ரமண சரிதம் – 21

செல்வத்தில் கொழித்து, இன்பத்தில் திளைத்து, விஞ்ஞான நாகரீகத்தின் பெயரால் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான வசதிகள் அத்தனையும் கிடைக்கப் பெற்று, முன்னேற்றம் அடைந்து வரும் மேல் நாட்டினர் மனச்சாந்தியற்று வேறு ஏதோ ஒன்றைத் தேடியலைவதைப் பார்க்கிறோம். இருள் கவிந்த தங்கள் உள்ளத்திற்கு ஒளியும், சூன்யம் சூழ்ந்த தங்கள் வாழ்விற்குப் பொருளும் தேடி கிழக்கு திசை நோக்கி அவர்கள் வருகின்றனர். இவ்வாறு ஆன்மீக சாந்தியை நாடி வரும் வெளிநாட்டினரை அன்போடு வரவேற்று, அரவணைத்து ஆறுதளித்து, ஆன்மீக ஒளி வழங்கி பேரமைதி நல்கி வரும் நம் பாரதப் புண்ணிய மண்ணிற்கு சுமார் ஐம்பத்தேழு ஆண்டுகளுக்கு முன் பால் பிரண்டன் என்ற ஓர் ஆங்கிலேயர் வந்தார்.  நம் நாட்டின் ஆன்மீக வளத்தின் ரகசியத்தை ஆராந்தறிவதற்கும் அச்செல்வத்தைச் சம்பாதித்து வைத்திருக்கும் மகான்களைத் தரிசித்து மன அமைதி பெறுவதற்கும் வந்தவரை அருணாசலேசத்தின் ஒளி வாவென்று  அழைத்தது. அந்த ஒளியின் வடிவாக மாமலையின் அடிவாரத்தில் அமர்ந்திருந்த ஸ்ரீ ரமண மகரிஷியின் திருவடி நிழலில் அமர்ந்து, விடை காணா புதிருக்கு விடை கண்டார் பால் பிரண்டன்.

ஆறாயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்து வந்தவரின் அகக்கண்களைத் திறந்து அருணாசல மகிமையை உணர்த்தியவர் ஸ்ரீ காஞ்சி காமகோடி ஆசாரிய சுவாமிகளாகும்.

எங்கோ பிறந்து, வேறு எந்த சூழ்நிலையிலோ வளர்ந்து, பாரதப் பண்பிற்கும், கலாசாரத்திற்கும் முற்றிலும் மாறுபட்ட பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகியிருந்தும், முற்பிறவியில் நல்வினைப் பயனாலும், அறிவிற்கப்பாற்பட்ட சத்தியப் பொருளின் பெருங்கருணையினாலும் உலக குருவான ஸ்ரீ சங்கராசாரிய சுவாமிகளைத் தரிசிக்கும் பாக்கியம் பெற்றார் அவர்.

பால் பிரண்டன் ஒரு பத்திரிகையாளர், சிறந்த எழுத்தாளர். ஆன்மீக வாழ்வில் ஆழ்ந்த நாட்டம் கொண்டவர். இந்து சமயத்தின் உன்னத கோட்பாடுகளிலும், நம் வேதாந்தத் தத்துவங்களிலும் அவருக்குப் பெரும் மதிப்புண்டு. பாரதத்தின் பெருமைக்கோர் எடுத்துக்காட்டாக விளங்கும் மகாங்களையும், சித்த புருஷர்களையும், யோகீசுவர்களையும் நேரில் தரிசிக்க வேண்டும் என்ற தணியாத வேட்கையின் காரணமாக 1930-ம் ஆண்டு இந்தியாவிற்கு வந்த அவர், வடநாட்டிலும், தென்னாட்டிலும் பல சாதுக்களையும், யோக மார்க்கத்தில் முன்னேறியிருந்த பெரியோர்களையும் தரிசித்தார். இருப்பினும், அவருக்கு மனத்திருப்தி ஏற்படவில்லை. தேடி வந்த அமைதி கிட்டவில்லை. சென்னையில் தங்கியிருந்த போது பிரபல எழுத்தாளர் கே. எஸ். வேங்கடரமணியைச் சந்தித்தார் பால் பிரண்டன். அவரது நன்முயற்சியாலும், பேருதவியாலும் அவருக்கு கும்பகோணம் சுவாமிகள் என்று அப்போது அழைக்கப்பட்ட ஸ்ரீ காமகோடி பரமாசாரிய சுவாமிகளின் தரிசனம் கிடைத்தது.

1931-ம் ஆண்டு சுவாமிகள் செங்கற்பட்டில் முகாமிட்டிருந்தார்.

மலர் மாலைகளையும், ஆரஞ்சுப் பழங்களையும் வாங்கிக் கொண்டு சுவாமிகள் தங்கியிருந்த வீட்டிற்குள் வேங்கடரமணியுடன் நுழைந்தார் பால் பிரண்டன். இருள் சூழ்ந்த ஓர் அறையில் மங்கலாக எரிந்த எண்ணெய் விளக்கில் அரைகுறை வெளிச்சத்தில் நின்ற சுவாமிகளின் சிறிய தோற்றத்தையும், அப்பொன்னிற மேனியில் பளிச்சிட்ட ஆன்மீக ஒளியையும் கண்களில் தேங்கி நின்ற கருணை வெள்ளத்தையும் கண்டு, தம் உள்ளத்தைப் பறி கொடுத்த அந்த ஆங்கிலேயர் தமக்கு தரிசனம் தருவதற்கு ஒப்புக் கொண்டதற்காக முதலில் நன்றி தெரிவித்துக் கொண்டார். அதைக் கேட்டு சுவாமிகள் புன்முறுவல் பூத்தார்.

பின்னர் பால் பிரண்டன், உலகத்தின் எதிர்காலத்தைப் பற்றி சுவாமிகளிடம் பல கேள்விகள் கேட்டார். உலக நாடுகள் ஆயுதங்களை உற்பத்தி செய்து கொண்டு ஒன்றையொன்று அழைப்பதற்காக தயாராகிக் கொண்டிருந்த நேரமது. மன நிம்மதியற்று வாழ்ந்த மேல்நாட்டினர் பகை தீர்ந்து, நல்லெண்ணத்தோடும், நட்புறவோடும் வாழ்வதற்கு ஆன்மீக நெறியைத் தவிர வழியில்லை என்று சுவாமிகள் எடுத்துக் கூறினார். உலகில் மலிந்து வரும் அக்கிரமங்களைக் காணும் போது நாம் நம்பிக்கையிழக்க நேரிட்டாலும் கடவுளின் பேரன்பால், மனித குலம் உய்ய வழி பிறக்கும் என்றும், உலகில் துன்பமும், துயரமும் பெருகிக் கொண்டே போகும் போது, தெய்வ சக்தியுடன் திகழும் மனிதர்கள் அவ்வப்போது தோன்றி நல்வழி காட்டுவார்கள் என்றும் கூறியருளினார். நம் சக்திக்கு மீறிய தெய்வ சக்தியொன்ரு நம்மையெல்லாம் இயக்கி வைக்கிறது என்று மனிதன் உணரும் போது உலகில் தற்போது காணும் பல இன்னல்கள் மறைந்து விடும் என்றும் ஸ்ரீ ஆசாரிய சுவாமிகள் பால் பிரண்டனிடம் உரைத்தார்.

பின்னர், தம் பாரதப் பயணத்தின் நோக்கத்தை விளக்கிக் கூறினார் பால் பிரண்டன். பாரதத்தில் அவர் சந்தித்த சாதுக்களையும், யோகிகளையும் பற்றி விசாரித்தறிந்தார் சுவாமிகள். ஓர் உண்மையான யோகியை தரிசித்து பயனடைய வேண்டும் என்ற பால் பிரண்டனின் பேராவலைப் புரிந்து கொண்ட சுவாமிகள், “உங்கள் உள்லத்தில் ஓர் ஒளி தோன்றத் தொடங்கியிருக்கிறது. அது உங்களுக்கு நிச்சயம் வழி காட்டும்” என்றார். சுவாமிகள் கூறியதின்பொருள் பால் பிரண்டனுக்குத் தெளிவாகப் புரியவில்லை. தமது எண்ணம் ஈடேறுவதற்கு எந்த மார்க்கத்தைக் கடை பிடிக்க வேண்டும் என்று கூறும்படி சுவாமிகளிடம் கேட்டுக் கொண்டார் அவர்.

தங்கள் பயணத்தைத் தொடருங்கள். இறுதியில் தாங்கள் சந்தித்த யோகிகளையும், மகாங்களையும் பற்றி நன்றாக சிந்தித்துப் பாருங்கள். அவர்களில் உங்கள் உள்ளத்தை அதிகமாக கவர்ந்தவர் எவரோ, அவரிடம் மீண்டும் செல்லுங்கள். அவர் உங்களுக்கு உபதேசம் செய்தருளுவார் என்றார் சுவாமிகள்.

“ஒருவருமெ அப்படி என் உள்ளத்தைக் கவரா விட்டால் நான் என்ன செய்வது?” என்ற தம் சந்தேகத்தை வெளியிட்டார் பால் பிரண்டன்.

அப்படியொருவரும் தங்களுக்குக் கிடைக்கா விட்டால், கடவுளே குருவாயிருந்து உபதேசிக்கும் வரையில் தாங்கள் சொந்த முயற்சியில் ஈடுபட வேண்டும். தியான முறையை மேற்கொள்ளுங்கள். உள்ளத்தில் அன்பை நிரப்பி, உயரிய நோக்கங்களில் மனத்தைச் செலுத்துங்கள். தங்களது ஆன்மாவைப் பற்றி அடிக்கடி சிந்தனை செய்யுங்கள். தியானம் செய்வதற்கு விடியற்காலையும், சந்தியா காலமும் ஏற்ற நேரங்கள். சுற்றுப்புறமெங்கும் அமைதி தவழும் அச்சமயங்களில் அதிக இடையூறுகளின்றி தியானம் செய்யலாம்.

இப்படிக் கூறி விட்டு, அன்பரைக் கருணையோடு பார்த்தார் ஆசாரிய சுவாமிகள்.  துறவியின் திருவதனத்தில் குடியிருந்த பேரமைதியைக் கண்டார் பால் பிரண்டன்.  “பிறரை வீணாகத் தேடியலைவானேன். இவரையே சரணாகதியடைந்து விட்டால் என்ன?” என்று மின்னல் போல் அவருக்கு ஒரு யோசனை தோன்றியது. அடுத்த விநாடி சுவாமிகளிடம் அதைப் பற்றிக் கேட்டும் விட்டார்.

“என் சொந்த முயற்சியில் எனக்குப் பலன் கிடைக்கா விட்டால் தங்களிடமே மீண்டும் வரலாமா?”

“அது சாத்தியமில்லை” என்பது போள் சுவாமிகள் லேசாகத் தலையை அசைத்தார்.

“நான் ஒரு மடாதிபதி. என் நேரத்தை எல்லாம் ஸ்ரீ மடத்தின் பணியில் செலவிட வேண்டியவனாயிருக்கிறேன். எனவே தனிப்பட்ட சீடர்களை ஏற்றுக் கொள்ள முடியாத நிலையிலிருக்கிறேன். தங்களைப் போன்ற தனிப்பட்ட சீடர்களைக் கவனித்து பயிற்சியளிப்பதற்கேற்ற ஒரு குருவையே தாங்கள் நாட வேண்டும், என்று உறுதியாகவும், உள்ளன்போடும் கூறினார் ஆசாரிய சுவாமிகள்.

“உண்மையான குருவைக் காண்பது அறிதெங்கிறார்களே, அதிலும் என்னைப் போன்ர ஒரு வெள்ளையன் அவர்களை நெருங்க முடியாது என்று கூறுகிறார்களே.” கவலையைத் தெரிவித்தார் பால் பிரண்டன்.

நம்பிக்கையிழந்தவருக்கு நம்பிக்கை பிறக்கும் வகையில் சுவாமிகள் தெளிவாகப் பதில் அளித்தார்.

“உலகில் சத்தியம் நிலவுகிறது. அதை ஒரு நாள் நிச்சயம் தரிசிக்கலாம்.”

சுவாமிகளின் ஒவ்வொரு வார்த்தையும் பால் பிரண்டனுக்கு மேலும் மேலும் தென்பளிக்கிறது.

“சுவாமி, யோக மார்க்கத்தில் பரிபூரணமாக நிலைத்து அதன் உண்மை நிலையை எனக்கு உணர்த்திக் காட்டக்கூடிய ஒரு குரு யோகியிடம் என்னை அனுப்பி வைப்பீர்களா?”

சட்டென்று கேட்டு விடுகிறார் பால் பிரண்டன். தமக்கொரு குருவைக் காட்டும்படி உலக குருவிடம் மன்றாடுகிறார்.

நீங்கள் விரும்பும் ஆத்ம சாந்தியை அளிக்கவல்ல மகான்கள் எனக்குத் தெரிந்த வரையில் இந்தியாவில் இருவரே உள்ளனர். ஒருவர் காசியில் காடுகளுக்கிடையில் வசிக்கிறார். அவரை நீங்கள் காண முடியாது. இது வரை வெகு சிலரே அவரை தரிசித்திருக்கின்றனர். அவரிடம் தங்களை அனுப்பிப் பயனில்லை. வெளி நாட்டினரை சீடராக ஏற்றுக் கொள்ள அவர் மறுத்து விடலாம்….”

கூறி முடிப்பதற்குள் பொறுமையிழந்து விடுகிறார் பால் பிரண்டன்.

“மற்றொரு மகான் இருப்பதாகக் கூறினீர்களே, அவர் யார்?”

“மற்றொருவர் தென்னாட்டில் தான் வசிக்கிறார். அவர் உயர்ந்த நிலையிலிருக்கும் ஒரு மகான். நீங்கள் அவரை நாடிச் சென்றால் பயனடையலாம் என்று எனக்குத் தோன்றுகிறது.”

“அவர் யார்?” ஆர்வத் துடிப்புடன் கேட்கிறார் பால் பிரண்டன்.

“அவரை மகரிஷி என்று அழைப்பார்கள். ஜோதி மலையான அருணாசலத்தில் அவர் வாசம் செய்கிறார்.  அம்மலை வட ஆற்காடு மாவட்டத்தில் இருக்கிறது. தேவையானால் அவருடைய ஆசிரமத்திற்கு எப்படிச் செல்ல வேண்டும் என்ற விவரங்களையெல்லாம் கூறுகிறேன்” என்றார் சுவாமிகள்.

ஆறாயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்து வந்த ஓர் ஆன்மீகப் பயணியை அன்புத் தெய்வம் ஆட்கொண்டது.

“சுவாமி, தாங்கள் அடியெனிடம் காட்டும் பரிவிற்கு நான் பெரிதும் கடைமைப்பட்டிருக்கிறேன். திருவண்ணாமலை ஆசிரமத்தைச் சேர்ந்த ஒரு சாது எனக்கு ஏற்கனவே அறிமுகமாகியிருக்கிறார்” எங்கிரார் பால் பிரண்டன்.

“அப்படியானால் நீங்கள் மறக்காமல் தீருவண்ணாமலைக்குப் போகிறீர்களா?” அன்புடன் விசாரிக்கிறார் சுவாமிகள்.

பால் பிரண்டன் சற்றுத் தயங்கி பதில் கூறுகிறார்.

“தென்னகத்தில் என் பயணம் முடிந்து விட்டது.  நாளை நான் சென்னையிலிருந்து புறப்படுவதற்கான ஏற்பாடுகள் பூர்த்தியாகி விட்டன…..” என்று இழுத்தார் பால் பிரண்டன்.

“அப்படியானால் தங்கள் பயணத் திட்டங்களை மாற்றிக் கொள்ளுங்கள். மகரிஷியை தரிசிக்காமல் நீங்கள் தென்னாட்டை விட்டுச் செல்லக் கூடாது”.

இந்த அன்புக்கட்டளையை மறுக்க முடியாமல் திணறினார் பால் பிரண்டன். சுவாமிகள் கோரியபடியே வாக்குறுதியும் அளித்தார்.விடைபெற்றுச் செல்லும் முன் சுவாமிகள் பால் பிரண்டனிடம், “நீங்கள் வீணாகக் கவலைப்பட வேண்டாம். நீங்கள் தேடி வந்ததை நிச்சயமாகக் கண்டு பிடிப்பீர்கள்” என்று ஆசி வழங்கி அனுப்பினார்.