17. வைத்யநாதன்
வேடிக்கை விநோதராக விளையாடிக்கொண்டே ஸ்வாமி வியத்தகு அற்புதங்களைச் செய்து கொண்டு விபத்துக்களிலிருந்தும் வினைகளிலிருந்தும் நம்மை ரக்ஷித்து வாழ்வளித்து வருகிறார். வேடிக்கை விநோதமும் நமது மனத்துயர வியாதிக்கு மருந்தாகவே அருள்கிறார். “Joy is medicine ஆனந்தமே ஒளஷதம்” என்பார். வேறு பல பௌதிக வியாதிகளையும் தீர்த்து அவர் உடல் நலம் பேணும் உபகாரத்துக்குச் சில எடுத்துக்காட்டுப் பார்க்கலாம்.
இயேசுநாதன் எப்படித் தம்மை அண்டியோரின் உடலை ஒதுக்கி உயிரை மட்டும் காப்பது என்று வைத்துக் கொள்ளாமல், அவர்களது தேக நலனிலும் ஆழ்ந்த அக்கறை காட்டி நோய்களைத் தீர்ப்பதைத் தமது முக்கியப் பணிகளில் ஒன்றாகக் கொண்டிருந்தாரோ அப்படியேதான் நம் ஸ்வாமியும் செய்கிறார். உடலுக்காக உடலைப் பேணாமல் உயிருக்காக உடலைப் பேணுவதை வலியுறுத்திச் சொல்கிறார். ‘இறைவன் உள்ளுறைவதால் உடலும் இழுக்கற்றதல்ல என்று உணர்ந்துவிட்டேன்‘ என்ற திருமூலரின் கருத்தை பகவானும் பகர்வார். “சரீரம் ஈச்வரனின் வாஸஸ்தானம். ‘தேஹோ தேவாலய: ப்ரோக்தோ‘ என்று சொல்லியிருக்கிறது. அந்தக் கோயில் பழுதுபட விடலாமா?” என்பார். உடல் நலத்தை அலக்ஷியம் செய்து ‘ஊனினை உருக்கி‘ ஓரளவு ‘உள்ளொளி பெருக்கிய‘ ஒரு ஸாதகரிடம் ஸ்வாமி உரிமையோடு கோபித்து, ஆரோக்யம் இல்லாட்டி துஷ்டி ஏது, புஷ்டி ஏது?’ என்றார். அப்போது உடனிருந்த இன்னொருவர் அந்த ஸாதகருக்குப் புஷ்டி இல்லாவிட்டாலும் துஷ்டிக்குக் குறைவில்லை என்றும், நல்ல ஆரோக்கியமுள்ள தங்களைப் போன்றோருக்குத்தான் புஷ்டியிருந்தும் துஷ்டி இல்லை என்றும் கூறினார். ஸ்வாமி அவரை வெட்டினார்: “ஒரு ஸ்டேஜ் மட்டும் புஷ்டியில்லாமலே துஷ்டியிருக்கும். டம்ப்ளர் திராபையா இருந்தா என்ன, உள்ளே இருக்கிற பாலுக்கு அதனாலே என்ன பாதகம்னு இருக்கும். அப்பறம் திராபை டம்ப்ளர் நசுங்கி ஆட ஆரம்பிச்சா உள்ளேயிருக்கிற பாலும் கொட்ட வேண்டியதுதானே?”
“விரதம் இரு, உபவாஸம் இரு, காயக் காயப் போடு” என்று ஸாயி அன்னபூர்ணி சொல்லவே மாட்டாள். “நல்லா ஸாப்டு” என்றுதான் சொல்வாள். அவர் நடத்தும் விருந்துகளிலும், கான்டீன், ஹாஸ்டல் முதலியவைகளிலும் வயிறார வகை தொகையாகப் போடுவது பிரஸித்தம்.
மனநலனை மறக்காமலே தேக நலனைக் காக்கச் சொல்வதில் அவர் தவற மாட்டார். புலால் ஆத்மிக அபிவிருத்திக்கு உகந்ததல்ல என்பார். ஸத்வ போஜனத்தையே சிலாகித்துச் சொல்வார். இதில் ஸ்வாமி சொல்லும் ஒரு புதுக்கருத்து: பால்கூட ஓரளவுக்குமேல் போனால் ஸத்வ உணவாக இன்றி ரஜோகுணத்தை உண்டாக்குவதாகி விடுமாம். ஓரளவோடு பாலை நிறுத்திக்கொண்டு மோர் நிறையச் சேர்த்துக்கொள்வதே உடல், உள்ளம் இரண்டுக்கும் சிறந்தது என்கிறார்.
தற்காலத்தில் வியாதிகள் பரவியிருப்பதற்கு ஸ்வாமி காரணம் கூறுவார்: “ஆசைகள் ஜாஸ்தியாகி விட்டதால் ஜனங்களின் ஆட்டங்கள் அதிகமாகிவிட்டன. உடலாலும், மனத்தாலும் ஓயா அலைச்சலில் சுமையைத் தூக்கி வைத்துக்கொண்டிருக்கிறார்கள். புகைப்பிடிப்பது, மதுபானம், நெடுநேரம் க்யூ நின்று இறுக்கமான தியேட்டர்களில் உட்கார்ந்து கொண்டு மனத்தைக் கெடுக்கும் ஸினிமாக்களைப் பார்ப்பது, வெயிலில் விளையாடுவது, விளையாட்டுப் பார்ப்பது, பண வேட்டையில் பறப்பது, பாலிடிக்ஸில் உணர்ச்சிவசப்பட்டு தொண்டையையும் நரம்பையும் நலிவித்துக் கொள்வது, நாகரிகம் என்று நினைத்துக்கொண்டு கூடை மயிரும் கசகசப்பு உடையுமாகத் திரிவது, கண்ட இடத்தில் கண்ட வேளையில் கண்டதைத் தின்பது, எதிலும் டிஸிப்ளின் இல்லாமல் ஒரே டென்ஷன் மயமாக்கிக் கொண்டிருப்பது ஆகியவற்றால்தான் இப்போது இதய நோய், ரத்த அழுத்தம், டி.பி, ஈஸினோஃபீலியா, கான்ஸர் எல்லாம் விருத்தியாகியிருக்கின்றன. நிம்மதியாக, லேசாக, எளிய வாழ்வு வாழ்ந்து கொண்டிருந்தால் முக்கால்வாசி வியாதி வராது. எல்லாவற்றையும்விட, அஹங்காரமில்லாமல், அதனால் ஏற்படும் விரோதமும் விவாதமும் இல்லாமல் அன்பாக இருக்கப் பழக்கிக்கொண்டால், அந்த அன்பு தரும் ஆனந்தமே மஹத்தான ஆரோக்கியமும் ஆகும்.”
தாம் அதீத முறையில் செய்யும் ‘வைத்தியம்‘ சிலருக்குப் பலித்தும், சிலருக்குப் பலிக்காமலும் இருப்பதற்கு ஸ்வாமி அவரவர் கர்மாவையே முக்யமான காரணமாகச் சொல்வார். கர்மாவை எந்த அளவுக்குக் கருணையால் கரைக்கலாம் என்பது அவருக்கே தெரிந்த கணக்கு. ஆயினும் தம்முடைய ‘மருத்துவம்‘ சக்திகரமாகப் பயனளிக்க நோயாளியின் ‘ஒத்துழைப்பு‘ம் வெகுவாக உதவுகிறது எனத் தெரிவிக்கிறார். “ஒவ்வொரு ஜீவராசியுடனும் நான் ஒன்றியிருக்கிறேன் என்பதே என் நிரந்தர அநுபவம். ஒவ்வொருவரையும் நானாகவே பார்ப்பதால் எவர்பாலும் என் பிரேமை பொங்கிப் பாய்கிறது. ஸ்விட்சோடு ப்ளக் சேர்கிறது போல, அந்த நபரும் சத்தமான அன்பையும் தளராத நம்பிக்கையையும் இரு ‘பின்‘னாகக் கொண்ட ப்ளக்காக என்னோடு சேர்ந்தால் ஆரோக்ய மின்சாரம் அவருக்குள் பாய்ந்து வியாதி தீருகிறது!” என்கிறார்.
ஸ்வாமி இப்படிச் சொன்னாலும் பரம பக்தர்களுக்கு நோய் தீராமலும், நம்பிக்கையில்லாதவர்களுக்கு நோய் தீர்வதாலேயே அவர்கள் நம்பிக்கை பெறுவதையும் நிறையப் பார்க்கத்தான் செய்கிறோம். இங்கே நமக்குப் புரியாத, புரிய முடியாத, புரியவேண்டும் என்ற அவசியமுமில்லாத, பூர்வஜன்ம கர்ம கணிதம் வந்து விடுகிறது போலும்!
***
நிலிமாவின் நோயில் ஸாயி சிகித்ஸை எத்தனை நம்பிக்கைக் குறைவான சூழ்நிலையிலே ஆரம்பித்தது?
பம்பாயின் பிரபலத் தொழிலதிபர்கள் வீட்டு நாட்டுப் பெண் இந்த நிலிமா. நல்ல செல்வச் செழிப்பில், திண்மையில், திருமணமான சிறிது நாளிலேயே சிறுநீரகத்தில் கடும் நோயுற்றாள் நிலிமா. இது பத்தாண்டு முன்பு 1959ல். பரிசோதனையில் பயங்கரமான முடிவு தெரிவித்தனர். சிறுநீரகங்கள் சாதாரணமாக இருக்க வேண்டிய அளவைப்போல ஏழரை மடங்கு வீங்கியிருந்தனவாம்! இங்கிலாந்திலோ அமெரிக்காவிலோ மட்டுமே செய்யக்கூடிய ஒரு அதி நுட்ப ஆபரேஷனைச் செய்து பார்த்தால் ஒரு சான்ஸ் இருக்கும் என்று சொல்லி விட்டனர். வசதி நிறைய உள்ள குடும்பமாயிற்றே! லண்டன் ஸெயின்ட் பால் ஆஸ்பத்திரியில் ஆபரேஷன் செய்ய ஏற்பாடாயிற்று!
மே மாதம், பாபா பம்பாய் விஜயம் செய்தார். நண்பரொருவர் அவர் தமது வீட்டுக்கு வருகை புரிவதையொட்டி நிலிமாவையும் அவளுடைய கணவர் ஆசீஷையும் அழைத்தார். இந்த தம்பதிக்கோ பாபாவிடம் கடுகளவும் நம்பிக்கையில்லை. நண்பர் துளைத்தெடுத்தார் என்பதாலேயே போனார்கள்.
அந்த நண்பருக்கும் சரி, வெளியார் எவருக்குமே சரி அவளுடைய உடல் கோளாறைப் பற்றித் தெரியாது. வீட்டார் ரகசியமாக விஷயத்தைக் காத்து வந்தனர். தன் வீட்டுக்கு மஹாபுருஷன் வரும்போது சிநேகிதர்கள் தரிசன பாக்யம் பெறட்டுமே என்ற எண்ணத்தில்தான் அந்த நண்பர் வற்புறுத்தி அழைத்திருந்தார்.
கூடியிருந்தோரிடை நடந்து வந்த ஸ்வாமி நிலிமாவைப் பார்த்ததும் அவளுக்கு நேரே அமர்ந்து விட்டார். அவளுடைய நோயைப் பற்றித் துல்லியமாக விவரித்தார். புல்லரித்தது புதுத் தம்பதியருக்கு.
அங்கிருந்து புறப்படுமுன் ஸ்வாமி ஒரு ருத்ராக்ஷம் சிருஷ்டி செய்து நிலிமாவிடம் கொடுத்தார். “இதைத் தீர்த்தத்தில் போட்டுப் பத்து நாள் குடித்துப் பார். ரொம்ப ரிலீஃப் தெரியும்” என்றார்.
பிறவியில் ஜைனர்களும், நடக்கையில் எவ்வித ஸமயாநுஷ்டானமுமில்லாதவர்களுமான ஒரு வீட்டில் ருத்ராக்ஷச் சடங்கு ஆரம்பமாயிற்று; நிலிமா ஆசீஷுடனும், தன் பெற்றோருடனும், முன்னமே செய்திருந்த ஏற்பாட்டின்படி லண்டனுக்குப் புறப்பட்ட தினமே ருத்ராக்ஷ தீர்த்த பானத்தில் பத்தாவது நாளாகவும் அமைந்தது.
லண்டனில் டாக்டர் ஃபெர்கூஸன் சில சோதனைகள் செய்துவிட்டுப் பிறகு ஆபரேஷன் தேதி தெரிவிப்பதாகச் சொன்னார்.
அவர் தெரிவிக்குமுன்பே ஸ்வாமி அவளுடைய கனவிலே தோன்றித் தெரிவித்தார். “ஒர்ரி பண்ணிக்காதே; நான் கூடவே இருக்கேன்.”
சோதனைகள் ஆனபின் ஆபரேஷனுக்குத் தேதி சொல்வதற்குப் பதில் அவர்களுக்கு ஆச்சரிய சங்கதி சொன்னார் ஃபெர்கூஸன்.
சோதனைகளிலிருந்தும் புதிதாக எடுத்த படங்களிலிருந்தும் அவளுடைய சிறுநீரகங்கள் இயல்பான அளவுக்குச் சுருங்கிவிட்டதாகத் தெரிகிறதாம்! ஆபரேஷனுக்கு அவசியமே இல்லையாம். “இது எப்படி நடந்தது என்று எனக்குப் புரியவில்லை என்று ஒளிவில்லாமல் ஒப்புக்கொள்கிறேன்” என்றார் அந்த டாக்டர். “பம்பாய் ரிப்போர்ட்கள் நோயைச் சந்தேகத்துக்கு இடமின்றிக் காட்டுகின்றன. ஆயினும் இப்போது முற்றிலும் மாறியிருக்கிறது” என்றார்.
அவர் சொன்னதில் நம்பிக்கையில்லாமல் நிலிமாவைச் சேர்ந்தவர்கள் லண்டனிலேயே உள்ள இன்னொரு டாக்டரையும் கலந்தாலோசித்தனர். ஃபெர்கூஸன் சொன்னது உறுதியாயிற்று.
ஆசீஷ் பம்பாயிலுள்ள தன் தகப்பனாருக்கு ஃபோனில் ஸந்தோஷச் செய்தி தெரிவித்தார். தகப்பனாரும் லேசில் நம்பாமல் ஃபெர்கூஸனுடனேயே தொடர்பு கொண்டு விவரமறிந்த பின்தான் நம்பினார்.
தகப்பனாருக்கும் தாயாருக்கும் பளிச்சென்று தோன்றியது: ‘பாபாவின் ருத்ராக்ஷ தீர்த்த மகிமைதான்!’
உடனே பிருந்தாவனத்துக்குப் பறந்தனர். ஸ்வாமியின் திருக்கண் இவர்கள் மீது விழுந்தவுடனேயே நகை தவழ, “அச்சா! இப்போ டாட்டர்–இன்–லா ஆல் ரைட் இல்லே? திருப்தியாச்சா?” என்றார்.
சிறுநீரகத்தின் முற்கால வியாதியால் நிலிமா புத்திரவதியாக முடியாதோ என்ற ஐயத்தையும் ஐயன் அருள் தீர்த்தது. சேதனா, ஹர்ஷ் என்று இரண்டு குழந்தைகள் மணியாகப் பிறந்தன.
நிலிமாவின் மாமனார் யார் தெரியுமோ? பிற்காலத்தில் பிரசாந்தி நிலயப் ‘பூர்ண சந்திர மன்றத்துக்கு யார் பெயரை ஸாக்ஷாத் பாபாவே ஒரு ஞாபகார்த்தம் போல இட்டாரோ, அந்த பாக்கியத்தை வானுலகிலிருந்து பெற்ற பூனம் சந்த் கமானிதான்! பெருமை வாய்ந்த அக்குடும்ப முழுதும் ஸ்வாமியோடு ஒட்டிக்கொண்டு அவரது உள்ளமுவக்கும் உயர்பணி பல புரிவதற்கு வித்து நிலிமாவுக்கு வந்த வியாதிதான்.’
“உங்கள் வியாதிகளை வாழ்த்துங்கள். அவைதானே பெரும்பாலும் உங்களை என்னிடம் கொண்டு வந்து விடுகின்றன?” என்று ஸ்வாமி சொல்வது வழக்கம்.
எனக்கு ஸஹோதர துல்யரான ஸ்ரீ ஆர். நாகராஜன் ஒரு முறை பகவானிடம் சொன்னாராம்: “ஸ்வாமி! பணம், வசதி, ஆரோக்யம், குடும்ப ஸௌக்யம் எதிலும் எனக்குக் குறைவில்லை. இந்தப் பெண் ஒன்று இப்படி சித்த ஸ்வாதீனமில்லாமலிருப்பதுதான் குறை.”
“குறையா? அதுதாண்டா உனக்கு குரு” என்று புன்னகைத்தார் பாபா. “உனக்குப் பணம், வசதி, ஆரோக்யம், குடும்ப ஸௌக்யம் இவை மட்டுமே இருந்த போது ஸ்வாமியின் அவசியம் தெரியாமல் நீ பாட்டுக்குத்தானே கண்டதே காட்சி என்று குஷியாக இருந்தே? இவளுக்கு இந்தக் கோளாறு வந்திருக்காவிட்டால் நீ என்னிடம் வந்திருப்பாயோ? பகவானைச் சேர வழிகாட்டுகிறவர்தான் குரு, இல்லையா? அதனால் உன் பெண்தான் உனக்கு குரு” என்றார்.
***
ஸ்வாமியின் ஆதி வாஸஸ்தானமான பாத மந்திரத்தில்தான் அவர் ஓரளவு மருத்துவ ரீதியாகவே தோன்றும் ஆபரேஷன்களையும் செய்திருக்கிறார் என்று எண்ணி வந்தேன். இன்றைய பிரசாந்தி நிலயத்திலும் அவர் ஆபரேஷன் செய்திருக்கிறாரென்று சமீபத்தில் தெரிந்தது.
திராவிடக் கழகத்தைச் சேர்ந்த சேலம் ரயில் வழியர் முனுசாமி ஸ்வாமியைப் பரீக்ஷை பார்க்கவே பிரசாந்தி நிலயத்துக்கு வந்தார். ஸ்வாமி பேட்டி கொடுத்தார். பேட்டியில் நடந்ததை அவர் வெளியிடவில்லை. ஆனாலும் அதன்பின் அந்தப் பரம நாஸ்திகர் பரம ஆஸ்திகராகி, தயங்காமல் அதை வெளிப்படவும் காட்டிக் கொண்டார்.
அவரிடம் ஒரு குண விசித்ரம். நாஸ்திகராக இருந்தபோதும் சரி, ஆஸ்திகரான பின்பும் சரி, யாரிடமும் அடித்துப் பேசுவார். அவருடைய எண்ணத்தில் ஒரு எளிமை இருக்கும். அதைச் சொல்வதில் ஒரு வலிமை.
பிற்பாடு தமது பையன் வயிற்று வலியில் துடித்தபோது பிரசாந்தி நிலயத்துக்கு அழைத்து வந்தார்.
ஸ்வாமி இண்டர்வ்யூ தந்து, விபூதி படைத்துப் பையனிடம் கொடுத்து, “கொஞ்சநாளில் சரியாகிவிடும்” என்றார்.
முனுசாமி மகாசாமியிடம் தம் சுபாவப்படிக் கறாராக ஆரம்பித்தார்: “சாமி! இந்தக் ‘கொஞ்சநாள்‘ சாரமெல்லாம் வேணாம். இப்போ, இந்த நிமிஷமே பையனை சரிப்பண்ணிப்பிடுங்க. நான் திரும்பிப் போற வழியிலேயே இவன் வயித்துவலி என்கிறது; அப்பறம் ஊருக்குப் போனவிட்டு அங்கேயிருக்கிறவங்க, “பாபாகிட்டே போனியே, இன்னம் சரியாகல்லையா?ன்னு கேலியாக் கேக்கறது இந்த ரோதனைங்கள்ளாம் எனக்கு வேணாம். இப்பவே நீங்க குணப்படுத்தினாத்தான் நான் ரூமை விட்டுப் போவேன்” என்றார். ஸ்வாமி நகராதபடி அவர் கைகளையே முனுசாமி கெட்டியாகப் பிடித்துக் கொண்டாராம்.
தம்மை உரிமையோடு அடித்துக் கேட்கும் இந்த விடாக்கண்டரின் பக்தியில் ஸந்தோஷித்தார் ஸ்வாமி. வயிற்று நோய்ப் பிள்ளையைப் பேட்டி அறையின் தடுப்புத் திரைக்குப் பின்னால் அழைத்துப் போனார்.
உடனே ஆஸ்பத்திரி நெடி பரவத் தொடங்கியது. ஸர்ஜரிக் கருவிகளைக் கையாள்கிற பலவித ஒலிகளும் திரைக்குள்ளிருந்து கேட்டது.
ஒருசில நிமிஷங்களில் பையனோடு வெளி வந்தார் ஐயன். சகஜமாக நடந்தே வந்த சிறுவனின் வயிற்றைக் கிழித்து ஆபரேஷன் செய்து, விபூதி வைத்தே கிழிசலை நறுவிசாக ஒட்டியும் விட்டிருந்த அற்புத சிகித்ஸைக்குச் சான்றாக அவனுடைய வயிற்றிலே திருநீற்றுக் கோடு நீளமாகக் காணப்பட்டது!
அன்றோடு வலி சொஸ்தமாகி விட்டது.
***
சங்கற்ப மாத்திரத்தில் ஸ்வஸ்தம் செய்யக்கூடிய ஸ்வாமி லீலா நாடகத்துக்காக ஸ்தூலத்திலே இப்படி ஆபரேஷன் செய்வது மட்டுமில்லை. ஸூக்ஷ்மத்தில் எட்ட உள்ளவர்களுக்கும் இப்படிச் செய்வதுண்டு.
உதாரணமாக: மலேஷியாவில் ஒரு பிரபலமான அந்நியக் கூட்டுக் கொண்ட கம்பெனியின் மானேஜிங் டைரக்டரான மைக்கேல் சூவா என்ற பௌத்தருக்கு 1970ல் சிறுகுடல் முடிவிலே புற்றுநோய் கண்டது. பாபாவின் அருளால் தம்முடைய அல்ஸர், மூலநோய் முதலியன தீரப்பெற்ற குருமித் என்ற எஞ்ஜினீயர் அந்த மூலவனைப் பற்றிச் சூவாவுக்குச் சொன்னார்.
சூவாவுக்கு நம்பிக்கை பிறக்கவில்லை. மிஸ்ஸிஸ் சூவாவோ நூறு சதவிகிதமும் நம்பினாள். இந்த விநோதங்களுக்கு யாரே விடையறிவர்?
மனைவியின் திருப்திக்காகவே அவர் கொஞ்சம் பாபா விபூதியை உண்டு, கொஞ்சத்தைப் புற்று உள்ள இடத்துக்கு மேல்புறம் தேய்த்துக் கொண்டார்.
மறுநாள் ஸ்பெஷலிஸ்டிடம் சென்றார்.
கட்டியாயிருந்த புற்று அறவே கரைந்திருக்கக் கண்டார் ஸ்பெஷலிஸ்ட். அது மட்டுமல்ல; அந்த இடத்தில் ஆபரேஷன் செய்ததால் ஏற்பட்ட ஒரு வெட்டுக்காயம் புதிதே தழும்பாகியிருப்பதையும் கண்டார்!
எந்த மயக்க மருந்து தந்து இப்படி வலியில்லாமல், நோயாளிக்கே தெரியாமல் ரணசிகித்ஸை செய்கிறாரோ நம் மருத்துவ மன்னர்?
சில ஆண்டுகளுக்கு முன் எனக்கு ஈறு வீங்கிப் பரம உபாதி தந்தபோது ஒரு நள்ளிரவில் ஸாயிராமனை விடாது தியானிக்க, வலியே இல்லாமல், ஆனாலும் நான் உணரும்படியாக ‘சுர்ரென்று ஒரு ஸ்க்ரூவை வீக்கத்தின் மீது வைத்துத் திருகுவது தெரிந்தது. வாயெல்லாம் ரத்தமாகிவிடப் போகிறதே என நினைத்து நான் வீக்கத்தை நாக்கால் துழாவ, வீக்கம் வடிந்திருந்தது மட்டுமின்றி, அந்த ஓரிரு நொடியிலேயே ரத்தமும் பொறுக்காகிவிட்டிருந்தது. அதை நாவால் உரசிக் கல்லித் துப்பிவிடலாமென்று எண்ண, என்ன மாயம், அந்த விநாடியே பொறுக்கும் மறைந்து ஈறு வழவழவென்றாயிருந்தது! அதென்ன அற்புத வேகமோ நோயைக் குணம் செய்வதில் நம் குணாளனுக்கு!
***
முனுசாமியின் பிள்ளையுடைய கதையைச் சொன்ன, என் இன்னொரு சகோதர துல்லியரான ஸ்ரீ டி.ஏ. கிருஷ்ணமூர்த்தியும் ஒரு காலத்தில் ஸ்வாமியை நம்பாதவர் என்று சொன்னால், இன்று அவரை அறிந்தவர்கள் நம்ப மறுப்பார்கள்! ஆனால் அவரே சொல்லிக்கொள்கிறாரே! பாபா எப்படி இவர் வாழ்வில் வந்தார், அல்லது இவரது வாழ்வு எப்படி பாபாவுக்குள் வந்தது என்றால், அதற்குக் காரணம் ஒரு நோய்தான். இவரது குழந்தைக்கு ஏற்பட்ட திடீர் நோய்தான்.
1959 – 60ல் கோவையில் பாபாவைப் பார்த்தும், அவரது பேருரை கேட்டும் இருக்கிறாரெனினும் ஏனோ டி.ஏ.கேயின் மனம் அவரிடம் ஒட்ட மறுத்தது.
1964ம் ஆண்டு. ஒரு நண்பகலில் சென்னை டவுனிலிருந்து திருவல்லிக்கேணிக்கு பஸ்ஸில் வந்து கொண்டிருக்கிறார். முன் ஸீட் ஒன்றில் அமர்ந்து தம் வழக்கப்படி ஏதோ ஒரு புத்தகத்தில் முழுகிவிடுகிறார். மனைவி, குழந்தைகள் பின் ஸீட்டுக்களில் வருகிறார்கள்.
மவுன்ட்ரோடு, அரசுமாளிகை அருகே வண்டி நின்றபோது, கன்டக்டர் இவர் தோளைத் தொட்டெழுப்பி, கீழே நிற்கும் மனைவி மக்களைக் காட்டி, இவரையும் இறங்கச் சொல்கிறார். “சட்டுனு பக்கத்திலே யாராவது டாக்டரைப் பாருங்க” என்றும் கூறுகிறார்.
என்ன நடந்தது, திருவல்லிக்கேணி போக வேண்டியவர்கள் ஏன் இங்கே இறங்கினார்கள் என்று புரியாமல் டி.ஏ.கே. இறங்கி அவர்களிடம் செல்கிறார்.
அவர் கண்ட காட்சி! ஒரு வியாதியின்றி கொழு கொழுவென்றிருந்த அவரது கைக்குழந்தை பாரதி அவனது தாயார் கையிலே கோணக் கோண இழுத்துக்கொண்டு, கண்குத்திட்டு, மறு உலகத்தின் கதவை இடித்துக் கொண்டிருக்கிறான். சுவாஸம் இருக்கிறதா என்றே தெரியவில்லை.
பக்கத்தில் நிற்கும் பத்து வயசுப் புதல்வி விஜயா “ஸாயிராம், ஸாயிராம்” என்று கத்திக் கொண்டிருக்கிறாள். அவளும், அவளுடைய அக்காள் ஸுபத்ராவும் இவர்கள் வீட்டுக்கெதிரே நடக்கும் ஸாயிபஜனில் தவறாமல் கலந்து கொண்டு, தந்தைக்கு முந்தி எந்தையிடம் பக்தி பூண்டிருந்தார்கள்.
டாக்டர் எவரும் அணிமையில் இருப்பதாகத் தெரியவில்லை. சோதனையாகக் காலி டாக்ஸி எதுவும் அந்தப் பக்கம் வருவதாகக் காணோம்.
என்ன செய்வதென்று தெரியாமல் ஆபாதகேசம் ஆடிக்கொண்டிருந்த டி.ஏ.கேயின் கைகளில், அநேகமாகப் போயே போய்விட்ட பிள்ளையைப் போட்டாள், தாங்கமாட்டாத தாய். பெண்ணின் ஸாயிராம கோஷம் அப்பாவுக்குள் வெடித்துச் சூழ்ந்தது.
“ஸ்ரீஸாயிராம்” என்று டி.ஏ.கேயும் கூவியபடி பிள்ளையைத் தூக்கி ஆகாசத்துக்கு ஏந்திக் காட்டினார். ஆகாசத்துக்கு அல்ல; அதிலே அரூபியாக பாபா கலந்திருந்தால் காப்பற்றட்டுமே என்றுதான்!
நொடிப் பொழுதாகவில்லை! பொடிப்பிள்ளை அவரது மூக்குக் கண்ணாடியை இழுத்தான்! அவனது முகத்திலே ஒரு விந்தை நகை இழையிட்டது! பாபாவே சிரிக்கிறாரா?
சிறிதே காலத்துக்குப் பின்னர் இன்னோர் உத்பாதம். “பாரதி செய்துப் போயிட்டான்” என்று அழுது கொண்டே ஓடிவந்தாள் விஜயா. அவளைத் தொடர்ந்து வீட்டார் ஓடினார்கள். அருகே ஒரு வீட்டில் விளையாடப் போன விஜயா தூக்கிச்சென்ற பிள்ளை திண்ணையிலிருந்து விழுந்து பேச்சு மூச்சற்றுக் கிடந்தது.
முன்போலவே அவனை வானம் நோக்கி ஏந்தி முன் போலவே “ஸாயிராம்” என்று டி.ஏ.கே. அழைத்தார். லோகம் பூராவும் ‘ஹாட்லைனி‘ல் (ஹார்ட்லைனில்) தொடர்பு கொள்ளும் ஸாயிராம் மட்டும் ‘ரிபீட் பெர்ஃபார் மன்ஸில் சளைத்து விடுவாரா? முன்போலவே அப்பாவின் மூக்குக் கண்ணாடியை பிஞ்சுக் கை இழுக்கும்படியும், அவ்வாறே அதன் பொக்கை வாய் விசித்ரமாகச் சிரித்துக் காட்டும்படியும் செய்தார்.
***
இன்னொரு குழந்தை. அதுவும் சாவு விளிம்பிலே திரும்பித் தன் பெற்றோரை ஸாயியிடம் திருப்பிவிட்டது. அதன் பெற்றோரை பாபாவிடம் நம்பிக்கையற்றவர்கள் என்று சொல்லக்கூடாது. ஏனெனில் அவர்கள் அவரைப் பற்றிக் கேள்விப்பட்டதேயில்லை. தம்மைப் பற்றியே தெரியாத குடும்பத்தில் பிறந்த இந்தக் குழந்தையை வைத்தியர்களும் கைவிட்ட தருணத்தில் பாபாதான் உயிர்ப்பித்தார். அது எப்படித் தெரிந்ததென்றால் அந்தக் குழந்தை உணர்வு தப்பிய நிலையிலிருந்து உணர்வு பெறும்போது, பால்மணம் மாறா மழலையில் “ஸாயிராம், ஸாயிராம்” என்று சொல்லிக்கொண்டு கண்ணைத் திறந்ததாலேயே தெரிந்தது!
போன சுவாஸம் திரும்பும் நிலையில் பெற்றோருக்கு அம்மையப்பனிடம் விசுவாஸம் ஊட்டிய அதிசயக் குழந்தைகள்தாம்!
***
எப்படியெப்படியெல்லாமோ சென்று நோய் தீர்க்கிறார் நம் வைத்யநாத ஸ்வாமி. முன்பு கண்ட ஸ்ரீ நாகராஜனுக்கு ‘ஹார்ட்அட்டாக்‘ வந்தபோது ஸ்வாமியே தம்மிடம் வந்து, கூர்ந்து கவனித்து, தம்மைத் தொட்டுக் கொடுப்பதாக அவருக்கு ஆழ்ந்த உணர்ச்சி உண்டாயிற்று. அவரது பத்தினி ஸ்ரீமதி பாக்யமும், மருகர் ஸ்ரீ ஸ்ரீநிவாஸனும் ஸ்வாமியிடம் ஓடினர். பகவான் நிதானமாக, “வந்தாச்சு, பார்த்தாச்சு, கொடுத்தாச்சு” என்றார்.
நாகராஜனிடம் ஸூக்ஷ்மமாக வந்ததும், பார்த்ததும் சரி, “கொடுத்தாச்சு” என்றால்? விபூதியா, மருந்தா, ஒன்றும் கொடுக்கவில்லையே என்றால் அவரைத் தொட்டுக் கொடுத்தாரோ இல்லையோ? விபூதியாகவும், மருந்தாகவும் இந்த சூக்ஷ்ம ஸ்பரிசமேதான் நாகராஜனைக் குணப்படுத்தி விட்டது!
***
உள்ளத்தின் வைத்தியத்துக்கு முன்னோடியே தாம் செய்யும் உடல் வைத்தியம் என்று ஸ்வாமி சொல்வது வழக்கமாயினும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஸ்ரீமதி ரோடாவின் விஷயத்தில் இதை மாற்றிச் செய்து லீலா நாடகத்துக்கு ரஸம் சேர்த்துக்கொண்டார்.
எப்போது பார்த்தாலும் புகைப் பிடித்துக் கொண்டும் அசுர வேகத்தில் கார் ஓட்டிக்கொண்டும் வெற்று விளையாட்டு ஜீவனாக இருந்தவள் இந்த ரோடா. இப்படிப்பட்டவள், ஸ்வாமியிடம் ஆன்மிகத்தில் பக்குவப்பட்ட ஸ்ரீமதி ஐரிஸ் மர்ஃபெட்டைப் பார்த்த மாத்திரத்தில், “உங்களிடம் ஏதோ விசேஷ ஞானம் இருக்கிறது, அதை எனக்குப் போதியுங்களேன்” என்றாளெனில் ஆச்சரியமில்லையா? நம் நாடகக்காரர்தான் சூத்திரத்தை இழுக்கிறார் என்று தெரியவில்லையா?
ஐரிஸிடம் இருந்த விசேஷ ஞானம் பாபாதானே? சதைப்பற்றிச் சொன்னாள். வாழைத் தண்டுக்குள் வஜ்ரம் பாய்ந்தாற்போன்ற அதிசயமாக, ஆத்ம சூன்யமாகத் தோன்றிய ரோடா ஸ்வாமியின் ஸார கனத்தைத் தன்னில் நன்றாக இழுத்துக் கொண்டாள்.
இதற்குப்பின் அவளுக்கு மார்பகத்தில் கொடிய புற்றுக்கட்டி முளைத்தது. தன்னைப் போன்ற நாற்பது வயதுப் பெண்களுக்கு மார்பகக் கான்ஸர் கூற்றுவனின் அழைப்பே என்று நினைப்போரில் அவள் ஒருத்தி.
இவளுக்கு நோய் மிகவும் பரவி விட்டதால் அந்த அகத்தை அகற்றினால் உயிர் பிழைக்க ஒரு வாய்ப்பு ஏற்படலாமென டாக்டர் சொன்னார். வெளியூர் சென்று சில நாட்களில் தாம் திரும்பியவுடன் ஸர்ஜரி செய்வதாகக் கூறினார்.
ரோடா தன் டாக்டரான ஐரிஸிடம் வந்தாள். உறுதியுடன், “நீதான் என்னைக் குணப்படுத்தப் போகிறாய்” என்றான்.
“நான் எப்படிச் செய்ய முடியும்? ஆனால் பாபா செய்யலாம். ஏன், செய்வாரேகூட. பார்க்கலாம், அதற்கான நம் முயற்சியை” என்று சொன்ன ஐரிஸ், ரோடாவின் வீட்டிலிருந்த சிறிய தங்கச் சிலுவையை ஸ்வாமி படம் ஒன்றின் மீது எடுத்து வைத்தாள். ஐரிஸும், மர்ஃபெட்டும் ரோடாவின் பொருட்டு ஐயனை வேண்டிக்கொண்டனர். பிறகு ஐரிஸ் அந்தச் சிலுவையை அவளிடம் கொடுத்து அதை எப்போதும் அவள் உடலோடு அணிந்து கொள்ளும்படிச் சொன்னாள். பாபா விபூதிப் பொட்டலமும் கொடுத்து, தினமும் அதில் கொஞ்சம் புற்றுக்கட்டியின் மேல் தேய்த்துக்கொள்ளச் சொன்னாள். எல்லாவற்றுக்கும் மேல் முழு நம்பிக்கையுடன் அவரிடம் பிரார்த்திக்க வேண்டுமென்று வலியுறுத்தினாள்.
வெளியூர் சென்ற டாக்டர் திரும்புவதற்குள்ளேயே கட்டி சிறுகச் சிறுக தினக்ரமேண குறைந்து வரக்கண்டாள் ரோடா. நிச்சயமாக ‘ஸாயி வைத்தியம்‘ தொடங்கிவிட்டது என்று தெரிந்ததால் டாக்டர் திரும்பிய பின்னும் இவள் ஆபரேஷனைப் பற்றி அவருக்கு ஞாபகப்படுத்தவில்லை.
இரண்டு வாரங்களுக்குப் பின் அவரே அவளைப் பார்த்துவிட்டு, ஸர்ஜரிக்குப் பூர்வாங்கமான சோதனைகளைச் செய்தார்.
“விந்தையாயிருக்கே! கட்டி மறைந்துவிட்டாற் போலவே தோன்றுகிறது! ஊஹூம், அப்படியிருக்க முடியாது. உள்ளே அமுங்கி ஒளிந்துகொண்டிருக்கும்” என்று சொல்லி ஆர அமரப் பரீக்ஷித்தார். “நோ; கட்டியிருந்த அறிகுறியே இல்லை. விளக்க முடியாத அதிசயந்தான்” என்று கூறினார்.
அவரிடம் விளக்கினாலும் பயனிராமற் போகலாம் என்று ரோடா பேசாமலே இருந்துவிட்டாள்.
மர்ஃபெட் தம்பதியர் பிற்பாடு பாரதம் வந்தபோது ஸ்வாமி இதுபற்றிச் சொல்வாரா, சொல்வாரா என்று எதிர்பார்த்தார்கள். ஸ்வாமியோ திறந்தாரில்லை.
நாம் செய்யாததையெல்லாம் செய்ததாகப் பிரதாபம் பேசிக்கொள்வதாக இருக்க, பிரதாபப் பிரவாஹமான ஸ்வாமியோ வெகு அபூர்வமாகத்தானே தமது அத்புத ஸாதிப்புக்களைத் தாமே வெளியிடுகிறார்? ஏனெனில், நாம் ஸாதிப்பு என்று நினைப்பது அவருக்கு மூச்சு விடுவதேபோல் ஸரளமாகத்தானே இருக்கிறது? நாம் அத்புதம் என்பது புத்புதக் குமிழியாகத்தானே அந்தச் சக்தி சமுத்திரத்தில் தோன்றுகிறது?
அப்புறம் ஐரிஸே, “ரோடாவைக் காத்ததற்காக நன்றி, ஸ்வாமி” என்று கூறினாள்.
ஸ்வாமி சிரித்து, “நான் அவளுடைய மார்புக் கான்ஸரை குணப்படுத்தினேன்; ஆனால் இப்போது அவளுக்கு லங்க்ஸில் கான்ஸர் வந்திருக்கு” என்றார், பதற்றமில்லாமல்.
மர்ஃபெட் தம்பதி பதறிவிட்டனர்.
“ஸ்மோக் பண்றதை அவள் அடியோடு நிறுத்தியாகணும்” என்றார் பகவான்.
தங்களுக்கு அவள் தந்திருந்த வாக்குறுதியிலிருந்து புகைப்பிடிப்பதை அவள் நிறுத்திவிட்டாளென்றுதான் தாங்கள் நினைத்ததாக மர்ஃபெட் தம்பதி கூறினர்.
“ஏதோ கொஞ்சம் ஆரம்பித்தால்… பரவாயில்லை. இனிமேலாவது ஸ்மோக்கே பண்ணாமலிருந்தாளானால் நான் லங்க்ஸையும் க்யூர் பண்ணுகிறேன். அவளுக்கு நம்பிக்கை யதேஷ்டமாயிருக்கு” என்று சிலாகித்துச் சொன்னாராம் ஸ்வாமி.
***
மாரிஸ் பார்ரெட் மென்டோஸோ என்ற நீளப் பெயர்கொண்ட அமெரிக்கரை ‘மோ‘ என்ற ஒற்றை எழுத்தில் ஸாயி பக்தர்கள் அறிவர். மோவின் தாய் ஸ்ரீமதி ஒஃபீலியா ஒரு டாக்டர். மனிதத்தன்மையும், சேவா மனப்பான்மையும், மத நம்பிக்கையும் மிக்க மாதரசி அவள். விதி யாரை விட்டது?
கான்ஸரில் விழுந்தாள் ஒஃபீலியா. பேருக்கு ஏதோ ஹார்மோன் ட்ரீட்மென்ட் கொடுத்தார்களே ஒழிய அவள் பிழைப்பாள் என்ற நம்பிக்கை டாக்டர்களுக்கு இல்லை. தென்அமெரிக்காவில் இருந்த சமயத்தில் அவரது தாய் இப்படி நியூயார்க்கில் நோய்வாய்ப்பட்டிருந்தாள். விவரமறிந்ததும் மகன் ஓடோடி வந்தார். அவரும் ரோஸா என்ற ஸாயி பக்தையும் ஒஃபீலியாவுக்கு ஸ்வாமி விபூதி கொடுத்தனர். அவளுடைய படுக்கைக்குப் பக்கத்திலேயே பாபா படம் ஒன்றையும் வைத்தனர். மூவரும் அடிக்கடி அவரிடம் பிரார்த்தனை செய்தனர். ஒஃபீலியா தினமும் சிறிது விபூதி உட்கொள்ளத் தொடங்கினாள்.
அதிலிருந்தே உடல் நிலையிலும் சரி, உள்ளத்தின் உற்சாகத்திலும் சரி, அவளுக்கு ஓர் அதிசய முன்னேற்றம் ஏற்படலாயிற்று. ஒரே மாதத்தில் நன்கு அபிவிருத்தி கண்டு ஆஸ்பத்திரியிலிருந்து டிஸ்சார்ஜ் ஆனாள். ஆனாலும் பலவீனமும், வலியும் தீவிரமாயிருந்தன.
“பயணம் செய்யக் கொஞ்சம் தெம்பு வந்ததோ இல்லையோ, தெய்வ மாதா ஸாயி பாபாவைப் பார்க்கப் போய்விடுவேன்” என்று நன்றியில் நவின்றாள் ஸ்ரீமதி ஒஃபீலியா. அமெரிக்க மாது “Divine Mother” என்கிறாள்!
அப்படியே 1973 டிஸம்பரில் மோவோடும் ரோஸாவோடும் புட்டபர்த்தி வந்தடைந்தாள்.
“விசுவாஸமும் விபூதியும் உன்னை இத்தனை தூரம் தூக்கிக்கொண்டு வந்துடுத்தா?” என்று தெய்வமாதா வரவேற்றாள் அந்த அமெரிக்கப் புதல்வியை!
ஸ்வாமி தமது ஆசிரமத்திலேயே அவளைப் பல காலம் வைத்துக்கொண்டு அருமையாகக் கவனித்துக் கொண்டார்.
பலஹீனம், வலி எல்லாம் பறந்தோடின. பூர்ண ஆரோக்யம் பெற்றாள் ஒஃபீலியா.
***
கர்மாப்படி அனுபவித்தாக வேண்டும் என்ற மஹா தர்மத்தைத் தம் பிரேமாவேசத்தால் ஒரேயடியாக மீறக்கூடாது என்று எப்படியெல்லாம் விட்டுப்பிடிக்கிறார்? ஆமையையும் மானையும் ஒரே வண்டியில் பூட்டி ஸாரத்யம் செய்கிற மாதிரி, கர்மாவின் மந்த கதியையும் தம் கருணையின் புயல் வேகத்தையும் பாலன்ஸ் செய்து என்ன ஜாலமெல்லாம் செய்கிறார்?
இற்று விழுகிற வரை நைய வைத்து, பிறகு அதிசயமாக நோயைப் போக்கும் அநேக திருஷ்டாந்தங்கள் இந்த பாலன்ஸிங்குக்குச் சான்றுதான். சில பார்ப்போம்.
பிரசாந்தி நிலயவாஸிகளுள் முந்நாள் நீதிபதி ஒருவரின் மனைவியான மாதுஸ்ரீ அஞ்ஜனா அம்மையார் என்பவர் இருக்கிறார். முந்நாள் நீதிபதி மனைவி என்பதே நினைவில்லாமல் ஒரு எட்டடி சச்சதுர அறைக்குள் முடங்கிக் கொண்டு, நிலயத்தில் குற்றேவல் செய்து வருகிறார். அந்தப் பெருமாட்டி இப்படி இரண்டு சொன்னார்:
ஒன்று ஸ்வாமியை ‘அவன்‘ என்றே அன்புரிமையில் கூறும் ஹைதராபாத் தனிகை ஒருத்தி பற்றி இந் நூலில் முன்னே ஓரிடத்தில் சொன்னது நினைவிருக்கலாம். அந்த அம்மாளுக்கு உடல் நிலை மிகவும் சுகவீனமுற்று, அதைத் தீர்க்க ஸ்வாமி எவ்வித அறிகுறியும் காட்டாதபோது, பஞ்சப் பிராணனும் குன்றிய நிலையில், பார்க்கவொண்ணாத அலங்கோலத்தில் புட்டபர்த்திக்கு ஓடி வந்தாளாம். அது ஒரு விழா சமயம். ஏகக் கூட்டம். பகவான் பார்வை அவள் மீது படுவதாகவே தெரியவில்லை. அவள் வந்திருப்பதை எவரோ விண்ணப்பித்துக்கொண்டும் ராஜா காதில் போட்டுக்கொண்டதாகத் தெரியவில்லை.
“பைத்தியமே, ஏன் வந்தாய் இந்த நிலையில்? இங்கே வந்து சாகவா?” என்று அவளை அறிந்தோர் அங்கலாய்ப்பிலேயே மொத்தினர். உறவினர், “இந்த அலக்ஷியக்காரரின் ஆஸ்தானத்தில் அநாதைபோல் சாக வேண்டாம்” என்று இடித்துச் சொல்லி அவளைக் காரில் ஏற்றிக்கொண்டு கிளம்புகிற தருணத்தில்… கருணாகடாக்ஷம் பட்டது! அபய ஹஸ்தம் விரிந்தது! அதிசயமும் நடந்தது! பட்டுவிழ இருந்த மரம் பசுந்தளிர் கண்டது. பிழைத்தே விட்டாள் புண்யவதி, தன் நம்பிக்கை வீண் போகாமல்.
இன்னொன்று அஞ்ஜனா அம்மையாரின் புதல்வி ஸ்ரீமதி மாலதி ஸுப்பிரமணியத்தைக் குறித்தது. ஹைதராபாத்தில் ஸத்ய ஸாயி மஹிளா விபாகத்தில் முக்கியமான ஒருவர் இப்பெண்மணி. நல்ல நடு வயஸிலே கையும் காலும் முடங்கிப் படுத்த படுக்கையானார். அப்போது ஹைதராபாத் வந்த ஸ்வாமி தமது வீட்டுக்கே எழுந்தருளி ரோக நிவாரணம் தருவார் என்று வீட்டார் ஆவலாக இருந்தனர். அஞ்ஜனாம்மாளும் அப்போது மகள் வீட்டில்தான் இருந்தார். ஸ்வாமியோ, எத்தனையோ இல்லங்களுக்கு விஜயம் செய்தபோதிலும் இந்தப் பக்கம் எட்டிப் பார்க்கவில்லை. ஸேவகிகளுக்காக டிஃபன் செய்தனுப்புமாறு சகஜமாக அம்மையாருக்குச் செய்தி அனுப்பினார் வேறே! பெற்ற வயிறு எப்படியிருக்கும்? ஆனாலும் சொன்னபடிச் செய்தார்.
பிறகு, மாலதியைத் தாமிருக்குமிடத்துக்கு அழைத்துவரச் சொல்லி ஸ்வாமி தகவல் அனுப்பினார். அழைத்து வருவதா? ஒரு மில்லி மீட்டர் கையை காலை அசைக்க முடியாதவளை எப்படி அழைத்துப்போவது? அதுவும் ஆயிரம் பதினாயிரம் மக்கள் சூழ்ந்துள்ள பொதுவிடத்துக்கு? மாலதி படுத்திருந்ததோ மாடி அறையில். வளைசலான, குறுகலான படிக்கட்டு வழியாக எப்படி இறக்குவதாம்? ‘வேண்டாம் இந்த ஸ்வாமியின் பரிஹாரம்; வைத்திய ரீதியில் பார்ப்பதே போதும்‘ என்ற அளவுக்கு எண்ணிவிட்டது கண்றாவிக்குத் தயாராக முடியாத தாய் மனசு.
ஆனால் ஸாமி பக்தியில் ஊறித் தோய்ந்த அடக்க சுபாவியான மாப்பிள்ளை ஸுப்பிரமணியம், உத்தரவுப் பிரகாரமே அரும்பாடுபட்டு மனைவியை பாபாவின் இருக்கைக்குத் தூக்கிப் போட்டுக்கொண்டு போனார்.
அங்கே கலை நிகழ்ச்சிகளில் சமய சம்பந்தமான ஒரு நாடகத்துக்கு ஏற்பாடுகள் ஆகிக்கொண்டிருக்கின்றன. க்ரீன் ரூமுக்கே மாலதியைக் கொண்டுவரச் சொன்னார் பிரபஞ்ச நாடகர். (க்ரீன் ரூமில் வேஷம் போட்டு அனுப்புவார்களெனில் இவருக்கோ ஒரு ஒயிட் ரூம் உண்டு; அங்கே வேஷத்தைக் கலைத்து ஸ்வய ரூபமாக்குவார்!) வளமிழந்து சாம்பிக் கிடந்த மாலதியை அந்த க்ரீன் ரூமிலே தம்முடைய வெண் சாம்பல் விபூதியில் ஒரு சிட்டிகை போட்டே க்ரீனாக எழுந்திருக்க வைத்து விட்டார்! எத்தனைக்கெத்தனை மெத்தனம் காட்டினாரோ அத்தனைக்கத்தனை வேகம் காட்டி அப்பெண்மணியின் நோயைப் போன இடம் தெரியாமல் விரட்டினார். வீடு திரும்பிய மாலதி தானே மாடி ஏறினாரென்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!
***
நோயாளியைவிட நோயாளியின் தகப்பனாருக்குக் கர்ம பாரம் அதிகம் இருந்த ஒரு கேஸ்: பம்பாயைச் சேர்ந்த படேல் பொருள் வசதி உள்ளவரல்ல. அவருடைய பெண் குழந்தை ஊமையாகவும், நடையிழந்ததாகவும் இரட்டைக் கோளாறுடன் இருந்தது. பாபாவிடம் காட்டலாம் என்று படேல் நினைத்தாலும் மனைவி மறுத்தாள். கடைசியில் அவர் மட்டும் பர்த்தி வந்து சேர்ந்தார். பலநாள் காத்துப் பார்த்தும் பர்த்தி மன்னர் ஏறெடுத்துப் பார்த்தாரில்லை. தவறாமல் இவருக்கு இடத்தே, வலத்தே, முன்னே, பின்னே இருந்தவர்களை மட்டும் இன்டர்வ்யூவுக்குத் தேர்ந்தெடுத்தார். அப்புறம் ஒயிட்ஃபீல்டுக்குப் புறப்பட்டுவிட்டார். படேலுக்கு ஒயிட்ஃபீல்ட் செல்ல வசதியில்லை. ஊருக்குத் திரும்பவும் காலில்லை. மனைவி மொத்துவாளே! அவள் சொல்லச் சொல்லக் கேட்காமல் செலவிட்டுக் கொண்டு வந்துவிட்டு, இப்போது எந்த முகத்துடன் அவள் முன் போய் நிற்பது? பெண் குழந்தையின் பரிதாப நிலை வேறு நெஞ்சைப் பிசைந்தது. கடைசியில் ‘பகவானே கைவிட்ட பின் உயிர் எதற்கு?” என்று தோன்றிவிட்டது. ரயில் தண்டவாளத்தில் போய்ப்படுத்தார். அப்புறம் என்ன காரணமென்றே தெரியாமல் அந்த யோசனையை விட்டார். (இவரா விட்டார்? பொம்மலாட்டக்காரர் இழுக்கிறாரே, கயிற்றை!) பம்பாய்க்கே சென்றார். ஆயிரம் பதைப்புடன் வீடு சென்றார். ஓடிவந்து கதவைத் திறப்பது ஆஹா, முடமாயிருந்த மகளல்லவா? ஊமையாயிருந்தவள், “அப்பா, வா” என்றுவேறு தெளிவாக வாய் திறந்து கூப்பிடுகிறாளே!
இங்கே ஆயிரம் மைலுக்கப்பால் இந்த அருளைச் செய்து விட்டேதான் அங்கே எதிரிலே இருந்த படேலுக்கு முகம் கொடுக்காமலிருந்திருக்கிறார் நம் கர்மக் கணக்கு அக்கவுன்டன்ட் ஜெனரல்!
பொறுமையைச் சோதிப்பதில் எல்லை நிலத்துக்கே போன இன்னொரு கேஸ் ஜான் கில்பெர்ட் குறித்தது. ‘ஹாட்ஜ்கின் டிஸீஸ்‘ என்கிற பயங்கர உயிருண்ணிப் புற்று நோயுடன் நியூயார்க்கிலிருந்து பத்தாயிரம் மைல் கடந்து பர்த்தி அடைந்தவர் இந்த இளைஞர். 1973ல் வந்தவர் 74 பிறந்தும் அங்கேயே இருந்தார். எட்டு முழு மாதங்களாகியும் பாபா அவரை தனிப் பேட்டிக்கு அழைத்துப் பேசவில்லை. ‘பயங்கர வியாதியாயிற்றே, பணியாளரிடமாவது சொல்லி அவரைத் தாய்நாட்டுக்குத் திரும்பச் சொல்லலாம் என்றும் நினைக்கவில்லை. முக்காலமும் அறிந்தவர், முக்காலத்தையும் செய்பவராதலால் அலுங்காமலிருந்தார். ஒரேயடியாக அலக்ஷியம் செய்யாமல், மாதக்கணக்கில் தங்கிவிட்ட ஜானை கூட்டத்திலேயே எப்போதேனும் கடாக்ஷிப்பார், ஓரிரு வார்த்தைகூடப் பிரியமுடன் சொல்வார். ஏன், மாதம் ஒருமுறை விபூதிக்கூடப் படைத்துத் தந்து உண்ணச் சொல்லியிருக்கிறார். ஸ்வாமியின் போக்கிலிருந்து தனக்கு ‘மிராகிள் க்யூர்‘ என்கிற ‘அற்புத ரீதி நிவாரணம்‘ நிச்சயமாகக் கிடைக்காது, தான் இறக்கத்தான் வேண்டும் என்ற முடிவுக்கு ஜான் வந்து விட்டார். வாழ்கிற நம்பிக்கையை அடியோடு விட்டு சாவுக்குத் தயாராகலானார். யார் எத்தனை உத்ஸாஹமூட்டப் பார்த்தாலும் அசைந்து கொடுக்காமல் மரணஜபம் செய்யலானார். “இங்கே வந்ததில் ஒரு நன்மை விளைந்திருக்கிறது. நியூயார்க்கில் சாவுக்கு நடுங்கினேன்; இங்கேயோ அதை அங்கீகரிக்கிறேன்” என்றார், நல்ல யௌவனப் பிராயத்தில்.
வாஷிங்டனைச் சேர்ந்த டாக்டர் கே.ஸி. பாணி அப்போது புட்டபர்த்திக்கு வந்தார். அவர் ஜான் கில்பர்ட்டைப் பரிசோதித்தார். உயர்ந்தால் பத்து நாட்கள் உயிர் ஓடலாம் என்ற பரிதாபமான உண்மையைக் கண்டார். இதை அவர் ஸ்வாமியிடம் தெரிவித்து, “தாங்கள் ஸம்மதித்தால் கில்பெர்ட்டை பெங்களூரில் ஆஸ்பத்திரியில் சேர்த்து விடுகிறேன்” என்றார். ஸ்வாமி பட்டுக்கொள்ளாமல், “செய்யேன்” என்றார்.
பெங்களூர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட இளைஞரின் உயிர் எக்காரணத்தினாலோ போக மறுத்தது! குணமாகத் தொடங்கியதா என்றால் அதுவும் இல்லை. எந்தத் தினமும் இறுதி வரலாம் என்ற நிலையில் ஆஸ்பத்திரி பிடிக்காமல், டிஸ்சார்ஜ் பெற்று பெங்களூரில் அமெரிக்க ஸாயி பக்தர்கள் தங்கியிருந்த ஒரு ஹோட்டலுக்கு வந்து சேர்ந்தார்.
அங்கிருந்து ஒருநாள் ரத்த சோதனைக்காக அவர் போகும்போது ஓரிடத்தில் ஜனங்கள் கூட்டமாகக் கூடியிருந்ததைப் பார்த்து நின்றார். தண்ணீர்த் தொட்டியில் முழுகிச் செத்துப்போன, அல்லது சாகிற நிலையில் இருந்த ஒரு சிறுவனின் உடல் நிலத்தில் கிடத்தப்பட்டிருந்தது. அவனுடைய தாயார் குலை நடுங்கும்படிப் பூமியை அடித்தவாறு கூக்குரலிட்டுக் கொண்டிருந்தாள். ஜான் கில்பெர்ட்டினுள் கருணை பொங்கியது. தாமே உளுத்து விழுந்த நிலையிலும் தமது புனர்வாழ்வுக்காக பாபாவிடம் பிரார்த்தித்தறியாதவர் இப்போது ஓர் ஆவேசத்தோடு முன்பின் தெரியாத யாருக்காகவோ கண் மூடிப் பிரார்த்தித்தார். பிரார்த்தித்தாரா? சவாலாகவே விட்டார்: “ஓகே, ஸாயிபாபா! நீ மட்டும் உன்னை நீ என்னவாகச் சொல்லிக் கொள்கிறாயோ அதுவாகவே இருந்தாயானால் இந்தப் பிள்ளைக்கு உயிர்கொடுத்துக் காத்து, நாங்கள் அதைப் பார்க்கும்படிப் பண்ணு!” இப்படிச் சொல்லிக் கண்ணைத் திறந்து அந்தப் பிள்ளையைப் பார்த்தார்.
பாபா சவாலுக்கு ஜவாப் சொல்லிவிட்டார்! பையனின் மார்பு ஏறி இறங்கலாயிற்று! ஆம், மூச்சு வந்து விட்டது! ரத்த சோதனைக்காக இவர் எந்த வைத்ய சாலைக்குப் போனாரோ அதற்கே சிறுவனையும் தூக்கி வந்தார்கள். அங்கே அவனுக்கு உள்ளே போயிருந்த தண்ணீரை வடிக்க, அவன் கத்திக்கொண்டு ஆரோக்யமாகத் தெளிந்து எழுந்து விட்டான். கில்பெர்ட் ஆனந்தக் கண்ணீர் கொட்டினார்.
இதிலிருந்து பாபாதான் உயிரும் உடலும் கொண்டு வாழும் பரம ஸத்யம் என்ற உணர்வு அவருக்கு ஏற்பட்டது. இவரில் கருணை பொங்க வைத்து எவரோ மூன்றாம் நபரைச் சாவிலிருந்து காத்துக் காட்டியதன் மூலம், இவருக்குத் தம்மையும் அவர் சாவிலிருந்து காப்பாற்ற முடியும் என்ற திடீர் நம்பிக்கையை ஸ்வாமி தோற்றுவித்துவிட்டார். எட்டு மாதம் நேரே இருந்தவரைப் பிடிக்க என்ன சுற்று வழி, பாருங்கள்!
காலரீதியில் சுற்றியதோடு விட்டாரா? இடத்திலும் சுற்றவைத்து கில்பெர்ட்டை நியூயார்க்குக்குத் திரும்ப வைத்தார். அவர் பதினாயிரம் மைல் கடந்து தம்மிடம் வந்ததற்குப் பழியாக மறுபடியும் அந்தப் பதினாயிரம் மைல்கள் போக வைத்து, அவர் நியூயார்க் சேர்ந்ததும் ஹாட்ஜ்கின் டிஸீஸை மறைந்தோட வைத்தார்!
கர்ம அக்கவுன்ட் இன்னும் கொஞ்சம் பாக்கி நின்றது போலும்! இரண்டாண்டுகளுக்குப் பின் 1976 ஆகஸ்டில் கில்பெர்ட்டுக்கு நோய் அறிகுறிகள் மீண்டும் தோன்ற, தாயையும் அழைத்துக்கொண்டு பர்த்தித் தாயிடம் மறுபடி வந்தார். இப்போது பாபா கேட்டி கொடுத்தார். “மனத்தின் சலனத்தால்தான் உனக்கு மீளவும் இப்படி ஏற்பட்டிருக்கிறது. மூன்று மாதத்தில் குணமாகி விடுவாய்” என்று கூறி அனுப்பி வைத்தார்.
“என் பிள்ளையைப் பிழைக்க வைக்க இந்த லோகம் முழுதிலுமே ஏதும் இல்லையா?” என்று லண்டன் டாக்டர் க்ரெமெரிடம் அலறினார் ஸ்ரீ கே.எஸ். நிஜ்ஹர். தந்தையின் நியாயமான தாபம்!
படிப்பு, விளையாட்டு, இசை எல்லாவற்றிலும் மணியாக இருந்த அவரது பதினைந்து வயதுப் பிள்ளை ரணதீர் 1975 நவம்பரில் ஒரு நாள் ஆர்கன் வாசிக்கும்போது விரல்கள் விறைத்துக் கொள்வதாகச் சொன்னான். கோலாலம்பூரில் நல்ல வசதியுடன் வசித்து வந்த நிஜ்ஹர் உடனே வைத்தியம் பார்த்தார். டாக்டர், “கோளாறாக ஒன்றும் தெரியவில்லை. ஸைகலாஜிகல் அப்ஸெட்டாக இருக்கலாம், அவ்வளவுதான்” என்றார்.
அவ்வளவில் அது முடியவில்லை. விரல் விறைப்பு நீடித்தது. டிஸம்பரில் புஜம்வரை பரவியது. ஒரு ட்ரீட்மென்டுக்கும் பிடிபடவில்லை நோய். “லண்டனுக்குப் போய்ப் பாருங்கள்” என்றார் உள்ளூர் டாக்டர். அவ்வாறே 1976 மார்ச்சில் லண்டன் சென்று, ரணதீரைப் பரிசோதித்ததில் அவன் மூளையில் கான்ஸர் பற்றியிருப்பதாகத் தெரிந்தது.
தந்தை நிஜ்ஹர் மகனிடமோ, உடன் வந்த மனையாள் மோலினாவிடமோ இந்தக் கொடூரச் செய்தியைச் சொல்லாமல் தமக்குள்ளேயே புதைத்துக் கொண்டு சிதைந்தார். டாக்டர் மைக்கேல் க்ரெமெர் என்ற ஸ்பெஷலிஸ்டிடம் போனார்கள். மூளையின் வெகு ஆழத்தில் புற்று வேரோடியிருப்பதால் ஆபரேஷன் செய்ய இயலாதென்றும், ஏதோ ஓடுகிறவரை ஓடட்டும் என்று தங்களாலாகக்கூடிய மற்ற சிகித்ஸை முறைகளை நடத்திப் பார்க்க வேண்டியதுதான் என்றும் க்ரெமெர் ஒளிவில்லாமல் சொல்லிவிட்டார்.
வாளிப்பான வாலிப ரணதீரின் வலது கை இப்போது அடியோடு ஸ்தம்பித்து, முகத்தின் வலப்புறத் தசைகளும் இழுத்துக்கொண்டு தொங்க, பார்வை கெட்டு, சொல் குழறி, நடையும் இழந்து சொல்லொணா அவலநிலை அடைந்தான். ஆனால் வலி என்பதே இல்லையாம்.
இன்னும் ஆறு மாதங்களில் ஆயுள் முடியக்கூடும் என்றும், அதற்குள் இன்னும் என்னென்ன கொடூர பாதிப்புக்கள் பிள்ளைக்கு நேரிடக்கூடும் என்றும் கேட்டறிந்த பின்தான் நிஜ்ஹர் அலறினார்: “என் பிள்ளையைப் பிழைக்க வைக்க, இந்த லோகம் முழுதிலுமே ஏதும் இல்லையா?”
“இருப்பதாகத் தோன்றவில்லையே!” என்று வருத்தத்தோடு உண்மையைச் சொன்னார் க்ரெமெர்.
‘இல்லை, எதுவோ இருந்துதானாக வேண்டும்‘ என்று நிஜ்ஹரின் அந்தரங்கம் சொல்லிற்று. அது எது என்று உடனே தெரியவில்லை. அப்புறம் தெரிந்தது. கடவுள்தான்! கடவுள் நினைத்தால் எதுதான் நடக்காது என்ற திடீர் நம்பிக்கை உண்டாயிற்று.
நோய் நிலைமையை மோலினாவிடம் சொல்லாமல், “இனி நாம் ஆழமாக பகவானைப் பிரார்த்திக்க வேண்டும்” என்றார்.
அவள் சடாரென்று, “எனக்கு பாபாவைப் பார்த்தால் தேவலை என்று தோன்றுகிறது” என்றாள்.
“பாபா யார்? நான் கேள்விப்படவில்லையே!”
“அவர் ஒரு மஹான். இந்தியாவில் இருக்கிறார். அவரைப்பற்றி நான் கேட்டிருப்பதிலிருந்து நம் பிள்ளையைக் காக்க வல்லவர் என்று நினைக்கிறேன். என்னுடைய சகலெக்சரர் ஒருத்தி அவரைப் பற்றிச் சொல்வதிலிருந்து அவரை ஜனங்கள் கடவுளாகவே கருதுவதாகத் தெரிகிறது.”
“சரி, நம் குழந்தைக்காக நாம் என்னதான் செய்து பார்க்கக்கூடாது?” என்றார் நிஜ்ஹர், மனித உருவில் கடவுள் வருவார் என்பதை அவரது பகுத்தறிவு பூர்ணமாக ஏற்காவிடினும்.
ஆனாலும் மோலினா பாபாவைப் பற்றிச் சொன்ன பிற்பாடு கடவுளின் காப்பில் நிஜ்ஹர் அபார நம்பிக்கை கொண்டார். “என் மகன் சாகமாட்டான். நீங்களே பார்ப்பீர்கள். என் மகன் சாகவேமாட்டான். அவனுக்கு இந்த நோய் வந்த காரணம் மருத்துவ ரீதியில் தெரியவில்லை. அதனால் இது கடவுளின் செயலே எனத் தெரிகிறது. எனவே வைத்திய முறைப்படி இதற்கு நிவாரணம் தெரியாத இப்போதும் கடவுளே இதைச் சரி செய்வார்” என்று அடித்துச் சொன்னார்.
அந்தக் கடவுள் தமக்கே உரிய லீலா நாடகப்படி இப்போது மருத்துவம் மூலமே ஒரு புத்தொளிக் கீற்றைத் தூண்டி விட்டார். டாக்டர் ப்ளூம் என்பவர் ட்ரீட்மென்டே இல்லை என்று விட்டுவிடாமல் ரேடியோதெரபி செய்து பார்க்கச் சொன்னார். நோய் பரவாமலாவது அது கட்டுப்படுத்தினாலும் கட்டுப்படுத்தக்கூடும் என்றார்.
கோலாலம்பூரிலேயே ரேடியோதெரபிக்கு வசதி உண்டாதலின் நிஜ்ஹர் குடும்பம் தாயகம் திரும்பியது. வீடு வந்ததும் மோலினா ஸ்ரீ ஸத்ய ஸாயியின் படம் ஒன்றை வாங்கிப் பிள்ளையின் அறையில் வைத்துப் பிரார்த்திக்க ஆரம்பித்தாள். அவனையும் வேண்டிக்கொள்ளச் சொன்னாள்.
அவனுக்கோ இது ஒரு ‘ஹோக்ஸ்‘ (மோச வேஷம்) என்றே தோன்றியது. ஆனாலும் அன்னை அவனிடம் அப்படியெல்லாம் தன்னளவில் முடிவுகட்டி விடாமல், திறந்த மனசோடு, ‘நன்மையிருந்தாலும் இருக்கலாம்‘ என்று ஒப்பிப் பிரார்த்தித்துப் பார்க்கச் சொன்னாள். தயக்கத்துடனேயே ரணதீரும் பிரார்த்தனையை ஆரம்பித்தான்.
ரேடியோதெரபி தொடங்கியது. ஸாயி தெரபியும் அதன் வழியாகவே விசித்ரமாக உள்ளே கருணைக் கதிர்களைப் புகுத்தி ரணதீரின் மூளை ரணத்தைத் தீர்க்க ஆரம்பித்தது. அதுதான் ‘லீலா நாடகம்‘ என்ற வார்த்தையைப் போட்டு விட்டோமே, அதன்பின் மருத்துவரீதிச் சிகித்ஸை எதற்காக என்று ஏன் கேட்க வேண்டும்? ஸாயி தெரபியில் சிலருக்கு மருத்துவத்தோடு அநுக்ரஹம், சிலருக்கு மருத்துவமில்லாமலே அநுக்ரஹம், சிலருக்கு விபூதி, சிலருக்கு விபூதியோடு அவரது ‘ஸாயி ஃபார்மஸி‘யில் தயாரான மருந்து வகைகள், வேறு சிலருக்கோ விபூதிகூட வேண்டாத நாமம் அல்லது தியானம் மாத்திரமே என்று எத்தனை கூத்து செய்கிறார்? அவருடைய லீலா நாடகப்படிதான் நாம் ஆடுகிறோமோ? அல்லது நம் கர்ம நாடகப்படிதான் தாமே கொஞ்சம் வளைந்து கொடுத்து அவர் ஆடுகிறாரோ?
ரேடியோதெரபியால்தான் பையன் அபிவிருத்தியாகத் தொடங்கியதாக வெளியில் தெரிந்தாலும், இப்பேர்ப்பட்ட அபிவிருத்தி வேகம் ரேடியோதெரபியில் அதிசயமாக இருக்கிறது என டாக்டர்களே வியக்கும்படி முன்னேற்றம் நடந்தது. முப்பத்தேழு நாள் ‘எக்ஸ்போஷ‘ருக்குப் பின் ‘ரேடியேஷன்‘ நிறுத்தப்பட, அதற்கு ஒரே வாரத்துக்குப் பின் ரணதீரின் கால் வழங்கத் தொடங்கியது. பொல்லென நம்பிக்கை தழைக்க ஆரம்பித்துப் பிறகு கை, பார்வை, பேச்சு யாவும் சீர்படலாயின.
பாபாவிடம் பிள்ளையை அழைத்துப் போக ஏற்பாடு தொடங்கினர். பாபா பிடிபடாமல் ‘கிராக்கி‘ செய்து சிறிது காலம் விளையாடினார். கடைசியில் மோலினா ரணதீரை அழைத்துக்கொண்டு ஜூன் 19ந் தேதி இந்தியாவுக்குப் புறப்பட்டாள். முன்பு ‘ஹோக்ஸ்‘ என்று திருவாய் மலர்ந்த பிள்ளை இப்போது, “எப்படியாயினும் பாபாவை தரிசிக்காமல் நான் இந்தியாவிலிருந்து திரும்ப மாட்டேன்” என்றான். தந்தை நிஜ்ஹர் பாபாவை அவதாரம் என்று ஒப்ப மறுத்தாலும் இறைவனோடு நெருக்கத் தொடர்புள்ள ‘பக்தி சக்தி வைத்திய’ராக இருக்கலாம் என்று எண்ணினார். இதுவரை தாம் மனைவியிடமும் மகனிடமும் ஒளித்து வைத்த ரகசியத்தை ரணதீரின் வியாதி மூளைக் கான்ஸர் என்பதை இப்போது மனைவியிடம் மட்டும் சொல்லி அனுப்ப வேண்டும் என நினைத்தார். ஆனால் அவர் அதுபற்றி ஆரம்பிக்கும்போதே அவள், “எனக்கு வியாதி விவரம் போதுமென்றாகி விட்டது. நீங்கள் ஒன்றும் சொல்ல வேண்டாம்” என்று அவரைத் தடுத்து விட்டாள். இன்னொருத்தர் வாய்மொழியாகத்தான் அவள் அதை அறியவேண்டுமென்று இருந்தது போலும்!
1976 ஜூன் 20ந்தேதி பிற்பகல் பிரசாந்தி நிலயத்தில் ‘கோரிக்கை‘க்குக் காத்திருந்த சில நூறு பேர்களில் ரணதீரும் மோலினாவும் இருந்தார்கள். வெயிலான வெயிலில், பயணக் களைப்போடு, வாடி வதங்கிக் கிடந்தான் ரணதீரன், நம்பிக்கை என்ற ரணகளத்தில் இன்னமும் தீரமிழக்காமலே. அன்று காலம் தாழ்த்தி ஆறு மணிக்குப் பின்தான் பகவான் வெளி வந்தார். “சூரியன் அஸ்தமிக்கிற வேளையில் பக்தருக்கு உதய சூரியனாக வந்தார்” என்று ஜெகா அழகுபட எழுதியிருக்கிறார்.
ஆடவர் பக்கலில் உலவுகையில் ரணதீரின் நடுக்கும் கரம் நீட்டிய கடிதத்தை வாங்கிக் கொண்ட பாபா, மாதர் பக்கம் வருகையில் மோலினாவின் லிகிதத்தையும் ஏற்றார். அவ்வளவுதான்.
மறுநாள் காலை தரிசனத்தின்போதும் எதுவும் நடக்கவில்லை. அன்று மாலை நாலே காலுக்கு தர்சனத்துக்கு வந்துவிட்ட பாபா நேரே ரணதீரிடம் சென்று திருநீறு படைத்து அவன் கையில் போட்டு “காவ்” (தின்னு) என்று சொல்லிவிட்டு நகர்ந்தார். ரணதீர் உற்சாகம் கொண்டான். மோலினாவின் மனவெழுச்சியோ சொல்லத் தரமன்று. அதற்கும் மறுநாள், 22ந் தேதி மாலை பிள்ளையையும் அம்மாவையும் பேட்டிக்கே கூப்பிட்டு விட்டார் ஸ்வாமி.
பேட்டியறையில் சுமார் பதினைந்து பேர் குழுமியிருந்தனர். பாபா மோலினாவிடம், “மலேஷியாவிலிருந்து வந்திருக்கியா?” என்று கேட்டு விபூதி சிருஷ்டித்துப் பாதியை அவளுக்கும் மீதியை ரணதீருக்கும் கொடுத்தார். அந்த அணிமையில் மோலினாவால் அன்பின் அடர்த்தியைத் தாங்க முடியாமல் கண்கள் பொழியத் தொடங்கின. இளவயசுப் பிள்ளை வெளியில் அமைதியைக் காட்டினாலும் அவனுக்கு உள்ளே உணர்ச்சி கொந்தளித்தது. பேட்டிக்காரர்களைத் தனித்தனிக் குடும்பமாக உள்ளறைக்கு அழைத்துச் சென்ற பாபா ஐந்து குடும்பங்களுக்குப் பின் இவ்விருவரையும் இட்டுப்போனார்.
ரணதீரின் தலையைத் தொட்டு, ஹிந்தியும் ஆங்கிலமும் கலந்த மொழியில் அந்தப் பையனுக்கு அங்கே உள்ள உபாதையையும், அதனால் குடும்பமே படும் உபாதையையும் சொன்ன பாபா, “இது கான்ஸர்” என்ற விஷயத்தை அவிழ்த்து விட்டார். அதன் அதிர்ச்சி அவர்களைத் தாக்குமுன்பே தாங்கிப் பிடிக்கும் தாயாக மங்கள வாக்குச் சொன்னார்: “அது இருக்கிற இடத்தின் வாகினால் ஆபரேஷனும் பண்ணுவதற்கில்லை என்கிறார்கள். அதனால் பரவாயில்லை. அதற்குத் தேவையேயில்லை. இப்போ எல்லாம் சரி ஆயிடும்.”
“இப்போ எல்லாம் சரி ஆயிடும்” என்பதை மும்முறை மொழிந்தார் அவர்களுக்கு வேண்டிய தைரியத்தை அளிக்க அது தேவை என்று கருதிய பகவான். அந்த ஆறுதலிலேயே ஆறாகக் கரைந்தாள் தாய். பிள்ளை அலை ஓட்டம் ஓய்ந்து மனம் அமைதியுற்றான்.
அவனுக்கு அச்சமயம் ஏற்பட்டிருந்த வயிற்றுப் போக்கையும் பாபா குறிப்பிட்டார். “டோன்ட் ஒர்ரி. நான் டானிக் தரேன். காலையிலும் இரவிலும் ஒவ்வொரு டீ ஸ்பூன், ஜலத்திலே விட்டுச் சாப்பிடு. எல்லாம் சரி ஆயிடும்” என்றார்.
பாகாய் நீர்த்து, மெழுகாய் உருகி, பனியாய்க் கரைந்து கொண்டிந்த மோலினாவிடம், “கடவுள் விசுவாசத்தைக் கெட்டியாய் வெச்சுக்கோ” என்று சொல்லி, (தம்மை அவதாரமாக ஏற்காத) அவளது கணவரின் பக்தி நம்பிக்கையை சிலாகித்துக் கூறினார்.
“ஸ்வாமி, ஸ்வாமி, ஸ்வாமி!” என்பது தவிர வேறொன்றும் மோலினாவின் வாயிலிருந்து வரவில்லை.
ரணதீர் மண்டியிட்டுப் பொன்னடிகளைத் தொட்டுக் கும்பிட்டான்.
மென்மலராக நகைத்த பாபா, “ஓகே! நீங்கள் போகலாம்” என்றார்.
அவர்கள் பேட்டியறையின் வெளிப்பகுதிக்கு வந்தனர். எஞ்சியிருந்தவர்களுக்கும் உள்ளறையில் உள்ளத்தின் உரைகளைக் கூறி முடித்த பின் பாபா பிளாஸ்டிக் கூடையைத் தூக்கி வந்து அனைவருக்கும் விபூதிப் பொட்டலங்கள் அளித்தார். எல்லோருக்கும் ஒரு பிடி அள்ளிப்போட்டவர் மோலினாவுக்கு இரண்டு பிடிகள் போட்டார்.
பேட்டி அறையிலிருந்து இவர்கள் வெளிவந்த பின் ஒரு தொண்டர் ஸ்வாமி கொடுத்தனுப்பிய டானிக் பாட்டிலைக் கொண்டு வந்து ரணதீரிடம் கொடுத்தார். முன்னோர் அத்யாயத்தில் சிவா என்ற புற்று நோய்க்காரருக்கு பாபா ஒரு சிவப்பு ஆயின்ட்மென்டை வயிற்றில் பூசி டானிக் கொடுத்ததாகச் சொன்னது நினைவிருக்கலாம். அந்த டானிக் புட்டிபோலவேதான் இருந்ததாம் இப்போது ரணதீருக்குக் கொடுத்ததும். கான்ஸருக்கு அதென்ன அதிசய டானிக்கோ? அது ஏதோ கறிகாய்க் கதம்பச்சாறு போலச் சுவைத்தது என்கிறான் ரணதீர்.
மறுநாள் மாலை தரிசனத்தின்போது, வெளியில் உலவும்போதே விபூதி சிருஷ்டித்து ரணதீருக்குக் கொடுத்து உண்ணச் சொன்னார் ஸ்வாமி.
ஜூன் 25ந்தேதி அடியாரிடை உலவுகையில் மோலினாவிடம், “எப்போ ஊருக்குப் போறே?” என்றார். “நாளைக்கு” என்றாளவள்.
“ரொம்ப ஸந்தோஷம், ரொம்ப ஸந்தோஷம். நிம்மதியாப் போ.”
தாயும் மகனும் 26ந் தேதி பெங்களூர் வந்தனர். மலேஷியாவுக்கு நற்செய்தி பறந்தது. நன்றி உந்தித் தள்ள நிஜ்ஹர் மறுதினமே அங்கிருந்து பெங்களூருக்கு வந்து குதித்தார். பிள்ளையை பெங்களூரிலேயே விட்டு, தம்பதியர் மட்டும் புட்டபர்த்தி சென்றனர். பாபாவைப் பார்த்த மாத்திரத்தில், “கடவுளின் அவதாரம்தான்” என்று நிஜ்ஹர் நிஜமாக உணர்ந்துவிட்டார்.
எல்லோரும் கோலாலம்பூர் திரும்பியபின் ரணதீர் முன்னிலும் விரைவாகக் கொடிய நோயின் பிடியிலிருந்து விடுபட்டு, புத்தி சக்தி, தேகபலம் இரண்டிலும் பழையபடி ஆனான்.
இதிலும் ஒரு நாடக விசித்ரம். ரணதீர் எவ்வளவுக்கெவ்வளவு தூங்காமலிருக்கிறானோ அவ்வளவுக்கவ்வளவு நல்லது என்றும், புற்றுநோயில் மூளை மேலும் செயலிழப்பதற்கே நீண்ட நித்திரை அறிகுறியாகும் என்றும் டாக்டர் கூறியிருந்தார்கள். நேர்மாறாக, பிரசாந்தி நிலயத்திலிருந்து திரும்பிய ரணதீரை ஓயாமல் உறங்க வைத்தே குணப்படுத்தியிருக்கிறார் நித்திரை தெரியாத நம் விந்தை வைத்தியர்!
(மருத்துவ சாத்திரத்துக்கு நேர் எதிராகத் தம் ஸ்பெஷல் வைத்தியத்தில் அவர் செய்வதை நானே சொந்தத்தில் அனுபவித்திருக்கிறேன். அதைக் கடைசி அத்தியாயத்தில் சொல்வேன்!)
மலேஷிய டாக்டர்கள் ரணதீர் குணமாகி விட்டானென்று உறுதி பெற்றனர். இருப்பினும் லண்டனிலிருந்த “வஸிஷ்டரின் வாயால்” நிச்சயம் செய்து கொள்ள விரும்பினர். எனவே மறுபடி லண்டனுக்குச் சென்று ‘ஈ.எம்.ஐ. மூளைச் சோதனை‘ செய்ததில் நோய் குணமானதாக உறுதி செய்யப்பட்டது. டாக்டர் கிரெமெர், “என்ன நடந்திருக்கிறதென்று என்னால் நம்ப முடியவில்லை” என்றார்!
***
எதனாலும் பாதிப்புறாததாக, எந்த பாதிப்பையும் போக்குவதாக இருப்பது ஓங்காரம். ஆனால் இப்போது ‘ஓம்‘ என்றே பெயர் வைத்துக்கொண்டுள்ள அமெரிக்க அம்மணி அப்போது பட்டுள்ள உபாதைகள் எத்தனை? தொடர் சங்கிலியாக அல்லவா அவளைப் பிணிகள் தாக்கியிருக்கின்றன?
‘அமீபிக் டிஸென்ட்ரி‘ என்ற கொடிய பேதியில் அவளுடைய உபாதை ஆரம்பித்தது. உயிர் அடங்கி உணர்வு தப்பிவிட்டது. பாபாவே வேறு சில அந்நியர்களிடம் அவள் இறந்துவிட்டதாகச் சொன்னார். ஆனாலும் மறுபடி அவளது உயிரைப் பிடித்துக்கொண்டு வந்து கூட்டுக்குள் மீண்டும் அடைத்தார்.
உணர்வு பெற்றபோது அவளுடைய மனப்பான்மை விந்தையாக மாறியிருந்தது. இதுவரை வியாதியுடன் விடாமல் போராடியவள், இப்போது இருந்தாலென்ன, செத்தாலென்ன என்ற உதாஸீன நிலை அடைந்தாள். விசித்ரமாக, விரைவில் குணமடைந்தாள்.
இரண்டே வாரங்களுக்குப் பின் அவள் ஒரு விபத்தில் காலை உடைத்துக்கொண்டாள். வலி தாங்க முடியவில்லை. பாபா படத்தின் முன் கதறு கதறு எனக் கதறினாள். பாபாவின் குரல் கேட்டது. “உன்னால் நடக்க முடியாது என்ற எண்ணத்தை விடு; எழுந்திரு; விந்தி விந்தி நடந்து பார் ஸினிமாவில் ஒருத்தனின் காலில் சுட்ட பின்னும் அவன் நொண்டிக்கொண்டு போகிறானே, அப்படி!” என்றார். கடுகைகூடத் தாங்கமுடியாத கடுவலியில், ஸ்வாமி சொன்னாரே என்பதால் உடலின் முழு கனத்தையும் உடைந்த கால் மேல் தாங்கி, மெல்ல மெல்ல எழுந்திருந்தாள். பயங்கர வலியைப் பிடிவாதமாகக் கவனியாமல் விந்தி நடந்தாள். விந்தை! வலி தோற்று ஓட்டம் பிடித்தது. பத்து நாட்கள் உடைந்தே இருந்தது கால். ஆனால் வேதனை எதுவும் இல்லை. பதினோராம் நாள் பஜனையின்போது எப்படியென்றே தெரியாமல் உடைந்த காலைப் பூர்ணமாக சொஸ்தம் செய்துவிட்டார் உடையவர். கால் சரியானதில், அதுவரையில் மனஸில் இருந்த வலி தெரியா நிறைவு போய்விட்டதே என்று அவள் கொஞ்சம் வருத்தப்பட்டாளாம்!
இதன்பின் காமாலைத் தொடர்புள்ள ஹெபாடைடிஸ் என்னும் பரமஹிம்ஸையான ஈரல் வீக்க நோய்க்கு அவள் ஆளானாள். நோய் ஒரு பக்கம். அதனால் பைத்தியம் பிடித்து விடுவதுபோல் சித்த உலைப்பு உண்டானது இன்னொரு பக்கம். முன்போலவே பொருட்படுத்தாது சரணாகதி செய்யச் சொல்லிப் பர்த்திபதி ‘டெலிபதி‘யில் உத்தரவிட்டார். அப்படியே அவள் செய்ய இரண்டு வார உபத்திரவத்துக்குப் பின் வியாதி மறைந்தது.
அதையடுத்து வந்தது மலேரியா. முழுதாகப் பதின்மூன்று நாள் ஒரு துண்டு ரொட்டியோ, துளித் தண்ணீரோ உள்ளே செல்லாமல் கிடந்தாள். இப்படி அடியோடு பட்டினி கிடந்தும் உயிர் எப்படிப் போகாதிருக்கிறது என ஏனையோர் அதிசயித்தனர். அவளுக்கு மட்டுமே தெரிந்தது, தன் உள்ளே “ஓம் ஓம்” என்ற ஒலியைப் பரப்பியே பசியும் தாகமும் தீர்த்து, ஆவியைக் காக்கிறான் ஆண்டவன் பாபா என்று! அதற்கப்புறம், உடைசல் காலைப் போலவே, இந்த நோயையும் க்ஷணத்தில் குணப்படுத்தினார். மலேரியா மலை ஏறியது.
பிறகு சின்னச் சின்ன நோய்களாகப் பல வந்தன. ஒவ்வொன்றும் அல்பாயுளில் மறைந்தன.
அப்புறம் ஒரு பெரிய மோதல். கார் விபத்தில் கபாலத்தை உடைத்துக்கொண்டாள். போலீஸ் ஆம்புலன்ஸ் கொண்டு வந்தது. பாபாவும் தம் ‘ஆம்புலன்ஸ்‘ அனுப்புவதாகச் ‘சொன்னார்!’ எனவே ஆஸ்பத்திரி செல்ல மறுத்து, தான் செல்ல வேண்டிய ஊருக்குப் போகும் பஸ்ஸில் தன்னைத் தூக்கிப்போடச் சொன்னாள். அந்த நீண்ட பஸ் பயணத்தின்போது, வலியெடுக்கும் ஆதாரமான மையப் பகுதியிலேயே அவள் தன் கவனத்தை அணுவும் பிசகாமல் ஒருமுகப்படுத்த வேண்டுமென ஸ்வாமி உத்தரவிட்டார். அவளும் அப்படியே செய்ய முயன்றாள். மையப் புள்ளியிலேயே மனம் நின்றபோது வலி தெரியத்தான் இல்லை. ஆனால் ஆடிக் காற்றில் ஆடும் விளக்காக இவளது சித்தம் துளி இப்படி அப்படி விலகியதோ நரக வேதனை உண்டாயிற்று. பல மணி மல்யுத்தம் செய்து மனஸை நிறுத்தினாள். மறுபடியும் நொடியில் வள்ளிசாகக் குணமாக்கினார். மண்டையில் ஃப்ராக்சர், கண்டவள் எழுந்திருந்து சகஜமாயிருப்பது கண்டு சக பயணிகளும், ஓட்டுனரும் அதிசயித்தனர்.
விட்டதா வினை? வயிற்றுக்குள் அல்ஸர் வந்தது இம்முறை ஸ்வாமி ‘விபூதி ட்ரீட்மென்ட்‘ செய்து சொஸ்தமாக்கினார். சொஸ்தம் ஸ்வஸ்தம் என்றால் ‘தன்‘னில் நிற்பது என்று அர்த்தம். ஓம் ஓம் என்று உள்ளெழும் நாத அதிர்வைக் கவனித்துக்கொண்டு இப்படி ‘ஸ்வஸ்த‘மாக இருக்கும்படி ஸ்வாமி ஆக்ஞாபித்தார். அதற்கப்புறம்தான் அவளே ‘ஓம்‘ என்ற பெயர்க்காரி ஆகிவிட்டாள். பிறகு வியாதி எதுவும் தலைகாட்டவில்லை.
அதுவரை பாபா அவளுக்குச் செய்த சிகித்ஸையின் ஸாரத்தை இப்படிச் சொல்கிறாள்: “அப்படியே விட்டுக் கொடுத்துவிடு. சாச்வதமாகப் பிணியுறுவதானாலும் சரி, குணமடைவதானாலும் சரி, இரண்டுக்கும் மத்தியில் இரண்டுங் கெட்டானாக இருப்பதானாலும் சரி, இதில் எதுவானாலும் இஷ்டமுடன் ஏற்றுக்கொள்ளப் பழகு. கடவுளின் விருப்பப்படி என்று நினைத்து, எல்லாத் தீர்மானங்களையும் தொலைத்துவிட்டு, எதிரெதிர் மோதலின் விளைவை ஸைஃபராக்கி விடு.”
***
கடவுளின் விருப்பம் என்பது பெரும்பாலும் கர்மாவை அநுசரித்தே உள்ளது என்பதற்கு நிறையச் சான்று மேலே நாம் பார்த்தவற்றிலேயே உள்ளது. சில பேருக்கு அவர்களது முற்றிய கர்மா காரணமாக நோய் தீர்க்காமலே, ஆனாலும் ஒரு தெளிவைத் தந்து பக்தர்களாக வைத்து பக்தி இன்பத்தில் களிக்கச் செய்கிறார். நம் நண்பர் டி.ஏ.கே. விஷயமே இப்படித்தான். இவரது பிள்ளையை இருமுறை அதிசயமாகப் பிழைக்க வைத்தவர், டி.ஏ.கேயின் ஆஸ்துமாவை எத்தனையோ ஆண்டுகளாகியும் ‘க்யூர்‘ செய்யவில்லை, க்யூர் செய்வதாகச் சொல்லவுமில்லை. இன்டர்வ்யூ கொடுத்தபோது ஆஸ்த்மாவைக் குறிப்பிட்டு, “அது பாட்டுக்கு இருக்கட்டும்” என்றே சொன்னாராம். ஆனாலும் ஒவ்வொரு முறையும் நோய் முற்றி மூச்சு முட்டும்போது ரக்ஷணையை அனுப்பி வைக்கிறார்.
நண்பர் நயம்படச் சொல்வார்: “பகவான் எனக்காக இப்படி எத்தனை முறை கவனம் செலுத்துகிறார்? இத்தனை சள்ளை தமக்கு இல்லாமல் ஒரே வீச்சில் சரி செய்துவிடக் கூடாதோ?” தம் சள்ளை தீர அல்ல, சுவாமியின் சள்ளை தீரவே தம்மை குணப்படுத்தச் சொல்வது எத்தகைய பக்திப் பண்பு!
என் சமாசாரமும் இப்படித்தான். டி.பி., அல்ஸர் என்றெல்லாம் பெரிதாகப் பெயர் வைத்த நோய்கள் தீர்ந்த பிற்பாடு, பல்லாண்டுகள் அப்படிப் பெரிய பெயரில்லாமலே, ஆனால் ஓயாத உபத்ரவமாகத் தலையோடு கால் ஏதாவது ஹிம்ஸை பிடுங்கி எடுத்துக் கொண்டேயிருக்கிறது. அலர்ஜி, குடலிளக்கம், இடுப்புப் பிடிப்பு, வாயு, காது மூக்கு தொண்டைப் புண், அஜீர்ணம், ஈறு வீக்கம், பல்வலி என்று ஏதாவது பல்லவி மாறி மாறிப் பாடுவதே தொழிலாகிவிட்டது. பொதுவாக இவற்றையெல்லாம் தொண்ணூறு சதவிகிதம் குணமாக்கி, தனிப்பட எதுவாவது உத்தண்டமாகத் தலை தூக்கினால் உடனே அதன் மண்டையில் போட்டு அமுக்கித்தான் வருகிறார் ஸ்வாமி. அனாலும் அந்தப் பத்துச் சதவிகித சேஷத்தைப் பூர்ணமாக அகற்றாமலே வைத்திருக்கிறார். கர்ம தோஷம்! ஏதாவது ஒரு கோளாறு உச்சத்துக்குப் போகப் பார்த்தால் ‘இன்ஸ்டன்ட்–க்யூர்‘ செய்ய மட்டும் தவறுவதேயில்லை.
***
சங்கர் என்று ஒரு புத்திசாலியான, பக்திசாலியான காலேஜ் பிள்ளை இருக்கிறது. ‘ஸநாதன ஸாரதி‘யில் அதன் எழுத்தைப் படிக்கும்போதே இப்படியொரு சமர்த்தா என்று தோன்றும். அதற்கு இந்தச் சின்ன பிராயத்தில் ஆஸ்த்மா தொல்லை. ஆத்மநாதன் வைத்தியம் செய்யாமலே வைத்திருக்கிறான்! அது மட்டுமில்லை. ஆஸ்த்மாவாக ரூபமெடுக்கு முன் மூச்சுத் திணறல் ஆரம்பித்தபோது சங்கர் பகவானிடம் அதை விக்ஞாபித்துக் கொண்டான்.
“நீ எப்போ பார்த்தாலும் வீட்டிலே செடிகளைப் பிடுங்கிண்டும், மாத்தி மாத்தி நட்டுண்டும் இருக்கியே, அதுங்க உன் மாதிரிதான் வந்து கம்ப்ளெயின்ட் பண்ணுதா?” என்று மட்டுமே விருட்டென்று கேட்டார் ஆம், பிரேம பகவான்தான். காரணமில்லாமல் ஏதோ ஒரு ‘மேனியா‘ மாதிரியான போக்கில் சங்கர் இவ்வாறு ஹிம்ஸித்து வந்த செடி கொடிகளுக்கும் அவர் பிரேம் பகவானோ, இல்லியோ?
அப்புறம் ஒருமுறை சங்கர், ஸ்வாமி நடந்து செல்லுகையில் பாதம்பட்ட மண்ணை எடுக்கப் போக, அவர் திரும்பி இருமுறை, “dust dust” என்று சொல்லி நகர்ந்தார்.
ஊருக்குத் திரும்பிய சங்கர் புத்தக அலமாரியை ஒழிக்க ஆரம்பித்தது. ‘டஸ்ட் மூக்கில் ஏறியது. தத்க்ஷணமே ஆஸ்த்மாவும் அவதரித்தது!’
இதிலிருந்து கர்மாவை அநுசரித்தே ஸ்வாமி வியாதி தீர்ப்பது மட்டுமில்லை, வியாதியைத் தரவும் செய்கிறார் எனத் தோன்றுகிறதல்லவா? கர்ம வியாதியைப் போக்கவே இங்கே உடல் வியாதி மருந்தாகிறது!
கர்மாவால் ஏற்படாமல் பௌதிகமாக மாத்திரம் வியாதி ஏற்படும்போது அதைத் தாம் வாங்கிக் கொள்ளாமல் கான்ஸல் செய்து அடியாரை குணப்படுத்துவதாகவும்; கர்மாவினால் ஏற்படும்போது தமது சங்கற்ப மாத்திரத்தில் அதைத் தீர்க்கச் சக்தரே எனினும், ஓரளவுக்கு மேல் போனால் க்ஷமிப்பது முறையல்ல என்று நோயை பக்தர் அநுபவிக்கவும் விடுவதாகவும்; சில சமயங்களில் கருணா வேகத்தில் தாமே அதை வாங்கிக் கொண்டு நோயுற்றுத் தீர்ப்பதாகவும் ஸ்வாமி கூறியிருக்கிறார். இந்தத் தியாகப் படலத்துக்குப் போகுமுன், பக்தரே கர்மாவைச் சற்று அனுபவித்துத்தானாக வேண்டும் என்று அவர் விடுவது பற்றி இன்னம் ஒன்று பார்க்கலாம்.
ஸாயி மாதா எனக்கு அநுக்ரஹித்துள்ள அநேக அன்பு ஸஹோதரர்களில் ஒருவர் ஸ்ரீ வை. பாலஸுப்ரம் மண்யம். ‘வை.பா.ஸு‘ என்று சொல்வோம். இவர் மூல உபத்ரவத்தில் எத்தனையோ காலம் எவ்வளவோ கஷ்டப்பட்டிருக்கிறார். பிறகு புட்டபர்த்திக்குப் படை எடுத்தார். பகவான் நோய் தீர்த்தாரில்லை. தொல்லை தாங்க முடியாமல், தம்மைத் தாண்டி சென்றுவிட்ட ஸ்வாமியை லாயிராம்!” என்று வை.பா.ஸு கூவியழைத்தார். வைத்தியநாதனும் திரும்பிப் பார்த்து அநுக்ரஹித்தான். அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாகத் தொல்லை குறைந்து நாளா வட்டத்தில், இல்லையே ஆயிற்று. வை.பா.ஸுவுக்கு எவத்தியம் பார்ப்பதை ஸுலபத்தில் செய்யாமல் ஸ்வாமி ஏன் இழுக்கடித்தார் என்றால் கர்மாதான் காரணம்.
***
நீண்ட கால நோயாயினும் தம்மிடம் வந்த பின் இழுக்கடிக்காத ‘இன்ஸ்டன்ட் – க்யூர்‘கள் சில:
அஸ்ஸாமைச் சேர்ந்த அந்தச் சிறுவன் ஆறு வயசில் பெரியம்மைக்கு ஆளானான். அதன் விளைவாகத் தசைகளின் இயக்கத்தை இழந்து கால் கூழை பாய்ந்து, நடக்கும் சக்தியை அடியோடு இழந்தான். இப்படி ஆறு நீண்ட ஆண்டுகள் அவதிப்பட்ட பின் அவனைப் பெற்றோர் புட்டபர்த்தி இட்டு வந்தனர். பேட்டித் தேர்வுக்குக் காத்திருந்த கூட்டத்தில் பெண்கள் பகுதியில் தாயோடு அமர்ந்திருந்தான் பன்னிரு வயதுப் பிள்ளை. தரிசனம் தர வந்த தயாகரன் இருவருக்கும் இன்டர்வ்யூ அறைக் கதவைக் காட்டினார். அன்னை எழுந்திருந்தாள். எழுந்திருக்க முடியாத பிள்ளையை ஏந்தலே இரு திருக்கரத்தாலும் ஏந்தி எழுப்பினார். பிறகு கையை விட்டார். ஆறாண்டாக நிற்கச் சக்தியிழந்திருந்த பிள்ளை அந்த நொடியே நின்றது. விடவில்லை வித்தகர். “நட” என்றார், முதுகிலே ஓங்கி ஒரு தட்டுத் தட்டி. அந்தத் தட்டில் எஞ்சியிருந்த நோயும் உதிர்ந்து விட்டது. நன்றாக நிமிர்ந்தபடிப் பிள்ளையாண்டான் பேட்டி அறை வராந்தாவுக்கு விரைந்தான்! கூடியிருந்த அனைவரிடை “ஆஹா, ஆஹா” என்று ஆஹாகாரம் எழுந்தது. இது நடந்தது 1974 மத்தியில்.
இதேபோல் பலர் காணப் ‘பப்ளிக்‘கில் நடந்த இன்னொன்று: மேற்கு வங்க முன்னாள் அட்வகேட் ஜெனரலான ஸ்ரீ வனமாலி தாஸின் புதல்வர் ஸ்ரீ ஸுவ்ரத தாஸ் இங்கிலாந்து கேம்பிரிட்ஜில் சட்டப் படிப்பு படித்துக் கொண்டிருக்கையில் ரூமேடிஸமும், ஆர்த்ரிடிஸும் சேர்ந்த கொடிய கீல்வாதமுடக்குவாதங்களுக்கு ஆளானார். 1962ல் நோயுற்ற அந்தச் சீரும் செல்வமும் மிக்க வாலிபர் இங்கிலாந்திலும் இந்தியாவிலும் பதினோரு நீண்ட ஆண்டு ஏகப்பட்ட வைத்தியம் செய்து கொண்டு பீப்பாய் பீப்பாயாகத் தங்கத் திரவ இன்ஜெக்ஷனும், டன் டன்னாகக் கார்டிஸான் மாத்திரையும் உட்கொண்ட பின்னும் வியாதி குணமாகாமல், குணமாக வாய்ப்பே இல்லை என்று வைத்தியர்கள் கைவிரித்த பின்னர் கக்க தண்டத்தின் துணையில் தத்தியபடி பிரசாந்தி நிலயத்துக்கு 1973ல் வந்து சேர்ந்தார்.
பேட்டி அறையில் போட்டி போட்டது இவரது கரும வேகத்தோடு ஸ்வாமியின் கருணை வேகம். சொல்லவும் வேண்டுமா? கருணைக்குத்தான் வெற்றி. கக்க தண்டத்தோடு உள்ளே போனவர் கை வீசி வெளிவருவது கண்டு நூற்றுக்கணக்கானவர் ஆர்த்தனர்.
நோய் தீர்வதில் நோயாளியின் நம்பிக்கைக்கும் இடமுண்டு என்பதை இவர் விஷயத்தில் ஸ்வாமி நிதரிசனமாக்கினார். கல்கத்தாவுக்குத் திரும்பிய ஸுவ்ரதர், விடாக்காப்பு அளிப்பதில் ஸ்வாமி எடுத்துக்கொண்டுள்ள ஸுவிரதத்தில் ஐயம் கொண்டு, தமது ‘க்யூர்‘ தாற்காலிமாயிருந்து மறைந்துவிடுமோ என்று பயப்படலானார். நம்பிக்கை நலிந்தவுடன் எலும்பும் சற்று நலிந்தது. அதன் பின்னும் கக்க தண்டத்தின் பக்க பலமின்றி அவர் நடமாடினாரெனினும், புட்டபர்த்தியில் பெற்ற புஷ்டி ஓரளவு தேய்ந்து காலில் வலி காணலாயிற்று.
கொழும்புவைச் சேர்ந்த ஸ்ரீ ஸி. மஹாதேவனின் மனைவிக்கு நீண்ட காலமாக இருந்து வந்த முதுகெலும்பு வலி, அவள் பாபாவை வணங்கியவுடன் அவர் ஆசி நல்கிய அந்தக் கணமே அடியோடு மறைந்து விட்டது.
கணவர் ஸ்ரீ மஹாதேவன் இதனாலேயே பக்தி எழுச்சி கொண்டு கொழும்பு திரும்பிய பின் வீட்டில் பஜன் ஆரம்பித்தார். சமயம் பார்த்துப் புற்றுநோய் அவரது வலது தாடையில் பிரவேசம் செய்தது. ஒரு ஆபரேஷன், இரண்டு ஆபரேஷன் ஆகியும், கன்னத்தின் கீழ் எலும்பே வெட்டி அகற்றப்பட்ட பின்பும் அவர் குணம் கண்டாரில்லை. தமது எடையில் ஐம்பத்தாறு ராத்தல்களை இழந்து, மண்டையில் ஓயாத குத்தல் வலியும், ஆபரேஷனான இடத்திலிருந்து நிற்காத சீழ் இழிவுமாக ரேடியக் கதிர் சிகித்ஸை பெறலானார். பலனில்லை. மூன்றாவது ஆபரேஷனும் செய்யப்பட்டது, அதுவும் வீணே ஆயிற்று. நாலாவதாக இன்னோர் ஆபரேஷன் 1974 ஏப்ரலில் செய்ய வைத்தியர்கள் உத்தேசித்தனர். வைத்தியத்தில் நம்பிக்கை இழந்த மஹாதேவன் சிந்தாகுலத்தினால் நீரிழிவு நோயையும் வரவழைத்துக்கொண்டு விட்டார். வைத்திய நாதனிடம் நம்பிக்கை திரண்டெழுந்தது. நாலாவது ரணசிகித்ஸையை ரத்து செய்துவிட்டு தன்னந்தனியாக ஒயிட்ஃபீல்டுக்குப் பறந்து வந்தார்.
கூட்டத்திடை ஸ்வாமி உலவுகையில் மஹா தேவன், “ஸ்வாமிஜி! கான்ஸருக்கு நாலாவது ஆபரேஷன் பண்ண வேண்டும் என்று டாக்டர்கள் அபிப்ராயப்படுகிறார்கள்” என்று விண்ணப்பித்தார்.
“பாவம்!” என்று சொன்னபடி. பகவான் நகர்ந்ததும், பொன்னடி போவது பார்த்து அதோடு தம் ஆயுளும் போயே விட்டது என்ற தாங்கொணாத் தளர்வை அடைந்தார் மஹாதேவன்.
தேவதேவன் சரக்கென நின்றார். விருட்டெனத் திரும்பினார். விசையுடன் அவரிடமே விரைந்தார். அப்போது ஸ்வாமியின் முகத்தில் அளவற்ற ஆற்றல் ஒளி கொந்தளித்தது. அற்புதச் சங்கற்ப சக்தி கொழுந்து விட்டது. கொழும்பு அன்பருக்கு ஒரு பிடி விபூதி சிருஷ்டித்து வீசினார். “தின்னு” என்றார். அந்தத் திருநீறு நெய்யையும் தேனையும் சேர்த்துக் கலந்தது போல் ருசித்தது.. (சம அளவில் தேனும் நெய்யும் கூட்டினால் விஷமே ஆகும். அநேக விஷ மருந்துகளைப்போல ஸ்வாமி இப்படி இன்சுவையோடு நச்சு மருந்து படைத்தாரோ?) அவ்வளவு விபூதியையும் மஹாதேவன் தின்று முடிக்கும்வரையில் பார்த்துக்கொண்டே நின்றார் பர்த்தீசர்.
பின்னர் அவர் தம் வழி நடக்க, அந்தக் கணமே மஹாதேவனின் மண்டைக் குத்தல் நின்றது. இழவாக இம்சித்த சீழ் இழிவு, நீரிழிவு எல்லாமே பறந்தோடின.
ரக்ஷகனை விட்டுப் பிரிய மனமில்லாமல் பல வாரங்கள் அங்கேயே இருந்த மஹாதேவன், ஸ்வாமியைப் பிரசாந்தி நிலயத்துக்கும் பின்பற்றிச் சென்றார். கடைசியில் அவர் கொழும்புக்குப் புறப்படுமுன் பகவான் சொன்னார்: “உன் உயிருக்காக நான் மூன்று முறை போராடினேன். கடைசியில் ஒயிட்ஃபீல்டில் க்யூர் செய்தேன். இத்தனை காலம் நோய்ப்பட்டிருந்ததில் உனக்குப் பிரமோஷன், இன்க்ரிமென்ட் எல்லாம் கிடைக்காமல் போனதும் எனக்குத் தெரியும்! கவலைப்படாதே. ஸ்வாமி உனக்கு எல்லா விதத்திலும் உதவி செய்கிறேன்.”
***
கர்மகருணை எடை போடலில் இன்னொரு அம்சத்துக்கு உதாரணமாக இருக்கிறாள் கோராலி லேலன்ட். ஆஸ்திரேலிய வானொலியில் வயலின் சிப்பந்தியாக இருந்த அவளுக்குப் பயங்கரப் பாரிச வாயு கண்டு ஒரு பக்கம் முழுதும் இழுத்துவிட்டது. வயலின் வாசிப்பது இயலாத காரியமாயிற்று. பாபாவை நாடினாள். பிரசாந்தி நிலயத்தில் அவளைப் பல வாரங்கள் வைத்துக்கொண்ட பகவான் அவளது காலுக்கு நல்ல உறுதியைத் தந்து நடமாடச் செய்தாரேயன்றி, வயலின் வாசிப்புக்கு அவசியமான கையை அதற்குரிய அளவு குணம் செய்யவில்லை! விதிக்கு விட்டுக்கொடுத்து இப்படிச் செய்தபோதே அவளது மதிக்கு சரணாகதியின் நிம்மதியைக் கொடுத்துவிட்டார்! கோராலி கூறுகிறாள்: “ஸ்வாமி என் கையை குணப்படுத்த எண்ணாவிட்டால் அதிலேயே திருப்திப்படுவதுதான் முறை. எனக்கு சாந்தியும் சந்தோஷமும் கொணர்ந்து கொடுத்து விட்டாரே, அது போதாதா?”
நமக்கும் போதாதா இந்த எடுத்துக்காட்டு அவர் செய்கிற உண்மை வைத்தியம் எதற்கு என்று உணர்த்த?