13. “கோபப் பிரஸாதம்”
‘அன்பே சிவம் என்கிறோம். அந்த சிவம் தேவ, அகர, மனித, விலங்கு இனம் ஒவ்வொன்றிடமும் வெகுண்டு நிக்கிரஹம் செய்ததையெல்லாம் தொகுத்து நக்கீரர் ஒரு பட்டியலில் தருகிறார். இப்பாடலுக்குக் ‘கோபப் பிரஸாதம்‘ என்றே அற்புதப் பெயர் கொடுத்திருக்கிறார். ஆம், கோபமும் இறைவனின் அருட் கொடையாம் பிரஸாதந்தான்!… பாபாவின் அன்பு விளி ‘பங்காரு‘ என்றபடி, பொன் தாது தன் அழுக்கையெல்லாம் இழந்து சொக்கப் பொன்னாவதற்காக அவர் தூய்மைகள் செய்யும்போது, கோபமாம் ஊது உலையில் கொஞ்சம் பொசுக்கவும் நேருகிறது. காரியத்தில் தீமை இருந்தாலும் அது தூய்மையே. அவர் ‘தீதிலா நன்மைத் திருவருட் குன்று‘ தான்.
(“ஸ்வாமி”, பகுதி 2, பக். 311)
நம் சமர்த்து உம்மாச்சி ஸமயத்தில் எத்தனை அசடுமாகிறார்?
தவறுபவரைத் திருத்த எண்ணும் அன்பு காரணமாகவே ஸ்வாமி கோப வேஷமும் போடுவதுண்டு, தெரியுமோ? இப்படி ஒரு சமயம் “ஹாய் ஹூய்” என்று சில பசங்களைக் காய்ச்சினார். அவர்கள் இன்னின்ன செய்ய வேண்டும் என்று கட்டளை பிறப்பித்தார். பலமுறை சொல்லியும் கேளாத அவர்களுக்கு இதுவே last opportunity (இறுதி வாய்ப்பு) என்றும், இப்போதும் கேளாவிடில் lost opportunity (இழந்தே விட்ட வாய்ப்பு) ஆகுமென்றும் பயமுறுத்தினார்.
ஆனாலும் அசடாகி விட்டார், உடனேயே! பிரமாதமாக பயமுறுத்தினாரே தவிர மாதா மனஸுக்கு பயமுறுத்தலைக் காப்பாற்றத் தெரியவில்லை! அச்சுறுத்திய கையோடேயே, “எத்தனை தப்பு பண்ணியிருந்தாலும் ரியலைஸ்‘ பண்ணி மன்னிப்புக் கேட்டால் ஸ்வாமி காத்துக்கொண்டிருக்கிறேன் காத்து ரக்ஷிக்க! எத்தனை கோவிச்சுக்கொண்டாலும் ஸ்வாமி எவரையும் ‘ஹார்ம்‘ பண்றதேயில்லை. மத்த ஸ்வாமிகளுக்கும் ஸ்வாமிக்கும் இதுதான் வித்யாஸம், தப்பு பண்ணினவங்களுடைய ஸ்வப்னத்திலே வந்து ஆஞ்ஜநேயர் மிரட்டினாரு, பரமேச்வரன் த்ரிசூலத்தைக் காட்டினாருன்னெல்லாம் சொல்றாங்களே, அப்படி ஸ்வப்னத்திலேகூடப் பண்ண இந்த ஸ்வாமிக்குத் தெரியாது.”
அழகாயிருக்கிறதல்லவா? கட்டளை பிறப்பிக்கும் அதிகாரமுள்ளவர்கள், அதற்கு ஆளானோர் அதைக் கடைப்பிடிக்காவிடில் தண்டனை விதிப்பார்கள். ஆனால் நம் ஸ்வாமியோ ரொம்ப உக்ரம்காட்டி உத்தரவு போடும்போதே நிறைவேற்றாவிட்டாலும் தமக்குத் தண்டிக்கத் தெரியாது என்றும் கூறுகிறார்!
ஸாயி கோபாலன் கோப ஸாயியாகச் சினந்து விளையாடி விட்டுத் தணிந்து தோற்றுப்போகிற அசட்டுத்தனம் பஹு அழகு! ப்ரேமையின் ஒரு அலையே கோபமாக வருகிறது. உடனேயே பரிவு ரூபமான பிறிதொரு ப்ரேமைப் பேரலை பூரித்து வந்து அதை அழுத்தி அமுக்கி விடுகிறது.
“காச் மூச்” என்று தமது இன்னுயிர் ஒயிட்ஃபீல்ட் மாணவரிடம் ஒருமுறை சீறினார் ஸ்வாமி. சீரிய ஒழுக்கம் கொண்ட அம்மாணாக்கர்கள் சிறிய தப்புச் செய்ததும் மஸ்லினில்பட்ட மையாக உறுத்தியதாலேயே ஸிம்ம கர்ஜனை செய்தார்.
மானுட இயல்பில் சீற்றத்தோடேயே துக்கமும் முட்டி வருமல்லவா? அவ்விதமே தாமும் ஏ–க்ளாஸாக ஆக்ட் செய்தாரோ, லீலா நாடகத்திலே! “லோகத்துலே எல்லோருக்கும், ‘ஸ்வாமிக்கு இந்த ஸ்டூடன்ட்ஸுங்க கிட்டேதான் பார்ஷியாலிடி‘ன்னு தோணற அளவுக்கு உங்களுக்கு நான் இடம் கொடுத்துட்டேனில்லை? அதுக்காக எனக்கு நல்லா வேணும். இப்படித்தான் எனக்கு த்ரோஹம் பண்ணுங்க” என்னும்போது கர்ஜனை கம்மலாயிற்று; தீ விழியில் நீர் முட்டியது; வெற்றிலை உதடு வெடவெடத்தது!
புட்டபர்த்திக்குப் புறப்பட்டுப் போய்விட்டார்.
அசட்டு ஸ்வாமியே! ப்ரேமையான ப்ரேம மனஸை வைத்துக் கொண்டிருக்கிற உனக்கு இத்தனாம் கோபத்தை maintain பண்ணத் திராணி இருக்கிறதா என்ன?
ப்ரசாந்தி நிலயம் போய்ச் சேர்ந்தபின் ஸ்வாமியால் சாந்தியாய் இருக்க முடிந்ததோ? அதெப்படி முடியும்? ஒயிட்ஃபீல்ட் பசங்கள் பச்சாத்தாபத்தில் உருகிக் கொண்டிருக்கும்போது இங்கே தாயுள்ளம் எப்படி அமைதி காணும்?
தாம் அடித்த அடிகளில் அவர்களின் நசுங்கல், ஒடுக்கு எல்லாம் நிமிர்ந்து அவர்கள் நல்ல பாத்திரங்களாக ‘ஸத் பாத்திர‘களாக ஆகிவிட்டதை உணர்ந்த ஸ்வாமியின் பிகுவெல்லாம் பிசுபிசுத்து விட்டது.
மறுநாள் மாணவர்களுக்கு அன்புக் கவசமாக, அணைக்கும் கவசமாக வந்தது ஸ்வாமியின் கடிதம். எத்தனைக்கெத்தனை காரமாக முன்பு கடிந்து கொண்டாரோ அத்தனைக்கத்தனை ஈரத்துடன் இப்போது ஐஸ்க்ரீமாக எழுதியிருந்தார். உருகுகிற ஐஸ்க்ரீம் மட்டுமல்ல; உருக்குகிற மிரகிள் ஐஸ்க்ரீமும்தான்!
சரியாக நினைவில்லை அதையடுத்து ஸ்வாமியே வந்து குதித்தாரா, அல்லது அந்த மாணவர் யாவரும் புட்டபர்த்தி வருவதற்கு பஸ்கள் ஏற்பாடு செய்தாரா என்று. எப்படியானால் என்ன? நல்வழிப்படுத்திய நாயகியின் பாதங்களில் நல்வழிப்பட்ட நன்மணிகள் நூபுரமாகச் சேர்ந்து கொஞ்சின; கொஞ்சப்பட்டன!
பகைவரிடம் கோபிக்க மாட்டார் நம் பகவர். பக்தர்களையேதான் சுத்தம் செய்து முழுமை பெறச் செய்வதற்காகக் கோபவேஷம் போடுவார். நமக்கு எது மிகவும் நல்ல வழியோ அது சௌக்கியமாகவும் இருந்தாக வேண்டுமென்பதில்லை. இம்மாதிரி சந்தர்ப்பத்தில் நாம் நல்லதை விட்டு விடுகிறோம். உடனே ஸர்க்கஸ் நடத்தும் நம் ரிங்மாஸ்டர் சவுக்கைக் கொஞ்சம் சொடுக்குகிறார். சொடுக்கல் மாத்திரம்தான்; அடிவிழாது.
தாம் ஆன்மிக நவமணிகளைக் கொண்டுவந்து கொடுக்கத் தயாராக இருந்தும், மக்கள் அவர்களாகவே விரும்பி அதை வாங்கிக் கொள்ளவேண்டும் என்று ஸ்வயேச்சை கொடுத்து விட்டிருப்பதால், இதை வாங்கிக் கொள்ளாமல் கண்ணாடி மணிகளையும் விஷக் கற்களையும் நாடிப் போகிறவர்களைப் பார்த்து ஆனந்த ஸாயி சோக ஸாயியாகவும், ப்ரேம ஸாயி கோப ஸாயியாகவும் ஆகிறார்.
1979 பொங்கலின்போது சென்னைக்கு ஸ்வாமி விஜயம் செய்த சமயம் ஸ்ரீ கே.ஜி. மாணிக்கவாசகம் ராமலிங்க வள்ளலாரின், ‘கடை விரித்தேன், கொள்வாரில்லை‘ என்ற மாணிக்கமான வாசகத்தை ஏதோ ஒரு ஸந்தர்ப்பத்தில் குறிப்பிட்டார். இந்த அரிய சொற்றொடரைப் பற்றி மீண்டும் கேட்டுத் தெரிந்து கொண்ட பகவான் ஆழ்ந்த சோக உணர்ச்சியோடு, “ஸாயிபாபா மாதிரி” என்றார்! சோகம் மழையாக வரும்போது இடிக்கிறதே, அதுதான் கோபம். இந்த மழை மேகத்துக்கும் இடிக்கும் மூலம் பிரேமைக் கடல்தான்.
தாம் வைத்திருக்கிற ‘ரிப்பேர் ஷாப்பில்’ அடிப்பது, நசுக்குவது, காய்ச்சுவது எல்லாம் தவிர்க்க முடியாததுதான் என்கிறார் ஸ்வாமி. “காரணமில்லாமல் எங்கேனும் நான் உங்களைக் கஷ்டப்படுத்துவேனா? உங்களை நன்றாக உருவாக்க வேண்டும் என்றுதான் இப்படிச் செய்கிறேன். கோணலும் மாணலுமாக இருக்கிற பாறாங்கல் தெய்வச் சிலையாக வேண்டுமானால் சிற்பியின் சம்மட்டியால் சிதைத்தெடுக்கப்படச் சம்மதிக்கத்தானே வேண்டும்? ஆகையால் இப்போது எப்படி நான் தரும் ஸுகத்துக்கு மட்டும் தயாராக இருக்கிறீர்களோ அதுபோலவே நான் தரும் கஷ்டத்துக்கும் இதயத்தைத் திறந்து வைத்துக் கொள்ளுங்கள். (தம்முடைய கோபம் மட்டுமின்றி, வாழ்க்கையில் தாம் தரும் இதரத் துயரங்களும் நாம் கர்மத்தைக் கழித்துக் கொண்டு ஆன்ம பரிசுத்தி பெற உதவுவனவே என்ற கருத்திலே இங்கு பொதுப்படையாகக் ‘கஷ்டம்‘ என்று கூறுகிறார்.) உங்கள் சிரேயஸுக்காகவே நான் இழைக்கும் துன்பங்களை தெய்வ சங்கற்பம் என்று எதிர்கொண்டு வரவேற்றுக் கொள்ளுங்கள். அதிலிருந்து திரும்பித் தப்பி ஓட முயலாதீர்கள். உள்ளுக்குள்ளேயே திரும்பிப் பார்த்துக் கொள்ளுங்கள். அங்கே உள்ள என்னிடமிருந்தே இவற்றை ஏற்கச் சக்தி பெறுங்கள்.”
இன்னொரு முறை சொன்னார்: “நான் உங்களை அடிக்க மட்டுமா செய்கிறேன்? அந்த அடியை வாங்கிக் கொள்ளவும்தானே செய்கிறேன்? உங்கள் இதயம் அடிபடும்போது, அதற்குள் உள்ள நானும்தானே அடியைப்பட்டுக் கொள்கிறேன்? இன்னம் சொல்லப்போனால் உங்கள் இதயத்தில் மட்டும்தானா நான் இருக்கிறேன்? உங்களுடைய ஒவ்வொரு ஸெல்லிலும், உங்களில் பாதாதி கேசம் பூரா பூராவும் நான்தானே இருக்கிறேன்? உங்கள் கஷ்டஸுகங்கள் எனக்கில்லாமல் எப்படி?”
‘புட்டை நீ தின்றபோது, நீ அனைத்துயிரிலும் உள்ளவன் என்பதை நிரூபித்து, எங்களுக்கும் புட்டு ருசி தெரியப்பண்ணினாயில்லை. ஆனால் அரிமர்த்தன பாண்டியன் பிரம்பால் உன்னை அடித்தபோது மட்டும் அதை நீ வாங்கிக் கொள்ளாமல் உன்னுடைய அனைத்துயிர் அந்தர்யாமித்வத்தைக் காட்டி எங்களுக்கு மாத்திரம் அடி விழ வைத்தாய்‘ என்று ஸுந்தரேச்வரப் புட்டீசனை மதுரை மக்கள் பிடித்துக் கொண்டதாகக் கதை. நமது ஸுந்தரப் புட்டபர்த்தீசனோ, தானே அடித்துவிட்டு அடியையும் பகிர்ந்து கொள்கிறான்!
(அவனுடைய சுந்தரத்தைச் சொன்னதால் இன்னொரு ரத்தினமான துணுக்கு நினைவு வருகிறது: அமெரிக்க அடியாரொருவர் அவரிடமே, “ஸ்வாமி, வெகு அழகாக இருக்கிறீர்கள்” என்றார். ஸ்வாமி, “அன்பு அழகாகத்தான் இருக்கும்” என்று சொன்னார் அழகாக, அன்பாக!)
அடிக்கிற கை அணைக்கும். அணைக்கவே பிறந்த அன்னையின் கை அது. அடித்தோமே என்று இன்னமும் இறுக்கமாக அணைக்கும், அன்புக்கு அணையிடாமல்! அந்த வெள்ளத்திலேயே அகங்கார நெருப்பையும் அணைக்கும்.
அஹங்காரத்துடன் ஸ்வாமியைப் பற்றியே அலக்ஷ்யமாகப் பேசிக் கொண்டிருந்தான் சென்ற ஆண்டு ஸம்மர் கோர்ஸில் இடம் பெற்றிருந்த ஒரு மேற்கு வங்க மாணவன். இப்படிப்பட்ட கர்விக்கு இந்தப் பயிற்சி பெறுகிற வாய்ப்பை ஸ்வாமி ஏன் அருளினார் என்று மற்ற மாணவர்களுக்கு வியப்பாயிருந்தது. ஸ்வாமியோ அவனது அதிகப்பிரஸங்கத்தையும் மரியாதைக் குறைவையும் கவனித்ததாகக் காட்டிக்கொள்ளவில்லை. அது மட்டுமில்லை. பயிற்சி முடிந்தபின் மாணவர்களை ஒயிட்ஃபீல்டிலிருந்து பர்த்திக்கு அழைத்துச் சென்றவர் இவனொருத்தனை மட்டும் தனிப்பேட்டிக்கு அழைத்துப் போனார். “இதுதான் நீ இங்கு வருவது முதல் முறையா?” என்று கேட்டார். ‘இதுகூட தெரியாத நல்ல அவதாரம்‘ என்று நினைத்த கர்வி, “இல்லை, ஏழு வயஸில் ஒருமுறை வந்திருக்கிறேன்” என்றான். “அப்பவே நீ ரௌடியா?” என்று நறுக்கெனக் கேட்ட பகவான் அவனுடைய ரௌடித்தனத்தையெல்லாம் ஒப்பிக்க ஆரம்பித்தார். நடுங்கிவிட்டான் பிள்ளையாண்டான். நடுக்கம் தீர அணைத்துக்கொண்டாள் அன்னை ஸாயி. அதிலே அணைந்தது அகங்கார நெருப்பு. அன்பின் நிலவிலே ஊறியவனாக மாறி வெளி வந்தான் மாஜி கர்வி. எந்த அளவுக்கு ஊறினான் என்பதற்குத் தனிப் பேட்டியில் நடந்த இவ் விவரங்களை அவனே சக மாணவர்களிடம் தெரிவித்ததே ஸாக்ஷி.
கோபமுள்ள இடத்தில்தான் குணமிருக்கும் என்பார்கள். குணக் குன்றேயான ஸ்வாமியின் கோபம் குன்றித் தேய்ந்துவிட்டது. பயிற்சிக்கு வந்த பிள்ளையைக் கடிந்து கொண்டு நடுங்க வைத்தோமே என்ற உபரிக் கருணையில் மறுநாள் அவனை அழைத்து ஒரு மோதிரம் ‘வரவழைத்து‘ அணிவித்தார்.
***
ஸ்வாமி, தாம் கோப வேஷம் போடுவது இருக்கட்டும். இன்னோர் அடியாரையும் மன இளக்கம் காட்டாமல் கண்டிப்பாக இருக்கும்படி அவர் கண்டிப்புச் செய்தது ஒரு விநோதமான விளையாடல். இந்த விநோதத்திலேயே வேதனையும் உண்டு, போதனையும் உண்டு.
அந்த அடியாரின் பெயர் தாஸ் என்று வைத்துக் கொள்வோம். அவரது கர்மாவையெல்லாம் தீர்த்து வைக்கக் கங்கணம் கட்டிக்கொண்டார் கருணை ஸாயி. எத்தனை கருணை காட்டினாலும் தாஸும் ஓரளவு அநுபவித்துத்தான் ஆகவேண்டும் என்ற தர்ம நியாயத்தை முன்னிட்டு, ஒதுங்கிக்கிடந்த அவரை இழுத்தார். அவரிடம் அன்பு வைத்து அவருக்கான உதவிகளைச் செய்து வரும் சில இளைஞர்களைக் கொண்ட ஒரு பஜனைக் குழுவுக்கு அவர் பொறுப்பேற்றாக வேண்டும் என்று திணித்தார். ‘ஏதோ பஜனை பண்ணினோம், வந்தோம்‘ என அதோடாவது விட்டாரா? அந்த இளைஞர்களின் குற்றம் குறைகளையும் சொல்லி, தாஸ்தான் அவர்களைக் கண்டித்து வழிக்குக் கொண்டு வரவேண்டுமென்றார். தாஸுக்கோ ‘நமக்கேன் இந்த பாரம்?’ என்றுதானிருந்தது. அப்படியாவது அந்தப் பசங்கள் ஏதோ தறுதலைகளாக இருந்தார்களா என்றால் அதுவும் இல்லை. இந்தக் கால இளைஞர்களின் கோலத்தை, அலங்கோலத்தை, பார்க்கும் போது இவர்களை எவ்வளவோ கொண்டாடிச் சொல்லும் படிதான் இருந்தார்கள். ஸ்வாமியே இதற்கும் ஸர்ட்டிஃபிகேட் கொடுத்தார். ஆனால் இவர்கள் செய்த பூர்வஜன்ம ஸுக்ருதத்தாலேயே இவர்களிடம் தாம் தனிக் கவனம் செலுத்துவதாகவும், தாஸுக்கு இவர்களிடமிருந்த பூர்வ ஜன்ம பந்தத்தைத் தீர்க்கவே இப்போது மறுபடியும் அவரை இவர்களோடு பிணைப்பதாகவும் சொல்லி, அந்தப் பிள்ளைகள் ஏனையோரைப் போலக் ‘கூடிய அளவு நல்லவர்களாக‘ இருந்தால் போதாது என்றும், ஏனையோரைவிடக் கூடுதலான உத்தமர்களாக வேண்டுமெனத் தாம் எதிர்பார்ப்பதாகவும், அதற்கான ‘கெபாஸிடி‘ அவர்களிடம் இருப்பதாகவும் சொன்னார்.
பூர்வ ஜன்ம ஸுக்ருதம் இருந்தும், ஸ்வாமியின் பிரத்யேக கவனம் பெற்றிருந்தும், ஏனையோரைவிட இவர்கள் பரிபக்குவமாக வேண்டுமென்று ஸ்வாமியால் கருதப்படும் பேற்றினை அடைந்திருந்தும், அதற்கான உள் திறன் பெற்றிருந்துங்கூட இதுதான் வேதனையிலும் வேதனை மனத்துக்கு ஸ்வாமி தந்துள்ள ஸ்வயேச்சா ஸ்வதந்திரத்தினால் அந்தப் பசங்கள் அவர் விரும்பியபடி மாற விழையவில்லை. ஸ்வாமியும் கண்டித்துச் சொல்வதைக் கடுமையாக்கினார்.
இதிலே தாஸுக்குப் பெரிய தர்ம ஸங்கடம், ஸ்வாமி நேராகத் தாமே அவர்களைக் கடிந்து கொண்டு புத்திமதி கூறாமல் தாஸின் மூலமே இதைச் செய்ததுதான். பசங்களில் சிலருக்கு, “ஸ்வாமி தம் பக்தர்கள் யாவரிடமும் தாமே நேராகச் செயற்படுவதாகவும், தமக்கு ஏஜென்டோ மத்யஸ்தரோ கிடையாது என்றும் சொல்கிறார். அப்படியிருக்க நமக்குச் சொல்ல வேண்டியதை நேரே நம்மிடம் சொல்லாமல் இன்னொருத்தர் மூலமா சொல்வார்? தாஸே தான் தம் மனஸிலிருப்பதை ஸ்வாமியின் மேல் ஏற்றிச் சொல்கிறார்” என்று ஐயம் ஏற்பட்டது. இதையும் பொல்லாத ஸ்வாமியேதான் தாஸிடம் தெரிவித்தார்! ஏற்கெனவே அந்த இளைஞர்களுக்கு தாஸிடம் இருந்த பற்றுதலும் தற்போது குறைந்துவிட்டது என்றும் கோள்மூட்டி வேடிக்கை பார்த்தார்.
ஒரு கால கட்டத்துப்பின் ஸ்வாமி சொல்வதைப் பசங்களுக்கு ‘ரிலே‘ செய்வதை தாஸ் வெகுவாகக் குறைத்துக் கொண்டார். ஆனால் ஸ்வாமியோ பிடிவாதமாக ஸந்தர்ப்பங்களை உருவாக்கி, விழுங்கியதில் சில பகுதிகளையேனும் தாஸ் கக்கும்படிச் செய்து வந்தார்.
இப்படித் தம்மை இழுத்துவிட்டு, அவநம்பிக்கைக்கு ஆளாக்குகிறாரே என்று தாஸ் வருந்த ஸ்வாமி, “Devoteesஇடம் ஸ்வாமி direct dealingதான் வெச்சுக்கிறேன் என்கிறது வாஸ்தவந்தான். ஆனால் எதற்கும் exception உண்டு. ஒரு ஸமிதி மெம்பருங்களுக்குச் சொல்ல வேண்டியதை ஸமிதி ப்ரெஸிடென்ட் மூலம்தான் ஸ்வாமி சொல்றது. அதுமாதிரி, இந்தப் பசங்களை உன் சார்ஜிலே போட்டிருக்கிறதாலே உன் மூலம் சொல்றேன். ஒரு கம்பெனி உத்தரவெல்லாம் அதன் மானேஜிங் டைரக்டருடையதுதான். ஆனா எல்லா staffஐயும் அவரேயா directஆ deal பண்றாரு? அந்தந்த ‘டிபார்ட்மென்ட் ஹெட்‘ மூலம்தானே ‘ஆக்ஷன்‘ எடுக்கிறாரு?” என்று மடக்கினார் சாதுரிய ஸ்வாமி.
அதியிலிருந்தே ஸ்வாமியின் உத்தரவுகளை, அவை இளைஞர் மனத்தை வருத்துமே என்ற எண்ணத்தில் பூசி மெழுகாமல் உள்ளபடியே தாஸ் தெரிவித்து வந்திருந்தால் அவர்கள் திருந்தியிருப்பார்களென்றும், தாஸின் தவறான பரிவே நிலைமையைத் திசை திருப்பிவிட்டது என்றும் ஸ்வாமி கடைசியில் ஒரு தருணத்தில் தெரிவித்தார். இதைச் சற்றுக்கூடச் சினமின்றி, குற்றச்சாட்டாக த்வனிக்காமலே பகவான் தெரிவித்த அருட்பாங்கை எண்ணியெண்ணி உருகுவார் தாஸ்.
எவரிடமும் இனிக்கவே பழக விரும்பிய தம்மை ஸ்வாமி கடுப்பாக நடக்கச் செய்கிறாரே என்று நொந்துகொண்ட தாஸிடம் ஓர் அற்புத parable (நன்னெறிக் குட்டிக் கதை) கூறினார், லீலா நாடகாசிரியர். கேளுங்கள்:
ஓர் இரும்புத் தகடு இருந்ததாம். அது ஒரு தோட்டத்துச் செடிகளைப் பார்த்து அவற்றுக்குத் தான் இனிமை பயக்க வேண்டுமென்று ஆசைப்பட்டதாம். ‘தோட்டக்காரன் நம்மை எடுத்து வாளியாக்கி, அதிலே நீர் முகர்ந்து ஜில்லென்று இச் செடிகளின்மேல் கொட்டி அவை தளிரும் மலருமாகக் குலுங்கச் செய்ய மாட்டானா?’ என்று அவாவியதாம். தோட்டக்காரனும் அந்த இரும்புத் தகட்டை எடுத்துக் கொண்டானாம். ஆனால்… ஆனால்… வாளியாக வளைக்காமல் வாளாக வார்த்தானாம்! கோணல் மாணலாகக் கிளைக்கும் அந்தச் செடிகளை உரியபடி வெட்டினால்தான் அவை நன்கு தழைத்து, மலர்ந்து, காய்க்கும் என்பதால் தகட்டை வெட்டு வாளாக்கினானாம். அந்த வாளோ, ‘ஐயையோ, இனிக்க நீர் ஊற்றாமல் வலிக்க வெட்டுவேனா?’ என்று மறுத்ததாம். அப்புறம் அதற்கே ஒரு சமயம் விஷயம் புரிந்து அது வெட்டும் பணிக்கு இஷ்டப்பட்டதாம். ஆனால் இதற்குள் அது துருப்பிடித்து மழுங்கி விட்டதாம்! செடிகளின் கிளைகளும் வஜ்ரம் பாய்ந்து வலுவாகிவிட்டனவாம்! இப்போது வாளைப் பிரயோகித்தால் வாள்தான் உடையும் என்ற நிலையாம்!
தமக்கு அவசியமற்றதாக தாஸ் கருதிய இந்த வியவஹாரத் தொல்லையின்போதே அவருக்கு இதுபோல் அனேக அமர உபதேசங்களை குறிப்பாக உண்மையன்பு குறித்த ஆழ்ந்த உண்மைகளை உபதேசித்தார். (உபதேசித்தது மட்டுமின்றி ஸ்வாமி ஓரளவேனும் அதன் வழி தாஸ் நிற்குமாறும் பரம க்ருபை செய்தார்.) உதாரணமாக, பிறரிடமுள்ள ஆயிரம் குற்றத்தைப் பார்ப்பதைவிடத் தன்னிடம் உள்ள ஒரு தோஷத்தைக் களைந்து கொள்வதே முறை என்று கூறுகிற ஸ்வாமியே தம்மை இவ்வாறு பிறர் பிழை கூறுமாறு செய்யலாமா என்று தாஸ் கேட்டபோது ஸ்வாமி, “பிறர் குற்றங்களைப் பார்க்காதே என்றால், அதையே எப்போதும் பாராட்டிக் கொண்டு அவர்களை த்வேஷிக்கக் கூடாது என்றுதான் அர்த்தம். நல்லது, பொல்லாதது தெரியாமல் ஏமாந்து போக வேண்டுமென்று அர்த்தமில்லை. குற்றமே பார்க்கக் கூடாதென்றால் தப்புச் செய்தவர்களை எப்படித் திருத்துவது?” என்றார்.
அச்சமயம் நடைபெற்ற ஸத்ய ஸாயி ஸேவா தள மாநாட்டில் ஸ்வாமி கூறினார்:
‘உங்களுக்கிடையில் எவராவது தவறு செய்தாலோ, ஏதாவது பரஸ்பரக் கருத்து மாறுபாடு ஏற்பட்டாலோ அவற்றைப் பூசி மெழுகிவிடாமல், உடனே வெளிப்படுத்திக்கொண்டு செப்பம் செய்து கொள்ள வேண்டும். இந்தக் காரியத்தை அன்போடும் பொறுமையோடும் செய்ய வேண்டும். அதே சமயத்தில் அறநெறியின் கண்டிப்புக் குறையாமலும் செய்ய வேண்டும். உடனுக்குடன் இப்படிக் களையாவிட்டால் உள்ளேயிருக்கும் தவறும் துவேஷமும் சிறுபொறி பெரிய ஜ்வாலையாவதுபோல் ஒரேயடியாக வளர்ந்து பொசுக்கிவிடும். ‘அன்பை நாளுக்கு நாள் விஸ்தரித்துக்கொண்டே போகும் பணிக்காகவே ஸ்வாமி நம்மை ஸேவா தளமாக அமைத்திருக்க, நாம் தவறுகளைச் சொல்லிக் கொண்டிருக்கலாமா?’ என்று தவறாக எண்ணாதீர்கள். முற்றவிடாமல் தவறுகளைச் சொல்லி, அவசியமானால் கண்டனம் செய்வதுதான் அன்பு. மதுரமாகப் பேசிக் கொண்டிருப்பது மட்டும் அன்பாகிவிடாது. தர்மமாகப் பேசுவதுதான் அன்பு. முடிந்தமட்டில் அதை மதுரமாகவே சொல்ல வேண்டும். இனிமை குறைவதால் அன்பு குறையும் என்று நினைத்து ஸத்ய ஸாயி ஸேவா தளத்தில் அஸத்ய, அதர்மங்களை அனுமதித்தால் அது ஸ்வாமிக்குச் சற்றும் சம்மதமானதல்ல. இதயத்தில் விரோத பாவமில்லாமலிருப்பதுதான் அன்பு. ஒருவர் திருந்தவேண்டும் என்ற நல்லெண்ணத்தில் கண்டிப்பதும் அன்புதான். ‘மற்ற இடங்களில் அன்பு இல்லாதது போல் ஸத்ய ஸாயி ஸ்தாபன அங்கத்தினர்களிடையும் அன்பு இல்லாவிடில் இந்த ஸ்தாபனத்தையே கலைத்துவிடலாம்‘ என்று ஸ்வாமி சொல்வது வாஸ்தவம்தான். ஆனால் இங்கே அன்பு என்று சொல்லியிருப்பது இதயத்தில் துவேஷமில்லாமலிருப்பதைத்தான். தவற்றைக் கண்டுகொள்ளாமலும், அபிப்ராய பேதங்களை மூடி மறைத்துக்கொண்டும் வெளியிலே மட்டும் அன்பு அமைப்பாகக் காட்டிக் கொள்கிற போலித்தனத்தை ஸத்ய ஸாயி அநுமதிக்க முடியாது. அன்பைப் பரப்பி உலகை நீங்கள் அன்புக் குடும்பமாக்க வேண்டும் என்று நான் சொல்லும்போது, சமூகத்தில் ஏதோ உபசாரப் பண்பைக் காட்டி வாயளவில் பிரியமாகப் பேசிக் கொண்டு மரியாதையாக இருக்கிறார்களே, அதைக் குறிப்பிடவில்லை. ஸத்யத்தோடும், தர்மத்தோடும், ஒழுக்கத்தோடும் கூடிய உண்மையான ஆழ்ந்த அன்பையே குறிப்பிடுகிறேன். அன்பைப் பரப்பும் போதே உண்மையையும், அறத்தையும், ஒழுக்கத்தையும் பரப்புவதாக இருந்தால்தான் அது உண்மையன்பு என்று அர்த்தம்.”
முன்னோர் அத்தியாய முடிவில் தாகூர், “உன்னை (மக்கள்) அன்பு செய்யட்டும்! அதனால் தங்களை ஒருவருக்கொருவர் அன்பு செய்து கொள்ளட்டும்” என்று குழந்தைத் தேவதையிடம் கூறுவதைக் கேட்டோம். ஸெயின்ட் ஜான், “நாம் ஒருவரையொருவர் நேசிக்கிறோம்; ஏனெனில் ஆண்டவன் ஆதியில் நம்மிடம் நேசம் வைத்தான்” என்கிறார். இது போன்றவற்றை தாஸ் வேதனையோடு நினைந்து ஸ்வாமியிடம், “உங்களை நேசித்தவர்களே இப்போது உங்கள் உத்தரவுக்குப்பின் முன்னிலும் மனோபேதம் கொண்டிருக்கிறோமே!” என்று முறையிட, அவர், ‘நேசம்‘ என்பதை ஒழுக்கம், அடியோடு அஹங்காரமில்லாத விநயம் என்ற இரண்டோடு இணைக்காத வரையில் அது உண்மையான நேசமே இல்லை என்று சொல்லி, “இதுக்கெல்லாம் விசாரப்படாதே. எல்லாம் மனஸின் கிருத்திரிமம். கர்ம கதி” என்று ஆறுதல் கூறினார். “நம்மைப் பொய்யன என்று நினைக்கிறார்களே, நமக்கெதற்கு உவர்ப் பிள்ளைகள் பொல்லாப்பு என்று நினைத்து நீ ஸ்வாமி ஆக்ஞைகளை அவர்களுக்குச் சொல்லா விட்டால் இதுவும் அஹங்காரந்தான்” என்று எடுத்துக் காட்டினார்.
“அவங்க மனஸை ஏன் கஷ்டப்படுத்தணும்னும்தான் அநேக விஷயங்களை நான் சொல்றதில்லை” என்று தான் சொல்ல, ஸ்வாமி கோபம், குறும்பு இரண்டும் தொனிக்க, “அப்படீன்னா, ஸ்வாமிதான் அவங்க மனஸை ‘ஹர்ட்‘ பண்றாரு, உனக்கு ஸ்வாமியைவிட தயை ஜாஸ்தி! ம்?” என்று ஒரு வெட்டு வெட்டினார்!
சைதன்யரிடம் அவரது சீடர் நிதாயி, “நீங்கள் அவதார புருஷர். அவதார லக்ஷணத்திலொன்று துஷ்ட சிக்ஷணமானதால் நீங்கள் வேண்டுமானால் கண்டனை, தண்டனையெல்லாம் செய்யலாம். ஆனால் பக்தர்களான எங்கள் லக்ஷணம் எவரிடமும் இனிமையாக இருப்பதுதானே?” என்றார்.
இதை ஸ்வாமிக்கு தாஸ் நைஸாக எடுத்துக்காட்ட, அவர் மந்தஹாஸத்துடன் “பக்த லக்ஷணம் என்ன தெரியுமா? ஸ்வாமி என்ன சொன்னாலும் ‘ஆர்க்யூ‘ பண்ணாமக் கேக்கிறதுதான்” என்று போட்டார் ஒரு போடு!
ஸ்வாமியிடம் அன்பிலே சரணாகதி செய்யாத குறைதான் தம்மை இப்படியெல்லாம் அவரிடமே எதிர்க் கேள்வி கேட்க வைக்கிறது என்று தாஸ் மெல்ல மெல்லப் புரிந்து கொண்டார். ஸ்வாமிதான் புரிய வைத்தார். அழுத்தமாக, உறுத்தலாக இன்றி மல்லிகையாகப் பேசியே புரிய வைத்ததுதான் ஸ்வாமியின் மாண்பு. ‘சரணாகதி செய்துவிட்டால் ஸ்வாமியின் கைக் கருவியாகி அவர் இட்ட பணி எதையும் முடிப்போம், எதிர்க் கேள்வி எழுப்பாமல். வாளியாகத் தண்ணிய நீர் வார்க்கும் கருவியாக மட்டுமல்ல, வாளாக அவன் கையில் பிடியுண்டு வீசப்படுவதற்கும் நாம் தயாராயிருக்க வேண்டும்‘ என்ற அறிவினைப் பெற்றார் தாஸ்.
அர்ஜுனனை முன்னுதாரணமாகக் காட்டினார் ஸ்வாமி. பூபாரம் தீர்க்க வேண்டும் என்ற மஹத்தான பிரேமையே கண்ணனை ஸம்ஹார மூர்த்தியாக்கிற்று. அப்போது அந்த அழிவுச் செயலைச் செய்யவே அவன் கைக்கருவியானான் அர்ஜுனன்.
அவனது உன்னத பாவம் தனக்கு எங்கேனும் வாய்க்குமா என்று தாஸ் கலங்க, அப்போது நம் கருணாமூர்த்தி, அர்ஜுனனும் முதலில் போர் செய்வதா என்று பின் வாங்கியதையும் பிறகு கீதோபதேசத்தின் மூலம் கண்ணனே அவனைத் திருத்திப் பணி கொண்டதையும் எடுத்துக்காட்டி உத்ஸாஹம் தந்தார்.
தாஸின் கர்மாவைப் போக்குவதற்காக ஸ்வாமி அவரை ஆட்டுவித்த ஆட்டமே அலாதிதான். ஒரு கட்டம் வந்து ஸ்வாமியே அப்பசங்களுக்கு அறிவுரை சொல்லியனுப்புவதை நிறுத்திய போது, “அவங்க ‘சௌக்யமா‘ன்னு கேட்டா ‘சௌக்யம்‘னு சொல்றதுக்கு மேலே உறவு வெச்சுக்காதே” என்று விதி செய்தார். தாஸுக்கு விந்தையாகத்தான் இருந்தது!
ஃபில்லிஸ் க்ரிஸ்டல் என்று ஒரு ஸாயி பக்தை. அவளும் அவள் கணவரும் 1974 மார்ச்சில் பம்பாயிலிருந்து லண்டனுக்கு விமானத்தில் போகும்போது, பெய்ரூட் தாண்டியதும் ஹைஜாக்கர்கள் விமானத்தைக் கைப்பற்றிக் கொண்டார்கள். உடனே அவள் ஸ்வாமியிடம் முறையிட அவரது குரல் அவளுக்கு ஸ்பஷ்டமாகக் கேட்டது. நம்பவொண்ணாத வாசகங்களைச் சொன்னார்! “அந்த ஹைஜாக்கர்களிடம் உன் அன்பை நிறைவாகச் செலுத்து!” என்றார். பகைவனுக்கு அருள்வதில், தின்ன வரும் புலியையும் அன்னை பராசக்தியாகக் கவி கும்பிடச் சொன்னானே, அப்படிப்பட்ட ஆணை! அஹந்தையற்ற வளாதலால் ஃபில்லிஸால் ஸ்வாமி ஆணைக்குக் கீழ்ப்படிய முடிந்தது. விமானம் முழுதும் வெடி மருந்தைப் பரப்பிவிட்டு, தங்கள் விருப்பப்படி பாலஸ்தீனக் கைதிகளை விடுவிக்காவிடில் அதில் தீ வைக்கத் துருதுருத்த தீயவர்களின்பால் அவள் தன் நிறைந்த அன்பைச் செலுத்தினாள்! விளக்கவொண்ணா விதத்தில் ஹைஜாக்கர்களின் மனம் மாறியது. ஆம்ஸ்டர்டாமில் விமானம் இறக்கப்பட்டபோது அந்த ஹைஜாக்கர்கள் ஒரு விபரீதமும் செய்யாமல் அசடுகள் போலக் கைதாயினர்! ‘பாபாவினால் அன்பு என்ற ஊடகத்தின் மூலம்தான்,செயற்பட முடியும். அதனால்தான் அவர் என்னை அன்பு செலுத்தச் சொல்லி அதன் வழிதாமே செயற்பட்டுக் கொடியவர் மதியை மாற்றினார்‘ என்று பொருள்பட ஃபில்லிஸ் எழுதியிருக்கிறாள். கொலையாளியையும் நேசிக்கச் சொன்ன பாபா, தம் (அதாவது தாஸின்) விஷயத்தில், ஒரு காலத்தில் தம்மிடம் விச்வாஸத்துடன் தொண்டு புரிந்தவர்களையே விட்டு விலகும்படிச் செய்துவிட்டாரே என்று தாஸ் ஆச்சரியப்பட்டார்.
ஆனால் தமக்கு அவர்களிடம் நேசம் வற்றும்படிச் செய்தாரோ? இல்லவே இல்லை. இதுதான் அதிசயம். “நம்மை இவர்கள் நம்பவில்லை; ஸ்வாமிக்குத் திருப்தி தரும் விதத்தில் இவர்கள் நடக்கவில்லை” என்று தெரிந்தும் லவலேசங்கூடத் தமக்கு அவர்களிடம் வெறுப்பேயில்லை; ஸ்வாமி சொன்னதற்காக விலகியிருந்தாலும் துவேஷமேயில்லை; இந்த மனப்பாங்கு பிரேமஸாயியின் கொடைதான் என்று உணர்ந்தார்.
‘எதற்காக இப்படி ஒரு விசித்ர விளையாட்டு நம் விஷயத்தில் மட்டும் செய்கிறார்? அவர் நேராக நம்மையே கோபித்து நம் கர்மத்தைத் தீர்க்காமல், வேறு யாரிடமோ அவர் கோபம் கொண்டது போலவும் அதை நாம் வாங்கிக் கொண்டு, அஞ்சல் செய்ய வைத்து, அவர்களது மனஸ்தாபத்தைப் பெறுமாறும் செய்கிற விந்தை என்ன?’ என்ற கேள்விக்கு விடை காலக்ரமத்தில் தாஸுக்குப் புரிந்தது. ‘ஸ்வாமி பலரைக் கோபிப்பது போலவும் அலக்ஷ்யம் செய்வது போலவும் நடப்பதெல்லாம் அவர்களுடைய கர்மத்தைப் பொறுத்தேயன்றி அந்தப் பிரேம மூர்த்திக்கு மெய்யாலும் எவரிடமும் வெறுப்பில்லை‘ என்று தாஸ் நூறாயிரம் முறை கேட்டிருந்தாலும் கூட, தாமே பிறரிடம் அப்படிக் கூறினாலும்கூட, ‘வாஸ்தவத்தில் இப்படியும் உள்ளூர அன்பாயிருந்து கொண்டே வெளியில் விலகி நடந்து கொள்ள முடியுமா?’ என்று சிறிது ஐயப்பட்டு இருக்கிறார். அந்த ஐயத்துக்காக ஸ்வாமி அவரைத் தண்டிக்கவில்லை. அவர்தான் பிரேம பகவானாச்சே! சந்தேகித்ததற்காக பெரிய வெகுமதியே செய்து விட்டார்! தமது அலகிலா மற்றச் சிறப்புக்களில் அணுவளவும் தாஸ் பெற முடியாதெனினும், தம்முடைய இந்த அற்புத மனப்பான்மையை, வெளியில் தேங்காய் ஓடாகக் காட்டும்போதும் உள்ளே இளநீராக இருக்கும் இன்னியல்பை தாஸுக்கும் பிச்சை போட்டுவிட்டார். காதரைன் மார்ஷல் என்ற நுட்ப அனுபவம் பெற்ற கிறிஸ்துவப் பெண்மணி அருமையாகச் சொன்ன ஒரு விஷயத்துக்கு எதிர்வெட்டாக இப்படிச் செய்துவிட்டார்.
அவள் என்ன சொன்னாள்? ஈச்வரன் மானுடமாக அவதரிக்கவே செய்வான் என்பதற்கு ஆதரவாக அவள் நிஜ வாழ்விலிருந்து ஒரு திருஷ்டாந்தம் காட்டியிருக்கிறாள். ஒரு பிரிட்டிஷ் விஞ்ஞானி எறும்பு வகைகளிலொன்றைப் பற்றி ஆராய்ச்சி செய்ய விரும்பினாராம். ஆனால் இவர் எறும்புப் புற்றின் பக்கலில் போனாலே, இவர் எவ்வளவு ஜாக்கிரதை செய்து கொண்டாலும் அந்த எறும்புகள் எப்படியோ மோப்பம் கண்டு பிடித்துவிடுமாம். தங்களைவிட அதீத சக்தி கொண்ட ஒருத்தன் தங்களை நெருங்குகிறான் என்று அறிந்தவுடனேயே அச்சத்தில் அவை ஓடிப் பதுங்கி விடுமாம். ‘அடாடா! நாம் இவற்றுக்குத் துளிகூட ஹானியே எண்ணாமல், அன்புள்ளமே கொண்டு, இவற்றின் வாழ்முறை என்னவென்று பார்க்கத்தானே விரும்புகிறோம்? அதைப் புரிந்து கொள்ளாமல் இவை விலகிச் செல்கின்றனவே! நம் நிழல்பட்டாலும் ஒதுங்கியோடும் இவற்றை எப்படி நமக்கு ஒட்டுதலாகச் செய்து கொள்ள முடியும்?’ என்று அவர் பலப் பல யோசித்துவிட்டு, முடிவில் ஒரு வழிதான் உண்டு என எழுதி வைத்தாராம் அதாவது, தானும் அந்த எறும்புகளிலேயே ஒன்றாக ஆனாலன்றி அவை தன்னை அன்போடு நெருங்கி வாழ முடியாது என்று எழுதினாராம். இதே ரீதியில், மனிதர்களிடம் ஒட்டி வாழ்வதற்காக மகாபராசக்தியும் அவர்களில் ஒருவராகத்தான் வந்தாக வேண்டும் என்கிறாள் காதரைன். இப்படி வந்தவர்தான் நம் ஸாயி பகவான் எனக் கொண்டிருக்கிறோம். இவரே இப்போது இதற்கு எதிர்வெட்டாக அவரது உட்பாங்குகளில் ஒன்றை ஒரு மானுடன் சந்தேகப்படாமல் நம்ப வேண்டுமானால் அதற்கு ஒரே வழி அந்தப் பாங்கினை அவனுக்கே அளித்து விடுவதுதான் என்று நினைத்திருக்கிறார்.
எளிதில் பொறுமை இழந்துவிடுபவரும், ரோஷம் மிக்கவருமான தாஸின் இந்த இரு போக்குகளையும் மேற்படி இளைஞர்களின் விஷயத்தில் மாற்றி, அவரே இஷ்டப்பட்டால்கூட அவர்களிடம் வெறுப்புணர்ச்சிகொள்ள முடியாதபடியும் அதேபோதில் வெளியே விலகும்படியும் செய்துவிட்டார். பிரேம ஸாயியின் ஸாரமாகவே ஒரு கோப ஸாயி இருக்கமுடியும் என்று இதிலிருந்து அவர் ஐயம் நீங்கி ஸர்வ நிச்சயம் பெற அருளினார்.
பொறுமை இழந்து கோபிப்பது பற்றி ஸ்வாமியின் சொல்மணிகளைக் கேளுங்கள்:
“He who loses his temper at all times is disliked; he who loses his temper at the wrong time is ignored; he who loses his temper at the right moment is respected”
“எப்போதும் பொறுமை இழந்து சினப்பவன் வெறுக்கப்படுகிறான்; தகாத சமயத்தில் சினமுறுபவன் அலக்ஷியத்துக்கு ஆளாகிறான்; உசிதமான சமயத்தில் சினம் காட்டுபவன் மரியாதை செய்யப்படுகிறான்.”
ஆகக்கூடி, பிரேம ஸாயி என்பதால் கோபிக்கவே கூடாது என்று ஆகவில்லை. கோபிக்கவும் ஓர் உசிதமான சமயம் உள்ளது; அப்போது கோபிப்பதே உயர்வையும் தருகிறது என்று தெரிகிறது.
தாம் சீற்றமுறுவதாகக் காட்டிக் கொள்வது பற்றி, “அன்பு மொழி புரியாதவர்களுக்கு இந்த உக்ர பாஷையில்தான் பேசவேண்டியிருக்கிறது. ஸ்வாமி ஸ்வீட்டாக ஸிரப் தருகிறேன். வாயைத் திறக்க மறுத்தால்? ஊசி போடுவது, ஆபரேஷன் பண்ணுவது என்றிப்படிச் செய்யத்தானே வேண்டும்?” என்கிறார்.
“சிலரிடம் உக்ரமாக நடந்துகொண்டால்தான் பலன் தருகிறது. வெண்ணெயை விரலால் தொட்டே அநாயாஸமாக விண்டெடுக்க முடிகிறது. கற்பாறையை சம்மட்டியால் அடித்துத்தானே புட்டுப்பார்க்க முடிகிறது? அவதாரமான ஒருவர் தர்மநெறிகளில் மட்டும், ‘போனால் போகிறது‘ என்று ‘காம்ப்ரமைஸ்‘ பண்ணிக் கொள்வதற்கேயில்லையாதலால் சினக்கவேண்டிய சந்தர்ப்பங்கள் வரத்தான் செய்யும். இந்தக் கோபக் கண்டிப்பேதான் முடிவில் தங்களுக்கு ஸ்வாமி காட்டும் தலைசிறந்த பிரியம் (best kindness) என்று பக்தர்கள் புரிந்து கொள்ளவேண்டும்” என்றார் ஒரு சமயம்.
“எண்ணம் என்ன என்பதுதான் முக்கியம். தெருச் சண்டையில் லேசாகக் கீறிவிட்டால்கூட ஒருத்தனுக்குத் தண்டனை கொடுக்கிறார்கள். அதுவே ரண சிகித்ஸையில் அரையடி ஆழத்துக்குக் கிழித்துக் குடைந்தாலும் வெகுமானம் அல்லவா செய்கிறோம்? ஸ்வாமி செய்யும் கஷ்டம் எல்லாம் நோய் தீர்க்கும் ரண சிகித்ஸைதான்” என்பார்.
பிரேமஸாயியின் இந்த கோப எழிலில் ஒரு கோணத்தைத்தான் தாஸின் கதையில் விசித்ரமாகக் காட்டி, பகவானான தாம் மட்டுமின்றி பக்தரையும் கோபம் போலப் புற இதழில் காட்டிக்கொள்ளவைத்து அகத்தில் அன்புத் தேனே சுரக்குமாறு செய்தார்.
கதை முடியவில்லை. இன்னும் ஓர் அரிய அத்தியாயம் அதில் ஆரம்பித்து வைத்தார். விவகாரம் ஒரு மாதிரிக் கைவிட்டுப் போயிற்று என்று தாஸ் விச்ராந்தியடைந்த சமயத்தில், மறுபடி அதில் இருவரைப் பற்றி ஸ்வாமி புது அதிருப்திகளை முன்னிலும் உக்ரமாகத் தெரிவித்து, ஒரு கால கெடு கொடுத்து அதற்குள் அவர்கள் சில மாற்றங்கள் பெற்றேயாக வேண்டுமென்றும், அப்படி மாறாவிடில், தாஸ் இன்னின்ன கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென்றும் தாஸின் மூலமே உத்தரவிட்டனுப்பினார்.
(இப்படி உக்ரக்கோலம் காட்டினாலும் உள்ளூர அவர்களிடமும் சரி, ஸ்வாமி ஸௌம்யமாகவே இருந்து வந்திருக்கிறார் என்பது இன்னொரு பிரேம விந்தை. இந்தக் கோப காலத்திலும் அவர்களது பிரார்த்தனைகளை ஈடேற்றியிருக்கிறார். ஸ்வப்பன தரிசனம் முதலானவற்றைக் கொடுத்திருக்கிறார். ஒருமுறை இதுபற்றி ஸ்வாமியிடம் தாஸ் குறிப்பிட்டு, இப்படி அவர்கள் ஸ்வாமியின் அருளைத் தொடர்ந்து பெற்று வருவதால், தம்மிடம் அவர்களைப் பற்றி ஸ்வாமி அதிருப்தி தெரிவிப்பதாகச் சொல்வதை நம்பத் தயங்குவது நியாயம்தானே என்று கேட்டார். அதற்கு ஸ்வாமி, “ஸ்வாமி கணக்குத் தப்புவதேயில்லை. யார் ஒரு முறை ‘ஸாயிராமா‘ என்று சொல்லிவிட்டாலும் அதை மறக்காமல் பத்தாகத் திருப்பிச் செய்வேன். இந்த boys என்னை pastல் நினைத்ததற்கும், இப்போதுங்கூட நினைப்பதற்கும் ஈடாக நான் பாட்டுக்கு (உக்ரத்திலேயே!) அநுக்ரஹமும் பண்ணிக்கொண்டுதானிருப்பேன். ஆனால் இதைவிடப் பெரியதாக இவர்களுக்கு நான் செய்ய ஆசைப்படுகிற அநுக்ரஹத்துக்கு அவர்கள் பாத்திரராக வேண்டுமென்பதால்தான் குறைகளைக் கண்டித்துக் காட்டுகிறேன்” என்றார்.)
பகவான் விதித்த கால கெடுவும் நெருங்கிற்று. ஆனால் அவ்விருவரிடமிருந்து தாஸுக்கு எந்தத் தகவலும் இல்லை. “இதென்ன, ஸ்வாமி உத்தரவை இப்படிக் கிள்ளுக் கீரையாக நினைக்கிறார்களே! நினைத்துவிட்டுப் போகட்டும், நடுவே நாமொருத்தர் ஸ்வாமிக்குப் பதில் சொல்ல வேண்டியவராக மாட்டிக் கொண்டிருக்கிறோம் என்பதையாவது கருத்தில் வைத்து, ‘நாங்கள் உத்தரவுப்படிச் செய்வதாக இல்லை‘ என்று நம்மிடம் வந்து தெரிவிக்க வேண்டியது முறையல்லவா? அதுவும் செய்யவில்லையே! இப்போது நாம் செய்ய வேண்டியது என்ன?” என்று தவியாகத் தவித்தார் தாஸ். கெடு வைத்த காலம் ஓடி விட்டபோது நடுங்கவே செய்தார். இத்தனைக் காலமும் அவர்களிடம் ஏற்படாத எரிச்சல் இப்போதுதான் அவருக்குத் தலை தூக்கலாயிற்று.
அந்த அயனான சமயத்தில் எரிச்சல் மூளாமல் ஸ்வாமி பன்னீர் வர்ஷம் பொழிந்தார்! உள்ளம் குமைந்து கொண்டே, வெளியில் அதைக் காட்ட முடியாமல், இரண்டு விஸிட்டர்களுடன் தாஸ் பேசிக்கொண்டு, அதனால் உட்சுமையில் மேலும் விரிசல்விட்டுக் கொண்டிருந்தார். அந்த ஸந்தர்ப்பத்திலே ஸ்வாமியின் ஸூக்ஷ்ம ஃபோன் மணி போல ஏதோ ஒன்று தாஸின் செவியில் ஒலித்தது! தூக்கம் கண்ணை அழுத்துவதாக விஸிட்டர்களிடம் சொல்லி தாஸ் தலையணையில் சாய்ந்தார். தலைவனின் மணிக்குரல் அமுதாக, தெளிவாக அவர் செவியில் பாய்ந்தது. “Unreservedlove, unreservedlove” என்று இருமுறை சொன்னார்.
அதாவது யாரிடம் தாஸுக்கு மனஎரிச்சல் மூண்டதோ அவர்களிடம் எவ்விதக் கட்டுப்பாடுமில்லாத அன்பைக் காட்டச் சொன்னார்.
ஸ்வாமி முன்னர் கேலி செய்தது மறவாமல் தாஸ், “நான் stiffஆக இல்லை, sternஆக இல்லை, ஸ்வாமியை விட தயையா இருக்கப் பார்க்கிறேன்னு எல்லாம் கோவிச்சுக்கக்கூடாது” என்று மானஸிகமாகக் கேட்டார்.
அதற்கு ஸ்வாமி, “இல்லை, அப்போ சொன்னது அப்போ. இனிமே இப்படித்தான். Special Graceலே அவங்களுக்கு சீக்கிரத்திலே ஒரு ‘ப்ரமோஷன்‘ தரலாம்னு ஸ்வாமி இருந்தேன். அதுக்குத்தான் ‘ப்ரிபரேஷன்‘ உங்கிட்ட கொஞ்சம் ‘ட்ரெயின்‘ ஆகணம்னு சொன்னேன். அவங்க ‘ப்ரமோஷன்‘ இல்லாட்டிப் பரவாயில்லை; இந்த வாத்தியார்கிட்டே ‘ட்ரெய்னிங் வேணாம்‘னு இருந்துட்டாங்க. வாத்தியாரா இருக்கிறமட்டும்தான் stiff, stern எல்லாம் வேணும் மனஸிலே பிரியம் இருந்தாலும்! இனிமே மனசுலே, வாக்கிலே, காரியத்திலே எல்லாம் unreserved loveதான். Deserve, undeserve பார்க்காம unreserved love.”
“பள்ளியில் சேர்ந்த மாணவனைத்தான் ஆசிரியர் பெஞ்சு மேல் ஏற்ற வேண்டும். சேராதவனை எதற்குத் தண்டிப்பது? இந்த இளைஞர்களுக்கு ஒரு பயிற்சி தந்து, கர்மாவை மீறிய தமது விசேஷ கிருபைக்குப் பாத்திரராக்கி, ‘(உத்)யோக‘ உயர்வு தர பகவான் எண்ணியிருக்கிறார். அதைப் பெற தாஸின் மூலம் பெற அவர்களுக்கு இஷ்டமில்லை. அதனாலென்ன? அத்தனை உயர்வைப் பெறாவிட்டாலும் ஸாயி பக்தர்களில் ஏனைய எத்தனையோ பேரைப்போல அவர்கள் இருந்துவிட்டுப் போகிறார்கள். ஸ்வாமியும் ‘ஸ்பெஷல் க்ரேஸ்‘ என்கப்பட்ட ‘விசேஷ‘ கிருபை காட்டாவிட்டாலும் தம்முடைய ‘வழக்கமான‘ கிருபையை அவர்களுக்குக் காட்டிவிட்டுப் போகிறார். அதுவே காலக்கிரமத்தில் அவர்களை விசேஷ கிருபைக்குப் பாத்திரராக உயர்த்தினாலும் உயர்த்தும். இவர்கள் இள வயசினர்தாமே? எவ்வளவோ பேர் முதுமையிலேயே ஸ்வாமியிடம் வந்து சடாரென்று ஆத்மிக முதிர்ச்சி பெறவில்லையா? ஆதலால், இவர்களும் அந்தப் பருவத்தில் அந்தப் பக்குவத்தைப் பெற்று விட்டுப் போகிறார்கள்! அவர்கள் விஷயத்தை ஸ்வாமியே பிற்பாடு எப்படியோ பார்த்துக்கொண்டு விடுவார். ஆக, இப்போது அவர் ஆட்டி வைத்தது முக்கியமாக நம் ஒருவரைத்தான். நம் கர்மத்தைத் தீர்க்கும் அவரது பிரேமையைத்தான் இப்படியொரு கோப நாடகமாகக் காட்டியிருக்கிறார். நம் கர்மா போவதற்கு நேராக நம்மைக் கோபத்திலடித்ததாகக் காட்டாமல், அவர்களை அடித்ததாகக் காட்டி, அந்த அடியை நாம் பட்டுக்கொள்ளுமாறு விஞ்சை செய்திருக்கிறார். இல்லாவிட்டால் கண்டிக்கப்பட்டவர்களும், கெடு வைக்கப்பட்டவர்களும் பட்டிருக்கவேண்டிய தாபத்தையும் கிலியையும் அவர்கள் படாமல் நாம் ஏன் படவேண்டும்?”
எரிச்சல் அடியோடு சமனமாயிற்று. ஸ்வாமி கிருபையில் காரணமற்ற, கட்டுப்பாடற்ற அன்பு சுனையாகச் சுரந்தது. ஆயாஸம் தீர்ந்து ஆரா உற்சாகமாயிற்று.
இன்னமும் கதை முடியவில்லை. மனத்திலிருந்த அன்பை வாக்கிலே, காரியத்திலே காட்டுவதற்காக தாஸே அவர்களிடம் சென்றார். பகவான் தந்த கட்டுப்பாடற்ற பிரேம சக்தி பேதங்களையெல்லாம் அடித்துத் தள்ளிவிடப் போகிறது என்ற ஆர்வத்துடன் சென்றார்.
படுதோல்வி கண்டார்.
இரவு படுக்கையில் விழுந்தபோது உத்ஸாஹமெல்லாம் போய், மனம் புலம்பியது. ‘ஸத்யமேவ ஜயதே‘ என்பதுபோல் ‘ப்ரேமா ஏவ ஜயதே‘ என்று நம்பினோமே! அது கடைசியில் பொய்யாயிற்றே! நம் தோல்வி பெரிசில்லை; தோற்றுப்போக நமக்கு ஸகலத் ‘தகுதி‘யும் உண்டு. ஆனால் ஸ்வாமி விதித்தவண்ணம் மேற்கொண்ட கட்டுப்பாடற்ற அன்பு தோற்கலாமா, ஆமா?’ என்று தாஸின் நெஞ்சு வலித்தது.
அஹா! மீண்டும் ஸ்வாமியின் மதுரக்குரல்! மஹா உபதேசம் செய்தார். இந்த நிழலருமைக்காக இதுவரை உற்ற வேக்காட்டைப்போல் ஆயிரம் மடங்கை ஏற்கலாமே! ப்ரேமாவதாரி பகருவார்: “பைத்தியக்காரா! ‘லவ்‘வுக்குத்தான் ‘விக்டரி‘ன்னா, ‘ஔட்ஸைட்‘லே தெரியற ‘விக்டரி‘ன்னா அர்த்தம்? ஜீஸஸ் அவரை ‘க்ரூஸிஃபை‘ பண்ணினவங்களைக்கூட ‘ஃபர்கிவ்‘ பண்ணச்சொல்லி ‘ப்ரே‘ பண்ணினாரே, அதுக்காக அவங்க (இயேசுவைச் சிலுவையில் அறைந்தவர்கள்) அவரை (சிலுவையிலிருந்து) எடுத்துட்டாங்களா என்ன? அப்படீன்னா அவரோட ‘லவ் டிஃபீட்‘ ஆச்சுன்னு அர்த்தமா? ‘ட்ரூ லவ்‘வுக்கு ஔட்ஸைட் விக்டரி, டிஃபீட் ரெண்டுமே தெரியாது. ‘லவ்‘வா இருக்கறதாலே மனஸிலே ‘நாம் ஸரியாயிருக்கோம்‘னு ‘கம்ப்ளீட் ஸாடிஸ்ஃபாக்ஷன்‘ இருக்கு பாரு, அதுவேதான் விக்டரி.”
அன்பாக இருப்பதில் மனம் தன்னில் தானே நிறைவதுதான் வெற்றி என்பது எத்தகைய அரிய விளக்கம்?
இளைஞர்கள் விவகாரத்தினால் தாஸின் கர்மத்தை நீக்கியதோடு போனஸாக ஸ்வாமி இந்த விளக்கத்தை அளித்துவிட்டார்! அதன் பின் வாக்கால், காரியத்தால் அன்பைக் காட்டி வெற்றி தோல்வி பெறுவது பற்றி எண்ணாமல், மனத்தளவில் பூர்ண ப்ரேமையாயிருந்து கொண்டு அதிலேயே தாஸ் நிறைந்திருக்கலானார்.23
24இந்நூல் எழுதப்பட்டு ஒன்றேகால் ஆண்டுக்குப் பின்னரே அச்சுவாஹனம் ஏறுவதால் ஸமீபத்தில் தாஸ் பெற்ற அனுபவத்தையும் வாசகர்களுக்கு மேலுமொரு போனஸாக அளிக்க முடிகிறது. கூடச் சேர்த்து பழகாமலே, உள்ளூர அன்பு கொண்டிருப்பதில் தாஸ் திருப்தி பெற்றுவிட்ட போதிலும், இதன்பின் அந்த இளைஞர்கள் தாமாகவே மெல்ல மெல்ல அவரிடம் மனோபேதம் குறைந்து பழகலாயினர். அவர்களில் மிகவும் விலகிப்போன வாலிபர் மற்றவர்களை விடவும் இளகி ஒட்டுறவு கொண்டுவிட்டார். இதிலே வெளியில் காட்டும் படியான லீலா நாடகம் ஏதுமே பகவான் செய்யவில்லை. “லீலா நாடக ஸாயி”யில் லீலையே செய்யாமல் விநோதம் விளைவிக்கும் மஹா லீலையைச் சொல்லக் கிடைத்திருப்பது ஓர் அதிசய போனஸ்தானே?
(இயேசுவுக்குப் போவானேன்? நம் ஸ்வாமியின் உதாரணமே போதும். உயிர்க்குலம் அனைத்திடமும் கலப்பிலா திவ்ய அன்பே அவரது இதயத்திலிருந்து பெருகுகிறது. ஆயினும் இதை உணராமல் அவரை விரோதிப்போர் இருக்கிறார்கள்! அவரோ இதைப் பொருட்படுத்தாமல் தாம் பிரேமிப்பதிலேயே காணும் தன்னிறைவில் திளைப்பதால்தான் ஸதானந்தராக ஸர்வ காலமும் உலக உத்தாரணத்துக்காக அயர்வின்றி உழைத்து வருகிறார்!)
***
தவறு செய்பவர்களை அவர் கோபிப்பதை மட்டும் பெரிசு படுத்தலாமா? எத்தனை பெரிய குற்றமாயினும் அதை அவர் தவறு (error) என்ற சிறிய பிழையாகத்தான் கருதுகிறாரேயன்றிப் பாபம் (sin) என்ற பெருந்தீமையாக அல்ல என்பதல்லவோ பெரிதுபடுத்திப் புகழுவதற்குரியது? தவறுதல் இயல்பு; அது திருத்தப்படக் கூடியதே என்பார். “பாபோஹம், பாப ஜன்மானாம்” ‘நான் பாபி, பாபத்தால் பிறப்பெடுத்தவன்‘ என்பதே அவசியமில்லை என்கிறார். ‘பவித்ர ஆத்ம ஸ்வரூபலாரா!’ என்றே நம்மை விளிப்பவராயிற்றே! “கலப்படமில்லாத நன்மை உண்டே தவிர, கலப்படமில்லாத தீமை என்று ஒன்று கிடையாது. முற்றிலும் பாபி என்று ஒருவனுமில்லை. கொலைக்காரனுக்குக்கூட ஏதோ ஒன்றிடம் அன்பு உண்டாகும்போது அந்த அன்பினால் தெய்வ உபாஸனை செய்தவனாகிறான்” என்பார்.
சொல்வார்: “நீங்கள் அந்தரங்க சுத்தமாக மாத்திரம் உங்களைச் சோதித்துக் கொண்டீர்களாயின், இனி தவறு புரியாதிருக்க வேண்டுமென்று மட்டும் தாபத்துடன் தீர்மானித்தீர்களாயின் உங்களுடைய எல்லாத் தப்பிதங்களையும் ஸ்வாமி க்ஷமித்து விடுவேன். அறிவொளி காணாத காலத்தில் நீங்கள் போன போக்குகளுக்கு பண்டும் ஆட்படாதபடி ஆன்மபலம் தரவேண்டுமென்று ஆண்டவனைப் பிரார்த்தியுங்கள். திண்ணம் கேட்டருளுவான்.”
ராமகிருஷ்ணர் தமது அணுக்கச் சீடர்களுக்கு வேண்டியாங்கு வரமீந்த நன்னாளை ‘கல்பதரு தினம்‘ எனக் கொண்டாடுவார்கள். ஸ்வாமி சென்ற ஆண்டு (1978) மஹா சிவராத்ரிக்கு மறுதினம் பிருந்தாவனத்தில் கூடியிருந்த அத்தனை ஆயிரம் மக்களுக்கும், அவர்கள் வேண்டாமலே, அவர்கள் சற்றும் எதிர்பாராமலே, கல்பதருவாக ஒரு வரம் தந்தார். இரவு முழுதும் பஜனை நடந்தபின், காலையில் அநுக்ரஹ பாஷணம் நிகழ்த்திய போது, “இன்றுவரை நீங்கள் செய்துள்ள அத்தனை தவறுகளையும் இன்று மன்னித்து விடுகிறேன். இனி புது வாழ்வு தொடங்குங்கள்” என்றார். இப்படியொரு ஸர்வப் பிராயச்சித்தம் தரும் பிரேமப் பித்தமும் உண்டா?
அந்தப் பித்தத்திலும்கூட method in madness என்பதாக, ஸ்வாமி தமது நெறியிலிருந்து தவறாத ஒழுங்கை என்ன சொல்வது? அன்பை அலை புரட்டி வந்து அவர்கள் அன்றுவரை செய்த பிழைகளைக் கழுவித் தள்ளினார்; ஆனாலும் அவர்கள் மனத்திலேயே தாம் புகுந்து அதற்குப் பின் அவர்கள் புதிதாகப் பிழைபடாமற் செய்ய முன் வரவில்லை. அவர்களே சுயேச்சையாக நவஜீவனம் தொடங்க வேண்டுமென்றே அறைகூவினார். மாற விரும்பும் மனப்போக்குக்கு உதவுவதும், ஊக்கம் தருவதுமே தமது பொறுப்பன்றி மனத்தையே தாம் மாற்றுவது ‘ஹிப்னாடிஸம்‘ என நினைப்பவரன்றோ?
அவரவரும் ஸ்வயமாக விரும்பித் திருந்தும்படிச் செய்வதில் ஸ்வாமி படுகிற பாட்டைக் கண்ட ஒருவர், “ஸ்வாமி! தாங்கள் எங்களுக்கு ‘சுயேச்சை‘ தந்தால் நாங்கள் வழிக்கு வராமல் சண்டி செய்து தங்களுக்கு இப்படித்தான் சிரமம் தருவோம். எனவே எங்கள் விருப்பத்துக்கு விடாமல் தாங்களே பிடிவாதமாக ஆட்கொண்டு விடுங்களேன்! ராமகிருஷ்ணர் விவேகாநந்தரின் இளமையில் தாமே அவரது தனி மனத்தை விழுங்கி அவருக்கு நிர்விகற்ப சமாதி யநுபவம் தந்தாரே, அப்படிச் செய்யுங்களேன்!” என்றார்.
ஸ்வாமி மோஹன நகை செய்து, “விவேகாநந்தர் உங்களையெல்லாம் போலவா கர்மா மூட்டை வைத்துக் கொண்டிருந்தார்? அதோடு அவர் ஸத்யாநுபவத்துக்கு எத்தனை ஆர்வம் கொண்டிருந்தார்? இன்னொன்று கவனியுங்கள். இப்படிப்பட்டவரைக்கூட ராமகிருஷ்ணர் நிரந்தரமாக ஸமாதி நிலையில் வைத்திருக்கவில்லையே! சற்று நேரத்துக்குப் பின் அது விலகி அவர் பழைய படியேதானே ஆனார்? ஸ்வாமி தாற்காலிகமாக உங்களுக்குப் பெரிதாக ஒரு நிலையைத் தந்து, உடனேயே அதை மறைக்க விரும்பவில்லை. மிக மிகப் பொறுமையுடன், மிக மிக நிதானமாக, அங்குலம் அங்குலமாக, உங்களை முன்னேற்றத்தான் பாடுபடுகிறேன். ஆனால் இந்த முன்னேற்றம் நிரந்தரமாக நிலைத்து நிற்கும்படியாக முயலுகிறேன்” என்றார்.
ஏதோ ஒரு க்ஷணத்தில் வெளியாகும் ஸ்வாமியின் கோபம் தெரிகிறதேயன்றி, மற்ற எல்லாச் சமயத்திலும் அவர் கைக்கொண்டுள்ள அபாரப் பொறுமையை யார் உணர்கிறோம்?
***
வாஸுகிநாதன் என்றொரு அணுக்கத் தொண்டர். (அணுக்கத் தொண்டர் என்றதாலேயே இது அவரது இயற்பெயரல்ல என்று ஊகித்து விடலாம்.) அவரை ஸ்வாமி ஒருமுறை வாங்கு வாங்கு என்று வாங்கி விட்டார். ஸ்வாமி அன்பிலே இவரை விலை கொடுத்து வாங்கியவராதலால் இப்போது தவறுகளுக்காக இப்படி ‘வாங்கவும்‘ ஸ்வாதீனம் பெற்றிருந்தார். வாஸுகிநாதன் தவறு பல செய்தாலும், ஸ்வாமிக்குத் திட்டும் உரிமையில்லை என்று நினைக்கும் தவற்றைச் செய்யவில்லை. ஆனால் ஒன்றுதான் அவரால் தாங்கமுடியவில்லை. ஸ்வாதீனமுள்ள ஸ்வாமி தமது ஆதீனத்திலிருந்தே இவரை விலக்கிவிட்டது போலப் பேசி விட்டார். இனி தமக்கும் அவருக்கும் ஸம்பந்தமில்லை என்று கத்தரித்து விட்டாற்போல் கடிந்துகொண்டு விட்டார். பொற் சங்கிலியான பகவானின் ப்ரேம பந்தம் துண்டித்துப்போவதா?
அழுகையை அடக்கிக்கொண்டு வெளியேறினார் வாஸுகிநாதன்.
வீட்டுக்கு வந்தார்.
‘அங்கேதான் அழ முடியவில்லை; இங்காவது அழுது தீர்ப்போம்‘ என்று பூஜையறைக்குச் சென்று ‘பூசை கொடுத்த‘வரின் படத்துக்கு எதிரே அமர்ந்தார்.
கண்ணில் நீர் துளிக்கச் சித்திரத்தைப் பார்த்தார்.
அயர்ந்துவிட்டார் அப்படியே!
சித்ரநாயகனின் பவித்ர நயனங்களிலிருந்து கொட்டுகிறது பல இடங்களில் பாபா படங்களிலிருந்து கொட்டும் தேனா? இல்லை. குருவாயூரப்பன் தைலமா? இல்லை. வடவேங்கடவனின் பச்சைக் கர்ப்பூரத் தீர்த்தமா? அதுவுமில்லை. பின்னே என்ன? சித்திரத்தின் கண்ணிலிருந்து கொட்டுகிற நீர் அசல் கண்ணீரேதான்! உப்புக் கரிக்கிறதே தித்திப்பு இதயத்துக்குச் சான்றாக!
அன்புக் கண்ணீர் விடுவதாகப் பெண்ணிடம் சொன்ன பாபா அதைப் பிரத்யக்ஷமாக்கிக் காட்டுகிறார்!
“என்னை நோக்கி நீ ஓர் அடி வைத்தால், உன்னை நோக்கி நான் பத்தடி வருவேன்” என்பவர் அடியார் ஒரு சொட்டுக் கண்ணீர் சிந்து முன்நூறு சொட்டுக் கொட்டியிருக்கிறார்!காய் கசக்கத்தான் கசக்கும். ஸ்வாமியின் கோபம் காயாகக் கசக்கிறது. ஆனால் மனத்தைக் கவரும் புஷ்பம்தான் காயாகிறது. பிரேம புஷ்பம்தான் காயுமாகிறது, நம்மை ஸ்வாமி காயும்போது! பிறகோ சோகக் கனி ரஸமே பொழிகிறது. அந்த சோக ரஸம் அளிக்கும் ஆனந்த ஊட்டம், ஆஹா!