திருக்கைலாயத்தில் இருக்கும் கல்லால மரத்தடியில் ஞான வடிவாய் அமர்ந்திருக்கும், ஸ்ரீ தட்சிணாமூர்த்தி, நந்திதேவருக்கு சிவஞான போதத்தை உபதேசித்தருளினார். தாம் பெர்ற செல்வத்தை நந்தி சனற் குமார முனிவருக்கு அருளினார். அவர் தமது தலை சிறந்த மாணவரான சத்திய ஞான தர்சனி முனிவருக்கு கூறினார். அவர், பரஞ்சோதி முனிவருக்கு அருளிச் செய்தார்.
சிவஞான போத உபதேசம் பெர்ற பரஞ்சோதி முனிவர், அகத்திய முனிவரைத் தரிசிக்க, பேராவலுடன் பொதிகை மலைக்குச் செல்லும் வழியில் நடு நாட்டிலுள்ள திருவெண்ணெய் நல்லூர் தலத்திற்கு வந்தார். அங்கு காங்கேய பூபதியின் இல்லத்தில் ஒரு தெய்வக் குழந்தையைக் கண்டார். அது அவருடைய சகோதரரின் குழந்தை. திருவெண்காடு ஈசனின் அருளால் பிறந்த அக்குழந்தைக்கு சுவேதவனப் பெருமான் என்று பெயர்.
தமது ஞான திருஷ்டியால் அக்குழந்தையின் மகிமையை அறிந்து, பரஞ்சோதி முனிவர் அதற்கு மெய் கண்டார் என்று திருநாமம் சூட்டி பரம்பரை சொத்தான சிவஞான போதத்தை அவருக்கு உபதேசித்தருளினார். மெய்கண்டார் தமிழகத்திற்கு சிவஞான போதத்தை அளித்தார்.
பின்னர், மெய்கண்டார் அருள் நந்தி என்பவருக்கு இதை உபதெசித்து, அந்நூலை விரித்துரைக்க வேண்டும் என்று கட்டளையிட்டார். குருநாதனின் கட்டளையைத் தலை மேற் கொண்டு, அருள் நந்தி “சிவஞான சித்தியார்” என்ற நூலைத் தந்தருளினார். அம்மகானின் சீடர்களில் ஒருவரான ஸ்ரீ தெய்வசிகாமணி தேசிக பரமாசாரிய மூர்த்திகள்தான் திருவண்ணாமலைக்கு ஒன்றரை மைல் தொலைவில் வேட்டைவலம் பாதையிலுள்ள குருமூர்த்தத்தில் சமாதிக் கோயில் கொண்டிருக்கிறார்.
ஆண்டவனைத் தீண்டி ஆராதனை செய்யும் பேறு பெற்ற ஆதி சைவ பரம்பரையில் திருவண்ணாமலை திருத்தலத்தில் அவதரித்தவர் ஸ்ரீ தெய்வசிகாமணி சுவாமிகள். அவரது காலத்தை நிச்சயமாகக் குறிப்பிட முடியவில்லை. அம்மகான் சுமார் ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
தெய்வசிகாமணிக்கு அப்போது பதினாறு வயதிருக்கும். ஸ்ரீ ரமண பகவான், பாலரமணராக திருவண்ணாமலைக்கு வந்த அதே வயது. ஒரு நாள் மாலை நெரம். தெய்வசிகாம்னியின் தந்தையார் ஆலயத்தில் அண்ணாமலையாருக்கு திரு முழுக்கு செய்வித்து வழிபாடு செய்து கொண்டிருந்தார். தெய்வ மகன் திருக்கொடி மரத்தின் கீழ், பக்தியால் மனம் கசிந்துருக தன்னை மறந்த நிலையில் நின்றிருந்தார். பரவசம் மேலிட்டது. கண்ணீர் பொங்க, கானம் பொழிந்தார். கல்லும் கரைந்தது. சட்டென்று கொடி மரம் “பளிச்” சென்று மின்னியது. தெய்வ அமைதி மண்டபத்தை சூழ்ந்தது. மணியோசை முழங்கியது. அண்ணாமலையார் இடப வாகனத்தில் அமர்ந்தவராய் அங்கு தரிசனம் தந்தார். அடுத்த கணம் குருமுனி வடிவத்தில் எதிரில் தோன்றினார். மெய் சிலிர்த்து நின்ற தெய்வ சிகாமணி, முனிவரது காலில் விழுந்தார்; எழுந்தார்; ஆனந்தத்தில் கூத்தாடினார். “அன்பனே, நீ அருள்நந்தியை அடைவாயாக” என்று கூறி இறைவன் மறைந்து விட்டான்.
முனிவர் உருவில் திருக்காட்சியளித்த இறைவனைக் காணாது தெய்வசிகாமணி திகைத்தார். அங்குமிங்கும் தேடினார். பித்துப் பிடித்தவர் போல் காணப்பட்டார்.
அப்போது பூஜையை முடித்து விட்டு வந்த தந்தை, மைந்தனை வீட்டுக்கு வரும்படி அழைத்தார். பேரின்ப வீட்டுக்குச் செல்ல வழி தெரிந்து விட்ட மகன் பெற்றோர் வீட்டிற்கா வருவார்? எனவே தந்தையுடன் செல்ல மறுத்து விட்டார். ஆண்டவன் காட்டிய ஞாசிரியனைத் தேடிக் கொண்டு திருத்துறையூருக்குப் புறப்பட்டு விட்டார்.
திருத்துறையூரிலிருந்த அருள் நந்தி சிவாசாரியாரிடமும் இறைவன் கனவில் தோன்றி, அருணாசலத்திலிருந்து அருட்சீடர் வரும் செய்தியைத் தெரிவித்து, அவருக்கு ஞானோபதேசம் செய்யும்படி கூறி மறைந்தார். சீடருக்காக ஆண்டவன் கட்டளையை சிரமேற்கொண்டு காத்திருந்தார் அருள் நந்தி. அருணையம்பதிலிருந்து தெய்வசிகாமணி வந்ததும், அவரை இரு கர்ம நீட்டி, அன்புடன் வரவேற்றார் அருள் நந்தி சிவாசாரியார். ஆசிரியரது திருவடிகளைக் கண்ணீரால் நனைத்தார் சீடர். தமது நாற்பத்தெட்டு சீடர்களில் ஒருவராக அவரை ஏற்றுக் கொண்டார். திருக்கைலாய பரம்பரையில் வந்த சிவ ஞான போதத்தை உபதேசித்தருளினார்.
தெய்வசிகாமணி சுவாமிகள் இறைவன் சுயம்பு மூர்த்தியாக தமது ஆத்மார்த்த பூஜைக்கு எழுந்தருள வேண்டும் என்று ஒரு பேராவல் கொண்டார். அதை ஆசிரியரிடம் தெரிவித்தார். அவரைத் திருக்காளத்திக்குச் செல்லுமாறு பணித்தார் குருநாதர்.
திருக்காளத்திக்குச் சென்ர தெய்வசிகாமணி சுவாமிகள், காளத்தியப்பர் சந்நிதியில் கண்ணீர் மல்க நின்று தொழுதார். அவர் முன் காளத்தியப்பர் தோன்றி, “அன்பனெ, கோயிலின் அருகிலுள்ள புற்றில் நாம் சிவலிங்க வடிவமாய் திகழ்கிறோம். அங்கு வருவாயாக” என்று கூறி மறைந்தார். பரபரக்க ஓடினார் தெய்வசிகாமணி சுவாமிகள். காளத்தியப்பர் கூறியவாறே அங்கு ஒரு சிவலிங்கம் இருக்கக் கண்டு கையிலெடுத்து, மார்போடு அணைத்து மட்டிலா மகிழ்ச்சியுற்றார். தற்போது குன்றக்குடி-திருவண்ணாமலை ஆதீன மடத்தில் எழுந்தருளியிருப்பது அந்தக் காளத்தி பெருமானே.
ஸ்ரீ தெய்வசிகாமணி தேசிக குரு மூர்த்தியால் நிறுவப் பெற்றதெ திருவண்ணாமலை ஆதீனம். இந்த குரு பரம்பரையில் பதினேழாவது பட்டத்தில் எழுந்தருளிய குரு முனிவர் ஸ்ரீ நாகலிங்க தேசிக குருமூர்த்திகள், தென்னாட்டில் திருத்தல யாத்திரை செய்து விட்டு, ஸ்ரீ ரமணர் பிறந்த திருத்தலமான திருச்சுழியலுக்கு வந்தார்கள். அப்போது ராமநாதபுர்ம அரசரின் வேண்டுகோலுக்கிணங்கி, அம்மாவட்டத்திலுள்ள பிரான் மலையில் குரு பீடத்தை நிறுவினார்கள். அங்கு தமது சீடர் ஒருவரை மடாதிபதியாக்கி விட்டு, குருநாதர் திருவண்ணாமலைக்கு எழுந்தருளி விட்டார்கள். நாளடைவில் இந்த ஆதீனத்தின் குருமார்கள் குன்றக்குடியில் வந்து தங்கினார்கள். காளத்தியப்பரை மடாலயத்தில் எழுந்தருளச் செய்தார்கள். அன்று முதல் திருவண்ணாமலை ஆதீன மடாலயம் குன்றக்குடியில் அருளாட்சி புரிந்து வருகிறது. தற்போது ஸ்ரீ தெய்வசிகாமணி அருணாசல தேசிக சுவாமிகள் 45-வது பட்டத்தில் எழுந்தருளி இறைப்பணியாற்றி வருகிறார்கள்.
குன்றக்குடி – திருவண்ணாமலை ஆதீனத்தின் ஆதி குருநாதரான தெய்வ சிகாமணி தேசிக சுவாமிகள் திருவருணையிலிருந்த போது பல அற்புதங்களைச் செய்திருக்கிரார். ஒரு சமயம் அரசனின் பட்டத்துக் குதிரை திடீரென கீழே விழுந்து மாண்டது. அவ்வழியே வந்த குருநாதரை, அடி பணிந்து குதிரையைப் பிழைக்க வைக்கும்படி கோரினார். குருமுனிவர், புன்னகை அரும்ப, திருமந்திரத்தை ஓதி, திருநீற்றைத் தெளித்தார். உறக்கத்திலிருந்து விழிப்பது போல் குதிரை எழுந்து நின்றது.
ஞாசிரியர்னும், யோகசித்தருமான தெய்வசிகாமணி தேசிக சுவாமிகள் சமாதிக் கோயில் கொண்டிருக்கும் குரு மூர்த்தத்தில் ஸ்ரீ பால ரமணர் ஒன்றரையாண்டு காலம் தங்கி, தவம் புரிந்திருக்கிறார். அந்த மகானின் அருளாசி பால ரமணரின் ஞான வைராக்கிய நிலைக்கு உறுதுணையாக இருந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
உடல் மெலிந்து, தலைமுடி சடையாகி, நகங்கல் நீளமாக வளர்ந்து, ஜடப் பொருளாக அமர்ந்து, சமாதியில் ஆழ்ந்திருந்த பால ரமணரைக் கண்டு உலக்ம வியந்தது.
அந்த மண்டபத்தின் சுவரில் சாய்ந்தபடி உட்கார்ந்து கொண்டிருந்ததால், அவருடைய முதுகின் அடையாளம் இன்னும் அங்கே லேசாகத் தெரிகிறது. அவர் அமர்ந்திருந்த போது தரையெல்லாம் ஒரே எறும்புப் புற்று, தரிசிக்க வந்தவர்களெல்லாம் “ஐயோ, அப்பா” என்று எறும்புக்கடி பொறுக்க முடியாமல் கதறிக் கொண்டு ஓடினர். ஆனால், எத்தனை எறும்புகள் கடித்தாலும், ரத்தம் கசிந்தாலும் ரமணர் அப்படியே உட்கார்ந்திருந்தார்.
அண்ணாமலைத் தம்பிரானும், உத்தண்டி நயினாரும் பால ரமணரை அக்கறையோடு கவனித்துக் கொண்டனர். தம்பிரான் சமாதிக் கோயிலின் நைவேத்தியத்தில் ஒரு பிடியை ரமணருக்கு ஆகாரமாக அளித்து வந்தார். சில நாட்களில் பக்தர்கள் கொண்டு வந்து கொடுத்த ஆகாரங்களையெல்லாம் கலந்து ஒரு கவளத்தை அவருக்குக் கொடுப்பார்.
அண்ணாமலைத் தம்பிரானுக்கு பால ரமணரின் மீது பெரும் பக்தி ஏற்பட்டு விட்டது. இவருக்கு சேவை செய்வதிலும், உணவளிப்பதிலும் அவருக்கு திருப்தி ஏற்படவில்லை. சிவலிங்கத்திற்குச் செய்வது போல் ரமணருக்கு அபிஷேகம் செய்ய வேண்டும் என்று தீர்மானித்து எண்ணெய், பால், சந்தனம் போன்ற பொருட்களை சேகரிக்க ஆரம்பித்தார். இது பால ரமணருக்குப் பிடிக்கவில்லை. உடனெ ஒரு கரிக்கட்டியை எடுத்து “இதற்குத் தொண்டு இதுவெ” என்று சுவரில் எழுதி வைத்து விட்டார். மறுநாள் தம்பிரான் உணவு கொண்டு வந்த போது, ரமணர் சுவரில் தாம் எழுதி வைத்திருந்ததைக் காட்டினார். “உணவு கொடுப்பதோடு நிறுத்திக் கொள்ளுங்கல். அபிஷேக ஆராதனைகள் எல்லாம் எனக்கு வேண்டாம்” என்பதைத் தெளிவாகக் கூறி விட்டார்.
இதற்குப் பிறகுதான் “பிராம்மண சுவாமிக்கு நன்றாக எழுதப் படிக்கத் தெரியும் என்பது எல்லோருக்கும் தெரிந்தது. அவர் யார் என்பதை எப்படியாவது தெரிந்து கொள்ள வேண்டும் என்று அநேகருக்கு விருப்பம் இருந்தது. எத்தனையோ முரை கேட்டுப் பார்ர்த்தார்கள். பால ரமணர் பேசவும் இல்லை; எழுதிக் காட்டவும் இல்லை. கடைசியாக ஒரு நால் வேங்கடராமய்யர் என்பவர் மீண்டும் மீண்டும் கேட்டபோது, பால ரமணர் “வேங்கடராமன், திருச்சுழி” என்று எழுதிக் காட்டினார். திருச்சுழி எங்கே இருக்கிறது என்று வேங்கடராமய்யருக்குப் புரியவில்லை. அப்போது ரமணர் பக்கத்தில் இருந்த பெரிய புராண புத்தகத்தைப் பிரித்துக் காட்டி, அதில் சுந்தரமூர்த்தி சுவாமிகளால் பாடப் பெற்ற தலமான திருச்சுழியின் பெயரைச் சுட்டிக் காட்டினார்.
தன்னந்தனியாக வீட்டை விட்டு வெளியேறி அருணாசலத்திற்கு வந்து, ஆத்மானுபவத்தில் லயித்து, சமாதி கூடி, சச்சிதானந்த சொரூபமாய் பிரகாசித்துக் கொண்டிருந்த பால ரமணரைத் தரிசிக்க வரும் அன்பர்கள் நாளும் பெருகிக் கொண்டு வந்ததால், கூட்டத்தைக் கட்டுப்படுத்த அவரோடு யாராவது இருக்க வேண்டியது அவசியமாயிற்று. குருமூர்த்தத்திற்கு வந்த பிறகு அண்ணாமலைத் தம்பிரானும், உத்தண்டி நயினாரும் அவருக்குத் தொண்டு புரிந்து வந்தனர். ஒரு நாள் அண்ணாமலைத் தம்பிரான் மடத்திற்குப் புறப்பட்டுச் சென்றார். பின்னர் ஒரு வருடத்திற்கு அவர் திரும்பி வரவேயில்லை. அவர் அங்கு இல்லாத போது உத்தண்டி நயினாரும் தம் மடத்திற்குச் சென்று விட்டார். அச்சமயத்தில்தான் மலையாளி அன்பரான பழனி சுவாமி அருட்தொண்டு புரிய குரு மூர்த்தத்திற்கு வந்து சேர்ந்தார்.
பழனிசுவாமி ஐயன் குளம் விநாயகர் கோயிலில் பூஜை செய்து கொண்டிருந்தார். பூஜை முடிந்ததும், கணபதிக்குப் படைத்த நைவேத்தியத்தையெ உண்பார். அந்த ஒரு வேளை உணவுதான். அதில் உப்பு கூட இருக்காது. பழனிசுவாமியிட்ம ஒரு நால் சீனுவாச ஐயர் என்ற அன்பர் வந்தார். “சுவாமி, நீங்கள் இந்தக் கல்லுச்சாமிக்குத் தொண்டு புரிந்து வருகிறீர்களே? குரு மூர்த்தத்தில் ஒரு உயிருள்ள சாமி உட்கார்ந்து கொண்டிருக்கார். துருவனை போல் மாசில்லா தவத்தில் அவர் ஈடுபட்டிருக்கிறார். அவருக்குத் தொண்டு புரிய தற்போது ஒருவருமில்லை. நீங்கல் அங்கு போய் சேவை செய்து வாருங்கள் என்று கூறினார். அதைக் கேட்ட பழனிசுவாமி ஒருநால் குருமூர்த்தத்திற்குச் சென்று பால ரமணரை தரிசித்தார். அந்தக் கணமே அவருக்கு அடிமையானார். தம் உடல், பொருள், ஆவியை அன்னாருடைய சேவைக்கே அர்ப்பணித்து விடுவது என்று உருதி பூண்டார். சிறிது நாட்கள், கோயிலுக்கும், குருமூர்த்தத்திற்குமாக அலைந்து கொண்டிருந்த பழனிசுவாமி, இறுதியாக அந்த பாலயோகியிடமே தஞ்சமடைந்து விட்டார். அந்த ஞான குருவை சம்சாரக் கடலைக் கடக்கும் ஓடமாகக் கருதி, நிழல் போல் பின் தொடர்ந்தார். சுமார் இருபத்தோரு வருடங்கள் அவருக்கு உள்ளத் தூய்மையுடன் கைங்கர்யம் செய்யும் பாக்கியத்தைப் பெற்ரார்.