சத்ய சாய் பாபா – 20

20. ஜீவாமுதுக்கே நோவா?

ஸ்வாமி நோய்வாய்ப்படுகிறாரென்றால் அது நோயனைத்தும் அகற்றும் ஸஞ்ஜீவி மூலிகையே வாடுகிறது என்பது போலத்தான் தோன்றுகிறது! ஆனாலும் தம் அடியாரிடமிருந்து பணக் காணிக்கையோ, சின்னஞ்சிறிய பழக்காணிக்கையோகூட வாங்கிக் கொள்ளாமல் அவர்களது கர்ம மூட்டையை மட்டும் நம் கணக்காயர் வாங்கிக் கொள்வதால், வைத்யநாதனே வியாதிக்காரரும் ஆகிற விசித்ரம் நடக்கிறது! இதன் வாயிலாக எத்தனை நோயுற்ற போதும் அதைப் பொருட்படுத்தாமல், சற்றேனும் வெளிக்காட்டிக் கொள்ளாமல், தமது ஸதா கால விரதமான பக்த ரக்ஷணக் கர்மயோகத்தை அவர் எள்ளளவும் தளராமல் புரியும் பேரற்புதத்தையும் காண்கிறோம்.

***

1974ம் ஆண்டு அக்டோபர் மாஸம் நவராத்ரி தொடங்கும் சமயம். அதாவது புட்டபர்த்தியில் மஹா யக்ஞம், உபந்நியாஸங்கள், கலை நிகழ்ச்சிகள் ஆகியனவும், தினமும் ஸ்வாமியின் பேருரையும் நிகழவேண்டிய சமயம். ஸ்வாமிக்குடைட் ஷெட்யூல்உள்ள சமயம்.

டாக்டர் ஸி.ஜி. படேலை அழைத்துத் தமக்கு ரத்த அழுத்தம் பார்க்கச் சொன்னார் லீலா நாடகர். டாக்டர் பார்த்தார். தூக்கி வாரிப்போட்டது! டயாஸ்டோலிக் என்ற கீழ் மட்டம் 110 ஆகவும், ஸிஸ்டோலிக் என்ற மேல் மட்டம் 280 ஆகவும் இருந்தன. வேறு எவருக்கேனும் அப்படியிருந்தால், தன் மீது யானை ஏறி மிதிப்பது போன்ற உணர்ச்சியில் படுக்கையிலேயே விழுந்துகிடப்பார்கள். ஸ்வாமியோ பேசிக்கொண்டு, நடமாடிக்கொண்டு, நாடக மாடிக்கொண்டு வழக்கத்தைவிட அதிகமான அலுவல்களை அலுங்காமல் புரிந்து வருகிறார்! பார்த்தாலும் ஆரோக்யமாகவே காணப்படுகிறார்! இருந்தாலும் வைத்திய ரீதியில் ஆபத்துக்கு இடமாக இருந்த அவரது ப்ளட் ப்ரெஷரை அப்படியே விடுவதா என்று எண்ணிச் சிகித்ஸை முறையைச் சொன்னார் ஸ்ரீ படேல்.

ஸ்வாமி காதில் போட்டுக்கொள்ளவில்லை.

மறுநாளும் ரத்த அழுத்தம் பார்க்கச் சொன்னார்.

முன்நாள் போலவே இருந்தது. ஸ்வாமியின் தெய்வத் தன்மையை உணர்ந்திருந்தாலும், மானுட காயமாச்சே என்று கவலை கொண்ட டாக்டர் அவரைச் சிகித்ஸைக்கு உடன்படுமாறு வேண்டினார். “முதலில் எல்லா டெஸ்டும் பண்ணுஎன்றார் ஸ்வாமி. சந்தோஷத்துடன், சம்பிரதாயமாகச் செய்ய வேண்டிய எல்லாப் பரிசோதனையும் செய்து, ரத்த அழுத்தம் மிகத் தீவிர கட்டத்தில் இருப்பதாக ரிஸல்ட் கொடுத்தார் டாக்டர்.

விசித்ர பகவான், “சரி, இப்படியேவிடாமல் டெஸ்ட் பண்ணி வா; எக்ஸாமின் பண்ணி வா. ஆனால் மருந்து எதுவும் தராதேஎன்றார்.

எத்தனை ப்ளட் பிரஷரானாலும் சிகித்ஸை பெறுமாறு அவருக்கு யார் பிரஷர் கொடுக்க முடியும்?

விதியே என்று அவரைப் பரிசோதித்து மட்டும் பார்த்துக்கொண்டு, பரிகாரம் தராமலிருக்கும்படி ஆயிற்று, டாக்டருக்கு! பரீக்ஷித்துப் பார்க்கச் சொல்லாமலாவது இருந்திருக்கக்கூடாதா? அவர் ஆரோக்யமாக இருப்பதாக அப்போது நினைத்திருப்பார்களே! ரோகத்திலும் தாம் அரோகமாக இருப்பதைக் காட்டவோ, அல்லது இதனால் டாக்டரும் மற்ற அணுக்க அடியாரும் உறும் சோகத்தில் அவர்களது வினையில் சிறிதைத் தீர்க்கவோ, இப்படி ஸ்வாமி விளையாடினார்!

டாக்டரின் ரிபோர்ட் ஒரு வால்யூமாக விரிந்தது. ஸ்வாமியும் சிகித்ஸை இல்லாமலே நவராத்ரியின் அயரா கெடுபிடி அத்தனைக்கும் வாடாமலராய் ஈடுகொடுத்து நிறைவேற்றினார். துர்காதேவி ரக்தபீஜனோடு அலுக்காமல் சலுக்காமல் போரிட்ட நவராத்ரியில் நமது நவீன துர்கை ரத்த அழுத்தத்தைக் கவனிக்கவே செய்யாமல் அலுவல்களை ஆற்றினார். ரக்தபீஜன் அழிந்தாற்போல் ரத்த அழுத்தம் அழியவில்லை. அதுபாட்டுக்கு இருந்தது. இருக்கட்டும் என்று அதையும் ஸாயி அன்னை தனக்குள் சொஸ்தமாக வைத்துக்கொண்டு, தன் காரியத்தைச் செய்து கொண்டிருந்தாள்.

இப்படியே நாட்கள் வாரங்களாகி ஓடிக் கொண்டிருந்தன. தீபாவளி, ஜயந்தித் திருவிழா, ஸாயி ஸ்தாபன மகா நாடுகள் எல்லாம் ஸம்பிரமமாக நடந்தன. ரத்த அழுத்தமும் ஸம்பிரமமாக நிலைபெற்று விட்டதென்பது வெளி அடியார் எவருக்கும் தெரியாது. ஒருநாள், மற்ற எவராயினும் பொறிபுலன் அடங்கிச் சாயும் நிலையில் ஸ்வாமி புக்கப்பட்டணம் சென்று கனகோஷமாக ஒரு வெகு நீண்ட சொற்பொழிவு ஆற்றிவந்தார்.

ஜயந்தி முடிந்த கையோடு பிரசாந்தி நிலயத்தில் கூட்டத்தைக் கலைக்கும் பொருட்டு ஸ்வாமி வேற்றூர் சென்று விடுவது வழக்கமல்லவா? அப்படி, நவம்பர் 27ந் தேதி மாலை சுமார் நாலு மணிக்குச் சில கார்களில் அடியார் தொடர்ந்து வர, பகவான் பிருந்தாவனத்துக்குப் புறப்பட்டார். பயணம் தொடங்கி ஒன்றரை மணி நேரம் வழக்கம்போல் வழியில் தென்படும் தீனர்களுக்கெல்லாம் தீஞ்சுவைப் பணியாரங்கள் தானம் செய்தபடிச் சென்றார். பிறகு ஸீட்டின் பின் தலையைச் சாய்த்துக்கொண்டார். ஐயனுக்கும் ஆயாஸம் மேலிட்டிருப்பது உடன் வருவோருக்குத் தெரிந்தது. விசாரமடைந்தனர். பக்கத்தே அமர்ந்திருந்த படேலின் தோள் மீது பம்பை முடியை அவர் சாய்த்தபோது விசாரம் வேதனை ஆயிற்று. அதன்பின், தம்மோடு பின் ஸீட்டில் அமர்ந்திருந்த இன்னொருவரான ஸ்ரீ பகவந்தத்தை பகவான் முன் வீட்டுக்குப் போகும்படிச் சைகை செய்து விட்டுத் தாம் அப்படியே சுருண்டு படுத்தபோது வேதனை அச்சமாயிற்று. “அஞ்ச வேண்டியதில்லைஎன்று ஆறுதல் சொல்ல முடியாத நிலையில் தாமும் கலங்கியபடி டாக்டர் படேல் உடன் வந்தார். ‘மயான அமைதிஎன்று சொல்லக் கூடாதாயினும், அப்படிப்பட்ட மௌனத்தில்தான் கார் விரைந்து கொண்டிருந்தது. ஜீவதத்வத்தின் செழும் கொந்தளிப்பான ஸ்வாமி ஓய்ந்து ஒடுங்கிக் கிடந்தார்!

ஸந்தி மங்கி இருள் சூழ்ந்து வர, அடியார் மனத்திலும் இருள் கவ்வியது. நந்தி மலையின் நிழலாட்டம் இருளிலே மரண தேவதையே தலைதூக்கி வருவதாகத் தோன்றியது.

சிக்கபலாப்பூர் நெருங்குகிறது. ‘சிடுக்கென்று ஓர் அசைவு சிகப்பு அங்கியில் தெரிந்தது. ஸ்வாமி எழுந்திருந்து அமர்ந்தார். ஸரஸமாக, ஸரளமாக ஸம்பாஷணை தொடங்கினார். தொடரும் கார்களில் வரும் பெண்டிர் தமது தேக நலிவை ஒருவாறு ஊகித்து, வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு வருகிறார்கள் என்று சொன்னார். காரை நிறுத்தினார். உடனே பின்வந்த வண்டிகளும் நின்றன. பகவான் ஒவ்வொரு வண்டியாகச் சென்றுஜோக்அடித்தார். உன்னத உண்மைகளும் சொன்னார். “பைத்தியங்களா! ஸ்வாமிக்கு மூட்டை கட்டிட்டீங்களா? அதெல்லாம் முடியாது. இன்னம் நாற்பத்தியேழு வருஷம் இந்த சரீரத்தை எதுவும் அசைக்க முடியாது. ஒண்ணு தெரிஞ்சுக்கோங்கோ! ஸ்வாமி மயக்கம் மாதிரிப் படுத்துண்டாகூட அவருக்கு ஒருபோதும் பிரக்ஞை தப்பவே தப்பாதுன்னு உறுதிப் பண்ணிக்கோங்கோ! ஸ்வாமிக்கு உணர்ச்சி இல்லாமப் போச்சுன்னா அப்புறம் லோகம் அரை க்ஷணம் இருக்க முடியுமா?” என்றார். “இப்பக்கூட என் கைப் பக்கமெல்லாம் மரத்துத்தான் இருக்கு. சரீரம் முழுக்கவே இப்படி மரத்தாகூட ஸ்வாமிக்கு ஸ்மரணை மட்டும் தப்பவே தப்பாதுஎன்று அடித்துச் சொன்னார்.

உடன் கொண்டு வந்திருந்தஜயன்ட் ஸைஸ்டஃபன் காரியரில் இருந்த சிற்றுண்டிகளை எல்லோருக்கும் விநியோகிக்கச் செய்து வயிறுகளையும் நிரப்பினார்.

பிருந்தாவனத்தை அடைந்து இறங்கிச் செல்கையில் ஸ்வாமியிடம் நோய் அறிகுறி ஏதும் இல்லை.

ஆயினும் மறுதினம் கையின் மரத்த நிலை மற்ற பத்திகளுக்கும் பரவியது. முன்தினம் ஸ்வாமி அடித்துச் சொல்லியிருந்ததிலிருந்து பக்தர்கள் கலங்காமலே இருந்தனர். நம்பிக்கை வீண்போகாமல் அதற்கடுத்த நாளே மாரத்த பகுதிகளில் ஜீவ இயக்கம் பூர்ணமாக உண்டாயிற்று. இருந்தாலும் இதற்குப் பின்னும் ஒரு மாதம் ரத்த அழுத்தம் மட்டும் நீடித்தது. மூன்று மாதங்கள் அதை வைத்துப் போஷித்த பின், 1974ம் ஆண்டு விடை பெறுகையில் அதற்கும் விடை கொடுத்து அனுப்பினார் பகவான். இதனிடையில் எத்தனை பேரின் வினையைத் தியாகி தீர்த்தார் என்பதற்கு யாரே விடை அறிவார்?

***

மக்கு நூறு டிகிரி ஜுரமானாலே நடக்க முடிவதில்லை, பேச முடிவதில்லை. 1973ம் ஆண்டு ஸம்மர் கோர்ஸின்போது (வேண்டுமென்றே அவர் இதுபோன்ற நெரிக்கும் அலுவலுள்ள சமயங்களில்தான், தாம் அழைக்கும் ஏராளமான விருந்தாளிகளில் ஒருவராக நோயையும் வரவேற்று வைத்துக்கொள்கிறார்!) பாபாவுக்குப் பல தினங்கள் விடாமல் 105 டிகிரியாக்கும் ஜுரம் காய்ந்திருக்கிறது! அவர் அடித்த கும்மாளத்தைக் கண்ட ஸம்மர் கோர்ஸ் மாணவர்களோ ஆசிரியர்களோ இதை நம்புவரோ?

சிகித்ஸையே இன்றி அவர் நோயைத் தீர்த்துக் கொண்டதையும், நோய்க் காலத்திலும் பொது மக்களுக்கு அது தெரியவே தெரியாதபடித் தம் கடமைகளை ஆற்றியது பற்றியும் ஒருவர் குறிப்பிட்டபோது பகவான் சொன்னார்: “சிகித்ஸை செய்து கொள்ளாததாலேயேதான் நோய் தீர்ந்தது. சிகித்ஸை மட்டும் செய்து கொண்டிருந்தேனோ, ‘நம்மை ஸ்வாமி பொருட்படுத்துகிறார்என்று நோய்க்கு உத்ஸாஹம் ஏற்பட்டு, அது என் தலையிலேயே ஏறி உட்கார்ந்து கொண்டிருக்கும்!”

ஸ்ரீ ரமண பகவானும் இப்படிக் கூறுவதுண்டு.

***

1974மார்ச்சில் பகவானுக்கு ஏற்பட்ட பாரிச வாயு பற்றிச் சென்ற அத்தியாயத்தில் குறிப்பிட்டிருந்தோம் அல்லவா? இது மாந்திரீக யோகியின் காரியம் என்பது சிலரது ஹேஷ்யம் என்றும் சொன்னோம். இப்படி ஹேஷ்யம் செய்ய ஒரு காரணமுண்டு. மற்ற சமயங்களில் நோயுண்டபோது 1963 குருபூர்ணிமையன்று பக்த கோடியர் வியக்க ஸ்வாமி தீர்த்துக்கொண்ட கொடிய பாரிசவாயுவின்போதுகூட25 அவர் பக்தர் பிணிகளைத் தாம் வலிந்தேற்றே வியாதி உறுவதாகவும், அவர்களது கர்மாவை அடர்த்தியாக்கித் தாம் விரைவே அநுபவித்துத் தீர்த்தவுடன் நோய் விலகி விடுகிறதென்றும் கூறியிருக்கிறார். அதாவது அடியார் வினை தவிர வேறு வெளிக்காரணமேதும் தமது நோய்க்கு இல்லை என்று கூறியிருக்கிறார். ஆனால் இந்த ’74பாரிச வாயுவின்போதுமட்டும் தமது உணவில் கலந்து வைக்கப்பட்ட விஷம்தான் வியாதிக்குக் காரணம் என்று கூறினார். இதனால்தான் சில அடியார்கள் முன்னே சொன்னதுபோல் ஹேஷ்யம் செய்தது. ஆயினும் இது சரியல்ல. அமிருத சைதன்ய ரூபிணி என்று கூறப்படும் பராசக்தியான ஸாயியை நஞ்சு வெறும் நஞ்சாகவே உள்ள நிலையில் தாக்க முடியாது. ஆகையால் பரமேச்வரன் எப்படி நஞ்சு என்ற உருவில் நானிலத்தோரின் நரக வினையையே கண்டத்தில் ஏற்றானோ அப்படியே ஸ்வாமியும் செய்தாரென்பதுதான் பொருத்தம். இயேசுநாதன் வெளிப் பார்வைக்குப் பகைவரால் சிலுவையில் அறையுண்டு உயிர் நீத்ததாகத்தான் தெரிகிறது. ஆனாலும் இதன் வழியே அவர் பாரோரின் பாப பாரத்தை ஏற்றுத் தீர்த்தார் என்றுதானே நம்புகிறோம்?

இப்படி விஷம் வைத்தது முன்கண்ட யோக மாந்திரீகர் அல்ல என்பதற்குக் காரணம் ஸ்வாமியின் திருவாக்கிலிருந்தே வெளியாகிறது. “எல்லாம் அறிந்த நான் ஏன் விஷ உணவை உண்டேனென்றால், எனக்கு அது விஷம் என்று தெரிந்தது மட்டுமின்றி யார், எந்த உத்தேசத்தில் அதை வைத்திருக்கிறார் என்பதும் தெரிந்ததுதான்.

26ஸ்வாமி”: ‘தியாக ஸாயிஎன்ற 51ம் அத்தியாயம்.

பாபா மட்டும் கடவுளானால் இக்கொடிய விஷத்துக்கும் பிழைத்துக் காட்டட்டுமே!’ என்று எண்ணித்தான் அந்த நபர் இப்படிச் செய்தார். ‘அப்படியா, நாயனா! உனக்கு இப்படித்தான் நம்பிக்கை ஏற்படும் என்றால், ஸ்வாமி இப்படியும் நிரூபணம் தருகிறேன்என்றே நானும் அதை உவந்து ஏற்றேன்என்று பகவான் சொல்லியிருக்கிறார். அதனால் பாபாவைக் கடவுளாக ஒப்புக்கொள்ளவே ஒருவர் வைத்த பரீக்ஷை இது அவர் கடவுளாக இல்லாவிடில் தனது பரீக்ஷையால் இறந்துபடுவாரே என்பதை யோசியாமல் அசட்டு முரட்டுத்தனத்தில் செய்த பரிசோதனையே இது என்று தெரிகிறது. நாம் சொன்ன யோகியோ எவ்விதத்திலும் ஸ்வாமியின் கடவுள் தன்மையை ரூபித்துக்கொள்ள விரும்பாமல் அவரை ஜன்மப் பகையாகக் கருதுகிறவர். பரீக்ஷை செய்தது அவரானால் பிற்பாடு அவர் பாபாவை மரியாதை செய்திருக்க வேண்டுமே! ஆனால் இன்றளவும் அந்த யோகி பாபாவுக்கு எதிராகத்தான் (காரியத்தில் செய்ய முடியாமல் தோற்றுப்போனாலும்) வாய்ப் பிரசாரம் செய்து வருகிறார். ‘சரி, அப்படியானால் பாபாவை மெய்யாலுமே பரீக்ஷித்தவர் பிற்பாடு அவரை பகவானாக ஏற்றாரா?’ என்றால், ஏற்றிருக்கலாம். அவர்தான் இன்னார் என்று ஸ்வாமி அடையாளம் கூறவேயில்லையே! ஸ்வாமியின் பேட்டி அறையில் எவ்வளவோ அந்தரங்கங்கள் வெளியாகின்றன ஆயினும், வெளியுலகுக்கு ரகசியமாகவே! இப்படி அந்த நபரும் ஸ்வாமியிடம் மன்னிப்புக் கோரி, அவரை அவதாரனாக ஏற்றிருக்கலாம். ஸுகுணபர்வதமான ஸ்வாமி, “நீ இதை பகிரங்கமாகச் சொல்லிக் கொள்ள வேண்டும்என்று சொல்லி அவருக்குப் பலரது வெறுப்புணர்ச்சியை ஈட்டிக் கொடுப்பாரா என்ன?

ஸம்பவத்தைப் பார்க்கலாம்:

1974 மார்ச் நடுவில் ஸ்வாமி புட்டபர்த்தியிலிருந்து பெங்களூருக்கு வந்தார். மைசூரிலுள்ள பிருந்தாவனப் பூங்காவின் படி வரிசைகளில் காவிரி சரிவதே போன்ற ரம்மியமான விரைவோடு நடைபயிலும் நம் காவியக் காவிரித் தாய், ஒயிட்ஃபீல்ட் பிருந்தாவனத்தில் காலை சற்றே சிரமத்துடன் ஊன்றி ஊன்றி நடப்பதைப் பார்த்த அடியார் திடுக்குற்றனர். அதைப் பற்றிக் கேட்டபோது, வழக்கமாக உதாஸீனம் செய்வது போலன்றி, “ஆமாம், பாதம், கணுக்காலெல்லாம் வலிக்கிறதுஎன்றார். பரந்தாமன் வலி என்று சொல்லக் கேட்க பக்தர் நெஞ்சுகளுக்கும் வலித்தது. ஓரிரு தினங்களில் வலி முழங்கால், தொடை என்று பரவிக்கொண்டே போயிற்று. அதன்பின் வலியே தெரியாமல் மரத்துப் பாரிச வாயு போன்ற நிலை ஏற்பட்டது. ஸ்வாமியால் நிற்கவும் முடியாமலாயிற்று. வெளியே வந்து தரிசனம் தருவதை நிறுத்தினார். ஆயிரமாயிரம் நெஞ்சங்களுக்குச்சொரேல்என்றாயிற்று.

கட்டை போலாகிவிட்ட கால்களைத் தரையில் நீட்டி இழுத்தபடியே ஸ்வாமி பாத்ரூமுக்குச் செல்ல வேண்டியதாயிற்று. அந்த நிலையிலும்கூடத் தம்மை மற்றவர் தூக்கிச் சென்று ஸ்நானம் செய்விக்கவும், தமக்கு பெட்பான் வைக்கவும் அனுமதிக்காமல், தாமே இப்படி நிலத்தோடு தேய்த்துக்கொண்டு சென்றார். “நான் சேவை செய்ய வந்தவனேயன்றி, சேவை பெற்றுக்கொள்வதற்கு அல்லஎன்றார்.

ஸ்வாமியின் ஸ்தாபனங்களில் முக்கிய அங்கத்தினரில் ஒருவரான டாக்டர் ஸுந்தர ராவ் அவரது உணர்ச்சி நிலை அறிவதற்காகக் காலை ஊசியால் குத்திப் பார்த்தார். ஸ்வாமிக்குச் சற்றும் வலி தெரியவில்லை சரியாகச் சொல்ல வேண்டுமானால், ஸ்வாமியின் மானுடச் சட்டை வலியைக் காட்டும் எந்த ரிஃப்ளெக்ஸையும் காட்டவில்லை. அச்சமுற்ற அவர் இப்படியே நாட்கள் ஓடிக் கொண்டிருப்பதைக் கண்டு, பிரஸித்தமான ஒரு ந்யூரோஸர்ஜனை அழைத்து வந்து காட்டுவதற்கு அனுமதி பாசித்தார். வள்ளல் இந்த யாசகத்துக்கு மறுப்புத் தெரிவித்தார். “இதற்கு எந்த டாக்டரும் எதுவும் செய்ய முடியாது. உரிய சமயத்தில் நானே சொஸ்தப்படுத்திக் கொள்வேன். நான் சொல்வதை நம்புங்கள். கவலையை விடுங்கள்என்றார்.

முற்றிலும் விஷத்தாலேயே ஏற்பட்ட வியாதி என்றால் அதை வைத்தியத்துக்குக் கட்டுப்படாது என்று பாபா சொல்லியிருப்பாரா? ஆகையால் விஷ ரூபத்தில் வினைகளைத்தான் அவர் ஏற்றிருக்கிறார் என்பதே சரியாயிருக்கலாமெனப்படுகிறதல்லவா?

வெளிஜனங்கள் தம் வியாதி பற்றி விபரீதக் கற்பனைகள் செய்துகொண்டு வியாகுலமுறுகிறார்களே என்று இரங்கினாள் ஸாயித்தாய். அதனால் அவர்கள் கண்ணுக்குத் தெரிகிறபடி மாடியில் ஒரு கதவைத் திறந்து வைத்துக்கொண்டு அதனருகே உட்கார்ந்தபடி ஏதோ பெரிய எழுத்து வேலையில் முழுகியிருப்பதாக லீலா நாடகத்தில் ஓர் உபாங்கம் போட்டார்! ஸ்வாமிக்கு நிற்கிற சக்தி போய்விட்டது என்பதில் அவர்களுடைய நெஞ்சம் நொடித்து விழக்கூடாதே என்ற கரிசனத்தில், இரு பரிஜனங்களை அவர்களுக்குத் தெரியாமல், மறைவாகத் தம்மை இரண்டு பக்கங்களில் தாங்கிக்கொள்ளச் செய்து, தாமாக ஜம்மென்று நிற்பதுபோல் திறந்து வைத்த ஒரு கதவின் வழியே காட்டி, தரிசன பாக்யமும் ஈந்து வந்தார். கருணைக்காகவே கபடம்!

ஸ்வாமி நம்பச் சொல்லியும் கூட, அவரது மாளிகைக்குள் செல்லக்கூடிய ஸாமீப்ய பக்தர்கள் நாள்கள் ஓட ஓட நம்பிக்கை இழக்கத்தான் செய்தனர்.

இந்தச் சமயத்தில்தான் ஸ்வாமி இது விஷ உணவை உண்டதன் விளைவு என்றும், மிகவும் கடுமையான அந்த நஞ்சு உடனே கொல்லாமல் அங்க அங்கமாக முடக்கிக்கொண்டே போய் இறுதியில் உயிரையே குடிக்கவல்லது என்றும் குண்டைத் தூக்கிப் போட்டார். “புட்டபர்த்தியில் நான் இருக்கும்போதே விஷம் வைக்கப்பட்டது. இங்கு வந்தபின் அது வேலையைக் காட்ட விட்டிருக்கிறேன்என்று கூறி வயிற்றைக் கலக்க வைத்தார்.

(அதுவரையில் புட்டபர்த்தியில் அடியார் பலர் சமைத்து அனுப்பும் உணவு வகைகளை ஐயனின் போஜன மேஜையில் படைக்கும் வழக்கம் இருந்தது. இச்சம்பவத்துக்குப் பின்தான், மீளவும் இதுபோல் தாங்கள் கதி கலங்க ஸ்வாமி வாய்ப்புத் தரக்கூடாது என ஆஸ்தான அடியார்கள் வேண்டியதன் மீது, பக்தர்கள் உணவு அனுப்புவது தடை செய்யப்பட்டது.)

விஷத்தை நான் சாப்பிட்டிருக்காவிட்டால் ஒரு வேளை அது என் டைனிங் டேபிளுக்கே வந்து சேரவில்லையோ என்று அந்த ஆசாமி நினைத்திருப்பார். அதனால்தான் சாப்பிட்டேன். சாப்பிட்டும் சொஸ்தமாகவே இருந்தேனானாலும், அவர் நான் சாப்பிடவே இல்லை போலிருக்கிறது என்றுதான் எண்ணியிருப்பார். அதற்காகத்தான் கொஞ்சம் பாதிக்கப்பட்டும் காட்டுகிறேன்எனக் கூறினார் ஸ்வாமி.

நன்றாகத் தெரிந்தும் இப்படி விஷத்தைச் சாப்பிடலாமா ஸ்வாமீ?” என்று ஒருவர் விம்மிக்கொண்டே கேட்க, ஸ்வாமி மந்தஹஸித்து, “நைவேத்யம் பண்றவங்களை ஏமாத்தலாமா? பஜ்ஜி, பகோடா நைவேத்யத்தை மட்டும் ஸாப்பிடற ஸ்வாமி, இந்த நைவேத்யம் மட்டும் வேணாம்னு ஒதுக்கலாமா?” என்றார்.

பாபா கடவுளாக இல்லாவிட்டால் அதற்காகச் சாவு மூலம் விடையிறுத்தாக வேண்டும் என்று நினைத்த அவிவேகியைக் கடைசிவரை தாம் கடவுள் இல்லை என்று நம்பவைத்து, அப்புறமே ஸ்வரூபப் பிரபாவத்தை வெளியிட வேண்டுமென ஸ்வாமி எண்ணினார் போலும்! தினே தினே நோய் முற்றியது. மீராவின் விஷத்தை ஏற்ற கண்ணன், விக்ரஹத்தில் மட்டும் நிறம் மாறி தன் உயிருடம்பில் மாறாததுபோல் பாபா இல்லை; ஹெம்லக் விஷம் ஊட்டப்பட்டு சில மணிகளுக்குள் மரித்த ஸாக்ரடீஸாகவும் அவர் இருக்கவில்லை. இந்த அவதாரத்துக்கென்று புதிதாக, புதிராக விளையாடினார். ஆனால் விளையாட்டாகவா தெரிந்தது?

ஒரு நாள் ஸுந்தரராவால் பொறுக்க முடியாமலாகி, “ஸ்வாமி, நீங்கள் நாளைக்கு ஸாயங்காலம் ஆறு மணிக்குள் ஸ்வஸ்தப்படுத்திக் கொள்ளாவிட்டால் நான் ஸ்பெஷலிஸ்ட்ஸை அழைத்துக்கொண்டு வந்து டெஸ்ட்கள் செய்து ட்ரீட்மென்ட் ஆரம்பிக்கத்தான் போகிறேன்என்று கெடு வைத்தார்.

ஸ்வாமி ஒன்றும் சொல்லவில்லை. என்ன அழுத்தக்காரரப்பா!

அன்றிரவு ஸுந்தர ராவுக்கு ஒரு கனா வந்தது. உணர்விழந்த பாபாவின் கால்களின்மீது தாம் தண்ணீர் தெளிப்பது போலக் கனவு. ‘1963 குரு பூர்ணிமையில் தீர்த்தத்தைப் புரோக்ஷித்துக் கொண்டுதானே ஸ்வாமி பாரிச வாயுவுற்ற இடது பாகத்தை ஸ்வாதீனத்துக்குக் கொண்டு வந்தார்? அந்த ஞாபகம்தான் இப்படிக் கனவாயிருக்கிறதா? அல்லது மெய்யாலுமே நாளை மாலை ஏற்படவிருக்கும் ரோக நிவாரணத்துக்கு இது முன்னறிவிப்பா!’ ராவுக்குப் புரியவில்லை.

மறுநாள் நோய் மேலும் மோசமாயிற்று. கால்களில் மேலும் ஸ்மரணையற்ற நிலை பரவியிருந்தது. ஆறு மணி கெடுவும் வந்துவிட்டுப் போயிற்று. முதல் நாள் பிரமாதமாகப் பேசிய ராவ் ஒன்றும் செய்ய முடியாமல் கப்சிப் என்று கிடந்தார். வேதனை மட்டும் அரித்தெடுத்தது.

ஸ்வாமி தமது துள்ளு நடைத் தெள்ளுப் பாதங்களைத் தரையோடு தேய்த்துக்கொண்டு குளியலறைக்குப் போனார்.

அவதாரமேயான இயேசு அந்திமத்திலே தமக்கும் மேம்பட்ட ஓர் ஈசனிடம், ‘என் இறைவா! என்னை ஏன் கைவிட்டாய்?’ என்று சிலுவையிலிருந்து புலம்பிக் கேட்டாரே, அதுபோல அவதார ஸாயியையும் அவருக்கு மேலான ஒரு மஹாசக்தி கைவிட்டுவிட்டதா? ‘குணம் ஆவேன், ஆவேன்என்று இவர் சொன்னாலும் ஆவாரா? அவரால் தன்னாலேயே செய்து கொள்ளக்கூடியதுதானா அது?” என்றிப்படி அவரது அத்தியந்த பக்தர்களே துக்கத்தோடு தங்களுக்குள் அப்போது கசமுசத்துக் கொள்ளலாயினர்.

பாரிச வாயு இழுத்த நிலையில் பாரிஜாத பாதங்களை இழுத்தபடிக் குளியலறையிலிருந்து ஸ்வாமி திரும்பினார். இரண்டு மூன்று பேராகத் தாங்கி அவரை நாற்காலியில் அமர்த்தினர். நீண்ட நேரம் மௌனத்தின் சோகத்தில் தேய்ந்தது.

பக்கத்தில் மேஜையில் வைத்திருந்த டம்ளரை எடுத்து ஸ்வாமி சிறிது நீர் பருகினார்.

போதும் என்கிற அளவுக்கு இதை அனுபவிச்சாச்சு. இதை முடிச்சாகணும்என்று தமக்குத் தாமே சொல்லிக்கொள்வதுபோல் வாய்விட்டுக் கூறினார்.

அவருடைய கண்களில் அபரிமிதமான ஓர் அதிகார சக்தி பளிச்சிட்டது.

கூடியிருந்த அனைவருக்கும் மின்சாரம் பாய்வதே போல் அது புலனானதால், ‘ஏதோ மகத்தானதாக நடக்கப் போகிறதுஎன்ற எதிர்பார்ப்புடன் அவர்கள் முதுகை நிமிர்த்தி அமர்ந்து ஸ்வாமியிடம் பார்வையைப் புதைத்தனர்.

1963 குரு பூர்ணிமா போலவே நடந்தது. ஸ்வாமி தன் திருவிரல்களை டம்ளருள் விட்டு எடுத்து, சில துளி நீரை வலது கால் மீது தெளித்துக்கொண்டார். காலை முன்னோக்கி வீசி உதறினார்; பின்னுக்கும் ஆட்டினார். தத்க்ஷணமே அந்தக் கால் நல்ல ஆரோக்கிய நிலைக்கு வந்துவிட்டது தெற்றெனத் தெரிந்தது!

அடியார்களின் தொண்டையிலிருந்து பலவிதமான சப்த ஜாலங்களாக ஆனந்த கோஷம் எழுந்தது.

ஸ்வாமி இடது கால் மீது நீர் தெளித்துக் கொள்ளுமுன், ஸுந்தர ராவ், அந்தக் காலின்மீது தாம் புரோக்ஷணம் செய்வதாக முதலிரவு கண்ட ஸ்வப்னத்தைச் சொல்லி, “ஸ்வாமி! போயும் போயும் எனக்கா இப்படிப்பட்ட சக்தி இருக்கமுடியும்?” என்றார்.

ராஜாதிராஜ கம்பீரமுடன் பகவான் பளிச்சென்று, “ஏன் இல்லாமல்? நான் உனக்கு அந்த அதிகாரம் கொடுத்தால் ஏன் முடியாது?” என்றார்.

டம்ளரை ராவின் முன் நீட்டினார். அவர் வாங்கிக் கொண்டபோதே, ஸாயிதெரபி சக்தியையும் ஸ்வாமி கொடுக்க, அதையும் சேர்த்து வாங்கிக் கொண்டார் போலும்! நடராஜப் பெருமான் தமது எல்லாம் வல்ல சித்தை வள்ளலாருக்கு ஈந்தது போல், தாற்காலிகமாக பாபாவும் தம் சொஸ்த சக்தியை ராவுக்கு அளித்தார் போலும்!

ராவ் ஜலத்தில் சில துளிகளை எடுத்து பகவானின் இடது காலின்மீது தெளிக்க, அவர் வலது பாதத்தைப் போலவே இதையும் ஆட்டி உடனுக்குடன் வழங்குமாறு செய்து கொண்டார்.

ஸ்வாமியின் ஸங்கற்பமேதான் சொஸ்தப்படுத்தியதே தவிர, அந்த ஜலத்தில் என்ன சக்தி இருந்தது? இருந்தாலும் இப்படி லீலை செய்தார்! ராவுக்கு இயல்பாக இல்லாத ஆற்றலை வழங்கியது போலவே, அவர் தெளித்த நீருக்கும் ஸ்வாமியேதான் மருத்துவ ஆற்றலைத் தந்திருக்கிறார்!

1963 குரு பூர்ணிமையின்போது, எந்தக் காலத்திலோ பரத்வாஜர் பொருட்டுச் சக்தியன்னை ஏற்ற சாபத்துக்காக ஸ்வாமி தமது இடபாகத்தே நோயுற்று, அதிலேயே ஓர் அடியாரின் உபாதையையும் இழைத்துக் கொண்டு, பிறகு கணத்தில் குணமாக்கிக் கொண்டார். இப்போது 1974ல் எவரோ வைத்த விஷத்தோடு, லோக வியாபகமான கலியின் நச்சிலும் ஒரு பகுதியைக் கரைத்துக் கொண்டு அனுபவித்துத் தீர்த்தார் போலும்! லோகம் சிவசக்தியர் வடிவானதால் இப்போது நம் சிவசக்தி இணையவதாரர் இரு கால்களிலும் நோயுற்றாரெனலாம். அன்று, அமைதியின் பெயர் கொண்ட பிரசாந்தி நிலயத்தில் அமர்க்கள லீலையாக மக்கள் காண சொய்தமாக்கிக் கொண்டவர், இன்று லீலைக்கே பெயரெடுத்த பிருந்தாவனத்தில் ஒருசிலர் மட்டுமறிய அமைதியாக குணம் செய்து கொண்டது வேறென்ன சொல்ல? லீலா நாடகத்தில் இன்னுமொரு விநோதந்தான்.

நாற்காலியில் அமர்ந்து இரு கால்களையும் இயக்கிய ஸ்வாமி எழுந்திருந்து நடந்து சென்றார் எதுவுமே நடக்காதது போல.சோலைப் படிவரிசைக் காவிரியாகக் கழலிணை குலுகுலுத்து நகர்ந்தன. குதூகலித்த ஆஸ்தான பக்தர்களின் கண்கள் அக் காவிரியின் காட்சியில் கங்கையைப் பொழிந்தன!