ரமண சரிதம் – 3

ஸ்ரீ ரமண மகரிஷியைப் பற்றிய வாழ்க்கை வரலாற்று நூல்களிலும் அவர் திண்டுக்கல்லில் படித்த விவரங்கல் தெளிவாஅக் குறிப்பிடப்பட வில்லை.

திண்டுக்கல்லில் ரமணர் விசுவநாட சுவாமியின் வீட்டிற்கு எதிரில் ரமணர் என்பவர் இருந்தார். அவர் தந்தை ரங்கநாதய்யர். அவர் திருச்சுழியிலும், மதுரையிலும், பகவானின் பள்ளித் தோழராக இருக்கும் பாக்கியம் பெற்றவர். ரங்கநாதய்யரும், அவரது குடும்பமும் ரமண பக்தியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டவர்கள்.

ஒரு சமயம் ஸ்ரீ ரமண மகரிஷியும், ரங்கநாதய்யரும், திருவண்ணாமலையில் கிரிப் பிரதட்சணம் செய்யும் போது, நண்பரின் காலில் முள் தைத்ததைப் பகவான் பார்த்து விட்டார். வலி பொறுக்க முடியாமல் துடித்தவரிடம் பரிவொடு வந்து, அவரை உட்காரச் சொல்லி, பாதத்தில் தைத்த முள்ளை சாமர்த்தியமாக எடுத்து விட்டாராம் பகவான். சிறிது நேரம் கடந்த பிறகு பகவானின் பொற்பாதத்தில் முள் தைத்ததைக் கண்டார் ரங்கநாதய்யர். தன் இதயத்தில் முள் தைத்ததைப் போல் அவருக்கு வலித்தது. உடனே பகவானை அணுகி, கொஞ்சம் காலைக் காட்டுனல். அந்த முள்லை எடுத்து விடுகிறேன் என்றாராம். உடனே பகவான், எந்த முள்ளை எடுக்கப் போறே? புது முள்ளையா? பழைய முள்ளையா? என்று சிரித்துக் கொண்டெ கேட்டாராம்.

ரங்கநாதய்யருக்கு ஒன்றுமே புரியவில்லை. விழித்தார். பகவான் கீழே அமர்ந்து, பாதத்தைத் திருப்பிக் காட்டினார். பக்தர் உற்றுக் கவனித்தார். அதில் அப்போது குத்திய முள்ளைத் தவிர எத்தனையோ முட்கள் இருந்தன!

என்ன? முள் தைத்த வலியைச் சிறிதும் வெளியில் காட்டாமலா இந்நேரம் பகவன் தம்முடன் நடந்து வந்திருக்கிறார்? என்று உள்ளம் குமுறிய ரங்கநாதய்யரின் கண்களில் ரத்தம் கசிந்தது.

சிறுவர் வேங்கடராமன் திண்டுக்கல்லில் படித்துக் கொண்டிருந்த போது தந்தை சுந்தரமய்யர் உடல் நலம் குன்றி, உயிருக்கு மன்றாடிக் கொண்டிருந்தார். உயிரோடு தந்தையைக் காண்பதற்காக பிள்ளைகள் திருச்சுழிக்கு வரவழைக்கப் பட்டார்கள். தம் செல்வங்கலைக் கண்டு ஆசி வழங்கிய பிறகே அவர் இறைவனடி சேர்ந்தார்.

அன்புத் தந்தை பேசாமல், கண்களை மூடி அசையாமல் படுத்திருப்பதையும், அவரைச் சுற்றி உற்றார் உறவினர் அமர்ந்து அழுது புலம்புவதையும் கண்டார் வேங்கடராமன். மரணத்தின் முழுப்பொருள் அவருக்கு விளங்கவில்லை. ஆயினும், அங்கு நிலவிய துயரமிக்க சூழ்நிலை அவர் வயிற்றைக் கலக்கியது. எல்லோரும் அழுவதைக் கண்டு அவருக்கும் அழுகை வந்தது. அதிலும், அம்மா, வயிற்றிலும், மார்பிலும் அடித்துக் கொண்டு அலறியதை அவரால் தாங்கிக் கொள்ளமுடியவில்லை. அம்மா கூட சின்னக் குழந்தையைப் போல் கேவிக் கேவி அழுவாள் என்று அவரால் நம்பவெ முடியவில்லை. அம்மா தினமும் கோயிலுக்குப் போவாளே! பூமிநாதரும், துணைமாலையம்மனும் ஏன் அவளுக்கு இந்தத் துக்கத்தைக் கொடுத்தார்கள் என்பதும் அவருக்குப் புரியவில்லை.

அந்த வீட்டிலிருக்கவெ அவருக்குப் பயமாக இருந்தது. பக்கத்து வீட்டில்  போய்சற்று நேரம் உட்கார்ந்திருந்தார். அப்போது அந்த சிறிய உள்ளத்தில் பல கேள்விகள் பிறந்தன.

எல்லோரும் அப்படியே இருந்தால் என்ன? ஏன் செத்துப் போக வேண்டும்? செத்து போவதென்றால் என்ன? இதுக்குப் பிறகு அப்பா எங்கே போவார்? எது இருந்ததால் இத்தனை நாள் அப்பா இருந்தார்? எது போனதால் அப்பாவும் போய் விட்டார்? அது எங்கேயிருந்து வந்தது? இப்போது எங்கே போயிற்று? அதை எடுத்துக் கொண்டு போனது யார்?

ஆனால் வேங்கடராமனின் பிரச்னைக்கு விடை கிடைக்கவேயில்லை. தந்தையின் மரணம் அவருள் ஒரு பயத்தை தோற்றுவித்திருந்தது. அத்துடன், மரணத்தைப் பற்றிய உண்மையை அறிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் வேரூன்றியிருந்தது.

சுந்தரம் ஐயர் மறைந்த பிறகு, அவருடைய இளைய சகோதரர்களான நெல்லையப்பையரும், சுப்பய்யரும், அழகம்மாளின் குடும்பத்திற்கு பெரும் ஆதரவாக இருந்தனர். நெல்லையப்பையர் மானாமதுரையில் இருந்தார். சுப்பய்யர் மதுரையில் இருந்தார். நாகசாமியும், வேங்கடராமனும் தங்கள் படிப்பைத் தொடர்வதற்காக மதுரைக்கு வந்தார்கள். சிறிய தந்தை சுப்பய்யரின் வீட்டில் தங்கி இருவரும் பள்ளியில் படித்து வந்தார்கள்.

வேங்கடராமன் ஸ்காட் மிடில் ஸ்கூலில் ஓராண்டு படித்து விட்டு, அமெரிக்கன் மிஷன் உயர் நிலைப் பள்ளியில் நான்காவது பாரம் சேர்ந்தார்.

அவர் படித்து பட்டம் பெற்று, உத்தியோகம் பார்த்து, குடும்பத்தைக் காப்பாற்றுவார் என்றுதான் எல்லோரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், பேரருள் வேறொரு திட்டம் வகுத்திருந்தது. படிப்பைப் பாதியில் நிறுத்தி விட்டு, வேங்கடராமன் மதுரையிலிருந்தி திருவண்ணாமலைக்கு ஓடிப்போன கதை நெஞ்சையள்ளும் நிகழ்ச்சியன்றோ?

மதுரைக்கு வந்த பிறகு வேங்கடராமன் தன்னிஷ்டம் போல் சுற்றித் திரிய ஆரம்பித்தார். பெரியவானாகி விட்டோம், என்ற எண்ணம் அவருக்கு. பையங்களைச் சேர்த்துக் கொண்டு விளையாடுவதும், கொட்ட்ம அடிப்பதும் அதிகமாகி விட்டது.

ஏரி குளங்களைக் கண்டால் அவருக்கு ஒரே குஷி. பந்தயம் போட்டுக் கொண்டு நீச்சல் அடிப்பார். சுழித்து ஓடும் வைகையின் வெள்ளத்தில் இக்கரியக்கு அக்கரை நீந்திக் கொண்டே இருப்பார். சம்சாச சாகரத்தைக் கடக்கப் பழகினாரோ?

கோடை காலத்தில் வைகை மண்ணில் குதித்துக் கும்மாளம் போடுவார். சடு குடு விளையாடுவார். குஸ்தி பயில்வார். இதெல்லாம் அலுத்த பிறகு அரட்டை அடிப்பார். நேரம் போவதே தெரியாது. சில நாட்களில் இந்த விளையாட்டு நடு நிசியையும் க்டந்து விடும்.

நேரம் கழித்து வந்தால் சிறிய தந்தை கோபித்துக் கொள்வார். அதற்காக ஒரு தந்திரம் செய்தார். பள்ளிச் சிறுவர்களுக்கே கை வந்த கலை அது. வீட்டில் படுக்கையை விரித்து, தலையணையை குறுக்கும் நெடுக்குமாக வைத்து, போர்வையால் போர்த்தி விடுவார். பார்ப்பவர்களுக்கு, பையன் படுத்துத் தூங்கிக் கொண்டிருப்பது போல் தோன்றும்! நள்ளிரவிலோ, விடியற்காலையிலோ பின் புறம் வழியாக சுவரேறிக் குதித்து வந்து, இந்தப் பூனையும் பால் குடுக்குமா? என்று படுக்கையில் சாதுவாகப் படுத்து விடுவார்.

படுத்தால் ஒரே தூக்கம்தான். கும்பகர்ணன் கெட்டான்! காலையில் எழுப்ப பத்து பேர் வேண்டும். அதென்ன தூக்கமோ! சரியான சோம்பேறி, என்று வீட்டிலுள்ளவர்கள் அலுத்துக் கொள்வார்கள். சாதாரண தூக்கமா அதூ? ஆழ்ந்த சமாதி நிலை என்று அவர்கள் கண்டார்களா?

பாதி தூங்கியும், பாதி தூங்காமல் இருக்கும் நிலையும் உண்டு. அது போன்ற சமயங்களில் அவர் நண்பர்களின் விளையாட்டுப் பொருள் ஆகி விடுவார். அவர்கள் வேங்கடராமனை எழுப்பிக் கொண்டு போய் படாத பாடு படுத்து வார்கள். சீண்டுவார்கள். கன்னத்தில் அடிப்பார்கள். பல வகையிலும் துன்புறுத்துவார்கள். பாவம், வேங்கடராமன் பேசாமல் இருப்பார். அவருக்கு உடல் உணர்வே இருக்காது. காலையில் எழுந்த பிறகு முதல் நாள் நடந்ததையெல்லாம் நண்பர்கள் சொல்லுவார்கள். அவருக்கு ஒன்றுமே தெரியாது!

விழித்துக் கொண்டிருக்கும் போது ஒருவரும் வேங்கடரானிடம் வாலை ஆட்ட மாட்டார்கள். விஷம் செய்தாலோ, சீண்டினாலோ சரியாக வாங்கிக் கட்டிக் கொள்வார்கள். காலையில் வாங்கும் குத்துக்களுக்கும், உதைகளுக்கும், உறங்கும் போது அவர்கள் நண்பனை பழி வாங்கினார்கள்.

வேங்கடராமன் நல்ல பலசாலிதான். உடம்பு என்று படுத்ததே கிடையாது. பள்ளிப் படிப்பை விட விளையாட்டில் தான் ஆசை அதிகமிருந்தது. கால்கள் நீளமாகவும், வலுவுள்ளனவாகவும் இருந்ததால் கால் பந்தாட்டத்தில் வல்லவராக இருந்தார்.

அப்துல் வகாப் என்ற முஸ்லீம் பையன் அவருடைய இணை பிரியாத நண்பன். தன் பள்ளித் தோழனை சம்ஜான்  என்று செல்லப் பெயரிட்டு அழைப்பார் வேங்கடராமன். அவனுக்கும் ஃபுட்பால் பழக்கி வைத்தார். பள்ளியில் நடைபெற்ற கால் பந்தாட்டப் போட்டிகளில் வேங்கடராமனின் குழுவில் அப்துல் வகாப் நிச்சயம் இடம் பெறுவான்.

ஒரு நாள் விளையாட்டின் மும்முரத்தில் வேகமாகப் பந்தை உதைக்கும் போது வேங்கடராமனுக்கு காலில் அடி பட்டு விட்டது. சற்ரைக்கெல்லாம் குபு குபுவென்று வீங்கி விட்டது;. வலி தாங்க முடியவில்லை. சப்ஜான் நண்பனைத் தூக்கிக் கொண்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு ஓடினான்.

விடுமுறை நாட்களில் வேங்கடராமன் அருகிலுள்ள ஆலயங்களுக்குச் செல்வார். மலையடிவாரங்களுக்குப் போவார். சனி, ஞாயிறுகளில் திருப்பரங்குன்றம் முருகனைத் தரிசிக்கப் போகும் போது சப்ஜானையும் அழைத்துக் கொண்டு போவார். இருவரும் சேர்ந்தே முருகனைத் தரிசிப்பார்கள்.

எல்லா தெய்வங்களும், மதங்களும் ஒன்றுதான். மனிதந்தான் இந்த வெர்றுமைகளை ஏற்படுத்தியிருக்கிரான் என்று பதினைந்தாவது வயதிலேயே வெங்கடராமன் வேதாந்தம் பேசுவார். சப்ஜானும் அதை ஒப்புக் கொள்வான். அவனுக்கு முருக்ன கோயிலுக்குப் போவதும், மசூதிக்குப் போவதும் ஒன்றாகத்தான் தோன்றியது.

இந்த பரந்த மனப்பான்மையில் வளர்ந்த அந்த முஸ்லீம் அன்பர், வயதாகி உத்தியோகம் பார்த்த போது, காஞ்சிபுரம் கருட சேவைத் திருவிழாவில் பல வருடங்களில் வரதராஜரைத் தோளில் சுமக்கும் பாக்கியம் பெற்றார்.

விடுமுறை நாட்களில் திருச்சுழிக்குப் போகும் போதெல்லாம், முஸ்லீம் தோழனையும் உடன் அழைத்துப் போவார். வேங்கடராமன், வெறு மதத்த்வனாயிற்றே என்று அழகம்மாள் அவனை அலட்சியப்படுத்த மாட்டாள். கண்டவனையெல்லாம் அழைத்து வந்து இந்தப் பிள்ளை கழுத்தையறுக்கிறானே என்று முணுமுணுக்க மாட்டாள். இருவருக்கும் சேர்த்தே சாப்பாடு போடுவாள். ஊருக்குப் போகும் போது கையில் தின்பண்டங்கள் கட்டித் தருவாள்.

அப்துல் வகாப் பின்னர், போலீஸ் இலாகாவில் சேர்ந்து உயர் பதவிக்கு வந்தார். திருவண்ணாமலைக்குச் சென்று பள்ளித் தோழன் வேங்கடராமனை குரு ரமணராகத் தரிசிப்பார். அப்போதெல்லாம் பகவான், அருமை சப்ஜானை தம் பக்கத்தில் உட்கார வைத்துக் கொள்வார். இருவரும் சேர்ந்தே சாப்பிடுவார்கள். திருச்சுழிப் பழக்கம் திருவண்ணாமலையிலும் தொடர்ந்தது.வேங்கடராமன் சுமாரான மாணவர்தான். ஆங்கிலத்தில் அப்படி இப்படித்தான். மற்ற பாடங்களிலும் பரவாயில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் தமிழில் அவருக்கு ஆர்வம் அதிகமிருந்தது. நிறைய மார்க்குகள் வாங்குவார். நன்னூல் சூத்திரம் அவருக்குத் தலை கீழ் பாடம்.