24. குடிதாங்கி
“ஏன் அழறே? அம்மா போயிட்டாளேன்னா? அம்மா ஸ்வாமி காலடியிலேயே ஸுமங்கலியாப் போகணும்னுதானே வரம் கேட்டா? அவகேட்டபடியே ஸ்வாமி வரம் கொடுத்திருக்கேன். இதுக்கு அழுவாங்களா? பெரியவங்க போறது கிரமந்தானே? அம்மா இல்லையேன்னு அழாதே. நான் தான் அம்மா” இப்படிக் கனிரஸமாகச் சொன்னபடி ஸ்வாமி ஒரு பக்தருக்குத் தமது சித்திரம் சிருஷ்டித்துக் கொடுத்தார்.
‘அம்மா கேட்ட வரப்படியே அவளையும் அப்பாவையும் ஸ்வாமி புட்டபர்த்தியிலேயே கொண்டு வைத்துக்கொண்டு, அங்கேயே பூவோடும் பொட்டோடும் அந்தப் புண்யவதியைத் தம்மிடம் சேர்த்துக் கொண்டு விட்டார். அவள் பாக்கியசாலினி. அவளுக்குப் பதில் ஸ்வாமியையே பெற்ற நாமும் பாக்கியசாலிதான்‘ எனத் தெளிந்தார் தேம்பி வந்த பக்தர்.
எந்த அம்மாவும் குடும்பத்தை அப்படிப் பார்த்துக்கொள்ள முடியாது என்னும்படியாக அப்பேர்ப்பட்ட ரக்ஷணை தந்தாள் ஸாயித் தாய். பக்தருடைய பிள்ளைகளைத் தம் ஒயிட்ஃபீல்ட் காலேஜிலேயே சேர்த்து ஹாஸ்டலில் வைத்துக் கொண்டார். அவர் பெண்ணை அனந்தப்பூர் ஸத்ய ஸாயிக் கல்லூரியிலும் ஹாஸ்டலிலும் சேர்த்துக் கொண்டார்.
இப்படி எத்தனை குடும்பங்களை ஓர் அம்சம் விடாமல் ரக்ஷிக்கிறார்? இன்னொரு வீட்டுத் தலைவரிடம் கேட்டார், “ஏண்டா, உன் பிள்ளைக்கு வயஸாகல்லையோ? காலத்தில் கல்யாணம் பண்ண வேண்டாமோ?” என்று. அவர் தமது பிள்ளை பிடிகொடுத்துப் பதில் சொல்லாமல் தள்ளிப் போட்டுக்கொண்டே வருவதாகச் சொன்னார். “ஸரி, அவனை எங்கிட்டே அனுப்பு” என்று பகவான் வலிந்து பொறுப்பேற்றார்.
பையன் வந்தான். ‘செமுத்தி‘யாகக் கொடுத்தார்! “கல்யாணம் வேணாம்னா என்ன, பெரிசா பிரம்மசரிய ஸாதனையா பண்றே? ரெஸ்பான்ஸிபிலிடி இல்லாம இருக்கலாம்கிறதுக்காகவே மாரேஜ் வேணாம்னுட்டு, மனஸிலே கண்டகண்டதை நெனச்சுக்கொண்டு இருந்தா ரொம்ப சரியா? மெஜாரிட்டி ஜனங்களுக்கு மாரேஜும், ஃபாமிலி லைஃபும் தான் ஆத்மாபிவிருந்திக்கும், கர்மா போறத்துக்குமே ஸஹாயம் பண்ணும். அதனால ஸ்வாமி சொல்றேன், ஸ்வாமி பண்ணி வைக்கிற இடத்திலே ‘மாரி‘ பண்ணிக்கணும். ஃபாதர்மதருக்கு வயஸாகல்லே? அவங்களுக்கு ‘லெஸ் லக்கேஜ், மோர் கம்ஃபர்ட்‘ ஆக்கிட்டு நீ ரெஸ்பான்ஸிபிலிடிஸ் எடுத்துக் கொண்டாகணும்.”
அதற்குமேல் அப்பீல் செய்ய ஸுப்ரீம் கோர்ட் இல்லையே! பையன் சம்மதித்தான்.
அவன் தந்தையைப் பிறகு கூப்பிட்டு, “உன் பிள்ளையை ஸரிப் பண்ணிட்டேன். நானே பெண் பார்த்து வெச்சிருக்கேன்” என்றார்.
பக்தர் குடும்பத்தில் பகவானுக்கு என்ன பொறுப்பு, என்ன பொறுப்பு? தாயை இழந்தவரின் பெண் அனந்தப்பூரில் படித்துக் கொண்டிருக்கிறாளே, அவளுக்குத்தான் இந்தப் பையன் மூன்று முடிச்சுப் போட வேண்டுமென்று ஸ்வாமி முடித்திருக்கிறார்.
“ஓ, அவர்கள் எனக்குத் தெரிந்தவர்கள் தானே? பகவான் ஆக்ஞைப்படியே செய்கிறேன்” என்கிறார் தகப்பனார் ஸந்தோஷத்தோடு.
“அதுக்காக நீயே அவங்களைப் போய்ப் பார்க்காதே. பெண் வீட்டுக்காரங்க வந்து கேட்கிறதுதானே உங்க பத்ததி? நான் அவாகிட்டே சொல்றேன்” என்கிறார் பத்ததி பார்க்கும் பர்த்தி பகவான்.
ஸம்பிரதாயமாக ஜாதக பரிவர்த்தனை நடக்கச் செய்கிறார். ஸ்வாமியே ஸாதகமாக இருக்கிறபோது ஜாதகம் பார்க்கவேண்டுமா என்றால் இதுவும் அந்தக் குடும்பத்தாரின் பத்ததியை ‘ப்ரேக்‘ பண்ணக் கூடாதென்றுதான்!
பெண்ணின் படிப்பு இன்னம் ஒரு வருஷம் பாக்கியிருந்தது. ஸ்வாமியே தம் கல்லூரியில் சேர்த்துக் கொண்டிருந்ததால் கல்யாணத்துக்குப் பிறகும் அவளைத் தொடர்ந்து படித்துப் பூர்த்தி செய்யச் சொல்வார் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் இவ்விஷயத்தில் ஸ்வாமி ஸநாதனி கோஷ்டியைச் சேர்ந்தவர். கிருஹலக்ஷ்மிகளாவதற்கு வழியாகத்தான் தாம் மகளிர் கல்லூரி வைத்திருப்பதாகவும், குடும்ப வாழ்வின் மாண்பும் பெண்களின் மெல்லியல்புகளும் குலைய அவர்கள் உத்யோக புருஷிகளாக உருவெடுப்பது தமக்குத் துளிக்கூடப் பிடிக்காத விஷயம் என்றும் பன்முறை (இவ்வாண்டு 1979 ஸம்மர் கோர்ஸ் விரிவுரைகளில் முதலாவதில் தொடக்கமாகப் பாடிய பத்யத்திலேயே கூட) கூறியிருக்கிறார். அதனால் இந்தப் பெண்ணையும் பாதிப் படிப்பிலேயே, நிறுத்தி விட்டார்.
கல்யாணம் நடந்தது. எங்கே? ஸ்வாமியின் பிருந்தாவனத்தில்தான். பெண் வீட்டாரும் நிர்விசாரமாகப் பிள்ளை வீட்டார் போலவே வருகை தந்து சிறப்பிக்க, எல்லாப் பொறுப்புகளையும் ஸ்வாமியே ஏற்று நடத்திக் கொடுத்தார். திருமங்கல்யம் தாமே சிருஷ்டித்துக் கொடுத்தார். கூறை வேஷ்டி, புடவை எல்லாமும் கொடுத்தார். வந்திருந்தவர்களுக்கெல்லாம் இரட்டை ஸ்வீட்டுடன் போஜனம் பண்ணுவித்துத் தாமும் உடன் அமர்ந்து உண்டார்.
“அன்றைக்கு ‘நான்தான் அம்மா‘ என்றார். எந்த அம்மா இப்படிப் பண்ணுவாள்?” என்று விம்மி விட்டார் விம்மி, பெண்ணைப் பெற்ற அந்த பக்தர். ஜாதகத்தைத் தூக்கிக் கொண்டு இவர் படிப்படியாக ஏறாமல், பெண்ணுக்கு இருபது வயசுக்குள், இவர் நினைக்கக் கூடியதைவிட உயர் நிலையிலுள்ள பிள்ளையை மாப்பிள்ளையாகக் கொண்டு வந்து கொடுத்திருக்கிறாள் ஸாயிமாதா!
அதோடு பொறுப்புத் தீர்ந்தது என்று இருந்தாரா? அப்போது பிள்ளையாண்டான் வடக்கே வேலையாக இருந்தான். தெற்கே மாற்றிக்கொள்ள முயற்சி நடந்தது. மாற்றலான பின் குடித்தனம் வைக்கலாம் என்று நினைத்தார்கள். மனோ தத்துவ நுட்பமறிந்த பகவானோ ஓரிரு மாதமாகியும் டிரான்ஸ்ஃபர் கிடைக்காததால், “இன்னம் போஸ்ட்போன் பண்ணிக்கொண்டு இருக்கக் கூடாது. ஃபாமிலி ஸெட்அப் பண்ணிடணும்” என்றார்.
திருமருகல் டாக்டர் மயூரநாதனை முன்னம் சந்தித்திருக்கிறோம், நினைவிருக்கிறதா? அவர் தமது மூத்த மகளின் மாங்கல்யதாரணம் ஆச்சோ இல்லையோ ஆவேசமாய் எழுந்திருந்தார். “மாப்பிள்ளை வந்தானா?” என்று கை குலுக்க வந்தவர்களுக்குக் கை கொடுக்காமல் பிடித்துத் தள்ளிக் கொண்டு பைத்தியம் போல ஓடினார். ஏன்? அவருக்குத்தானே தெரியும், கலியாணமாகாமல் அவர் தவித்த தவிப்பும், அதை அருள் வள்ளல் ஸாயி தீர்த்து வைத்த அருமையும்? நேரே அந்த ஸாயியின் சித்திரத்திடம் ஓடி தண்டாகாரமாக விழுந்து அழுது தீர்த்தார்.
புட்டபர்த்தியில் பகவான் இவருக்குப் பேட்டி தந்த போது, “பெண் கலியாணத்தைப் பற்றி விசாரப்படாதே. நீ திரும்பிப் போறச்சேயே வீட்டிலே பிள்ளை வீட்டுக்காரங்க வந்திருப்பாங்க” என்றார்.
ஆம், அந்த அதிசயமும் நடந்தது. அந்தக் காலத்தில், அந்தச் சீமையில் பிராம்மண ஜாதியில் நடக்காத அதிசயமாக, பிள்ளை வீட்டுக்காரர்கள் பெண் பேச முதலடி வைத்து ஆளனுப்பியிருந்தார்கள்! இங்கே ஸ்தூல ஸாயியாக இன்றி ஸூக்ஷ்ம ஸாயியாக பகவான் விளையாடியதால் கிருபைப் பெருக்கில் பத்ததியையும் அடித்துத் தள்ளிவிட்டார்!
இன்னொரு பெண் விஷயத்தில் இது இன்னும் வேடிக்கையாக நடந்தது. ‘கல்யாணம் ஆகுமா ஆகுமா?’ என்று அப்பெண்வீட்டாரை தவிக்க விட்டுக் கர்மம் தீர்த்தபின், வறட்சிக்குப் பின் கனமழையாக ஸ்வாமி வரனையே பெண் வீட்டுக்குப் பிடரியைப் பிடித்துத் தள்ளினார்! அப்போது அந்தப் பெண் மெடிகல் காலேஜ் எக்ஸிபிஷனுக்குப் போயிருந்தாள். அங்கே கூட்டத்தில் ஒலி பெருக்கியில் அவளைக் கூப்பிட்டாக்கும் பெண் பார்க்கப்படும் படத்துக்கு அனுப்பி வைக்க வேண்டியிருந்தது ‘ஸாயி பாபா என்ன மிராகிள்தான் செய்யட்டும்; சென்னையில் கல்யாண ஸீஸனில் சத்திரம் பிடித்துக் கொடுப்பாரா?” என்று கேட்பீர்களானால் அதையும் இந்தப் பெண் விஷயத்தில் செய்துகாட்டி, ஒரு சில தினங்களுக்குள்ளேயே கெட்டிமேளம் கொட்டுவித்தார்!
“பெங்களூர் வரனைத்தானே சொல்றீங்கோ, ஸ்வாமி?” என்று கேட்டாள் என்னுடைய ஸாயி ஸஹோதரிகளில் ஒருத்தியான ஸ்ரீமதி தேவகி ரங்கஸ்வாமி.
ஸ்வாமி இன்டர்வ்யூ கொடுத்து இந்த அம்மாளுடைய மகள் கீதாவின் திருமண விஷயமாகச் சொன்னார். இது இன்று நேற்று நடக்கும் விஷயமல்ல. பத்து வருஷமாக, ‘இங்கே வரன், அங்கே வரன், இது வேண்டாம், அது வேண்டாம்‘ என்று லீலா நாடகர் இவர்களை ஆட்டுவித்திருக்கிற ஆட்டு கொஞ்ச நஞ்சமில்லை. இன்று வெள்ளையுள்ளம் கொண்ட குழந்தையாக கீதா இருந்தாலும், அதற்காக ஸ்வாமி அவளை அருமைக்கிட்டாலும், எப்பிறவியிலோ செய்த வினையைத் தீர்க்க வேண்டாமா? அதற்காகவே ஆட்டிப் படைத்தார். இப்போது ஒரு வரனைக் குறிப்பிட்டு அதுவே முடியும் என்று கூறி, போய்ப் பார்க்குமாறு தாயாரிடம் சொன்னார். ‘பெங்களூர் வரன்‘ என்று ஸ்வாமி சொன்னமாதிரிக் காதில் பட்டது. அதைத்தான் அந்த அம்மாள் உறுதிப் படுத்திக் கொள்வதற்காக அவரிடமே கேட்டாள்.
ஸ்வாமி ஸ்வாதீன அன்பில் கோபித்தார்: “மக்கு, பெங்களூரில் என்ன வரன் பார்த்திருக்கே? பெங்களூரில்லை. பேலூர், பேலூர்! இரண்டு வருஷம் முந்திப் பார்த்தியே; ஸ்வாமிக்கு ஞாபகம் இருக்கு. உனக்கு இல்லை. அதே வரனைத்தான் இப்ப போய்ப் பார்க்கச் சொல்றேன்.”
சொல்லவும் வேண்டுமா? அந்த வரனே குதிர்ந்தது. (பெங்களூர் என்று தேவகி கேட்டதிலும் தப்பில்லாமல், பேலூரைச் சேர்ந்த மாப்பிள்ளை பெங்களூரில்தான் இருக்கிறார். அவரை நேரில் பார்த்தே இராத ஸ்வாமி, தேவகியம்மாள் மாப்பிள்ளைக்கு என்று செய்துவைத்திருந்த மோதிரம் அவர் விரலுக்குப் போதாது என்று சகஜமாகச் சொன்னாராம். அதேபோல், பிற்பாடு மோதிரத்தை மாற்றிச் செய்ய வேண்டியிருந்தது!
***
திருவல்லிக்கேணியில் ஒரு மாத்வக் கிழவர், எளியரிலும் எளியர். சாண் இடத்தில் ஒண்டுக் குடித்தனம் இருக்கிறார். பதினாலு லோகமும் வியாபித்த விச்வரூபர் இந்தச் சாண் இடத்தில் தாமும் வந்து புகுந்து கொண்டு அடிக்கிற கொட்டம் கொஞ்சநஞ்சமில்லை. அது தனிக்கதை. இங்கே ‘கல்யாணோல்லாஸ ஸீமா‘வாக அல்லவா நித்ய பிரம்மசாரியான ஸ்வாமியைப் பார்க்கிறோம்? இந்த நாடக லீலைக்கு வரலாம்.
கிழவர் நேரில் பகவானைப் பார்த்தவரில்லை. ஆனாலும் தாம் இருக்கிற இடத்திலேயே பகவானிடமிருந்து ஸகல விஷயங்களுக்கும் உத்தரவு பெறுகிறார். இதே விதத்தில் பெண்ணின் கல்யாணத்துக்கும் பெற்றார். கையில் நாற்பதாயிரம், ஐம்பதாயிரம் வைத்திருப்பவர்களே மாமாங்க காலம் வரன் வேட்டை நடத்த வேண்டியிருக்க, ஏதுமற்ற கிழவரின் பெண்ணுக்கு உரிய காலத்தில், அவர்கள் நிலைக்கு ஒப்பிட்டால் உயரிய இடத்திலே திருமணம் நடைபெற ஸ்வாமி அநுக்ரஹித்தார். அதோடு எங்கெங்கோ யார் யாரையோ ஊக்கினார். ஓர் அன்பர் புடவை, வேஷ்டி வாங்கிக் கொடுத்தார்; இன்னொருவர் மாங்கலியம் அன்பளிப்பாகத் தந்தார்; வேறொருவர் திருமணம் நடத்தத் தம் பெரிய வீட்டிலேயே இடம் கொடுத்தார்; மளிகை இத்யாதிகளும் கொடையாக வந்து நிரம்பின. இதையெல்லாம்விட அதிசயம் ஸாயியின் அன்புக் கரங்களே ஸூத்திரத்தை ஆட்டுகிறது என்று ஸ்வச்சமாகக் காட்டும் நிரூபணம் என்னவெனில், சமையற்காரர் பணம் வாங்கிக் கொள்ளாமலே சமைத்துப் பரிமாறினார். மேளக்காரர் சம்மானமில்லாமலே மங்கள இசை தந்தார்; ஒரு டாக்ஸிக்காரர் இலவசமாக ஜானுவாஸ ஊர்வலம் நடத்திக் கொடுத்தார்!
ஒரு ஸம்பிரமம் குறையாமல் மாப்பிள்ளை பவனி, மாலை ரிஸப்ஷனில் ஸ்வீட்ஸேவரியுடன் உபசரிப்பு என்று மாத்வத் தாத்தா வீட்டுத் திருமணம் மாதவனின் மதுமனத்தால் இனிது நடந்தேறியது.
***
அப்போது ஹைதராபாத்வாசிகளாக இருந்த அந்தப் பிள்ளைக்கும் பெண்ணுக்கும் முறையே விச்வம் என்றும் ஜகதா என்றும் பெயர் கொடுக்கலாம். பிள்ளை, பெண் என்று சொன்னாலும் அவர்கள் இருவருமே நடுத்தர வயதுக்கு வந்துவிட்டவர்கள். அதுவரை கல்யாணம் செய்து கொள்ளாமல் ஓட்டிவிட்டனர். அப்புறம் இரு தரப்பு உறவினரும் நண்பரும் ஊக்கி, உகந்த சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுத்ததில் இருவரும் சந்திக்க நேர்ந்து பரஸ்பரப் பிரியம் கொண்டார்கள். இருவருமே ஸத்யஸாயி பக்தர்கள். எனவே இப்போது விச்வம் ஸ்வாமியின் ஒப்புதல் பெற்ற பின்பே ஜகதாவை மணப்பது என முடிவு செய்தார்.
ஸ்வாமியிடம் சென்றார். அப்போது பிரசாந்தி நிலயத்துக்கு வந்திருந்த ஓர் உயர் அதிகாரியைக் கவனித்துக்கொள்வதில் விச்வத்தின் உழைப்பு, பொழுது இரண்டையும் மூன்று முழு நாட்கள் திருப்பிவிட்ட திருவிளையாடலர், அவர் தம்மிடம் திருமண சமாசாரம் பிரஸ்தாவிக்க இடமே தராமல் செய்து, அந்த மூன்றாம் நாள் வெளியூர் சென்று விட்டார்! ஏமாந்து திரும்பினார் விச்வம்.
கனவில் வந்தார் லீலாலோலர். விச்வத்தின் கனவில் அல்ல! ஜகதாவின் கனவிலும் அல்ல! அவ்விருவருக்கும் நல்ல பரிசயமுள்ள ஹைதராபாத் டாக்டர் காகடேயின் கனவில்தான் வந்தார். ஏன் இவர்களை விட்டு, அவருடைய கனவில் வரவேண்டும் என்று நீங்கள் கேட்காதிருப்பதற்காகத்தான் இங்கு ‘லீலாலோலர்‘ என்று குறிப்பிட்டிருப்பது; நூலுக்கே ‘லீலா நாடக ஸாயி‘ எனப் பெயரிட்டிருப்பது!
கனவில் வந்த ஸ்வாமி காகடேயிடம், “அவங்க இன்னம் கொஞ்சம் வெய்ட் பண்ணணும்” என்று சொல்லி ஒரு ஸ்லேட்டைக் காட்டினார். ஸ்லேட்டில் 194 என்று எழுதியிருந்தது. 19ந் தேதி, 4ம் மாதமான ஏப்ரல் என்று அர்த்தம் செய்து கொள்ளத் தோன்றியது. ஆனால் வருஷத்தைக் காணோம்! லீலா லோலரின் இன்னொரு குறும்புதான்! காணப்படாத அந்த வருஷத்தின் ஏப்ரல் 19ந் தேதியன்று விச்வம்ஜகதா திருமண விஷயமாக ஏதோ முக்யமான நிகழ்ச்சி நடக்கப்போகிறது போலும்!
அந்த 1978ம் ஆண்டே ஏப்ரல் 19ந் தேதி, அப்போது பாபா முகாமிட்டிருந்த பெங்களூர் பிருந்தாவனத்தில் இருக்கும்படியான பிராப்தி ஜகதா, காகடே இருவருக்கும் கிட்டியது. ஆனால் பாபாவின் கவனிப்புக்குப் பாத்திரமாகும் பிராப்தி கிட்டியதாகத் தெரியவில்லை. அத்தனை கவனமாக ஜகதாவைக் கவனிக்காமல் படுத்தி எடுத்தார் பர்த்தீச்வரர்! காலை அவள் இருந்த பக்கமே அவர் போகவில்லை. மாலை? மணி 5.45 வரை தரிசனம் தர வராமலேயிருந்தார். பிருந்தாவனத்தில் 6.30 மணி பஸ்ஸைப் பிடித்தால்தான் இவர்கள் பெங்களூரில் இரவு எட்டுக்குப் புறப்படும் ஹைதராபாத் பஸ்ஸைப் பிடிக்க முடியும்.
5.50க்கு பாபாவின் இருக்கை கேட் திறக்கப்பட்டது. ஜகதாவுடைய இதயமும் ஆர்வத்தில் பெரிதாகத் திறந்து கொண்டது. அடுத்த நிமிஷமே அந்த ஆர்வத்தை அடைத்து நெரித்து மூடுவதாக ஒன்று நடந்தது. அதாவது, பாபா தரிசனம் தரப் பாங்காக நடந்து வராமல் காரில் எங்கோ செல்கிறார் என்று தெரிந்தது. இம்மாதிரி வெளியே செல்கையில் முன் வாசலில் கூடியுள்ள அடியார்களைப் பாராமலே புண்ய புருஷர் அவர் பாட்டுக்கு விர்ரென்று காரில் போய்விடுவதுமுண்டு. அதை எண்ணித்தான் ஜகதாவின் ஆர்வம் அடியுண்டு சரிந்தது.
வெளி வாசலில் பக்தர் கூடியிருந்த மரத்தடிக் கொட்டகையைக் கார் ஏறக்குறைய தாண்டிவிட்டது. அந்த அயனான சமயத்தில் புண்ணியவானுக்குக் கருணை வந்தது.
டக்கெனக் காரை நிறுத்தி, இறங்கி, அடியாரிடம் புகுந்து சஞ்சாரம் செய்தார். காகடேக்குப் பாத நமஸ்கார பாக்கியம் அளித்தார். ஆனால் பிரச்னையை விண்ணப்பிக்கும் பாக்கியம் தராமல் நகர்ந்தார்.
பெண்களின் பக்கம் சென்றார்.
நேரே ஜகதாவின் முன் நின்றார்.
விம்மும் மனத்தோடு பாத நமஸ்காரம் செய்து கொண்டாள் அவள்.
ஆனால் மனம் விம்மிய விம்மலில் அவள் எத்தனை முயன்றும் பேச்சு வரவில்லை.
ஐயோ! பாபா கைக்குக் கிட்டியும் இவள் பிரச்னையை ஸமர்ப்பிக்காமலே இருக்கிறாளே! எந்த க்ஷணமும் அவர் ஓடிவிடுவாரே! அப்புறம் எப்படிப் பிடிப்பாள்?
அப்படியில்லை. நாம் சொல்லித்தான் தெரிந்துகொள்ள வேண்டுமென்றில்லாத ஸர்வஜ்ஞன் இன்று இவளுக்கு மங்கள வாக்கு நல்கியே தீர்வதென்று சங்கற்பித்துவிட்டான்!
இவள் ஏதும் சொல்ல முடியாவிடினும் பாபாவே, “எல்லாம் நல்லா ஆகும். ரொம்ப ஸந்தோஷம்” என்று பூர்ண ஆமோதிப்புடன் ஜகதாவிடம் கூறினார்.
அதோடு நேரே காருக்குப் போய் வெளிச் சென்றுவிட்டார்.
ஜகதாவுக்கும், காகடேக்கும் ஏற்பட்ட மகிழ்ச்சிக்கும் திருப்திக்கும் எல்லையில்லை.
அப்போதுதான் அவர்கள் முன்பு பாபா கனவில் சொன்ன 1-94 அன்றைய தேதிக்குப் பொருந்துவதைக் கவனித்தார்கள். இது அவர்களது மகிழ்ச்சிக்கும் திருப்திக்கும் ஸம்பூர்த்தி தரும் ஸாயி முத்திரையை அழுத்தமாகப் பதிப்பித்துவிட்டது.
கனவில் 194 தெரிவித்த ஸ்வாமி, சரியாக அந்தத் தேதி, மாதங்களிலேயே ஜகதாவிடம் தமது ஸந்தோஷத்தையும், யாவும் நல்லபடியாகும் என்ற ஆசியையும் தெரிவித்து விட்டதால், இனி விச்வம் யோசனை செய்யாமல் திருமணத்துக்கு ஒப்புக்கொள்ள வேண்டுமென்று பம்பாயிலிருந்த அவருக்குச் செய்தி தெரிவித்தார்கள்.
ஆனால் மனித மன விசித்ரம் பாருங்கள்! ‘திருமணம்‘ என்ற வார்த்தையை ஸ்வாமி சொல்ல வில்லையே! பொதுவாக எல்லாம் நன்றாக ஆகும் என்று சொல்லிச் சந்தோஷம் கூறியிருக்கிறார். இதைக் கொண்டு கலியாணத்துக்கு அவர் அனுமதித்ததாக எப்படிக் கொள்வது?’ என்று விச்வம் ஒரேயடியாக யோசனை செய்ய ஆரம்பித்துவிட்டார்.
இந்த ப்ரச்னைதான் இவர்களைக் குடைந்தெடுத்துக் கொண்டிருக்கும்போது ஸ்வாமி வேறே எது நல்லபடி ஆவதைச் சொல்லியிருக்க முடியும்? வேறெதற்கு அவர் “ரொம்ப ஸந்தோஷம்” என்று அங்கீகார முத்திரை குத்தியிருக்கமுடியும்? அதோடு பொருள் பொதிந்த, கனவை நனவாக்கிய, நனவைக் கனவில் காட்டிய அந்த 19-4ல் தர்சனத்தின் கடைசி நொடியில் நடந்ததல்லவா இது? இவற்றையெல்லாம் காகடேயும் ஜகதாவும் எத்தனை எடுத்துக்காட்டியும் விச்வத்தால் தெளிய முடியவில்லை.
காகடே பம்பாய்க்குச் சென்று விச்வத்திடம் நேரில் பேசியும் அவரது சஞ்சலத்தை மாற்ற முடியவில்லை. மிகவும் சலிப்புடன் கோலாப்பூர் வழியாக ஹைதராபாத் புறப்பட்டார் காகடே.
லீலா கோலாஹலர் கோலாப்பூரில் மீண்டும் காகடேயின் கனவில் வந்தார். என்ன புது க்ஷோபணம் (குழப்பம்) செய்வதற்கு என்கிறீர்களா?33 கேளுங்கள்.
கனவில் பாபா பிருந்தாவனத்திலிருக்கிறார். அடியாரிடையே அருளுபதேசம் புரிகிறார். அது முடிந்ததும் கூட்டத்திலிருந்த காகடேயைக் கூப்பிடுகிறார். “இரண்டு கையையும் சேர்த்துப் பிடி” என்று அவரிடம் கூறி, விபூதி ஸ்ருஷ்டிக்கிறார். காகடேயின் இரு கைகளிலும் திருநீறு வழிய வழிய நிறைகிறது. “எல்லா டிவோடீஸுக்கும் விநியோகம் பண்ணு” என்கிறார் விநோதர். விநோதந்தான் இரண்டு கைகளிலும் விபூதி நிறைந்திருக்கும்போது காகடே அதை எப்படி எடுத்து விநியோகிப்பதாம்! அப்படியே நீட்டினால் ஒருசில பக்தர்களே அவ்வளவையும் பிடிப்பிடியாய் அள்ளிக் கொண்டுவிட மாட்டார்களோ?
குழம்பி நிற்கிறார் காகடே. க்ஷோபணம்தான்! க்ஷோபணமூர்த்தியை கேள்விக்குறியுடன் பார்க்கிறார்.
சோபன மூர்த்தியாகக் கேலி நகை செய்யும் பெருமான், “அப்படியே விபூதிக்கு மேலே வாயாலே ஊது. கூட்டம் பூராவும் விபூதி போய்ப் பரவும்”
ன்கிறார்.
காகடே அவ்வாறே செய்ய, கையிலிருந்த திருநீறு குறைந்து கொண்டே வருகிறது. சில சிட்டிகைகளே மிகுந்திருக்கும்போது, பாபா அவரிடம், “போதும், நிறுத்து. கையிலே பாக்கி இருக்கிறதை விச்வத்துக்கு அனுப்பு. இன்னமும் fuss பண்ணவேண்டாமென்று அவருக்குச் சொல்லு. அவர் ஜகதாவைக் கல்யாணம் செய்துகொள்ளணுமென்று நான் உத்தரவு போட்டு, அதற்குப் பிரஸாதமாகவே இதை அனுப்புகிறேனென்று தெரிவி” என்றார்.
கனவு கலைய, தூக்கிவாரிப் போட்டுக் கொண்டு எழுந்தார் காகடே.
ஆஹா, எப்பேர்ப்பட்ட ஆச்சரிய அங்கீகாரம்! காகடேயின் கையில் மெய்யாலுமே திருநீறு இருந்தது!
திருமணத்தைக் கொண்டு வந்த திருநீறு! இந்த கனவுநனவுப் பிரஸாதத்தைப் பெற்றபின்கூட விச்வம் யோசித்துக் கொண்டிருக்க முடியுமா என்ன? திருநீற்றில் விச்வத்தின் ஐயம் நீற்றுப் போயிற்று.
ஸாயி உவக்கும் குருவாரமான 1978 ஜூன் 29ந் தேதியன்று அவர் சமர்த்தாக ஜகதாவுக்கு மூன்று முடிச்சுப் போட்டார்.
34“ஸ்வாமி” நூலில் “அவதாரம் அல்லவோ?” என்ற 46ம் அத்தியாயத்தில் இந்த ‘க்ஷோபணம்‘ ஆராயப்பட்டிருக்கிறது.
***
தனிக் கல்யாணங்கள் தவிர ‘மாஸ் – வெட்டிங்?குகளும் ஏராளமாக நடத்துகிறார் பாபா. தாமே புட்டபர்த்தியில் செய்வது மட்டுமின்றி, தமது ஸ்தாபனத்தினரை வெளியூர்களிலும் கூட்டுக் கல்யாணங்கள் நடத்தச் செய்கிறார். ஏழைகளுக்குச் செலவின்றிப் பொதுவாகப் பலருக்கு ஸ்தாபனச் செலவில் திருமணம் நடக்க அருள்கிறார். புதுத் தம்பதிக்குப் புடவை வேஷ்டி, மங்கலியம் தருவது மட்டுமின்றி, உண்ணும் தாலம், கோப்பை முதலான பாத்திரங்களும் வழங்கப்படுகின்றன. ஸ்வாமியின் 52வது திருநக்ஷத்ரத்துக்கு முன்பு புட்டபர்த்தியில் இப்படிக் கூட்டாக நூற்று முப்பத்திநாலு ஜோடி வதூவரர்களுக்கு நம் நரவரர் மணம் நடத்திய கோலாஹலத்தைக் கண்டவர்கள் வியந்து சொல்கிறார்கள்.
நம் தெய்வங்களில் வள்ளிதேவானை என்று இரட்டை மனைவி கொண்ட முருகன், ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி, என்று மூன்று தாரங்கள் கொண்ட திருமால், இருபத்தியேழு நக்ஷத்ரதேவதைகளை மணந்த சந்திரன், பதினாறாயிரம் பத்தினியர் கொண்ட கண்ணன் என்றெல்லாம் இருந்தாலும், ஸ்ரீராமனைப் போல் ஏகபத்தினி கூட இல்லாமல், பிரம்மசாரியாக இருப்பவர் நம் ஸ்வாமி. ஆனால் இவரைப் போலத் திருமணம் செய்து வைப்பவர் லோகத்திலில்லை. ‘நன்றாக மாட்டிவிடுவோம், முழிக்கட்டும்‘ என்று இப்படிச் செய்யவில்லை. இயற்கை வேகம் அடியோடு அழியக்கூடிய அபூர்வப் பக்குவிகளைத் தவிர ஏனையோருக்கு அதையே நெறிப்படுத்தித் தருவதுதான் உயர்வுக்கு உபாயம் என்றே இப்படிச் செய்கிறார். பரமஹம்ஸினி சாரதை தன்னிடம் வந்த இளைஞருக்கெல்லாம் காஷாயம் தந்தாள்; பர்த்தி மாதாவோ மணமாலை கொடுக்கிறாள். அபூர்வப் பக்குவிகளுக்கே முக்கியமாக தீக்ஷை அளித்தவள் சாரதை.
அபக்குவத்திலும் அபக்குவமானவர் உள்பட அனைவரையும் கட்டி அழ வந்திருப்பவர் நம் ஸ்வாமி. கட்டி ‘அழாமல்‘ கட்டிச் ‘சிரிக்கிற‘ கட்டிக் கரும்பாக இருப்பதுதான் அவர் பெருமை.
காலத்தில் பொறுப்போடு கர்ம நெறிப்படுத்தித் தடித்தனத்தைக் குறைப்பது குடித்தனமே என்பதால்தான் இப்படிக் கல்யாணங்களைச் செய்துவைத்துக் குடும்ப வாழ்க்கையைத் தொடங்கி வைக்கிறார்.
இந்தக் குடும்ப வாழ்க்கை இடும்பை மயமாயிருக்கிறதே என்றால், அதையுந்தான் பார்த்துப் பார்த்துக் களையத் தாமே அக்ஷதை போட்டுக் கொண்டிருக்கிறாரே! அப்பப்பா, அடியார்களின் இல்லறப் பொறுப்புகளை அவர் தாங்கித் தரித்து நடத்தி வைக்கும் செவ்வி உண்டே! ஒரு அல்ப விஷயமும் விட்டுப் போகாமல் செய்து தருவார்.
“இந்த உலகமும், இது உள்ள ஸுர்ய மண்டலமும் ஒரு துளியேயாகிவிடும் பிரம்மாண்டம் முழுதும் ஸாயியின் கைக்குள் இருக்கிறது. மகத்தான சராசர கதிகளை ஸாயியே நடத்துகிறார். அவரே விச்வத்தில் எங்கோ மூலையிலுள்ள இந்த உலகத்தில் இருக்கிற ஒவ்வோர் அடியாரின் வாழ்க்கையிலும் ஒரு மூலை முடுக்கில்லாமல் கவனம் செலுத்திப் பேணுகிறார். இதுவே ஸாயியின் மஹிமைக்கு அளவை. பக்தர்கள் பிரத்யக்ஷத்தில் காணும் அளவை” என்று அவரே கூறியதைவிட இவ்விஷயத்தை எவரும் அழுத்தமாகக் கூற முடியாது.
“உங்களுடைய சக்தி, ஸாமர்த்தியமெல்லாம் பராசக்தி கொடுத்த பொறிகள்தாம். அந்த மஹாசக்தியின் கிருபையின்றி இவற்றைக் கொண்டு நீங்கள் எதுவும் செய்துகொள்ள முடியாது. இதை நன்றாக உணருங்கள். நமக்கென ஒரு பலமுமில்லை என்று தீரத் தெரிந்து கொள்ளுங்கள். நூறு சதவிகிதமும் கடவுளைச் சார்ந்து அவன் மீது சாய்ந்து அவனுக்கு ஆதீனமாக வாழ வேண்டியவரே நாம் என உணருங்கள். இவ்விதம் அவனே அனைத்துக்கும் கதி எனத் துணை கொண்டால் அவன் உங்களை நிச்சயம் கவனம் குன்றாமல் பராமரிப்பான்; உங்களைத் தீங்கிலிருந்து காப்பான்” என்கிறார்.
நூறு சதவிகிதமும் சார்வதைத்தான் கண்ணனும் சொன்னான். ‘யோக க்ஷேமம் வஹாம்யஹம்‘ என்று தனக்கு லக்ஷணம் கூறிக்கொண்ட போது அதற்குப் பாத்திரராகிறவருக்கும் லக்ஷணம் சொன்னான். “அவர்கள் வேறெதையுமே சிந்திக்கக்கூடாது. என்னை சாதாரணமாக உபாஸித்தால் போதாது. ‘பரி உபாஸதே‘ என்னும்படி முழுமையாக வழிபட வேண்டும். எக்கணமும் நீங்காமல் என்னிடம் சித்தம் நன்கு ஒட்டிய ‘நித்ய அபி யுக்தர்‘களாக அவர்கள் இருக்க வேண்டும்” என்றான்.
ஸ்வாமியும் இதையே பேச்சில் சொன்னாலும் காரியத்தில் வரும்போது இந்த நவீன அவதாரத்தில் மிக மிக இளகிக் குழைந்து விடுகிறார். நூறு சதவிகிதம் என்று பேச்சில் சொல்பவர், நாம் அதில் முப்பத்தைந்து சதவிகிதம் கூட எடுக்காமல், அஹங்காரிகளாகத் திரிந்துங்கூட அனவரதமும் நமது யோக க்ஷேமங்களை வஹிக்கிறார்.
“தொண்டு செய்து ‘ராமா ராமா‘ என்றிருப்போர்க்குக் குடிதாங்கும் கருணாநிதி” என்று சிவன் பாடினார். விசேஷமாகத் தொண்டு செய்யாமலும், ‘ஸாயிராமா‘ என்று நீள நினையாமலும் இருக்கிற நமக்கும் குடிதாங்குகிறார் ஸாயி.
குடும்பத்துக்கான நியாயமான லௌகிகக் காரியங்களை, கடமைகளை ஆற்றுவதற்கு ஸ்வாமி புரியும் ஸஹாயம் அளப்பரியது. இதோடு நின்று விடாமல் ஒரு குடும்பத்தில் குழந்தையிலிருந்து ஆரம்பித்து, வாலிப தசையிலுள்ள மக்கள், வீட்டுத் தலைவி, தலைவர் ஒவ்வொருவரும் ஆன்மியத்தில் செவ்வைப்படுவதற்கும் தரம் பிரித்து வழிகளைக் காட்டுகிறார்.
“ஸினிமாவுக்குப் போகாதே; டி.வி. வேண்டாம்; குழந்தைகளும் வாலிபர்களும் விளையாடத்தான் வேண்டுமென்றாலும் ஸ்போர்ட்ஸே வெறியாக, கிரிக்கெட், அது, இது என்று பொழுது முழுதையும் அதில் பாழ்செய்ய வேண்டாம்; மாதர்கள் இன்றைய நாகரிகப் போக்குகளிலும் நவீனக் கேளிக்கைகளிலும் வீணாக வேண்டாம். வீட்டுத் தலைவர் குடியிலும் புகையிலும் சீட்டாட்டத்திலும் குதிரையாட்டத்திலும் அரசியல் சர்ச்சையிலும் வாழ்க்கையை விரயமாக்கவேண்டாம்” என்று ஓயாது உபதேசிக்கும் ஸ்வாமி, அதோடு நில்லாமல், இவர்களுக்கு மாற்றாக மனத்துக்குகந்த வேறு வழிகளைக் காட்டி அவற்றில் அவர்களை ஈடுபடும்படிச் செய்வதுதான் அவருடைய திறமையும் பெருமையுமாகும். குழந்தைகளுக்கா பாலவிகாஸ்; இளைஞருக்கா, ஸேவாதளம்; பெரியோருக்கா, ஸமிதி; மாதருக்கா, மஹிளா விபாக்; எல்லோருக்கும் சேர்த்தா பஜனை மண்டலி என்று பிரித்தும் சேர்த்தும் கொடுத்து, இவை எல்லாவற்றிலுமுள்ள தன்னுடைய இனிய தொடர்பால் இவற்றை அந்தந்தப் பிரிவினரும் இதயமார ஏற்று மற்ற வழிகளின் சபலத்திலிருந்து விடுபட்டு இறைபணியும், ஸமூஹப் பணியும் செய்ய வைக்கிறார்.
இதெல்லாவற்றுக்கும் ஆதாரமாக இருப்பது குடும்ப வாழ்வேயாதலால் அதை அக்கறையுடன் போஷிக்கிறார்.
சாராயக் கடையாக இருந்த தம் வீட்டை பஜனை மந்திரமாக்கியவர் பாபா என்று ஒரு மெய்யடியார் சொல்வார். குடியில் முழுகிய எத்தனை குடிகள் ஸ்வாமியால் புது வாழ்வு பெற்றுள்ளன தெரியுமா? இவ்விதமே வம்புச் சாவடியாகவும், அரட்டைக் கிளப்பாகவும், சூதாட்டப் பாசறையாகவும், இங்கே எழுதக் கூடாத வெறியாட்ட விடுதியாகவும் இருந்த எத்தனையோ வீடுகள் ‘குடும்பம்‘ என்ற கௌரவமான பெயருக்குரியனவாகத் திருந்தியிருக்கின்றன. எத்தனை கிருஹலக்ஷ்மிகளின் கண்ணீரையும், எத்தனை குழந்தைகளின் நிராதரவு நிலையையும், எத்தனை குடும்பத் தலைவர்களின் நிம்மதியின்மையையும் ஸ்வாமி போக்கியிருக்கிறார் என்று யாரே கணக்கெடுக்க முடியும்?
“பாபாவை அறியுமுன் எனக்கு எத்தனை விதமான கவலைகள் தான் இருந்தன என்று சொல்லி முடியாது. இன்று எனக்கு ஒரு விசாரமில்லை. மனசாந்தியோடு இருக்கிறேன்” என்று ஒரு மலேஷிய சங் சொல்வது அச்செழுத்தில் நமக்குத் தெரிகிறதெனில், அச்சில் வராத ஆயிரம் ‘சங்‘குகள் ஜகமெங்கும் இருப்பார்கள்! ஈச்வராவ தாரம் என்பதற்கு இது ஒன்று போதாதோ?
ஸாயி ஸ்தாபனத்தில் இனப்படியும் வயதுப்படியும் பிரித்து முன்னேற்றுவது ஒரு பக்கம். குடும்பம் என்கிற ஒவ்வொரு ஸ்தாபனத்திலும் ஒரு புருஷனையும் மனைவியையும், மாமியாரையும் மருமகளையும், மக்களையும் பெற்றோரையும் ஒன்றாக இசைவிப்பது இன்னொரு புறம். ஸதா பூசலிட்டுக் கொண்டிருந்த தம்பதிகளை, அவர்களது பூசல் டயலாக் முழுவதையும் தாமே ஒப்பித்துக் காட்டியே ஒற்றுமைப்படுத்துவார்! முரட்டுக் கணவன்மாருக்கு இடித்துச் சொல்லித் திருத்தியிருக்கிறார். புருஷனுக்கடங்காமல், பாப் தலையும், லிப்ஸ்டிக் உதடும், டென்னிஸ் கையுமாக இருந்த பெண்களைப் பதப்படுத்தி ‘ஸுமங்கலி‘ என்ற கௌரவமான பெயருக்குரியவர்களாக்கியிருக்கிறார். நயமாகவும் பயமாகவும், ஆடிக் கறக்கிற மாட்டை ஆடியும், பாடிக் கறக்கிற மாட்டைப் பாடியும் கறக்கும் ஸ்வாமியின் அருளால் சீர்ப்பட்ட சிறாரும், யுவரும் பலப் பலர்.
இவர்களுக்குப் பிரதிநிதிகளே அவரது கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் பயிலுகிறவர்கள். இவர்களை வீட்டு மக்களுடன் இசைவுற பாபா பொருத்துவதைக் குறிப்பிட வேண்டும். தாய் தந்தையிடம் எந்நாளும் அவர்கள் மரியாதையாக இருக்கும்படியும், சோதரரை அரவணைத்துச் செல்லும்படியும் செய்வார். இந்தப் பெற்றோருக்கும் பெற்றோரான கிழவர்கள் பல குடும்பங்களில் இருக்கிறார்களல்லவா? அவர்களைப் பிள்ளையும் மருமகளும் சரியாக நடத்தாமலிருப்பதே அனேக இடங்களில் நடைமுறை. இப்படிப்பட்ட பிள்ளை மாட்டுப்பெண்கள் பலர் பாபாவின் கோபப்பிரஸாதத்துக்கு ஆளாகியே பெற்றோரை முறையாகப் பேண ஆரம்பித்திருக்கிறார்கள். பெற்றோரைப் பேணுவது கடமை ட்யூட்டி – என்று வெகுவாக வலியுறுத்துபவர் நம் ஸ்வாமி.
இக்காலத் தாய் தந்தையர்களிடம் எவ்வளவோ குறைகளிருப்பதை ஸ்வாமி உணர்வார். அவரே அதைச் சொல்லி, “நான்தான் நிஜமான மாதாவும் பிதாவும்” என்றும் சொல்வார். பெற்றோருடைய தவறுகளுக்கு மக்கள் தழைந்து கொடுத்துத் தப்புவழியில் தாமும் போகக்கூடாது என்பார். ஆனாலும் எந்த நிலையிலும் அவர்களை மரியாதைக் குறைவாக நடத்தக்கூடாது; ஏசக் கூடாது; மரியாதையுடன் எடுத்துச் சொல்லி அவர்கள் கேளாவிட்டாலும் மௌனமாகத்தான் போக வேண்டும் என்பார். ஸ்வாமி விரும்பும் விதத்தில் ஓர் இளைஞரைப் போகவிடாமல் தடுத்த பெற்றோரைப் பற்றிக் கண்டித்தே கூறிய ஸ்வாமி, ஆயினும் அந்த இளைஞர் பக்குவமாக மூன்று முறை அவர்களுக்குச் சொல்லவேண்டுமென்றும் அப்படியும் கேளாவிடில் மௌனமாகவே தனியாகப் போய்விடலாம் என்றும், அப்போதுங்கூட ஒரு சுடுசொல் சொல்லக் கூடாது என்றும் உபதேசித்தார்.
“தனியாகப் போனாலும் பணத்தால் அவர்களுக்குச் செய்வதில் குறைக்கக் கூடாது. உனக்கு உயிரைக் கொடுத்த ஸ்வாமியின் சொற்படி அவரிடம் உயிரன்பைச் செலுத்தவே தனியாகப் போகலாம். அதே சமயம் உடம்பைக் கொடுத்துப் பேணி வளர்த்தவர்களின் உடம்புக்காக நீ உடம்பால் சம்பாதிக்கும் பொருளைக் கொடுக்க வேண்டும். தனியாகப் போன பின்னும் ஒரு நல்லது பொல்லாததுகளில் அவர்களோடு சேர்ந்து கொள்ள வேண்டும்” என்றார்.
தம் தகப்பனாரின் அனந்த அவகுணங்களைப் பொறுக்க முடியாத ஒருவரிடம் ஸ்வாமி மிகுந்த அநுதாபத்துடன், “அவர்கிட்டே நீ பிரியமாத்தான் நடந்து காட்டணும்னு ஸ்வாமி சொல்லல்லை. ஆனாலும் அவர்கிட்டே ஒரு நாளும் ‘க்வாரல்‘ பண்ணாதே, சண்டை போடாதேன்னுதான் சொல்றேன்” என்றார்.
***
எந்நிலையிலும் ஸமத்வம் குலையாமலிருப்பதே ஸாதனையின் எல்லை. அதை அடைந்தோர் வெகு வெகு அபூர்வமே. அந்நிலை நோக்கிச் செல்லும் ஸாதகரில் பலருக்கு ஒரு நிலையில் பெற்றோரைவிட விரோதிகள் இல்லை என்பது போலிருக்கும்! பக்தி, வைராக்யம், வித்யாஸமில்லாமல் அனைவரிடம் ஒரே போன்ற பிரேமை, தர்ம ஒழுக்கம், தியாக புத்தி, கொடைக் குணம் எல்லாவற்றிலும் இவர்களுக்குப் பிற்பட்டே நிற்கும் இவர்களது பெற்றோர், சாஸ்திரத்தில் பெற்றோருக்குத் தந்திருக்கும் ஸ்தானம் ஒன்றை மட்டும் காட்டி, இவர்கள் நன்னெறியில் செம்மையுற முடியாமல் கட்டிப் போடப் பார்ப்பார்கள். விந்தையிலும் விந்தையாக ஒரு ஸாதகரின் ஆத்மிகப் பிரபை அலைகள் பிற மனிதர்களைத் தொட்டு உயர்த்துவதுபோல் ரத்த பந்துக்களை, குறிப்பாகப் பெற்றோரை, தொடுவதில்லை. ராம கிருஷ்ணாதியரும், தாமும்கூட இதற்கு விலக்கல்ல என்கிறார் ஸ்வாமி. நெருங்கிய உறவினரான ஒரு நல்ல ஸாதகரின் ஆன்ம சக்தி சரீர ஸம்பந்தமுள்ளவர்களுக்குள் அவ்வளவாகப் பாயாது போலும்.
இதனால் இப்படிப்பட்ட சுற்றத்தினர் ஒரு ஸாதகரின் நுண்மையைச் சற்றும் உணராமலும் மதியாமலும் நெரித்தபடியே இருப்பார்கள். அவதாரங்களுக்குங்கூடச் சில விருப்பு வெறுப்புக்கள் இருக்கும்போது இப்படிப்பட்ட ஸாதகர்களுக்கும் சில இச்சைகள், த்வேஷங்கள் இருக்கத்தான் செய்யும். இது மட்டுமே இவர்களது பெற்றோர் போன்ற நெருங்கிய பந்துக்களுக்குத் தெரியுமாதலால் இவர்களுக்குரிய மதிப்பைத் தந்து ஸ்வதந்திரமாக விடாமல் சின்ன அளவிலும் பெரிய அளவிலும் ஹிம்ஸித்து வருவார்கள். அதே போதில் தமது வழிக்கு வராத இவர்களால் தாங்கள் மதிக்கப்படாமல் ஹிம்ஸிக்கப்படுவதாகவும் நினைப்பார்கள். Tug of Warதான்,
இவ்வாறு அவதிப்பட்ட ஒருவரிடம் ஸ்வாமியே, தந்தை தாய் உள்பட எல்லாமே சந்தையிற் கூட்டம்தான் என்ற அவரது கருத்தை உறுதிப்படுத்தித் தந்ததை நான் அறிவேன். “நான்தான் நிஜமான தாய் தந்தை. என்றாலும் அவர்களை விரோதித்துக் கொள்ளாமல் பொறுமையாயிரு” என்று கூறி அவரை அரவணைத்திருக்கிறார்.
ஒரு குடும்பத்தை எடுத்துக் கொண்டால் அதன் அங்கத்தினரை இசைத்து ஒட்டி வைக்கும் அருமையோடு இன்னொன்று சொல்லவேண்டும். இப்படிப் பல குடும்பங்களைக் கொண்ட ஒரு பெரிய குலத்தை எடுத்துக் கொண்டால் அங்கே அந்தக் குல கௌரவத்துக்காக, ‘ட்ரெடிஷனு‘க்காக, ஸம்பிரதாய பத்ததிக்காக ஸ்வாமி அதிலுள்ள ஒரு குடும்பத்தில் மாறாக நடக்கும் அங்கத்தினர்களை வெட்டுவதும் உண்டு. நீண்ட கால சம்பிரதாயங்கள் கொண்ட ராஜகுடும்பத்தினர் போன்றவர்களில் இளைஞர்கள் வேறு வழியில் போனால் வீட்டிலே சேர்க்கக் கூடாது என்று கண்டித்துக் கூறுவார். ஒரு தமிழ்நாட்டு பிராமணக் குடும்பத்தில்கூட இப்படிச் செய்திருக்கிறார். நல்ல செல்வ நிலையிலுள்ள ஓர் அம்மாளுக்கு ஆணாகப் பிறந்தது ஒரு பிள்ளைதான். அவன் மஹாராஷ்டிரப் பெண்ணொருத்தியை மணக்க விரும்பினான். அவளும் பிராமண ஜாதிதான். ஆனாலும் கலப்பு மணங்கள்கூடச் செய்து வைக்கிற ஸ்வாமியே, அந்தக் குறிப்பிட்ட குடியில் வழிவழியாக சாஸ்திரீயமான ஆசார சீலர்கள் வந்திருப்பதால், விரிந்து பரந்த அந்த வம்சத்தின் இந்தக் கிளையில் மாறுதல் வர விடக்கூடாது என்று கண்டித்துச் சொன்னார். அந்தப் பையனை வரவழைத்துத் தாமே எவ்வளவோ சொல்லிச் ‘செயின்‘ வரவழைத்துக் கழுத்தில் போட்டார். செயினைப் போட்டுக் கொண்டு போனவன், இவர் செய் என்றதை மட்டும் செவியில் போட்டுக் கொள்ளவில்லை. ஸ்வாமியும் நிர்தாக்ஷிண்யமாக அன்னைபிள்ளை என்ற செயினையே துண்டித்தார். அந்த அம்மாளுக்குத் தாமே பராமரிப்புத் தந்து மகனானார்.
***
குடும்பத்தைப் பற்றிச் சொல்லும் இந்த அத்தியாயத்தில் அவர் குடியின் பத்ததி காப்பது பற்றி இன்னம் ஒன்றிரண்டு பார்க்கலாம்.
“காலமான பிதாவின் ஆன்ம சாந்தியை ஸ்வாமியிடம் மனமார வேண்டிக்கொண்டு, அவர் மறுபிறப்பு எடுத்திருந்தாலும் அவர் நலனைக் கோரி நாராயணஸேவை (ஏழையர்க்கு அன்னதானம்) செய்தால் போதாதா? மணிக்கணக்கில் சிராத்தம் செய்யத்தான் வேண்டுமா?” என்று ஓர் இளைஞர் கேட்டார். “நீ சொல்கிறபடி செய்தாலே போதும்; பிதாவுக்கு அதுவே நல்லது செய்யும். ஆனால் உங்கள் ஃபாமிலியைப் பார். அது ஒரு ட்ரெடிஷனிலே வந்தது. நீ திவஸம் செய்யாவிட்டால் தாயாரும் மற்றவர்களும் எவ்வளவு வருத்தப்படுவார்கள், பயப்படுவார்கள்? அவர்களுக்காக ஸெரிமனியை விடாமல் பண்ணு” என்றார் பகவான்.
பிராமணரல்லாத ஒருவர், “கோயிலில் பிராமணர்கள் பூஜை பண்ணினால்தான் கடவுள் ஏற்பாரா? நான் ஏன் எங்கள் கோயிலில் இதரர்களைக்கொண்டு பூஜை நடத்தக் கூடாது?” என்று பகவானிடம் கேட்டாராம். “யார் செய்தாலும் பூஜையை பகவான் ஏற்றுக் கொள்வார் என்பதில் சந்தேகமில்லை. தனிப்பட நீயே உன் வீட்டிலே பூஜை பண்ணிக்கொள். ஆனால் பொதுவில் செய்யும் போது, இதிலெல்லாம் நீண்ட கால ஸம்பிரதாயங்களை ‘ப்ரேக்‘ பண்ண வேண்டியதில்லை. இதனால் ஏற்படும் ‘காண்ட்ரவர்ஸி‘ (சர்ச்சைகளுக்குப் பதில் சொல்வதிலேயே பக்தி போய்விடும். யார் பூஜித்தாலும் பகவான் அங்கீகரிக்கிறான் என்பது ஸ்வாமி என்னை விட நன்றாக யாருக்குத் தெரியும்? ஆனாலும் ஸ்வாமியே பிரசாந்தி மந்திரில் ஸம்பிரதாயப் படியான பூஜைதானே வைத்திருக்கிறேன்?” என்றாராம்.
இங்கெல்லாம் பத்ததியைக் காட்டுவது ஒரு அழகு. அதன் மூலமே ஒரு குடும்பத்தில் இரு வேறு தலைமுறைகளின் கருத்து மாறுபாட்டை ‘ஸிமென்ட்‘ செய்வது இன்னொரு அழகு. Generation gap, அது இது என்கிற அஹங்காரமெல்லாம் ஸ்வாமிக்கு அறவே பிடிக்காது. எல்லா ஜெனரேஷனுக்கும் பொதுவான அன்பால், அறநெறியால் இடைவெளியைத் தூர்த்து விடுவார்.
***
ஒரு குடும்பத்தில் தந்தைக்கும் பிள்ளைக்கும் தகராறு.
“நானும் ஸாயி டிவோட்டி தாண்டா! ஆனாலும் அதற்காக நீ இப்படிப் படிப்பையே கவனிக்காமல் பஜனை பஜனை என்று போகிறதை நான் ‘அலவ்‘ பண்ண முடியாது” என்கிறார் தந்தை.
“உண்மையான ‘டிவோஷன்‘ இருந்தா இப்படி பேச மாட்டீங்க! பஜனைக்கே போயிண்டு இருக்கிறவங்களை ஸ்வாமி கைவிட மாட்டார். பரீக்ஷையின் போது அவரே பேனாவுக்குள்ளிருந்து எழுதி நல்லா பாஸ் பண்ண வெச்சுடுவார்” என்கிறான் பிள்ளை.
இருவருக்கும் ஸ்வாமியிடம் பேட்டி கிடைக்கிறது. பையனைக் காய்ச்சுகிறார் பாபா. “நீ அப்படியே சைதன்யர் மாதிரி, ஜயதேவர் மாதிரிப் பசி தாகம், மானம் அவமானம் தெரியாமல் பஜனையில் ‘மெல்ட்‘ ஆயிடறே இல்லே? உனக்கு ஸ்வாமியே வந்து பரீக்ஷை எழுதணும்! உம்? ரௌடி! இந்த வயசிலே உன் ட்யூட்டி படிப்பைக் கவனிக்க வேண்டியது. அதோட கூடத்தான் பஜனை; அதை விட்டுட்டு இல்லை. அவங்க அவங்களுக்கும் ட்யூட்டிதான் முதல் பஜன்; அப்பறம்தான் ஜால்ரா பஜன். நீ ட்யூட்டி பண்ணாட்டி ஸ்வாமி மார்க் போட மாட்டேன். ட்யூட்டி பண்றவன்தான் என் டிவோட்டி.”
இன்னொரு குடும்பத்தில் தந்தைக்கும் பிள்ளைக்கும் தகராறு மூளாததற்கே ஸ்வாமி கோபித்துக் கொண்டது வெகு ரஸம்! பெரிய பட்டங்கள் பெற்ற அந்தப் பிள்ளை தகப்பனாருக்குத்தான் ஏராளமாகச் சொத்து இருக்கிறதே என்று உத்தியோகத்துக்குப் போகாமலே இருந்தான். தகப்பனாரும் அதனாலென்ன என்று பேசாமலிருந்தார். ‘பாபா‘ என்றே பெயர் கொண்டுள்ள லோக ‘பிதா‘ பேசாமல் இல்லை. தந்தை மகன் இரண்டு பேரையும் வெறுத்தார்.
“ஒரு வேலையின் பேரில் புத்தி போனால்தான் டிஸிப்ளின் வரும். எப்பவும் யோகமும் தியானமும் பண்றதுக்கு உனக்குப் பக்குவம் வந்துடுத்தா என்ன? மைன்ட் கன்னாபின்னான்னுதான் திரியும். அப்பன் பணம் வைச்சிருக்கான்னு (நமக்குத் தூக்கிவாரிப் போடும்படி) அமேத்யத்தைத் தின்கிற மாதிரி, (அதைவிடவும் சுரீலெனும்படி) பிசாசு பிணம் தின்கிற மாதிரி வேளா வேளைக்குச் சாப்பிட்டுக் கொண்டிருந்தால் ஆச்சா? ‘வசதியிருக்கிற நாம் வேலைக்குப் போகாததினாலே வசதியில்லாத ஒருத்தருக்கு அந்த வேலை கிடைக்கும்‘னு நீ பிரமாதமா ஜஸ்டிஃபை பண்றதும் ஸ்வாமிக்குத் தெரியும். அப்படியானா, நீ முதலிலேயே ஹையர் எஜுகேஷனுக்குப் போயிருக்கக் கூடாது. நீ படிக்கப் போகாட்டி, காலேஜிலேயும் அந்த ஸீட் வேறே யாருக்காவது போய்ப் பிரயோஜனமாயிருக்கும் இல்லை? நீ படிச்ச ஸ்பெஷல் ஸப்ஜெக்ட்ஸுக்கு நீ கட்டின ஃபீஸ் போறவே போறாது. உன் படிப்புக்காக யூனிவர்ஸிடி ஐம்பதினாயிரம் ரூபாய் செலவு பண்ணியிருக்கு, நாயனா! அந்த ‘பப்ளிக்மனி‘யை நீ இப்போ வேஸ்ட்டா பண்ணறே. உன்னுடைய விசேஷப் படிப்பினாலே ஸொஸைட்டிக்குக் கிடைக்கிற உதவியை இல்லாமப் பண்ணறே. பணம் நிறைய இருக்குன்னா, சம்பளம் வாங்கிக்காம ‘ஆனரரி‘யா ‘வொர்க்‘ பண்ணு. ஆனா ‘வொர்க்‘ பண்ணத்தான் ஆகணும்” என்று பிள்ளையாண்டானைத் தூக்கி வெய்யிலில் போட்டார்.
தந்தையிடம் திரும்பி, “வயஸான உனக்காவது மூளை வேணாம்? ஒரு சண்டை, கிண்டை போட்டாவது பிள்ளையை சரிப்படுத்தற ‘கரேஜ்‘ வேணாம்?” என்று வாங்கினார்.
வாய்ச்சொல் வீரர் அல்லவே நம் ஸ்வாமி! அதனால், அந்த இளைஞர் பெற்றிருந்த நுணுக்கக் கல்வி சமூகத்திற்குப் பயனாகும் விதத்தில் தாமே ஓர் ‘ஆனரரி‘ உத்தியோகத்திற்கும் ஏற்பாடு செய்தார்.
சமூகத்துக்கு மட்டுமா பயன்? வீடும் பயன் பெற்றது. இந்நாள் வரை உள்ளூரக் குறைப்பட்டுக் கொண்டிருந்த பெற்றோருக்கும் மனைவிக்கும் இளைஞர் வேலை ஏற்றபின் தான் திருப்தி ஏற்பட்டது. அந்த இளைஞருக்குமே உத்தியோகத்தில் ஈடுபட்டபின் அதுவரை இராத நிறைவு உண்டாகலாயிற்று.
ஸத்யஸாயி ஸேவாதளத்திலும், பஜனை மண்டலியிலும் இறைபணி செய்வதால் உத்தியோகப் பணிக்குப் போகவேண்டாம் என்று அலக்ஷ்யமாக இருக்கும் இளைஞர்களை ஸ்வாமி வன்மையாகக் கண்டித்திருக்கிறார். ஒரு மாணவன் மிகவும் பெருமையுடன் அவரிடம், “படிப்பு முடிந்ததும் உத்தியோகம் என்று நான் படியேறி இறங்காமலிருக்கும் நல்லறிவை ஸ்வாமி கொடுத்து விட்டீர்கள். ஸத்ஸங்கம், ஸங்கீர்த்தனம் என்று ஸ்வாமி பணியே செய்ய ஆசைப்படுகிறேன். ஆசீர்வதிக்க வேண்டும்” என்றானாம்.
ஸ்வாமி ஆசீர்வதித்தார்! தமது கோபம்தான் best kindness என்பாரே அந்த விதத்தில்! “ஏய், என்ன கதையா பண்ணறே! ஸ்வாமியே இந்த பூலோகத்திலே அவதாரம் பண்ணி எத்தனை படி ஏறி இறங்கறேன்? மார்னிங் 4லிருந்து நைட் 10 வரை எவ்வளவு ட்யூட்டிகளை கவனிக்கிறேன்? உனக்கு மட்டும் ட்யூட்டி ஒண்ணும் கிடையாதா? ஸ்வாமி கர்மயோகம் பண்ணிக் காட்டற போது நீங்கள் எல்லாமும் அதைத்தான் பண்ணணும். அதுதான் ஸ்வாமிக்குப் பூஜை. ‘ஸ்வாமி பணி‘ன்னு லெக்சர் அடிக்கிறயே! என்றாராம்.
(ஸ்வாமி பணி‘ பற்றிச் சொல்கையில் ஸ்ரீ கஸ்தூரி கூறிய ஒன்று நினைவு வருகிறது. மேலே ஹீட்டரிலிருந்து வந்த விஷயமே இதில் ஃப்ரிட்ஜிலிருந்து வருகிறது! “இன்னம் கொஞ்ச நாளில் ரிடயர் ஆயிடறேன். அப்புறம் நான் ஸ்வாமிஸர்வீஸுக்கே வருகிறதற்கு அநுக்ரஹம் பண்ணவேணும்” என்று கஸ்தூரி பிரார்த்தித்தாராம். ஸ்வாமி, மோஹனச் சிரிப்போடு, ஆனாலும் ஆழத்தோடு, “பைத்தியக்காரா! அப்படியானா இதுவரை மட்டும் நீ யார் ஸர்வீஸில் இருந்ததா நினைச்சுக் கொண்டிருக்கே?” என்றாராம்.
எத்தனையோ மிரகிள்களிலும் காணாத ஈச்வரத்வத்தை ஸ்வாமியின் இரண்டு வாசகங்களிலேயே ஸ்ரீ கஸ்தூரி உறுதிப்படுத்திக் கொண்டிருக்கிறார். ஒன்று, ஸ்வாமியின் அக்காள் கணவர் மரித்தபோது அவர், “சாவு, பிறப்பு இதெல்லாம் இல்லையென்றால் எனக்கு எப்படி ஐயா பொழுது போகும்?” என்றது. மற்றது, இங்கே அதிநயமாகச் சொல்லாமற் சொன்னபடி, லோகத்தில் அவரவரும் உரிய பணியைச் செய்வது தம் பணியே என்றது!) இங்கே லோகத்தில் மிகப் பெரும்பாலாருக்கான கர்மயோகத்தை பகவான் விதித்தாலும், கடமை எனப்படும் கர்மங்களையுங்கூட விடுகிற ஸந்நியாஸத்துக்கு உரியவர்களைத் துறவு நெறியில்தான் ஊக்குவார். குறிப்பிட்ட இளைஞர் தமது குணகர்மங்களுக்கு ஒவ்வாத நெறியில் செல்ல முயன்றதாலேயே அவரைக் காரியலோகத்தில் கட்டிப் போட்டிருக்கிறார்.
***
குடும்பப் பொறுப்பு முழுதையும் பாபா தாங்கி நடத்துவதற்கு எத்தனையோ திருஷ்டாந்தம் காட்டலாம். இன்று ஸத்யஸாயி ஸ்தாபனத்திலுள்ள பலருக்கும், வேறு சில அத்யந்த பக்தர்களுக்கும் ஸ்வாமிதான் மெய்யான குடும்பத் தலைவராக இருக்கிறார். எதுவுமே அவரைக் கேட்டுக் கொண்டுதான் அவர்கள் செய்கிறார்கள். அவர்கள் கேட்காமல் இவராகவே எடுத்துப்போட்டுக் கொண்டு செய்வதோ அனந்தம். நேரிலே இந்தத் தொடர்பு இல்லாதாருக்கும் அவர் குடிதாங்கத்தான் செய்கிறார்.
என் சிறியதந்தை ஒருவர் விஷயமாகவே இந்த அதிசயக் கரிசனத்தைக் கண்டிருக்கிறேன். அவர் சொந்தக் கம்பெனி வைத்து நஷ்டமுற்றுக் கஷ்டமடைந்த காலம். ஒரு பிள்ளையாவது தலையெடுக்கவில்லை. எப்படியோ படியளந்து கொண்டிருந்தார், ‘படியில் குணப் பரமன்‘.
அரிசிக்காரி, “நீ எப்போ பணம் கொடுத்தாலும் சரி” என்று சொல்லிப் படிப் படியாக அளந்து போட்டுவிட்டுப் போவாள். தயக்கத்துடன் கடன் கேட்கலாமா என்று ஒருவரிடம் போனால் அவர் கேட்பதற்கு மேலேயே கொடுப்பார்; வட்டி பேசாமல் கொடுப்பார்; தாமே கடன் வாங்குபவர் போல மரியாதையுடன் கொடுப்பார். எல்லாவற்றிலும் விந்தை, மின்சாரக் கட்டணம் கட்டவில்லையே, ‘டிஸ்கனெக்ட்‘ செய்துவிடப் போகிறார்களே என்று எப்படியோ பிறாய்ந்து எடுத்துக் கொண்டு செலுத்தப் போனால், அங்குள்ள அலுவலர் இவர் பெயரில் உபரியாகவே நிறையப் பணம் கட்டப்பட்டிருப்பதாகச் சொல்லித் திருப்பி அனுப்பிவிடுவார்! பசங்களுக்கும் ஸ்காலர்ஷிப், அரசு உதவி எல்லாம் கிடைத்தன. கர்ம பாலன்ஸ் தீர்ந்து தீர்ந்து, அப்புறம் ஒரு பிள்ளை நன்றாகவே தலைதூக்கினான். இன்னொரு பிள்ளைக்கும் வேலை கிடைத்தது. கடன் பாலன்ஸும் குறையலாயிற்று.
இதனிடையில் சிறிய தந்தைக்கு இதய நோய் கண்டது. 1977 ஜயந்தியின் போதோ, பிறகு டிஸம்பர் முதலில் சென்றபோதோ ஸ்வாமியிடம் விஞ்ஞாபனம் செய்தேன். “பிரஸாதம் தருகிறேன்‘ என்று திருநீறு கொடுத்தார். அதன்பின் சிற்றப்பா அஸாத்யத் தெம்பும் தெளிவும் பெற்றார். இவரா இதய நோய்க்காரர் என்னும் படியாக மார்க்கெட்டிலிருந்து பை நிறையச் சாமான் தூக்கி வந்தார். (எவரேனும் பார்த்துக் கண் வைத்துவிடப் போகிறார்களே என்று, வேகவேகமாக வேறு வந்ததாகச் சொல்லிக்கொள்வார்!)
இப்படி நல்லாரோக்கியத்தில் இருக்கும்போதே ஒரு நாள் தம் ஸ்வப்பனத்தில் ஸ்வாமி எண்ணெய்த் தலையோடு வந்ததாகச் சொன்னார். மறுதினம் டிஸம்பர் முப்பதாம் தேதி. விபூதி ஆகிவிட்டதாகவும், அதற்கு மறுதினம் ஸ்நானம் செய்தபின் என்னிடம் புதுப் பொட்டலம் வாங்கிக் கொள்வதாகவும் சொன்னார். அன்று, தலையெடுத்த பிள்ளை அலுவலத்திலிருந்து வந்த போனஸ் பாக்கி முதலானவற்றைத் தந்தையிடம் கொடுத்தான். “அப்பாடா, இதோடு கடன் தீர்ந்தது” என்று அபார நிம்மதி பெற்றார். உபகாரியான அந்த நல்ல மநுஷ்யர் இந்த விச்ராந்தியைப் பெற வேண்டுமென்றே இரண்டு ஹார்ட் அட்டாக்குகளுக்குப் பின்னும் அவரைத் திடமாக வைத்திருந்த ஸ்வாமி, அன்றிரவே நிமிஷ நேரத்தில் அவருடைய கர்மக் கடனையும் அறவே தீர்த்துத் தம்முடைய அடிச்சோதிக்கு அழைத்துக் கொண்டு விட்டார்.
கனவில் எவர் எண்ணெய்த் தலையோடு வருகிறாரோ அவருக்கே மரணம் ஏற்படும் என்பதுதான் நம்பிக்கை. ஸ்வாமி தாமேதான் அனைத்துயிர்களும் என்பதால் தம்மையே எண்ணெய்த் தலையராகக் காட்டிக் கொண்டார் போலும்!
***
முன்னே கண்ட மாத்வக் கிழவருக்கு வீட்டு விஷயம் ஒவ்வொன்று குறித்தும் ஸ்வாமி ஸ்பஷ்டமாகவே உத்தரவு போடுகிறார். “இன்ன இடத்துக்குக் குடி போ” என்று அவர் சொல்லி, இவர் சென்றால் வீட்டுக்காரர்கள் அங்கே இடம் காலியிருப்பதைக் சொல்லி, இவர் நம்பமுடியாத குறைந்த வாடகை கேட்பார்கள். கண் பார்வை மிகவும் மங்கிய தாத்தாவை ஸ்வாமியே வழிகாட்டிப் பல இடங்களுக்கு அழைத்துப் போகிறார். எங்கேயோ ஒரு பேராசிரியரைத் தூண்டிவிட்டு இவருக்கு நிதி உபகாரம் பண்ணிவைக்கிறார். பிள்ளைக்கும் ஓரிடத்தில் ‘கைகாட்டி‘யிருக்கிறார். டெலிஃபோனில் பேசுவதைவிட எளிதாகக் கிழவர் ஸ்வாமியிடம் பேசி, ஒவ்வொரு விஷயத்துக்கும் யோசனை பெறுவது பாலர் மலர்க் கதையாகத்தான் இருக்கிறது என்கிறார்கள்.
அற்புத அம்சம் கலக்காமல் லோகரீதியிலேயே ஸ்வாமி குடிதாங்கும் குடும்பகளும் உண்டு, பிரசாந்தி நிலயத்தில் சிலர் இருக்கிறார்கள். அவர்களுக்கு மாதம் முதல் தேதி பிறந்ததும் ‘டாண்‘ என்று நெருப்புப் பெட்டியிலிருந்து நெய்வரை ஸகலமும் ஸப்ளை செய்யப்படுகிறது ஆண்டவன் ஆணைப்படி ஆண்டாண்டாக!
நொடித்து விழுந்த பக்தர் பலருக்கு பகவான் பணமாகவே கொடுத்து உதவுவதுண்டு. அதை ஏற்கத் தயங்கும் போது, “ஸ்வாமி நான் தரச்சே வித்யாஸமா நெனச்சு லஜ்ஜைப்படக் கூடாது. அப்பா சொத்துப் பிள்ளைக்குப் பாத்தியத்தோடே சொந்தம்தானே? லௌகிக சொத்து, ஆத்மிக சொத்து அத்தனையும் இந்த அப்பாவுடையதுதான். தனி மநுஷ்யாள் சொத்து வற்றிப் போற குட்டை மாதிரி. இந்த அப்பா சொத்து எப்பவும் வற்றாத ஊற்றுங்க இருக்கிற பெரிய கிணறு. உன்னுடையதையேதான் நீ எடுத்துக்கிறே, அம்மா” என்று பாசம் பொங்கச் சொல்லிக் கொடுப்பார்.
நல்ல கதியில் இருந்து விட்டு இன்று குந்தக் கூறையில்லாத மெய்யடியார்களைச் சொந்த வீட்டில் இருத்த வேண்டும் என்று அவர் தாய்க்கு மேல் தவிப்புக் காட்டுவதை நானே பார்த்திருக்கிறேன்.
எதையும் அன்புப் பணியாகவே செய்யும் உதாரகுணத்தவரொருவர் விதி வசத்தால் வீடு வாசல்களை இழந்தார். பிறகு ஒரு பெரிய மகாநாட்டில் அவரது பணி கோரப்பட்டது. ஸ்வாமி, இப்போது ஸ்வாமி என்பதைவிட அவருக்கு குடும்ப பந்துவாகவே ஆகிறார். “இந்தக் கான்ஃபரன்ஸிலே…?” என்று கேள்விக் குறியுடன் பக்தரைப் பார்க்கிறார். ரூபாய் எண்ணுவதற்கு நாம் ஆள்காட்டி விரல் நுனியால் கட்டை விரல் நுனியைத் தேய்ப்போமே அப்படித் தேய்த்துக் காட்டுகிறார்! மஹாநாட்டில் ஸேவை வழங்குவதற்கு பக்தர் பணம் வாங்கப்போகிறாரா என்பதை இப்படி பஹு அழகாக, எளிமையாகக் கேட்கிறார்!
“கேட்டிருக்கேன் ஸ்வாமி” என்கிறார் பக்தர். தாமும் பணம் கேட்க நேர்ந்ததை வெளியில் சொல்ல வெட்குகிற மானஸ்தராயினும், பிரிய பந்துவாகக் கேட்கும் பகவானின் முன் மானம் வானத்துக்குப் போய்விட்டது!
எங்கே இதுவும் இலவசப் பணியோ என்று கவலைப்பட்ட ஸ்வாமியிடம் ஸந்தோஷச் சிரிப்பு மலர்கிறது. (மஹான்கள் விஷயமாகக் “கவலைப்பட்ட” என்று சொல்லாமல் “கருணை கொண்ட” என்றுதான் சொல்ல வேண்டும் என்று பிறிதொரு ஸந்தர்ப்பத்தில் ஸ்வாமி திருத்திக்சொடுத்திருக்கிறார். ஆனாலும் நம்மில் ஒருவராக அவர் நெருங்கி நிற்கையில் “கவலைப்பட்டதாக”ச் சொல்வதில்தான் மானுட நேச இனிமை நன்கு தெரிகிறது.)
“ரொம்ப கரெக்ட், எவ்வளவு கேட்டிருக்கே?”
ஸஹஜமாகக் கேட்கிறார். அந்த ஸஹஜத்தின் சக்தி என்னே? இவ்விஷயத்தில் மிகவும் ‘ஸென்ஸிடிவ்‘ ஆன பக்தரையும் அந்த ஸஹஜம் தொற்றிக் கொள்கிறது! அவர் தயக்கமில்லாமல், தாம் கேட்டுள்ள தொகையைத் தெரிவிக்கிறார்.
ஸம்மதமாகத் தலை ஆட்டுகிறார் ஸ்வாமி. “நல்லாக் கேளு! கொடுப்பாங்க! டின்னர், அது இதுங்களுக்கே லக்ஷ ரூபாய் செலவழிக்கிறாங்க! விடாதே!” என்று ‘எடுத்துக் கொடுக்கிறார்‘!
***
எவ்விஷயமாகட்டும். எந்தை ஸாயி விஸ்தார அருள் மாத்திரமின்றி, விசால அறிவோடு, லௌகிகமும் மனோதத்வமும் நுட்பமாகப் புரிந்து கொண்டு நல்லுரை தரும் பாங்கு அருமை, அருமை!
என்ன வழியென்று கேட்கில் உபாயம்
இரு கணத்தே யுரைப்பான்…
உன்னை யடைந்தனன் என்னில் உபாயம்
ஒரு கணத்தே யுரைப்பான்
கேட்டால் மட்டுமில்லை, நாம் நன்றாக சரண்புகுந்தால் கேட்காமலேயும் பிரச்னைகளையெல்லாம் தீர்த்து வைப்பான்.
மனைவி முரண்டுகிறாளா? அவள் சுபாவமறிந்து தட்டிக் கொடுத்தால் சரியாவாளா, கண்டித்தால் கனிவாளா என்று செல்வார்.
மாப்பிள்ளை வக்கரித்துக் கொண்டிருக்கிறாரா? ஸம்பந்தி கொக்கரிக்கிறாரா? எங்கள் ஸாயி அதற்கும் ‘ட்ரீட்மென்ட்‘ சொல்வான்.
கம்பெனியில் தொல்லை கொடுக்கும் ஷேர் ஹோல்டரை ஹோல்ட் ஆன் பண்ணுவார். தொல்லையை நினைத்து பக்தர் விலகிவிட நினைத்தால், விலகுவது பக்தரைப் பொறுத்தமட்டில் நிம்மதியானாலும், அவர் நியமித்திருந்த ஊழியர்கள் புது நிர்வாகத்தில் பழிவாங்கப் படுவார்களே என்பதைச் சுட்டிக்காட்டி, பக்தர் விலகாமலிருக்க உறுதி தருவார்.
பையன் ஸீ.ஏ. சேரலாமா? எம்.பி.ஏ. செய்யலாமா? அப்புறம் ஃப்ரேஸர் அன்ட் ட்ராஸ் உத்யோகமா? பெர்கூஸனா? நமக்கேன் இந்த யோசனைகள்? சுமை தாங்கும் ‘பாரப்ருத்‘தாகத்தான் ஒரு ஸாயி வந்திருக்கிறானே!
ஸீ.ஏ. என்றதும் ஒன்று நினைவு வருகிறது. புத்திசாலி மகன் எப்படி ஸீ.ஏயில் தவறினான்? அவனுடைய புத்திசாலித்தனம் ஒரு பக்கம் இருக்கட்டும். ரயில்வேயில் மேலதிகாரியாகவுள்ள அவனுடைய தந்தை தம்முடைய இலாகாப் பரீக்ஷைகளில் எவ்வளவு ‘மாடரேஷன்‘ காட்டி ‘பார்டர்லைன் கேஸ்‘களைத் தூக்கி விட்டிருக்கிறார்? அதற்காகவாவது இந்த ஸ்வாமி பிள்ளைக்குப் பாஸ் தந்திருக்கக் கூடாதா?’ என்று ஒரு தாய் தாபப்பட்டுக் கொண்டு ஸ்வாமிக்குக் கடிதம் எழுதுகிறாள்.
அந்தக் கடிதத்தை அவள் கணவர் போஸ்ட் செய்யக்கூட விடாமல் இத்தனை சின்ன விஷயத்திலும் ‘சுமைதூக்கி‘ ஸாயி உடனுக்குடன் வந்துவிடுவான். எங்கிருந்தோ ஃபோன் வருகிறது. விண்ணப்பித்தாலும்கூட எளிதில் ‘ரிவால்யூ‘ கிடைக்குமா என்றிருக்க, இப்போதோ ஸீ.ஏ. ஸ்தாபனத்தார் தாங்களாகவே புனர் பரிசீலனை செய்ததில் பையன் பாஸ் பண்ணி விட்டானாம். ஃபோன் செய்தி இதைக் கூறுகிறது. “தாங்களாகவே” என்று அவர்கள் சொன்னாலும் இது ஐயன் திருவிளையாடலே என்று உணரும் அன்னை கண்ணீர் உகுக்கிறாள்.
அன்னைமாருக்குக் குடும்பத்தை நடத்துவதில் எப்படியெல்லாம் நல்லுரைகள் நவில்கிறார்? மாமனார் மாமியாரை, கணவனை, குழந்தைகளை எப்படி ‘டாக்கிள்‘ பண்ணுவதென்று நயம்படச் சொல்லிக் கொடுப்பார். “எதெப்படியானாலும் பெண்ணாப் பிறந்தவங்களுக்கு ரஜோகுண வேகம் மட்டும் உதவாது. பொறுமை, சாந்தம் ரொம்ப அவசியம். “ஸ்த்ரீ” என்ற வார்த்தையிலேயே முதல்லே ‘ஸத்வ‘ குணத்துக்காக ‘ஸ்‘ இருக்கு; அப்பறம் ‘தமோ‘ குணத்துக்காக ‘த்‘ இருக்கு; கடைசியிலேதான் ‘ரஜோ‘ குணத்தைக் காட்ட ‘ரீ‘ வரது. மநுஷங்க எலோருமே மூணு குணங்களும் சேர்ந்தவங்கதான் என்றாலும் ஸ்த்ரீகளுக்கு ரஜோ வேகம் கடைசியா, ரொம்பக் குறைவாத்தான், வரலாம். ஸத்வம் மேலோங்க அவங்க இருக்கறதுதான் அழகு. அப்படி முடியாட்டிக்கூட, அடுத்த படியா தமோ குணத்தோடே மந்தமா, புத்தி ஹீனமா இருந்தாலும் இருக்கலாமே தவிர, ரஜோ வேகத்திலே ஆத்திரவசப்படறது, தாட்பூட்னு காரியம் செய்யறது தப்பு. பொதுவிலே ஸத்வம், அதுக்கப்பறம் ரஜஸ், அதுக்கும் கீழேதான் தமஸ்னு சொன்னாலும், ஸ்த்ரீகள் விஷயத்திலே ஸத்வத்துக்கு அப்பறம் தமஸ், கடைசிலேதான் ரஜஸ். ஆனா இந்த நாளிலே உத்யோகம், ஊர் சுத்தறதுன்னு லேடீஸ் ரொம்ப ரஜோகுணங்களாகத்தான் போயிட்டாங்க. இதுதான் லோக தர்மத்துக்கும் குடும்ப க்ஷேமத்துக்கும் பெரிய ஹானி” என்பார்.
***
ஸ்வாமியிடம் பயந்த ஒரு குடும்பத் தலைவி, அவர் பிரேம மூர்த்தி ஆயிற்றே, நாம் கரப்பான் பூச்சியையும் பாச்சையையும் அடித்தால் அவர் மனம் உதவாதோ என்று நினைத்து இதைச் சிறிய விஷயமாக நினையாமல் அவரிடமே கேட்டாள். அதற்கு அழகாக விடை சொன்னார். “அவசியமில்லாம ஜீவஹிம்ஸை செய்யக் கூடாது. நம் வயத்துக்காக ஒரு பிராணியை அடிச்சுத் தின்னக்கூடாது. இதைத்தான் ஸ்வாமி ஸ்ட்ரிக்டாச் சொல்றேனே தவிர, இந்த ஹ்யூமன் லைஃப்லே எல்லா ஸமயத்திலேயும் பெர்ஃபெக்ட் அஹிம்ஸான்னா முடியுமா? ஹெல்த்துக்காக, ஹைஜீனுக்காக இந்த மாதிரி ஒரு பூச்சிபொட்டை அடிச்சா ஸ்வாமி கோவிச்சுக்க மாட்டேன். ஆனா மனஸிலே அப்பவும் அஹிம்ஸையெண்ணம் இருக்கணும். ‘நல்லா சா, சனியனே‘ன்னு திட்டிக்கொண்டு அதை அடிக்கக்கூடாது. அடிக்கவேண்டியிருக்கேன்னு வருத்தத்தோடே, அதுவும் ஸத்கதிக்குப் போகட்டும்னு நினைச்சு, ‘ஸாயிராமா‘ன்னு வேண்டிக்கொண்டு அடி.”
***
இனி எழுத்துத் துறையில் பொன்னான புத்திமதிகள் கொடுப்பது பாருங்கள். பகவானைக் குறித்து இந்திய மொழியொன்றில் புத்தகம் எழுத விரும்பிய பக்தருக்கு எப்படி அட்வைஸ் கொடுக்கிறார், பாருங்கள். “ரொம்பப் பெரிசா எழுதாதே! விலை ஜாஸ்தியாயிடும். இங்கிலீஷ் புக் வாங்குகிறவங்க மாதிரி பிரதேச பாஷைப் புஸ்தகம் வாங்குகிறவங்களுக்கு துட்டு எடுக்க மனசு வராது. அதனால் சின்னச் சின்னதா, ரெண்டு வருஷத்துக்கு ஒண்ணு வீதம் எழுது.”
எழுத்தாளர்: சொந்த அனுபவங்கள் எழுதலாமா?
ஸ்வாமி: ஓ…ஓ! ஆனா ரொம்ப ‘நான்‘னு எழுதினா, சில பேர், ‘தன் பிரதாபத்துக்காக எழுதிக் கொண்டிருக்கார்‘னு நினைப்பாங்க. அதே சமயத்திலே ‘பெர்ஸனல் டச்‘சோடே எழுதினா அதிலேயும் ஒரு ‘லிடரரி ப்யூட்டி‘ இருக்கு. அதனாலே சொந்த அனுபவத்திலேயே சிலதை ‘நான்‘ போட்டு எழுதணும்; சிலதை வேறே யாருக்கோ நடந்த மாதிரிச் சொல்லணும். ஸ்வாமி மஹிமா தெரியற இடங்களிலே தன் பெயரைப் போட்டுக்கொண்டே எழுதலாம். தன் பெருமை தெரியற இடங்களிலே தன் பெயரைப் போட்டுக்காம அநாமதேயமாவோ, வேறே பெயரிலேயோ சொல்லணும். இல்லாட்டி படிக்கிறவங்க ‘ஸ்வய புராணம்‘னு கேலி செய்வாங்க.
(அணுக்கத் தொண்டருக்கு டாம் டாம் உதவாது என்று ஸ்வாமி சொல்வதால் இந்நூலில் சில பெயர்களைக் கூறாது புனைபெயர் போட்டிருக்கிறோம். அப்படியிருக்க மெய்யடியரில் முடிமணியான கஸ்தூரி, பகவந்தம் போன்றோரின் பெயரைக் குறிப்பிட்டே சில ஸம்பவங்களைச் சொல்லியிருக்கிறதே, அது எப்படி என்றால் ஸ்வாமியின் உபதேசப்படி, அவரது மஹிமை மட்டுமே தெரிகிற இடத்தில் பக்தர்களின் பெயரையும் கொடுத்திருக்கிறோம். ஆனால் பகவான் அவர்களுக்கே நிகழ்த்திய லீலையில் அவர்களுக்கு அவரிடமுள்ள அந்தரங்க அணுக்கம் என்கிற பெருமை தெரியும்போது புனைபெயர் போட்டிருக்கிறோம். சந்தர்ப்ப விசேஷத்தால் இதற்கு ஓரிரு விலக்கும் இருக்கும்.)
எழுத்தாளர்: பெர்ஸனாலிடிஸ் பற்றி எழுதும்போது, ஸ்வாமி கோபித்துக் கொண்டவர்களைப் பெயர் போடாமல் எழுதலாமா? அல்லது இம்மாதிரி விஷயங்களை விட்டே விடலாமா?
ஸ்வாமி: ஏன் விடணும்? ஸ்வாமி மஹிமாவுக்காகத் தானே எழுதறே! இதிலேயும் ஸ்வாமி மஹிமா இருக்கில்லை? அதனாலே யாருக்கும் ‘ஐடின்டிடி‘ (அடையாளம்) தெரியாத மாதிரி அதுக்காக ஃபாக்ட்களைக் கொஞ்சம் கொஞ்சம் மறைச்சு, மாத்திக்கூட எழுது.
இப்படி ஸ்வாமி சொல்லும்போது அந்த எழுத்தாளரை ஒரு மனித குண பலவீனம் விடவில்லை. மற்றவர்களுக்கு அடையாளம் தெரியாவிட்டால்கூட சம்பந்தப்பட்டவர்களுக்கு எப்படியும் புரிந்து மனத்தில் தைக்குமல்லவா என்று கொஞ்சம் ஸந்தோஷப்பட்டார். “நாட்டத்தில் கொண்ட குறிப்பினை இஃதென்று நாம் சொல்லும் முன் உணரும்” ஸ்வாமி உடனே அவரை ஆழ்ந்து நோக்கி ஆனாலும் அந்த நோக்கிலோ, வாக்கிலோ கொஞ்சமும் கோபக்குறிப்பில்லாமலே ஸம்பந்தப்பட்டவங்களுக்கேகூடப் புரியணும்னு நீ ‘இன்டன்ஷனலா‘ நினைச்சு எழுத வேண்டாம். ஸ்வாமி மஹிமா என்கிற ஒரே ஆஸ்பெக்ட்டை மாத்திரம் நினைச்சு எழுது” என்றார்.
***
முணுக்கென்றால் தமக்குக் கோபம் வருகிறதே என்று வருத்தப்பட்டுக் கொண்டவருக்கு உடனே அட்வைஸ்: “கோபம் உன்னை ‘ட்ரபிள்‘ பண்ணறச்சே ஜில்லுனு தீர்த்தம் ஸாப்பிடு. அப்புறம், ஒண்ணு, அமைதியா நீளப் படுத்துண்டு பஜனைப் பாட்டுங்களை பாடிப் பாத்துக்கோ. இல்லாட்டி, பாடினபடியே நல்ல வேகமா ‘வாக்‘ பண்ணு. சாந்தமாப்படுத்துக்கிறது நரம்புகளை சமனப்படுத்தறதுன்னா, இப்படி வேகமா நடக்கிறதுலேயும் ரத்தம் நல்ல ஃபாஸ்ட்டா ஓடுமானதாலே ஏற்கெனவே ‘இமோஷன்‘லே வேகமாப் போற ஸர்க்குலேஷனை ‘அஃபெக்ட்‘ பண்ணி, கோபத்தை ‘டல்‘ பண்ணிடும்.”
துக்க உணர்ச்சி அதிகரித்தாலும் இதே ஜில் ஜல ஸிம்பிள் மருந்தைத்தான் கொடுக்கிறார்.
காமத்தைக் கட்டுப்படுத்த மட்டும் அவரவர் இயல்புப்படி வெவ்வேறு டானிக் சொல்வார். எதுவானாலும் அதில் அநேகமாக பகவந்நாம ‘ஆல்கஹால்‘ சேர்ந்திருக்கும்!
ஊனை வருத்திடு நோய் வரும் போதினில்
உற்ற மருந்து சொல்வான் – நெஞ்சம்
ஈனக் கவலைகள் எய்திடும் போதில்
இதம் சொல்லி மாற்றிடுவான்.
எழுத்தாளர் மட்டுமல்ல, எத்தொழில்காரர் ஆயினும் அவர்களுக்கு உற்சாகத்தோடு பணி செய்வதற்கான நெறியை விளக்குவார். பெரிய தொழிலதிபர்கள் பலர் வருகிறார்களே, அவர்களுக்கு முதலாளி தொழிலாளி உறவு ரம்மியமாக இருக்க நுட்பமாகப் புத்திமதி புகழ்வார்.
இதோ, மனோதத்வ விசித்திரத்தை எவ்வளவு ‘டெலிகேட்‘டாகக் கையாளுகிறார் பாருங்கள். ஒரு அடியார் தமது சொந்த ஸாஹித்யங்களைத் தாமே பாடலாமா என்று கேட்க, ஸ்வாமி நல்லுரை பகர்கிறார்: “சொந்த ஸாஹித்யம் பாடும்போது ‘நான் பண்ணினது‘ என்ற ‘ஈகோ‘ (அஹந்தை) ஏற்படுகிறதால்தானே இப்படிக் கேட்கிறாய்? அது வாஸ்தவந்தான். ஆனாலும் முதலில் கொஞ்ச காலம்தான் இந்த மாதிரி இருக்கும். போகப் போக அது நார்மலாய்விடும். ‘ஈகோ‘ வருகிறதே என்று நீ முதலிலிருந்தே பாடாமலிருந்தால், ‘பாடவில்லையே; பாடவில்லையே‘ என்ற ‘ஈகோ‘ சாச்வதமாக இருந்து கொண்டு ‘ட்ரபிள்‘ பண்ணும்.”
பிழைக்கும் வழிசொல்ல வேண்டும் என்றாலொரு
பேச்சினிலே சொல்வான்
உழைக்கும் வழி வினையாளும் வழிபயன்
உண்ணும் வழி யுரைப்பான்
அழைக்கும் பொழுதினிற் போக்குச் சொல்லாமல்
அரைநொடிக்குள் வருவான்
மழைக்குக் குடை, பசி நேரத் துண(வு) என்தன்
வாழ்வினுக் கெங்கள் கண்ணன்
“உண்ணும் வழி உரைப்பான்” என்பதைக் கூடப் பிரத்யக்ஷத்தில் பார்த்திருக்கிறேன். ‘கொலஸ்டரால்‘ அதிகமுள்ள ஓர் அம்மாளுக்கு எண்ணெய்ப் பண்டமெதுவும் சாப்பிட முடியாததில் கஷ்டமாயிருந்தது. அவளிடம் அன்னை ஸாயி அன்பு நெய் வார்த்து, ஸஃபோலா (ஸூரியகாந்தி) எண்ணெய் சேர்த்துக் கொள்ளச் சொன்னார். மெலிந்த பக்தரொருவர் புஷ்டியை விரும்பிப் பருப்புகள் சேர்த்துக் கொண்டாலும் அவருக்கு ஜீரணமாகாமலிருந்தது. “பருப்புதான் உனக்கு டைஜஸ்ட் ஆகல்லியே! ப்ரோட்டீன் பிஸ்கெட் வாங்கி ரெண்டு ஸாப்டு” என்று உண்ணும் வழி உரைத்தார் அப்பன்.
என்றோ பாரதி கண்ணனைப் பற்றிச் சொன்னதைப் பாடினால் போதாமல், இன்றைக்கு நம் ஸாயி நமக்குச் செய்வதை நாமும் (அவரருளில் ‘ஈகோ‘ இன்றி) சொந்த ஸாஹித்யம் கொண்டு கானம் செய்வோம்;
தினதினமும் கணம் கணமும் உடனிருக்கும்
தேவன் மனக்கவலை பணக்கவலை தநு அவலை மாய்த்து
குடும்பத்துச் சிக்கல்கள் கோதெடுத்துக் காத்து
இடும்பைகள் இடந்து இகவாழ்வை ஸுகமாக்கி
ஜகத்துத் துன்பங்களை, ஜால இன்பங்களை
அகத்தில் அதியமாப் பாராட்டாப் பாங்குதவி
மெல்ல மெல உள்ளத்து நல்ல நல்லன சேர்த்து
பொல்லன விலக்கு மதிப் பொலிவதுவும் பயந்து
பஜனமும் ஜபனமும் நமனமும் மனனமும்
ஸுஜனரின் ஸங்கமும் சுபமுறச் சூழ்வித்து;
சறுக்கி வீழ் வேளையிலுஞ் சாரும் துணையாக
அச்சன் இருக்கின்ற நிச்சயந்தனை யீந்து
வழுக்கி வீழ் வேளையிலும் அழுத்திப் பிடித்தருள
வள்ளல் இருக்கின்ற உள்ளுறுதி தான் நயந்து
தேம்பலுற்ற வேளை தேடாமலே கிடைத்த
ஏந்தல் இருக்கின்றான் என்(று) ஏம்பல் கொளச் செய்து,
மன்னிப்பு மூர்த்தியாய் அண்ணித்து மன்னவன்
உன்னிப்புடன் புரந்(து) உண்ணிறை(வு) ஊட்டுவதை
உவமையில் உபகாரம் உலவாது) உவந்தருள் உத்தமன் உதாரத்தை எத்திறம் இயல்புவேன்? சித்தத்தில் ரத்தத்தில் செறிநன்றி சீர் பாட சித்துருவன் சேவடிகள் கூப்பித் திசை நோக்கி
“எத்தினமும் இவ்வுணர்வில் வைத்திடுவை” என்றே என்
ரத்தினத்தை, நித்திலத்தை நிச்சலும் துதிப்பேன்;
ரத்தியோ(டு) ஆரத்தி நித்தியமுமே சுற்றிப்
பர்த்தியனின் நெற்றிதனில் வெற்றித் திலகிட்டிடுவேன்.