அந்தப் பெட்டியில் ஒரு முஸ்லிம் பெரியவர் பிரயாணம் செய்து கொண்டிருந்தார். அவர் அரிய விஷயங்களைப் பற்றி எல்லோருடனும் பேசிக் கொண்டிருந்தார். ஆனால், அந்தச் சிறுவர் மட்டும் எதுவுமே பேசாமல் மௌனமாய் அமர்ந்திருந்தார். அந்தப் பெரியவர் சிறுவரின் அருகில் போய் உட்கார்ந்து பேச்சுக் கொடுத்தார்.
“தம்பி, எங்கே போறே?”
“திருவண்ணாமலைக்கு…”
“அப்படியா, நானும் அங்கேதான் போறேன்.”
“என்ன! திருவண்ணாமலைக்கா?”
“இல்லை, அதற்கு முன்னாலேயே இறங்கிடுவேன். நான் திருக்கொவிலூருக்குப் போறேன்.”
“என்ன, இந்த ரயில் திருவண்ணாமலைக்குப் போகிறதா?” என்று ஆச்சரியத்துடன் கேட்டார் சிறுவர்.
“சரியாப் போச்சு போ! நீ எந்த ஸ்டேஷனுக்கு டிக்கெட் வாங்கியிருக்கே தம்பி” என்று சிரித்துக் கொண்டே கேட்டார் பெரியவர்.
“திண்டிவனத்திற்கு”
“திண்டிவனத்திற்கா? எதுக்கு அந்த ஊருக்கு டிக்கெட் வாங்கினே? நாம் விழுப்புரம் ஜங்க்ஷனில் இறங்கி, திருவண்ணாமலைக்குப் போக வேறே ரயில் மாறணும்” என்றார் அந்த முஸ்லிம் அன்பர்.
அந்தச் சிறுவருக்கு இது புது செய்தியாக இருந்தது. “எந்த வழியாக இருந்தால் என்ன? போக வேண்டிய இடத்திற்குப் போய் சேர்ந்தால் சரி” என்று நினைத்துக் கொண்டார். இந்தக் கருத்து அவரது சிந்தனையைக் கிளர, உட்கார்ந்திருக்கும் ரயில், சுற்றியிருக்கும் பிரயாணிகள், அவர்கள் பேசும் பேச்சு எல்லாம் மறைந்து உணர்வற்றவராய் உறக்கத்தில் ஆழ்ந்து விட்டார்.
கண் விழித்த போது அச்சிறுவருக்கு பசி வயிற்றைக் கிள்ளியது. காலையில் சாப்பிட்டதுதான், பாவம்.
திருச்சி ஸ்டேஷனில் ரயில் நின்றது. ஒருவன் பேரிக்காய் விற்றுக் கொண்டு போனான். அரையணா கொடுத்து இரண்டு பேரிக்காய் வாங்கினார். ஒன்றைச் சாப்பிட்ட்ட உடனேயெ அவருடைய பசி அடங்கி விட்டது. அது அவருக்கு ஆச்சரியத்தை அளித்தது. மதுரையில் மூன்று வேளை தின்றாலும் பசி அடங்காதே. இப்போதூ ஒரு காயைத் தின்றதுமே பசியடங்கி விட்டதே!
விடியற்காலை மூன்று மணிக்கு ரயில் விழுப்புரம் வந்து சேர்ந்தது. முஸ்லிம் பெரியவருடன் சிறுவரும் கீழே இறங்கினார். சற்று நேரம் ஸ்டேஷனிலேயே தங்கி விட்டு, விடிந்ததும் ஊருக்குள் சென்றார். எங்கெல்லாமோ சுற்றினார். திருவண்ணாமலைக்குச் செல்லும் சாலை எதுவென்று தெரியவில்லை. ரயிலில் போக கையில் காசும் இல்லை. வழி கேட்கலாம் என்றால், வெட்கம் ஒரு புரம், “நீ யார்? எங்கிருந்து வருகிறாய்?” என்று யாராவது கேட்டு விட்டால் என்ன செய்வது என்ற பயம் மறுபுறம். எல்லோருக்கும் வழி காட்டப் போகிறவர், யாரையும் வழி கேட்கவில்லை!
ஓயாத அலைச்சலால் அவருக்கு களைப்பு மேலிட்டது. பசியெடுத்தது. புதுச்சத்திரத்தில் இருந்த ஓர் ஓட்டலுக்குச் சென்று உணவு கேட்டார். ஓட்டல்காரர் பகல் ஒரு மணிக்குத்தான் சாப்பாடு கிடைக்கும் என்றார். திண்ணையில் சுருண்டு படுத்திருந்த சிறுவர் “அருணாசலம்” “அருணாசலம்” என்று முனகிக் கொண்டிருந்தார்.
ஒரு மணிக்கு எழுந்து வயிறாரச் சாப்பிட்டார். கையிலிருந்த இரண்டரையணாவை எடுத்து முதலாளியிடம் கொடுக்க, அவர் அதை வாங்கிக் கொள்ள மறுத்து விட்டார். அந்த ஓட்டல்காரர் கொடுத்து வைத்தவர். தன்னையுமறியாமல் பெரிய புண்ணியம் செய்து விட்டார். அது அவருடைய முன்னோர்கள் செய்த தவப்பயன்.
விழுப்புரத்திலிருந்து திருவண்ணாமலைக்குப் போகும் ரயில் ஏறினார் அந்தச் சிறுவர். பத்து மைலில் இருக்கும் “மாம்பழப்பட்டு” ஸ்டேஷனுக்கு ஒரு டிக்கெட் வாங்கியிருந்தார். கையில் இருந்தது இரண்டரையணாதானே! இரண்டணா சார்ஜில் மாம்பழப்பட்டு வரையில் தான் பிரயாணம் செய்யலாம். இறங்கி, திருவண்ணாமலைக்கு நடக்க வேண்டியதுதான்!
விழுப்புரத்தில் ரயில் ஏறி பத்து மைல் தொலைவில்லுள்ள மாம்பழப்பட்டு ஸ்டேஷனில் வந்து இறங்கினார் சிறுவர் வேங்கடராமன். பின்னர் ரயில் பாதை ஓரமாகவே நடக்க ஆர்மபித்தார். அது திருவண்ணாமலைக்குப் போய்த்தானே ஆக வேண்டும்!
‘அருணாசலம்”, “அருணாசலம்” என்று வாய் முணு முணுக்க, வேறெந்த சிந்தனையுமின்றி, பத்து மைல்களுக்கு மேல் நடந்து விட்டார் வெங்கடராமன். மாலை நேரமாகி விட்டது. சூரியன் இன்னும் முழுமையாக மறையவில்லை. உயரமான பாறையின் மீது தெரிந்த ஒரு கோபுரத்தின் உச்சியில் பொற் கிரணங்கல் பட்டுப் பளபளத்ததைக் கண்டு, அதை நோக்கி வெகு வேகமாக நடந்தார். அறையணிநல்லூருக்கு வந்து சேர்ந்தார்.
பாறைகளால் அழகு செய்யப்பட்ட ஊராததால் அதற்கு அப்பெயர் வந்தது. இப்போது அது அரகண்டநல்லூர் என்று வழங்கப்படுகிறது. ஆனால், அதன் பொருள் விளங்கவில்லை. அறைகண்டநல்லூர், அரகண்டநல்லூராக மருவியிருக்கலாம்!
அந்த ஆலயத்தில் ஸ்ரீ அதுல்ய நாதேசுவரர், சௌந்தர்ய கனகாம்பிகையுடன் வீற்றிருக்கிறார். தீந்தமிழில் ஒப்பிலாமணீசுவரர் என்றும், ஸ்ரீ அழகிய பொன்னம்மை என்றும் அவர்கள் அழைக்கப்படுகிறார்கள்.
அந்தக் கோயிலின் பிராகாரத்தில் “சம்மந்தர் பாதம்” என்று நாலடி உயரமுள்ள பீடம் ஒன்று இருக்கிறது. அதன் மீது பாதங்கள் பதிக்கப்பட்டிருக்கின்றன. அதனருகிலிருந்து பார்த்தால் அருணாசல மலை சாட்சாத் சிவபெருமானின் திருமுக மண்டலம் போலவே தோற்றம் அளிக்கிறது. அறையணிநல்லூர் ஆலயத்திலிருந்து அண்ணாமலையைத் தரிசிக்கும் போது உள்ளத்தில் பேரானந்தம் பொங்குகிறது. அத்தோற்றம் ஆன்மீக கிளர்ச்சியைத் தூண்டுகிறது. சொல்லில் அடங்கா சுகானுபவமும் சாந்தியும் ஏற்படுகிறது. வாழ்க்கையில் ஒரு முறையாவது காண வேண்டிய அற்புதக் காட்சி அது.
அறையணிநல்லூர் ஆலயத்திற்கு திருஞான சம்பந்தமூர்த்தி சுவாமிகள் வந்த போது அவருக்கு அருணாசல ஜோதி தரிசனம் ஆயிற்று. உவகை மேலிட்டவராய், “அது என்ன மலை?” என அருகிலிருந்தவர்களிடம் கேட்டார். “அதுதான் அருணாசலம்” என்று கூறினார்கள். அங்கிருந்தபடியே “உண்ணாமுலை உமையாளோடும்” என்ற பதிகத்தைப் பாடிப் பரவசமானார். அக்கணமே அவருக்கு அருணையம்பதி செல்ல வேண்டும் என்ற ஆவல் மேலிட்டது. ஆனால், எப்படிப் போவது என்று அவருக்குத் தெரியவில்லை.
அப்போது அங்கு ஓர் அந்தணப் பெரியார் வந்தார். அவர் கையில் பூக்குடலை ஒன்று இருந்தது.
அம்முதியவ்ஃபரை அணுகி கெஞ்சாத குறையாகக் கேட்டார் திருஞான சம்பந்த சுவாமிகள்.
“ஐயா, தங்களுக்கு அருணாசலத்திற்கு வழி தெரியுமா?”
“தெரியுமே, நான் தினமும் காலையில் அருணாசலத்திலிருந்து தான் வந்து சுவாமி பூஜைக்காக பூப்பறித்துச் செல்கிறேன்.”
“அப்படியா? என்னை அங்கு அழைத்துச் செல்கிறீர்களா? சோணாசலநாதனை நான் தரிசிக்க வேண்டும்.”
“வாருங்களேன் போகலாம்……” என்று கூறி, அப்பெரியவர் திருஞான சம்பந்தரை அருணாசலத்திற்கு அழைத்துச் சென்றார். செல்லும் வழியில் “அருணாசல மகிமை” பற்றி அவருக்கு விரிவாக எடுத்துக் கூறினார்.
அந்த அந்தணப் பெரியார் வேறு யாருமல்ல. அருணாசலேசுவரரே பூப்பறிக்கும் பிராமணராக வந்து, தம் பக்தனை அருணாசலம் அழைத்துச் சென்றார்.
ஞானசம்பந்தர் பாதம் பட்டு புனிதமடைந்துள்ள அறையணி நாதேசுவரரின் ஆலயத்திற்குத்தான் வேங்கடராமன் வந்து சேர்ந்தார். அவர் வந்த போது, கோயில் கதவு திறந்திருக்க வில்லை. எனவே, கோபுர வாயிலேயெ அமர்ந்து விட்டார்.
சிறிது நேரம் கழித்து கோயில் அர்ச்சகரும், பிறரும் வந்தனர். அவர்களுடனேயே வேங்கடராமனும் கோயிலுக்குள் நுழைந்து , மண்டபத்தில் அமர்ந்து தியானத்தில் ஆழ்ந்தார். சற்றைக்கெல்லாம் “பளிச்”சென்று ஆயிரம் கோடி சூரியர்கள் பிரகாசித்தது போள், அவருக்கு ஒரு ஜோதி தரிசனம் ஆயிற்று. கண் விழித்துப் பார்த்தார். எந்த திசையிலிருந்து அவ்வொLளி வந்ததென்று தெரியவில்லை. சுவாமி சந்நிதிக்குள் சென்று பார்த்தார். அங்கும் அந்தப் பேரொளியைக் காண முடியவில்லை. மீண்டும் வெளியே வந்து சுற்றிலும் பார்த்தார். மேற்கில் ஒரு மலைச்சிகரம் தெரிந்தது. சற்று முன் கண்ணுக்குத் தெரிந்த ஜோதி, அந்தச் சிகரத்தில் அடங்குவதைக் கண்டார். “அப்பன்” உறையுமிடம் அவருக்குத் தெரிந்து விட்டது. திருஞான சம்பதரை அழைத்துக் கொண்ட அருணாசல ஜோதி, வேங்கடராமனையும் ஆட்கொண்டது.
பூஜை முடிந்து எல்லோரும் வெளியில் வந்த போது, வேங்கடராமனும் வெளியே வந்தார். அவருக்குப் பசி எடுத்தது. “பிரசாதம் கிடைக்குமா?” என்று ஏங்கினார். கூச்சத்தை விடுத்து கையை நீட்டிக் கேட்டும் விட்டார்.
ஆனால், அந்த சுயம்பாகி கொடுத்து வைக்காதவர். அஞ்ஞானம் அவர் கண்களை மறைத்து விட்டது. ஏதோ ஒரு சோம்பேறிச் சிறுவன் சோறு கேட்கிறான் என்று நினைத்து, “கொடுக்க முடியாது” என்று சிறுவரை விரட்டி விட்டார். விழுப்புரத்தில் இருந்த ஓட்டல்காரருக்குக் கிடைத்த புண்ணியம், ஆண்டவனின் அருகில் இருந்தவருக்குக் கிடைக்கவில்லையே!
அறையணிநல்லூர் ஆலயத்தில் பூஜையை முடித்து விட்டு, அர்ச்சகரும், குழுவினரும், ஸ்ரீ பெரியநாயகி சமேத வீரட்டேசுவரர் ஆலயத்திற்கு வந்தனர். வேங்கடராமனும் அவர்களைத் தொடர்ந்தார். சுயம்பாகி அவரை முறைத்துப் பார்த்துக் கொண்டே வந்தார். கோயிலுக்குள் நுழைந்ததும் வேங்கடராமன் சுவாமி சந்நிதிக்கு நேரே அமர்ந்து சமாதியில் ஆழ்ந்து விட்டார்.
அறையணிநல்லூர் தென்பெண்ணையாற்றின் வட கரையில் இருக்கிறது. அங்கிருந்து ஒன்றரை மைல் தூரம் சென்றால் ஆற்றின் தென் கரையிலுள்ள கீழையூரை அடையலாம். அது திருக்கோயிலூர் என்னும் திருக்கோவலூரைச் சேர்ந்தது. அங்குதான் வீரட்டேசுவரர் ஆலயம் இருக்கிறது.
சிவபெருமான் வீரநகை புரிந்து, தமது வீரச்செயலால் துட்டர்களை அழித்து அன்பர்களுக்கு அருள் புரிந்த தலங்கள் எட்டு. அதில் இரண்டாவதாகக் குறிப்பிடப்படுவது திருக்கோவலூர் வீரட்டானம்.
இந்த தலத்தில் ஈசுவரன் இருள் அரக்கனை வதம் செய்துள்ளார். சிவபெருமான் அந்தகாசூரனை அழித்ததால் இங்கு அந்தகாந்தர் என்று காரணப் பெயரோடு எழுந்தருளியுள்ளார்.
இக்கோயிலில் “பெரியானை கணபதி” வீற்றிருக்கிறார். இந்த விநாயகரைத்தான் ஔவைப் பாட்டி மலர்களால் அர்ச்சனை செய்து, தெய்வீகப் பாடல்களால் துதி செய்து வந்தாள். ஒரு நால் சுந்தரமூர்த்தி நாயனாரும், சேரமான் பெருமாளும் கைலாயம் செல்லப் போகிறார்கள் என்பதை அறிந்து, தாமும் அவர்களோடு போவதற்குத் துடித்தாள் ஔவைப்பாட்டி. அவசர அவசரமாக கணபதியை துதி செய்தாள்.
பெரியானை கணபதி சிரித்தார். “அம்மா, ஏன் அவசரப்படுகிராய்? அவர்களுக்கு முன் உன்னை நான் கைலாயம் கொண்டு சேர்க்கிறேன். நீ வழக்கம் போலவே நிதானமாகப் பூஜை செய்” என்று சொன்னார். ஔவைப் பாட்டியும், “சீதக்களப” என்ற அகவலைப் பாடி, யானைமுகத்தோனைத் தோத்திரம் செய்தாள்.
கணபதி விசுவரூபம் எடுத்து, தமது தும்பிக்கையால் ஔவைப்பாட்டியைத் தூக்கி அப்படியே கைலாயத்தில் கொண்டு போய் சேர்த்து விட்டார். தங்களுக்கு முன்னால், கைலாயத்தில் வந்து காத்திருந்த தமிழ்ப் பாட்டியைக் கண்ட சுந்தரரும், சேரமான் பெருமாளும் அதிசயித்தனர்.
முருகப்பெருமான் சூரபத்மனை இரண்டு கூறுகளாக்க, ஒன்று மயிலாகவும், மற்றொன்று சேவலாகவும் மாற, மயிலை வாகனமாகவும் சேவலைக் கொடியாகவும் ஆக்கிக் கொண்டார். பின்னர் அசுரனைக் கொன்ற பாவம் நீங்க, திருக்கோவலூர் வந்து, சிவபெருமானை லிங்க வடிவில் பூஜை செய்து பாபம் நீங்கப் பெற்றார்.
ஆலய்த்தின் உள்பிராகரத்தில் இருக்கும் அந்தகார சம்ஹார மூர்த்தி விக்ரகம் ஒரு அழகு வடிவம்.. ஸ்ரீ பெரியநாயகி அம்மை சுவாமிக்கு இடப்புறம் தனிக்கோயில் கொண்டு அருள் பாலிக்கிறாள்.
பூஜை முடிந்து எல்லோரும் புறப்பட்டனர். வெங்கடராமனுக்குப் பசி தாங்க முடியவில்லை. மீண்டும் அன்னம் யாசித்தார். சுயம்பாகி மறுபடியும் மறுத்து விட்டார். சிறுவரின் முகம் சுருங்கி விட்டது.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த மேளக்காரருக்கு மனம் இளகியது. பட்டினியால் வாடும் சிறுவரின் மீது இரக்கம் பிறந்தது. அர்ச்சகரைப் பார்த்து, “ஐயா, என் பங்கை இந்தச் சிறுவனுக்கு கொடுத்திடுங்க, எனக்கு சாதம் வேண்டாம்” என்று கூறி விட்டார். சுயம்பாகி முகத்தை சுளித்துக் கொண்டே அன்னத்தை வேங்கடராமனுக்கு அளித்தார்.
விழுப்புரம் ஓட்டல்காரரை விட ஒரு படி உயர்ந்து விட்டார் அறையணிநல்லூர் மேளக்காரர்.உணவு வியாபாரி பணம் பெற்றுக் கொள்ளாமல் உணவளித்தார். கோயில் சுயம்பாய் ஆண்டவன் பிரசாதத்தை அடியாருக்குக் கொடுக்க மறுத்தார். மேளக்காரரோ, தன் பங்கைத் தியாக்ம செய்து, தான் பட்டினி கிடந்து, பசித்தவருக்கு அன்னம் அளித்தார். பிறர் பசியைப் போக்குவதில் மிகவும் உயர்ந்த நிலை எது என்பதை உலகிற்கு எடுத்துக் காட்டவே, பகவான் பசித்தவர் போல் நடித்ததாகத் தோன்றுகிறது.