விக்கு மகரிஷி நேரிடையாகப் பதில் சொல்லப் போவதில்லை என்பது பால் பிரண்டனுக்கு ஒருவாறு புரிந்து விட்டது. மகரிஷி கூறும் ஆன்ம விசார முறைகளின் மூலம்தான் அதற்கு விடை கிடைக்கப் போகிறது என்று உணர்ந்து கொண்ட அவர், அதற்கு மேல் ஒன்றும் வற்புறுத்தாமல், அன்று பகவானிட்மைருந்து விடை பெற்றுக் கொண்டு விட்டார்.
குருவைப் பற்றியும், குருவருளைப் பற்றியும் பக்தர்களுக்கு மகரிஷி பல சமயங்களில் விளக்கியிருக்கிறார்.
தன்னைக் கீழ்நிலையில் இருப்பவனாக நினைக்கும் மனிதன், தன்னையும், உலகியயும் ஆட்டுவிக்கும் மாபெரும் சக்தியாகிய கடவுளிடம் சரணடைந்து, பக்தியோடு வழிபடுகிறான். அதனால் அவன் உள்ளம் பரிசுத்தமாகி, பண்படும்போது, அவன் வணங்கும் குருவாக வந்து அவனுக்கு நல்வழி காட்டியருளுகிறார். அந்த குரு அவனை நோக்கி, “கடவுள் உன்னுள்ளேயே இருக்கிறார். உன் சிந்தையை உட்புறம் செலுத்தி அந்த உண்மையை உணர்ந்து கொள்” என்று அறிவுரை வழங்குகிறார். கடவுள், குரு, ஆன்மா எல்லாம் ஒன்றுதான்.
உபதேசங்கள், சொற்பொழிவுகள், தியானங்கள், எல்லாவற்றையும் விட உயர் நிலை எய்தி மெய்ப்பொருளை உணர குருவருளே முக்கியமானது.
குருவருள் நமக்கு எப்போதுமே இருக்கிறது. அது எங்கேயோ ஆகாயத்தில் இருப்பதாகவும், அந்த உயரத்திலிருந்து கீழிறங்கி நம்மிடம் வரவேண்டும் என்றும், நாம் வீணாகக் கற்பனை செய்து கொள்கிறோம். குருவருள் ந இதயத்திலேயே உறைகிறது. எந்த முறையிலாவத்யு எண்ணங்களை அட்ககி, மனம் ஆன்மாவில் ஒடுங்கும்போது குருவருள் உள்ளிருந்து ஊற்றெனப் பெருக்கெடுக்கிறது.
குரு உடலுருவில் மட்டும் தோற்றமளிக்கவில்லை. எனவேதான். அவரது உடல் மறைந்தாலும் அவரிடம் தமக்குள்ள தொடர்பு அறுபடாமல் அவரருள் என்றும் நீடித்திருக்கிறது.
பால் பிரண்டன், ஆசிரமத்தின் அருகில் இயற்கையன்னை எழில் ஓவியமாகத் தீட்டியுள்ள இனிமையான சூழலில், தனிக்குடில் அமைத்து அதில் தங்கி விடுகிறார். விடியற்காலையில் எழுந்து, குளத்தில் நீராடி விட்டு, பூத்துக் குலுங்கும் வகை வகையான வண்ண மலர்களைக் கண்டு ரசித்து விட்டு, இளம் வெய்யிலில் ஆசிரமத்தை ஒரு சுற்று சுற்றி விட்டி, மகரிஷியின் தரிசனத்திற்கு வந்து விடுவார் அவர். பகவானின் எத்ரில் அமர்ந்து ஏதாவது படிப்பார். எழுதுவார். சில சமயங்களில் தியானத்தில் ஆழ்ந்து விடுவார். அவ்வப்போது மனத்தில் தோன்றும் சந்தேகங்களுக்குப் பகவானிடம் விளக்கங்களும் கேட்பார்.
நால் ஆக ஆக மகரிஷியின் தரிசனமும், ஆசிரமத்தின் சூழ்நிலையும் அவரது சிந்தனையில் விளக்க முடியாத ஒரு மாற்றத்தை உண்டு பண்ணின. அதிலும் மகரிஷியின் அருகில் அமர்ந்திருக்கும் போதெல்லாம் ஏதோ ஒரு சக்தி இருவர் உள்ளங்களை ஒன்றாகப் பிணைப்பதையும், மகரிஷியின் ஆன்மீகப் பேரொளி தம்முள்ளும் படர்வதால், அமைதியுற்ற மனம் எல்லையற்ற ஆனந்தத்தில் திளைப்பதையும் உணர்ந்தறிந்தார் பால் பிரண்டன்.
சில சமயங்களில் பகல் உணவிற்குப் பிறகு மகரிஷி எதிர்பாராமல் திடீரென்று பால் பிரண்டனின் குடிலுக்குள் வந்து விடுவார். அந்த நல்ல வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு பால் பிரண்டன் அவரிடம் ஏதாவது கேள்விகள் கேட்பது வழக்கம்.
எத்தனை முறை கேட்டாலும் கருணாமூர்த்தி, கனிவோடும், பொறுமையோடும் பதில் கூறுவார். அவை பெரும்பாலும் முழு வாக்கியங்களாக இருக்காது. ஓரிரு வார்த்தைகளாகவே இருக்கும்.
ஒரு நாள் ஒரு புதிய சந்தேகத்தைக் கேட்டார் பால் பிரண்டன். அதற்கு மகரிஷி பதில் கூறவில்லை. மாறாகத் தொலைவில் தெரிந்த அருணாசல மலையையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் உடல் அசையவேயில்லை. மலையுச்சியில் படிந்த பார்வையும் அதை விட்டு அகலவில்லை.
மகரிஷி என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதே பால் பிரண்டனுக்குப் புரியவில்லை. அவர் வெகு தொலைவிலுள்ள ஓர் அமானுஷ்ய சக்தியுடன் தொடர்பு கொண்டிருக்கிறாரா, அல்லது தம் சிந்தனையை உட்புறம் செலுத்தியிருக்கிறாரா என்பது அவருக்குத் தெளிவாகத் தெரியவில்லை. தாம் கேட்பது மகரிஷியின் காதில் விழவில்லையோ என்றுகூட அவர் நினைத்தார். மீண்டும் அந்தக் கேள்வியைக் கேட்கலாம் என்றாலோ அப்போது அந்த அறையில் நிலவிய பேரமைதியைக் குலைப்பதற்கு அவருக்கு மனம் வரவில்லை. அந்த மௌனத்தில் பிறந்து வளர்ந்த சக்தியொன்று, அவரது பகுத்தறிவு ஆற்றலையும் அடக்கி, அவரைப் பிரமிப்பில் ஆழ்த்தியது.
திகைப்புத் திரை மெள்ள மெள்ள விலகியது. தம் சந்தேகங்களுக்கு முடிவே இருக்கப் போவதில்லை என்ற உண்மை திடீரென்று பளிச்சிட்டது. எண்ணங்கள் ஒன்றையொன்று துரத்திக் கொண்டு கண்ணாமூச்சி ஆட்டம் ஆடுவதற்கு முடிவேது? எண்ணங்கள் அடங்ககும் வரை சலனமும் சஞ்சலமும் இருந்து கொண்டுதான் இருக்கும். தமக்குத் தேவையான சத்திய ஒளி தம்முள்ளேயே இருப்பதையும் அவரால் உணர முடிந்தது. அர்த்தமற்ற சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் முற்றுப் புள்ளி வைத்து விட்டு, எல்லையற்ற தம் ஆன்ம சக்தியில் நம்பிக்கை வைப்பதே பலனளிக்கும் என்று அவருக்குத் தோன்றியது. எனவே, மகரிஷியையே பார்த்துக் கொண்டு மௌனமாகக் காத்திருந்தார்.
அரை மணி நேரத்திற்கு மேலாகியும் மகரிஷி அப்படியே சிலைபோல் நின்றிருந்தார். பால் பிரண்டன் அருகில் நிற்பதைக் கூட அவர் மறந்து விட்டதைப் போல் தோன்றியது. மகரிஷி அவரிடம் பேசாவிட்டாலும், தம் மனத்துள் சற்று முன்பு திடீரென்று ஏற்பட்ட ஞானோதயத்திற்கு அவரே காரணம் என்பது பால் பிரண்டனுக்கு உள்ளங்கை நெல்லிக்கனி போல் விளங்கியது. ஞாயோகியின் எண்ண எழுச்சிகளிலிருந்து சிதறிப் புறப்பட்ட சிற்றலைகள் தம் உள்ளத்திலும் பரவி பேருண்மையை உணரும்படிச் செய்தன என்பதில் அவருக்குச் சிறிதும் சந்தேகமில்லை.
மற்றொரு நாள் மகரிஷி, பால் பிரண்டனின் குடிலுக்குள் வந்தார். அப்போது பால் பிரண்டன் நம்பிக்கை இழந்த நிலையில் மனம் குழம்பிக் காணப்பட்டார். “நான் யார்?” என்ற ஆன்ம விசாரத்தில் ஈடுபடும் மனிதனுக்குக் கிட்டும் பேரின்பத்தைப் பற்றி விசாரித்தார் மகரிஷி.
அதைக் கேட்ட பால் பிரண்டன், “நீங்கள் கூறும் முறை கடினமாக இருக்கிறது. என்னுடைய பலவீனங்களும் எனக்குத் தெளிவாகவே தெரிகின்றன” என்றார்.
“நாம் வெற்றி பெற மாட்டோம்” என்ற அவநம்பிக்கையும், “நம்மால் முடியாது” என்ற எண்ணமும் ஆன்ம விசாரணைக்குக் குறுக்கெ நிற்கும் பெரும் தடைகளாகும்” என்றார் மகரிஷி.
“நான் கூறும் கஷ்டங்களும் பலவீனங்களும் உண்மையாயிருந்தால் என்ன செய்வது?” வற்புறுத்திக் கேட்டார் பால் பிரண்டன்.
“அது உண்மையல்ல. பலவீனமுடையவனாகவும், தீயவனாகவும் இருப்பது தமது இயற்கைத் தன்மை என்று மனிதன் நினைத்துக் கொள்வது பெரிய தவறாகும். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் வலிமை மிக்க தெய்வீக சக்தி குடி கொண்டிருக்கிறது. அவனுடைய பழக்க வழக்கங்களும், ஆசைகளும் எண்ணங்களும்தான் நலிவுற்றும், தீமை நிறைந்ததாகவும் இருக்கின்ரன. அவன் ஆன்மா பரிசுத்தமாகவே இருக்கிறது.
மகரிஷியின் வார்த்தைகள், பால் பிரண்டனின் உள்லத்திற்குத் தெம்பு அளிக்கும் டானிக்காக இருந்தன. சாதாரண மனிதன் யாராவது இவ்வாறு பேசியிருந்தால் அவர் அவற்றை மறுத்துக் கூறியிருப்பார். ஆனால், மகரிஷியின் சொற்கள் ஆழ்ந்த ஆத்மானுபவத்தின் பிரதிபலிப்புக்களாகவே அவருக்குத் தோண்டினவேயன்றி வறட்டு வேதாந்தி ஒருவரின் வார்த்தை ஜாலமாகத் தோன்றவில்லை.மகரிஷியின் அருகாமையில் இருந்ததால் பால் பிரண்டன் அதுவரை கண்டறியாத உள்ளமைதியைப் பெற்றார். தம் ஆன்மீக வாழ்வு மெள்ள மெள்ள மலருவதையும் உணர்ந்தார் அவர். ஆனால், தாம் விரும்பியது போல் ஆசிரமத்தில் அதிக நாட்கள் அவரால் தங்க முடியவில்லை. அவருக்குப் பழக்கப்பட்ட ஆகார வசதிகள் அங்கு கிடைக்கவில்லை. வெய்யிலின் கடுமையையும் அவரால் தாங்க முடியவில்லை. அதனால் அவரது உடல் நலம் குன்றியது. திருவண்ணாமலையிலேயே சிறிது காலம் தங்க வேண்டும் என்று மனம் விழைந்தது. ஆனால், “உடனே உன் ஊருக்குப் புறப்படு”ஏன்று உடல் உத்தரவு போட்டது. வேறு வழியில்லை. சற்றும் மனமில்லாமல் தம் பயணத்திற்கான ஏற்பாடுகளை செய்யத் தொடங்கினார் பால் பிரண்டன்.