பகல் உணவிற்குப் பிறகு தரிசனத்திற்காக வந்தவர்கள் எல்லோரும் களைப்பு தீர படுக்கச் சென்று விட்டனர். மகரிஷியைத் தனிமையில் காண இதுவே தருணம் என்று எண்ணிய பால் பிரண்டன் தரிசன அறைக்குள் நுழைந்தார். அப்போது பகவான் ரமணர் ஏதோவொரு நோட்டுப் புத்தகத்தைக் கையில் வைத்துக் கொண்டு திண்டின் மீது சாய்ந்தவாறு அதைத் திருத்திக் கொண்டிருந்தார். பால் பிரண்டன் அவர் எதிரில் சென்று, வணங்கி விட்டு எதிரில் அமர்ந்தார். சற்றைக்கெல்லாம் நோட்டுப் புத்தகத்தை மூடிப் பக்கத்தில் வைத்து விட்டு, அருகிலிருந்த சீடரிடம் தமிழில் ஏதோ பேசினார். சீடர் அதை மொழி பெயர்த்த போது நெகிழ்ந்து போனார் பால் பிரண்டன்.
ஆசிரமத்தின் உணவை அவர் சாப்பிட முடியாமல் போனதற்குத் தாம் வருந்துவதாகவும். அங்கு வெளி நாட்டினருக்காகச் சமைத்துப் பழக்கமில்லாததால் அவருக்குத் தேவையான உணவைத் தயாரிக்க முடியவில்லையென்றும் மகரிஷி கூறினார். அதைக் கேட்ட பால் பிரண்டன், “அதனால் பரவாயில்லை சுவாமி, அதையாவது சாப்பிட்டு விட்டுப் போகிறேன். நான் எதை நாடித் தங்களிட்ம வந்தேனோ, அதுதான் மிக முக்கியமானதாக நான் கருதுகிறேன். என் சாப்பாட்டை அல்ல” என்று பணிவுடன் கூறினார்.
அதைக் கேட்ட மகரிஷி, “நல்ல காரியம்” என்று மட்டும் கூறி விட்டு மௌனமாக இருந்து விட்டார்.
சற்ரு தைரியம் வரவே, பால் பிரண்டன் மேலும் தொடர்ந்தார்.
“சுவாமி, நான் மேல் நாட்டு ஆன்மீக தத்துவ போதனைகளையும், விஞ்ஞான ஆராச்சிகளையும் படித்தறிந்திருக்கிறேன். நெரிசல் மிக்க நகரங்களில் மக்களோடு நெருங்கிப் பழகி வாழ்ந்து, உழைத்து, உழன்றிருக்கிறேன். அவர்கள் பங்கு கொள்ளும் இன்பக் கேளிக்கைகளில் திளைத்திருக்கிறேன். சில சமயங்களில் தனிமையை நாடிச் சென்று, ஆழ்ந்த சிந்தனையில் லயித்திருக்கிறேன். மேல் நாட்டு ஞானிகளைச் சந்தித்து உரையாடியிருக்கிறேன். தற்போது கிழக்குத் திசை நோக்கி, மனத்தெளிவும் ஒளியும் தேடி வந்திருக்கிறேன்.”
“உன் நோக்கம் எனக்குப் புரிகிறது” என்பது போல் மகரிஷி தலையை அசைக்கிறார்.
பா பிரண்டன் தொடர்ந்து கூறுகிறார் :
“சுவாமி, பல விதமான சித்தாந்தங்களையும், சமயக் கருத்துக்களையும் நான் கேட்டறிந்துள்ளேண். ஆனால் சொந்த அனுபவத்தால் உணர்ந்து கொள்ள முடியாதவற்றை என் புத்தி ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. நான் மதவாதியல்ல. மனிதனின் அன்றாட உலக வாழ்க்கைக்கு அப்பால் ஏதாவது இருக்கிறதா? அப்படியொன்று இருக்குமானால், அதை நானே அறிந்து, தெளிந்து, உணர முடியுமா?”
இதற்கு மகரிஷி பதில் கூறவில்லை. அவர் ஏதோ ஒரு யோசனையில் ஆழ்ந்து விட்டதாகத் தோன்றியது. பால் பிரண்டனுக்கு இத்தனை ஆண்டுகளாக மனத்தில் தெக்கி வைத்திருந்தவற்றையெல்லாம் கொட்டி விட வேண்டும் என்று தோன்றவே, மீண்டும் பேசினார் அவர்.
“மேல் நாட்டு பேரறிஞர்களான விஞஞானிகளை நாங்கள் பெரிதும் கௌரவிக்கிறோம். ஆனால், அவர்கள் கூட மனித வாழ்க்கு அப்பால் உள்ள பேருண்மையைப் பற்றி ஒன்றுமே கூற முடியாத நிலையில் இருப்பதை ஒப்புக் கொள்கிறார்கள். மேல் நாட்டு ஞானிகளுக்குப் புலப்படாத உண்மைகளை எடுத்துக் கூரும் அருள் பெற்ற மகான்கள் பாரதத்தில் இருப்பதாகச் சொல்கிறார்களே! அது நிஜமா? உண்மையை உணர்ந்து விளக்கம் பெற தாங்கள் எனக்கு உதவ முடியுமா? அல்லது உண்மையை நாடிச் செல்வதே ஒரு மாயத் தோற்றம்தானா?”
கேட்க வேண்டியதையெல்லாம் கேட்டு முடித்து விட்டு மகரிஷியின் பதிலுக்காகக் காத்திருந்தார் பால் பிரண்டன். பத்து நிமிடங்கள் அவரையே பார்த்துக் கொண்டிருந்த மகரிஷியின் உதடுகள் லேசாக அசைந்தன. மொழி பெயர்ப்பாளரின் உதவியை நாடாமல் நேரிடையாகவே கெட்டார் மகரிஷி :
“நான் என்றும், எனக்குத் தெரிய வேண்டும் என்றும் நீ கூறுகிறாயே, அந்த நான் என்பது யார் என்று சொல் பார்க்கலாம்.”
மகரிஷியின் கேள்வி பால் பிரண்டனுக்குப் புரியவில்லை.
“தங்கள் கேள்வி எனக்குப் புரியவில்லை” என்று தைரியமாகக் கூறினார் பால் பிரண்டன்.
“புரிய வில்லையா, நன்றாக சிந்தித்துப் பார்.”
சற்று நேரம் யோசித்தூ விட்டு, விரலால் தன்னைச் சுட்டிக் காட்டி, “நான் பால் பிரண்டன்” என்றார் அவர்.
“அவரை உனக்குத் தெரியுமா?”
“பிறந்தது முதல் தெரியும்” என்று பதிலளித்தார் பால் பிரண்டன் சிரித்துக் கொண்டே.
“ஆனால் உன் உடலைத்தானே “நான்” என்று கூறுகிறாய், மறுபடியும் கேட்கிறேன் சொல், நீ யார்?”
இந்த நூதனமான கேள்விக்குப் பால் பிரண்டனால் சட்டென்று பதில் கூற முடியவில்லை. . விழித்தார்.
“அந்த ‘நான்’ யார் என்பதை முதலில் அறிந்து கொள், பின்னர் உனக்கு உண்மை புலப்படும்” மகரிஷி நிதானமாகக் கூறினார்.
பால் பிரண்டனின் மனம் குழம்பியது. திக்குமுக்காடிப் போனார். தன் மனநிலையை மகரிஷியிடம் ஒளிவு மறைவின்றிக் கூறினார்.
இப்போது மகரிஷி தமிழில் பேசினார்.
“ஓரு வழிதான் இருக்கிறது. உட்புறம் மனத்தைத் திருப்பி உன்னைப் பற்றியே சிந்தனை செய், அதைச் சரியான முறையில் செய்தால், உன் கேள்விகளுக்கெல்லாம் விடை கிடைத்து விடும். உன்சந்தேகங்களெல்லாம் தீர்ந்து விடும்.”
இந்த உபதேசம் பால் பிரண்டனை மேலும் குழப்பியது.
“சுவாமி, நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள். எந்த முறையை நான் பின்பற்ற வேண்டும்?”
“உன்னுடைய உண்மையான நிலையைப் பற்றி நீ சிந்தித்து, இடைவிடாத தியானத்தில் ஆழ்ந்திருந்தால் சத்திய ஒளியைத் தரிசிக்கலாம்.
“சுவாமி, உண்மைப் பொருளைப் பற்றி நான் அடிக்கடி சிரத்தையுடன் தியானித்து வருகிறேன். பபடியிருந்தும் ஆன்ம விசாரத்தில் நான் முன்னேறியதாகத் தெரியவில்லை.”
“முன்னேற்றமே அடையவில்லை என்று உனக்கு எப்படித் தெரியும்? ஆன்மீகத் துறையில் முன்னேறியிருக்கிறொமா இல்லையா என்பதைக் கண்டுபிடிப்பது எளிதல்ல…..”
“அதற்கு குருவின் துணை அவசியமா?”
“தேவைப்படலாம்.”
“தாங்கள் கூறுவது போல் தம்மைப் பற்றி உணர்ந்து கொள்ள குரு நமக்கு உதவ முடியுமா?”
“ஆன்ம விசாரனை செய்ய குருவால் உனக்கு உதவ முடியும். ஆனால் சொந்த அனுபவத்தின் மூலம் தான் ஆன்ம ஒளி பெற முடியும்”
“குருவின் துணையோடு ஆன்ம விசாரணையில் சிறிது முன்னேற எத்தனை காலம் பிடிக்கும்?”
“அது சாதகனின் மனப் பக்குவத்தைப் பொறுத்த விஷயம். வெடி மருந்து சீக்கிரம் பற்றிக் கொள்ளுகிறது. அடுப்புக் கரியில் தீப்பிடிக்க சிறிது நேரம் ஆகிறது.”
“ஆத்ம விசாரத்தைப் பற்ரி அந்த விளக்கத்திற்கு மெல் மகரிஷி வேறு எதுவுமே பேசாமல் இருந்து விட்டதால், பால் பிரண்டன் பொதுவாக சில கேள்விகள் கேட்கத் தொடங்கினார்.
“சுவாமி, நாங்கள் மிகவும் நெருக்கடியான காலத்தில் வாழ்கிறோம். உலகின் எதிர்காலம் எப்படியிருக்கும் என்று தாங்கள் அபிப்ராயம் கூற முடியுமா? என்று கேட்டார் பால் பிரண்டன்.
“நீ எதிர்காலத்தைப் பற்றி ஏன் கவலைப்பட வேண்டும்? இப்போது என்ன நடக்கிறது என்பது உனக்குச் சரியாகத் தெரியாதே! நிகழ்காலத்தைப் பற்றி முதலில் கவனி. எதிர்காலம் தன்னால் சரியாகி விடும்.”
“பால் பிரண்டன் விடுவதாக இல்லை. சுவாமி, உலகத்தில் நட்புறவும், நல்லெண்ணமும் மேலோங்கி சமாதானம் நிலைக்குமா? அல்லது மனித குலம் போரில் குதித்து அழிவுப் பாதையை நோக்கிப் போகுமா?”
மகரிஷி பதில் சொன்னார் :
“இந்த உலகத்தை ஒருவன் ஆள்கிறான். உலகத்தை கவனித்துக் கொள்வது அவன் வேலை. இந்த உலகத்தை உண்டாக்கியவன் அதைக் காப்பாற்றும் பாரத்தை ஏற்றுக் கொள்கிறான், நீ அல்ல.”
“சில நாட்களுக்கு முன் செங்கற்பட்டில் ஸ்ரீ காமகோடி ஆசாரிய சுவாமிகள், “உலகத்தில் தன்னை மீறிய தெய்வ சக்தியொன்று என்று மனிதன் உணர்ந்து விட்டால் உலகில் பாதி பிரச்சினைகள் தீர்ந்து விடும்” என்று பால் பிரண்டனுக்குக் கூறிய அறிவுரைக்கும், மகரிஷியின் அருள் வாக்கிற்கும்தான் எத்தனை ஒற்றுமை!
“உலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளைக் காணும் போது அப்படியொரு அன்புச் சக்தி இருக்கிறதா என்பதே சந்தேகமாக இருக்கிறது” என்று பால் பிரண்டன் மறுத்துக் கூறினார்.
அதற்கும் பதில் கூறினார் மகரிஷி.
“நீ எப்படியிருக்கிறாயோ, அப்படித்தான் இருக்கும் நீ வாழும் உலகமும். உன்னைப் புரிந்து கொள்ளாமல் உலகத்தைப் புரிந்து கொள்ள முயலுவதில் அர்த்தமில்லை. இம்மாதிரி பிரச்சினைகளைப் பற்றி தத்துவ விசாரணை செய்பவர்கள் கவலைப்படத் தேவையில்லை. இதனால் நேரம்தான் வீணாகும். முதலில் நம்மைப் பற்றிய உண்மையை அறிந்து கொண்டால், உலகத்தைப் பற்றிய உண்மை எளிதாகப் புரிந்து விடும். நாம் வேறு உலகம் வேறு அல்ல்.”
அப்போது அன்பர் ஒருவர் ஊதுபத்தியொன்றை ஏற்றினார். அதன் நீலப் புகை மேலே எழும்பிச் சுழன்று சுழன்று செல்வதைக் கவனித்துக் கொண்டே, நோட்டுப் புத்தகத்தைக் கையிலெடுத்தார் பகவான். குறிப்பிட்ட பக்கத்தைத் திருப்பி திருத்த ஆரம்பித்தார்.
அங்கிருந்து செல்வதற்கு தமக்கு உத்தரவு கிடைத்து விட்டதை உணர்ந்த பால் பிரண்டன், அறையிலிருந்து புறப்படுகிறார்.