ரமண சரிதம் – 20

1945-ம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் ஒரு நாள் எச்சம்மாள் சமையலை முடித்து விட்டு, பகவானுக்கும், பக்தர்களுக்கும் உணவளித்து விட்டு, வழக்கப்படி மாலையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அவருக்குத் திடீரென்று உடலில் என்னவோ வேதனை செய்தது. தொண்டை வறண்டு, தாகம் எடுத்தது. தண்ணீ ர் அருந்தினார். ஆனால், வேதனை அடங்க வில்லை.

மார்பு படபடவென்று அடித்துக் கொண்டது. அப்படியே படுத்து விட்டார். பிறகு நடமாட்டமே இல்லை.

இரண்டு நாட்களுக்கெல்லாம் நிலைமை மோசமாகியது. பேச்சு அடங்கியது. கண்கள் செருகிக் கொண்டன. நினைவு தப்புவதும் திரும்புவதுமாக இருந்தது.

மாலை நான்கு மணி இருக்கும். அவருக்கு சரியான நினைவு இருக்கிறதா என்று அறிவதற்காக, அருகிலிருந்த ஓர் அம்மாள், “இன்னிக்கு பகவானுக்கு சாப்பாடு போகலே” என்று குனிந்து, எச்சம்மாளின் காதருகில் கூறினாள். அப்போது சட்டென்று கண்களைத் திறந்து, “என்ன, நிஜமாகவா?” என்பது போல் இருபுறமும் வெறிக்கப் பார்த்தார் எச்சம்மாள். பெரும் துயரத்தின் சாயல் அவர் முகத்தில் படர்ந்தது. மரணத்தின் தலைவாயிலில் நின்றிருந்த நிலையிலும், அப்படியோர் அபசாரம் நடந்து விட்டதை நினைத்து வேதனைப் பட்டார் அவர். அப்போது அருகிலிருந்த உறவினள் ஒருத்தி, “இல்லெ அத்தை! பகவானுக்கு சாப்பாடு வழக்கப்படி கொடுத்தனுப்பியாச்சு” என்று கூறிய பிறகுதான் எச்சம்மாள் முகத்தில் சற்ரு அமைதி நிலவியது.

அன்று இரவு எச்சம்மாளுக்கு சுவாசம் கண்டு விட்டது. மூச்சு விட முடியாமல் திண்டாடினார். நா குழறிப் போயிற்று. ஏதேதோ பிதற்றத் தொடங்கினார். யாரோ ஒருவர் ஓடிப் போய் பகவானிடம் செய்தியைக் கூறினார். ஆசிரமத்திலிருந்த டாக்டர் வந்து பரிசோதித்துப் பார்த்தார். ஒன்றும் பயனில்லை. அவர் கையை விரித்து விட்டு, வருத்தத்துடன் திரும்பி விட்டார்.

அன்று மாலையிலிருந்து பகவான் யாருடனும் அதிகம் பேசாமல், கண்கள் பேரருளைப் பொழிய, உடலைச் சுற்றியும்பேரொளி படர, ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட்டிருந்தார். அதைக் கண்ட பக்தர்கள், ஏதோ ஒரு ஜீவனைக் கடையேற்றவே பகவான் தவநிலை மேற்கொண்டிருப்பதாக நினைத்தார்கள். அன்று இரவு எச்சம்மாளின் உடல்னிலையைப் பற்றி பகவானின் காதில் போட்ட கணத்திலிருந்து அந்த அம்மாளின் சிரமமெல்லாம் சிறிது சிறிதாகக் குறைந்தது. மூச்சு லேசாக இயங்க, அது மெள்ள அடங்கியது. தூங்குவது போலவே காணப்பட்ட எச்சம்மாள், சற்று நேரத்தில் மீளாத் துயிலில் ஆழ்ந்து விட்டார்.

எச்சம்மாளின் உடலை கங்கை நீரில் குளிப்பாட்டினார்கள். திருமேனிக்கு திருநீறு பூசினார்கள். உருதிராட்ச மாலைகளை அணிவித்தார்கள். கண்ணீருக்கிடையே, எரியூட்டினார்கள்.

எச்சம்மாளின் மறவு விதிக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது. இனி, அந்த அம்மாளை அது வாட்டி வதைக்க முடியாதே! துன்பமே தீண்ட முடியாதபடி தனி உலகிற்குத் தப்பிச் சென்று விட்டாரே!

எச்சம்மாளின் மரணச் செய்தியைக் கெட்ட பகவான், “என்னமோ, இந்த உலகத் தொல்லைகளிலிருந்து ஒரு வழியாக்ப போய்ச் சேர்ந்து விட்டாள்” என்று கூறினார்.

அப்போது அருகிலிருந்த சூரி நாகம்மா என்ற ஆந்திர பக்தை, “சுவாமி, இனி தினமும் சாப்பாடு வருவது நின்று விடுமே” என்று கண்கலங்கக் கூறினார்.

“ஏன் அப்படிச் சொல்றே? அதான் முதலியார் பாட்டி இன்னும் உயிருடன் இருக்காளே” என்று கூறினார் பகவான்.

முதலியார் பாட்டி, பகவானுக்கு செய்து வந்த அன்புத் தொண்டு மற்றொரு பக்திக் காவியம்.

அலங்காரத்தம்மணியைத்தான் எல்லோரும் “முதலியார் பாட்டி” என்று அழைத்தனர். அவர் காரைக்காலுக்கு அருகிலுள்ள தில்லையாடியில் பிரந்தவர். தொண்டை மண்டல முதலியார் வகுப்பைச் சேர்ந்தவர். அவருடைய பையன் சுப்பையா முதலியார், மருமகல் காமாட்சி அம்மாள்.

தெய்வ பக்தி நிறைந்த அந்தக் குடும்பம், அவ்வூரிலிருந்த ஒரு வயோதிக சாமியாருக்கு அன்புப் பணி புரிந்து வந்தது. அமுத மொழியும், நல்லாசியும் கூறிநார். அவர் இறுதிக் காலத்தில், அலங்காரத்தம்மணி, “சாமி, எங்களுக்கெல்லாம் ஒரு வழி சொல்லாமே போறீங்களெ, நீங்க மறைஞ்சப்புறம் நாங்க எப்படி வாழப் போகிறோமோ தெரியலையெ, எங்க எதிர்காலம் எப்படியிருக்கும், சொல்லுங்க சாமி” என்று மன்றாடிக் கெட்டார்.

உயிர் பிரியப் போகும் தருணத்தில் அந்தச் சாமியார், “கவலைப்படாதீங்க தாயே, நீங்க அருணாசலம் போங்கம்மா, உங்களுக்கு ஒரு குறைவும் வராது” என்று சொல்லீ விட்டு கண்ணை மூடினார் அவர்.

சாமியார் சொன்னதை தெய்வ வாக்காக மதித்து, அந்த ம்மால் தன் மகனுடனும் மருமகளுடனும் திருவண்ணாமலை வந்து சேர்ந்தார். எச்சம்மாள் 1907-ம் ஆண்டு அங்கு வந்து சேர்ந்தார். மூன்று ஆண்டுகள் கழித்து முதலியார் பாட்டி வந்தார். எச்சம்மாள் தினமும் ரமண பகவானுக்கு உணவு சமைத்து எடுத்துக் கொண்டு சென்றதைக் கண்ட அம்மனி, தானும் அவ்வாறே செய்ய ஆரம்பித்தார். பிள்ளையு, நாட்டுப்பெண்ணும் அவருடன் முழு மனத்துடன் ஒத்துழைத்தனர். நாள் ஆக ஆக அவர்கள் இல்லத்திலும் பக்தர் கூட்டம் பெருகத் தொடங்கியது. அங்கு வந்த அத்தனை பேருக்கும் சாப்பாடு கிடைத்தது. அலங்காரத்தம்மணியிடம் பணம் இல்லை. எல்லையற்ர அன்பு இருந்தது. பரந்த உள்ளம் இருந்தது.

சில வருடங்கள் சென்றதும், சுப்பையவுக்கு இல்லற வாழ்க்கை கசந்து விட்டது. அருள் தொண்டு செய்ய பழக்கப்பட்டவர், திருபனந்தாள் மடத்தில் சேர்ந்து காஷாயம் மேற்கொண்டு சந்நியாசி ஆகி விட்டார். அவர் தாயையும், அருமை மனைவியையும் விட்டு விட்டு மடத்தில் சேர்ந்து சமயப் பணி ஆற்றி வந்தார்.

காமாட்சி அம்மாள், கணவனின் இந்த எதிர்பாராத முடிவைக் கண்டு நிலை குலையவில்லை. மன உறுதியுடனும், உள்ளத் தூய்மையுடனும் மாமியாருக்கு துணையாய் பகவானின் சேவையில் தன் துன்பத்தை மறந்திருந்தாள்.

முதலியார் பாட்டி பகவானிடம் மிக உரிமையோடு பழகுவார். சாப்பாட்டைத் தானே எடுத்துக் கொண்டு போய் அவருக்குப் பறிமாறுவார். இலையில் ஒரு பிடி சோறும், கறியும் வைத்து விட்டு, சாப்பிடு சாமி, என்று அன்பொழுகக் கூறுவார்.

ஒரு நாள் பகவான் “என்ன பாட்டி இது! இத்தனை வச்சா எப்படி சாப்பிடறது?” என்று உரிமையுடன் கடிந்து கொண்டார். உடனே பாட்டி “என்னா சாமி, எவ்வளவு வெச்சுட்டென்? கொஞ்சம் தானே இருக்கு, சாப்பிடு” என்று பதில் கூறினார். பகவான் விடவில்லை. “இது மட்டும்தானா, மத்ததையெல்லாம் சாப்பிட வேண்டாமா? என் வயத்துலே எல்லாத்துக்கும் இடம் இருக்குமா?” என்று கேட்பார். உடனே பாட்டி, “ஏன் இருக்காது? எல்லாத்துக்கும் மனசுதானே காரணம்?” என்று சட்டென்று கூறி விடுவார். பகவான் சிரிப்புடன் அருகிலுள்ளவர்களிடம், “பார்த்தீர்களா, என் உபதெசத்தை என் கிட்டேயே திருப்பிச் சொல்லிவிட்டுப் போறா இந்த பாட்டி” என்று வேடிக்கையாக குறிப்பிட்டார்.

முதலியார் பாட்டி திருவண்ணாமலைக்கு வந்து இருபது வருடங்கள் ஆகி விட்டன. வயது முதிர்ச்சியால் தள்ளாடி நடக்க ஆரம்பித்தார். மருமகள் காமாட்சியும் இறந்து விட்டதால், தன்னந்தனியாகத் திண்டாடிக் கொண்டிருந்தார். கையிலே பணமும் இல்லை. பாட்டியின் நிலையைக் கண்டு ஆசிரமத்திருந்தவர்கல் பரிதாபப்பட்டார்கள்.

பகவானின் சகோதரரான் நிரஞ்சனானந்த சுவாமிகளும், குஞ்சு சுவாமிகளும், பாட்டியிடம் எத்தனையோ சொல்லிப் பார்த்தார்கள். “பாட்டி, உனக்கோ, ரொம்ப வயசாயிடுத்து, நீ ஏன் சிரமப்பட்டு பகவானுக்கு சமைச்சுப் போட்டிண்டிருக்கெ? ஆசிரமத்திலே ரொம்ப பேர் இருக்கா. அவா மாதிரி நீயும், இங்கேயே இருந்துடு. வேளா வேளைக்குச் சாப்பிட்டு விட்டு, பகவானுக்கு எதிரே கண்ணை மூடிண்டு தியானம் பண்னிண்டு இரேன். அல்லது நீ இருக்கிற இடத்திலே கிருஷ்ணா ராமாவென்று இரு. நாங்கல் உனக்கு சாப்பாடு அனுப்புகிறோம் என்று புத்திமதி கூறியதைக் கேட்ட பாட்டி வருத்தப்பட்டாள்.

“என்ன அப்படி சொல்லிட்டீங்க? என்ன கஷ்டம் வந்தாலும் நான் பகவானுக்கு சாப்பாடு கொண்டு வந்து போடற புண்ணிய காரியத்தை நிறுத்தவே மாட்டேன். கையிலே துட்டு இல்லைன்னா, நாலு வீட்டுக்குப் போய் பிச்சை எடுத்து, சமையல் செய்து பகவானுக்கு போட்டு விட்டுத்தான் நான் சாப்பிடுவேன். என்னாலெ சும்மாயிருக்க முடியாது” என்று கண்கலங்கக் கூறி விட்டு அங்கிருந்து போய் விட்டார். பாட்டியின் திட வைராக்கியத்தையும், தளறாத பக்தியையும் கண்டு பிர்மைத்துப் போன பக்தர்கள், அவருக்கு அவ்வப்போது செலவுக்குப் பணம் கொடுத்து உதவினார்கள். வசதியாகத் தங்குவதற்கு வீடு தெடித் தந்தார்கள்.

பாட்டிக்கு வர வர கண் பார்வை மங்க ஆரம்பித்தது. கையில் தடியை ஊன்றிக் கொண்டு தட்டுத் தடுமாறி நடந்து கொண்டிருந்தார். தாயின் இறுதிக் காலத்தில் அவளுக்குப் பணிவிடைகள் செய்யவும், அவர் ஏற்றுக் கொண்டிருந்த விரதம் நிறைவேற உதவி புரியவும், சந்நியாசியாக சமயப் பணி புரிந்து கொண்டிருந்த மக்ன சுப்பையா திருவண்ணாமலைக்கு வந்து சேர்ந்தார். இனி வீடு திரும்பவே மாட்டான் என்ற எந்த மகனைப் பற்றி நினைத்திருந்தாரோ, அவர் திரும்பி வந்து தன் கடைசி காலத்தில் தன்னுடன் இருந்த பாட்டிக்குப் பெரும் ஆறுதலாக இருந்தது.

பாட்டியின் நடமாட்டம் குறைந்து கொண்டே வந்தது. கண் சுத்தமாகத் தெரியவில்லை. பகவானுக்கு சாப்பாடு கொண்டு போகவும் அவரால் முடியவில்லை. அதனால், யார் யாரிடமோ கொடுத்து அனுப்பினார். தன் கையால் பகவானுக்குப் பரிமாற முடியவில்லையே என்று அவருக்குத் தணியாத குறை இருந்தது.

ஒரு நாள் யாரோ ஒருத்தன் வந்து பாட்டியிடம் பகவான் ரொம்பவும் இளைத்து விட்டதாகக் கூறி விட்டான். அவ்வளவுதான். பாட்டிக்கு வீட்டில் இருப்பே கொள்ளவில்லை. தன் கையால் சாப்பாடு போடாததால் தான் பகவான் இளைத்து விட்டதாக அவர் எண்ணினார். தான் பெரிய பாவம் செய்து விட்டதாக வருத்தப்பட்டார்.

ஒரு நாள் சிரமப்பட்டு எப்படியோ ஆசிரமத்திற்கு வந்து சேர்ந்தார் முதலியார் பாட்டி. பகவான் இருக்குமிடம் தெடிச் சென்று, வெகு அருகில் போய் நின்று, உற்றுப் பார்த்தார். “அடப்பாவமே, உடம்பு ரொம்ப இளைச்சுப் போச்சே! அவரு சொன்னது நிஜம் தான்” என்று மிகவும் வேதனையுடன் கூறினார். பகவான் சிரித்துக் கொண்டே “இல்லை பாட்டி! உனக்கு யாரோ தப்பா சொல்லியிருக்கா, நான் சாதாரணமாகத்தானே இருக்கேன்?” என்று சொல்லி விட்டுப் போய் விட்டார். பாட்டி சமாதானம் அடையவில்லை. தியான மண்டபத்திற்கு வந்து பகவானுக்கு முன்னாள் வெகு நெரம் அமர்ந்திருந்தார். அருகில் இருந்தவர்களிடம் பகவான் உடம்பு எப்படியிருக்கிறது என்று விசாரித்துக் கொண்டிருந்தார், பாவம்!

வழக்கப்படி பகவான் எழுந்த போது எல்லோரும் எழுந்தார்கள். பாட்டியும் எழுந்து மெள்ள நடந்து வாசற்படியின் அருகில் போய் நின்று கொண்டார். அங்கு வந்த பகவான் கவலையோடு பாட்டி நிற்பதைக் கண்டு அவரெதிரில் சிறிது நேரம் நின்றார். பாட்டியின் மனத்தை அரித்த வேதனைத் தணிக்கும் வகையில் கருணை வள்ளல் மீண்டும், கூறினார்: “பாட்டி, நான் இளைச்சுப் போயிட்டெனான்னு நன்னா பாரு, எத்தனை ஜோரா இருக்கேன் தெரியுமா? பாவம், உனக்குத்தான் கண் தெரியலை, எப்படிப் பார்ப்பெ?” என்றூ கூறி விட்டு மெள்ள நகர்ந்து விட்டார்.

எச்சம்மாள் இறந்த நான்கு ஆண்டுகளில் முதலியார் பாட்டியும் கண்ணை மூடி விட்டாள். மறைவதற்கு சில மாதங்கள் முன்பு யாரையோ துணைக்கு அழைத்துக் கொண்டு பாட்டி, ஆசிரமத்திற்கு வந்து விட்டாள். அவள் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. சரி, பகவானைப் பார்த்து விட்டேன். அந்த திருஷ்டி என் பாவத்தையெல்லாம் போக்கி விடும். எனக்கு நல்ல கதி நிச்சயம் கிடைக்கும், என்றாள். அதில் என்ன சந்தேகம்?

எச்சம்மாளும், முதலியார் பாட்டியும் வருவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே, ரமண பகவான் திருவண்ணாமலைக்கு வந்த புதிதில், கீரைப் பாட்டி என்ற பெண் ரத்தினம், பகவானுக்கு உணவு, கீரை சமைத்து குழந்தைக்குத் தருவது போல் கொடுத்துக் கொண்டிருந்தாள். மலையிலிருக்கும் கீறை வகைகளைப் பறித்து, அரிசி, பருப்புக்கு பலரிடம் யாசித்து, அதில் உணவு சமைத்து பகவானுக்கு அளித்து வந்தாள் அந்தப் பெண்மணி.  சில நாட்கள், யாரும் உதவி செய்யா விட்டால், இருந்த கொஞ்சம் அரிசியில் கஞ்சி வைத்து, பகவானுக்கு கொடுத்து சாப்பிடு சாமி என்பாள். என்ன ஒரு இதயம்! அந்தக் கீரைப்பாட்டி இறந்த போது கண் கலங்கினார் ரமண பகவான். நாட்டின் பல பாகங்களிலிருந்து பக்தர்கள் தம்மை தேடி வந்து பணிவிடை செய்வதற்கு முன்பே, பெற்ற தாயினும் மேலாக அன்பு காட்டி, பல வீடுகளில் பொருள் யாசித்து, சமையல் செய்து பகவானுக்கு உணவளித்த அந்த பெண் தெய்வத்தை எப்படி மறக்க முடியும்?