ரமண சரிதம் – 4

வேங்கடராமனுக்கு பதினைந்து வயது நிரம்பி விட்டது. ஐந்தாவது பாரத்தில் படித்துக் கொண்டிருந்தார். அவருள்ளே நீறு பூத்த நெருப்பாக கனன்று கொண்டிருந்த அருணாசல பக்தி அப்போதுதான் கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது.

அருணாசல நாமம் அவைரையும் அறியாமல் அவருள்ளத்தில் பதிந்து விட்டிருந்தது. அதன் ஒலியை மட்டும் லேசாக அவர் கேட்டுக் கொண்டிருந்தாரேயொழிய, அது என்னவென்றே அவருக்குத் தெரியாது. அது தெய்வமா, மலையா, ஊரா, எங்கிருக்கிறது? என்பதெல்லாம் அவருக்குத் தெரியவே தெரியாது. இந்த உலகத்திற்கும் அதற்கும் சம்பந்தமிருப்பதாகக் கூட அவர் நினைத்துப் பார்த்தது கிடையாது.

ஒரு நால் உறவினர் ஒருவரு மதுரைக்கு வந்தார். சிறுவர்கள் ஊரிலிருந்து வருபவர்களைச் சாதாரணமாகக் கேட்பது போல், நீங்க எங்கேயிருந்து வரேள், மாமா? என்று கேட்டார் சிறுவர் வேங்கடராமன்.

“அருணாசலத்திலிருந்து வரேன்” என்று சாதாரணமாகப் பதில் கூறினார் வந்தவர்.

“அருணாசலம்!” ஆகா! அச்சொல்லைக் கேட்டதும், மயிர்க் கூச்செறிந்தது வேங்கடராமனுக்கு. பல ஆண்டுகளாக இதயத்தின் அடித்தளத்தில் ஒலித்துக் கொண்டிருந்த திருநாமம் எதிரொலியாக இப்போது அவர் காதுகளில் பாய்ந்தது. அந்த ஒலி எழுப்பிய சின்னஞ்சிறு அலைகள், மெள்ள மெள்ள வளர்ந்து, மங்கல மணியோசையாக முழங்கி, அகிலத்தையே நாத வெள்ளத்தில் மூழ்கடித்தன. எங்கும் “அருணாசலா அருணாசலா” என்ற நாத பிரும்மமெ நிறைந்திருந்தது.

“அருணாசலமா! அது எங்கிருக்கிறது மாமா?” என்று கேட்டார் வேங்கடராமன், ஆவலும் ஆர்வமும் ஆச்சரியமும் கலந்த குரலில்.

வந்தவருக்கும் ஆச்சரியம் தாங்க முடியவில்லை. “என்ன இப்படிக் கேட்கறே? உனக்கு திருவண்ணாமலை தெரியாதா? அது தான் அருணாசலம்” என்று கூறினார் அவர்.

வேங்கடராமன் ஒரு கணம் திகைத்துக் போய் நின்றார். உள்ளத்தில் ஒலித்துக் கொண்டிருந்த திருநாமம், ஒர் ஊரின் பெயரா? அதுவும் இத்தனை அருகில் இருக்கிறதா? அங்கு போக வேண்டுமே! நம்மால் முடியுமா? – சிதம்பரத்தை தரிசிக்க வேண்டும் என்று ஏங்கிய நந்தனாராகவே மாறினார் வேங்கடராமன்.

ஒலியாக இருந்த அருள் வழங்கிய அருணாசல்ம், ஒளியாக நின்று வழி காட்டார். வேங்கடராமனின் ஆன்மீக வாழ்க்கை மலரத் தொடங்கி விட்டது. வீட்டிலிருந்த பெரிய புராணப் புத்தகம் அவரது கவனத்தைக் கவர்ந்தது. இத்தனை நாள் அது அந்த அலமாரியில்தானே இருந்தது! அதை அவர் திரும்பிக் கூடப் பார்த்ததில்லையே! எல்லாவற்றுக்கும் வேளை வர வேண்டாமா?

அவருக்குப் பாடப் புத்தகங்களில் கவனம் குறைய ஆரம்பித்தது. பெரிய புறாணத்தை ஆர்வமுடன் படித்தார். நாயன்மார்களின் பக்தியுணர்ச்சியும், தியாக உணர்வும், ஆண்டவனிடம் அவர்கள் தங்களை அடிமையாக்கிக் கொண்ட வரலாறும் வேங்கடராமனின் இள மனதைக் கவர்ந்தன. அந்த மெய்யடியார்களின் மீது அவருக்கு மரியாதை மிகுந்தது. பக்தியால் இவர் உள்ளம் மெழுகாய் உருகியது. “இவர்களைப் போல் என்னால் ஆக முடியாதா?” என்ற எண்ணம் ஏக்கமாக வளர்ந்தது

வெங்கடராமன் ஆறாம் பாரம் வந்து விட்டார். அந்த வருடம் மெட்ரிகுலேஷன் பரிட்சை எழுத வேண்டும். எப்படியாவது பாஸ் செய்து விட வேண்டும் என்று அண்ணன் நாகசாமியும், சிறிய தந்தை சுப்பய்யரும் அடிக்கடி அவரிடம் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்காக புத்தகத்தைப் பிரித்துக் கொண்டு உட்கார்ந்திருப்பார் அவர். ஆனால், எண்ணமெல்லாம் வேறு எங்கோ அலைந்தது. அதற்கு அவரா பொறுப்பு? அவருள் இயங்கிய சக்தியல்லவா அவரை அப்படி அலைக்கழித்தது! உள்ளத்தில் பக்திக் கனலைத் தூண்டிய அருணாசல குருநாதர் ஞானோபதேசம் செய்யவும் நினைத்து விட்டார்.

ஒரு நாள் மாடியறையில் தனிமையில் அமர்ந்திருந்தார் வேங்கடராமன். அவர் உடம்புக்கு ஒன்றுமில்லை. சாதாரணமாகத்தான் இருந்தார். ஏனோ, திடீரென்று அவரை மரண பயம் பற்றிக் கொண்டது. “சிறிது நேரத்தில் சாகப் போகிறோம்” என்று அவருக்குத் தோன்றியது. ஏன் திடீரென்று அப்படியோர் எண்ணம் தோன்றியது என்றே அவருப்புப் புரியவில்லை.

மார்பு படபடவென்று அடித்துக் கொண்டது. கீழே இறங்கிப் போய் பெரியவர்களிடம் சொல்லலாமா? டாக்டர் யாரிட்மாஅவது உடம்பைக் காட்டலாமா? என்று ஒரு கணம் நினைத்தார். அடுத்த கணம், வேண்டாம், சாவு என்றால் என்னவென்று பார்த்து விடுவோமேயென்று மனத்தை ஒருவாறு திடப்படுத்திக் கொண்டார்.

தந்தை இறந்த போது அந்தப் பிஞ்சு உள்ளம் மரணத்தைப் பற்றி தீவிரமாக சிந்தித்து பார்த்தது. நான்கு வருடங்கள் ஆகியும், அதற்கு விடை காண முடியவில்லை. “இப்போது நமக்கு அந்த மரணம் வரப்போகிறது. அது என்னவென்று புரிந்து கொண்டு விடுவோம்!”

தன் மரணக் காட்சியைக் கண் முன்னால் கண்டார் வேங்கடராமன். அதை உள்ளத்தால் உணர்ந்து விடுவது என்றும் முடிவு செய்தார். அப்படியே தரையில் படுத்துக் கொண்டார். வாயை மூடிக் கொண்டார். பிணம் மாதிரியே அசையாமல் கிடந்தார்.

நான் இப்போது இறந்து விட்டேன். எது சாகிறது? இந்த உடல் தானே! ஆமாம்! உடல் செத்து விடது. இதைக் கொண்டு போய் கொளுத்தி விடுவார்கள். ஆனால், இந்த உடல் மறைந்ததும் நான் மறைந்து விடுவேனா? இந்த உடல் பிணமான பின்னும் “நான்” இருப்பதை உணர்கிறேன். எனவே “நான்” இறக்கவில்லை. அது பிறப்பதும் இல்லை. அழிவதுமில்லை. அதுதான் உணமையான “நான்”. இந்த உடல் “நான்” இல்லை. உடலுக்கும் வேறுபட்ட ஆவிதான் நான். உடலைத் தீண்டும் மரணம் என் ஆவியைத் தொட முடியாது.

எங்கும் நிறைந்துள்ள பரமாத்ம தத்துவமே தன்னுள் அழிவற்ற ஆத்மாவாக இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்த மறு கணமே வேங்கடராமனை விட்டு மரண பயம் நீங்கி விட்டது. “நான் யார்” என்று அறிந்து கொண்ட பிறகு துக்கமேது? மரணம் ஏது? இதை அவர் படிப்பால் உணரவில்லை. புத்தியால் அறிந்து கொள்ளவில்லை. அருணாசலத்தின் அருளால் அவருக்கு அந்த ஞானம் வந்தது.

மதுரை சிக்கப்ப நாயக்கர் தெருவிலுள்ள 11-ம் நம்பர் வீட்டின் மாடியில் தான் வேங்கடராமன் “நான் யார்” என்பதை உணர்ந்து, மரணத்தை வென்று, ரமணராக மாறிய நிகழ்ச்சி நடைபெற்றது.  மரணத்தை வென்று ரமணராக மாறிய நிகழ்ச்சி நடைபெற்ற அந்த இல்லம் இப்போது “ரமண மந்திர”மாக மாறியிருக்கிறது.

மரணத்தின் மடியில் “நான் யார்” என்ற தத்துவ விளக்கம் பெற்ற ஞானக் குழந்தையான வேங்கடராமன் அந்தக் கணத்திலிருந்து முற்றிலும் மாறி விட்டார்.  சத்திய நிலையை உணர்ந்து கொண்டு விட்ட பிறகு, மனமோ புத்தியோ உலக விவகாரங்களில் நாட்டம் கொள்ளுமா?

பாடப் புத்தகங்களைக் கண்டாலே அவருக்கு வேம்பாகக் கசந்தது. முன்பு போல் விளையாட்டிலும் விருப்பம் இல்லை. வகுப்புப் பிள்ளைகள் வந்து கூப்பிட்டால் ஏதோ சாக்குப் போக்குச் சொல்லி அனுப்பி விடுவார்.

முன்பு, மீனாட்சி ஆல்யாத்திலுள்ள காளியின் மீது சாத்தப்பட்டிருக்கும் வெண்ணெயை வழித்து எடுத்து, கடையில் வாங்கிய இட்லியில் தோய்த்து நண்பர்களோடு சேர்ந்து சாப்பிட்டிருக்கிறார்; கூடலழகர் ஆலயத்திற்குச்சென்று , மேல் மாடங்களில் ஏறி ஓடிப் பிடித்து விளையாடியிருக்கிறார்; அழகர் கோயிலுக்குச் சென்று சர்க்கரைப் பொங்கல் பிரசாதத்தை ரசித்திருக்கிறார். அவையெல்லாம் இப்போது பழங்கதைகளாகி விட்டன.

குளத்தைக் கண்டால் குதித்து, நீச்சலடித்து அட்டகாசம் செய்வாரே! வைகியயில் சுழித்து ஓடும் வெள்ளத்தில் எதிர் நீச்சல் போடுவாரே! எல்லாமே ஓய்ந்து விட்டன.

சாதாரணமாக பையன்கள் கேலி செய்தால் அவருக்குக் கடும் கோபம் வந்து விடும். “ஜாக்கிரதை” என்று மிரட்டுவார். இப்போதெல்லாம் அவர்கள் என்ன செய்தாலும் தணிந்தே போனார். எத்தனை வம்பிழுத்தாலும் அவர்களோடு சன்டைக்குப் போவதில்லை. “வெங்கடராமனா இப்படி மாறி விட்டான்?” என்று நண்பர்களே ஆச்சரியப்பட்டார்கள்.

வீட்டில் தனக்கு அதிகமாக வேலை கொடுத்தால் முன்பெல்லாம் முணுமுணுப்பார்; சிணுங்குவார். இப்போது சித்தி எத்தனை வேலை வாங்கினாலும் வாயை மூடிக் கொண்டிருந்தார். எதிர் வீட்டிலிருந்த பெரிய அண்டாவில் தண்ணீரைச் சுமந்து கொண்டு வந்து கொட்டச் சொல்வாள் சித்தி. அவருக்கு தோல் வலிக்கும்; கைகள் கடுகடுக்கும். இருப்பினும் பொறுமையுடன் இருந்தார்.

வேங்கடராமனுக்கு எப்போதும் சமையல் ருசியாக இருக்க வேண்டும். “முளைச்சு இரண்டு இலை விடலே, உனக்கு நாக்கு ரொம்ப நீளம்” என்று சித்தி கூட சொல்லிக் காட்டுவாள். இப்போதோ, எதைப் போட்டாலும் பேசாமல் சாப்பிட்டார். இல்லாவிட்டாலும், அது நன்றாக இருந்தாலும், ஊசிப் போயிருந்தாலும் விழுங்கி விடுவார்.

நண்பர்களுடன் எந்நேரமும் கொட்டம் அடித்துக் கொண்டிருந்தவர் தனிமையை நாடத் தொடங்கினார். வெளியுலகிலிருந்து சிந்தையை இழுத்து, நேரம் கிடைத்த போதெல்லாம் கண்களை மூடி தன்னுள்ளே பிரகாசித்த அருணாசலத்தைப் பற்றிய தியானத்தில் ஆழ்ந்து விடுவார்.  பிரித்த புத்தகம் தன் மடியில் கிடக்க ஆத்மாவான ஆதார சுருதியோடு இணைந்து இரண்டறக் கலந்து, பால யோகியாகக் காட்சியளிப்பார்.

சிறிய தந்தை சுப்பய்யருக்குக் கோபம் பற்றிக் கொண்டு வரும். “இப்படியிருந்தால் நீ எங்கே உருப்படப் போறே? பரிட்சையில் சுழிதான்” என்று திட்டி விட்டுப் போய் விடுவார்.

நாகசாமியும் தம்பியின் பேரின்ப நிலையைப் புரிந்து கொள்ளவில்லை.  வேங்கடராமன், தியானத்தில் இருப்பதைப் பார்க்கும் போதெல்லாம், அவர் படிப்பில் கவனம் செலுத்தாமல் சொம்பேரித்தனமாக பகற்கனவு கண்டு கொண்டிருப்பதாகவே நினைத்தார்.  இதைக் குறித்து தம்பியை கேலி செய்வார். “ஞானியாரே, சாப்பிட வருகிறீர்களா?” என்று அழைப்பார். “யோகீஸ்வரரே, பள்ளிக்கூடத்திற்கு நாழியாகவில்லையா?” என்று கேட்பார். இந்தக் கிண்டல் பேச்சையெல்லாம் வேங்கடராமன் பொருட்படுத்த மாட்டார். எதிர்த்து ஒரு வார்த்தை கூடப் பேச மாட்டார். “வேங்கடராமா, உனக்கு தபஸ் பண்ணனும்னா, மகரிஷிகள் மாதிரி காட்டுக்குப் போய் விடுகிறதுதானே” என்று கூட நாகசாமி தம்பியைப் பார்த்து வேடிக்கையாக புத்திமதி கூறுவார்.

“புது விழிப்பு” ஏற்படுவதற்லகு முன் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலுக்கு எப்போதாவதுதான் போவார் வேங்கடராமன். அதுவும் பையங்களோடு சேர்ந்து கொண்டு ஏதோ வேடிக்கை பார்க்கப் போவது போலத்தான் செல்வார். இயந்திரம் போல் எல்லா சந்நிதிகளுக்கும் போய் விபூதி, குங்குமம் பெற்றுக் கொண்டு வந்து விடுவார்.

இப்போதோ, ஒரு நாள் கூட கோயிலுக்குப் போகாமல் இருப்பதில்லை. உடல் மீது உரிமை கொண்டாட மறுத்த ஆத்மா, பரம்பொருளுடன் சொந்தம் கொண்டாட விரும்பியது போலும்!

ஆன்னை மீனாட்சி சந்நிதியில் மணிக் கணக்காக நிற்பார். பக்தி உணர்ச்சி உள்ளத்தில் அலை பாயும், இன்ப வெள்ளம் பொங்கிப் பெருகும். கண்ணீர் மாலை கன்னத்தை அலங்கரிக்கும். “ஏன் அழுகிறோம்?” என்று அவருக்கே தெரியாது!

ஸ்ரீ சுந்தரேஸ்வரரின் சந்நிதியில் போய் நிற்பார். ஒன்றுமே வேண்டிக் கொள்ள மாட்டார். கண்களை மூடித் தியானத்தில் ஆழ்ந்து விடுவார். தந்தையை மகன் அடையாளம் கண்டு கொள்வார். சுவாமி இவர் உள்ளத்தில் குடியேறுவார். மறு கணம் இவர் உள்ளம் பாகாய் உருகி, சுவாமியுடன் இரண்டறக் கலந்து விடும். கண்களில் நீர் முட்டி நிற்கும். தேம்பித் தேம்பி அழுத்ஹு கொண்டிருப்பார்.

மகா மண்டபத்திற்கு வருவார். இரஜத சபையில், ராஜசேகர பாண்டியனுக்காக கால் மாறி ஆடிய வெள்ளியம்பல நடராஜப் பெருமானைக் கண்டு மெய்ம்மறந்து நிற்பார். ஆனந்தக் கூத்தனின் அருள் வடிவத்தைல் கண்டு அவர் ஆனந்தத்தில் ஆழ்ந்து விடுவார். சிவகாமி, வியாக்ரபாதர், பதஞ்சலியுடன் வேங்கடராமனும் அங்கே பக்தியுடன் அசையாமல் நின்று கொண்டிருப்பார். அந்தப் பக்கம் போகிறவர்களெல்லாம் அவரது  தெய்வ பக்தியைக் கண்டு வியந்து கொண்டெ செல்வார்கள்.

பின்னர், அவர் எதிரிலுள்ள அறுபத்து மூவரைத் தரிசிக்கச் செல்வார். பெரிய புராணத்தில் படித்த கதைகளெல்லாம் ஒவ்வொன்றாக அவர் நினைவுக்கு வரும். ஒவ்வொரு நாயன்மாராக, நிதானமாக தரிசிப்பார். அவர்களுடைய தூய்மையான பக்தியை நினைத்து மெய்யுருகுவார். அவையெல்லாம் சாதாரண சிலைகளாக அவருக்குத் தோன்றாது. அவர்கள் உயிரோடு நிற்பதாகவே கருதி அவர்களுடன் உள்ளன்புடன் பேசுவார். “உங்களைப் போல் எனக்கும் பக்தி வரக்கூடாதா? உங்களோடு என்னையும் சேர்த்துக் கொள்ள மாட்டீர்கலா?” என்று ஏங்குவார். சிறு பிள்ளையைப் போல் விக்கி விக்கி அழுவார்.

அல்லும் பகலும் தியானத்தில் ஆழ்ந்தும் பக்தியால் உருகியும் மெய்ம்மறந்திருந்த வேங்கடராமனுக்குப் பள்ளைப் படிப்பில் கவனம் செல்லாததில் ஆச்சரியமில்லை. இது அண்ணனை மட்டுமல்ல; ஆசிரியர்களையும் ஆத்திரமடையச் செய்தது. பாடத்தை ஒழுங்காகப் படித்துக் கொண்டு வராததற்காக அவருக்குத் தண்டனையளித்தார்கள். பெஞ்சின் மீது நிற்க வைத்தார்கள். அல்லது அந்தப் பாடத்தை திருப்பித் திருப்பி எழுதச் சொல்லி வேங்கடராமனை அழ வைத்தார்கள். அவருக்கு துக்கம் நெஞ்சை அடைக்கும். அவரையும் மீறி அழுகையே வந்து விடும். கோயிலில் வந்த அழுகைக்கும். பள்ளியில் வந்த அழுகைக்கும் எத்தனை வேற்றுமை!

பாவம், வேங்கடராமன் தவியாத் தவித்தார். அவர் உள்ளம் எதையோ நாடி ஏங்கியது. உறவினரோ அவரிடம் எதையோ எதிர்பார்த்தனர். அவர் நிலையை ஒருவரும் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை. புரியும்படி பிறருக்கு அதை எடுத்துச் சொல்லவும் அவருக்குத் தெரியவில்லை. வீட்டில் சிறிய தந்தையும், சகோதரரும் தூற்றுகிறார்கள். பள்ளியிலோ, ஆசிரியர் கோபித்துக் கொள்கிறார். அவருக்கு மதுரையிலேயே இருக்கப் பிடிக்கவில்லை.

தனயனின் துயரம் தந்தைக்குப் புரிந்தது. அருணாசலமே அதற்கு ஒரு திட்டம் வகுத்துத் தந்தார். திக்குத் தெரியாத காட்டில் மாட்டிக் கொண்டு வெளியேற முடியாமல் திண்டாடிய சிறுவனுக்கு வெளியேறும் வழியைக் காட்டினார்.