23. இடிதாங்கி
பலவிதமான இடர்களை ஸ்வாமி நீக்கியருள்வதைப் பார்த்தோம். ஒரு சிறிய கஷ்டமும் அடியார்களுக்கு ஏற்படக்கூடாது என்று அவர் அற்ப சிரமங்களிலும் கைகொடுப்பதற்கு ஒவ்வொரு அடியாரின் வாழ்க்கையிலுமே எண்ணி முடியா எடுத்துக்காட்டுக்கள் இருக்கும். அப்படியானால் ஸாயி பக்தர்களுக்கு எந்த அசௌக்யமுமில்லாமல் ஸதாகால ஸ்வர்க்க போகமாக இருக்கிறது என்று அர்த்தமா என்ன? இல்லை. இந்தப் பிரபஞ்ச லீலையில் இன்பத்தைப் போலவே துன்பமும் அடக்கம்தான். ஒன்றின்றி மற்றதில்லை. அதுவும் தவிர, கர்ம தர்மம் என்று ஒன்று இல்லையோ? சின்னதும் பெரிசுமாக நாம் கொஞ்சமாகவா தப்புக்காரியம் பண்ணியிருக்கிறோம்? இதற்கெல்லாம் பகவான் கூலி கொடுக்காமலிருப்பானோ? கொடுக்கக் கூடாது என்று நாம்தான் எதிர்பார்க்க நியாயமுண்டோ?
ஸ்வாமி மன்னித்தும் காட்டுகிறார். அதற்காக எல்லாக் குற்றத்தையும் அடியோடு மன்னித்து, அவற்றின் விளைவு நமக்கு ஏற்படாமல் தடுத்து விடமாட்டார். எங்கே எவ்வளவு மன்னிக்கலாம் என்பது கர்ம கணித அக்கவுன்டன்ட் ஜெனரலான அவருக்குத்தான் தெரியும். மன்னிக்காதபோது நாம் இடர்களும் பட்டுத்தான் ஆகவேண்டும். இந்தக் கணிப்பில் ஒரு லீலா நாடக அம்சம் உண்டு. ஒருவரது கர்மாவில் இவ்வளவு புண்ணியமிருக்கிறது, இவ்வளவு பாபமிருக்கிறது என்று ஒவ்வொன்றையும் கூட்டிக் கணக்குப் பார்க்கிறபோது சிலர் புண்ணிய மார்க் அதிகம் வாங்கியிருப்பார்கள்; சிலர் பாப மார்க் கூடுதலாகப் பெற்றிருப்பார்கள். முன்னவருக்குப் புண்ணியத்திலிருந்து பாவத்தைக் கழித்தபின் கொஞ்சம் புண்ணிய மார்க் மிஞ்சியிருக்கும். ஸ்வாமி இப்படிக் கூட்டிக் கழித்து எஞ்சிய புண்ணியத்தின் அளவிக்கேற்ப அவர்கள் இன்பம் மட்டுமே பெறச் செய்கிறாரா? இல்லை. இதே போல, பாபம் அதிகம் செய்தவர்களின் புண்ணியத்தை அதில் கழித்து, மீதமுள்ள பாபத்துக்குப் பலனான அசௌக்யத்தை மாத்திரம் அப்படிப்பட்டோருக்குத் தருகிறாரா என்றால் அதுவும் இல்லை. அவரவர் செய்த புண்ணியத்துக்கும் ஒரு பக்கம் நற்பலன்; பாபத்துக்கும் இன்னொருபுறம் துக்கமான பலன் என்று தனித் தனியாகத்தான் கொடுக்கிறார். அவரே இப்படிச் சொல்லியிருக்கிறார்.
இதனால் அதிகப் புண்ணியக்காரர்களும் சுகத்தோடுகூட ஓரளவு துயரங்கள் படத்தான் செய்கிறார்கள்; அதிகப் பாபக்காரர்களும் இன்னலோடு கூட ஓரளவு இன்பங்களை அனுபவிக்கிறார்கள். எவருக்கும் முழுக்க சௌக்யம் என்றோ, முற்றிலும் அசௌக்யம் என்றோ இல்லாமல் ஒவ்வொருவருக்கும் கலந்து, “இன்னல் கூட்டி, இன்பமூட்டி இந்திர ஜால வித்தை காட்டி” வருகிறார். இதிலே ‘இந்திர ஜால வித்தை‘ என்னவெனில், தம்மை நம்பிய அடியவர்களுக்கு இன்னலிழைத்தாலும் அதனால் அவர்கள் முற்றிலும் இடிந்து விழாமலும், இன்பத்துக்கெல்லாம் மேலான இன்பமாம் ஸாயிபக்தியை இழந்து விடாமலும் இருக்கும்படியாக அருள் பாலிப்பதுதான். துன்பம் நேர்ந்ததால் பாபாவை விட்ட ஒரு சிலரும் இருக்கிறார்களே என்று கேட்கலாம். விட்டவர் உண்டு என்பது வாஸ்தவந்தான். ஆனால் இவர்கள் மேலே சொன்னபடி அவரை “நம்பிய அடியவர்” என்ற லக்ஷணைக்கு உரியரல்லர் என்பதும் அதைவிட வாஸ்தவமாகும். அதுவுமன்றி, இப்படித் துன்பம் தீரவில்லை என்பதற்காக பாபாவை விட்டவர் மிக மிக மிகக் குறைவானவரே.
மிருதங்கத்தைத் தடவி அன்பும் செய்ய வேண்டும்; மென் குமுறல்களாகத் தட்டிக் கொடுத்து உத்ஸாஹப்படுத்தவும் வேண்டும்; ததிங்கிணதோம் என்று பளார் பளார் சாத்துக்களும் கொடுக்கத்தான் வேண்டும்.
திமி திமி பாஜே ம்ருதங்க கிரிதர
என்றாள் மீரா. நம் வினைமலையைத் தாங்கும் ஸாயி கிரிதரர் அந்த வினை தீரும் பொருட்டே நம்மை “திமி திமி” என்று வெளுத்து வாங்குவது உண்டு. ஆனால் நாம் பக்திவாரில் நன்றைக இழையக் கட்டப்பட்டிருந்தால் அந்த தேர்ந்த வித்வான் கொடுக்கும் சாப்புக்களிலும் அவனோடு லயித்திருக்கும் லய ஸங்கீத இன்பத்தைத்தான் பொழிய விடுவோம்.
பாவ புண்ணியத்தை ஒட்டி ஸுகத்தையும் துக்கத்தையும் நிரவித் தருவதில் பாபாவின் இந்திர ஜாலம் அத்தனையும் தெரிகிறது. இதற்கு வெகு அற்புதமான ஓர் உதாரணம் பார்த்திருக்கிறேன். ஒரு பிரமுகர். பிரபலமான நிறுவனம் ஒன்றை நடத்தியவர். நிறுவனம் இடிந்துவிடும் நிலை வந்தது. ஸ்வாமியை அடுத்தார். ஸ்வாமியின் தரப்பிலிருந்து கருணை அவர்பால் பெருக, அவர் தரப்பிலிருந்து ஸ்வாமிபால் பக்தி பொங்கிற்று. ஆனாலும் நிறுவனம் இடியாமல் அப்படியே தூக்கி நிறுத்தினாரா நம் கிரிதாரி? இல்லை. அது அவமானத்தோடு மூடப்படாமல், மானத்தோடு மூடப்படுவதற்கே வழி தந்தார். அதுவும் எப்படியென்றால், அந்தப் பிரமுகர் நேச பாசத்துடன் ஆண்டு வந்த ஆஸ்தி பாஸ்திகளை விற்கச் செய்வதன் மூலம். ஸ்வாமி இந்திர ஜாலமாகத் தாம் பிரமுகரிடம் காட்டிய நேச பாசத்தின் இன்பினாலேயே மேற்படி நபர் ஆஸ்தியிடம் கொண்டிருந்த நேசபாசம் கத்திரிக்கப்படுவதைத் தாங்கும்படிச் செய்தார். கௌரவமான முறையில் நிறுவனம் மூடப்பட்டது. இதற்காகச் செலவிட்டது போக ஆஸ்திபாஸ்திகளை விற்றதில் கிடைத்த பணம் கொஞ்சம் எஞ்சியிருந்தது. அதை வைத்துக் கொண்டு பிரமுகர் நிம்மதியாக இருந்திருக்கப்படாதோ? கர்மா அவரை விடவில்லை.
மீதத் தொகையைக் கொண்டு, ‘அடியைப் பிடிடா பாரத பட்டா‘ என்று நிறுவனத்தைப் புதிதாகத் தொடங்கும் எண்ணம் அவருக்கு ஏற்பட்டது. மாயாவியான நம் கர்ம பல தாதாவும், “பேஷ் பேஷ், ஆரம்பி. ஸ்வாமி க்ருபை பூர்ணமா இருக்கு” என்று அந்த ‘க்ருபையிலுள்ள ‘க்ரு‘வை ஆந்திரர்களுக்கே உரிய பூர்ண ‘உ‘ காரமாக அழுத்திச் சொன்னார். ஓயாதுழைத்துப் பிரமுகர் ஸ்தாபனத்தை உயிர்ப்பித்தார். ஆனால் நடுவே பல மாதம் படுத்துவிட்டதால் அதன் சரக்கு பழைய மார்க்கெட்டைப் பிடிக்க முடியவில்லை. பாலாரிஷ்டத்தில் போய்விடும் போலத்தான் பயமுறுத்திக் கொண்டிருந்தது. ஸ்வாமியும், “ஸங்கிராந்தியிலிருந்து நன்றாக ஆகிவிடும்,” “சைத்ர விஷூவிலிருந்து ஜம்மென்றாகும்,” “விஜய தசமியிலிருந்து ஒரே ஜயம்தான்”
என்று கதைத்துக்கொண்டு போனாரே தவிர, நித்திய கண்ட நிலைமை மாறவில்லை. அதைவிட இந்திர ஜாலவித்தை, அவர் சொன்ன கெடுவின்படி எதுவும் நடக்கவில்லையே என்ற கேள்வியே தோன்றாமல் பிரமுகர் ஸ்வாமியிடம் மேன்மேலும் ஒட்டிக்கொண்டார்! ஸ்வாமியும் கொட்டிக்கொண்டிருந்தார் பிரேம வர்ஷத்தை. கடைசியில் முத்தாய்ப்பு அடியாக, நிறுவனம் கொஞ்சம் பலப்பட்டு, “இனி பயமில்லை” என்ற ஸ்திதியை அடைந்தபோது அது பிரமுகரின் கையையே விட்டு வேறொரு நிர்வாகத்துக்குப் போய்ச் சேர்ந்தது! அப்போதும் பிரமுகர் “அப்பாடா” என்று ஆச்வாஸமே அடைந்தார்!
கர்மாவுக்காக அடிபட வைக்கும்போதே கருணையால் அடியின் வலி தெரியாமல் ஐயன் செய்யும் அனந்தமான அருளுக்கு இது நான் கண்ட ஆதரிச உதாரணமாயிருக்கிறது.
“குப்பிக்குள் ‘மைஸின்‘ மருந்து கரையாமல் அப்படியேதான் இருக்கிறது. ஆனாலும் அதன் மேலே காலாவதித் தேதி குறித்திருக்கிறதே, அந்த ‘எக்ஸ்பயரி டேட்’டுக்கு அப்புறம் அந்த மருந்துக்கு வீர்யமில்லாமல் போய்விடுகிறதல்லவா? அதுபோல கர்மாவின் பலன் வெளியில் தெரியும்போதே பக்தர்கள் அதன் வீரியத்தால் தாக்கப்படாமல் என் அருள் காக்கிறது” என்று ஸ்வாமி அடிக்கடிச் சொல்வதுண்டு.
லீலா நாடகத்தில் இன்னோர் அம்சம். இங்கு கர்மா ‘மைஸின்‘ மருந்தாக இல்லை. அதுவே வியாதியாக இருக்கிறது! வைத்தியத்திற்கு மசியாத அதைத்தான் ‘தீராத கர்மவியாதி‘ என்கிறோம். அக்கர்ம வியாதியின் உபாதை தெரியாமற் செய்யும் மார்ஃபைன் இன்ஜெக்ஷனாகத் தாம் இருப்பதாக ஸ்வாமி சொல்லிக்கொள்கிறார். வியாதியைத் தீர்த்து வைக்கும் மருந்தல்ல மார்ஃபைன். வியாதி இருக்கும் போதே அதன் உபாதையை நோயாளி உணராமலிருக்கும்படிச் செய்கிறது; அவ்வளவுதான். சிலரது கர்ம பாக்கியை ஒட்டித் தாற்காலிகமாக மட்டும் நிவாரணம் தருகிறார்.
(சில சமயங்களிலோ அவரது ‘விசேஷ கிருபை27 (“Special Grace” என்று இதைச் சொல்வார்) பொங்கி வந்து.)
28கர்மாவையும் கருத்தில் கொண்டு செய்யும் அருளே ‘கிருபை என்றும், கர்மாவை மீறிச் செய்யும் விசேஷகிருபைதான் ‘அநுக்கிரஹம்‘ என்றும் ஸ்வாமி பாகுபடுத்தியதாகத் தெரியவருகிறது. தேவாமிருதமோ, ஸஞ்ஜீவி மூலிகையோ, மிருத ஸஞ்ஜீவி மந்திரமோ எவ்வாறு எந்தக் கொடிய நோயையும் உடனே தீர்க்குமோ, அவ்வாறு அடியார் எத்தனைதான் கடுவினை செய்திருப்பினும் அத்தனையையும் அறவே தீர்த்து, உள்ளே அவர்கள் பாதிக்கப்படாதது மட்டுமின்றி, வெளியிலும்கூடக் கர்ம ரீதியான பாதிப்பு ஏற்படாதபடியும் செய்வதாகக் கூறுகிறார்.
மொத்தத்தில் சொல்லக் கூடியது என்னவெனில், கர்மாவை ஓரளவு மன்னித்தும், ஓரளவு அதற்குரியபடி தண்டித்தும் வருகிறார்; தண்டிக்கும்போதும், படுகிற அடிகளின் அதிர்ச்சி நம்மைத் தாக்காமல் தாமே தாங்கிக்கொண்டு ஷாக் –அப்ஸார்பராக விளங்குகிறார்; பேரடியான இடியாகவும் விழச்செய்து தாமே ஓடிவந்து இடிதாங்கியாக அதை உட்கொண்டு பக்தரை பாதிப்பிலிருந்து பாலிக்கிறார்.
நம் வீட்டிலேயே எத்தனை பார்க்கிறோம்?
பெண்ணுக்கு வரன் பார்க்கிறோம். ஒரு நல்ல இடம் குதிரவேண்டும் என்று ஆசைப்படுகிறோம். குதிரும் என்பதுபோலவே ஸ்வாமி சுபசூசகங்கள் காட்டுகிறார். உதாரணமாக, ஜாதகம் வரும் நாள் குருவார பஜனை சமயமாக இருக்கிறது. அதைப் பொருத்தம் பார்த்துத் திருப்தியுடன் திரும்பும்போது யாரோ ஸ்வாமியின் விபூதிகொணர்ந்து கொடுக்கிறார்கள். கடைசியில்… அந்த வரன் தட்டிவிடுகிறது! ஆனாலும் எதனாலோ அது நம்மை விசேஷமாக பாதிக்கமாட்டேன் என்கிறது! ஸ்வாமி ஏன் இத்தனை நல்ல சூசனைகள் காட்டினார் என்று அவரை நொந்து கொள்ளத் தோன்றுவதில்லை.
ஒரு பிள்ளை எம்.பி.ஏ.க்கு அப்ளை செய்கிறான். இன்னொருவன் ஸ்டேட் பாங்க் வேலைக்கு மனுப்போடுகிறான். ஸ்வாமியின் அருள்பெறச் செல்கிறார்கள். அவர் வியக்தமாக இவ்விஷயங்களுக்கு ஆசி சொல்லாவிடினும், பெருங் கூட்டத்திலே குறிப்பாக இவர்கள் நீட்டும் இம் மனுக்களைப் பார்க்கிறார், தொடுகிறார். பழம்தான் என்று நம்பி அவர்கள் திரும்புகிறார்கள். காயே ஆகிறது. ஆனாலும் ஆச்சரியம், இவர்கள் மனம் அழுகவில்லை! ஸ்வாமியை இவர்கள் காயவும் இல்லை.
பணமுடை. பகவான் படத்திடம் விஞ்ஞாபிக்கிறோம். அதிலிருந்து புஷ்பம் விழுகிறது. ஆனந்திக்கிறோம். ஆச்சரியம்! அன்றே அலுவலகத்தில் ஏதோ ஒரு போனஸ் அறிவிக்கப்படுகிறது. ஆனால் அப்புறம் என்னவாகிறது? எதிர்பாராத அந்த போனஸ் அளிக்கப்பட்டும், தொழிற் சங்கத்தினரின் பேராசையில் அதை இன்னும் அதிகமாக்கும்படிப் போராட்டம் ஆரம்பித்து, “உள்ளதும் போச்சு நொள்ளைக் கண்ணா” என்று மாதக் கணக்கில் இழுபறியாகிறது. எப்படியோ மனஸும் தாங்கிக் கொள்கிறது. பூவைத் தள்ளிக்காட்டிய புருஷோத்தமனைக் குறைப்பட்டுக் கொள்ளத் தோன்றவில்லை.
***
அவர் சம்பந்தமாகவே இரண்டுவிதமாக அடிபட்டுக் கொள்ளும்போதும் அவரே அதிர்ச்சி உறிஞ்சியாக அதை ஏற்பது லீலையின் ஒரு அதிசய அங்கம்.
ஒன்று. அவரைப்பற்றிப் பொறுப்பில்லாமல் விமர்சனம் செய்பவர்களின் பிதற்றல்களை நாம் ஸஹித்துக் கொள்வது. ஆரம்ப காலத்தில் பாக்கி எதைத் தாங்கிக் கொண்டாலும் நம் அதிப் பிரிய பகவானை எவரேனும் தாக்குவதை மட்டும் நம்மால் தாங்கிக் கொள்ள முடியாமல் ரத்தம் கொதிக்கத்தான் செய்யும். ஆனால் போகப் போகப் பாருங்கள், இந்த அதிர்ச்சி எங்கோ போய் விடுவதை! அவர்கள் அப்படி தூஷிப்பதும் அவர்களது காரியமாக பகவானே நியமித்துக் கொடுத்ததுதான் என்று கருதி அதைக் காதில் போட்டுக் கொள்ளாமல் விலகச்செய்து விடுகிறார்.
இன்னொன்று. ஸாக்ஷாத் அவரே கொடுக்கும் அடி! கோப ஸாயியாக, அலக்ஷிய ஸாயியாகப் படுத்தும் பாடு! இதிலே நம் அஹங்காரத்துக்கு ‘டெஸ்ட்‘ இருப்பதால் அஹங்காரம் மிகுந்தவர்கள் அடியைப் பட்டுக்கொண்டு ஸ்வாமியை விட்டுவிடுகிறார்கள். இவர்கள் மிகக் குறைவுதான். மற்ற நாம் அனைவருமே அஹங்காரக்காரர்கள் தான் என்றாலும் அவர்கள் அளவுக்குப் போகாமல் அப்பனிடமாவது கொஞ்சம் அடங்கியிருப்பதால் அடிக்கிற அவனே அதை ஏற்றும்கொள்கிறான் போலும்! புட்டபர்த்திக்குப் போய்ப் பலநாள் காத்திருந்தும் ஒரு கடாக்ஷம், பாத நமஸ்காரம்கூடக் கிடைக்காமல் திரும்பிய குடும்பங்கள் எத்தனை இருக்கின்றன? வேறெந்த ஆச்ரமத்துக்குப் போயும் இம்மாதிரி அதன் தலைவர் அலக்ஷியம் செய்தால் அதோடு ஸ்நானம் செய்துவிடத்தான் தோன்றும். ஆனாலும் இவர் விஷயத்தில் மட்டும் அப்படிக் காணோமே என்றால், ஸத்ய தர்ம நாயகனாக அவர் ‘ஷாக்‘ அடிக்கும்போதே, சாந்திப் பிரேம தாயகனாக ‘க்ளவ்ஸு‘ம் போட்டு விடுகிறாரே!
இன்னொரு விதமான அடியும் அவரே நேராகப் பிரஸாதிப்பது உண்டு. மநுஷ்ய மனஸை வெகுவாகத் தளர்ச்சியுறச் செய்யும் ஏமாற்றம் என்பதுதான் அது. “ஆகஸ்ட்லே மெட்றாஸ் வரேன் பாரு, அப்ப கண்டிப்பா வீட்டுக்கு வரேன்” என்று கூடைத் தலைமயிரையும் சாய்த்து, குழைந்து சொல்வார். ஆகஸ்டில் மெட்றாஸுக்கு வரவே மாட்டார்! அப்படி வந்தாலும் வீட்டுக்கு வராமல் டிமிக்கி கொடுத்து விடுவார்! ஆனால் பாழும் மனத்துக்கு அவரைக் குற்றம் சொல்லத் தோன்றுவதில்லை!
பெண்ணுக்குக் கல்யாணம், பிள்ளைக்கு உபநயனம் நன்கு நடக்க வேண்டுமென ஆசி கேட்டால், நாம் கேட்காத பெரிய ஆசீர்வாதமாக, “நானே பண்ணி வைக்கிறேன், புட்டபர்த்தியிலேயே பண்றேன், பிருந்தாவனத்திலே பண்றேன்” என்றெல்லாம் சொல்வார். முஹுர்த்தம் நிச்சயித்துக் கொண்டு நாம் போகும்போது கையை விரித்து விடுவார். சென்னையில் அந்த ‘பீக்ஸீஸ‘னில் கல்யாண மண்டபம் கிடைத்ததே அவரருளால்தான் என்று நாம் புகழும்படித்தான் செய்வாரே தவிர, ஏமாற்றத்தில் ஏங்க விடமாட்டார்!
அல்லது கல்யாணத்துக்கு “வருகிறேன்” என்பார். வராமலே இருந்து விடுவார். எதனாலோ எந்த அளவுக்கு ஆசாபங்கப்படவேண்டுமோ அவ்வளவு நாம் படமாட்டோம்! மணமக்களை ஸ்வாமியிடம் ஆசீர்வாதத்துக்கு அழைத்தும் போவோம். “பைத்தியம்! ஸ்வாமி வரவில்லையேன்னு நினைச்சியா? ஸ்வாமியோட ஆம்னிப்ரெஸன்ஸில் அவ்வளவுதான் ஃபெய்த்தா? (ஸர்வ வியாபகத்தில் அவ்வளவுதான் நம்பிக்கையா?)” என்று கன்னத்தை இழைத்து அப்படியே கனகாபிஷேகம் பண்ணினாற்போல் பூரிக்கச் செய்து விடுவார்!
“ஸ்வாமி” நூலில் நான் ஒரு விஷயம் அவ்வளவு ஸரியாக எழுதவில்லை. அதிலே ஸ்வாமி எந்த ஒரு வார்த்தை சொன்னாலும் அது ஸத்யமே ஆகிவிடும் என்று சொல்லி உதாரணமும் கொடுத்திருக்கிறேன். அந்த உதாரணங்கள் மெய்தான். ஆயினும் அவர் சொல்வது பொய்க்க முடியாது என்பதில்தான் ஒரு பாகுபாடு செய்ய வேண்டியுள்ளது. அதாவது, ஸத்ய ஸங்கல்பமாக ‘இது இப்படி நடக்கட்டும்‘ என்று நினைத்து அவர் சொல்கிற எந்தச் சொல்லும் மெய்யே ஆகிவிடும். ஆனால் இப்படித் தமது திருவுளச் சங்கற்பமாக இன்றி அவர் ஒருவரைத் தட்டிக் கொடுத்து உற்சாகப்படுத்துவதற்காகவும், அவர்களது மனநிலையில் ஆறுதலடைவதற்காகவும் அநேக விஷயங்களைச் சொல்லும்போது அதெல்லாம் சத்தியமென்றோ, சத்தியமாகி விடும் என்றோ சொல்ல முடியாது. “உங்கள் ஊருக்கு வருகிறேன்”, “வீட்டுக்கு வருகிறேன்”, “நானே இதைச் செய்கிறேன்; அதைச் செய்கிறேன்” என்பதெல்லாம் அந்த சமயத்தில் சம்பந்தப்பட்டவர்களைக் குஷிப்படுத்தும் அன்பு எண்ணத்தில் சொல்வதுதான். பிறகு இவற்றை அவர் சத்தியமாக்கி விடுவதில்லை. ஒன்றைச் செய்வதாகச் சொன்ன போது எவ்வளவு குஷிப்படுத்துகிறாரோ, அதில் பாதி அளவு ஏமாற்றத்தைக் கூடப் பிற்பாடு அவர் அதைச் செய்யாதபோது அளிக்காமல் மாயாவித்தனம் செய்யும் சதுரம் அவருக்கிருப்பதால், இவ்வாறு கள்ளமற்ற பொய்யைச் சொல்லவும் ‘அதாரிடி‘ பெற்றிருக்கிறார்! அப்படிப்பட்ட ஸாமர்த்தியமில்லாத நாம் பொய் சொல்வதை வன்மையாகக் கண்டிக்கவும் அதிகாரம் பெற்றிருக்கிறார்!
உண்மை தவறி நடப்பவர் தம்மை
உதைத்து நசுக்கிடுவான் அருள்
வண்மையினால் அவன் மாத்திரம் பொய்கள்
மலை மலையா வுரைப்பான்.
என்று கவி கண்ணனைச் சொன்ன அளவுக்கு மலை மலையாக நம் ஸத்ய ஸ்வாமி பொய் சொல்லமாட்டார். குழந்தைகள் மண்ணைக் குவித்துக் கட்டும் குறு மலையாகத் தான் அவர் பொய் உரைப்பது. அதுவும் ஏதும் ஸ்வய லாபத்துக்காக அல்லவே அல்ல. கவி சொன்னது போல், அருள் வண்மை தான் காரணம். அந்தச் சமயத்தில் அந்த பக்தருக்கு இப்படி உற்சாகமூட்டுவது அவசியமும் அன்புக் கடமையுமாகும் என்ற அருட்சிந்தை!
“ஏமாற்றம் தரும் அடியில் பெரும்பங்கை அவர் வாங்கிக் கொண்டாலும் ஒரு பங்கையேனும் நாம் அநுபவிக்கிறோம் அல்லவா? தர்ம மயமாகவே இருக்க வேண்டிய பகவான் ஏமாற்று செய்யலாமா?” என்றால், நம் காம பலனைத் தர வேண்டிய தர்மத்துக்காகவே அவர் ஏமாற்றவும்தான் வேண்டும்! நாம் ஒவ்வொருவரும் எத்தனை பேரிடம் எத்தனை வார்த்தைகள் கொடுத்துவிட்டு, அதிலே தப்பி ஏமாற்றியிருக்கிறோம்? நம்மைப் பற்றிப் பிறர் உயர்வாக நினைக்க வேண்டும் என்பதற்காக நாம் போடும் ஏமாற்று வேஷம் வேறு! ஏமாற்றுவதற்குத் தண்டனையாக ஏமாற்றப்படவும்தானே வேண்டும்? இதற்காக வேறு யாரிடமோ நாம் ஏமாறாமல் பகவானே நம்மை ஏமாற்றினால் வெகு சிரேஷ்டம்தானே? அவன் அந்த உரிமை பெற்றிருக்கிறான்தானே?
***
இது மட்டும் பார்த்ததெல்லாம் அடிகள்தாம்; இனி இடிகளாகவே உள்ளவற்றைப் பார்ப்போம். அதிலே ஸாதாரண ஷாக்தான் அடிக்கும்; இதிலோ ஒரு பவர்ஹவுஸைவிட அதிகமான மின்சாரம் பாயும். ஷாக் அப்ஸார்பராக அடியின் அதிர்ச்சியை ஐம்பது விழுக்காடு ஏற்றுக்கொள்ளும் பிரபு இடிதாங்கியுமாகி இந்த மின்சார வெள்ளத்தில் தொண்ணூறு சதம் அல்லது முழுதையுமே தான் தாங்கிக்கொள்வான்.
பிரசாந்தி நிலயத்திலேயே நெடுநாள் தாம் இடம் தந்து பராமரித்து வந்த ஒரு விதவையைத் திடுமென ஒரு நாள் அவளுடைய பெண்களோடு வெளியேறுமாறு உத்தரவு பிறப்பிக்கிறார் ஸ்வாமி. இந்தப் பிறவியில் இல்லாவிட்டாலும் பூர்வ ஜன்மா எதிலோ அவர்கள் செய்த கர்மாவுக்காகத்தான் இப்படிச் செய்திருப்பார் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. ஆனால் இதல்ல இங்கு நம் அத்தியாயத்துக்கான விஷயம். நீண்ட காலம் திவ்விய சந்நிதானத்திலே இருந்துவிட்டு, ஸர்வேச்வரனாகக் கருதியவனாலேயே பஹிஷ்கரிக்கப்பட்டு வெளியேறும் ஒரு விதந்து, இரு விவரமறியாப் பெண்கள் ஆகியோரின் நிலை எப்படியிருக்கும்? ‘இந்த இடியை அவர்களால் தாங்க முடியாது. ஆற்றிலே, குளத்திலேதான் போய் விழுவார்கள்‘ என்று நினைக்கிறோம். ஆனால் அப்படி நடக்கவில்லை.
மிகவும் அழுதார்களென்பது வாஸ்தவம். ஆனாலும் தற்கொலை செய்துகொள்ளக்கூடிய, அல்லது பைத்தியம் பிடிக்கக் கூடிய நெரிப்பில் அழுகையோடு நின்றது அதிசயத்திலும் அதிசயந்தான். இவர்கள் ஏதோ மகத்தான குற்றம் செய்திருந்தாலொழிய ஸ்வாமி இப்படி அனுப்பியிருக்க மாட்டார் என்று (நாளைக்குத் தங்கள் கதை என்ன என்று தெரியாதவர்களும், இவர்கள் இத்தனை காலம் புட்டபர்த்தியில் பெற்ற அநுக்ரஹ பாக்யத்தைப் பெறாதவர்களுமான) உலகத்தினர் ஏச்சுப் பேசி ஒதுக்குவதையும் அவர்கள் தாங்கிக் கொள்கிறார்கள். கௌரவமாக அவர்கள் ஜீவனோபாயம் காணவும் ஐயன் ஒரு வழியைக் காட்டுகிறான்.
வேறெங்கிருந்தோ விழும் இடியைத் தாங்கிக் கொள்ளச் சக்தி தருவதாக இன்றி, இதுபோல் ஸ்வாமியே இடியாகி, இடிதாங்கியுமாகி இருப்பதற்கு இன்னோர் உதாரணம் சில பக்தர்கள் அறிந்திருப்பார்கள். தற்போது ஸ்ரீ ரூபக் சங்க கோடி ஸ்வாமிக்கு எவ்வளவு நெருக்கமாக இருக்கிறாரோ அல்லது அப்படி நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோமோ இதைவிட, ஆதிகால ஸ்ரீ ராஜரெட்டியையும் விட, பகவானிடம் ஒரு வாலிபர் சில வருஷங்களுக்கு முன் அத்தியந்தமாக இருந்தார் அல்லது அப்படி நாம் நினைக்கும்படி இருந்தது. இத்தனை அத்தியந்தமாயிருந்தும் ஸ்வாமி தமது அபார தர்மக் கட்டுப்பாட்டினால் அவ்விளைஞரின் மனத்தைத் தம் வசப்படுத்திக் கொள்ளாமல் அவருக்கு இச்சா ஸ்வதந்திரம் கொடுத்திருந்தார். இதனால் அந்த இளைஞர் விபரீதத்தை வரவழைத்துக் கொண்டார். பகவானின் அனுக்கிரகத்தை விட ஆனந்தமும் உண்டா என்றில்லாமல், பகவானின் மனத்துக்கு உகவாத காதல் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார்.
அப்புறம் என்ன? ஸ்வாமி உதறிவிட்டார் உதறி. இளைஞர் அதிலே குதறிவிடுவார் குதறி, ஒன்று கயிற்றில் தொங்குவார், அல்லது ‘மனநல மருத்துவமனை‘ என்று நாசுக்காகச் சொல்லப்படுமிடத்தில் ‘அட்மிட்‘ ஆவார் என்றுதான் பக்தர்கள் எதிர்பார்த்தனர். அப்படியெல்லாம் ஏதும் நடக்கவில்லை. ஸ்வாமியிடம் அவருக்கு இப்போது பக்தி உள்ளதா, இல்லையா என்று தெரியவில்லை. ஆனால் பெரியவர்கள் பார்த்து முடித்தபடி ஒழுங்காகக் கலியாணம் செய்து கொண்டு அவர் பாட்டுக்கு இருக்கிறார்.
சில ஸந்தர்ப்பங்களில், ஸ்வாமி மன்னிப்புக் காட்டாமல் இவ்வளவு கடுமையாக இருக்கலாமா என்று நமக்குள் கேள்வி எழும்பலாம். ஆனாலும் அவரது கடுமையால் அப்படியொன்றும் விபரீதமான எதிர்விளைவு நிகழ்ந்துவிடவில்லை; மிளகாயைத் தூவிய பின் அவரே அதில் ரகசியமாக நெய்யையும் கொட்டிவிடுகிறார் என்பதைக் கவனிப்போமாயின் கேள்வி மறைந்து போகும்.
இன்னொரு கேஸ்: மாப்பிள்ளை பெண்ணைச் சேர்த்துக் கொள்ளாமல் தள்ளி வைத்திருக்கிறார். பிரச்னை தீரக் குடும்பம் பிரசாந்தி நிலயனிடம் திரும்புகிறது. மாப்பிள்ளையிடமிருந்து பெண்ணைக் கொண்டுவந்துவிடச் சொல்லிக் கடிதமும் வருகிறது. பகவான் அருளை வியக்கிறார்கள். ஆனாலும் க்ஷணச் சித்தம் க்ஷணப்பித்தமான மருமகப்பிள்ளை எப்போது வக்கரித்துக் கொள்ளுமோ என்று யோசிக்கிறார்கள். யோசிக்கவிடாமல், அவனிடமிருந்து வேளைக்கு ஒரு கடிதம், உடனே வரச் சொல்லி வருகிறது. பெண்ணுக்கும், அவளைவிட அவளது தாயாருக்கும் ஏற்படும் மகிழ்ச்சி சொல்லத்தரமன்று. ஸாயி ராமனின் திரு அருளில் நன்றியால் நிறைந்து, ஆயிரம் மைல் அப்பாலுள்ள மாப்பிள்ளையகம் செல்கிறார்கள். நாலே நாளில் ஊருக்குக் கடிதம் வருகிறது, வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிக்கொண்டு விட்டதாகவும், அம்மாவும் பெண்ணும் திரும்பி வருவதாகவும்!
இதர ஸாயி பக்தர்களுக்கு அந்தத் தாயையும் மகளையும் எப்படி முகம் கொண்டு பார்ப்போம் என்றே கூச்சமாக, கவலையாக இருக்கிறது. ஆனால் இடிதாங்கி செய்துள்ள நம்ப முடியா அநுக்ரஹத்தைப் பாருங்கள். மனம் நொந்து குலைந்திருக்க வேண்டிய இருவரும் திரும்பும் வழியில் க்ஷேத்ரங்களில் இறங்கி தரிசனம் செய்து கொண்டு நிதானமாக வருகிறார்கள். அண்டை அயலாரை எப்படிப் பார்ப்பாள் அந்தப் பெண் என்று நாம் நினைத்தாலும், ஆண்டை அவளை எப்படியோ சரி செய்து விட்டிருக்கிறார்! புலம்பவும், ஸ்வாமியைக் குறை கூறவும் வேண்டிய தாயோ அவ்வூர் ஸாயி பஜனையில் வழக்கம் போலவே கலந்துகொள்ள வந்து, சிரிப்பாகச் சிரிக்கிறார். “சிரிப்புத்தான் வருகிறது. ஸ்வாமி என்னதான் பண்ணினாரோ, அத்தனையும் ஏதோ ‘காமிக்‘ டிராமா மாதிரித்தான் தோன்றுகிறது” என்கிறார்.
“அப்பா ஸாயி, உன் திறம் இப்படிப்பட்டதா?” என்று ஆச்சரியப்படுகிறோம்.
வேறொரு விதமான இடி: கேரளத்தைச் சேர்ந்த அந்த மூன்று ஸஹோதரர்களும் வெகு அழகாக பஜன் பாடுவார்கள். அவர்கள் ஊர் ஸாயி பஜனில் கலந்து கொண்டு பக்தர்களை உருக்குவார்கள். பஜனில் கலந்து கொள்ளும் ஒரு பெண்ணுக்கும் ஸஹோதரர்களில் மூத்தவருக்கும் காதல் ஏற்படுகிறது. ‘ஸ்வாமி கிருபைதான்; நல்ல பக்தரை வாழ்க்கைத் துணையாகத் தருகிறார்‘ என்று அவ்விருவரும், அவர்களது குடும்பத்தினரும் பரஸ்பரம் மகிழ்கிறார்கள். ஸ்வாமியின் அனுமதி பெற்றுத் திருமணம் முடிப்பதற்காகப் புட்டபர்த்தி செல்கிறார்கள்.
ஸ்வாமியோ வெந்நாகமாகச் சீறுகிறார்: ‘உங்கள் குடும்பம் எத்தனை கௌரவமானது? அதிலே பெரியவர்கள் பார்த்துக் கல்யாணம் பண்ணிவைக்காமல் இப்படிக் காதல், ஊதல் பண்ணுவதாவது! அதுவும் எந்த இடத்தில் காதல்? ஸ்வாமி பஜனை மண்டலியில்! ‘லவ் மேக்கிங்‘குக்காகவா ஸ்வாமி பஜனை மண்டலி வைத்திருக்கிறேன்? இதுவரை ஸ்திரீபுருஷாள் நெருப்பாக இருக்கிற இடம் ஸ்வாமி ஸ்தாபனங்கள் என்று இருந்த நல்ல பெயரும், நம்பிக்கையும், மதிப்பும் இப்படியெல்லாம் நடந்தால் போய்விடாதா? ஸ்வாமி ஸ்தாபனங்களிலேயே இப்படிப்பட்ட மன ஓட்டங்களுக்கு இடம் கொடுத்துவிட்டால் சமூகத்தில் என்ன காபந்து இருக்கும்? இதற்கு அநுமதி வேறு கேட்டு, ஸ்வாமி வாழ்த்துவார் என்று வந்திருக்கிறீர்களே! இம்மாதிரி தறிகெட்ட காரியங்களுக்கு ஸ்வாமி ஒருநாளும் அங்கீகாரம் தரமுடியாது. தாயார், தகப்பனார் நல்ல இடமாகப் பார்த்து ஏற்பாடு பண்ணினால் வாருங்கள், தாராளமாக அநுக்ரஹம் செய்கிறேன்.”
இது இரு குடும்பங்களும் எதிர்பாராத பெரும் ஏமாற்றத் திருப்பம். மனப்பூர்வமாக நேசித்த அந்த இளைஞரும் பெண்ணுமோ அப்போதைக்கு அப்படியே ஆடிப் போய்விட்டனர். ஆனாலும் ஸ்வாமியை மீறித் திருமணம் செய்து கொள்ளவில்லை. காதல் முறிவில் நாம் எதிர்பார்க்கிற அளவுக்கு இதயம் சுக்கலாகி விடவுமில்லை. பிறகு அந்தப் பெண் காலமானாள். அந்த இளைஞர் திருமணமேயில்லாமல் ஒன்றியாக இருந்துவிட்டார். ஆனாலும் ஆசாபங்கத்தின் வடு எதையும் அவரிடம் காண்பதற்கில்லை.
அதைவிட அதிசயம், இம்மாதிரியெல்லாம் நடந்தால் பெற்ற வயிறுதான் அதிகம் கலங்கும். ஆனால் இளைஞருடைய பெற்றோர் அப்படிக் கலங்கவில்லை. அவருடைய தம்பிமார்களும், “காதலை முறித்த காதகர் இந்தப் பழம்போக்குவாதியான ஸாயி பாபா” என்று இக்காலப் போக்குப்படி எண்ணாமல், ஸ்வாமியிடம் விடாமல் சென்று வருகின்றனர். தந்தையார் பார்த்து வைத்த இடங்களில் அவர்களுக்குத் திருமணம் ஆவதற்கு ஸ்வாமி கனிந்து கனிந்து ஆசி கூறினார். பிறகு அவர்களுக்குப் பிறந்த குழந்தைகளுக்கு ஸ்வாமியே நாமகரணம் செய்தார். அன்று நான் புட்ட பர்த்தியில் இருந்தேன். “அன்னம் கொண்டு வந்திருக்கப்படாதோ? நானே அன்னப் பிராசனமும் (குழந்தைக்கு சாஸ்திர பூர்வமாக முதன்முறை உணவூட்டும் சடங்கும்) பண்ணியிருப்பேனே!” என்று அப்போது அன்னை ஸாயி சொன்னதை மகிழ்ச்சியுடன் கூறினார்கள். அச்சமயம் எனக்கு இந்தக் குடும்பத்தில் இத்தகைய இடி ஒன்று ஸ்வாமியிடமிருந்தே விழுந்தது என்று நம்பவே முடியவில்லை.
இடிக்கு அடியார்கள் இடியாமலிருப்பது ஒரு பக்கமிருக்கட்டும். அவர்களுடைய பக்தி போகாமல் இருப்பதுதான் அதைவிடச் சிறப்பானது.
***
‘சிவகுமார்‘ என்றொருவர். புனைபெயர்தான். அவர் தெய்விகம் மிக்க ஒரு மஹானிடம் நெருங்கிய தொடர்பு கொண்டவர். சிவாகுமாரை முதலிடத்து எவருமே அம்மகானின் பிரதிநிதி போலத்தான் நினைப்பார்கள்.
எதனாலோ சிவகுமார் வீட்டில் ஸாயி விளையாட ஆரம்பித்தார். மேற்சொன்ன மஹானின் படத்திலேயே விபூதி, தேன் ஆகியவற்றை ‘வரழைத்தார்‘! இது தவிரவும், ஸ்வாமியைப் பற்றிக் கேட்டும் படித்தும் சிவகுமார் அவரிடம் சிறிது நாட்டம் கொண்டார். எனினும் தமது மஹான் அனுமதித்தாலே இதைத் தொடரலாம் என்று கருதினார். ‘இகபர நலன் யாவும் நம் மஹானே நல்க முடியுமாதலின் நமக்கு எதற்கு பாபா?’ என்ற எண்ணமும் அவருக்கு நிறைய இருந்தது. மஹானிடமே பாபாவின் விளையாட்டைச் சொல்லி, அவரது திருவுளக் கருத்தைக் கேட்டார். மஹான் மனமார்ந்த மகிழ்ச்சி தெரிவித்து, தாமே அவருக்கு பாபாவிடம் ஈடுபாட்டை உறுதிப்படுத்திக் கொடுத்தார்.
இதன் பின்னர் சிவகுமார் நேரில் சென்று பாபாவை தரிசிக்கலானார். பாபாவும் பேட்டிகள் தந்தார். அந்த மஹானை மிகவும் சிலாகித்துக் கூறினார். சிவகுமார் பாபாவிடமும் பரம பக்தி கொண்டார்.
இவ்விரு மஹாபுருஷர்களை வெளியுலகுக்கு இணைத்துத் தரும் அரும்பணி தமக்கு அருளப் பெறுமோ என்று சிவகுமார் உள்ளூர எண்ணியதுகூட உண்டு.
இப்படிச் சில ஆண்டுகள் சென்றபின் விழுந்ததே பார்க்க வேண்டும் இடி!
இடித்தவர் பாபா அல்ல.
மஹான் தான் இடித்தார், வெடித்தார், பொடித்தார். தாம் முன்பு ஒப்பியதை அப்படியே ரப்பரிட்டு அழித்தார். பாபா. சிவகுமார் இருவரையும் பலபடித்தாகச் சாடினார்.
ஆனால் இதில் எதுவும் அவர் நேராக சிவகுமாரிடம் சொல்லவில்லை. சிவகுமாருக்கு மிகவும் நம்பகமானவர்கள், தங்களிடம் மஹான் இப்படியெல்லாம் சொன்னதாக அவருக்கு ‘ரிலே‘ செய்தார்கள். அம்மாதிரி, பொறுப்பில்லாத எவரோ சொன்னால்கூட ரோஷமும், ஆத்திரமும், வேதனையும் உண்டாகும். ஆனாலும் தமது வாழ்க்கைப் பொறுப்பையே ஏற்றுக்கொண்டவர் எனக் கருதிய மஹானே இப்படிச் சொன்னபோது சிவகுமார் திணையளவும் கலங்கவில்லை.
பாபாவே இடிதாங்கி நிற்பது அவருக்குத் தெற்றெனத் தெரிந்தது.
பிரேம ஸ்வாமி சிவகுமாருக்கு மஹானிடம் மாற்றுணர்ச்சி உண்டாகாமலும் அநுக்ரஹித்தார். அவரைச் சீண்டிக் கோபமூட்டக் கூடாது என்பதாலேயே இதன்பின் சிவகுமார் அம்மஹானிடம் செல்லவில்லையே அன்றி, தம்முடைய மனவிகற்பால் அல்ல. தம் விஷயத்தில் அவர் இப்படிச் செய்துங்கூட அவர் மஹிமை மிக்கவர்தாம் என்று விசால மனத்தவரான ஸ்வாமி சிவகுமாருக்கு உணர்வித்து. இதன் பின்பும் அவருக்கு சிவகுமாரை மானஸிகமாக மரியாதை செலுத்த வைத்தார். அற்புதமில்லை?
மஹானிடம் நேரே செல்லாவிடினும் அவர் உவக்கும் அநேகப் பணிகளை சிவகுமார் தொடர்ந்து செய்து வரலானார். ஸமயம் கிடைக்கும் போது இவற்றுக்கு ஸ்வாமியிடம் ஆசி கோரிப் பெற்றதும் உண்டு.
மெல்ல மெல்ல மஹானுமேகூட மீண்டும் சிவகுமாரின் பணிகளை மூன்றாம்மனிதர்களிடம் சிலாகிக்க ஆரம்பித்தார். அதோடு அவரது ஸூக்ஷ்ம அருளையும் சிவகுமார் மறுபடி உணரலானார். தமது மானஸிக பக்தி, மஹானது ஸூக்ஷ்ம அநுக்ரஹம் இரண்டுமே அழகாக இசைந்திருப்பதால் அவசியமற்ற ஸ்தூல தரிசனத்துக்குப் போய் மீண்டும் ஏதேனும் இசகு பிசகு உண்டாக்கிக் கொள்ள வேண்டாம் என்றே தாம் தற்போது மஹானிடம் போகாதிருப்பதாக சிவகுமார் சொல்கிறார். “எக்காரணத்தாலோ இந்த ஜன்மத்தில் எனக்கு ஸூக்ஷ்மத்தோடு ஸ்தூலத்திலும் ஸ்வாமியைத்தான் ஆச்ரயமாக விதித்திருக்கிறது. இதை அந்த மஹானுமே அறிந்து, அங்கீகரித்திருக்கவேண்டும் என்று பிறகுதான் ஊகித்துக் கொண்டிக்கிறேன். அதனால்தான் மிகுந்த சக்திமானான அவர் சிறிது சிறிதாக என்னைத் தமது ஆதீனத்திலிருந்து விடுவித்து, பாபாவின் ஆகர்ஷணத்துக்கு ஆட்படுத்தியிருக்கிறார். முதலில் நான் பாபாவிடம் போக அவர் ஒப்பிவிட்டுப் பிறகு முரணாகப் பேசியதிலும் இப்போது அவரது மஹிமையே எனக்குத் தெரிகிறது. இப்படி முரணாகப் பேசினாலும், கோபவேஷம் போட்டாலுந்தான் அவரை நான் விட்டு பாபாவிடம் பூர்ணமாக ஒட்டிக் கொள்வேன், அவ்வாறு நான் ஒட்டிக் கொள்ளவேண்டும் என்றேதான் மஹான் நாடகமாடியிருக்கிறார் எனக் காண்கிறேன். இப்படிக் காணக் கண் கொடுத்தது பாபாதாம்” என்கிறார்.
இன்னொரு மஹானுடைய அருள் நாடகத்தை அம்பலமேற்றும் இவரது லீலா நாடகம்!
***
சாவு வாயிலில் உள்ளவர்களுக்கு மரண பயம் என்ற இடியிலிருந்து ஸ்வாமி காப்புத் தருவதையும், இறந்தவரின் நெருங்கிய உறவினருக்குப் பிரிவுத் துயரம் என்ற பேரிடியிலிருந்து அதிசய ‘இம்யூனிடி‘ அளிப்பதையும் பற்றி “ஸ்வாமி”யில் பக்கம் பக்கமாகச் சொல்லியிருக்கிறேன். அதன் பின்னும் இப்படிப் பல அறிகிறேன்.
டாக்டர் பகவந்தத்துடைய மனைவியின் மறைவைப் பற்றிப் பலர் அறிந்திருக்கலாம். சென்னையிலிருந்து பெங்களூருக்குச் செல்ல பிருந்தாவன் எக்ஸ்ப்ரெஸில் ஏறிய அந்த அம்மாளை பெங்களூர் பிருந்தாவனத்திலிருந்த ஸ்வாமி ரயில் புறப்படு முன்பே “எடுத்துக்கொண்டு” விட்டார். இங்கே ஸென்ட்ரல் ஸ்டேஷனிலே அவளை உயிரற்ற உடலமாக இறக்கினார்கள். அநாயாஸ மரணம்! சடலத்தை பெங்களூர் கொண்டு வரச் சொன்ன பகவான், பிரிவாற்றாமையில் ஆயாஸமுற்ற பிள்ளை பெண்டுகளுக்கு எளிதே சாந்தியளித்துவிட்டார்.
அச்சமயம் பகவந்தம் வெளிநாடு சென்றிருந்தார். மனைவியின் திடீர் மரணத்தை அவர் அறிந்ததும், இறுதியில் அவள் பக்கலில் தாம் இல்லையே என்ற சிறு ஏக்கமும் கொள்ளாதபடி அவருடைய மனத்துக்கு ஏதோ மருந்து போட்டுவிட்டார் மாயர்.
***
கொடிதிலும் கொடிதான புத்ர சோகத்திலிருந்து ஸ்வாமி மீட்கிற ஸாதனை, ஆஹா!
இயற்கை மரணமானாலே வயிற்றில் பிறந்த ஜீவனின் சாவைத் தாங்க முடியாதுதான். விபத்தில் துர்மரணமாகப் போனாலோ பெற்றவர்கள் மேலும் துடிப்பார்கள். கொலை செய்யப்பட்டு மரணம் சம்பவித்தால் அதைத் தாய் தந்தையர் தாங்கவே முடியாது. என் அன்புக்கும், நன்றிக்கும் மிகவும் உரியவர்களான ஒரு பெங்களூர் தம்பதியர் இப்படிப்பட்ட கொடிய சோதனையை வியக்குமளவுக்குத் தாங்கியிருக்கிறார்கள். சென்ற ஆண்டு பத்திரிகைகளில் விவரமாக வந்த சென்னை இந்திரா நகர்க் கொலையில் மாண்ட பெண்மணி இவர்களுடைய புத்திரிதான். அந்த இடியின் தீவிரத்தில் முக்கால் பாகத்தை மறைத்து (அல்லது, தாம் தாங்கிக்கொண்டு), கால்பாகத்தையே அவர்களுக்குக் கொடுத்தார் நம் ஸ்வாமி. “ஸாயி, ஸாயி என்றீர்களே, உங்கள் பெண் இப்படி கோர மரணமடைய விட்டுவிட்டாரே!” என்று கேட்பவர்கள் கேட்டாலும், அவர்கள் துக்கத்தோடு இந்தக் குற்றச்சாட்டையும் பொறுமையாகத் தாங்கிக்கொண்டு, மகளுடைய அஸ்தியைப் புட்டபர்த்தி சித்ராவதியிலேயே கரைக்க அனுப்பினார்கள்!
மலேஷிய ஸதாசிவத்தின் அம்மாவைப் பாருங்கள். முன்பு சிவா என்ற ஓர் இளைஞருக்காக ஸ்வாமி சிவப்பு ஆயின்ட்மென்ட் ‘வரவழைத்து‘க் கான்ஸர் கண்ட அவரது வயிற்றின்மீது தேய்த்துக் குணப்படுத்தியதாகப் படித்தோமல்லவா? அந்த சிவாவின் தம்பிதான் ‘ஸதா‘ எனப்பட்ட இந்த ஸதாசிவம். மூத்த பிள்ளை குணமானதைக் கண்டு, நீண்டகாலமாக இளம்பிள்ளைவாத முற்றிருந்த ஸதாவைப் புட்டபர்த்திக்கு அழைத்து வந்தாள் அவனது தாய். பிரசாந்தி நிலயத்திலேயே அந்தச் சிறுவன் உயிர் நீத்துவிட்டான். எங்கோ மலேஷியாவிலிருந்து வந்து, கணவரும் பக்கத்திலில்லாதபோது பிள்ளையை வாரிக் கொடுத்து விட்ட அந்த துரதிருஷ்டசாலியின் அதிருஷ்டத்தைப் பாருங்கள். சித்ராவதிக் கரையில் புத்திரன் வெந்து சாம்பலான மாலையே வழக்கம்போல் ஸ்வாமி தரிசனத்துக்காக வந்து பிரசாந்தி நிலயத்தில் அமர்ந்தாள்! இப்படிப்பட்ட மனநிலை பெறுவதைவிடப் பெரிய அதிருஷ்டம் என்ன இருக்கிறது? அதற்காக அவர் ஒன்றும் அவளை உடனே அழைத்து பேட்டி தந்து அருள் மழை பொழிந்து விடவில்லை. அவளுடைய அதிசயப் பொறுமை எல்லோருக்கும் தெரியவேண்டும் என்றே போலும், ஜூன் 18ந் தேதி பிள்ளையைப் பறிகொடுத்துவிட்டு, தினமும் சாந்தமாக இருவேளை தரிசனத்துக்கும் பஜனுக்கும் வந்து கொண்டிருந்த அந்தப் பெண்மணியைப் பதினெட்டு தினங்களுக்குப்பின் ஜூலை 7ந் தேதி மாலைதான் கூட்டத்தில் குறிப்பாகக் கண்டு கொண்டு விபூதி படைத்துக் கொடுத்தார். “விசாரப்படாதே! நான் மறுபடி பார்க்கிறேன்” என்றார். ஆறு தினங்களுக்குப் பின் அவளிடம் வந்து, “நீ மலேஷியாவுக்குத் திரும்பிப் போகலாம்” என்றார்.
அவள் அப்போது எப்படி ஆறித் திரும்பினாள்? இது போதாதென்று தமது லீலா நாடகத்தில் இவளுடைய புத்ர சோக ஸீனை பகவான் “ஒன்ஸ் மோர்” செய்தார் ஆம், அந்த சிவாவும் கண்ணை மூடிக்கொண்டு போனார். டாக்டர்களும் ஸாயி மிராகிளுக்கு ஸர்ட்டிஃபிகேட் தருமளவுக்குக் கான்ஸரிலிருந்து அதிசயமாக குணமடைந்து ஸுங்கை வே என்ற அவ்வூரில் ஸ்வாமியின் புகழைப் பரப்பி, அவர் விரும்பும் பொதுத் தொண்டும் அபாரமாகச் செய்து, அங்கே ‘பஜனை சேவை’ மன்றக் கட்டிடத் திட்டத்தின் முதல் கட்டத்தையும் பூர்த்தி செய்த மூத்த மகன் சிவா, தம்பியை தேடிக் கொண்டு அடுத்த ஆண்டே, மன்றத்தின் முதல் கட்டம் முடிவுற்ற மறுதினமே சிவலோகம் சென்றார். இதையும் அந்தத் தாய் தாங்கிக் கொண்டு ஸ்வாமியை தூஷியாமலும், துவேஷியாமலும் இருப்பதைப் பார்த்தால் புரியும், பாரத்தை எவ்வளவு லைட்டாகச் செய்யும் ‘லைட்னிங் ராட்‘ நம் பகவானென்பது.
எங்கள் ஊரிலேயே 29இப்படியொன்று பார்த்தேன். ஸ்வாமியிடம் பக்தி பூண்ட ஸ்ரீ ராமநாதன் தம்பதியர் நல்ல வயோதிகத்தில் காளைப் பருவப் பிள்ளை ஒருவனை எருமை வாகனனுக்கு பலி தந்திருக்கிறார்கள். அழத்தான் செய்தார்கள். மநுஷ்யரில்லையா? ஆனாலும் நான் பயந்த அளவுக்கு வெடித்துக் கதறவில்லை. பிதாவைவிட, உதரத்தில் பிள்ளையைத் தாங்கிய உத்தமி சாந்தமாக இருந்தாள். தமக்குக் கர்மம் செய்ய வேண்டியவனுக்குத் தாமே கர்மம் செய்ய வேண்டிய கொடுமையில் அந்தப் பிதா, “ஸாயிராம், ஸாயிராம்” என்பதையேதான் பெரிய ஈம மந்திரமாக ஜபித்துக் கொண்டிருந்தார். அடுத்த வாரமே பஜன் ஒன்றில் அவர்களைக் கண்டபோது எனக்கு ஆச்சரியமாயிருந்தது. ஸ்வாமியின் படத்தைப் பார்த்தபடி அந்த அம்மாளும் பஜன்களைப் பின் மொழிந்து பாடுபவர்களோடு சேர்ந்துகொண்டாள். அப்படியேனும் கண்ணீருகுத்துக் கதறிப் பாடினாளா? இல்லை. எப்போதும் போல் ஸஹஜமாகத் தாளம் போட்டபடிதான் பாடினாள்!
30அம்பத்தூரில் வசித்தபோது எழுதியது.
அந்தத் தம்பதியரிடமே நான் இதை சிலாகித்துச் சொன்னேன். “எங்களைச் சொல்கிறீர்களே, நாங்கள் ஒன்றும் அப்படி ஆறித் தேறிவிடவில்லை. உள் வேதனை அடியோடு போகத்தானில்லை. நிஜமாகவே பூர்ணமாகப் புத்ர சோகத்தை வென்ற இன்னொருத்தரை ஸ்வாமியே ஒரு ஸதஸில் எல்லோருக்கும் காட்டினார். அதன் பின்னும் அவரளவுக்கு எங்களுக்கு விரக்தி வரவில்லையே என்று தானிருக்கிறது” என்று அவர்கள் சொல்லி, அந்தப் பரம விவேகி பற்றிச் சொன்னார்கள்.
அவர் ஆந்திரத்தைச் சேர்ந்த ஒரு வயதான சாஸ்திர பண்டிதராம். பிரசாந்தி நிலய வைதிக விழாக்களில் பங்கு பற்றுபவர். அவருடைய புதல்வர் நல்ல யௌவனத்தில் காலகதிக்கு ஆளானார். அச்சமயம் சுற்றுப் பயணத்திலிருந்த ஸ்வாமி, சாஸ்திரக்ஞரான கிழவனாருக்கு இப்படிப்பட்ட சோகம் நேர்ந்ததே என்று அவரைத் துக்கம் விசாரித்து ஆறுதளிக்கச் செல்வதாகக் கூறித் தாமே அவருடைய வீட்டுக்குச் சென்றார். ஆனானப்பட்ட பகவான், அப்போது ஏமாந்தார்! இவர் விசாரிப்பதற்கு அங்கு துக்கம் இருந்தால்தானே? இவர் ஆற்றுவதற்கு அங்கு புண் இருந்தால்தானே?
உள்ளே நுழைந்த ஸ்வாமி சாஸ்திரிகாருவிடம், ‘அப்பாயி‘ போனது பற்றி ஏதோ தொடங்க, அவர் ஓடோடி வந்து ஸ்வாமியின் திருவடிகளைப் பற்றிக் கொண்டார். பாசப் பசையில்லாத ஸ்பஷ்டமான குரலில், “ஸ்வாமீ! தந்தை பிள்ளை இத்யாதி பந்தம் எதுவும் நிரந்தரமில்லை. என்றோ ஒரு நாள் இருவரில் யாரோ ஒருவர் போய் அந்தப் பற்று விட்டுப்போக வேண்டியதுதான். அதைப் பற்றி என்ன வந்தது? எந்த நாளும் விடாத பற்றான இந்த உங்கள் பாதங்களைப் பற்றிக்கொண்டிருக்கிறேனே, இது போதாதா? இதுதான் என்னை விட்டு நீங்காமல் செய்துகொள்ள வேண்டும்” என்றார்.
இந்த பக்தி வைராக்ய சிகர நிகழ்ச்சியை பகவானே புட்டபர்த்தியில் நடந்த ஒரு விழாவில் கூறி, “இதோ உட்கார்ந்திருக்கும் இந்த சாஸ்திரிதாம் அப்படிச் சொன்னார்” என்று காட்டினாராம்.
இவராவது வேதாந்த சாஸ்திரங்கள் படித்தவர். அதோடு ஆணாகப் பிறந்தவர். மடியாலா நாராயண பட் போன்ற ஒரு புத்ர ரத்னத்தைப் பெற்றெடுத்துப் பறியும் கொடுத்த அந்த எளிய அன்னையைச் சொல்லுங்கள்!
மங்களூருக்கருகே அலிகேயிலும், சிக்கபலாபூரை அடுத்த முத்தன்ஹள்ளியிலும் ஆன்மிக கலாசாரங்களோடு இணைந்த அரிய கல்வித் திட்டம், ஏழையருக்கும் உதவும் விதத்தில் ஹாஸ்டல் முதலான வசதிகளுடன் அமலாகி வருவதை ஸாயி பக்தர்கள் அறிந்திருக்கலாம்.
இதற்குக் காரண புருஷர் ஸ்வாமியின் நிஜதாஸரான கொடை வள்ளல் நாராயண பட்தான். அப்பேர்ப்பட்ட பிள்ளையை எப்பேர்ப்பட்ட சூழ்நிலையில் அந்தத் தாய் இழந்தாள் என்ற கொடூரத்தைப் பாருங்கள்.
அலிகே ஸ்தாபனத்தில் அன்று முக்யத்வம் வாய்ந்த ஒரு விழா. வழக்கம்போல் அதில் ஸாயிபஜன் முதலியன திட்டமிடப்பட்டுள்ளன. ஸ்வாமி படத்தை மையமாக வைத்துத்தான் கொண்டாட்டம் நடக்கிறது. ஸாயி ஸ்தாபனப் பிரமுகர்கள் பங்குகொள்ள வந்துள்ளனர். பகவானிடமிருந்து ஆசியும் ஆதேசமும் பெற்று விழாவுக்கு வந்து கொண்டிருக்கிறார் ஸ்ரீ பட். இந்தத் தருணத்தே விதி தேவதை விழாவின் மீது விழுந்து பிடுங்கிவிட்டது. விழாவுக்கு வந்திறங்க வேண்டிய பட் வழியிலே கார் விபத்துக்குள்ளாகி கோர மரணம் அடைந்துவிட்டார். விழவுக்குப் பதில் இழவு!
ஸ்வாமிக்கு விஷயம் தொலைபேசியில் தெரிவிக்கப்பட்டதா, அல்லது அவராகவே அறிந்தாரா என்பது நினைவில்லை. எப்படியானாலும், ஸ்வாமியிடமிருந்து அலிகேக்குத் தந்தி பறந்தது. பட் தம்மை அடைந்து விட்டதாகவும், அவரது தாயையும் தாரத்தையும் உடனே தம்மிடம் அனுப்புமாறும் தந்தியில் கூறியிருந்தார். ‘வயதான ஒரு தாய் வயிறெரிகிற வேளை, சீரும் சிறப்பும் கொண்ட மனையாள் சுமங்கலித்வம் இழந்த காலை ஊரைவிட்டு ஊர் சென்று ஸ்வாமி தரிசனம் செய்ய இதுவா சமயம்?’ என்று பொதுவில் தோன்றும். ஆனால் ஸ்வாமி விஷயம் அலாதியானதாயிற்றே! மகத்தான சோகத்தைப் பெருமளவு மென்று விழுங்கிக் கொண்டு கிழத் தாயும் அன்றுவரை ராணியாக இருந்த பத்தினியும் புட்டபர்த்திக்குப் புறப்பட்டார்கள்.
தொலைவிலேயே அவர்களுக்கு இவ்வளவு தெளிவு தந்த பகவான், ஸாக்ஷாத்தாக நேரில் நின்று நெஞ்சாழத்திலிருந்து ஆறுதலளித்தபோது புத்ர சோகப் புண்ணும், வைதவிய வேதனையும் மறைந்தே போயின என்று சொல்லவும் வேண்டுமா?
ஆனால் சொல்ல வேண்டிய விஷயம் வேறொன்று உள்ளது. வழியில் (முத்தன்ஹள்ளியில் என்று நினைக்கிறேன்) இவர்களுக்கிருந்த ஓய்வு விடுதியில் சிறிது இறங்க வேண்டியிருந்தது. உள்ளே நுழைந்து சுவரைப் பார்த்த கிழவிக்குச் ‘சொரேல்‘ என்றது. அங்கு மாட்டியிருந்த ஸ்வாமி படத்தைக் காணவில்லை! காரியஸ்தரைக் கூப்பிட்டு விசாரித்தாள். “நம்ம யஜமானரை இப்படிப்பட்ட கோர மிருத்யுவிலிருந்து காப்பாற்றாத இவர் என்ன ஸ்வாமி என்று தோன்றியதால் நான்தான் படத்தை எடுத்து அதோ போட்டுவிட்டேன்” என்றார் காரியஸ்தர்.
“நன்னாயிருக்கே! நம் கர்மாவுக்கு பகவானைப் பிணைப்படுத்துவதாவது!” என்று சொல்லிக்கொண்டு அந்தத் தாய் தாய்மையை பக்திக்கு ஆஹுதி செய்துவிட்ட தியாகி கழற்றியெறியப்பட்டிருந்த படத்தை எடுத்து வந்து தன் கையாலேயே மீண்டும் அங்கு மாட்டினாள்! பிள்ளையின் உடல் போனதில் அதிகம் பாதிப்புறாத தாய் ஸ்வாமியின் படம் போனதில் பாதிக்கப்பட்டிருக்கிறாள்!
இதுவரை புத்ர சோகம் தீர்த்ததைப் பார்த்தோம். புத்திரர்களின் சோகம் குறித்தும் ஒன்று அண்மையில் எங்கள் ஊரில்31 பார்த்தேன். அந்தக் குடும்பமே ஸாயி பக்தியில் ஊறியிருந்தது. அது மட்டுமின்றி, இந்நாளில் அபூர்வமாகிவிட்ட அரிய முறையில் பெற்றோரிடம் மக்கள் இறுகிய அன்பு வைத்திருந்தார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு தொண்டுள்ளம் மிக்க தாயாரை ஸ்வாமி அந்த மக்களிடமிருந்து பறித்தபோது பக்தி நீடிக்குமா என்று எண்ணினேன். ஏனெனில் அது எல்லா வீடுகளையும் போலின்றி அதில் உடற் கோளாறுள்ள ஒரு பிள்ளையும் பெண்ணும் இருந்தார்கள். அவர்களுக்குத் திருமணம் நடப்பது சந்தேகம் என்ற நிலையில் இருந்தார்கள். இப்படிப்பட்ட குடும்பத்தின் சிறகை ஒடித்துவிட்ட ஸ்வாமியிடம் வீட்டுத் தலைவரான பட்சி ஒட்டியிருக்குமா என்று ஐயுற்றேன். நான் நினைத்தது, நல்ல வேளை, பொய்யாயிற்று! மெய்யடியரான தந்தையையும் தனயர்களையும் பக்தி விடவில்லை.
32அம்பத்தூரில் வசித்தபோது எழுதியது.
பிறகு தகப்பனாருக்குப் புற்று நோய் கண்டது. எந்தக் குழந்தைகளும் அப்படிக் கவனிக்க மாட்டார்கள் என்னும்படிப் பிள்ளைகளும் பெண்களும் சுசுரூஷை செய்தார்கள். அலையாக அலைந்து ஸ்வாமியின் பிரஸாதம் பெற்று வந்து கொடுத்தார்கள். இச்சமயத்தில் கோளாறு இல்லாத ஒரு மகனுக்கும் மகளுக்கும் கலியாணம் நிச்சயமாகி நாளும் குறிக்கப்பட்டது. ஆறு மாதம் பின்பே தகுந்த நாள் கிடைத்தது. தந்தை சொன்னார்: “நான் ஸ்வாமி பாதத்தில் சேரவேண்டியதுதான். ஆனாலும் ஞானமோ, அஞ்ஞானமோ, ஒரு ஆசை மட்டும் விடவில்லை. இந்த இரண்டு கல்யாணங்களையும் கண்ணால் பார்க்கவேண்டும் என்று இருக்கிறது. அவர்களும், ‘அம்மாதான் போய் விட்டாள், அப்பாவாவது இருக்கவேண்டும்‘ என்று ரொம்பவும் வேண்டிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் ஆறே ஆறு மாஸத்துக்கு ஸ்வாமியிடம் உயிர்ப்பிச்சை கேட்டுக் கொண்டிருக்கிறோம். அப்புறம் திருவடிகளில் சேர்த்துக் கொள்ளட்டும்.”
இத்தனை தெளிவாக, தர்ம நியாயமாக, பக்குவமாகக்கூடப் பிரார்த்திக்க முடியுமா என்று வியந்தேன். கிருபாஸிந்து இந்த அற்ப பிட்சை நிச்சயம் போடுவார் என்று உறுதிகொண்டேன்.
ஏமாற்றி விட்டார்! அடுத்த வாரமே அந்த நல்ல மனிதரைத் திருவடியில் சேர்த்துக் கொண்டுவிட்டார்.
அவர் கதி கடைத்தேறியது. ‘தாயுமிலி, தந்தையிலி‘யான மக்கள்? ‘அவர்களுடைய இள ரத்தத்துக்கு ஸ்வாமியே அம்மை–அப்பன் என்பது புரியமுடியுமா? கர்மக் கணக்கை ஒரு நிலையில் தம் கருணையால் அவர் குறைப்பதில்லை என்பது அவர்களுக்கு எடுபடுமா?’ என்று வியாகுலமடைத்தேன். ஆனால் ஸ்வாமி குலதனமாக அவர்களுக்கு இருந்த பக்தியைக் காத்துத் தந்து விட்டார்! முன்பு போலவே இப்போதும் இளம் தலைமுறை சற்றும் ஸாயிபக்தியில் தளராது பஜனையும் பூஜையும் விடாமல் செய்கிறது.
***
இதுவரை சொன்னவர்களெல்லாம் ஸ்வாமியிடம் ஸ்தூலத்தில் நெருங்கிய பழக்கமுள்ளவர்கள்; அல்லது பன்முறை நேரில் தரிசித்தாவது இருக்கிறவர்கள். பத்தாயிரம் காவதங்களுக்கு அப்பால் அவரைக் காணாதே கனிந்த ஒரு பெண் குழந்தையை, பொன் குழந்தையையும் அவளுடைய பரிபக்குவத் தாயையும் பார்க்கலாம் இப்போது.
அமெரிக்காவில் ஸாயி ஸ்தலங்களில் முக்யமான ஒன்றாக விளங்கும் ஸான்டா பார்பாராவில், ஸத்ய ஸாயி பாலவிகாஸில் ஒரு குத்துவிளக்காக இருந்தாள் பதினாலு வயது லின். அத்தனை பட்டையும் ஜொலித்த அரிய வைரம் அவள். வீட்டில் பொறுப்பாகக் காரியம் செய்வாள். ஈசனைப் பெற்ற ஈச்வரம்மா தினத்தன்று தன்னைப் பெற்ற தாய்க்குத் தானே காலை உணவு தயாரித்துப் பரிமாறுவாள். தந்தையின் ஆபரேஷனின்போது நர்ஸுக்கு மேல் நர்ஸாகப் பணிவிடை செய்தாள். பள்ளியிலும் ‘சிறப்பு மாணவி‘ எனப் பெயர் எடுத்தாள். ஸாயி பஜனை கருத்துருகிச் செய்வாள். ஸத்ஸங்கத்தில் பஜன் செய்வதோடு அந்தச் சிறு வயதிலேயே நிஸ்ஸங்கத்திலும் பற்றுக் கொண்டு, ஏகாந்தத் தியானமும் செய்வாள். அல்லது, தனியே அமர்ந்து ஸ்வாமி பற்றி மணி மணியாகக் கவிதை எழுதுவாள். தன்னுடைய பக்தியாலேயேதான் தாயையும், இரண்டு தம்பிகளையும் தாயான நம் தம்பிரானின் பக்திச் சுழலில் இறக்கிவிட்டாள்.
இப்படிப்பட்ட பிஞ்சில் பழுத்த பெண்ணுக்கு ஏன்தான் மரங்களில் ஏறியிறங்கும் சேஷ்டையில் ஆர்வமிருந்ததோ?
1975 தசராவின்போது ஸான்டா பார்பாராவில் அமெரிக்க பக்தர்கள் ‘சண்டி‘ எனும் ‘தேவி மாஹாத்மியத்தைப் பாராயணம் செய்தார்கள் என்றால் நமக்கு ஆச்சரியமாயிருக்கிறது. அப் பெரியவர்களோடு குழந்தை லின்னும் சேர்ந்து கொண்டாள் என்றால் இன்னம் வியப்பாயில்லை? பாராயண முடிவில் அம்பிகைக்குப் புஷ்பாஞ்ஜலி செலுத்தும்போது அவளுடைய கண்கள் முத்துப் பெருக்கினவாம். அதற்கு முன் ஆண்டும், அந்த ஆண்டும் சிவராத்ரியன்று கணமும் கண்ணயராமல் தியானமும் பிரார்த்தனையும் பஜனையும் செய்தாள். அடுத்த ஆண்டு அவள் இந்த உலகில் இல்லை.
அவளைப் பற்றி எல்லோரும் பெருமைப்பட்டுக் கொண்டாலும் அவளுக்கு ஒரு குறையிருந்தது. ‘ஏடாகூடமாக ஏதேனும் செய்யும் தன்னுடைய தம்பி டேவிட் மீது தனக்கு இப்படிக் கோபம் வருகிறதே! சில ஸமயங்களில் அவனிடம் போட்டி மனப்பான்மை ஏற்படுகிறதே‘ என்று மிகவும் வருந்தினாள். தனக்கு எத்தனையோ அருள் புரியும் ஸ்வாமியிடம் இந்த தோஷத்தைப் போக்கும்படி மன்றாடினாள்.
சிவராத்ரியாகி ஆறு வாரங்களுக்குப்பின் ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று லின்னின் பொறுமையைச் சோதிக்கக் கூடிய ஒரு காரியத்தை டேவிட் செய்து விட்டான். லின் தனக்குப் பிடித்தமான செவ்வூதா மசியில் முத்து முத்தாக எழுதி வைத்திருந்த பிரார்த்தனை நோட்டுப் புஸ்தகத்தை அன்று காலை ஓம்காரத்தின்போது கேந்திரத்துக்கு எடுத்துப் போன டேவிட் எங்கோ தொலைத்துவிட்டான். எவருக்கும் சினம் ஏற்படக்கூடிய அந்தச் சூழலில் லின் மகா பொறுமையோடு, “அதனால் பரவாயில்லை. கேந்திரத் தலைவர் புது வீட்டுக்குப் போகிறார். அதையொட்டி நானும் புது நோட்டுக்குப் போகிறேன்!” என்றாள். மறுநாளே சித்ரகுப்தனின் நோட்டில்தான் புது ஏட்டுக்குப் போகப் போவதையும், அதுவே மெய்யான வீடு என்பதையும் அவள் அப்போது அறிந்திருப்பாளா?
தம்பியிடம் அவள் இவ்வளவு சகிப்புத் தன்மையுடன் இருந்ததைப் பார்த்த அன்னை, “பார்த்தாயா? பாபா உன் பிரார்த்தனைக்குப் பதில் கொடுத்து விட்டார்” என்றாள். “நான் எப்போது பாபாவிடம் போவேன்? ரொம்பவும் ஆசையாயிருக்கிறது” என்று தவிக்கிற பெண்ணுக்கு அந்தப் பிரார்த்தனையையும் அவர் நிரந்தரமாக நிறைவேற்றும் நாள் வந்துவிட்டது என்று அம்மாக்காரி அப்போது நினைத்திருக்க முடியாதுதான்.
மறுநாள் பிற்பகல் தன்னுடைய மதுர குணத்துக்கேற்ற மதுரக் குரலில், “ஜூபிடர், ஜூபிடர்! த்ஸொ… த்ஸொ!” என்று நாயை அழைத்தபடியே வெளியே போகும் லின்னைக் கண்ட தாய்க்கு மகளைப் பற்றிப் பெருமிதம் விம்மி வந்தது. ‘பூங்காவில் மரமேறி விளையாடத்தான் போகிறாள். போகட்டும். இதொன்றிலாவது விளையாட்டுப் பெண்ணாயிருக்கிறாளே!’ என்று மகிழ்ச்சியடைந்தாள்.
ஸ்வாமியின் திருவிளையாடல் நாடகத்தில் காட்சி மாறியது.
முக்கால் மணியில் அண்டைவீட்டார் அலறிப் புடைத்துக் கொண்டு தாயிடம் வந்தனர். லின் மரத்தின் மேலிருந்த போது டேவிட்டை ஒரு நாய் கீழே துரத்தி வருவதைப் பார்த்தாளாம். தம்பியைக் காக்க வேண்டும் என்ற பதைப்பில், பாதி முறிந்த ஒரு கிளையில் காலை வைத்து இறங்கப் பார்த்தாளாம். அது முற்றும் முறிந்துவிட, மாணிக்கமான மகள் செங்குத்தாக விழுந்து விட்டாளாம்.
பதறி ஒடிய தாய், “மம்மி, மம்மி” என்று லின் அழைக்கக் கேட்டாள். தான் பக்கலில் இருப்பதை மகள் பிரக்ஞையோடு புரிந்து கொண்டதில் ஒரு திருப்தி அடைந்தாள்.
பரம சாந்தமாகப் படுத்திருந்தாள் லின். அத்தனை உயரத்திலிருந்து விழுந்தும் கடுகளவுகூட வலியில்லாமலிருந்தாள். வலியை வலிந்தேற்கத்தான் புட்டபர்த்தியில் ஒரு வல்லுநன் இருக்கிறானே! அவனைத்தான் ஆழ நினைத்தாள் தாய். ஆனால் ஏனோ அவளது பிரார்த்தனை, “லின்னின் உயிரைக் காப்பாற்றித்தா” என்று அமையாமல், “பாபா, தயை செய்து லின்னோடு இருங்கள், தயை செய்து லின்னோடு இருங்கள்” என்றே அமைந்தது.
ஒரு மணிக்குப் பின், பாதிரியார் பிரார்த்தனை சொல்ல, லின் என்ற பொன்னின் உடல் கத்தோலிக்க வைத்யசாலையிலிருந்து வண்டியில் வெளிக்கொணரப்பட்டது.
ஒரு கணம் மரத்தே போனாள் தாய். உணர்வு மீண்டதும் பாபா நினைவுதான் வந்தது. ‘எல்லாம் சிதறிப் போச்சா? இல்லை, சேர்த்துத் தருவாயா?’ என்று பாபாவைக் கேட்டாள். அடுத்த கணம், இன்று குருவாரம்; பாபா தினம்‘ என்ற எண்ணம் பாய்ந்தது. அவ்வளவில் ஓர் ஆறுதல் மேகம் உள்ளத்தில் பூஞ்சிதறல் தெறித்தது. இரண்டு மணிகளுக்குப் பின் கேந்திரத்தின் குருவார ஸங்கீர்த்தனம் மகளின் ஆவியை மேலே மேலே தூக்கிச் செல்வதாக உணர்ந்தாள். “ஜீவ் யாத்ரா மே(ம்) ஸாத் ரஹோ பாபா” என்ற கட்டத்தைத் தாண்டி “பார் உதாரோ நையா மோரி” என்னும் பிரார்த்தனையை நிறைவேற்றிக் கொண்டிருந்தார் “நல்ல கப்பல்காரர்!”
இங்கே தாயை மட்டும் சோக ஸமுத்திரத்திலிருந்து முற்றிலும் அக்கரை சேர்க்கவில்லை. அன்றிரவு அவள் உறங்கவேயில்லை. ஆனால் அவளுடைய வருத்தம் மகள் போய்விட்டாளே என்றல்ல; மகளைப் போக்கிவிட்ட ஸாயியின் மீதுமல்ல. ஸாயியை இறுதியில் நினையாமலே மகள் மாண்டாளோ என்றுதான் வருத்தம்!
மறுநாள் காலை அவளை இந்தத் தத்தளிப்பிலிருந்து கரை சேர்த்துவிட்டார் கருணாமூர்த்தி, லின்னின் அறைக்குள் நுழைந்த தாயாரின் கண்முன் மகளுடைய டெஸ்க் மீதிருந்த ஒரு காகிதம் விரிந்தது. புது நோட்டு வாங்காததால் தனிக் காகிதத்தில் எழுதியிருக்கிறாள். ‘பூங்காவுக்குப் புறப்படுமுன் ஏதோ எழுதினாளே, அதுதான் இது.’ லின்னுக்குப் பிடித்தமான செவ்வூதா மசியில் முத்தெழுத்துக்கள் மின்னின: “ஹே பிரபோ! எனக்கு அமைதியான நித்திரை தந்து நித்ய சாந்தியும் சாச்வத சுகமும் அருளுவதான உன் மடியை நான் நாடி அடைவேனாக!”
பதினாலு வயசுப் பச்சைக் கொழுந்துவிடுத்த இந்த வேண்டுதலை வியந்த பாதிரியார் நினைவுச் சடங்கை இந்த வாசகத்தோடேயேதான் தொடங்கினார்.
நினைவுச் சடங்கு நடந்தபோது லின்னின் அறையில் கமழ்ந்த சாந்தத்தை கையால் பிடிக்கலாம் போலவே வந்திருந்தவர்கள் உணர்ந்தனராம்! எதிர் பாராமல் அப்போது வந்த பாபாவின் பக்தரான வீணைக் கலைஞர் ஸ்ரீ வேமு முகுந்தா நெஞ்சையுருக்கும் கானாமுதம் படைத்தார். முடிவிலே, சண்டி பாராயணம் செய்து கண்ணீர் சோர அம்பிகைக்கு மலரிட்ட அந்த அரும்புப் பெண்ணுக்கு மிகவும் பிடித்த “துர்கா லக்ஷ்மி ஸரஸ்வதி ஸாயி ஜகன்மாதா” என்ற பாடலை அவர் இசைத்தபோது, அந்த மஹாமாதா மகளை மடியிலே சேர்த்துக் கொண்டதாக உறுதிப்படுத்தவே இச்சமயத்தில் இந்த வீணை வித்வானை அனுப்பியிருக்கிறாளென்று பெற்ற தாய் புரிந்துகொண்டாள்.
பாபாவை அறியாதவர்களும் அச்சடங்குக்கு வந்திருந்தார்கள். அவர்கள் துக்கம் விசாரித்தார்கள். இந்தச் சிறிய வயதிலேயே பாபாவை எங்கள் மகள் இதயத்துக்குள் அடைந்து, அவதாரனை அன்பு செய்யக் கொடுத்து வைத்திருந்ததையும், இப்போது அவர் அவளுடைய பரிசுத்தமான உயிரைத் தன்னிடமே உயர்த்திக் கொண்டிருப்பதையும் நான் அவர்களுக்கு எப்படிப் புரியவைக்க முடியும்? அன்று என் கண்ணில் வடிந்ததவ்வளவும் ஆனந்த பாஷ்பமே, பக்தி தாரையே” என்கிறாள் லின்னின் அன்னை. ஒரு தாயை மகளின் ஈமச் சடங்கில் “ஆனந்த பாஷ்பம்” வடிக்க வைக்கும் சதுர் எந்தப் புராணத்திலேனும் கேட்டதுண்டா?
இன்னுமொரு விந்தை. லின் தன் தாயையும் இரு சோதரரையும் பாபாவிடம் ஈடுபடுத்தியதாக முன்பு சொன்னோம். ஆம், அவளுடைய தந்தை மட்டும் மசியவில்லை. பாபாவிடம் மட்டுமின்றி தெய்வம் என்ற ஒன்றிடமே நம்பிக்கையற்ற நாஸ்திகராக அவர் இருந்தார்.
இப்போது தெய்வமோ, பாபாவோ கருணை காட்டிக் குறுக்கிடாமல் மகள் பரிதாபச் சாவு கண்டதால் அவர் தம்முடைய நாஸ்திகத்தில் மேலும் ஆழ்ந்துவிட இடமேற்பட்டுவிட்டதல்லவா? ஆனால் நடந்ததோ இதற்கு மறு துருவமான மாறுதல்!
அவருக்கு ஒரு கனவு ஏற்பட்டதாம். “ஏற்படவில்லை; பாபாதான் அனுப்பினார்” என்கிறார். நாஸ்திகராக இருந்த இவர் அந்தக் கனவின் மூலம் தமக்குள்ளேயே அந்தராத்மாவாக தெய்விகம்தான் இருக்கிறது என்று அறிவதற்கு லின் திறவுகோல் போட்டு விட்டாளாம்! மகளின் மரணம் குறித்து ஒரு மகரிஷிகூடச் சொல்ல முடியாத பக்குவ வாசகத்தை, அவளைப் பெற்றெடுத்தவளிடமே சொன்னார், அதுவரை நாஸ்திகராக இருந்தவர்: “லின்னின் மரணம் எனக்கு வரப் பிரஸாதமாயிருக்கிறது… இன்று நான் தெய்வத்தை நம்புபவன்”. இதைக் கேட்டு பெற்றவளும், “லின்னின் வாழ்வோடு அவளுடைய சாவும் சேர்ந்து பாபாவின் ஒத்திசையில் ஓர் அழகான தனிப் பாடலாகிறது” என்கிறாள்!
ஸ்வாமி இடிதாங்கியாக இருந்து துன்பத்தைத் தாங்குவது மட்டுமில்லை. இடியையே இன்மலர்ச் சொரியலாக மாற்றிவிடுகிறார். துன்பத்தில் துடிக்க வேண்டியவர் ஆத்மிய இன்பங்களில் திளைக்குமாறு செய்கிறார்.
***
ஆத்மியம், கீத்மியம் எல்லாம் இருக்கட்டும். குழந்தைத்தனத்தைச் சொல்லி முடிப்பதுதான் நம் லீலா பாலருக்குப் பொருத்தம்.
தந்தை, மகன் இருவருமே ஸ்வாமியின் ஆஸ்தானத்தில் முக்யப் பொறுப்புக்கள் பெற்றுள்ள ஓர் உயர்குடும்பம். இவர்களில் மகனாருடைய பிள்ளையொன்று இளசில் சருகாகி உதிர்ந்தது. அதன் பாட்டனாரும் பிதாவும் உடலத்தோடு புட்டபர்த்தி சென்றனர். அக்ஷராப்யாஸம், உபநயனம் முதலியவற்றுக்காக ஸ்வாமியின் ஸ்தலம் போகிறவர்கள் அநேகரிருக்க இவர்கள் அந்திம ஸம்ஸ்காரத்துக்காகப் போனார்கள்! ஸ்வாமியும் சுப விழாக்களுக்குப் பரிசங்கள் தருவது போலவே இப்போது உடலுக்குப் போர்த்தும் ஆடை உள்பட எல்லாம் தாமே வழங்கினார். மந்த்ராக்ஷதை ஸ்ருஷ்டித்துத் தூவுவது போலவே வாய்க்கரிசி கொடுத்தார்.
சித்ராவதியில் சிதை தணியுமுன், பாட்டனாரும் பிதாவும் புட்டபர்த்தியிலிருந்து புறப்படு முன்பே, அவ்வீட்டுப் பெண்டிரின் சித்தச் சித்ரவகையைத் தணிப்பதற்காக பகவான் புறப்பட்டு அவர்களது இல்லத்துக்கு வந்து சேர்ந்தார். ஆனந்த கீதம் பாடிக் கொண்டே நுழைந்தார் ஆழ்ந்த துயர் கப்பிய வீட்டிலே!
பெற்றவள் புலம்பிக்கொண்டு கிடந்தாள். “ஸ்வாமி வந்திருக்கேன்; ஸந்தோஷமாயில்லாம அழறதைப் பாரு” என்று சொல்லிக்கொண்டே ஸ்வாமி உள் அங்கணத்துக்கு வந்தார். பொருத்தமில்லாத அந்த வேடிக்கை வார்த்தைகளே எப்படியோ புத்ரசோகத்துக்கு வெடி வைத்து விட்டன! மிரகிள்காரர்தான் இந்த ஸாயிபாபா!
செல்லப் பேரன் மண்ணாகி ஒன்றரை நாள்கூட முடிந்திராத அப்போது பாட்டியம்மைக்கு அந்த நினைவேயில்லை. யாரும் நம்பமாட்டார்கள் ஆனால் அந்தப் பெருமாட்டியே சொல்வதால் நம்பத்தான் வேண்டும். ‘ஸ்வாமிக்கு பஜ்ஜி பிடிக்குமே‘ என்ற நினைவு உந்தித் தள்ளச் சமையலறைக்கு ஓடிக் கடலைமாவைக் கரைத்தாராம். அடுக்களை மேடையில் பஜ்ஜி போடத் தயாரானபோது யாரோ பக்கத்தே வருகிறார்கள் என்ற உணர்வில் அம்மையார் அவஸரமாகத் திரும்பினார், அவஸரத்தில் கடலைமாவுப் பாத்திரத்தைத் தடுக்கிவிட, அண்மையில் நின்ற ஐயனுக்கு அது சந்தனாபிஷேகம் செய்துவிட்டது!
பட்டங்கியெல்லாம் தெளித்துவிட்ட கடலைக் கரைசலை ஸ்வாமி குழந்தையாகத் துடைத்துக் கொண்டு நின்றாராம். குழந்தைக்கு அதில் சவரணை போதாததால் (இப்படித் தம்மைத் தாமே demiracle செய்து கொள்ளும் மிரகிளிலும் அவர் வித்தகர் ஆயிற்றே!) அம்மையார் பட்டங்கியை நறுவிசாகத் துடைத்து விட்டாராம். அவர் மனத்திலே ஆனந்தக் கடலைப் பொங்க விடவே கருணையில் கரைந்த பகவான் இப்படிக் கடலைமாவுக் கரைசல் லீலை செய்திருக்கிறார். அடடா, அந்தக் கோலத்தில் ஃபோட்டோ இல்லையே!
ஸ்வாமி வைராக்யத் தீ மூட்டி, எண்ணெயைக் காய்ச்சி, அன்புக் கடலை மாவில் நம்மைத் தோய்த்துப் போடும்போது சூட்டை மட்டும் தாமே வாங்கிக்கொண்டு விடுவார்; ஆயினும் குளிர்ந்து நிற்பார்! நாம் வேக்காட்டில் வெந்து போகாமலே பக்குவமாக மட்டும் ஆகி பஜ்ஜிப்போம்; அவரை பஜிப்போம்!