ரமண சரிதம் – 18

ஒரு சமயம் திருவண்ணாமலையில் நடைபெற்ற சைவ சித்தாந்த மகாநாட்டில் கணபதி முனிவரைப் பேசும்படி அழைத்தார்கள். அவர் திருவண்ணாமலைக்குப் புதிதாக வந்திருந்த சமயம் அது. அவருக்கு சைவ சித்தாந்தத்தைப் பற்றி அப்போது ஒன்றுமே தெரியாது. மகாநாட்டை ஏற்பாடு செய்திருந்தவர்களோ, “கணபதி சாஸ்திரிகள் சைவ சித்தாந்தத்தைப் பற்றி விரிவாகப் பேசப் போகிறார்” என்று விளம்பரப்படுத்தியிருந்தார்கள்.

அவர் பேச வெண்டிய நாள் வந்தது.  காலையில் பகவானிடம் சென்று, “எனக்கு சைவ சித்தாந்தத்தைப் பற்றி பேச அழைத்திருக்கிறார்கள். என்ன செய்வது என்றே புரியவில்லை” என்றார். பகவான் “சிவஞான போத”த்தை எடுத்து, சில பகுதிகளைப் படித்துக் காட்டி, பொருள் கூறி விளக்கினார். பின்னர், சைவ சித்தாந்தத்தின் சாரத்தை சுருக்கமாக எடுத்துரைத்தார். அது போதும் அவருக்கு.

மகாநாட்டில் கணபதி முனிவரின் பேச்சுதான் மிகச் சிறப்பாக இருந்தது. தாமே செய்யுட்களை இயற்றி, தமிழில் அரியதொரு சொற்பொழிவாற்றி விட்டார். அவருடைய புலமையையும், மதி நுட்பத்தையும் கண்டு அத்தை பேரும் வியந்தார்கள்.

மகாநாடு முடிந்த பிறகு கணபதி முனிவர் பகவானிடம் வந்து, “உண்மையில் இன்று நான் பேசவேயில்லை. எனக்கு ஒன்றுமே தெரியாது. எல்லாம் பகவானின் அனுக்கிரக விசேஷம் தான். இதுவரை சைவ சித்தாந்தத்தையே படிக்காத எனக்கு அதைப் பற்றியெல்லாம் ரொம்ப நாட்களாகத் தெரிந்து வைத்திருப்பது போல் மனத்தில் தோன்றியது” என்றார்.

ஆசிரமத்திற்கு கணபதி முனிவர் வந்த பிறகுதான் பகவானுக்கு சமஸ்கிருத மொழியில் பெரும் ஆர்வம் ஏற்பட்டது. வேத சாஸ்திரங்களைப் பற்றியும், இதர காவியங்களைப் பற்றியும், கணபதி முனிவரிடம் அடிக்கடி பேசி, பயனுள்ள பல ஆராய்ச்சிகள் செய்திருக்கிறார் மகரிஷி. சமஸ்கிருத சுலோகங்கள் இயற்றி இலக்கணப் பிழையில்லாமல் இருக்கிறதா என்று கணபதி முனிவரிடம் கேட்பது வழக்கம். அருணாசல பஞ்சரத்னம் என்ற சமஸ்கிருதக் கவிதைகளை இயற்றும்படி மகரிஷியைத் தூண்டியதே காவிய கண்ட கணபதி முனிவர்தான். அப்போது இயற்றப்பட்ட பல பாடல்கள், ஆசிரமத்தில் காலை வேளையில் நடைபெற்ற பாராயணத்தின் பொது பாடப்பெற்றன.

முதலில் “சாஸ்திரிகளே” என்று கணபதி முனிவரை அழைத்துக் கொண்டிருந்தார் பகவான். ஒரு நாள் கணபதி முனிவர், தம்மை சாதாரணமாகவே அழைக்கும்படி கேட்டுக் கொள்ளவே, எல்லோரையும் போல் தாமும் அவரை “நயனா” என்றே அழைப்பதாகக் கூறினார். “நயனா” என்றால் தெலுங்கில் தந்தை என்று பொருள். அந்த சொல்லில் அன்பும், கனிவும், மதிப்பும் ஒருங்கே அடங்கியிருந்தது. “நயனா குழந்தையைப் போன்றவர்” என்று மகரிஷி அடிக்கடி கூறுவது வழக்கம்.

1903-ம் ஆண்டு முதன் முதலில் ஸ்ரீ ரமணரை பிராம்மண சுவாமியாகத் தரிசித்து விட்டுச் சென்ற கணபதி சாஸ்திரிகள், 1907-ம் ஆண்டு மீண்டும் திருவண்ணாமலைக்கு வந்து சேர்ந்தார். மூன்று வருடங்களுக்கு பகவானுடன் தொடர்பு கொண்டிருந்தார். பெரும்பாலும் மலையிலுள்ள மாமரக் குகையிலேயே வாசம் செய்து வந்த அவர், பல உபாசகர்களுக்கு உறுதுணையாயிருந்து உன்னதத் தொண்டு புரிந்திருக்கிறார்.

பின்னர் வட கனராவிலுள்ள சிரசி என்ற இடத்தில் ஆனந்தாசிரமம் அமைத்து சிறிது காலம் அங்கே தங்கியிருந்தார். இறுதியில் காரக்பூரில் குடியேறி, உடல் நலம் குன்றி, 1936-ம் ஆண்டு தமது ஐம்பதெட்டாவது வயதில், நிம்பூரா நதிக்கரையில் இயற்கை எய்தினார்.

அந்தத் துயரச் செய்தியைத் தாங்கி வந்த தந்தியை கையில் வைத்துக் கொண்டு, ரமண பகவான் தந்தியைப் படித்து விட்டு ஒரு வார்த்தையும் பேசாமல், மாலை வேதபாராயணம் முடிந்த பிறகு, எல்லோரையும் அருகில் அழைத்து, “இதில் உள்ள செய்தி தாங்க முடியாத அதிர்ச்சியைத் தருகிறது. நயனா போயிட்டாராம்!” என்று கூறிய பகவான், சற்றுத் தயங்கி “அவர் போயிட்டாரா? எங்கே போயிட்டார்?” என்று கேட்டார். அதாவது அவர் எங்கும் போகவில்லை, அவருக்கு மரணமெ இல்லை என்று கூறாமல் கூறினார். பேச்சில் கலக்கமில்லை. ஆனால் பகவானின் கண் கலங்கின. உணர்ச்சியால் நெகிழ்ந்து உள்ளத்தோடு கண்ணீர் மாலை கன்னங்களை நனைக்க, “நயனாவைப் போல் இன்னொருத்தரை இனி பார்க்க முடியுமா?” என்று உருக்கமுடன் கூறினார் மகரிஷி.

ரமண மகரிஷியின் சேவைக்கே தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட தியாகச் செம்மல்களுக்கு கணக்கே இல்லை. அதிலும், தூய்மையான பக்திக்கும், திட வைராக்கியத்திற்கும் எடுத்துக் காட்டாக விளங்கிய சபரிக்கு ஈடான பெண் ரத்தினங்களின் வரலாற்றைப் படிக்கும் போது பெருமிதத்தால் நெஞ்சம் விம்மிப் புடைக்கிறது.

போளூருக்கு அருகிலுள்ள மண்டகுளத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமி அம்மாள். ஆஸ்திக்கு ஒரு பிள்ளையும், ஆசைக்கு ஒரு பெண்ணும் பெற்று, கண் நிறைந்த கணவனோடு இல்லறம் நடத்தி வந்த லட்சுமியின் மீது எந்தப் பாவியின் கண் திருஷ்டி பட்டதோ தெரியாது. இருபத்தைந்து வயதிலேயே விதி அவளுக்கு விதவைக் கோலத்தைத் தந்தி வேடிக்கை பார்த்தது! மாலுமி திடீரென்று மறைந்து விட்டான். லட்சுமியின் குடும்பக் கப்பல் கவிழ்ந்து விட்டது.

துயரக் கடலில் நீந்தி கரை சேர்ந்தவள், உயிருக்குயிரான இரு செல்வங்களுக்காகத் தன் உயிரைப் பிடித்து வைத்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு வாழ விருப்பமில்லை. ஆயுசு இருந்ததால், உண்டு, உடுத்து, உறங்கிக் கொண்டிருந்தாள்.

விதி அவளை நிழலாகத் தொடர்ந்தது. மகன் இருந்தால், அவன் பெரியவனாகி தாயைக் காப்பாற்றி விடப் போகிறானே என்று அவனையும் கையோடு அழைத்துச் சென்று விட்டது. கணவன் மறைந்ததற்காக வடித்த கண்ணீர் உலருவதற்கு முன்பே, மற்றொரு கடும் சோதனையா? ஆறாத் துயரப் புண்ணில் வேள் கொண்டு தாக்கினால் எப்படித்தான் தாங்குவது? சோகத் சித்திரமாய் இருந்தவள், நடைப்பிணமானாள்.

பூமி பிளந்ததோ, வானம் இடிந்ததோ, பிரளயம் சூழ்ந்ததோ என்று கதி கலங்கிப் போயிருந்த லட்சுமி, பெண்ணின் முகம் பார்த்து, அவள் சிரிப்பொலி கேட்டு, பேச்சழகில் சொக்கி, சூன்ய வாழ்வில் சுகத்தைத் தெடிக் கொண்டிருந்தாள். அவளைத் தேடிக் கொண்டு விதி மீண்டும் ஓடி வந்தது. ஐயோ, இதென்ன வேகம்?  அதன் தாகம் இன்னும் அடங்க வில்லையா?

இல்லை, இல்லவே இல்லை! அது மரண தாகம்! அந்தப் பெண்ணின் உயிரையும் அது குடித்து விட்டுச் சென்றது. சென்று விட்டதா? இனி திரும்பி வராதே! யார் கண்டது?

அடுத்தடுத்து மரணம் கொடுத்த அடி, லட்சுமியைப் படுக்க வைத்து விட்டது. பேயறைந்தவள் போல், பேச்சற்றுக் கிடந்தாள் பேதை. “அந்த விதி மீண்டும் வராதா, தன்னையும் கொண்டு போகாதா?” என்று காத்திருந்தாள்.

அழைத்தவுடன் நம்மைத் தேடி வருவதற்கு காலன் என்ன நம் அடிமையா? அவன் விதியின் அடிமை. விதி அழைத்தால்தான் துணைக்கு வருவான். நாம் வாழ்ந்து துன்பப்பட வேண்டுமென்று தலையில் எழுதியிருந்தால் அவன் விலகியே நிற்பான்.

மரணம் வரும் என்று காத்திருந்த லட்சுமி ஏமாற்றமடைந்தாள். சுருண்டு படுத்திருந்தவள் எழுந்து உட்கார்ந்தாள். சிறிது ஆகாரம் உட்கொண்டாள். சற்று நடமாடினாள். வீடு வெறிச்சோடிக் கிடந்தது. வெளியுலகம் வறட்சியாயிருந்தது. வாழ்க்கையே கசந்தது.

இருண்ட அறையிலேயே லட்சுமி முடங்கிக் கிடந்தாள். அதன் ஜன்னலைத் திறப்பதற்கும் அவள் அஞ்சினாள். கதவைத் திறந்தால், தன் பெண் கொஞ்சும் சிரிப்பில், இன்பம் துள்ளும் பழைய நினைவுகள் நிழற்படமாக ஓடும். அடி வயிற்றில் குடல் நெளியும்; நெஞ்சு வெடிக்கும்; “வேண்டாம்! அந்த ஜன்னல்கள் அடைத்தே கிடக்கட்டும். என் உயிர் பிரிந்த பிறகு யாராவது அதைத் திறக்கட்டும்.”

மகள் பட்ட வேதனையை, வயதான தந்தை பார்த்து நொந்து போனார். ஆறுதல் வார்த்தைகள் சொன்னார். தைரிய மொழிகள் கூறினார். தத்துவ உபதேசம் செய்தார். ஒன்றும் பயனில்லை. பேரிழப்பால் பரிதவித்தவள் நிம்மதியழந்து வாடினாள்.

வீட்டிலேயே முடங்கிக் கிடந்தால் மன நிம்மதி பெற முடியாது என்று பலர் கூறினார்கள். தல யாத்திரை சென்றால், துக்கத்தை சிறுகச் சிறுக மறக்கலாம் என்று அனுபவமிக்கவர்கள் அறிவுரை வழங்கினார்கள். தந்தைக்கும் அதுவே சரியென்று தோன்றியது. பயணத்திற்கு மகளை உடன்பட வைத்தார்.