ரமண சரிதம் – 16

கண்களை மூடி, நிஷ்டையில் அமர்ந்திருக்கும் பகவானின் எதிரில் அமர்ந்து கொண்டார் கணபதி முனிவர். நான்கு சீடர்கள் மாறி மாறி எழுதிக் கொள்ள, சுலோகங்களை வேகமாகக் கூறினார். அவரா கூறினார்? எந்த சக்தியாலோ உந்தப்பட்டு, கவிதை ஊற்று வெள்ளம் போலப் பாய்ந்து வந்தது. இரவு எட்டு மணிக்குத் தொடங்கி, பன்னிரெண்டு மணிக்குள் இருநூறு சுலோகங்களை இயற்றி விட்டார் அவர். கடைசி சுலோகம் முடிந்ததும், உவகை மேலிட, நிறைவு பெற்ற மனத்துடன், ரமண மகரிஷியின் பாதங்களில் விழுந்து எழுந்தார். பகவான் லேசாகக் கண்களைத் திறந்து, “என்ன சாஸ்திரிகளே, முடிந்து விட்டதா? நான் சொன்னதையெல்லாம் எழுதி விட்டீரா?” என்று திருவாய் மலர்ந்தருளினார்.

குருநாதரின் கருணையை எண்ணி எண்ணிப் பரவசமானார் கணபதி முனிவர்.

அந்த ஆயிரம் சுலோகங்களும் “உமா சஹஸ்ரம்” என்ற பெயரில் ஒரு தெய்வீக நூலாக உருவெடுத்தது. அதற்கு கணபதி முனிவரின் மானவரான கபாலி சாஸ்திரிகள், சமஸ்கிருதத்திலேயே மிக அருமையான விளக்கவுரை ஒன்று எழுதியிருக்கிறார்.

“உமா சகஸ்ரம்” உருவான மறு வருடம் – அதாவது 1908-ம் ஆண்டு, முதல் மூன்று மாதங்கள், கணபதி முனிவர், ரமண மகரிஷியுடன் பச்சையம்மன் கோயிலில் தங்கியிருந்தார். நேரம் கிடைக்கும் போதெல்லாம் சுலோகங்களை அங்குமிங்கும் சற்ருத் திருத்தியமைத்து, “உமா சகஸ்ர”த்தைப் பூர்த்தி செய்ததோடு, பகவானின் உபதேசத்திற்கிணங்க கடும் தவத்திலும் ஈடுபட்டிருந்தார்.

பச்சையம்மன் கோயிலில் பகவன் தங்கியிருந்த போது ஓர் அதிசயம் நடந்தது. ஒரு நால் பகவானுக்கு எதிரில் அமர்ந்து தியானம் செய்து கொண்டிருந்தார் கணபதி முனிவர். அப்போது வான மண்டலத்திலிருந்து புறப்பட்ட நட்சத்திரம் ஒன்று பகவானின் நெற்றியை வந்து தொட்டு விட்டுச் சென்றது போல் கணபதி முனிவருக்குத் தரிசனம் ஆயிற்று. பிரமையோ என்று சந்தேகித்த முனிவர், உற்றுக் கவனித்தார். அந்த நட்சத்திரம் மீண்டும் இறங்கி வந்து, முன் மாதிரியே மகரிஷியின் சிரசைத் தொட்டு விட்டுச் சென்றது. அம்மாதிரி ஆறு முறை நடந்தது. இந்த அபூர்வக் காட்சியைக் கண்டு அதிசயித்துப் போனார் கணபதி முனிவர்.

இது மாயைத் தோற்றமல்ல, சத்திய தரிசனமே என்பது பின்னர் உறுதி ஆயிற்று. மகரிஷியே இந்த அதிசயத்தைத் தம் கண்ணால் கண்டதாகக் கூறிய போது கணபதி முனிவர், தாம் பெற்ற பெரும் பேற்றை நினைத்து புளகிதம் அடைந்தார்.

ஆறுமுகனை நினைவு படுத்துவது போல் வான மண்டலத்திலுள்ள கிருத்திகா நட்சத்திரங்கல் ஒவ்வொன்றாக வந்து பகவானின் நெற்றியைத் தொட்டு விட்டுச் சென்றிருக்க வேண்டும் என்று தோன்றியது கணபதி முனிவருக்கு.

ஸ்ரீ ரமண மகரிஷியை சுப்பிரமணியரின் அம்சமாகவே கருதினார் கணபதி முனிவர். அவ்வாறே பல முறை அவருக்குத் தோற்ரம் அளித்திருக்கிறார் பகவான்.

கணபதி சாஸ்திரிகள், ஸ்ரீ ரமண மகரிஷியிடம் தாமும் இதர பக்தர்களும் கேட்ட சந்தேகங்களையும், அவற்றுக்கு பகவான் அவ்வப்போது அளித்த விடைகளையும், முந்நூறு சுலோகங்களாக எழுதி, பதினெட்டு அத்தியாயங்களாகப் பிரித்து, பகவத் கீதையைப் போலவே “ரமண கீதை”யாக உருவாக்கியிருக்கிறார். “ரமண கீதை”யின் பதினோராவது அத்தியாயத்தில் “ஈசுவரன் கொடுத்த ஞா திருஷ்டியால் உங்களை முருகப் பெருமானாகவே நான் காண்கிறென்” என்று கூறியிருக்கிறார் கணபதி முனிவர்.

ஒரு சமயம் விரூபாட்சி குகையில், மகரிஷியைத் தரிசிக்க வந்த கணபதி முனிவருக்கு, பகவான் வாயாலேயே இந்த உண்மையைத் அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் மேலிட்டது. ஆனால், அதை வெளியில் சொல்லவேயில்லை. வாயடித் திறந்து சொன்னால்தான் குருவுக்குப் புரியுமா? சீடரின் உள்ளக் கிடக்கையைத் தாமே அறிந்து, தக்க சமாதானம் கூறுவது அன்றோ உத்தம குருவுக்கு அடையாளம்?

விரூபாட்சி குகையிலிருந்த மாடம் ஒன்றில் ஒரு பிள்ளையார் விக்கிரகம் இருந்தது. அதன் மீது ஆளுக்கொரு வெண்பா பாடலாம் என்று அப்போது அங்கிருந்த ஈசுவர சுவாமிகள் கூறினார். அவர் கூறிய யோசனையை பகவான் ஏற்றுக் கொண்டு மாடத்துப் பிள்ளையார் மீது ஒரு வெண்பா இயற்றினார்:

பிள்ளையாப் பெற்றவனைப்

பிச்சாண்டியாக்கி யெங்கும்

பிள்ளையாப் பேழ்வயிற்றைப்

பேணினீர் – பிள்ளை யான்

கன்னெஞ்சோ மாடத்துப்

பிள்ளையாரே கண் பாரும்

பின்வந்தான் தன்னை நீ பெற்று

விளையாட்டாக ஒரு வெண்பா பாடி கணபதி முனிவரின் சந்தேகத்தைத் தீர்த்து விட்டார் பகவான். பின் வந்தான் தன்னை என்று தம்மை கணபதிக்கு இளைய சகோதரராகச் சொல்லிக் கொண்டது கணபதி முனிவரைப் பரவசத்தில் ஆழ்த்தியது. இனி அதைப் பற்றி அவருக்குச் சந்தேகம் தோன்றுவதற்கே சிறிதும் இடமின்றி உறுதியாய்க் கூறி விட்டார் மகரிஷி.

வயதைக் கொண்டு பார்த்தால், கணபதி முனிவருக்கு பகவான் இளையவர்தான். இருவருக்கும் ஒரு வயது வித்தியாசம்.

காவிய கண்ட கணபதி சாஸ்திரிகள் கணபதியின் அம்சம் என்று கூறுவதற்கு ஒரு நிகழ்சியுண்டு.

கொண்டய்யா என்பவர் ஒரு சமயம் கணபதி ஹோமம் செய்தார். அப்போது அக்கினி ஜுவாலைகளுக்கிடையே முனிவர் போன்ற திருமேனியை உடைய ஒரு மகானின் உருவத்தைக் கண்டு அவர் பிரமித்துப் போனார். அந்த உருவத்தை அதற்கு முன் கொண்டய்யா பார்த்த்தேயில்லை.

சில மாதங்களுக்குப் பிறகு கொண்டய்யா அருணாசலத்திற்கு வந்து கிரிப் பிரதட்சணம் செய்தார். மலையைச் சுற்றி முடிக்கும் சமயத்தில் எதோ ஒரு சக்தி அவரைப் பச்சையம்மன் கோயிலுக்கு இழுத்துச் சென்றது.

ஆலயத்தில் நுழைந்த கொண்டய்யா, அங்கு கணபதி சாஸ்திரிகளைக் கண்டு ஒரு கணம் திகைத்துப் போய் அப்படியே நின்று விட்டார். அவரை அதற்கு முன் எங்கேயோ பார்த்திருப்பது போல் தோன்றியது அவருக்கு. சிந்தித்துப் பார்த்தார். “ஆம். சந்தேகமில்லை. அவரேதான். கணபதி ஹோமத்தின் போது அக்கினி ஜுவாலைகளுக்கிடையே காட்சியளித்த அதே மகாந்தான்” என்று நிச்சயமான பின்னர், அவர் காலில் விழுந்தார். அன்று முதல் முனிவரின் சீடரானார் கொண்டய்யா.

“உமா சகஸ்ர”த்தில் வரும் ஒரு சுலோகத்தில், அருணாசலேசுவரரை அர்த்தநாரீசுவரராகத் தரிசித்து, அவர் மடியில் கணபதியும், சுப்பிரமணியரும் அமர்ந்திருக்கும் கண் கொள்ளாக் காட்சியையும் கண்டு களிக்கிறார் கணபதி முனிவர். வலது மடியில் (அதாவது ஈசுவரனின் பாகத்தில்) கணபதி வீற்றிருக்கிறார் என்றும், இடது மடியில் (அம்பிகையின் பாகத்தில்) சுப்பிரமணியர் வீற்றிருக்கிறார் என்றும் கூறி, விநாயகர் பிரணவ சொரூபமான சிவனின் அம்சம் பொருந்தியவர் என்பதையும், சுப்பிரமணியர் பராசக்தியின் அம்சம் பொருந்தியவர் என்பதையும் வெகு அழகாக எடுத்துக் காட்டியுள்ளார்.

ரமண மகரிஷிகள், கணபதி முனிவரின் தவ நெறிக்கு ஆன்ம பலம் தந்து அவரை ஆட் கொண்டிருக்கிறார் என்பதற்கு எத்தனையோ நிகழ்ச்சிகள் கூறப்படுகின்றன.

அவற்றில் ஓரிரண்டு அதிசயத்திலும் அதிசயமாக இருக்கின்றன.

ஒரு சமயம் கணபதி சாஸ்திரிகள் தவம் புரிவதற்காக சென்னையை அடுத்துள்ள திருவொற்றியூருக்கு வந்தார். தியாகராஜப் பெருமானையும், வடிவுடையம்மனையும் தரிசித்து விட்டு அத்தலத்திலுள்ள விநாயகர் கோயில் ஒன்றில் தவத்திற்காக அமர்ந்தார். பதினெட்டு நாட்கல் மௌன விரதம் ஏற்று கடும் தவம் புரிந்தார். கடைசி தினத்தன்று, முனிவர் கண் விழித்துப் படுத்துக் கொண்டிருந்த போது ஓர் அதிசயத்தைக் கண்டார்.

ரமண மகரிஷிகல் மெள்ள வந்து அவர் பக்கத்தில் அமர்ந்தார். தூக்கிவாரிப் போட்ட கணபதி முனிவர், உடனே எழுந்திருக்க முயன்றார். ஆனால் மகரிஷி தம் கரத்தை அவர் தலையில் வைத்து அழுத்தி எழுந்திருக்க விடாமல் தடுத்து விட்டார். அக்கணம் தம்முள் அருட்சக்தி புகுந்து பரவசப்படுத்தியதை உணர்ந்தார். பகவான் தமக்கு ஹஸ்த தீட்சை தந்து அருளியதை நினைத்து உளம் மகிழ்ந்தார்.

இது நடந்து பல ஆண்டுகள் கழித்து, இதுவும் மாயத்தோற்றம் அல்ல என்பதை பகவான் உறுதிப் படுத்தினார். மகரிஷியின் மொழியையே கேட்போம் :

“ஓரு நாள் இது படுத்துக் கொண்டிருந்தது. ஆனால் சமாதியில்லை. திடீரென்று உடல் மேலே தூக்கிச் செல்லப்பட்டது. சற்றைக்கெல்லாம் சுற்றிலுமுள்ள பொருட்கள் யாவும் மறைந்து, பேரொளி எங்கும் சூழ்ந்தது. பின்னர், உடல் கீழே இறங்கியது. பொருள்கள் மீண்டும் கண்ணுக்குத் தெரிந்தன. திருவொற்றியூரிலிருப்பதாக எண்ணம் தோன்றியது. பெரிய வீதியில் நடந்து கொண்டிருந்த போது, கொஞ்சம் தூரம் சென்றதும் ஒரு விநாயகர் கோயில் தென்பட்டது. உள்ளே சென்றது. அங்கு ஏதோ பேசியது. ஆனால் என்ன பேசியது. செய்தது என்று சரியாக நினைப்பில்லை. திடீரென்று கண் விழித்த போது, விரூபாட்ச குகையில் இது படுத்திருந்தது. அருகில் இருந்த பழனிச்சாமியிடம் நடந்ததையெல்லாம் சொன்னது. இப்படித்தான் சித்தர்களும் உலவுவார்கள் என்று தெரிந்தது.காவிய கண்ட கணபதி முனிவர் பராசக்தியின் பரிபூரண அருளுக்கும் ஆசிக்கும் பாத்திரமாயிருந்ததோடு, உச்சிஷ்ட கணபதியின் உபாசகராகவும் இருந்து வந்தார். அத்துடன் மந்திர ஜபத்தாலும், தியானத்தாலும், தவத்தாலும் அரும் பெரும் சக்திகளைப் பெற்றிருந்தார். ஸ்ரீ ரமண பகவானின் ஆன்மீக ஒளி அவரது தவ வலிமையை பன் மடங்காகப் பெருக்கியது.