14. அளவைக்கு அடங்காத அருள் ஆழி
நம்முடைய உணர்ச்சிகளும் மனோபாவங்களும் நம்மிலிருந்து அலைகளாக வெளிப்படுகின்றன. ஒரு மனிதனின் உள்தன்மைகள் அவனைச் சுற்றி இவ்வாறு ‘சக்திச் சட்டகமாக‘ச் சூழ்ந்திருப்பதைக் கண்டுபிடித்து, இதற்கு ‘energy band’ என்று ஸயன்டிஸ்டுகள் பெயர் கொடுத்திருக்கிறார்கள். அது மட்டுமல்ல, புதிர்க் கதிர் என்னும் எக்ஸ்ரே மூலம் மனிதனின் உள்ளுறுப்புக்களைப் படமெடுப்பதுபோல, அவனது உள்ளுணர்வின் வெளிச் சட்டகமான ‘எனர்ஜி பான்ட்‘டைப் படமெடுத்துக் காட்டவும் கருவி கண்டுபிடித்திருக்கிறார்கள். இதற்கு Kirlian photography என்று பெயர். கிர்லியன் காமரா கொண்டு மானுடனின் உணர்வுப் பிரபையைப் பிரத்யக்ஷப் படமாக எடுத்துக் காட்டுகிறார்கள்.
பிரபை என்னும்போது தெய்வ வடிவங்களின் முகத்தைச் சுற்றி வரையப்படும் ஒளி வட்டம் நினைவு வரலாம். தெய்வப் பிரபைக்கு தீபம் போன்ற பிரகாச வண்ணம் தருகிறோம். ‘தேவ‘, ‘தீப்‘ என்ற இரு பதங்களே ஒளித் தொடர்புடையனதாம். மானுடமான சக்திச் சட்டகம் இப்படி ஒளிமயமானதல்ல. ஒவ்வோர் உணர்ச்சி ஒவ்வொரு வண்ணத்தில் கிர்லியன் ஃபோட்டோ கராஃபியில் பதிவாகிறது. மன உறுதி அல்லது மனோபலம் என்பது வெள்ளையாக விழும். அன்பு நீலமாக விழும். அன்பே அடர்த்தியாக இறுகும் போது இளஞ்சிவப்பாகும். துவேஷ உணர்ச்சி கருத்த சிவப்பாகப் பதிவாகும். (இப்படி ஒரு ஷணம் கோபத்தில் ஆத்திரமுறுவதால் மூன்று மாத காலம் ஓர் இரட்டை ஸெல் ஃப்ளாஷ் பல்பை எரித்தால் எவ்வளவு சக்தி செலவாகிறதோ அவ்வளவு மனித சக்தி விரயமாகிறதென்று கணக்கிட்டிருக்கிறார்கள். ஆகையால் நாம் கோபிப்பதன் மூலம் எதிராளியைப் பாதித்தாலும் பாதிக்காவிட்டாலும் நம்மை நாமே பாதித்துக் கொள்கிறோம் என்று விஞ்ஞான பூர்வமாகக் காட்டி, ‘இதற்காகவாவது அன்பாக இருக்கப் பழகுங்கள்‘ என்கிறார்கள்.)
வர்ணங்களின் மூலம் உணர்ச்சிகளை இனம் கண்டுகொள்வதோடு, ஒருவரிடம் அந்த ஒவ்வொரு உணர்ச்சியும் எவ்வளவு ஆற்றலுடன் உள்ளது என்பது அவரைச் சுற்றிப் பிரபை எவ்வளவு நீளத்துக்குப் போகிறது என்பதைக் கொண்டு கணக்கிடப்படுகிறது. சக்திச் சட்டகம் அதிக தூரம் வியாபித்துப் புகைப்படத்தில் விழுந்திருந்தால் அந்த உணர்ச்சி அதிகம் இருப்பதாக அர்த்தம்.
கிர்லியன் புகைப்பட நிபுணர்களில் உலகப் புகழ் கொண்ட ஒருவர் டாக்டர் ஃப்ராங்க் பாரனௌஸ்கி. அமெரிக்காவில் அரிஜோனா பல்கலைக் கழகத்தில் பணியாற்றுபவர். ஜனாதிபதி ஃபோர்ட், எலிஸபெத் ராணி முதலியவர்களுக்கு முன் இந்த விஞ்ஞானத்துறை பற்றி விரிவுரையாற்றியிருக்கிறார். காமிரா இன்றித் தம் கண் பார்வையாலேயே பிறரது சக்திச் சட்டங்களைக் காணுமளவுக்கு இவர் நிபுணத்துவம் பெற்றிருக்கிறார்.
இவர் சென்ற ஆண்டு இந்தியாவுக்கு வந்தார். பாரதத்தில் ஸாதுக்கள் பலரைக் கிர்லியன் புகைப்படத்தில் பிடித்து அவர்களது உட்தன்மையை அறிவதே உத்தேசம். நூற்றுக்கு மேற்பட்டவர்களைப் புகைப்படம் எடுத்தார். மஹாத்மாக்கள் என்று காட்டக்கூடிய பிரபை அவர்களில் எவருக்கும் விசேஷமாக இல்லை எனக்கண்டார். அகந்தை, சுயஉணர்ச்சி, சுயஸ்தாபனப் பற்றுதல் முதலியனவற்றையே இவர்களில் பெரும்பாலாரது சக்திச் சட்டகம் காட்டிற்று. ஓரடி அல்லது இரண்டடிக்குமேல் அவர்களது மனோபலப் பிரபை வெளிப்படவில்லை. (இப்படிச் சொல்வதால் இந்தியாவிலுள்ள அத்தனை ஸாதுக்களும் உபயோகமற்ற வேஷதாரிகள் என்று தயவுசெய்து எண்ணிவிட வேண்டாம். தெய்வ சக்தி நிரம்பியவர்களும், ஜீவன் முக்தர்களும் இன்றும் அவர்களிடை இல்லாமற் போகவில்லை. பாரனௌஸ்கி யாரைப் பார்த்தாரோ, யாரை விட்டாரோ?)
1978 ஜூலையில் ஆந்திர முதல்வர் ஸ்ரீ சென்னா ரெட்டி 665 ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களைத் தார்மிக– ஆத் மிகக் கல்விப் பயிற்சிக்காக நம் பகவானிடம் அனுப்பியிருந்தார். ஒயிட்ஃபீல்டில் பகவான் தக்கோரைக் கொண்டு அவர்களுக்கு வகுப்புக்கள் நடத்தித் தாமும் உபதேச மொழி அளித்து வந்தார். அச்சமயத்தில் பாரனௌஸ்கி அங்கு வந்தார், கிர்லியன் விஞ்ஞானப்படி ஸ்வாமியின் உணர்வுப் பிரபையை அளப்பதற்காக.
ஞாயிற்றுக்கிழமை. ஞாயிறு செம்பொன் முகம் காட்டும் வைகறை வேளை. தண்ணிய பிருந்தாவனத்திலே, திவ்ய நாமத் தூநீர் தெளித்தபடி நகர ஸங்கீர்த்தன கோஷ்டி பிரவேசித்து, அத்தனின் ஆஸ்தானத்துக்கு வெளியே நிற்கிறது. அத்தனை முகங்களும் மாடியை நோக்கி எழும்பியுள்ளன. அவற்றிலொன்று பாரனௌஸ்கியுடையது.
திருமுகம் தெரிகிறது மேலே. திவ்ய மேனி தாங்கும் செக்கராடை நகர்ந்து வருகிறது.
மாதா ஸாயி மக்களையெல்லாம் பார்த்துக் கொண்டு நிற்கிறாள்.
பாரனௌஸ்கியின் கிர்லியன் விஞ்ஞானம் அளக்க‘ ஆரம்பிக்கிறது.
என்ன ஆச்சரியம்! ஸ்வாமியின் உள்பலம் அழுத்தமான வெள்ளையாக வெளியாகி விஸ்தரித்துப் பரவியது. இதுவரை பாரனௌஸ்கி மனித உருவத்தில் கண்டுள்ள அதிக பக்ஷ ஆற்றலைப்போல் இரண்டு மடங்குக்கும் மேலான நீளத்துக்கு வெள்ளைச் சட்டகம் விரிந்திருக்கிறது!
சரி, ஆற்றலிருக்கட்டும், அன்பை அளவிடலாம். அளவாவது, இடவாவது? தம் வாணாளில் கண்டிரா விந்தையில் விஸ்மிதமானார் டாக்டர் பாரனௌஸ்கி! அன்பைத் தனியொருவர்பால் இப்போது ஸ்வாமி குறிப்பாக ஒருமுகப்படுத்தாமல், ஸகலருக்கும் ஸமமான அருள் மூர்த்தியாக நின்றதால் அன்பலை இளஞ்சிவப்பாக இன்றி நீலமாக இருந்தது. அந்த நீலத்தின் நீளம்! அப்பப்பா, அது பாட்டுக்கு ஸ்வாமியின் மாளிகைச் சுவர், பிருந்தாவனத்தின் வெளித்திடல், அதன் எல்லை மதில் என்று தாண்டிப் பிரவஹித்துக்கொண்டே போய் அடிவானம் வரையும் சென்றுவிட்டது!
நவகண்டத்திலும் இப்படி பாரனௌஸ்கி கண்டதில்லை. காண முடியும் என்று கனவில்கூட நினைத்ததில்லை. அதிக பக்ஷமாக ஒருசில அடிகள்தான் ஒரு மானுடரின் சக்திச் சட்டகம் போகக்கூடும் என்றே அவரது விஞ்ஞானம் அறிந்திருந்தது.
ஆனால் இவர் மானுடராக இருந்தால்தானே! இவரது தெய்விகத்தைப் பிரகடனம் செய்வதாகத்தான், அதோ பிருந்தாவன எல்லை தாண்டியபின் அடிவானத்துக்கு இடைப்பட்ட பகுதியில் உருக்கி வார்த்த வெள்ளி ஓடைகள் போலவும், பொன்னாலான பிரவாஹங்கள் போலவும் சட்டகங்கள் தெரிகின்றன. இந்தத் தங்கவெள்ளிப் பட்டயங்களுக்கு விஞ்ஞான விளக்கம் ஏதும் தெரியவில்லை என்கிறார் அவர். தெய்விகத்தின் ஜோதிப் பிரபையாகத் தொன்றுதொட்டுச் சித்திரிக்கும் ஒளி வளையம் இந்த வெள்ளியும், பொன்னும்தான் போலும்!
விஞ்ஞானம் கொண்டு அளவிட மாட்டாத அருட்கடல் இது என்று தெள்ளத் தெளியக் கண்டு கொண்டார் பாரனௌஸ்கி.
ஜூலை முப்பதாம் தேதி பகவானின் திருமுன்னர் பயிற்சிபெறும் ஆசிரியர் கூட்டத்தில் பாரனௌஸ்கி உரை நிகழ்த்தி இவ்வற்புதத்தை இயம்பினார்.
மேலும் சொன்னார்: “ஸ்வாமியின் மஹாசக்திப் பிரபை இப்போதுங்கூட அவர் பக்கத்தே நிற்கும் என்மீது விசையுடன் படிகிறது. அதனால்தான் நீங்கள் கவனிக்கும் படியாக நான் என் புஜத்தை அடிக்கடித் துடைத்துவிட்டுக் கொள்கிறேன். விஞ்ஞானியான எனக்கு இதை வெளியிட்டுச் சொல்வதே சிரமமாயிருக்கிறது. உலகின் எல்லாப் பகுதிகளிலுமாக ஆறாயிரத்துக்கு மேற்பட்ட உரைகள் நிகழ்த்தியிருக்கிறேன். இன்றுதான் முதன் முறையாக என் கால்கள் நடுங்குகின்றன.
“ஸ்வாமியிடமிருந்து வெளியாகும் பிரபை அவருக்கு உங்களிடம் உள்ள அன்பை காட்டுகிறது. நானும் எத்தனையோ ஸாதுக்களைச் சந்தித்திருக்கிறேன். ஆனால் இவர்போல உலகுக்குக் கிட்டும்படியாகத் தம்மை வைத்துக் கொண்டிருப்பவர்கள் அவர்களில் எவரும் இல்லை. இதுவே மஹிமைக்கு அறிகுறி.
“உங்களுக்கு வெற்றிக்கான திறவுகோலை ஸ்வாமி கொடுத்திருக்கிறார் Love என்ற எளிய நாலெழுத்துப் பதமாக! ‘அன்பு என்பது இரு கால் கொண்டு நடக்கிறது‘ என்ற சொற்றொடரை எங்கேனும் உபயோகிக்கலாமெனில் அது இங்கேதான்.”
பிற்பாடு ஸ்வாமி பேசினார். பொதுவாக ஏதோ பொருள் பற்றி அவர் உரை நிகழ்த்திய அதே சமயத்தில் அங்கிருந்தவர்களிடம் தனித்தனியாகத் தன் அன்பை ஒருமுகப்படுத்தியுமிருக்கிறார்! ‘பலரிடம் எப்படி ஒருமுகப்படுத்த முடியும், பலமுகப்படுத்தத்தானே முடியும்?’ என்றால் நமக்கு விடை தெரியாது. கிர்லியன் விஞ்ஞானமே விடை சொல்ல முடியாத விஷயத்தில் நாம் என்ன விளக்கம் தருவது?
ஆனால் இப்படி ஸ்வாமி ஒவ்வொருவரிடமும் குறிப்பாக அன்பை அடரப் படர விடுகிறார் என்பதை மட்டும் பாரனௌஸ்கி தமது விஞ்ஞானம் காட்டிய இளஞ் சிவப்புப் பட்டயங்களிலிருந்து புரிந்து கொண்டுவிட்டார். இதை அவையோருக்குத் தெரிவிக்க ஆர்வம் கொண்டு, ஸ்வாமி உரையாற்றி முடித்தவுடன் தாம் எழுந்து இரண்டாம் முறை பேசினார்.
“ஸ்வாமி உங்களிடம் பேசுகையில் நான் அவரையே கவனித்துக் கொண்டிருந்தேன். அவரிடமிருந்து இளஞ்சிவப்புப் பிரபை வெகு விஸ்தாரமாகவும் சக்தி செறிந்ததாகவும் வெளிப்பட்டுப் பின்புறத்திலுங்கூட அவரது நாற்காலிக்கு அப்பாலுள்ள சுவரையும் கடந்தது. முன்புறம் இந்தப் பெரிய மன்றம் முழுதிலும் அது வியாபித்தது. இங்கு கூடியுள்ள உங்கள் அத்தனை பேரையும் தழுவியது. இந்த அத்புதத்துக்கு விஞ்ஞான விளக்கம் இருக்கவே முடியாது.”
“ஒரு வாரமாகக் காலையும் மாலையும் அவர் உங்களிடை போகும்போது கவனிக்கிறேன் அவர் எவரிடம் பேசினாலும், எவரைத் தொட்டாலும் உடனே இளஞ்சிவப்புப் பிரபை அந்த நபருக்குள்ளே புகுகிறது; பிறகு அவரிடமே திரும்பிவிடுகிறது. அப்போது அவரது சக்தியில் சிறிதளவை நாம் எடுத்துக் கொள்கிறோம். (தம் சக்தியையே தியாகப் பிரேமி நமக்குக் கொடுக்கிறார்; அன்னை பாலுட்டுவதே போல ரா.க.) அவரது சக்திக்கு முடிவேயில்லை எனக் காண்கிறது. அது எங்கும் பரவுகிறது. சுற்றியுள்ள எவரும் அதை உட்கொள்ள முடிகிறது. இவ்வாறு பலரிடை சென்று ஒரு சாமானிய மனிதன் அன்புச் சக்தியைச் செலுத்துவானேயாகில் வெகு விரைவில் சோர்ந்து விழுந்து விடுவான். தள்ளுவண்டியில் இருந்த ஒரு பெண் குழந்தையிடம் அவர் சென்று ‘கிசுகிசு‘ மூட்டக்கண்டேன். அப்போது அவரைச் சுற்றிச் சூழ்ந்த பிரேமப் பிரபையைப் பார்த்து ஸ்தம்பிதமேயாகி விட்டேன்.
“நான் கிறிஸ்துவ மதத்தில் ரோமன் கத்தோலிக்கப் பிரிவில் பிறந்தவன். எனினும் எந்தச் சமயச் சார்புடனும் வளரவில்லை. என் தேசத்து விஞ்ஞானி சமுதாயத்துக்குக் கடவுள் என்று ஒருவரை ஒப்புவது கடினமாக இருக்கிறது. இது ஸயன்ஸுக்கு உகந்ததாக இல்லை என அவர்கள் தீர்மானமாகக் கூறுகிறார்கள். ஆகவே நான் என் நற்பெயருக்கும் புகழுக்குமே குந்தகம் ஏற்பட ஹேதுவாக இப்போது ஒரு வாக்குமூலம் தருகிறேன். அதாவது, இரண்டு நாட்களுக்கு முன், சரியாக இந்த மன்றத்தின் வெளி வாசலில்தான், அவரது கண்களுக்கு உள்ளே ஆழ்ந்து பார்த்தேன். அவற்றின் உட்புறம் ஓர் அலாதி ஒளி கண்டேன்! தெய்விகத்தின் திருமுகத்துள்ளேயே என் பார்வையைச் செலுத்தி விட்டேன் என்று எனக்குத் தெளிவாயிற்று! இதற்கு விஞ்ஞான விளக்கம் கிடையாது. கேட்கவும் கூடாது. ஆயினும் கேட்கிறார்கள்!
“என் மதிப்பீட்டில் அவர் யார் எனில், அவர் எதுவாகத் தோன்றுகிறாரோ, நீங்கள் எதுவாக வேண்டுமென விரும்புகிறாரோ, நீங்கள் எதுவாக வேண்டுமென எடுத்துச் சொல்கிறாரோ, ஸாக்ஷாத் அதுவேதான் பிரேமைதான்.”
***
குறியில்லாத, காரணமில்லாத காருண்யத்தின் நிறம் நீலமாதலால்தான் திருமாலும், கண்ணனும், ராமனும், அம்பிகையும், பல சந்தர்ப்பங்களில் நம் ஐயனுமே நீலமாக உள்ளனர் போலும்.இந்த நீலக் கடலில் அலையாடி, நீல வானில் அலை ஓய இன்னொரு காட்சி காண வாருங்கள்!