ரமண சரிதம் – 19

பம்பாய் ராஜதானியிலிருக்கும் கோகர்ணம் சென்றாள் லட்சுமி. தேவாலயங்களுக்கு சென்று வழிபட்டாள். பல சாதுக்களைத் தரிசித்தாள். அவர்களிடம் அருளுபதேசம் பெற்றாள். அங்கிர்ருந்து வட நாட்டில் வேறு சில இடங்களுக்கு பயணமானாள். மகான்களின்சேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதன் மூலம், நடந்ததையெல்லாம் மறக்க முயன்றாள். முடியவில்லை. உள்ளத்தை அழுத்திய பாரம் நீங்கவில்லை. நெஞ்சைப் பிழிந்த துயரம் மறையவில்லை. மனச்சாந்தி திரும்பவே இல்லை. ஊரைப் பார்க்கத் திரும்பி வந்து விட்டால் லட்சுமி அம்மாள்.

அருணாசல மலையில் வசித்து வந்த பிராம்மண சுவாமியைப் பற்றி அப்போதுதான் முதன் முதலாக லட்சுமி அம்மால் கேள்விப்பட்டார். “அந்த மௌன சாமியாரைத் தரிசித்தாலே துக்கமெல்லாம் மறைந்து போய் விடும். ஒளி நிறைந்த அவரது கண் பார்வை, நம் உள்ளத்தில் அமைதியை நிலவச் செய்யும். அவர் ஒரு மகான். சந்தேகமில்லை” என்று யாரோ சொன்னது லட்சுமி அம்மாளுக்கு சற்று நம்பிக்கையளித்தது. உடனே திருவண்ணாமலைக்குப் புறப்பட்டு விட்டார். வருடம் 1907. துணைக்கு ஒருத்தியை அழைத்துக் கொண்டு, மலையேறி, நேரே ரமண பகவான் அமர்ந்திருந்த குகைக்குச் சென்றார். அமைதியாக அமர்ந்திருந்த ஞான குருவைத் தரிசித்தார். அவரது மலரடிகளில் விழுந்து வணங்கி விட்டு, ஒரு வார்த்தையும் பேசாமல் எதிரே நின்றார். அசையாமல் அப்படியே ஒரு மணி நேரம் நின்றிருந்தார். பகவானின் அருள் நோக்கால் அம்மாளின் உள்ளத்தில் எல்லையற்ற அமைதி குடி கொண்டது. அதுவரை அனுபவித்தறியாத ஆனந்தத்தில் மிதந்தார். அந்த இடத்தை விட்டு நகரவே அம்மாளுக்கு மனம் இல்லை. இறுதியில் சிறிதும் மனமின்றி கீழிறங்கி வந்தார்.

இருள் கவிந்த பாதையில் ஒளி படர்ந்தது. மனத்திலிருந்த மருள் அகன்று அருள் சூழ்ந்தது. நம்பிக்கை மலர்ந்தது. தினமும் மலையேறிச் சென்று, மகாஅனின் சந்நிதியில் சிறிது நேரம் தங்கி, புத்தொளியும், புதுத் தென்பும் பெற்று வந்தார் லட்சுமி அம்மாள்.

அதற்குப் பிறகு தன் துயரக் கதையைப் பிறரிடம் சொல்லும் போதெல்லாம் அவருக்குத் துக்கம் தொண்டையை அடைக்கவில்லை. கண்ணீர் பெருகவில்லை. இதயம் குமுரவில்லை. எல்லாம் லேசாகி விட்டது. 

அவர் வாழ்வில் ஓர் அற்புதம் நிகழ்ந்து விட்டது. அமைதி தேடி அலைந்தவருக்கு அருணாசல பகவான் அடைக்கலம் தந்து விட்டார். தன் வாழ்நாளையெல்லாம் அவர் நிழலிலேயே கழித்து விடுவது என்று அந்த அம்மாள் உறுதி பூண்டார். அவருக்குத் தன் கையால் சமைத்து உணவு அளிப்பது என்று ஒரு புனித விரதமும் மேற்கொண்டார்.

பகவானாலும், பக்தர்களாலும், “எச்சம்மாள்’ என்று அன்புடன் அழைக்கப்பட்ட லட்சுமி அம்மாள் தினமும் சாப்பாடு தயார் செய்து, பகவான் இருக்கும் இடம் தேடிச் சென்று, அவருக்கும், ஆசிரமவாசிகளுக்கும் உணவளித்து வந்தார். அவர்கள் சாப்பிட்ட பிறகே தான் உண்பது என்ற விரதத்தை மிகத் தீவிரமாகக் கடைப் பிடித்து வந்தார்.

சுகமோ, துக்கமோ, எச்சம்மாள் பகவானிடம் சென்று முறையிடுவார். அவரது தூய பக்தியைக் கண்டு மனமிரங்கிய பகவான், எல்லா செய்திகளையும் அக்கறையோடு கேட்பார். அவ்வப்போது ஆறுதலாக இரண்டு வார்த்தைகள் கூறுவார்.

பகவானைக் கலந்தாலோசித்த பின்னர், எச்சம்மாள், செல்லம்மாள் என்ற பெண்ணை சுவீகாரம் எடுத்துக் கொண்டார். அவளுக்கு நல்ல பையனாகப் பார்த்து திருமணம் செய்து வைத்தார். அவர்களுக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. தன் பேரப்பிள்ளையை எடுத்துக் கொஞ்சினார். ரமணர் கொடுத்த செல்வமானதால் “ரமணன்” என்று பெயர் சூட்டினார். அவன் மழலை மொழியைக் கேட்டு மகிழ்ந்தாள்.

எச்சம்மால் சிரித்து மகிழ்ந்தது பொல்லாத விதிக்கு எப்படித்தான் தெரிந்ததோ? எங்கிருந்தோ மீண்டும் ஓடி வந்தது!

ஓரு நாள் வீட்டில் தோத்திரப் பாடல்களை மெய்க் மறந்து பாடிக் கொண்டிருந்த எச்சம்மாளுக்கு ஒரு தந்தி வந்தது. அது பயங்கரச் செய்தியைத் தாங்கி வந்தது. அந்தத் தந்தியை கிராமத்திலிருந்த எச்சம்மாளின் மாப்பிள்ளை அடித்திருந்தார்.

“செல்லம்மாள் இறந்து விட்டாள்”

ஈந்தத் திடீர் பேரிடியை எச்சம்மாளால் தாங்க முடியவில்லை. செல்லம்மாளுக்கு உடல் நலம் சரியில்லை என்ற செய்தி கூட அவௌர்க்குத் தெரியாததால், பெண்ணின் மரணச் செய்தி தாயை திடுக்கிட வைத்தது. தந்தியை எடுத்ட்துக் கொண்டு நேரே பகவானிடம் ஓடினார். வேறு எங்கே பொவார், பாவம்?

தந்தியை வாங்கிப் படித்த பகவான் கண் கலங்கினார். அவரது விழியோரத்தில் துளிர்த்த கண்ணீர், எச்சம்மாளின் துயரத்தைத் துடைத்தது. முன்பு, மக்கள் மாண்ட போது துயரத்தில் மூழ்கிப் போனவள், தற்போது ஒரு நொடியில் மனத்தைத் தேற்றிக் கொண்டாள். பகவானின் ஆசியும் அருட்பிரசாதமும் அவருக்கு அத்தகய மனப் பக்குவத்தை ஏற்படுத்தித் தந்திருந்தன.

அன்றைக்கெ கிராமத்திற்குச் சென்று, பேரப்பிள்ளை ரமணனை எடுத்து வந்து ரமண பகவானின் அன்புக் கரங்கலில் தவழ விட்டார் எச்சம்மாள். பகவனுக்கு மீண்டும் கண்கள் பனித்தன. இனி அந்தப் பேரனுக்கும், பாட்டிக்கும் பகவாந்தானே கதி? அவரது ஆசி இருக்கும் வரை தனக்கு ஏது குரை என்று நினைத்தாள் எச்சம்மாள். அந்த நம்பிக்கையே அவரது வாழ்க்கைக் கப்பலின் நங்கூரமாக அமைந்தது. இனி எத்தனை பயங்கரமான புயல் வீசினாலும், துன்பமும் துயரமும் தொடர்ந்து வந்தாலும், எந்த அதிர்ச்சி ஏற்பட்டாலும் எச்சம்மாளால் தாங்கிக் கொள்ள முடியும்!

எச்சம்மாளுக்கு எந்நெரமும் பகவானின் சிந்தனைதான். அதனால் அவருக்கு பல ஆன்மீக அனுபவங்கள் ஏற்பட்டிருக்கின்றன.

ஒரு சமயம் விரூபாட்சி குகையில் இருந்த பகவானுக்கு சாப்பாடு எடுத்துக் கொண்டு மலையேறிக் கொண்டிருந்தார் எச்சம்மாள். சத்குரு சுவாமி குகையைக் கடந்து சென்ற போது, பாதையில் இரண்டு பேர் நின்று பேசிக் கொண்டிருப்பது போல் அவருக்குத் தோன்றியது. ஒருவர் ரமண மகரிஷியைப் போலவும், மற்றவர் யாரோ ஒரு பக்தர் போலவும் இருந்தனர். அங்கு நிற்காமல் எச்சம்மால் குகையை நோக்கி நடக்க ஆரம்பித்தார். அப்போது “இங்கே இருக்கும் போது மேலே என்னத்துக்குப் போகிறது?” என்ற குரல் கேட்டது. பகவானின் குரல் போல் இருக்கிறதே என்று துணுக்குற்ற எச்சம்மாள் திரும்பிப் பார்த்தார். அனால், அங்கு யாருமே இல்லை. சுற்றுமுற்றும் பார்த்தார். ஒருவருமே கண்ணுக்குத் தென்படவில்லை. அந்த அம்மாளை ஒருவித பயம் பறறிக் கொண்டது.  உடலெல்லாம் வியர்த்தது. அந்த நடுக்கத்துடனேயே விரூபாட்சி குகையை அடைந்தார்.

அப்போது ரமண பகவான், வட நாட்டிலிருந்து வந்திருந்த ஒரு சாஸ்திரியுடன் பேசிக் கொண்டிருந்தார். எச்சம்மாளின் நடுக்கத்தைக் கண்ட ஒருவர், அவரிடம் காரணத்தை விசாரித்தார். வரும் வழியில் தான் கண்டதையும் கேட்டதையும் கூறினார் எச்சம்மாள்.

அதைக் கேட்ட சாஸ்திரி, “சுவாமி நீங்கள் என்னுடன் இங்கே பேசிக் கொண்டிருக்கும் போதே, இந்த அம்மாளுக்கு மலையில் தரிசனம் தருகிறீர்களே, எனக்கு மட்டும் அந்த அனுக்கிரகம் இல்லையே” என்று குறைப்பட்டுக் கொண்டார். அந்த பக்தரின் மனக்குறையைப் போக்குவதற்காக பகவான், “அதெல்லாம் அவளுடைய பிரமை. எப்போடும் அவள் என்னையே நினைத்துக் கொண்டிருப்பதால் அப்படியெல்லாம் தோன்றுகிறது” என்று சமாதான்மாகக் கூறி விட்டார்.

தன்னலமற்ற தொண்டே எச்சம்மாளின் மதம், வழிபாடு எல்லாம். வடநாட்டு குரு ஒருவர் மனத்தை ஒருநிலைப்படுத்தி தியானத்தில் ஆழ்ந்திருக்கும் யோகத்தை அவருக்குக் கற்றுத் தந்திருந்தார். தன்னை மறந்த நிலையில், ஒரு நாள் முழுதும் தியானத்தில் ஆழ்ந்திருப்பார். சில சமயம் அவருக்கு ஜோதி தரிசனம் ஆவதும் உண்டு. இதைப் பற்றி ஒரு நாள் எச்சம்மாள் பகவானிடம் கூறி விளக்கம் கூட கேட்டார். அதற்கு பகவான், “இதெல்லாம் உனக்குத் தேவையில்லை. அந்த ஒளி தரிசனம் உன் லட்சியமாக இருக்கக் கூடாது. உன்னையே நீ அறிந்து கொள்ள வேண்டும். அதுதான் முக்கியம்” என்றார். அதற்குப் பின்னர், எச்சம்மாள் ஆத்ம விசாரத்தில் தீவிரமாக மனத்தைச் செலுத்தினார். பகவானின் அருளாசியால் “நான் யார்?” என்பதை எளிதாக அறிந்து கொண்டு விட முடியும் என்ற நம்பிக்கை அவருள் வேறூன்றி விட்டது.

எச்சம்மாளுக்கு தந்தையிடமிருந்து பணம் வந்து கொண்டிருந்தது. அவர் இறந்த பிறகு அந்த அம்மாளின் சகோதரர் தவறாமல் பணம் அனுப்பி வந்தார். அந்தப் பணத்தையெல்லாம் பகவானின் கைங்கரியத்திற்கே செலவு செய்தார் அந்த உத்தமப் பெண்மணி. அவர் குடியிருந்த வீட்டில் எப்போதும் பக்தர்களின் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். அவர்களை உபசரித்து, உணவளிப்பதை பகவானுக்குச் செய்யும் தொண்டாகவே மதித்து வந்தார் அவர்.

பகவான் எச்சம்மாளின் மீது அன்பைப் பொழிந்தார். அவரைப் பற்றி யார் குறை கூறினாலும் ஒப்புக் கொள்ள மாட்டார்.

ஒரு நாள் ஆசிரமத்தின் சமையல் அறையில் பகவான் காய்கறி அரிந்து கொண்டிருந்த போது, ஒருவர் எச்சம்மாளின் சமையலைப் பற்றிக் குறை கூறினார். உடனே பகவான் அவர் பக்கம் திரும்பி, “இதோ பாரு, அவ சமையல் உங்களுக்குப் பிடிக்கா விட்டால் நீங்க சாப்பிட வேண்டாம். எனக்கு அவ கொண்டு வந்து ஆசையா கொடுக்கிறது அமிர்தமாயிருக்கு. நான் ஆனந்தமா சாப்பிடறேன்” என்று கூறினார்.

ஆசிரமத்தில் எல்லோரும் சாப்பிட உட்கார்ந்தால் பகவான் “சாப்பிட ஆரம்பிக்கலாம்” என்று சைகைக் காட்டிய பிறகுதான் அனைவரும் சாப்பிடத் தொடங்குவார்கள். ஒரு நாள் எல்லொரும் பகவானின் சைகைக்காகக் காத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், பகவான் கன்னத்தில் ஒரு கையும், இலையில் ஒரு கையுமாக பேசாமல் அமர்ந்திருந்தாரே தவிர “சாப்பிடலாம்” என்று கூறவேயில்லை. அவர் ஏன் இப்படி இருக்கிறார் என்பது யாருக்குமெ புரியவில்லை.

சற்றைக்கெல்லாம் ஒரிருவருக்குக் காரணம் விளங்கி விட்டது. எச்சம்மாள் கொண்டு வந்து வைத்திருந்த சாப்பாட்டை பகவானுக்கும், பிறருக்கும் பறிமாற மறந்தது அப்போதுதான் அவர்களுக்கு நினைவிற்கு வந்தது. எல்லோரும் சாப்பாட்டைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்த போது, பகவான் மட்டும் அந்த தூய பக்தியின் அன்பு உள்ளத்தை நினைத்துக் கொண்டிருந்தார்.

எச்சம்மாளின் சாப்பாடு பரிமாறப்பட்ட பிறகுதான் “சாப்பிடலாம்” என்று அனுமதி தந்தார் பகவான்.

ஒரு நாளா, இரண்டு நாளா, முப்பத்தெட்டு ஆண்டுகல் எச்சம்மாலின் அன்புத் தொண்டு தொடர்ந்து நடைபெற்று வந்தது. ஆனால், இந்த உலகில் எந்தப் பணியும் ஒரு நாள் முடிந்துதானே ஆக வேண்டும்?