சின்ன சேஷாத்ரியைப் பெரிய சேஷாத்ரியிடம் துரத்தியதே இந்தச் சிறுவர்கள் தான். தங்களையும் அறியாமல் ஒரு நல்லதைச் செய்தார்கள். எது நல்லது? எது தீயது? என்று யார் தீர்மானிப்பது?
மோன தவத்துக்கு இடையூறுகள் அதிகமாயின. இறுதியில் ஒரு நாள் சிறுவர்களின் தொந்தரவு கட்டுக்கடங்காமல் போகவே, தியானம் செய்ய முடியாமல், ஆயிரங்கால் மண்டபதத்திலுள்ள பாதாள லிங்கத்தை அடைக்கலம் அடைந்தார் பால ரமணர். அது கீழே ஒரு பள்ளத்தில் இருந்தது. அங்கு இருள் மண்டிக் கிடந்தது. எறும்பும், பூச்சியும், பல்லியும், பூரானும், குளவியும், தேளும் குடியிருந்தன. உடல் உணர்ச்சியே அற்று சமாதியில் ஆழ்ந்திருந்த பால ரமணரின் ரத்தம் அவற்றுக்கு நல்ல உணவாயிற்று. அவர் தொடையைக் கடித்தன. கொட்டின, உறின்சின. அந்த இடமெல்லாம் புண்ணாகி விட்டது. இரத்தமும் சீழும் வடிந்தன. தபோதனருக்கு ஒன்றுமே தெரியாது. அவருக்குத் தெரிந்ததெல்லாம், அருணாசலத் தியானம், அப்பனின் நினைவு. ஆத்ம தரிசனம், பரிபூரண சச்சிதானந்த அனுபவம்.
அந்த நிலையிலும், விளையாட்டுச் சிறுவர்கள் அவரை விடுவதாயில்லை. அவர்களுடைய அஞ்ஞானத்தை விட பயங்கரமான ஓர் இருட்டில் அமர்ந்திருந்த ஞானச்சுடரின் மீது கற்களை வீசினர். கையில் கிடைத்ததையெல்லாம் வாரிப் போட்டனர்.
அந்த வழியே சென்று கொண்டிருந்த வெங்கடாசல முதலியார் என்பவர் இந்தக் காட்சியைக் கண்டார். அவருக்குக் கோபம் தாங்க முடியவில்லை. கையில் ஒரு குச்சியை எடுத்துக் கொண்டு அந்தப் பையன்களையெல்லாம் விரட்ட, அவர்களெல்லாம் ஓடி விட்டனர். அச்சமயத்தில் பாதாள லிங்கத்தின் இருளிலிருந்து சேஷாத்ரி சுவாமிகள் வெளியே வந்ததைப் பார்த்த வெங்கடாசல முதலியாருக்குத் தூக்கிவாரிப் போட்டது. இவர் எங்கே இந்த இடத்திலிருந்து வருகிறார்? இங்கே என்ன செய்கிறார்?
“மகானை மகாந்தான் அறிவார். அருணாசலத்தின் ஒலி கேட்டு, அருணாசலத்தை நாடி வந்து, அருணாசலமாகவே ஆகி விட்ட பால யோகியை சேஷாத்ரி சுவாமிகள் அடையாளம் கண்டு கொண்டு, அவர் தவத்தைக் காக்கும் பொருட்டு அங்கு வந்திருக்கிறார். பையன்கள். எறிந்த கற்களையெல்லாம் தான் தாங்கிக் கொண்டார். பராசக்தி, திருவண்ணாமலையில் தவமிருந்த போது, குமரன் தாய்க்குத் துணை புரிந்திருக்கிரான். இது அருணாசல புராணம். பின்னர் அந்தப் பராசக்தியின் அம்சமான சேஷாத்ரி சுவாமிகள், குமரனின் அம்சமான பால ரமணரின் தவத்திற்குத் துணை நின்றிருக்கிறார். இது அருணாசல மகிமை..
பாதாள லிங்க குகையிலிருந்து வெளியே வந்த சேஷாத்ரி சுவாமிகளை வெங்கடாசல முதலியார் அணுகி, “சுவாமி, பசங்க எறிஞ்ச கல்லு, உங்க மேலே பட்டுதா?” என்று கவலையுடன் கேட்டார். சேஷாத்ரி சுவாமிகள் வழக்கப்படி பலமாகச் சிரித்தார். தலையை வேகமாக ஆட்டினார்.
இல்லை…..இல்லை…..ஊஹூம்….. என் மேலே படலே……உள்ளே போய்ப் பாரு, சின்னசாமி உட்கார்ந்துண்டிருக்கு, என்று கூறி விட்டு ஓட்டமும் நடையுமாக விரைந்து விட்டார் அவர். மெள்ள நடந்து சென்று கீழே எட்டிப் பார்த்தார் முதலியார். அங்கு மை இருட்டாக இருந்ததே தவிர ஒன்றுமே கண்ணுக்குத் தெரியவில்லை. சாதாரணமாக அது இருள் கவிந்த இடம், அதுவும் வெளிச்சத்திலிருந்து போனால் கேட்கவே வேண்டாம்!
சற்றைக்கெல்லாம் மெல்லிய திரை விழுந்தாற்போல வெளிச்சம் படர்ந்தது. அதில் லேசாக ஓர் இள முகம் தெரிந்தது. அது கண்களை மூடி, அசையாமல் இருந்தது. அதைக் கண்டு திடுக்கிட்டுப் போனார் வெங்கடாசல முதலியார்.
மறுகணம், மார்பு படபடக்க, வெளியெ வந்தார். நேரே நந்தவனத்திற்கு ஓடினார். அங்கிருந்த ஒரு சாதுவிடம் தாம் கண்ட காட்சியைக் கூறினார். அந்த சாது நாலைந்து சீடர்களை அழைத்துக் கொண்டு வேகமாக முதலியாரைப் பின் தொடர்ந்தார்.
எல்லோரும் அந்தப் பள்ளத்தில் இறங்கினார்கள். ஆடாஅமல் அசையாமல் கற்சிலையைப் போல் அமர்ந்திருந்த பாலரமணரை அப்படியே தூக்கிக் கொண்டு, மண்டபத்தைக் கடந்து கோபுரத்து இளையனார் என்று அழைக்கப்படும், சுப்பிரமணிய சுவாமி சந்நிதி மண்டபத்திற்கு வந்து, அவரை அதே நிலையில் உட்கார வைத்தார்கள். அப்போதுதான் அவர் தொடையிலும், பின்புறத்திலும் இருந்த புண்களைப் பார்த்தார்கள். அவர்களுடைய கண்களில் ரத்தம் கசிந்தது. அவரது யோகத்தைத் கலைக்க மனமில்லாமல் சத்தம் செய்யாமல் அவ்விடத்தை விட்டு நகர்ந்து விட்டார்கள்.
அங்கு வந்தது முதல் பாலரமணரை பிராம்மண சுவாமி என்றே எல்லோரும் அழைத்தார்கள். அவரை அங்கிருந்த சாமியார்கள் “கவனித்து”க் கொண்டார்கள். முக்கியமாக அந்த மண்டபத்திலிருந்த மௌன சுவாமிகள் மிக அக்கறையோடும் பரிவோடும் கவனித்துக் கொண்டார்.
இந்த மௌன சுவாமிகள் யார் என்று பி. வி. நரசிம்ம சுவாமிகள் தமது நூலில் குறிப்பிடவில்லை. திருக்குற்றாலத்தில் அநேக ஆண்டுகள் வாழ்ந்து, தத்தாத்ரேய பீடத்தை ஸ்தாபித்து 1943-ம் ஆண்டு சித்தியடைந்த ஆந்திரத்தைச் சேர்ந்த மௌன சுவாமிகளாக இருக்கலாம் என்று தோன்றுகிறது. சிவய்யா என்று அழைக்கப்பட்ட அவர், குடும்பத்தை விட்டு சந்நியாசம் ஏற்று, வட நாட்டில் தல யாத்திரை செய்து விட்டு, தெற்கு நோக்கி வந்த போது, அருணாசலத்தின் நிழலிலும், சில வருடங்கள் தங்கி இருந்ததாக வரலாறு கூறுகிறது. அவர் திருவண்ணாமலை கோயிலுள்ள பாதால லிங்க குகையில் சிறிது காலம் தங்கியிருந்தார் என்றும், ஸ்ரீ ரமணரையும், ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகளையும் சந்தித்திருப்பதாகவும் தெரிய வருகிறது.
குற்றாலம் ஸ்ரீ மௌனானந்த சுவாமிகளின் சரித்திரத்தை எழுதியுள்ள திரு எஸ். வெங்கடசுப்பிரமணிய ஐயர் 1921-ம் ஆண்டு தமது குடும்பத்தாருடன் திருவண்ணாமலைக்குச் சென்று ஸ்கந்தாசிரமத்தில் ஸ்ரீ ரமண பகவானைத் தரிசித்த போது, பகவன் குற்றாலம் மௌன சுவாமிகளைத் தமக்கு மிகவும் நன்றாகத் தெரியும் என்றும், அவரைக் கேட்டதாகச் சொல்லும்படியும் அவரிடம் கூறியிருக்கிறார். மௌனசுவாமிகளும், தாம் பாதால குகையில் சிறிது காலம் வாசம் செய்த போது, ஸ்ரீ ரமணரும், ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகளும், அங்கு வந்திருப்பதாக கூறியிருக்கிரார்.
அந்த மௌன சுவாமிகள் உண்ணமுலையம்மனுக்கு அபிஷெகமான தீர்த்தத்தை ஒரு பாத்திரத்தில் ஏந்தி வந்து, பால ரமணருக்குக் கொடுப்பார். அதில், பலவித அபிஷேகப் பொருட்கள் கலந்து இருக்கும். அதை பால ரமணர் ஆனந்தமாகப் பருகுவார்.
பார்க்கிறவர்களுக்கு பரிதாபமாக இருந்தது. அவருக்கோ அது பஞ்சாமிர்தமாக இருந்தது. அம்பாளின் பிரசாதமல்லவா?
இரண்டு மாதங்களுக்கெல்லாம் பால ரமணர் அங்கிருந்து எழுந்து சென்று, கோயிலில் பல இடங்களில் அமர்ந்திருந்தார். நந்தவனத்தில் அரளிச்செடியின் அடியிலும், வாகன மண்டபத்தில் வாகனங்களுக்கடியிலும், இலுப்பை மரத்தடியிலும் தியான சமாதியில் ஆழ்ந்திருப்பார். அங்கெல்லாமும் சிறுவர்களின் தொந்தரவு தொடர்ந்து வந்தது. சோதனைகள், மகான்களைத் தொடரும் நிழலன்றொ!
ஆந்த ஆண்டு கார்த்திகை தீபத்தின் போது, தரிசனத்திற்கு வந்த பக்தர் கூட்டம் ஸ்ரீ பால ரமணரையும் காண வந்தது. ஓயாத குட்டம் எந்நேரமும் தரிசனத்திற்கு வந்ததால் பால ரமணரின் தவ வாழ்வுக்கு அது பெரும் தடியயாக இருந்தது. அவருக்கு உதவி புரிய ஒருவரை இறைவன் அனுப்பி வைத்தான்.
அப்போது, அங்கு ஒரு புது சீடர் வந்து சேர்ந்தார். அவர் பெயர் உத்தண்டி நயினார். அவர் ஆத்மீகத் துறையில் அதிகம் படித்திருந்தார். ஆனால், மனச்சாந்தி கிடைக்கவில்லை. அதைத் தேடி அலைந்தவர், இலுப்பை மரத்தடியில் ஞானமெ உருவான பால ரமணரை கண்டதும், இவர் நிழலில் தான் தமக்கு சாந்தி கிடைக்கும் என்று உணர்ந்து அவரைத் தஞ்சம் அடைந்தார். அவர் அருகில் நின்று யோக வாசிஷ்டத்தையும், கைவல்ய நவநீதத்தையும் பாராயணம் செய்து கொண்டிருப்பார். மகான் மௌனத்தைக் கலைத்து தமக்கு ஓர் உபதேச மொழியாவது அருள மாட்டாரா, அதனால் பரிபூரண சாந்தி கிடைக்காதா என்று காத்திருப்பார்.
சில நாட்கள் வேறு அலுவல் காரணமாக அவர் பால ரமணரை தனிமையில் விட்டு விட்டுச் செல்ல வேண்டி நேர்ந்தது. அப்போது குறும்புக்காரர்களின் தொந்தரவு அவர் தியானத்தைக் கலைத்தது. இதை விட தனிமையான இடம் கிடைக்காதா என்று நினைத்தார் பால ரமணர். உடனே அவரை அழைத்துச் செல்ல ஒருவர் வந்தார்.
ஒரு நால் உத்தண்டி நயினாருடன் அண்ணாமலைத் தம்பிரான் என்பவர் வந்தார். வேட்டைவலம் பாதையில், குன்றக்குடி – திருவண்ணாமலை ஆதீனத்தின் ஆதி குருவினுடைய சமாதி ஆலயம் ஒன்று இருக்கிறது. அதற்கு குருமூர்த்தம் என்று பெயர். குருவின் சமாதிக்குப் பூஜை செய்து கொண்டிருந்த தம்பிரான், கோஷ்டியாக தேவாரம் பாடிக் கொண்டு, பிச்சையெடுத்து, ஏழைகளுக்கு அன்னதானம் செய்வது வழக்கம்.
அவர், இலுப்பை மரத்தடியில் இருந்த பால ரமணரின் தியானத்திற்குக் குறுக்கே நின்ற இடையூறுகளைக் கண்டு கலங்கினார். அவரை நெருங்கி, குருமூர்த்தத்தில் வந்து அமரும்படி கண் கலங்க வேண்டினார். பாலரமணரும் அவரது வேண்டுகோலை மறுக்க மனமில்லாமல், குருமூர்த்தத்திற்குச் சென்றார்.