சத்ய சாய் பாபா – 21

21. ஸாயி ஸஹாயி

ல்லாயிரம் பக்தரைக் கண்காணிக்கும் ஸ்வாமி சிறிதும் பெரிதுமாக எத்தனை விதமான இடுக்கண்களிலிருந்து அவர்களைக் காத்தருளுகிறார் என்பதற்கு நிச்சயமாகக் கணக்கே இருக்க முடியாது. ஆகாச கங்கையில் சில விண்மீன்களாக இங்கு ஸாம்பிள் காணலாம்.

வைத்யநாத ஸாயி வழித்துணை நாதனாகச் செய்யும் ஸஹாயம் இந்த அருள்ஸூப்பர் மார்க்கெட்டில் ஒரு தனி டிபார்ட்மென்டாகும். ஓயா ஆசைகளின் விளைவாக மக்கள் மனத்தால் அலைப்புறுவதோடு உடலாலும் ஓயாமல் பிளேனிலும், ரயிலிலும், பஸ்ஸிலும், டூவீலரிலும் அலைவதில் உலகத்தில் விபத்துக்கள் பெருகி விட்டனவல்லவா? இவற்றில் வித்தகன் தலையீட்டால் விளையும் அற்புதக் காப்புக்கள் அனந்தம்.

கல்கத்தாவைச் சேர்ந்த ஸ்ரீ எஸ்.என். ஸிங்குக்கு ஸ்வாமி மோதிரம் சிருஷ்டித்துத் தந்தபோது, நமது கிங் தந்த ரிங்கை வாங்கிக்கொள்ள ஸிங்குக்கு இஷ்டமில்லை. மஹான்கள் மெடீரியலைஸ் செய்வது அவருக்கு ஏற்புடைத்தாக இல்லையோ, அல்லது தாம் ஆபரணம் அணிவது பிடிக்கவில்லையோ? ஏதேனும் பரிசு தரமாட்டாரா என்று ஏங்கி வாய்விட்டே கேட்கிறவர்களுக்குக் கொடுக்க மறுக்கும் குறும்பர், விருப்பமில்லாத ஸிங்கை வற்புறுத்தி மோதிரத்தை அணிவித்தார். “இது வெறும் ஆபரணம் என்று நினைக்காதே. இது ஒரு ரக்ஷை அல்லது தாயத்து போன்றதாகும். உனக்கு ஆபத்தோ, சிரமமோ எது ஏற்பட்டாலும் நான் கொடுக்கும் பரிசுப் பொருள் மூலம் அது எனக்குத் தெரிந்துவிடும். (ஸ்வாமியிடம் எந்தப் பரிசும் பெறாத லக்ஷோப லக்ஷம் மக்களின் இன்னலும் இடர்ப்பாடுங்கூடத்தான் ஸர்வ வியாபியான அவருக்குத் தெரிந்து தீர்த்து வைக்கிறார். ஆனாலும் தாம் தரும் பண்டத்தின் மூலம் விஷயமறிவதாகவும் அவரது லீலா நாடகத்துக்கு ஓர் அங்கம் வேண்டியிருக்கிறது!) இதை அணிந்துகொண்டால் உன் கஷ்டம் எதிலும் உடனே நான் கைகொடுக்க வழி ஏற்படும்என்றார்.

ஸிங் லண்டனுக்குப் போனார். அங்கே ஒருநாள் காரில் சென்று கொண்டிருந்தபோது திடுமெனத் தாம் நடுவீதியில் சொஸ்தமாக உட்கார்ந்திருப்பதை உணர்ந்தார்! என்ன நடந்ததென்றே ஒரு நிமிஷம் புரியவில்லை. புரிந்துகொண்டதும் பாபா அன்று சொன்னது நினைவு வந்தது. ஆம், ஒரு பெரிய கார் விபத்துக்காக்கும் அவர் ஆளாகியிருக்க வேண்டும்! இதோ அவர் பயணம் செய்த கார் அப்பளமாக நசுங்கிக் கிடக்கிறது!

மோதிரத்தைப் பார்த்தார். ஆஹாஹா! இவருக்கு ஒரு சிறு கீறலோ, காயமோ படாதிருக்க, மோதிரத்தில் பதித்திருந்த பகவானின் எனாமல் படம் துண்டு துண்டாக நொறுங்கியிருந்தது! ஸிங் தான் அப்படி நொறுங்கியிருக்க வேண்டும்! அதைப் படத்தில் ஸ்வாமியின் சக்தியம்சம் ஏதேனும் இருந்து அது வாங்கிக்கொண்டதா, அல்லது ஸ்வாமியேதான் தம் ஸ்தூல சரீரத்தில் அந்த நொறுங்கலுக்கு ஸமமான வேதனையை வாங்கிக் கொண்டிருந்திருப்பாரா? யாரே அறிவார்?

ஐந்து நிமிஷத்தில் வீடு சேர்ந்தார் ஸிங். அங்கே ஒரு தந்தி காத்துக்கொண்டிருந்தது. வாசகம்:

Be happy I am with you Do not worry about accident BABA. (ஸந்தோஷமாயிரு நான் உன்கூட இருக்கிறேன் விபத்தைப் பற்றி விசாரப்படாதே பாபா.)

இங்கே ஒரு விசித்ரம். ஐந்து நிமிஷத்தில் இவர் வீடு செல்ல,. அதற்கு முன்பே தந்தி காத்திருந்ததென்றால், ஸ்வாமி இந்தியாவிலிருந்து விபத்து நடக்குமுன்பே வருவதறிந்து தந்தி கொடுத்திருக்க வேண்டும் என்றல்லவா ஆகிறது? பின், தமது பரிசுப் பண்டம்தான் விபத்தை அறிவிக்கிறது என்றால் இது என்ன கதை? அல்லது அந்தத் தந்தியே தபால்துறை மூலமாக இந்தியாவிலிருந்து பிரிட்டனுக்குப் போகாமல், விபத்து ரக்ஷணை நடந்த அதே க்ஷணம் இவர் வீட்டில் ஸ்வாமியின் ஸ்ருஷ்டியாக உண்டாயிற்றா? “யாரே அறிவார்?” கேட்க வேண்டியதுதான்!

***

லேஷியாவில் பெடலிங் ஜாயாவைச் சேர்ந்தவர் சங் தை என்னும் சீனர். பிறப்பினால் மெதாடிஸ்ட் கிறிஸ்துவராயினும் சமய நம்பிக்கை இல்லாதவர். எனவே தம் குடும்பத்தார் உயிரோடுள்ள ஒருவரை, தலையும் வேஷமுமாக ஸத்ய ஸாயி பாபா என்று எங்கோ இந்தியாவில் உள்ள ஒருவரை, வணங்க ஆரம்பித்தது இவருக்குப் பிடிக்கவில்லை. அவர்கள் இவருக்குப் படியவில்லை. மனக்குமுறலில் காலம் சென்றது.

1976 ஜனவரி ஏழாந்தேதி இரவு சுமார் பத்து மணிக்கு பெடலிங் ஜாயாவிலுள்ள தமது மாமனாரின் வீட்டிலிருந்து ஸுபாங் புதுக் கிராமத்தில் உள்ள தமது பண்ணைக்கு ஸ்கூட்டரில் புறப்பட்டார் சங். சுமார் நாற்பது கிலோ கம்போஸ்ட் உரத்தையும் உடன் வைத்துக் கொண்டு சென்றார்.

சாலையில் ரிப்பேர் நடந்து கொண்டிருந்தது. வெளிச்சமே போதாத ஸுங்கை வே என்ற பகுதியில் மூன்றடி அகலமும் முப்பதடி நீளமுமுள்ளதாக வெட்டப்பட்டிருந்தடிட்ச்சில் ஸ்கூட்டர் தடாலென்று இறங்கியது. சங்கின் பாரத்தோடு நாற்பது கிலோ எருவின் எடையையும் தாங்க முடியாமல், கரடுமுரடுக் கல்மயமானடிட்ச்சுக்குள் ஸ்கூட்டர் ஆட்டமாக ஆட, அதிலிருந்து குதிப்பதொன்றே பிழைக்க வழி என்று சங் நினைத்து, குதிக்க இருந்த அந்த அயனான சமயத்தில்

தலையும் வேஷமுமாக எங்கோ இந்தியாவிலுள்ள யாரோ ஒருத்தரான ஸத்ய ஸாயி பாபா அந்தத் தலையிலிருந்து இடுப்பு வரை சங்குக்கு முன் அந்தரத்திலே தெள்ளத் தெளிய நின்றார்! தமது தலை வேஷத்தின் பின் புறத்தையும் சங்குக்குக் காட்ட விரும்பியவர் போல அப்படியே திரும்பிய பாபா, “டோன்ட் ஜம்ப்! டோன்ட் ஜம்ப்! பாலன்ஸ்! பாலன்ஸ்என்று ஆங்கிலத்தில் கூறியபடி அந்தர்தானமாகி விட்டார்!

விபத்தின் அதிர்ச்சியில் இந்தத் திடீர் தரிசனமும் இன்னோர் அதிர்ச்சியாகச் சேரவில்லை. மாறாக சங்குக்கு அது ஒரு நிம்மதியையும் தெளிவையும் தந்தது. உத்தரவுப்படி, குதிக்காமலே இருந்தார். ஸ்கூட்டர் ஒருசில அடிகள் தத்தித் தடுமாறிவிட்டுச் சாய்ந்தது. முகம், குறிப்பாகக் கீழுதடு, நிலத்தில்பட சங்கும் ஸ்கூட்டரோடு சரிந்தார். உதட்டிலிருந்து உதிரம் கொட்டியதும், இடது மணிக்கட்டு சற்றே சுளுக்கிக் கொண்டதும் தவிர அடியோ, காயமோ, எலும்பு முறிவோ எதுவுமில்லை. உதட்டிலும் துளிக்கூட வலி என்பதே இல்லை.

மறுநாள் அதை டாக்டர்கள் தைக்கும்போது மயக்கம் கொடுக்கக்கூட அவசியமிருக்கவில்லை. உயிராபத்தாக முடிந்திருக்க வேண்டியது எப்படி இவ்வளவு லேசாக முடிந்ததென்றும், அறுபத்து நாலு பிராயத்தினரான சங் எப்படி அதிர்ச்சியின் பாதிப்பின்றி இருக்கிறாரென்றும் வைத்தியர்கள் அதிசயித்தனர். தலைக்கு வந்தது தலைப் பாகையோடு போனதற்குக் காரணம், தலை வேஷக்காரர் அதைத் தலையில் தாங்கிக்கொண்டு முன்னும் பின்னும் திருப்பிக் காட்டியதுதான் என்று அவர்கள் எப்படி அறிய முடியும்?

சங் இதைச் சந்தேகமற அறிந்தாலும், இதற்காக ஒருவரை அவதாரமென்பதா என்று குழம்பினார்.

எட்டு மாதங்களுக்குப் பின் ஸெப்டெம்பரில் ஒருநாள் பிற்பகல் இரண்டரை மணி. மழை கொட்டிக் கொண்டிருந்தது. ஸுபாங் பண்ணையிலிருந்து மாமனார் வீட்டுக்குப் போய்க் கொண்டிருக்கிறார் நம் சந்தேகப் பிராணி. இம்முறை காரில் போகிறார். தாமே ஓட்டிச் செல்கிறார். திருப்பம் ஒன்றில் எதிரே கனவேகமாக வந்த ஒரு லாரி மழைச் சாலையில் சறுக்குண்டு சங்கின் காரை நோக்கிச் சரிந்தது.

சங் அமர்ந்திருந்த புறத்தின் இரு கதவுகளிலுமே மோதல் வேகம் தெரிந்தது.

அதே விநாடி அவர் முன்னே ஒரு ஜோதி தெரிந்தது. பாபாதான் ஜோதி ரூபத்தில் வந்திருக்கிறா ரென்று நன்கு புரிந்தது.

காரின் மீது சாய்ந்து அப்பளமாக்கியிருக்க வேண்டிய லாரி அதன் பின்னே சென்று தலை கீழாகக் கவிழ்ந்தது. அதற்குள்ளிருந்த மூவர், குனிந்து தவழ்ந்து கொண்டு வெளி வந்தனர்.

சங்குடைய காரின் இரு கதவுகளும், லாரிக் காரர்கள் எண்ணூறு டாலர் செலவழித்து ரிப்பேர் செய்ய வேண்டிய அளவிற்குப் படுமோசமாகச் சேதமாகியிருந்த போதிலும் காரே தூளாகாமல், விழாமல் தப்பியிருக்கிறது! அதை ஓட்டிச் சென்றவருக்கோ ஒரு உபாதை உண்டாகவில்லை!

ஸாயிநாதனைப் பற்றிக்கொண்டார் சங் தை.

***

ஸ்வாமிநூல் படித்தவர்கள், அவர்ரிஸர்வ்‘ (!) செய்து வைத்ததால் லிவர்பூலில் மெடிகல் ஸீட் பெற்ற டாக்டர் டி.ஜே. கதியாவை நினைவு வைத்திருக்கக்கூடும். (பகுதி 2, பக்கம் 61.) பிற்பாடு இவர் கிழக்காப்பிரிக்க டான்ஜானியாவிலுள்ள அருஷாவில்ஸெட்டில்ஆனார். 1974 மே ஐந்தாம் தேதி, டிரைவர் கார் ஓட்ட, இவர் முன் வீட்டில் அமர்ந்து மசாமே ஆஸ்பத்திரிக்குப் போய்க் கொண்டிருந்தார். பின் ஸீட்டில் மனைவியும் மற்றுமிரு பெண்களும் உடன் வந்தனர்.

அருஷாவிலிருந்து ஐந்து மைல் சென்றிருப்பார்கள். எதிரே வந்த டிரக் ஒன்றோடு இணைத்திருந்த டிரெயிலர் கழற்றிக் கொண்டது. அதைப் புரிந்து கொள்ளாமல் டிரக் டிரைவர் ஓட்டிவர, டிரக் கதியாவின் வண்டியைத் தாண்டிச் சென்றது. பின்னே இதுவரை வந்த வேகத்தின் உந்தலில் தன்னால் உருண்டு கொண்டிருந்த டிரெயிலர் டுமீலெனக் காரிலே மோதியது. விபத்தைத் தவிர்க்க எண்ணி அச்சமயம் இவரது ஓட்டுனர் காரைத் திருப்பியதால் டிரெயிலர் கதியா அமர்ந்திருந்த பக்கத்திலேயே பலமாகச் சாய்ந்தது.

வண்டியிலிருந்த மற்றவர்கள் வெளியே குதித்துத் தப்பினாலும் கதியாவின் வலது கால் எப்படியோ இசகு பிசகாக ஸீட்டுக்கு அடியில் சிக்குண்டு, கரும்பு உடைகிற மாதிரி ஐந்து இடங்களில் படபடவென்று முறிந்தது. கால் எலும்பு இடுப்பிலே பூட்டப்படும் இடத்தில் ஒரு திருகு திருகிக்கொண்டு, அது வேறு நரக வேதனை தந்தது. டாஷ்போர்ட் அவரது மார்பை அழுத்த, ஜன்னல் சட்டத்துக்குள் தலை மாட்டிக்கொண்டு பிராணாவஸ்தை கொடுத்தது. இந்த உத்பாத பரம்பரையாலும், அதிர்ச்சியாலும் தம் நாடித் துடிப்பும் சுவாஸமும் நின்று கொண்டே வருவதை டாக்டரான அவர் உணர்ந்தார்.

வெளியே பலர் சூழ்ந்து, “ஐயோ பாவம்! டாக்டருக்கு இப்படிப்பட்ட மரணமா ஸம்பவிக்க வேண்டும்? கடவுள் சித்தத்தை யார் தடுக்க முடியும்?” என்று அங்கலாய்ப்பதும் மங்கலாய் அவர் செவியில் விழுந்தது.

கடவுள் சித்தத்தை அவர்கள் கண்டார்களா? பிரக்ஞை தப்பியதாக வெளியில் தோன்றிய கதியா பிரசாந்தி நிலயத்தில் தாம் இருப்பதுபோல உணர்ந்தார். பாபா அவர் காதோடு காதாக “Get up! இல்லாட்டி கால் போயே போயிடும்என்று கிசுகிசுத்தார்.

பாபா, பாபாஎன்று கத்தியபடி அவர் வெளி உணர்வு பெற்றபோது, ‘ஆஹா, இன்னமும் அவருக்கு உயிர் இருக்கிறதேஎன்று மற்றோர் உவகையுற்றனர். காரின் மேல் சாய்ந்திருந்த பிரம்மாண்டமான டிரெயிலரை அப்புறப்படுத்தி அவரை மீட்க முயற்சி தொடங்கினர். அது அஸாத்ய முயற்சியே ஆயிற்று.

இதிலே ஏற்பட்ட ஆரவாரத்தையெல்லாம் அடக்கிக் கொண்டு அந்நாட்டு மொழியானகிஸ்வாஹிலியில்வழி விடுங்கள்என்று ஒரு கம்பீரமான குரல் ஒலித்தது.

இப்படி உரக்கச் சொல்லிக்கொண்டு, பலிஷ்டரான இன்னொரு ஆப்பிரிக்கரையும் உடன் அழைத்தவாறு வந்தார் வாட்டசாட்டமான ஓர் ஆப்பிரிக்கர். அவர்களைக் கண்ட மாத்திரத்தில் எதனாலோ, மற்றவர் அடங்கி அப்பால் நகர்ந்தனர்.

அப்பா, அவ்விருவருடைய சரீர பலத்தைத்தான் என்ன சொல்ல? ‘அசுரபலம் என்பது பொருந்தத் தானில்லை. அருள் பலம் எனலாம். கதியாவின் தலை மாட்டிக் கொண்டிருந்த ஜன்னலை ஆயுதம் ஏதுமின்றியே லாகவமாக வெட்டி எடுத்தார்கள். டாஷ்போர்டை அப்பால் தள்ளினார்கள். அவரது கால் புதைந்து போயிருந்த உலோகத் தட்டை உடைத்தார்கள். கனமானவற்றைத் தூக்க உதவும் ஜாக் ஸ்க்ரூ ஒன்றைப் பயன்படுத்தி அவர் இருந்த ஸீட்டைத் தூக்கி, எப்படியேனும் அவரை வெளிக்கொணரப் பிரயாஸைப் பட்டார்கள். அரைப் பிரக்ஞை, கால் பிரக்ஞையில் இவற்றை உணர்ந்த கதியா ஒரு சிறிது நீர் கேட்டுப் பருகியவுடன் முற்றிலும் உணர்விழந்தார்.

அப்புறமும் அவ்விரு ஆப்பிரிக்க பலசாலிகள் பாடுபட்டு மொத்தம் ஒன்றரை மணி நேரம் வியர்த்து விருவிருத்துப் போராடி, கடைசியில் கதியாவைக் காரிலிருந்து எடுத்து ஆம்புலன்ஸ் வண்டியில் போட்டார்கள்.

மறுகணம் அவர்களைக் காணோம்! ராம லக்ஷ்மணர்களாக இரட்டை உருவில் தியாகையரைக் காத்துக் கணத்தே மறைந்த கதைதான். “இப்படிப்பட்ட இருவரை நாங்கள் யாரும் அறியோம்என்று கூடியிருந்தவர்கள் கூறினார்கள்.

சிகித்ஸை பெற்று, ஐந்தாக உடைந்த கால் ஒன்றுகூடப் பெற்று, ஆயினும் தாமாக நடக்க வொண்ணாமல் கோலின் துணைகொண்டு நடப்பவராக வீடு திரும்பினார் கதியா. அபாரமாக உழைத்துத் தம்மைக் காத்த அவ்விருவர் வந்து பரிசு பெறமாட்டார்களா என்று எதிர்பார்த்துக்கொண்டேயிருந்தார். ஆனால் கொடுக்கவே பிறந்தவர் பெற்றுக்கொள்வதற்கு வருவாரா?

நாலாண்டுகளுக்குப் பின்தான் 78 ஏப்ரலில் கதியா ஸ்வாமியைச் சந்தித்தார், ஒயிட்ஃபீல்டில். இப்போதும் கோலின் துணையில்தான் அவரால் நடமாட முடிந்தது. ஸ்வாமி அவரிடம், தாம்தான் இரண்டு ஆப்பிரிக்கர்களாக வரவேண்டியிருந்தது என்று உறுதிப்படுத்தினார். ஒருத்தராக வந்து அவ்வளவு செய்திருந்தால் மானுடர் என்று கூடியிருந்தோர் நினைக்க மாட்டார்கள் என்றே இரட்டை வேஷம் போட்டார் போலும்! கால் எலும்பு முறிவு, மார்பிலும் முகத்திலும் சுமை அழுத்தியது முதலியவற்றையே கதியா அறிந்திருந்தாலும், இவற்றைவிட அபாயமாக அவரது முதுகெலும்பு நொறுங்கி விட்டிருந்ததாம். இதை ஸ்வாமி தெரிவித்தார். அதை மட்டும் மின்னல் வேகத்தில் உடனே சரி செய்துவிட்டு (இல்லாவிடில் உயிரே போயிருக்குமோ?), ஏனையவற்றுக்கு கர்மக் கணக்கை அநுசரித்துச் சற்று நிதானமாக நிவாரணம் தந்து, தாமும் வள்ளிசாக ஒன்றரை மணி படாத பிரயாசையெல்லாம் பட்டிருக்கிறார்! நாலாண்டுகள் கோலின் துணை பெற்றதோடு கணக்கு முற்றும் தீர்ந்ததை அக்கவுன்டன்ட்ஜெனரல் கண்டுகொண்டார் போலும்! இப்போது அடியாரின் வலது முழங்காற் பூட்டின்மீது திருக்கரத்தால் திருநீறு பூசி அவரைச் சுயமாக நடக்கவும் படியேறவும் சக்தியுள்ளவராகச் செய்தார் கதியாவுக்குக் கதியாக வந்த பதி.

இனி, விபத்துக் காப்பாக இல்லாமல் வேறு விதங்களில் ஸ்வாமி வழித்துணை நல்குவது பார்க்கலாம்.

***

ண்ட வந்த பிடாரியை ஊர்ப் பிடாரி விரட்டிய கதை நமக்குத் தெரியும். ஒண்ட வந்த பக்தர் ஊர்ப் பக்தரை மிரட்டிய புதுக் கதை இப்போது கேட்கலாம்.

ஸான்டா பார்பாராவைச் சேர்ந்த ஜான் எவர்ஸோல் என்பவர்தான் ஊர்ப் பக்தர் அதாவது ஸத்ய ஸாயியிடம் பக்தி உறுதிப்பட்டுவிட்ட பழவடியார். அவரது அலுவலக நண்பர் டோனி டி பாகோ பக்தியிலே ஒண்ட வந்தாலும் ஒட்ட மறுத்தார். பாபாவின் தெய்விகத்தில் அவருக்கு ஓயாமல் சந்தேகம் வந்துவிடும். எவர்ஸோலை கேள்விக் கணையால் துளைப்பார்.

ஓரிரவு வீடு திரும்புகையில் டோனியின் ஆட்டோ வண்டி. ‘ஸ்டார்ட்ஆக மறுத்தது. பெட்ரோலும் மின் விசையும் மோட்டாருக்குப் போய்ச் சேராததே உபத்திரவத்துக்குக் காரணம் எனக் கண்டார்.

ஸ்வாமி விபூதியை மோட்டார் மீது தூவுகிறேன்என்று அவருக்குப் பின்னே தம் காரில் சென்று கொண்டிருந்த எவர்ஸோல் முன் வந்தார். டோனி இளக்காரமாகச் சிரித்தார். எவர்ஸோலோ அவர் மறுபடி அதைக் கிளப்ப முயலுமுன் மோட்டாருக்கு விபூதி தாரணம் செய்துவிட்டார்.

முப்பதாண்டுகளுக்கு முன் பிரசாந்தி நிலயம் கட்டப்பட்டபோது நடுவிலே ஸ்டிரைக் செய்த க்ரேன் பிறகுதானே சமர்த்தாக வேலைக்குத் திரும்பிற்று? நம் அன்பர் அதை அறிந்திருந்தார் போலும்! அன்று நடந்த அதிசயம் இன்றும் நடந்தது! டோனியின் அடுத்த உதைப்பிலேயேடப் டப் டப் டப்என்று புறப்பட்டது ஆட்டோ! ஸாயி விளையாட்டோ?

அவரைத் தம் காரில் பின் தொடர்ந்தார் எவர்ஸோல்.

மைல் மைலாக எந்தத் தடங்கலுமின்றி ஆட்டோ சென்றது.

பிறகு டோனியின் வழியை விட்டுப் பிரிந்து எவல்ஸோல் தமது வீட்டுக்குத் திரும்ப வேண்டிய இடம் வந்தது. அதற்கப்புறம் டோனி இரண்டு மைல் போக வேண்டும். அவரது வண்டிகன்டிஷனில் இல்லாததால், தாம் இங்கே அவரை விட்டுத் திரும்பாமல் அவர் வீட்டை அடையும் வரையில் பின் தொடர்வதே முறை என்று எவர்ஸோல் எண்ணினார். ஆனால் டோனியோ திருப்பத்தைக் கண்டதும், நண்பரை அதில் செல்லுமாறு சைகை காட்டினார். ‘ரிஸ்க்எடுத்துக்கொள்ள விரும்பாத எவர்ஸோல் அதைக் கேளாமல் பின் தொடர்ந்தார்.

சிறிது தூரமே சென்றதும் டோனியின் ஆட்டோ சரக்கென நின்றது. மோட்டார் ஓசை கையால் பிடித்தாற்போல் நின்றதிலிருந்து, அவர் நிறுத்தவில்லை, வண்டியேதான் மக்கார் செய்துவிட்டது என்று தெரிந்தது. ‘நாம் பின் தொடர்ந்தது எவ்வளவு நல்லதாயிற்று? இல்லாவிடில் நடுத்தெருவில் நண்பன் தனியாக விடப்பட்டிருப்பானே?’ என்றெண்ணியபடி தம் வண்டியிலிருந்து இறங்கி அவரை நோக்கி எவல்ஸோல் விரைந்தார். அவர் தம்மை நன்றியுடன் வாழ்த்தப்போவதை உள்ளுக்குள் ஆவலாக எதிர்பார்த்தார்.

டோனியின் முகத்திலோ எள்ளும் கொள்ளும் வெடித்தது! எரிந்து விழுந்தார்: “என்ன காரியம் பண்ணி இருக்கிறாய், பார்! மோட்டார் மறுபடி நிற்கும்படிச் செய்து விட்டாய்! பாபா விபூதிதான் அதை நன்றாக ஓட்டிக் கொண்டிருந்ததே! அதில் நம்பிக்கையில்லாமல் நீதான் என்னவோ துணை செய்கிற மாதிரி, உன் வழியில் திரும்பாமல் என் பின்னே வந்தாய். உன்னுடைய நம்பிக்கைக் குறைவுதான் வண்டியை நிறுத்திவிட்டதுஒண்ட வந்தவர் ஊர்க்காரரை மிரட்டுகிறார்!

இந்த ஸம்பவத் துணுக்குக்குள் இருக்கிற உட்பொருள் அருமையானது.

அசோக வனத்தில் அநுமனை பிரம்மாஸ்திரத்தால் பிணித்த அரக்கர்கள் அதற்குமேல் செடிகொடிகளைக் கொண்டும் அவனைக் கட்ட, உடனே அதை அவமரியாதையாகக் கருதி பிரம்மாஸ்திரம் விலகிவிட்ட கதை நினைவு வருகிறது.

***

ஸ்வாமியின் அத்தாணிச் சேவகருள் முத்தாமணியாகத் திகழும் டாக்டர் பகவந்தம் அவர்கள் 1974 ஏப்ரலில் அமெரிக்காவுக்குச் சென்றிருந்தார். அங்கு பணிகளை முடித்துத் திரும்பும் சமயத்தில் அவருக்குஆம்னேஷியாநோயைப் போலப் பெருத்த ஞாபக மறதி ஏற்பட்டது. ஐயனும் அவரைப் பற்றி ஞாபகம் மறந்தாற் போலவே ஆட்டம் பார்த்தார். இந்தியாவுக்குத் திரும்புவதற்காக விமான நிலையத்துக்கு வந்த பகவந்தத்துக்குத் தூக்கி வாரிப் போட்டது! தம்மிடம் டிக்கெட்டோ, பாஸ்போர்ட்டோ, மற்ற பயண தஸ்தாவேஜிகளோ எதுவுமில்லாமலே விமானம் ஏற வந்திருக்கிறோம் என்ற அவலமான, அவமானமான நிலையைப் புரிந்து கொண்டார். ‘பரவாயில்லை, பயணத்தைத் தள்ளிப் போடலாம்என முடியாதபடி வெகு அவசரமாகத் திரும்ப வேண்டியிருந்தது.

அவர் தவியாகத் தவித்த அந்தக் கணத்தில் ஸ்வாமிக்கு அவரதுஞாபகம்வந்துவிட்டது! (தமக்காக அவரது இடர்பாடு தெரியாதது போலவும், தாம் அவருக்கு அணிவித்திருந்த மோதிரம்தான் அப்போது அவருடைய அவநிலையை தமக்கு ஃப்ளாஷ் செய்ததாகவும் ஸ்வாமி பிற்பாடு சொல்லியிருக்கிறார்!)

உடனே விமானத் துறை உயர் அதிகாரியாகக் காணப்பட்ட ஒருவர் பகவந்தத்தின் முன் தோன்றினார். (அப்படி ஒருவர் வாஸ்தவமாக இருந்தாரா, அல்லது இது ஸ்வாமியின் வேஷ தாரணமா என்பது இதுவரை தெரியவில்லை.) அவர் பகவந்தத்திடம் டிக்கெட் முதலியன இல்லாவிடில் பரவாயில்லை என்றார். தாமே அவரை விமானத்துக்குள் அழைத்துச் சென்று உட்கார வைத்தார். அவர் எது செய்தாலும் அதை ஆக்ஷேபிக்க எவருமில்லாதது போன்ற அதிகார தோரணை அவரிடம் காணப்பட்டது. பகவந்தம் ஸௌக்கியமாக இந்தியாவுக்கு வந்து சேர்ந்தார்.

டிக்கெட் இல்லாமல் ஒரு திருடன்கூட தேசம் விட்டுத் தேசம் பிளேனில் வரமுடியாது. இந்த பகவந்தம் வந்தார்என்று திருட்டுச் சிரிப்போடு ஸாயி பகவந்தர் சொல்வாராம்.

***

கவந்தம் அவர்களின் புதல்வர் ஸ்ரீ ராம கிருஷ்ணாவின் தோழர்களில் ஒரு வெள்ளையர். அவர் ஹைதராபாத்தில் பகவானைத் தரிசித்தபோது பகவான் அவருக்கு விபூதிவரவழைத்துத் தந்து, “Eat” என்றார். அவர் இதென்ன சங்கடமென நினைத்து, “You want me to eat ash?” (நான் சாம்பலைத் தின்ன வேண்டுமென்றா விரும்புகிறீர்கள்?) என்றார். ஸ்வாமி வெறுமே புன்னகைத்தார். வெள்ளையர் விபூதியைப் பொட்டலமாகக் கட்டிவைத்துக் கொண்டார்.

பிறகு அவர் லண்டன் வழியாக அமெரிக்காவுக்குப் புறப்பட்டார். அவ்வளவாக வசதியற்றவராதலால்எகானமிவகுப்பு டிக்கெட்தான் எடுத்திருந்தார். அது அவ்வளவு சௌகரியமாக இல்லை. போதாக்குறைக்கு அவருக்கு மிகவும் சோர்வாகவும், காய்ச்சல் வரும்போலவும் ஆயிற்று. லண்டனில் வேறு விமானம் மாறுவதற்கு இறங்கினார். தமது பலவீன நிலையில் மேற்கொண்டு பயணம் தொடர முடியுமா என்று எண்ணினார். சட்டென்று ஸ்வாமியின்சாம்பல்நினைவுக்கு வந்தது‘Let us test the dust’ (அந்த தூசியின் சக்தியைப் பரீக்ஷை பார்க்கலாமே!’) எனத் தோன்றியதாம்! வாயிலிட்டுக் கொண்டு விழுங்கினார் விபூதியை.

ஓய்ச்சலும் காய்ச்சலும் ஓட்டம் பிடித்தன.

கொடுக்கத் தொடங்கினால் நிறுத்த அறியாத வள்ளல் அதோடு நிறுத்தினாரா?

ஒலி பெருக்கியில் தம் பெயர் கேட்டதும், வெள்ளையர் பயணத்தைத் தொடர்வதற்காகச் சிக்கன வகுப்பு பிரிவை அடைந்தார். அங்கிருந்த சிப்பந்தி, “நீங்கள் எகானமி கிளாஸ் இல்லை; பர்ஸ்ட் கிளாஸ். அங்கே போங்கள்என்றார். “இல்லை, நான் எகானமி கிளாஸ்தான். அதற்குமேல் எனக்கு வசதியில்லைஎன்றார் நம் வெள்ளையர். அதற்கு ஊழியர், “உங்களை நாங்கள் புதிதாக ஃபர்ஸ்ட் கிளாஸ் டிக்கெட் எடுக்கச் சொல்லவில்லை! உங்களுக்காக ஏற்கெனவே ஒருவர் பணம் கொடுத்து ஃபர்ஸ்ட் க்ளாஸ் டிக்கெட்டுக்கு ஏற்பாடு பண்ணியாயிற்று. இதோ இப்போதுதான் இங்கேயிருந்து போனார்என்றார்.

ஸாயி பக்தர்களுக்கு இதற்குமேல் உடைத்துச் சொல்ல வேண்டுமா என்ன?

சிக்கனம் தெரியாத அருள். ஸ்வாமி எதிலும் ஃபர்ஸ்ட் கிளாஸ்தான்!

***

கவந்தத்தின் குமாரர் ராமகிருஷ்ணாவைக் குறித்ததாகவே ஒன்று:

அவரும் அவரது மனைவியும் பாரிஸுக்கு வந்து சேருமுன் அப்பெண்மணியின் சொப்பனத்தில் நம் அப்பன் தோன்றினார். “மதிப்புள்ள சாமான்களை உன் ஸூட்கேஸுக்கு மாற்றி வைத்துப் பூட்டிக்கொள். பிரயாணத்துக்கு அவசியமான எதையும் வேறெந்தப் பெட்டியிலோ பையிலோ வைத்துக் கொள்ளாதேஎன்றார். உடனே அவள் விலை மதிப்புள்ள வஸ்துக்களையும், பயண தஸ்தாவேஜுகளையும் கணவருடைய அட்டாஷெ கேஸிலிருந்து மாற்றித் தன் ஸூட்கேஸுக்குள் வைத்துப் பூட்டினாள்.

பாரிஸுக்கு வந்தார்கள். ஹில்டன் ஹோட்டலில் அறை அமர்த்திக் கொள்ளச் சென்றார்கள். அட்டாஷெ கேஸைக் கீழே வைத்துவிட்டு, ஹோட்டலில் தங்குவதற்கான ஃபாரத்தில் ராமகிருஷ்ணா விவரங்களை எழுதிக் கொடுத்தார். பிறகு அட்டாஷெ கேஸை எடுக்கக் குனிந்து பார்த்தால்அபேஸாகி விட்டிருந்தது அக் கைப்பை! ஸ்வாமியின் ஸ்வப்பன உத்தரவுப்படி ஸ்ரீமதி ராமகிருஷ்ணா மட்டும் அதிலிருந்த முக்கியமான பொருட்களை இடம் மாற்றி இராவிடில் அவர்கள் அந்நிய தேசத்தில் வெகுவாக அவதிப்பட்டிருப்பார்கள்.

நிறைந்த நன்றியோடு பகவானுக்கு இதைத் தெரிவித்த ராமகிருஷ்ணா, தந்தையாருக்கும் எழுதி ஐயனுக்கு நன்றி கூறச் சொன்னார். அவ்வாறே நன்றி கூறிய பகவந்தத்திடம் பகவான் மலரச் சிரித்தபடி, “பாரிஸ் எங்கே, பர்த்தி எங்கே? உன் பசங்கள் எங்கே, நான் எங்கே? ஆனாலும் பார், நான் ஸஹாயம் செய்ய நினைத்து விட்டால் எந்தத் தொலை தூரமானாலும் செய்து விடமுடிகிறதுஎன்றார்.

***

த்தியந்த சேவகருள் மற்றொரு ரத்தினமான கஸ்தூரியவர்களின் குமாரர் ஸ்ரீ மூர்த்திக்கும் ஸ்வாமி தமது மார்க்க பந்துத்வ மகிமையைக் காட்டியிருக்கிறார்.

அது மூர்த்திக்கு ஸ்வாமியிடம் முழு நம்பிக்கை வராத காலம். நிலவியல் ஸர்வேக்காகக் காட்டுப் பகுதி ஒன்றுக்கு மூர்த்தி சென்றிருந்தார். எங்கேயோ எப்படியோ போய் வனத்தில் நிர்மாநுஷ்யமான இடத்தில் விடப்பட்டார். அங்கு எவ்விதமான வாஹன வசதியும் கிடைக்கும் வாய்ப்பே தெரியவில்லை. ‘தகப்பனாரும் பாட்டியாரும் ஸ்வாமி, ஸ்வாமி என்று உருகுகிறார்களே, அவருக்கு மெய்யாகவே பவர், கிவர் இருந்தால் இக்காட்டிலே, இக்கட்டிலே அதைக் காட்டட்டுமே!’ என்று நினைத்தார் மூர்த்தி.

ஜீப்பின் உறுமல் கேட்டது. அது மூர்த்திக்குப் பக்கத்தில் வந்து நின்றது. காட்டுக்கு வெளியே அவரை இறக்கிவிட்டுப் போனார் ஓட்டுனர்.

அடுத்த முறை ஸ்வாமி அவரைப் பேட்டிக்கு அழைத்தபோது எடுத்த எடுப்பில், “அப்படியானால், உனக்கு வண்டி கிடைச்சுதாக்கும்என்றார்.

***

த்தனை விதமான இடர்ப்பாடுகளை ஸ்வாமி தீர்த்து வைக்கிறார்? தாயுமானவராக அவர் புரிகிற ஸஹாயம் இவற்றிலே நம் நெஞ்சைக் கரைக்கும் ஒன்று.

அந்தப் பெண்மணிக்கு இருந்த சில கோளாறுகளால் தனக்கு எதுமாதம்என்பதையே அவள் அறிந்திருக்கவில்லை. அவளது தாயார் உள்பட ஏனையோருக்கோ அவள் கருவுற்றிருப்பதே தெரியாது. ஒரு நாள் தன் வீட்டு மாடியில் அவள் தாழிட்ட அறையில் தனித்து இருக்கும்போது பேற்றுக் குறிகள் வெகு விரைவே ஏற்பட்டன. அவள் எவரையும் துணை கூப்பிடக்கூட முடியவில்லை. ஆனாலும் எப்போதும் ஸ்வாமியின் துணை இருப்பது பற்றிய நம்பிக்கை மட்டும் அவளுக்கு உண்டு. அந்தத் துணை இப்போது பிரஸவ வேதனையை மட்டுமின்றி, தனித்திருக்கும் திகிலையும் துடைத்து அகற்றிவிட்டது. பெண் மகவு பிறந்தது, சிறிது நேரத்திலேயே. அக்குழந்தையைத் தானே எப்படி அகற்றிக் கொப்பூழ்க் கொடியை கத்தரித்தோம் என்று இன்றளவும் அவளுக்கு விவரித்துச் சொல்லத் தெரியவில்லை. (சம்பவம் நடந்த அப்போது ஸ்வாமி அவளுக்கு அலாதி தைரியமளித்திருந்தாலும் இப்போது அதை நினைவு கூர்வதானாலும் நடுக்கமாயிருக்கிறது என்று சொல்லி வேறு பேச்சுக்குப் போய் விடுவாள்.) நச்சு விழவில்லை என்பது மட்டும் அந்த இனம்புரியா நிலையிலும் அவளுக்கு எட்ட, பிள்ளை பெற்றவளே தானாக மாடியிலிருந்து இறங்கி வந்து ரிக்ஷா வைத்துக் கொண்டு லேடி டாக்டர் வீட்டுக்குச் சென்றாள். திரும்பும் போதுதான், பச்சையிலும் பச்சைக் குழந்தையை வெளிமாடிக் கதவு திறந்தே கிடக்குமிடத்தில் தனியாகப் போட்டுவிட்டு வந்துவிட்டோமே என்ற எண்ணம் ஏற்பட்டுக் குலை நடுங்கினாள். இத்தனை செய்த தெய்வம் இதை மட்டும் விட்டு விடுமா? குழந்தைதெய்வமேஎன்று சமர்த்தாகக் கிடந்தது.

***

ல் வைத்ய நிபுணர் டாக்டர் ஆர்.எஸ். பத்மநாபனை பெங்களூர் பக்தர் வட்டம் நன்கு அறியும். வெகு வெகு நீண்ட காலமாக பகவான் தொடர்பிருந்தும், அவரது மாளிக்கைக்குள்ளேயே செல்ல அனுமதி பெற்றிருந்தும், வெளியில் கும்பலோடு கோவிந்தாவாகவே ஒதுங்கி நிற்கும் அவரது அடக்கப் பண்பு அதிசயமானது. அவருடைய மனைவி ரோடரி சங்கத்தின் மாதர் பகுதியில் அங்கத்தினர். சங்கப் பெண்டிர் சிலர் ஐரோப்பியச் சுற்றுலா செல்கையில் பகவானின் அனுமதி பெற்று இந்த அம்மாளும் உடன் சென்றார்.

பயணத்தினிடையே ஸ்வீடனுக்குச் சென்றார்கள். அப்போது ஓர் இரவு ஸ்ரீமதி பத்மநாபன் இன்னோர் அங்கத்தினரின் வீட்டில் தங்க நேர்ந்தது. வீட்டுக்குரிய அந்த அங்கத்தினர் அன்று வீட்டிலில்லாமலிருக்கும்படி நேர்ந்தது.

தனியே படுத்துறங்கிக் கொண்டிருந்த அம்மாள் திடுமென தகிப்புத் தாங்கமுடியாமல் விழிப்புற்றார். இதென்ன இவ்வளவு வெப்பம் என்று அவருக்குப் புரியு முன்பே உஷ்ணம் ஏகமாக உயர்ந்து மூச்சு முட்டலாயிற்று.

இது குளிர் தேசமான ஸ்வீடன். அறை சில்லித்துப் போகாமலிருப்பதற்காக உஷ்ண பதனம் செய்திருக்கிறது. ஹீட்கன்டிஷனரில் ஏதேனும் கோளாறோ? அல்லது அதைப் போட வேண்டிய அளவுக்கதிகமாக எவரோ போட்டிருக்கிறார்களோ? அதுதான் பற்றி எரிகிறதுஎன்று பிறகு புரிந்தது. ஹீட்டரைக் குறைக்கலாம் அல்லது நிறுத்தலாம் என்ற எண்ணத்தில் அதைத் தேடினார். கண்டுபிடித்தார். ஆனால் என்ன பயன்? அது மாதிரியான ஒரு கருவியை அவர் அதற்குமுன் பார்த்ததில்லை. புதுதினுசான அந்த ஹீட்டரில் ஏகப்பட்ட கொப்புக்கள் இருந்தன. தான் எதையாவது திருகப் போக அது வெடித்துத் தொலைக்கப் போகிறதே என்று பயந்தார். சும்மா விட்டு விடலாமென்றாலோ விநாடிக்கு விநாடி உஷ்ணம் ஏறி உடம்பைத் தீய்த்தெடுக்கிறதே!

ஜன்னல் கதவுகளைத் திறந்து, வெளியின் சில்லிப்புக் காற்றை உள்ளே விடலாமென்றால், இதென்ன சோதனை? நாள்தோறும் மாறும் பில்டிங் பாஷன் விசித்ரத்தில் இந்தக் குறிப்பிட்ட ஜன்னலுக்கு கொக்கி ஏதேனும் உள்ளதா, இருந்தாலும் அதை எப்படித் திறப்பது என்பதே தெரியவில்லை! கதவைத் திறந்து கொண்டு ஓட வேண்டியதுதான் என்று நினைத்தபோது வெப்பம் அவரை ஒரே அழுத்தாக அழுத்திவிட்டது. படுக்கையில் பாதிப் பிணமாக விழுந்தார். உணர்வு மங்குவது தெரிந்தது. பிசுபிசுத்துக் கொண்டே போகும் உணர்விழைகளைப் பெரும்பாடுபட்டு முறுக்கி, ‘ஸாயிராம் ஸாயிராம்என்று கண்ணாறு பெருக்கி ஜபிக்கலானார்.

பெண்ணாகப் பிறந்த அடியாள், ஐயாயிரம் காவதத்துக்கு அப்பால் நள்ளிரவில், தன்னந்தனியே, தகிப்பில் சிக்கி மாளுவதா?

கதவுக்கு வெளியே காலடி கேட்பது போலிருந்தது.

அடுத்த விநாடி கதவின் உட்புறத்திலே

சற்றும் ஸந்தேஹமில்லை! ஸ்வாமிதான் நிற்கிறார்!

தாழிட்ட அறைக்குள் அவரன்றி ஆர் வரமுடியும்?

ஸந்தேகமிருக்கக் கூடாது என்றே தம்மைச் சூழ ஒரு ஜோதி வட்டத்துடன், அதன் ஒளியில் உள்ளே நிற்கும் பிரேமஜோதியான தம்மைப் பொல்லெனப் புலர்வித்துக் கொண்டு காட்சி தருகிறார்.

ஜோதி என்றால் உஷ்ணமா? இல்லை, அறையில் உச்ச நிலைக்குப் போய்விட்ட உஷ்ணத்தை அறவே தணித்துவிட்ட பிரேம சீதள ஏர்கன்டிஷனராக தரிசனம் தருகிறார்! அடியார் அனைவருடனும் ஹாட்லைனில், ஹார்ட்லைனில் தொடர்பு கொண்டுள்ள பிரபு ஜில்லென வந்து தண்மையைச் சொரிந்தார், தணலாய்க் காய்ந்த அறையிலே! “நானிருக்க பயமேன்?” என்ற வாசகத்தை ஷீர்டி நாளிலிருந்து நூறாண்டாகத் தொடரும் நல்வாக்கை உதிர்த்து, “நான் எப்பவும் உன் கூடவே இருக்கேன்என்றார்.

ஸ்வாமி மறைந்தார். அறையின் குளுமை மறையவில்லை.

நிம்மதியாய் நித்திரையிலாழ்ந்தார் ஸ்ரீமதி பத்ம நாபன்.

அவர் இந்தியாவுக்குத் திரும்பி ஸ்வாமி தரிசனத்துக்குச் சென்றபோது, “எப்படி ஸ்வீடன்!” என்று கண்ணாலேயே ஒரு வெட்டு வெட்டினார்ஸ்வீட்டர்!’

***

ஜான் ஹிஸ்லாப் இருக்கிறாரே, அவரது இல்லம் மெக்ஸிகோவில் பஸிஃபிக் கடற்கரையில், கடலை ஒட்டியுள்ள ஒரு குன்றில் இருக்கிறது. அது கற்பாறைகளாலான குன்றல்ல. சமுத்திர வண்டலும், அதன் அடிப் படுகையின் எழுச்சியும் கெட்டிப்பட்டு அபூர்வமாகச் சில இடங்களில் குன்றாக அமையுமாமே, அப்படிப்பட்ட ஒன்று இது. அதன் சரிவில் ஓரிடத்தில் ஹிஸ்லாப் உள்பட பன்னிரண்டு குடும்பத்தினர் வீடு கட்டிக் கொண்டு வசித்தனர். அங்கிருந்து கீழே முந்நூறு அடிகளில் பஸிஃபிக் அலையெறிந்து துள்ளி நெளிவதைக் காண அழகாக இருக்கும். இயற்கையின் அழகுக்காகத்தான் அங்கு குடியேறினார்கள்.

அழகு அச்சத்தில் கொண்டு விட்டது!

அழுத்தமான பாறைகளாலன்றி நுண் மணலாலும், களி மண்ணாலும், சிப்பி நொறுங்கல்களாலும் ஆன அந்தக் குன்று கடலலைகளின் ஓயாத பாய்ச்சலின் அதிர்வில் நலிவுற்றுக் கொண்டே வந்தது. போதாக் குறைக்கு 1976 ஸெப்டெம்பரில் ஒரு நெடுஞ்சாலை அமைக்கும்போது குன்றின் ஓரிடத்தைக் குறுக்கே வெட்டியதால் அது மேலும் பலவீனமுற்றது.

நிலம் பொலபொலத்தது மட்டுமின்றி அடியில் உண்டான சில இயக்கங்களால் அது கடலை நோக்கி மெல்ல மெல்ல நகரவும் ஆரம்பித்து விட்டது!

சிறிது காலத்திலேயே இரண்டு வீடுகள் முழுசாக இடிந்து விழுந்தன. மேலும் ஒன்றிரண்டு இரு பாதிகளாகப் பிளந்து கொண்டன. எல்லா வீடுகளுமே வெகு ஆபத்தான ஸ்திதியில் இருப்பதாக அரசாங்கத்தின் நிலவியல் அதிகாரிகள் எச்சரித்து அங்கிருந்தவர்களை இடம் பெயரும்படி உத்தரவிட்டார்கள்.

இந்த நெருக்கடியான கட்டத்தில் ஸ்ரீ ஹிஸ்லாப் அமெரிக்காவிலுள்ள ஸத்யஸாயி கேந்திரங்களுக்குச் சுற்றுப் பயணம் புறப்பட வேண்டியிருந்தது. இந்தப் பயணத் திட்டம் முன்னமேயே வகுக்கப்பட்டிருந்தது.

தேர்ந்த அடியார்களின் பக்தியைத்தான் என் சொல்ல? ‘நமக்கு இப்படிப்பட்ட பகவான் கிடைத்தாரே?’ என்று மட்டுமின்றி, ‘நம் நாளிலும் பகவானுக்கேற்ற இப்பேர்ப்பட்ட பக்தர்கள் இருக்கிறார்களே!’ என்று அதனினும் மகிழும்படி ஹிஸ்லாப் போன்ற சிலர் வாழ்கிறார்கள்.

ஒரு குன்றே நகரும்போது குன்றா உறுதியுடன் ஸ்வாமியை நம்பினார் ஸ்ரீ ஹிஸ்லாப். ஸ்வாமி காரியமான சுற்றுப் பயணத்தை அவர் விடவில்லை. எந்த நிமிஷமும் தகர்ந்து விழக்கூடிய வீட்டுப்பிராப்ளத்தை சமாளித்துக் கொள்ளும்படியாக மனைவியிடம் கூறி, அவளை அங்கேயே விட்டுப் புறப்பட்டார். ஸாயீச்வரோ ரக்ஷது! அவரிருக்கபிராப்ளம்எப்படி வரமுடியும் என்ற அந்தரங்க விச்வாஸம்!

போகுமுன் ஒன்று செய்தார். குன்றை நலிவித்து வரும் பஸிஃபிக் மஹாஸமுத்ரத்தை நோக்க அமைந்திருந்த தம் வீட்டு ஜன்னலில் காருண்ய மஹாஸமுத்ரமான ஸ்வாமியின் படம் ஒன்றைப் பொருத்தினார். “இந்த ஒரு வீடு மட்டுமின்றி அண்டை வீடுகள் யாவற்றையும் காத்தருளுங்கள், ஸ்வாமிஎன்று படத்திலிருந்தவரிடம் கணவரும் மனைவியும் அகங்குழைந்து வேண்டினர். பிறகு கணவர் புறப்பட்டார்.

நின்ற இடத்தில் நில்லாமல் ஹிஸ்லாப் பயணம் செய்ய வேண்டியிருந்ததால் சுற்றுப் பிரயாண காலம் முழுதிலும் அவருக்கு வீட்டுத் தொடர்பே இல்லை. ஏகாந்தப் பிரதேசத்தில் அமைந்த வீட்டில் அவர் டெலிஃபோன்கூட வைத்துக் கொள்ளவில்லை. அதனால் மனைவியுடன் எவ்விதத்திலும் தொடர்பு கொள்ள இயலவில்லை.

பயணம் முடிந்து ஊருக்குத் திரும்பும்போது மட்டும் ஹிஸ்லாப்புக்குக் கொஞ்சம் நரம்புகள் ஆடத்தான் செய்தன. “பாபாவிடம் பிரார்த்தித்த பின்னரும் அப்படி ஆடியது சரியல்லதான்; ஆனாலும் ஆட்டம் கண்டதென்னவோ உண்மைஎன்கிறார் அவர்.

கடைசியில்அப்பாஎன்று நிம்மதியாகப் பெருமூச்சு விட்டார். வீடுகள் அன்று போலவே உறுதியாய் இருந்தன. வீட்டிலிருந்தவர்களோ அன்றைவிட உறுதியாக இருந்தார்கள், ஸாயி பக்தியில்.

உற்சாகமாக அவரிடம் சொன்னார்கள்: தினந்தினமும் நிலவியலார் குன்றைச் சோதித்ததில் ஓர் அதிசயத்தைக் கண்டார்களாம். அதாவது அந்தக் குன்றில் வீடுகள் கட்டப்படாத பகுதி மட்டுமே திட்பம் குறைந்து கடலை நோக்கி நகர்ந்ததாம்! வீடுகள் உள்ள பகுதி எப்படியோ திண்மை பெற்று, ஓரங்குலம்கூட நகராமல் இருந்த இடத்தில் ஊன்றிவிட்டதாம்! ‘நிலவியல் சாஸ்திரப்படி இதற்கு எங்களால் விளக்கம் கூற இயலவில்லைஎன்றார்களாம்.

நிலத்தை நலம் செய்யவே வந்த அவதாரன் நலிந்த நிலத்துக்கும் வலிமை நயப்பான் என்று அவர்கள் அறிய முடியுமா? அவன் ஒரு புறம் கல் மனத்தைப் புற்றுமண்ணாய்க் குழைப்பான், இன்னொரு புறம் உளுத்த உள்ளத்தை உறுதியில் பாறையும் ஆக்குவானன்றோ?

பிரசாந்தி நிலயனின் பிரஸன்னமான படத்தைப் பார்க்க அமைந்துள்ள பஸிஃபிக்கின் அப்பகுதிக்குப்பிரசாந்தி கட்டம்என்றே பெயரிட்டிருக்கிறார்களாம்! ஸ்ரீராமன், தான் சாந்தி இழந்து சீறி விழுந்து ஸமுத்ரராஜனை சாந்தமாக அடங்கச் செய்தது போலன்றித் தாமும் சாந்தமாக இருந்து கொண்டே பஸிஃபிக்கைபாஸிஃபை செய்திருக்கிறார் நம் காவிய புருஷர்!

***

ஹாய வானவில்லில் வேறொரு வண்ணம்:

சங்கராபரணர் என்று அந்த பக்தருக்குப் பெயர் சூட்டலாம். அவரது கம்பெனிக்கு அயல் நாட்டு முக்கியஸ்தர்கள் விஜயம் செய்திருந்த ஒரு சமயம். கர்நாடகத்திலுள்ள பல இடங்களை அவர்கள் சுற்றிப் பார்ப்பதற்கு சங்கராபரணர் கார் ஏற்பாடு செய்தார். உடன் செல்லக் கம்பெனியின் பொறுப்புள்ள ஓர் அலுவலரையும் அனுப்பினார். இம்மாதிரிப் பயணங்களின்போது ஹோட்டல் வசதியில்லாத இடங்களில் சாப்பாட்டுச் சமயத்தில் அவதிப்படாதபடி அங்கு சென்று ஓர்அயிட்டம்குறையாமல் அறுசுவை உண்டி அளிக்கும்மோட்டல்கள் என்னும்மொபைல் ஹோட்டல்கள் பெங்களூரில் உண்டல்லவா? அது போன்ற ஒரு மோட்டலில் ஏற்பாடு செய்து, அந்த அந்நிய தேசப் பிரமுகர்களுக்குக் குறிப்பிட்ட ஓர் ஊரில் குறிப்பிட்ட மணியில் சாப்பாடு கிடைக்கச் செய்வதாக அவர்களிடம் சங்கராபரணர் கூறியிருந்தார்.

அவர்களிடம் சொன்னாரே தவிர, மோட்டல்காரர்களுக்குச் சொல்ல வேண்டாமோ? மறந்தே போனார்!

பகல் பன்னிரண்டு மணிக்குத் தாம் போஜனத்துக்கு அமரும் போது, ‘சுற்றுலாச் சென்றவர்களும் இப்போது இன்ன இடத்தில் விருந்துபசாரம் பெற்றுக் கொண்டிருப்பார்கள்என்று அவரது எண்ணம் படர்ந்தபோதுதான் சுளீரென நினைவு வந்தது. ‘அடடா! எத்தகைய முட்டாள்தனம் செய்து விட்டோம்? மோட்டல்காரருக்கு நாம் தகவல் தெரிவித்துப் பணம் கட்டவில்லையே! அயல்தேச விருந்தாளிகளுக்கு எப்படி உணவு போய்ச் சேர்ந்திருக்கும்? அந்தப் பொட்டல் காட்டிலே பட்டினியாக அல்லவா சிரமப்படுவார்கள்? இப்போது மோட்டலுக்கு அரேஜ்ஞ் பண்ணினாலும் போய்ச்சேர நாலு மணி ஆகிவிடும்! அதுவரையா அவர்கள் அங்கேயே ஒட்ட ஒட்டக் காத்திருப்பார்கள்?’ சில ஜீவன்களைப் பட்டினி போட்டோமே என்று மனிதாபிமானத்தில் சங்கராபரணர் வருந்தியது மட்டுமின்றி, இவ்வித உபசாரப் பண்புகளை உன்னிப்பாகக் கவனிக்கும் அந்நிய நாட்டாருக்கு இதனால் ஏற்படும் குறைவான அபிப்பிராயத்தால் வியாபார ரீதியிலும் தமக்கு பாதிப்பு உண்டாகுமே என்றும் கவலைப்பட்டார்.

ஒன்றும் செய்துகொள்ள முடியாத சூழ்நிலையில் செய்யக்கூடிய ஒன்றே ஒன்றான ஸாயிராமப் பிரார்த்தனையை இதய அடிவாரத்திலிருந்து செலுத்தினார்.

இரவு சுற்றுலா முடித்தவர்கள் திரும்பினர்.

சங்கராபரணர் குற்றவாளியாக, குற்றத்தை ஒப்பி மனமார மன்னிப்புக் கேட்பதற்காக அவர்களை நோக்கிச் செல்ல, அவர்களோ இவரிடம் ஏக உற்சாகமாகப் பேசிக் கொண்டு எதிர்நோக்கி வந்தார்கள்.

பகல் போஜனம்….” என்று இவர் ஆரம்பிக்கையிலேயே இடை மறித்து, “ஒண்டர்ஃபுல், ஒன்டர்ஃபுல்! நீங்கள் சொன்னபடியே சொன்ன இடத்திலே வந்திருந்தது, ஒன் டிஷஸ்என்றனர்.

உடன் சென்ற உள்ளூர் அலுவலர் விளக்கினார். மோட்டல் குறித்த நேரத்தில் வந்ததாம். அதிலிருந்த பணியாளர்கள், அனைவரும் அமர்ந்து உண்ண வெகு அழகான மேஜை நாற்காலிகள் மோட்டல் வண்டியிலிருந்து கொண்டு வந்து போட்டார்களாம். அந்த மேநாட்டினருக்கெல்லாம் ஐரோப்பிய அசைவ உணவு வகைகள், அதோடு மதுபானம் இவையும், தமக்குத் தென்னிந்திய சைவச் சாப்பாடும் பழச்சாறும் பரிமாறினர் என்று தெரிவித்தார்.

சங்கராபரணரின் உள்ளம் ஸாயிராமனிடம் ஓடிக் கும்பிட்டு ஒட்டிக் கொண்டது. “என் அப்பா! அசைவ போஜனத்தையும் மதுபானத்தையும் அறவே கண்டிக்கும் நீ என் கம்பெனியின் நலனை உத்தேசித்து அவற்றையும் கொண்டு போய்ப் பரிசாரனாகஸெர்வ்செய்தாயா?” என்று விம்மினார்.

நான் எல்லாருக்கும் ஸெர்வென்ட்என்று சொல்லிக்கொள்ளும் நம் அதிசய சக்ரவர்த்திஸெர்வ்செய்யும் வியஞ்ஜனங்களுக்கு எல்லையே இல்லைதானே?

***

ந்த பௌதிக லோகத்தில் ஐயாயிரம், பத்தாயிரம் மைல்கள் தாண்டிச் செல்வதோடு அவரது ரக்ஷண சக்தி முடியவில்லை. தூரம் கணிக்க முடியாததான, தேவதைகளும் ஆவிகளும் கொண்ட ஸூக்ஷ்ம லோகங்களிலும் அவரது காப்புக் கதிரவனின் தீக்ஷண்யமான கிரணங்கள் துளைத்துச் செல்கின்றன. யோக மாந்திரீகரிடமிருந்து டச்சுப் பெண்மணியைக் காத்தது இதற்கு ஓர் உதாரணமே. அதனினும் அழுத்தமான இன்னொரு சான்று, இதோ:

ஸாயி அடியார்கள் நன்கறிந்த வால்டர் கவன் எல்ஷீ கவன் தம்பதியர் பகவானிடம் புகல் பெறுமுன் தேவதாலோக மர்மங்களில் ஈடுபட்ட இந்திய குரு ஒருவரிடம் பயிற்சி பெற்றனர். தமது ஸ்தூல உடலிலிருந்து ஸூக்ஷ்மமான, மனோமயமான உடலைப் பிரித்து வெளிக் கிளம்புவதற்கும், அப்போது நல்ல தேவதைகளும் துர்த் தேவதைகளும் கொண்ட லோகாந்தரங்களில் ஸஞ்சரிக்கவும் திறன் பெற்றனர். அப்புறம் ஸ்தூல உடலில் புகுந்த பின்னும் OBE (outer body experience) என்னும் உடலுக்கு அப்பாற்பட்ட அநுபவங்களை மறக்காது காத்துக்கொள்வதில் அப்பியாஸம் பெற்றனர். இது ஒரு யோக சாதனை.

ஸாதாரணமாக தம்பதியர் சேர்ந்து மலை வாஸ ஸ்தலங்களுக்கோ, அயல் நாடுகளுக்கோ உல்லாஸப் பயணம் செல்வது போல இத்தம்பதியர் இதர லோகங்களுக்குச் செல்வார்கள்!

அது உல்லாஸப் பயணமாக இன்றி உற்பாத பயங்கரமாயிற்று ஓர் இரவிலே! எங்கோ வழி தடுமாறிச் சென்று பீதிகரமான சக்திகள் சூழ்ந்த ஒரு கொடிய பிரதேசத்தை அடைந்து விட்டார்கள். எப்படி அங்கிருந்து மீளுவது என்று தெரியவில்லை. தமது குருநாதரைக் கூவிக் கூவி அழைத்தனர். அவர் வரவில்லை, அந்த அசுர சக்திகளிடை தலைக்காட்ட அவருக்குத் தைரியமில்லையோ, அல்லது அவை அவரைத் தடுக்க, அதை மீறிப் பிரவேசிக்கும் பலம் அவருக்கு இல்லையோ? ஆகக் கூடி இடுக்கண் மிகுந்த ஒரு மார்க்கத்தில் சீடர்களைப் பயிற்றுவித்த குரு அவர்களைச் சிக்கலிலிருந்து விடுவிப்பதான தமது பொறுப்பை, கடமையை ஆற்றவில்லை; அல்லது ஆற்ற முடியவில்லை.

அச்சமயத்தில் வேறொரு திவ்யரூபம் அங்கு பிரவேசித்தது. ரூபம் என்றார் ஸ்தூலமல்ல. ஸ்தூலமாக மண்ணுலகில் எதைக் காண்கிறோமோ, அதே போன்ற வடிவமைப்புக் கொண்ட, ஆனாலும் ரத்தமும் சதையும் எலும்புமில்லாத ஸூக்ஷ்மமான ஒளி ரூபம்! அந்த தூய சக்தி பிரஸன்னமானதும் கவன் தம்பதியரைச் சூழ்ந்திருந்த தீய சக்திகள் ஓட்டம் பிடித்துவிட்டன!

சற்றும் எதிர்பாராமல் வந்து தம்மைக் காத்த அந்த ஆபத்பாந்தவ மஹாப்ரபு யார் என்று அவர்களுக்குத் தெரியவில்லை. காப்பது மட்டுமே கடனாகக் கொண்ட கருணாமூர்த்தி தம்மைத் தெரிவித்துக் கொள்ளாமலே மறைந்தார்.

சில வாரங்கள் ஓடின.

பல குருமாரிடம் சென்று ஏமாந்தோம். உண்மைக் குருவைக் காட்டி அருள்என்று தம்பதியர் ஆண்டவனிடம் கதறினர். மறுதினமே ஒரு நண்பர் வந்து ஸத்ய ஸாயி சரித நூல் கொடுத்துப் போனார்.

அதன் அட்டைச் சித்திர புருஷரைக் கண்டு அவர்களது உடலின் ஸ்தூல உடல் மட்டுமல்ல; ஸூக்ஷ்ம உடலுடையவும்தான் ஒவ்வோர் அணுவும் நன்றியில் நனைந்தது! அன்று லோகாந்தரத்தில் அழையாமலே வந்து பேராபத்து தீர்த்த தீனபந்து இவரேயல்லவா என்று புரிந்து கொண்டார்கள். பின்னர் சித்திரத்தில் திகழ்ந்த ஸித்தநாதர் பெயரையும், வாஸ ஸ்தானத்தையும் தெரிந்து கொண்டு அவரிடம் வந்து அன்னவர்க்கே சரண் என்று தீர்ந்து விட்டார்கள்.

யோகிகளைத் தேடிச் சென்று நீயே காத்தாய்என்று தியாகையர் பாடியதற்கு இது மற்றுமொரு சான்று. இதர லோகங்களிலும் வழித்துணை நாதராக இருப்பவர், முடிவாகப் பரலோகம் என்னும் ஆத்ம லோகத்துக்கே துணை வருபவர்தாம்!

காப்புக் கதிரவனின் கதிர்கள் சில இதுகாறும் கண்டோம். அடியாருக்குக் கதியான இக்கதிர்கள் பற்றி ஓர் அரிய ஸமாசாரம் சொல்ல வேண்டும். ஸ்ரீ கோகாக் அவர்கள் ஒருமுறை ஸ்வாமியிடம் உரையாடிக் கொண்டிருக்கையில் பகவானது செழுமைமிக்க கேசபாரத்தின் ஒவ்வோர் மயிர்க்காலின் அடியிலிருந்தும் பக்த ரக்ஷணைக்காக ஒவ்வோர் ஒளி அம்பு புறப்பட்டுச் செல்கிறதென்றும், இதையே அல்லது இதை மறைக்கவே அவர் அடர்ந்த அதிசய முடியை தரிக்கிறாரென்றும் கண்டார். எங்கெங்கிலிருந்து எதிரிடைச் சக்தி வந்தாலும் அதனை அழிப்பதற்கு அம்பு மழை பொழிபவனாகஸ்ரீ ருத்ரம்கூறும் சிவபெருமானே நம் ஸ்வாமி எனத் தெளிந்தார்.

இக்கருத்தை வெளியிடும் ஒரு கவிதையை அவர் ஸ்வாமியின் திருமுன்னரே படிக்கப் பிற்பாடு வாய்ப்பு ஏற்பட்டது. அச்சமயம் ஸ்வாமியிடம் என்றுமே காண முடியாத சில சரீர மாறுபாடுகள் உண்டாவதைக் கவனித்த கோகாக்குக்குக் கலவரமாகிவிட்டது. சுமைதாங்க முடியாதவர்போல் ஸ்வாமி நெடுமூச்சுவிட, அவரது கண்களும் கனத்துக் காணப்பட்டன. ஒரு தவிப்பே அவரிடம் தெரிந்தது. ஆனால் சில விநாடிகளில் சுதாரித்துக் கொண்டுவிட்டார். பிற்பாடு கோகாக் இது பற்றி வினவ, ஸ்வாமி, “ஆமாம், நீ பாட்டுக்கு பெரிய ஸத்தியத்தைத் தடாலென்று அவிழ்த்து விட்டாயல்லவா அதைத்தான் நான் ஜீரணித்துக் கொள்ளக் கொஞ்சம் சிரமப்பட வேண்டியதாயிற்றுஎன்றாராம்.

ஸ்வாமியின் திருமுகத்துக்குள் ஒரு காருண்ய ஸூரியன் இருக்கிறது. அதன் திவ்விய கிரணங்கள் அவரது ஒவ்வொரு ரோம கூபத்தின் வழியாகவும் வெளியாகி இருள் இடரைத் தகர்த்துக் காக்கிறது. ஸ்ரீராமனாக ராமசரணுக்குத் தரிசனம் தந்த ஸ்வாமி கோதண்டத்தை மட்டுமே காட்டினார். அம்பைக் காட்டவில்லை. பராக்ரம அடையாளமாகவும், பூர்வாவதார உண்மையாகவுமே வில்லை மட்டும் காட்டிய வித்தகருக்கு பௌதிகமாக பாணங்களில்லை. ஏனெனில், அஹிம்ஸாவதாரி. ஆனால் அவரது திருமுகமே அக்ஷயமான அம்புப் புட்டில்தான் அன்புத் தொட்டில்தான்! அதிலிருந்து ராமசரங்களாகவே பிரேமசரங்கள் ஒவ்வொரு ரோம கூபத்திலிருந்தும் புறப்பட்டு அடியார்களுக்கு உயிர்க்காவல் அளிக்கின்றன. அக்னி சிகையாகப் புகை படருவதேபோல், ஸ்வாமியின் வண்ண அங்கிக்கு மேல் அவரது முடி சிலும்புவது மட்டுமில்லை. அவரது முகத்துள் உள்ள ரக்ஷண ஜோதி ரச்மிகளுக்கும் இம்முடியே கவசமாகும்.

ஒருபோது ஸ்வாமி சொன்னார்: “ஆயிரமாயிரம் கனெக்ஷன்கள் கொண்ட டெலிஃபோன் எக்ஸ்சேஞ்சாக்கும் ஸ்வாமியின் ஹ்ருதயம்! அதிலிருந்து எல்லா அடியார்களுக்கும் லைன்கள் போகின்றன. இந்தச் செழித்த முடியில் எத்தனை ரோமக்கால்கள் உள்ளனவோ அது ஒவ்வொன்றுக்கும் ஒரு அன்பு முடிச்சாக பக்தர்களுடன் போட்டுக் கொண்டிருக்கிறேன்.”

முடிச்சு அவிழ்க்கும் முடிச்சு! பந்தம் தீர்க்கும் பந்து! அன்பறாக்கேணியான அவரது வதன அம்பராத்தூணி துணை இருக்க நாம் ஏன் அஞ்ச வேண்டும்?