ரமண சரிதம் – 7

கையில் சாதத்துடன் வீதியிலுள்ள சாஸ்திரிகள் ஒருவர் வீட்டிற்குச் சென்றார் வேங்கடராமன். குடிக்க நீர் கேட்டார். அதைக் கொண்டு வருவதற்குள் சமாதியில் ஆழ்ந்து, “உறக்கத்தில்” சற்று தூரம் நடந்து சென்று கீழே விழுந்து விட்டார். விழிப்பு ஏற்பட்டது, சிதறிய அன்னத்தை எடுத்துப் புசித்து, நீரருந்தி, நித்திரையில் ஆழ்ந்து விட்டார்.

மறுநாள், ஆகஸ்ட் 31-ம் தேதி, கோகுலாஷ்டமி புண்ணிய தினம். வெங்கடராமன் அருணாசலத்திற்குப் புறப்பட்டாக வேண்டும். எப்படிப் போவது? இருபது மைல்கள் நடப்பதா? அது முடியாத காரியம்.

ரயிலில் செல்ல வேண்டுமானால், பணம் வேண்டுமே! சிந்தித்தார் சிறுவர் வேங்கடராமன். அப்போது காதில் இருந்தத் தங்கக் கடுக்கன் அவரது நினைவுக்கு வந்தது. அதை யாரிடமாவது அடகு வைத்து விட்டால் என்ன?

ஆந்த ஊரில் முத்துகிருஷ்ண பாகவதர் என்று ஒருவர் இருந்தார். அவர் தேர்ச்சி பெற்ற சங்கீத வித்துவான். அவருடைய இல்லத்திற்குச் சென்றார் வேங்கடராமன். ஸ்ரீ கிருஷ்ண ஜயந்தி அன்று கிருஷ்ணனே தங்கள் வீடு தேடி வந்து விட்டதாக மகிழ்ச்சி அடைந்தால் பாகவதரின் மனைவி.

வேங்கடராமனுக்கு மகிழ்ச்சியுடன் உணவளித்து உபசரித்தனர் அத்தம்பதி. பின்னர் மெல்லக் கடுக்கனைப்  பற்றிய பேச்சை எடுத்தார் வேங்கடராமன். திருவண்ணாமலைக்குப் போக தமக்குப் பணம் வேண்டும் என்றும், தம் கடுக்கனை வைத்துக் கொண்டு, பணம் தரும்படியும் பாகவதரிடம் கேட்டார். கடுக்கனை வாங்கிப் பார்த்தார் பாகவதர். அது இருபது ரூபாய் பெறும் என்று மனத்துக்குள்ளேயே எடை போட்டு, வேங்கடராமனிடம் நான்கு ரூபாய் கொடுத்தார். கடுக்கனை பிறகு மீட்டுக் கொள்வதற்காக தமது விலாசத்தையும் ஒரு சீட்டில் எழுதிக் கொடுத்தார்.

வேங்கடராமன் பாகவதரின் வீட்டை விட்டுப் புறப்படுவதற்கு முன், பாகவதரின் மனைவி அவரிடம் கோகுலாஷ்டமிக்காகச் செய்த பட்சணங்களை ஒரு காகிதத்தில் கட்டிக் கொடுத்தாள். மாலையில் கண்ணனுக்கு நைவேத்தியம் செய்வதற்கு முன்பே சிறுவருக்கு அதைக் கட்டிக் கொடுத்து விட்டால். அப்படிச் செய்ததை அந்த அம்மால் அபசாரமாகக் கருதவில்லை. வீடு தேடி வந்த பிள்ளை, சாதாரணமான பிள்ளையாக அவள் தூய உள்ளத்திற்கு தோன்றவில்லை.

வெளியே வந்த வேண்கடராமன், பாகவதர் எழுதிக் கொடுத்த விலாசத்தை கிழித்துப் போட்டார். எவரிடம் போனால் பிறகு வேறெந்த விலாசத்தையும் தேடி அலைய வேண்டாமோ, அந்தப் பரம்பொருளிடம் போகிறவருக்கு மனிதரின் விலாசம் எதற்கு? பிறவி எடுத்தவர்களை பாவப் படுகுழியிலிருந்து மீட்கப் போகிறவர், சாதாரணக் கடுக்கனை மீட்பதற்காகவா திரும்பி வரப்போகிறார்?

அன்று இரவு திருக்கோயிலூர் ரயில் நிலையத்தில் உறங்கினார் வேங்கடராமன். ஸ்ரீ உலகளந்தப் பெருமாளும், ஸ்ரீ வீரட்டேசுவரரும், ஸ்ரீ ரகோத்தம சுவாமிகளின் பிருந்தாவனமும்  துலங்கும் ஞான பூமியில் இரண்டு இரவுகள் கழித்தார் அவர்.

திருவண்ணாமலைக்கு ரயிலில் சென்று கொண்டிருந்த வேங்கடராமன், தம் வீட்டைப் பற்றி ஒரு கணம் நினைத்துக் கொண்டார். “அலமாரியில் வைத்து விட்டு வந்த அந்தக் கடிதத்தைப் படித்து விட்டு வீட்டில் இருந்தவர்கள் எங்கெல்லாம் தேடினார்களோ? துக்கம் தாங்காமல் அம்மா ரொம்பவும் அழுதிருப்பாளோ?….. ரயிலோடு வேங்கடராமனின் சிந்தனையும் ஓடியது. சிறுவரின் கன்னத்தில் ஒரு கண்ணீர் முத்தும் உருண்டோடியது.

வெங்கடராமன் பிரயாணம் செய்த புகை வண்டி திருவண்ணாமலையை நெருங்கிக் கொண்டிருந்தது. அருணாசலத்தைத் தரிசிக்கத் துடித்துக் கொண்டிருந்த சிறுவரின் மனம், ரயில் இன்னும் வெகமாக போகக் கூடாதா என்று ஏங்கியது.

புது ஊரைப் பார்க்கப் போகிறோம் என்ற ஆர்வமும் ஆவலும் இருந்த போதிலும், பிறந்த ஊரைப் போல் அது இருக்குமா என்ற சந்தேகம் அச்சிறுவருக்கு தோன்றாமல் இல்லை. திருச்சுழியைப் போல உலகில் வேறு ஊர் இருக்க முடியுமா? அந்தக் கோயிலையும், குளத்தையும் போல் வேறு எங்காவது காண முடியுமா? என்று தனக்குத் தானே கேட்டுக் கொண்டார் அவர்.

பூமிநாதர் கோயிலுள்ள கௌவைக் கடல் என்ற திருக்குளத்தில் இள வயதில் ஆசை தீரக் குளித்தும் நீச்சலிட்டும் கும்மாளம் அடித்தது அவர் நினைவுக்கு வந்தது. அந்தத் தண்ணீரில் கந்தகம் கலந்திருப்பதால் அவர் கால்களில் அணிந்திருந்த வெள்ளிக் காப்பு சற்று கறுத்து விடும். அதை அம்மா பார்த்து விட்டால், குளத்தில் குளித்தாயா என்று கோபித்துக் கொள்வாள். அதற்காக, குளித்து கரையேரியதும் அந்த வெள்ளிக் காப்பைத் துணியால் தேய்த்துத் தேய்த்து சுத்தம் செய்வார். அந்த நாட்களை நினைத்த போது அவருக்கு சிரிப்பு வந்தது.

கருவறையில் திருமேனிநாதர் எத்தனை கம்பீரமாக வீற்றிருப்பார். துணைமாலையம்மை என்ற சகாயவல்லி அம்பிகையின் கண்களில் தான் எத்தனை கருணை! ஒரு சமயம் வேங்கடராமனுக்கு தாங்க முடியாத துக்கம் வந்து விட்டது. அழுகை அழுகையாக வந்தது. அதற்கு என்ன காரணம் என்று கூட அவருக்குத் தெரியாது. சின்ன வயதுதானே! என்ன செய்வது என்று புரியாமல், நேரே கோயிலுக்குச் சென்றார். சகாயவல்லி அன்னையின் சந்நிதியில் போய் அமர்ந்தார். கண்களை மூடி, கைகளைக் கூப்பி, “அம்மா, எனக்கு அழுகையா வரது, என்னைக் காப்பாத்து தாயெ” என்று வேண்டிக் கொண்டார். சற்றைக்கெல்லாம், அவரையும் அறியாமல் ஓர் ஆனந்த ஊற்று அவருள் பெருக்கெடுத்துப் பொங்கி வழிந்தது. அது உடலெங்கும் பரவி, அவரை உலுக்கியது. பரவசத்தில் மேனியெல்லாம் சிலிர்த்தது. எல்லாமே அவருக்கு  இன்பமயமாயிருந்தது. எல்லோருமே சந்தோஷப்படுவது போல் தோன்றியது. துள்ளிக் குதித்தபடி சிரித்துக் கொண்டே வீட்டுக்கு ஓடி வந்தார்.

இத்தனை ஆண்டுகள் கழித்து அந்த நிகழ்ச்சியை நினைத்துக் கொண்டவர், அன்று அனுபவித்த அதே ஆனந்த லயிப்பில் ஒரு கணம் ஆழ்ந்தார்.

பெற்ற தாயையும், பிறந்த மண்ணையும் நன்றியுடன் நினைக்காதவர்கள் இருக்க முடியுமா? முற்றும் துரந்தவர்களானாலும், தம் தாய்க்கு நெஞ்சில் ஓர் ஆலயம் அமைத்து வழிபட்டுத்தான் ஆக வேண்டும். உலகத்தையே வீடாகக் கொண்ட துறவிகளும், பிறந்த ஊரை பெருமையுடன் போற்றாமல் இருக்க மாட்டார்கள்.

ஸ்ரீ ரமண பகவான் தம்மை உலகிற்கு முதன் முதலில் அறிமுகப்படுத்திக் கொண்டபோது, “வேங்கடராமன், திருச்சுழி” என்றே எழுதிக் காட்டினார். தாய் அழகம்மை முக்தியடைந்த போது, அன்னைக்கு மாத்ருபூதேசுவரர் என்ற பெயரில் ஓர் ஆலயம் எழுப்பி வழிபட்டார்.

திருவண்ணாமலை ஸ்டேஷனில் ரயில் வந்து நின்றது. தில்லையைக் கண்ட நந்தனைப் போல் பரவசமெய்தினார் வேங்கடராமன். ரயிலை விட்டிறங்கி, வேகமாக ஊருக்குள் நடந்தார்.

இந்திர தீர்த்தம் என்று புராணத்தில் கூரப்படும் ஐயன் குளத்தருகில் வந்ததும், கீழூர் முத்து கிருஷ்ண பாகவதரின் மனைவி கட்டிக் கொடுத்திருந்த பட்சணப் பொட்டலங்களைத் தண்ணீரில் வீசி எறிந்தார். இந்தக் கட்டைக்கு இது இல்லாமல் குறைந்து விட்டதோ! என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டே, நாலடி நடந்தார். அப்போது ஒருவர் வழி மறித்து, “மொட்டை அடித்துக் கொள்ளலாமா?” என்று கேட்டார். அதுவும் அருணாசல குருநாதரின் கட்டளையாயிருக்குமோ என்று கருதி, வேங்கடராமன் மறுக்காமல் ஒப்புக் கொண்டார். கேட்டவர் இவரை ஒரு நாவிதரிடம் அழைத்துச் சென்றார். மறு விநாடி துறவுக் கோலத்திற்குத் தயாராகி விட்டார் வேங்கடராமன்.

துறவியிடம் பணம் இருக்கலாமா? முத்துகிருஷ்ண பாகவதரிடம் கடுக்கனை அடமானம் வைத்து வாங்கிய நான்கு ரூபாயில் ரயில் கட்டணம் போக மீதி மூன்றரை ரூபாய் இருந்தது. அதையும் எடுத்து குளத்தில் எறிந்தார். தன் வேட்டியை இரண்டு மூன்றாகக் கிழித்தார். அதில் ஒரு துண்டை எடுத்து கோவணமாகக் கட்டிக் கொண்டார். மீதி துணியையும், சட்டையையும் சுருட்டி நீரில் விட்டெறிந்தார். உள்ளத்தை மாற்றிய அருணாசலேசன் அவர் உருவத்தையும் மாற்றி விட்டார்.

நேரே கோயிலுக்குள் நுழைந்தார் அந்த பாலசந்நியாசி. சாதாரணமாக பக்தர் கூட்டம் நிரம்பி வழியும் அண்ணாமலையார் ஆலயம் அன்று வெறிச்சோடிக் கிடந்தது. மைந்தனுக்குத் தனிமையில் உபதேசம் செய்ய வேண்டும் என்பது தந்தையின் திருவருட் சித்தமோ என்னவோ, யார் கண்டது?

கருவறையில் போய் நின்றார் மைந்தன். மதுரையில் சொக்கப்பனை தரிசித்ததும் பொங்கியெழும் கண்ணீர், அருணாசனைக் கண்டதும் பன் மடங்காகப் பெருக்கெடுத்து, உடலை நனைத்தது. குளத்தில் நீராடாமல் உள்ளே வந்தவருக்கு புனித ஸ்நானமும் ஆகி விட்டது.

தந்தையே, தாங்கள் என்னை அழைத்தீர்கள். இதோ வந்து சேர்ந்து விட்டேன். இனி உங்கள் அடிமை. ஏற்றுக் கொள்ளுங்கள் என்று கூறாமல் கூறி, அசையாமல், ஆடாமல் அவர் எதிரில் நின்றிருந்தார் பால ரமணர்.

தந்தை மகனை கரூணையோடு நோக்கினார். மௌன மொழியிலே அவருக்கு ஞானோபதேசம் செய்தார். தந்தையும், மக்னௌம் குருவும் சீடரும் ஆனார்கள். சீடர், அந்தக் கணமே ஞான வைராக்கியம் பெற்றார். பந்த பாசத்தை அறவே துறந்தார். உலக்மௌம், உற்றாரும், உறவினரும், இன்பமும், துன்பமும் இனி அவருள் எந்நிலையிலும் சலனத்தை ஏற்படுத்த முடியாது.

திருச்சுழியிலே தொடங்கிய ஞான யாத்திரை, திருவண்ணாமலையில் முடிவு பெற்று விட்டது. மதுரையில் பூரண விழிப்பு ஏற்பட்டது. விழிப்புரத்திரத்திற்கு புறப்பட்டு வந்தார். அங்கிருந்த மாம்பழப்பட்டுக்குப் பயணமாகி பழுத்த பழமானார். உள்ளம் பழுத்ததும், அறையணிநல்லூர் அதுல்ய நாதேசுவரர் ஆலயத்திலிருந்து அருணாசலத்தின் தரிசனம் கிடைத்தது. அம்மாமலையின் தரிசனம் ஞானத்தை அருளித்தானே ஆக வேண்டும்! அஞ்ஞானம் அழிவது தானே ஞானம்! அடுத்து, கீழூர் வீரட்டேசுவரர் ஆலயத்தில் அந்தகார சம்ஹார மூர்த்தியை தரிசித்து, அஞ்ஞானத்தை விரட்டி, திருவண்ணாமலைக்கு வந்து ஞானச்சுடராகவே பிரகாசித்தார்.

மௌன உபதேஸ்ம பெற்ற பால ரமணர் தானும் மௌனியாகி, தன்னில் ஆழ்ந்து உடலை மறந்த சமாதி நிலையில் பல மணி நேரம் லயித்திருந்தார். முதலில் கோயில் ஆயிரங்கால் மண்டபத்தை தன் இருப்பிடமாகக் கொண்டிருந்தார். அன்ன ஆகாரம் கிடையாது. கல்தரையே பாயாக, மடித்த கையே தலையணையாக சுருண்டு படுத்து விடுவார்.

பாலயோகியின் மகிமை சிறு பிள்ளைகளுக்கு எப்படித் தெரியும்? அவர்களுக்கு எல்லாமே வேடிக்கைதானே? “பித்து பிடித்து போய் ஒரு சிறுவன், சோறு தண்ணீர் இல்லாமல், சொம்பேறியாய் எந்நேரமும் கண்ணை மூடிக் கொண்டு உட்கார்ந்திருக்கிறான்” என்று அவர்கள் நினைத்ததில் வியப்பில்லை. தவராஜன் ஞானப் பித்துப் பிடித்து, ஆத்ம தியானத்தில் மூழ்கியிருப்பதை அவர்கள் கண்டார்களா?

பையன்கள என்ன கேலி செய்தாலும் அந்தத் தவராஜன் பேசாமல் இருந்தார். அவர்களை ஒரு பொருட்டாகவே அவர் நினைக்காததால் அவர்களை விரட்டியடிக்கவில்லை. மாறாக, எங்கேயோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். இது சிறுவர்களை மேலும் உற்சாகப்படுத்தியது. கூட்டமாகச் சேர்ந்து கொண்டு, “ஆய் ஊய்” என்று கத்திக் கொண்டு ஓட்டுச் சல்லிகளையும், சிறு கற்களையும் அவர் மீது விட்டெறிந்தார்கல்; சித்திரவதை செய்தார்கள்; கை கொட்டிச் சிரித்தார்கள்.

திருவண்ணாமலைக்கு மற்றொரு பைத்தியம் வந்திருப்பதாகவே அவர்கள் கருதியிருக்க வேண்டும். ஐந்தாறு வருடங்களாக சேஷாத்ரி என்பவர் பைத்தியமாக தெருக்களில் அலைந்து கொண்டிருப்பதை அவர்கள் பார்த்து  வருகிறார்கள். அதைப் போலவே இதுவும் ஒரு பைத்தியம். அது தெருக்களில் சுற்றுகிறது. இது கோயிலில் முடங்கிக் கிடக்கிறது என்று நினைத்தார்கள். இவருக்கு சின்ன சேஷாத்ரி என்று இவர்களே ஒரு பெயரையும் சூட்டினார்கள்.