ரமண சரிதம் – 14

அன்னை அடங்கிய பிறகுதான் அவ்விடத்தை விட்டு எழுந்தார் பகவான். மரணத்தின் உணமை நிலையை உணர்ந்திருந்த மகானுக்கு மன சஞ்சலம் இருக்கக் காரணம் இல்லை. ஒரு தெய்வப் பணியை வெற்றிகரமாக முடித்து விட்ட நிம்மதியை அவர் திருமுகத்தில் காண முடிந்தது.

பின்னர், எல்லோரையும் அழைத்து, “வாருங்கள், சாப்பிடுவோம், அழுவதற்கோ, துக்கம் கொண்டாடுவதற்கோ ஒன்றுமில்லை. நமக்குத் தீட்டும் கிடையாது” என்று கூறிய போது, அவர் எந்த நிலையிலிருந்து அப்படிப் பேசுகிறார் என்று புரியாதவர்கள் சற்றுத் திகைத்துப் போனார்கள்.

முதலிலேயே தகவல் போய்ச் சேர்ந்து விட்டிருந்ததால் ஊரிலிருந்து உறவினர்கள் எல்லோரும் அங்கு வந்து கூடியிருந்தார்கள். சீடர்கள் அன்னையின் திருமெனியைச் சுமந்து கொண்டு, மலையிலிருந்து இறங்கி, தெற்கில், பாலி தீர்த்தத்தின் அருகில் கொண்டு வந்து வைத்தார்கள். துறவியாக வாழ்ந்த அன்னையின் உடலுக்கு எரியூட்டாமல், அடக்கம் செய்வதுதான் முறை என்று மகரிஷி கொண்டிருந்த கருத்தை அறிந்தவர்கள் அவ்வாறு தீர்மானித்தார்கள்.

சமாதிக் குழியில் சடலம் இறக்கப்பட்டு, அதில் விபூதி, கற்பூரம், உப்பு, சாம்பிரானி எல்லாம் நிறைக்கபட்டது. பின்னர், பகவானின் முன்னிலையில், சாத்திர முறைப்படி அன்னை அட்ககம் செய்யப்பட்டார். அதன் மீது ஒரு கட்டடம் கட்டப்பட்டு, சிவலிங்கம் ஒன்றும் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பின்னர் மாத்ருபூதேசுவரர் ஆலயம் எழும்பியது. நிரஞ்சனானந்த சுவாமிகளின் இடையறாத நன்முயற்சியினாலும், ரமண பகவானின் நல்லாசியாலும், அக்கோயில் சிறுகச் சிறுக வளர்ந்தது.

அருணாசலத்தின் இதயக் குகைகளில் வாசம் செய்த நாட்களில்தான், பிராம்மண சுவாமி என்று அழைக்கப்பட்டு வந்த வேங்கடராமன், “பகவான்” ஆனார். ரமணர் என்றும், ரமண மகரிஷி என்றும் உலகிர்கு அறிமுகமானார். அத்திருநாமங்களை அவருக்குச் சூட்டியவர் காவ்யகண்ட கணபதி சாஸ்திரிகள் என்ற முனிவர். வெத உபநிடந்தங்களிலும், சகல சாஸ்திரங்களிலும், காவியங்களிலும், இதிகாசப் புராணங்களிலும், ஈடு இணையற்ர பண்டிதராக விளங்கிய அவர், பகவானுடன் தொடர்பு கொண்டு உன்னத நிலையடைந்தது மறக்க முடியாத வரலாறு ஆகும்.

சுமார் இருநூறு வருடங்களுக்கு முன், கும்பகோணத்திற்கு அருகிலுள்ள வலங்கைமானிலிருந்து கௌண்டின்ய கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு குடும்பம் ஆந்திராவில் குடியேறியது. அக்குடும்பத்திற்கு “அய்யல ஸோமயாஜி” என்ர குலப் பெயர் வழங்கப்பட்டது.

அப்பரம்பரையைச் சேர்ந்தவர்களுக்கு ஸ்ரீ வித்யா உபாசனை உண்டு. அவர்கள் ஜோதிஷ சாஸ்திரத்திலும், தந்த்ர சாஸ்திரங்களிலும், ஆயுர்வேதத்திலும் தேர்ச்சி பெற்றவர்கள். வேத சாஸ்திரங்களிலும் கரை கண்டவர்கள்.

அந்த வம்சத்தில் வந்தவர் நரசிம்ம சாஸ்திரியார். அவர் விசாகப்பட்டணத்திற்கருகில், பொப்பிளி சமஸ்தானத்தில் “கல்வராயி” என்ற சிற்றூரில் வசித்து வந்தார். ஒரு சமயம் அவர் தமது மனைவியுடனும், மூத்த பையனுடனும் காசிக்குச் சென்றார். அங்குள்ள ஒரு விநாயகர் கோயிலுக்கு தரிசனத்திற்காக நரசிம்ம சாஸ்திரியார் சென்ற போது, மூலஸ்தானத்திலிருந்து ஒரு குழந்தை புறப்பட்டு, மெள்ள இவரை நோக்கித் தவழ்ந்து வந்தது. அதை அப்படியே வாரி அணைத்துக் கொள்வதற்காக குனிந்தார் அவர். ஆனால், அக்குழந்தை அவர் கண்களிலிருந்து மறைந்து விட்டது. அந்த நிகழ்ச்சி சாஸ்திரியாரை உலுக்கி விட்டது.

ஊருக்குத் திரும்பியதும், சாஸ்திரியாரின் மனைவி கருவுற்றாள். பத்து மாதங்கல் கழித்து ஓர் ஆன் மகவை ஈன்றாள் அந்தப் பெண்மணி. காசியில் நடந்த அதிசயத்தை மறக்க முடியாத சாஸ்திரியார் அக்குழந்தைக்கு கணபதி என்று பெயரிட்டார். ஸ்ரீ மகா கணபதியின் அம்சமாகவே அந்தக் குழந்தை பிறந்திருப்பதாக அவர் நம்பினார்.

ஆறு வயது வரையில் அந்தப் பாலகன் சரியாகவே பேசவில்லை. மழலைச் சொல்லில் உளறிக் கொட்டிக் கொண்டிருந்தான். எப்போதும் ஏதாவது ஒரு நோய் அவனை வாட்டிக் கொண்டிருந்தது. இடையிடையெ வலிப்பு வந்து கஸ்டப்படுவான். அதைக் கண்டு பெற்றோர் பெரும் வேதனைக்குள்ளானார்கள்.

எந்த மருந்திலும் குணபடாத நோய்க்கு அசுர வைத்தியம் செய்தார்கள். அவன் உடம்பில் சூடு போட்டார்கள். மறுநாளிலிருந்து அவன் உடல் நலம் தேறியது. தங்கு தடையின்றி பேசும் திறனும் பெற்றான், பொழிந்து தள்ளினான்.

எட்டாவது வயதில் சமஸ்கிருதத்தில் நல்ல தேர்ச்சி பெற்றான். இலக்கண நூல்களைக் கற்றுத் தேர்ந்தான். பத்தாவது வயதிலேயெ குலத்திற்குரிய சாஸ்திரங்களில் வல்லவனானான். பஞ்சாங்கம் கணிக்கும் அளவுக்கு ஜோதிஷத்திலும் கணிதத்திலும் திறமை மிக்கவனானான்.

பின்னர், காவியங்களிலும் இலக்கிய நூல்களிலும் கணபதியின் மனம் நாட்டங்கொண்டது. காளிதாசனின் படைப்புகளில் உள்ளத்தைப் பறி கொடுத்தான். கவியின் மேகசந்தேசத்தைப் போலவே “பிருங்க சந்தேசம்” என்ற நூலை இரண்டு காண்டங்களாகப் பாடி முடித்தான்.

பதினாங்காவது வயதில், வியாகரணத்திலும், அலங்கார சாஸ்திரங்களிலும் பயிற்சி பெற்ரு விட்டு ராமாயணம், மகாபாரதம் முதலிய புராணங்களையும் இதிகாசங்களையும் ஆராய்ச்சி மனப்பான்மையோடு பல முறை படித்து முடித்தான்.

பதினெட்டாவது வயதில் விசாலாட்சி என்ற உத்தமியை கணபதி கரம் பற்றினார். அவல் பஞ்சதசீ மகா வித்தையை அறிந்தவள். பராசக்தியின் அருள் பரிபூரணமாக நிரம்பப் பெற்ற நல்லாள். கணவனின் அருள் வாழ்வுக்கு உற்ற துணையாக நின்ற தூயலள்.

இள வயதிலேயே தந்தையிடம் மந்திரோபதெசம் பெற்றிருந்தார் கணபதி. அப்போதிருந்தே ஜப தபங்களில் அவருக்கு ஈடுபாடு உண்டு. மந்திர ஜபத்தினால் பல ஸித்திகளைப் பெறலாம் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது. தவசக்தியால் துருவனைப் போலவும், விசுவாமித்திரரைப் போலவும் உன்னத நிலையை அடைய வெண்டும் என்ற வேட்கை அவருள் கொழுந்து விட்டு எரிந்தது. அந்த எண்ணத்துடன் ஒரு நாள் வீட்டை விட்டே வெளியேறி விட்டார்.

கோதாவரி, கங்கை, யமுனை முதலிய புண்ணைய நதிகளின் கரையோரங்களிலுல்ல ஆலயங்களில் அமர்ந்து, சிவ பஞ்சாட்சரி மந்திர ஜபம் செய்தார். அதன் பலனாக பல சாஸ்திரங்களில் இவருக்குப் பிரமிக்கத் தக்க புலமை எற்பட்டது. பல மந்திரங்களின் பொருள் விளங்கியது.

புவனேசுவரத்தில் அவர் தங்கியிருந்த போது, ஒரு நால் கனவில் ஒரு பெண்மணி வந்து இவர் நாவில் தேன் துளிகளை சொட்ட விட்டுச்சென்றாள். கலைவானி கருணை மழை பொழிந்தாள். கவிதை வெள்ளம் கரை புரண்டோடியது. கணபது ஆசு கவியானார்.

சமஸ்கிருத புலமைய்8உடன், ஞானமும், கவிதைத் திறனுக்ம் உடைய கணபதி, பண்டிதர்களைப் போற்றி வண்ணங்கும் காசித்தலம் சென்றார். அங்கிருந்த சிவகுமார பண்டிதர் இந்த “சிவகுமார”றுக்குப் பழக்கமானார். அப்போது வங்காலத்திலுள்ள நவத்வீபத்தில் நடைபெறவிருந்த வித்வத் சபைக்கு கணபதியை அனுப்புவது என்று முடிவு செய்த சிவகுமார பண்டிதர், அந்த சபையின் காரியதரிசிக்கு சிபாரிசு கடிதம் கொடுத்தனுப்பினார். அதை எடுத்துக் கொண்டு வங்காளம் சென்றார் கணபதி சாஸ்திரி. அப்போது அவருக்கு வயது இருபத்தொன்று.

வயதில் சிறியவராகவும் உடலமைப்பில் மெலிந்தவராகவும் இருந்த கணபதி, சபையில் நுழையும் போதே தன்னை மிஞ்ச இங்கு ஒருவரும் இல்லையென்ற தன்னம்பிக்கையுடன் கம்பீரமாக நடந்து சென்றார். அங்கு அனைவரையும் பரிட்சை செய்ய வீற்றிருந்த ஆசு கவியான அம்பிகா தத்தரைச் சுட்டிக் காட்டி, “இவர் யார்?” என்று வினவினார். அதை செவி மடுத்த அந்த வயதான பண்டிதர், “நான் கௌடன், சீக்கிரமாகக் கவிதை புனைவதில் சூரியனைப் போன்று பிரகாசிப்பவன். அம்பிகா தத்தன் என்று பெயர்”. என்று ஓர் அழகான அனுஷ்டுப் விருத்தத்தில் கூறினார்.

அதற்கு ஆரியா விருத்தத்தில் பட்டென்று பதில் கூறினார் கணபதி. “நான் கணபதி, தெற்கு தேசத்திலிருந்து வந்திருக்கிறேன்”, அதாவது நீ கேவலம் அம்பிகையின் தத்துப் பிள்ளைதானே! நான் அம்பிகையின் சொந்தப் பிள்ளையாயிற்றே” என்று பொருள் அவர் வாசகத்தில் தொக்கி நின்றது. பிரமித்து ப் போனார் அம்பிகா தத்தர். உதாரணமாக –

அம்பிகா :  மேலாடையை எடுத்து விட்டு நாட்டுப் பெண் மாமனாரை விரும்பினாள்.

கணபதி:  பீமசேனனின் மனைவி, கோடை காலத்தில் வெய்யில் தாங்காமல் மேலாடையை விலக்கி விட்டு, மாமனாரை (வாயு பகவான்) விரும்பினாள்.

அம்பிகா: எறும்புகள் சந்திர மண்டலத்திற்குச் சென்றன.

கணபதி:  தட்சனின் யாகத்திற்கு பார்வதி தேவி சென்ற சமயத்தில் பிரிவாற்றாமையால் சிவபெருமான் துயரத்துடன் படுத்துக் கொண்டிருந்த போது, அமிர்தத்தை சாப்பிடுவதற்காக எறும்புகள் அவர் மூடியிருந்த சந்திரனிடம் சென்றன.

பின்னர் காவிய பிரகாசத்திலிருந்து ஒரு சுலோகத்தையும், ரகுவம்சத்திலிருந்து ஒரு சுலோகத்தையும் கூறி, பொருள் கேட்டார் அம்பிகா தத்தர். அவற்றுக்குப் பிழையின்றி விளக்கம் கூறினார் கணபதி சாஸ்திரி.

கணபதி சாஸ்திரியின் எல்லையற்ற புலமையைக் கண்டு அம்பிகா தத்தர் அதிசயித்த போதிலும், அவரைத் திணற அடிப்பதற்காக அவரிடம் ஓர் இலக்கணப் பிழையைக் கண்டு பிடித்தார். “சர்வாஸாம்” என்று பெண்பாலில் உபயோக்க வேண்டியதற்கு மாறாக “சர்வேஷாம்” என்று ஆண்பாலில் பயன்படுத்தி விட்டார். அதைச் சுட்டிக்காட்டி “உனக்கு அம்பிகையின் அருள் இருக்கிறது என்று கூறுகிறாயே, இந்தப் பிழை எப்படி வந்தது?” என்று கேட்டார் அம்பிகா தத்தர். அதற்கு நேரடியாகப் பதில் கூறாமல், அம்பிகா தத்தரின் கேள்வியிலேயே ஒரு தவற்றைக் கண்டு பிடித்து மடக்கினார் கணபதி சாஸ்திரி:  “தாங்கள் மகா பண்டிதர் ஆயிற்றே. “ஸார:” என்று இருக்க வேண்டிய ஆண்பாலுக்குப் பதில் “ஸாரா” என்ற பெண்பாலை எதுமை மோனைக்காகப் பயன்படுத்தி விட்டீர்களே. உங்கள் வாக்கில் இந்தப் பிழை எப்படி வந்தது? தங்களுக்கு ஈசுவரனின் அருள் இல்லை போலும்” என்று ஏளனம் செய்தார்.

அம்பிகா தத்தருக்குக் கோபம் வந்து விட்டது. “யானையைப் போல் மதம் பிடித்து அலையாதே. உன் மண்டையைப் பிளந்து மாமிசத்தை உண்ணக் காத்திருக்கும் சிங்கம் நான்” என்று கர்ஜித்தார். அதைக் கண்டு கணபதி சாஸ்திரி பயந்து விட வில்லை. அம்பிகா தத்தரின் அந்தச் சுலோகத்திலும் வியாகரணத்தின் அடிப்படையில் ஒரு தவற்றைச் சுட்டிக் காட்டினார்.

இவ்வாறு இவ்விரு கவிகளுக்கிடையே வாக்குவாதம் வலுக்க ஆரம்பிக்கவே, சபையின் காரியதரிசி குறுக்கிட்டு, நடுவராக நின்று இருவருக்குமிடையே சமாதானம் செய்து வைத்தார்.

இறுதியாக அம்பிகா தத்தர் கணபதி சாஸ்திரியை அவமானப் படுத்த வேண்டும் என்ற எண்ணத்துடன், “தெற்கு தேசத்தவர்கள் கள்ளைக் குடித்து விட்டு திண்ணையில் உருண்டு கொண்டிருப்பார்கள்” என்று ஒரு சுலோகமாகப் பாடினார். அதைப் பூர்த்தி பண்ணுவது போல் கணபதி சாஸ்திரி, “கௌடர்கள் உயிர் போனாலும், செல்வத்தை இழந்தாலும், மீன் தின்னும் பழக்கத்தை மட்டும் ஒரு போதும் விட மாட்டார்கள்” என்று ஓர் அடியை எடுத்துச் சொன்னார்.

அம்பிகா தத்தர் திணறிப் போய் விட்டார். பண்டிதர்கள் நிறைந்த சபை கை கொட்டி ஆரவாரம் செய்தது.

வாக்குவாதத்தின் போது தாம் அவமரியாதையாக நடந்து கொண்டதற்கு தலைவரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார் கணபதி சாஸ்திரி. “கடைசி சுலோகத்தில் நீ பயன்படுத்திய “ஆமீ ந மீனம்” என்ற இரண்டு “மீ”க்களும் உன் குறைகளையெல்லாம் மறைத்து விட்டன” என்று கூறிய அம்பிகா தத்தர், மகிழ்ச்சியில் திளைத்துப் போய் கணபதி சாஸ்திரியைக் கட்டித் தழுவிக் கொண்டு, அவருக்கு “காவிய கண்டர்” என்ற விருதைக் கொடுத்து, உளமாரப் பாராட்டி அனுப்பி வைத்தார்.