அன்று மாலை அருணாசலேசுவரர் ஆலயத்தைக் காணச் சென்ற பால் பிரண்டன், அதன் கம்பீரத்தையும், சிற்ப எழிலையும் ரசித்து விட்டு, ரமணாசிரமத்திற்குத் திரும்பினார்.
பறவைகளின் இனிமையான ஒலிகள் அடங்கி, இருட்டில் மின் மினிப் பூச்சிகள் ஒளிக் கோலங்கள் போட்டுக் கொண்டிருந்தன. பால் பிரண்டன் மெள்ள தரிசன அறைக்குள் காலடி எடுத்து வைத்தார்.
மகரிஷி, காலை மடித்து, கரங்களைத் தொடையில் உண்றி, ஜன்னலுக்கு வெளியே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். சுற்றிலும் அமர்ந்திருந்தவர்கள் தியானத்தில் ஆழ்ந்திருந்தனர்.
பால் பிரண்டன் ஒரு மூலையில் போய் அமர்ந்தார். சாம்பிராணிப் புகையின் நறுமணம் அவரைக் கிறங்கச் செய்தது. மகரிஷியையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தவருக்கு லேசாகக் கண்களை மூட வேண்டும் என்று தோன்றியது. இமைகளை மூடினார். சற்றைக்கெல்லாம் அவருக்குத் தூக்கம் வந்தது. தொடர்ந்து ஒரு அற்புதமான கனவு கண்டார் பால் பிரண்டன்.
பால் பிரண்டன் ஒரு ஐந்து வயது பாலகனாக மாறி விடுகிறார். வளைந்து வளைந்து செல்லும் கரடு முரடான மலைப் பாதையில் மகரிஷியின் கையைப் பற்றியபடி நின்று கொண்டிருக்கிறான் அந்தப் பாலகன். பிரும்மாண்டமாக உருவெடுத்து மலை போல் மிக உயரமாகத் தோற்றமளிக்கும் மகரிஷியோ, அந்த மையிருட்டில், பாலகனை அழைத்துக் கொண்டு மெள்ள நடக்கிறார். நேரம் ஆக ஆக நிலவும் நட்சத்திரங்களும் ஒளி சிந்த, வழி சற்று தெரிகிறது. இருவரும் பெரியதும், சிறியதுமான பாறைகளைக் கடந்து, செங்குத்தான மலையுச்சியை நோக்கி ஆமை வேகத்தில் முன்னேறுகிறார்கள்.
செல்லும் வழியில் பாறைகளுக்கிடையேயும், புதர்களுக்கிடையேயும் சின்னஞ்சிறிய ஆசிரமங்களும், குகைகளும் காணப்படுகின்றன. மகரிஷியும், பால் பிரண்டனும் அவற்றைக் கடந்து செல்லும் போது அங்கு வசிக்கும் யோகீசுவரர்கள் வெளியே வந்து பார்க்கிறார்கள். எங்குமே நிற்காமல் இருவரும் மலையின் உச்சிக்கு வந்து சேருகிறார்கள். பால் பிரண்டனுக்கு இதயம் பட பட வென்று அடித்துக் கொள்கிறது.
நன்றாகக் குனிந்து பால் பிரண்டனைப் பார்க்கிறார் மகரிஷி. சிறுவனோ திகைப்புடன் மகரிஷியை உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறான். இனம் புரியாத பெரிய மாறுதல் ஒன்று நிகழப் போவதை அவன் தெளிவாக உணர்கிறான்.
அவனது பழைய உல்லக்கிடக்கைகள், எண்ணயெழுச்சிகள், சிந்தையோட்டங்கள், ஆசைகள், சுயனல நோக்கங்கள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் திடீரென்ரு எங்கோ ஓடி மறைகின்றன. விவரிக்க இயலாத பேரமைதி அவனைத் தழுவிக் கொள்கிறது. இனி வாழ்க்கைய்ல் தேவை என்பதே அவனுக்கில்லை!
மகரிஷி சிறுவனைக் கீழே எட்டிப் பார்க்கும்படி கூறுகிரார். மலை உச்சியிலிருந்து பயங்கரமான பள்ளத்தாக்கைப் பார்க்கிறான் சிறுவன். அங்கே மேல் நாடுகளைக் காண்கிறான். கீழே கோடிக்கணக்கான வெள்ளையர் அந்தகாரத்தில் அலைந்து கொண்டிருப்பது அவன் கண்களுக்குத் தெரிகிறது.
மகரிஷி நிதானமாகப் பேசுவது அவன் காதில் விழுகிறது.
“நீ மீண்டும் அங்கு போகும் போது தற்போது உன் உள்ளத்தில் நிலைத்திருக்கும் அமைதி மாறாமல் அப்படியேயிருக்கும். இந்த உடலும் புத்தியும் நான் என்ற எண்ணத்தை இனி நீ விட்டு விட்ட வேண்டும். “நீ” என்பது மறைந்து, “அது” வாகி விடுவாய்.
இவ்வாறு கூறி விட்டு, மகரிஷி நூலிழை போன்ற வெண்மையான ஒளியை பால் பிரண்டனின் கரத்தில் வைக்கிறார்.
கனவு கலைந்து விடுகிறது. கண் விழித்துப் பார்க்கிறார் பால் பிரண்டன். மகரிஷியின் கண்கள், பால் பிரண்டனின் கண்களை ஊடுருவிப் பார்த்துக் கொண்டிருந்தன.
இந்தக் கனவின் பொருள் என்னவென்று சிந்தித்துப் பார்த்தார் பால் பிரண்டன். முற்றிலும் புதுமையானதொரு மன நிலைக்கு ஆளாகியிருந்தார் அவர். கனவின் போது சொந்த வாழ்க்கையின் ஆசா பாசங்கள் மறைந்து தன்னைப் பற்றிய சிந்தனையே இல்லாமல், பிறருக்காக ஏங்கி வருந்தினார். அதே உன்னத மனப்பான்மை கனவு கலைந்த பிறகும் நீடித்துக் கொண்டிருந்தது.
அன்று இரவு பால் பிரண்டன் சரியாகத் உறங்க முடியவில்லை. மகரிஷியின் சந்நிதானத்தில் தாம் கண்ட கனவை அடிக்கடி நினைவுபடுத்திக் கொண்டார் அவர். அப்போதெல்லாம் அபூர்வ விளைவுகளை எதிர்பார்த்து அவரது நெஞ்ச்ம அடித்துக் கொண்டது.
இந்நிகழ்ச்சிக்குப் பிறகு மகரிஷியிடம் நெருங்கிப் பேச வேண்டும் என்று பால் பிரண்டன் பல முறை முயன்றார். ஆனால், முடியவில்லை. இரண்டு நாட்கள் தங்குவதற்காக ஆசிரமத்திற்கு வந்தவர் இரண்டு வாரங்கள் இருந்து விட்டார். பகவான் ரமணர் மௌனத்தாலேயே அவரது வாழ்வில் மகத்தான மலர்ச்சியை உண்டு பண்ணி விட்டதை உணர்ந்த போதிலும், அவருடன் மீண்டும் ஒரு முறை பேசி விட வேண்டும் என்ற தணியாத வேட்கைக்கு ஆளானார் பால் பிரண்டன். வயதான ஆசிரமவாசி ஒருவரிடம் தம் விருப்பத்தை வெளியிட்டார். அவர் பகவானிட்ம சென்று கூறினார்.
கருணைக் கடலான பகவான் பால் பிரண்டனிடம் மீண்டும் பேசுவதற்கு ஒப்புக் கொண்டார். இதை அறிந்ததும், தரிசன அறைக்கு விரைந்து மகரிஷியின் எதிரில் போய் அமர்ந்தார் பால் பிரண்டன். திருவதனத்தில் மந்தஹாசம் தவழ, பகவான் அன்பரை அன்புடன் வரவேற்றார். முதற் கேள்வியைக் கேட்டார் பால் பிரண்டன்.
“உண்மைப் பொருளைத் தரிசிக்க வேண்டுமென்றால், உலக வாழ்க்கையை விட்டு விட்டு காடுகளையும், மலைகளையும் நாடிச் செல்ல வேண்டும் என்று யோகிகள் சொல்கிறார்கள். எங்களது வாழ்க்கை முறை முற்றிலும் மாறுபட்டிருப்பதால் மேலை நாடுகளில் இவ்விதம் செய்வது சாத்தியமில்லையே, யோகிகள் கூறுவதைத் தாங்கள் ஒப்புக் கொள்கிறீர்களா?”
௳கரிஷி கூறிய பதிலை ஒரு சீடர் மொழி பெயர்க்கிறார்.
“நம் வாழ்க்கை முறையைத் துறக்க வேண்டியதில்லை. தினமும் ஒரு மணி நேரமோ, இரண்டு மணி நேரமோ தியானம் செய்தால் போதும். அன்றாட அலுவல்களில் ஈடுபட்டாலும் சரியான முறையில், தவறாமல் தியானம் செய்து வந்தால், அதனால் ஏற்படும் மனப்பக்குவம் இதர பணிகள் புரிவதற்கும், நமக்குப் பெரும் உதவியாயிருக்கும்.”
“அதனால் என்ன பலன் ஏற்படும்?”
“நாள் ஆக ஆக பிறரிடம் பழகும் தன்மையில் நீயெ ஒரு மாறுதலைக் காண்பாய். தியானத்தினால் ஏற்படும் உள்ளமைதி, உன்னையறியாமலேயே உன் நடவடிக்கைகளில் பிரதிபலிப்பதை உணருவாய்.”
“அப்படியானால் மலைகளையும், காடுகளையும் தேடிச்செல்ல வெண்டாம் எங்கிறீர்களா?”
மீண்டும் வற்புறுத்திக் கெட்கிறார் பால் பிரண்டன். இதற்கு பகவான் நேரிடையாகப் பதில் கூறவில்லை.
“மனிதன் உலகத்துடன் தன்னைப் பிணைக்கும் பந்த பாசங்களை விட்டு விட வெண்டும். “நான்” “எனது” என்ற தவறான பாச உணர்வுகளை மனதிலிருந்து அகற்றி விடுவதே உண்மையான துறவு நிலையாகும்.”
சந்நியாச யோகத்தின் மேன்மையை சாதாரண மொழியில் எடுத்துக் கூறுகிறார் மகரிஷி. பால் பிரண்டனுக்கு புதிய சந்தேகம் ஒன்று தோன்றுகிறது.
“சம்சார பந்தத்தில் சிக்கியிருப்பவன் தன்னை மறந்தும், சொந்த பந்தங்களைத் துறந்தும் வாழ முடியுமா?”
“அன்றாட வாழ்க்கையில் ஈடுபடலாம். கர்ம மார்க்கமும், விவேகமுடன் வாழும் ஞான மார்க்கமும் ஒன்றுக்கொன்று முரணானவை அல்ல. தன்னை உலக வாழ்க்கையில் ஈடுபடுத்திக் கொண்டே ஒருவன் ஞானியாகவும் இருக்கலாம்.”
“அதாவது ஒருவன் தன் உத்தியோக சம்பந்தமான அலுவல்கள் எதையுமே விடாமல், ஆன்ம ஞானம் பெற முடியும் என்று தாங்கள் கூறுகிறீர்களா?”
“ஆமாம்! அந்நிலையில் “நாம் “ செய்கிறோம் என்ற எண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து, “அது”வாகி உண்மைப் பொருளோடு மனம் லயித்து விடும்.”
“நாம் எப்போதும் ஏதாவது ஒரு வேலையில் ஈடுபட்டிருப்பதால் தியானம் செய்ய நேரம் கிடைக்காதே”
“ஆன்மீகத் துறையில் புதிதாக ஈடுபட்டிருப்பவன் தான் தியானம் செய்வதற்கென்று தனியாக நேரம் ஒதுக்க வேண்டும். பயிற்ற்சி பெறப் பெற வேலை செய்தாலும், செய்யா விட்டாலும் அவன் எப்போதும் ஆழ்ந்த அமைதியிலும், பேரானந்தத்திலும் மூழ்கியிருப்பான். சமுதாயத்தில் ஒருவனாக உலகில் வாழ்ந்து கொண்டிருந்தாலும் அவன் சிந்தனை மட்டும் தனிமைப் பெருவெளியில் தெளிவோடு இயங்கிக் கொண்டிருக்கும்.”
“தாங்கள் பிறருக்கு யோக மார்க்கத்தைக் கற்றுத் தருவதில்லையா?”
“மாடு மேய்ப்பவன் மாட்டை, கைக்குச்சியால் ஓட்டுவதைப் போல் யோகியானவன் தன் மனத்தை இலக்கை நோக்கிச் செலுத்துகிறான். சாதகனோ கையில் புல்லை வைத்துக் கொண்டு அந்த மாட்டைத் “தாஜா” செய்து அழைக்கிறான்.
“அதை எப்படிச் செய்வது?”
“நான் யார்” என்று உன்னைப் பார்த்தே நீ விடாமல் கேட்டுக் கொண்டேயிருக்க வேண்டும். இப்படியே விசாரித்துக் கொண்டு போனால் உன்னுள், உன் மனத்திற்கப்பால் இருக்கும் ஒன்றை நீ கண்டு பிடிப்பாய். அதைக் கண்டு பிடித்து விட்டால் மற்ற எல்லா பிரச்சினைகளும் தானாகவே தீர்ந்து விடும்.”
“மகரிஷியின் இந்தப் பதில் பால் பிரண்டனை சற்றுத் திணற அடிக்கிறது. ஜன்னலின் வழியே சூரிய ஒளி படர்ந்திருக்கும் மலைச்சரிவின் எழிற் காட்சியை சற்று நேரம் ரசிக்கிறார் அவர்.
மகரிஷி தொடர்ந்து பேசுகிறார்.
“உனக்குப் புரியும்படி சொல்கிறேன் கேள். ஒவ்வொரு மனிதனும் துன்பத்தின் கலப்பே இல்லாத ஆனந்தத்தைத் தேடி அலைகிறான். நிரந்தரமாக இருக்கும் பேரானந்தத்தை அனுபவிக்க வேண்டும் என்று நினைக்கிறான். இது எல்லோருக்கும் இயற்கையான உணர்வு. ஆனால் அதே சமயத்தில் ஒவ்வொரு மனிதனும் தன் மீது எல்லையற்ற அன்பு வைத்திக்கிறான் இல்லையா?”
“ஆமாம்”
“மனிதன் தன் மீது கொண்டிருக்கும் ஆசையையும், எப்படியாவது குடியின் உதவியாலேயோ, மதத்தின் துணை கொண்டோ, ஆனந்தத்தைப் பெற அவன் முயலுவதையும் இணைத்துப் பார். மனிதனின் உண்மையான சொரூபம் என்னவென்று உனக்குப் புரியும்.”
“தாங்கள் கூறுவது எனக்குப் புரியவில்லை!”
“எல்லையற்ற ஆனந்தம்தான் மனிதனின் உண்மையான சொரூபம். அவன் அந்த ஆனந்தத்தைத் தேடும் போது தன்னையுமறியாமல் தன் உண்மையான சொரூபத்தையே தேடியலைகிறான். அந்த ஆன்ம சொரூபம் அழிவற்றது. எனவேதான் மனிதன் தன் உண்மை நிலையை அறியும் போது, முடிவற்ற ஆனந்தத்தில் மூழ்கி விடுகிறான்.”
“உலகில் எல்லோரும் துன்பப் படுகிறார்களே, அது ஏன்?”
“எல்லோரும் தன் உண்மையான சொரூபத்தைத் தெரிந்து கொள்ளாததுதான் இந்தத் துன்பத்திற்கெல்லாம் காரணம். எல்லோரும் அறிந்தோ அறியாமலோ, ஆன்ம சொரூபத்தைத்தான் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.”
“கொலைகாரன், கொள்ளையடிப்பவன், அயோக்கியன், எல்லோருமா தங்களது ஆன்ம சொரூபத்தைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்?”
“ஆமாம் அவர்கள் கூட தாங்கள் செய்யும் பாவத்தின் மூலம் ஆனந்தத்தைத்தான் பெற நினைக்கிறார்கல். தவறான வழியைப் பின்பற்றினாலும் அவர்களுடைய லட்சியம் என்னவோ ஆனந்தமாக இருப்பதுதான். ஆனால், ஆன்ம சொரூபத்தைத் தேடுகிறோம் என்று அவர்களுக்குத் தெரியாது. வழி தவறாக இருப்பதால்தான் பலனும் விபரீதமாகி விடுகிறது.”
“மனிதன் தன் உண்மையான தன்மையைப் புரிந்து கொண்டு விட்டால், அவன் நிரந்தரமான சந்தோஷத்தை அனுபவிக்கலாம் என்று கூறுகிறீர்களா?” என்று கேட்டார் பால் பிரண்டன்.
“ஆமாம் என்று தலையசைக்கிறார் மகரிஷி. பின்னர் பால் பிரண்டன் “நான் யார்” என்ற விசாரனையைப் பர்றி தன் சித்தம் தெளிவடைவதற்காக மகரிஷியிடம் மேலும் பல கேள்விகள் கேட்கிறார். அவரது சந்தேகங்களைப் போக்கும் வகையில் மகரிஷி எல்லாவற்றுக்கும் பொறுமையுடன் பதிலளிக்கிறார். இறுதியில், “மனிதன் உலகைப் பற்றியெல்லாம் தெரிந்து கொண்டு விட்டு, தன்னைப் பற்றி அறிந்து கொள்ளாவிட்டால் என்ன பிரயோசனம்? நம் உண்மைச் சொரூபத்தைப் பற்றிய விசாரணையை விட முக்கியமானது வெறு என்ன இருக்க முடியும்?” என்று கேட்டார்.
“சுலபமாகக் கூறி விட்டீர்கள்! ஆனால் அந்த ஆன்ம விசாரணை மிகக் கடினமானது. மனிதனின் சக்திக்கு அப்பாற்பட்டது” என்றார் பால் பிரண்டன்.
“இது முடியுமா முடியாதா என்பது அவரவர்களுடைய சொந்த அனுபவத்தைப் பொறுத்த விஷயம். நீ நினைப்பது போல் இது அத்தனை கஷ்டமானது அல்ல. “நான் யார்” என்ற விசாரணையில் ஆழ்ந்து, இந்த உடலும், புத்தியும், மனமும் “நான்” அல்ல என்று உணரத் தொடங்கினால், அந்தத் தியானமே உனக்கு உண்மையைப் புலப்படுத்தும். உன்னையே நீ அறிந்து கொள்வாய். உன்னைப் புரிந்து கொண்டு விட்ட பிறகு சந்தேகங்களுக்கே இடமிருக்காது” என்றார் மகரிஷி. பகவானின் சொற்களில் மனத்தை ஈடுபடுத்தி தீவிர சிந்தனையில் ஆழ்ந்து விட்ட பால் பிரண்டன் பேசாமல் இருந்தார்.
பகவானும் மௌனமாகி முகத்தை வேறுபக்கம் திருப்பி, பார்வையை எங்கோ செலுத்தி விட்டார். குறிப்பறிந்து பால் பிரண்டன் அறையை விட்டு வெளியேறினார்.
பின்னர் மாலையில் ஊருக்குப் புறப்படும் முன் மீண்டும் ஒரு முறை மகரிஷியைத் தரிசிக்கச் சென்றார் அவர். அப்போது மகரிஷி ஒன்றுமே பேசவில்லை. கருணை விழிகளால் பால் பிரண்டனையே பார்த்துக் கொண்டிருந்தார். அந்தப் பார்வை அவர் இதயத்தில் புகுந்து, உட்புறமெல்லாம் ஊடுருவி, ஆனந்தப் பேரமையில் மூழ்கடிக்கிறது. “தான்” என்ற தனித்தன்மை கரைந்து போய் அவரது மனம் மகரிஷியின் உள்ளத்தோடு ஒன்றி விடுகிறது.கால ஓட்டமும், பிரபஞ்ச இயக்கமும் நின்று விடுவது போல் பிரமை தட்டுகிறது. வெளியில் தயாராய் நின்றிருந்த வண்டியில் பூட்டப்பட்டிருந்த மாடு அசையவே, அதன் கழுத்தில் இருந்த மணி சிறு ஒலியெழுப்புகிறது. அந்த ஒலியலைகள் பால் பிரண்டனை மீண்டும் மண்ணுலகிற்கு அழைத்து வருகின்றன. கரம் குவித்து, மகரிஷியிடம் மௌனமாக விடை பெற்றுக் கொண்டு, வெளியே வந்து வண்டியில் ஏறி அமர்கிறார் அவர். அவரது பாரதப் பயணம் தொடர்கிறது.