காவிய கண்ட கணபதி சாஸ்திரிகள், பின்னர் தமிழ் நாட்டை நோக்கிப் பயணமானார். ஸ்ரீ காமாட்சியின் அருளாட்சி நட்ககும் காஞ்சிக்கு வந்தார். அங்கிருந்து, அன்னை தவமிருந்து ஐயனின் இடப்பாகம் பெற்ற அருணாசலத்திற்குச் சென்றார்.
1903-ம் வருடம் அருணையின் கருணை நிழலில் வந்து தங்கிய கணபதி சாஸ்திரிகள், புத்துணர்ச்சி பெற்றார். அருணேசனின் தரிசனம் அவரைப் பரவசப்படுத்தியது. அதனால் அவருக்கு ரமணரின் தரிசனம் கிடைத்தது.
மலை மீது விரூபாட்ச குகையில் மெய்த்தவம் இயற்றிக் கொண்டிருந்த பிராம்மண சுவாமியைப் பற்றி யாரோ ஒருவர் அவரிடம் கூற, அம்மகானைத் தேடிச் சென்றார் கணபதி சாஸ்திரிகள். அங்கு தட்சிணாமூர்த்தியாக அமர்ந்திருந்த குருநாதரைக் கண்டதும் விநாயக மூர்த்திக்கு உரிய வணக்கத்தைக் கூறினார் :
சுக்லாம் பரதரம் விஷ்ணும்
சசிவர்ணம் சதுர்புஜம்
ப்ரஸன்ன வதநம் த்யாயேத்
சர்வவிக்நோப ஸாந்தயே!
இந்த மந்திரம் தாம் கண்ட சுவாமிகளுக்கும் பொருத்தமாக அமைந்துள்ளதை விளக்கினார் கணபதி சாஸ்திரி.
சுவாமிகளும் வெள்ளை ஆடையைக் கோவணமாகக் கட்டியிருக்கிறார்; பிரும்ம சொரூபனமாக இருப்பதால் எங்கும் வியாபித்திருக்கிரார். நிலவைப் போன்ர தேக காந்தியுடன் சோபிக்கிறார். மனம், புத்தி, சித்தம், அகங்காரம், நாங்கையும் வசப்படுத்தி அட்ககியிருக்கிறார்; இன்முகத்துடன் கூடியவராயிருக்கிறார்; ஆத்ம தரிசனத்துக்கு இடையூறாக இருக்கும் நம் சந்தேகங்களைக் களைகிறார். தம்மை நாடி வருபவர்களுக்கு மனச் சாந்தியளிக்கிறார்.
இதையெல்லாம் மௌனமாகக் கேட்டுக் கொண்டிருந்தார் ரமணர். அருள் வெள்ளம் பொங்கிப் பாய்ந்தது. கணபதி சாஸ்திரிகளின் வாக்கில் கலைவானி நர்த்தனம் புரியத் தொடங்கினாள். அடுத்த கார்த்திகை தீபப் பெருவிழாவின் போது காவிய கண்டர் அருணாசலேசுவரரின் மீது பக்தி மேலிட, பல கவிதைகள் இயற்றினார்.
அருணையில் ஓராண்டு காலம் வசித்த பிரகு, வேலூர் கல்லூரியில் தெலுங்கு ஆசிரியராகப் பணி புரியச் சென்றார் கணபதி சாஸ்திரிகள்.
ஆசிரியராகப் பணி புரிந்து கொண்டிருந்த நேரத்திலும் தல யாத்திரை போவதை அவர் விட்டுவிட வில்லை. பல ஆலயங்களுக்குச் சென்று, தவம் இருந்தார். சக்தி உபாசனை அவருக்கு ஆத்ம சக்தியைக் கொடுத்தது. ஆனால், எதிர் பார்த்தது போல் அவருக்குத் தெய்வ தரிசனம் கிட்டவில்லை. தாம் புரியும் தவத்தில் ஏதோ குறை இருக்க வேண்டும் என்று மனச்சஞ்சமுற்றார். பக்தன் துயருற்றால் பரமன் பார்த்துக் கொண்டிருப்பானா? அருணாசலேசனிடமிருந்து அவருக்கு அழைப்பு வந்தது. அடுத்த கணம் வேலையை ராஜினாமா செய்து விட்டு மீண்டும் அருணாசலத்திற்கே வந்து சேர்ந்தார்.
அருணாசலத்தில், அருணாசலேசனை மனத்தில் இருத்தி, சிவ பஞ்சாட்சரி மந்திரத்தை ஜபித்துக் கொண்டு கடுந்தவம் மேற்கொண்டார் காவிய கண்ட கணபதி முனிவர்.
அன்று கார்த்திகை மாதம், சோம வாரப் புண்ணைய நாள். தவத்தில் ஆழ்ந்திருந்த கணபதி முனிவரின் இதயக் குகையில், “அருணாசலா அருணாசலா” என்ற தெய்வ ஒலி எழும்பி, “புறப்படு புறப்படு” என்று அவருக்கு ஆணையிட்டது. சட்டென்று எழுந்தார். அருணாசல மலையை நோக்கி ஓடினார். கரடு முரடான பாதையில் வேகமாக ஏறினார். விரூபாட்ச தேவர் குகையில் கோவணாண்டியாக தனிமையில் வீற்றிருந்த பிராம்மண சுவாமியின் மலரடிகளில் சரணாகதியாக விழுந்து கும்பிட்டார்.
எப்போதும் பக்தர்களால் சூழப்பட்டிருக்கும் சுவாமிகள் அன்று தம்மை எப்படியோ தனியனாக்கிக் கொண்டார். தபஸைப் பற்ரி கணபதி சாஸ்திரிகளுக்கு தனிமையில் உபதேசம் செய்தாக வேண்டும்! தூய பக்தனின் ஏக்கத்தைப் போக்க கடவுள் ஓடோடி வருவார். அன்புச் சீடனின் துயரைத் துடைக்க குரு, கருணையோடு காத்திருப்பார். இது சத்தியம்!
முதல் தரிசனத்திலேயே ஞான குருவை விநாயகனோடு ஒப்பிட்டு மகிழ்ந்த கணபதி சாஸ்திரிகளின் உள்ளம் தற்போது பாகாய் உருகியது. கண்ணீர் பெருகியது. தமது இடக் கையில் ரமணரின் இடப் பாதத்தைஉம், வலக்கையால் அவரது வலப்பாதத்தையும் பற்றிக் கொண்டு, சாஸ்திர முறைப்படி சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தார். பின்னர் மெள்ள எழுந்தார். கைகளைக் கட்டிக் கொண்டு, ஏதோ பேச முயன்றார். அழுகைதான் வந்தது. பேச்சு வரவில்லை.
அன்புக்கனல் தெறிக்க சாஸ்திரிகளை ஒரு கணம் நோக்கினார் ரமண சுவாமிகள். அருளொளி இவரை ஆட்கொண்டது. ஆனந்த சிலிர்ப்பு ஏற்பட்டது.
நாத்தழு தழுக்கப் பேசினார் கணபதி சாஸ்திரிகள்:
“சுவாமி, நான் வேத, வேதாந்தங்களையும், சகல சாஸ்திரங்களையும் கசடறக் கற்றிருக்கிறென். இதிகாசப் புராணங்களைக் கரைத்துக் குடித்திருக்கிறேன். நான் போகாத ஆலயம் இல்லை; தரிசிக்காத தெய்வம் இல்லை. அந்த சந்நிதிகளிலெல்லாம் அமர்ந்து கோடிக்கணக்கில் மந்திர ஜபம் செய்திருக்கிறேன். சிரத்தையுடன் தவத்தில் ஆழ்ந்திருக்கிறேன். இத்தனை இருந்தும் என் மனத்தில் சாந்தி ஏற்படவில்லை. தவத்தின் பலனை நான்அனுபவிக்க முடியவில்லை. உணமையான தபஸ் என்னவென்றே எனக்குப் புரியவில்லை. தாங்கள், தவமலையாக, அருணாசலமாகவே எனக்குக் காட்சி தருகிறீர்கள். தபஸ் என்றால் என்னவென்று சுவாமிகள் இந்தச் சிறியேனுக்குச் சொல்லி அருள வேண்டும்.
ஞான மலையின் எதிரில் சிறு அறிவுக் குன்றாக, உடல் குன்றிப் போய் நின்றிருந்தார் கணபதி சாஸ்திரிகள்.
குருநாதனின் கமலக் கண்கள் கருணையைப் பொழிந்தன.
பின்னர், மௌனத்தைக் கலைத்துத் தேனினும் இனிய குரலில் குழந்தையைப் போல் பேசினார் பகவான்.
பகவத் கீதையில் ஸ்ரீ கிருஷ்ண பகவான், குழப்பமுற்றிருந்த அர்ஜுனனுக்கு வேத சாரத்தையும், வெதாந்தத் தத்துவத்தையும் பிழிந்து, ஞான ரசமாகத் தந்தருளினார். அது உலக மக்களுக்குச் சாந்தி தரும் அரு மருந்தாக அமைந்தது.
ஸ்ரீ ரமண பகவான், கலக்கமுற்றிருந்த காவிய கண்ட கணபதி முனிவருக்கு, தவயோகத்தின் உணமைப் பொருள் பற்ரி நல்லுபதேசம் செய்தார். அதில் வேதசாரம் அடங்கியிருந்தது. உபநிடதங்களின் தத்துவம் மிளிர்ந்தது. அருணாசலத்தின் ஞான ஒளி பளிச்சிட்டது. உலக மாந்தர் ஆன்ம விடுதலை பெறும் அருமருந்தாக அது அமைந்தது.
பகவான் சொன்னார்:
“நான்” “நான்” என்பது எங்கிருந்து புறப்படுகிறது என்பதை உன்னிப்பாகக் கவனித்தால் அந்த இடத்தில் நம் மனம் லயித்து விடும். அதுதான் தபஸ்.
ஒரு மந்திரத்தை உச்சரிக்கும் போது, அந்த மந்திரத்தின் ஒளி எங்கிருந்து புறப்படுகிறது என்பதை உன்னிப்பாகக் கவனித்தால், அங்கே நம் மனம் லயித்து விடும். அதுதான் தபஸ்.
இரண்டே வரிகளில், இதுவரை இத்தனை தெளிவாக யாருமே சொல்லாத வகையில் தபசின் பொருளையும் பயனையும் ஞானகுரு எடுத்துரைத்து விட்டார். அதைக் கேட்ட சீடர் மெய்ஞ்ஞானம் பெற்று விட்டார்.
காதால் கேட்ட சொற்களை விட, அச்சொற்களில் அடங்கியிருந்த சத்தியப் பொருள் அவர் உள்ளத்தை நிறைத்தது. ரமண பகவானின அருள் நோக்கும், ஆன்ம ஒளியும் சீடருக்கு அப்பொன்மொழிகளைப் புரிய வைத்து, அவர் மனத்தில் பசுமரத்து ஆனி போல் பதிய வைத்தன.
உபதேசம் பெற்ற உத்தமச் சீடர் ஞான குருவின் சந்நிதியிலேயே வெகு நேரம் அமர்ந்திருந்தார். வாய் திறந்து பேசவோ, வேறெதுவும் கேட்கவோ அவருக்குத் தோன்றவில்லை. அவரது சந்தேகங்களெல்லாம் அறவெ மறைந்து, உள்லத்தை அரித்த சஞ்சலமெல்லாம் ஒழிந்து, பேரமைதியும், பேரானந்தமும் அவரிடம் குடி கொண்டன.
அருகில் இருந்த பழனிசுவாமியிடம் பிராம்௳ண சுவாமியின் திருநாமம் என்னவென்று கேட்டார் கணபதி முனிவர். “வெங்கடராமன்” என்று அவர் ரகசியமாகச் சொல்ல, அக்கணமெ கணபதி முனிவர் “ரமணன்” என்ற புதுப்பெயரைச் சூட்டினார். ஆனந்த மயமாகவே ஆகி விட்டவருக்கு எத்தனை பொருத்தமான பெயர் அமைந்து விட்டது! ரமண மகரிஷியென்றும், “ரமண பகவான்” என்றும் அழைத்து, அந்தத் திருநாமமெ நிலைக்கும்படி செய்தவர் கணபதி முனிவரே.
பகவானிடம் தாம் பெற்ற உபதேசத்தைத் தமது சீடர்களுக்கும், உறவினருக்கும் தெரியப்படுத்தினார் கணபதி முனிவர். அவர்களையெல்லாம் மகரிஷியிடம் ஈடுபாடு கொள்லும்படி செய்தார்.
காவிய கண்ட கணபதி முனிவர், சக்தி உபாசகர். சக்தியின் ஆவேசம் அவரை உள்ளிருந்து இயக்க, அவர் கவிதை மாரி பொழிந்தார். அந்த பராசக்தியின் அருளாலேயே தமக்கு ரமணரின் தரிசனமும், தமசைப் பற்றிய அரிய விளக்கமும் கிடைத்ததாக அவர் நம்பினார். உலக நாயகியின் மகிமையைப் போற்ரி வணங்க வேண்டும் என்ற ஆர்வம் அவருள் பொங்கியது. மூன்று வாரங்களில் உமா தேவியைப் பற்றி ஆயிரம் சுலோகங்கள் இயற்றுவது என்று முடிவு செய்தார். கவிதை ஊற்றுப் பெருக்கெடுத்தது. அருட்பாக்கள் பிறந்தன. சீடர்கள் அப்படியே எழுதிக் கொண்டார்கள்.
பத்தொன்பது நாட்கள் பக்தி மழை பொழிந்தது. எண்ணூறு சுலோகங்கள் உருவாகி விட்டன. மறுநாளுக்குள் ஆயிரம் முடித்தாக வேண்டும். ஒரு நாளுக்குள் இருநூறு சுலோகங்கள் எழுதியாக வேண்டும்.அப்போது மாமரத்து குகையில் பகவான் அமர்ந்திருந்தார். அவர் சந்நிதியில் பாக்கியுள்ள சுலோகங்களை இயற்றலாம் என்ற எண்ணத்துடன் அங்கு சென்றார் கணபதி முனிவர்.