11. ஸாயிக் கண்ணன்
சுருள் குழல் சுந்தரர் நம் ஸ்வாமி. அவருக்கே உரியது ஜிவ்வெனச் சிலிர்த்த இம் முடியமைப்பு என்று எண்ணுகிறோம். ஆனால் கண்ணனுக்கும் இதே போன்ற சிகாலங்காரம் இருந்தது என்றெண்ணவும் இடமுண்டு. மேல்நாட்டு மாது ஒருத்தி இதை எடுத்துக்காட்டி எழுதியிருக்கிறாள்.
கண்ணனுக்கு ஹ்ருஷீகேசன் என்று ஒரு பெயருண்டு. (தமிழில் அதன் பொருளே மாறுபட ரிஷிகேசன்‘ என்று எழுதி வருகிறார்கள்.) இதற்குப் பொதுவாகச் சொல்லும் பொருள், ‘ஹ்ருஷீகம் என்றால் புலன்; புலன்களை அடக்கியாளும் ஈசனே ஹ்ருஷீகேசன்‘ என்பதாகும். ஆனால் அந்த அம்மாள் ‘ஹருஷீகஈச‘ என்று பிரிக்காமல் ‘ஹ்ருஷீகேச‘ என்றே பிரித்துப் பொருள் கொள்கிறாள். ‘ஹ்ருஷீ‘ என்றால் மயிர்க்கூச்சிடுவது; அதாவது ரோமம் தலையோடு படிந்து சரியாமல் மயிர்க்காலில் குத்திட்டு ஜிவ்வென நிற்பது. கண்ணனின் கேச பாரம் முற்றிலும் இப்படிப் புளகமுற்றாற் போல் பவியிருந்ததாலேயே அதாவது இன்றைய நம் வாமியின் கேசம் போலவே கேசவனுக்கும் அமைந்திருந்ததாலேயே அவனுக்கு ‘ஹ்ருஷீகேசன்‘ என்ற பெயர் ஏற்பட்டதாகச் சொல்கிறாள். ஆதி சங்கரர் ‘விஷ்ணு ஸஹஸ்ரநாம‘ பாஷ்யத்தில் ‘ஹ்ருஷீகேசன்‘ என்ற பெயருக்குக் கூறும் இரண்டாவது பொருளும் இதே கருத்தைச் சுட்டுகிறது.
மாயாவி நடிப்பாலும், நொடிப்பாலும், குறும் பாலும், குதூஹலத்தாலும், மோஹன சக்தியாலும், பிரேமப் பிரவாஹத்தாலும் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மனையே நினைப்பூட்டுபவர் ஸ்வாமி. இத்தனை ஆட்டத்திலும் ஆடாத கீதாசார்ய ஜகத்குருவாக அவன் இருந்தது போலவே இவரும் இருக்கிறார்.
***
குழந்தை நாளில் பண்டரி பஜனில் விட்டல கிருஷ்ணனாகவே நட்டமிட்டவர் நம் ஸ்வாமி.
ஹைஸ்கூல் மாணவனாக ‘செப்பினட்லு சேஸ்தாரா?’ நாடகம் எழுதியபோது அதில் தம்மையே மைய பாத்திரமான சிறுவனாக வைத்துக் கொண்டார். அந்தப் பாத்திரத்துக்கு அவர் தந்த பெயர் கிருஷ்ணன் என்பதே.
புட்டபர்த்தித் தலபுராணத்துக்கு முக்கியமான வேணுகோபாலனின் வடிவத்தை அக்கிராம மக்கள் வழிபட்ட கல்லில் வரவழைத்துக் காட்டியிருக்கிறார். ஏன், தம்மையே அங்கு ‘வரவழைப்பதற்காக‘ கிருஷ்ண பத்னியான ஸத்ய பாமையைத்தான் தமது பாட்டனாரிடம் அனுப்பியிருக்கிறார்! “ஸத்யம்சிவம்ஸுந்தரம்”, “ஸ்வாமி” முதலான நூல்களில் இவ் விவரங்களையும், ஸ்வாமியைக் கண்ணனின் கவினுருவிலேயே கண்டு களித்தவர்களைப் பற்றிய குறிப்புக்களையும் காணலாம்.
இந்நூல்களில் வராததான ஓர் அற்புத அநுபவத்தை அணுக்க அடியாருள் ஒருவரான ஸ்ரீ ஜே.எஸ். ஹிஸ்லாப் இரண்டாண்டுகளுக்கு முன் தெரிவித்திருக்கிறார். இவர் பகவானுடனும் இன்னும் சில பக்தர்களுடனும் புட்டபர்த்திக்குக் காரில் போய்க் கொண்டிருந்தாராம். முன் ஸீட்டில் அமர்ந்திருந்த இவர் அடிக்கடித் திரும்பிப் பின் ஸீட்டிலிருந்த ஸ்வாமியைப் பார்த்தபடியிருந்தாராம். அப்படியொரு முறை பார்க்கையில் பரவசப் பிரமிப்புக்கு ஆளாகிவிட்டாராம். காரணம், ஸத்ய ஸாயி ரூபத்திலேயே பரம ஸுந்தரமான ஸ்வாமியின் திருமுகத்து அமைப்பு முற்றிலும் மாறி, இதையும் விட மிக மிக மிக லாவண்ய மிக்கதான, ஆழ்ந்த நீல நிறத் திவ்விய வதனமாகியிருந்ததாம்! “நிஜ வாழ்விலோ, மாபெரும் ஓவியர்களின் சித்திரத்திலோகூட அப்பேர்ப்பட்ட அழகு முகத்தை நான் கண்டதில்லை. கற்பனைக்கும் கருத்துக்கும் அப்பாற்பட்டதான, அநுபவித்துத் தீர்க்கவே முடியாததான அழகாக அது இருந்தது. அதன் ஆகர்ஷணம் எவ்வளவு வலுவாகவும், தீக்ஷண்யமாகவும் இருந்ததெனில், என் இருதயமே திருகப்படுவது போலிருந்தது! கண்ணனின் நிறமாக ஓவியர்கள் பொதுவில் தீற்றும் ஸாதாரண நீலமாக இன்றி, இருள் வானில் எப்போதேனுமே காணக்கூடியதான வெல்வெட் நீலமாக ஸ்வாமியின் நிறம் அப்போது இருந்தது. கரைக்கு ஆயிரக்கணக்கான மைல்கள் தள்ளிக் கப்பலில் செல்கையில் பஸிஃபிக் கடலைத் தளத்தினின்று பார்க்கும் போது சில போதுகளில் இந்த நீலம் போலக் கண்டிருக்கிறேன்” என்றெல்லாம் ஸ்ரீ ஹிஸ்லாப் உன்னதமாக வர்ணிக்கிறார்.
நெடுநேரம் இப்படியே கழுத்தை வளைத்துக் கொண்டு அழகு ஆழியில் அழுந்திய ஹிஸ்லாப் நேரே திரும்பினார். ஆனாலும் அந்த மோஹன வசியம் விடாமல் மீண்டும் திரும்பினார். இந்த லோகத்தையே சாராத லாவண்யம் இன்னமும் மாறவில்லை. குறைந்த பக்ஷம் கால் மணியேனும் இந்த தரிசனம் கிடைத்தது என்கிறார். திவ்ய தரிசனங்கள் என வரும்போது கால்மணி என்பது கால் யுகத்துக்கு ஸமமாகும். இம்மாதிரிக் காட்சிகள் ஓரிரு விநாடிகளே நிற்கும். இங்கோ சுமார் ஆயிரம் விநாடிகளுக்கு அற்புத தரிசனம் கொள்ளை போகிறது அல்லது உள்ளத்தைக் கொள்ளை கொண்டு போகிறது!
இதிலே கண்ணனின் கள்ளம்! ஸ்வாமியின் பக்கத்திலேயே அமர்ந்திருந்த இருவரும் இக் காட்சியைப் பெறாமல் ஹிஸ்லாப் ஏன் இப்படிக் கழுத்தை ஒடித்துக் கொண்டு நிலைக்குத்திட்டுப் பார்க்கிறாரென வியந்து, அவரிடமே காரணம் கேட்டார்கள்!
அவர்களுக்குப் பதில் சொல்லாமல் அவர் ஸ்வாமியிடம், “அதென்ன நீலம்?” என்று வினவினார். உலகை விழுங்கிய மாயனும் தரிசன மர்மத்தை மற்றவர்கள் அறியாதபடி விழுங்கி, “ஓ, அதுவா? அளக்க முடியா ஆழமுள்ள எதுவும் அப்படிப்பட்ட நீலமாகத்தானிருக்கும்” என்றார்.
வெகுநாள் கழித்துத்தான் ஹிஸ்லாப்பையும் வைத்துக் கொண்டு இன்னொருவரிடம் தாம் அவருக்குத் தந்த கிருஷ்ண தரிசனத்தை உடைத்துச் சொன்னார். “சைத்ரிகர் தீற்றும் கண்ணனோ, கவிகள் கல்பிக்கும் கண்ணனோ அல்ல; நிஜமான கண்ணனையே ஹிஸ்லாப்புக்குக் காட்டினேன்” என்றார்.
தமது கிருஷ்ணத்துவத்தை ஸ்வாமி பளிச்செனச் சொல்லிக்கொள்வது தனியானதோர் அழுத்தம் வாய்ந்ததாகும்.
“கண்ணனின் காலத்திற்குப் பிறகு ஷீர்டி ஸாயி அவதாரத்தின் போதுதானே இறைவனே மறுபடி மண்ணுலகில் குருவாக வந்து உபதேசித்தது?” என்று ஸ்வாமியைக் கேட்க விரும்பினார் ஸ்ரீ ஜே.எஸ். ஹிஸ்லாப். “கண்ணனின் காலத்துக்குப் பிறகு” என்று அவர் ஆரம்பித்தவுடனேயே ஸ்வாமி பட்டென்று இடைமறித்து, “கண்ணனாவது காலமாவது? நான்தானே கண்ணன்?” என்றார்.
துவாரகை சென்று வந்தபோது இயல்பாக, “என் பழைய வீட்டுக்குப் போய் வந்தேன்” என்றார். டாக்டர் பெனிடோ ரேயிஸ்ஸுக்கு ஸ்வாமி கண்ணனின் உருவம் பொறித்த மோதிரமொன்றை மெடீரியலைஸ் செய்து அணிவித்தார். அன்று காலை புட்டபர்த்தியிலிருந்து ஸ்வாமியைப் பின்தொடர்ந்து இன்னொரு காரில் அனந்தப்பூருக்கு வந்து கொண்டிருந்த ரேயிஸ், ‘கலிஃபோர்னியா திரும்பியபின் நம் நண்பர்களுக்குக் காட்டி நம்பிக்கையூட்டும்விதமாக பாபா நமக்கு ஏதேனும் பரிசு தரமாட்டாரா?’ என்று எண்ணமிட்டார். அந்த எண்ணத்தையறிந்தே இப்போது மோதிரம் தந்து அவரை வியக்க வைத்தார். வியந்தாலும் அவருக்குப் பூர்ண திருப்தி இல்லை. கண்ணனுக்குப் பதில் பாபாவின் உருவமே பொறித்த மோதிரமாக அருளியிருந்தால்தான் அவருக்கு முழு நிறைவு உண்டாகியிருக்கும். இதை ஒளிவின்றித் தெரிவித்தார். உடனே பாபா, “கண்ணன் பாபா: இரண்டிற்கும் கொஞ்சம்கூட வித்தியாஸமில்லை” என்றார் தீர்மானமாக.
“என்னை ஏமாத்த நினைச்சியோ, கிருஷ்ணனா உனக்கு மேலே ஏமாத்து வித்தை செஞ்சு ஜயிச்சுடுவேனாக்கும்” என்று ஆள்காட்டி விரலை ஆட்டும்போது நூற்றுக்கு நூற்றியொரு சதவிகிதம் கிருஷ்ணனாக இருப்பார்
“ராதே, ராதே!” என்று யமுனாதீரத்தில் கண்ணன் அழைத்துக் கொண்டு போனதையும், அப்போது அன்புப் பித்தில் தேவி அலமாந்ததையும் ஸ்வாமி வர்ணிக்கும்போது, சவாதம குலம் முழுதினுள்ளும் கரைந்து நம்மில் உள்ள ராதை அவரையே பரமாத்மக் கண்ணனாக உணர்ந்து பொங்கிப் பொங்கி எழுவாள்.
தமது ஆழ்ந்த உணர்ச்சியை வெளிக்காட்டாத இயல்பு படைத்த ஸ்ரீ கோகாக் நமது ஸ்வாமி குறித்து காகம் போர்னியா நிருபர் ஒருவர் கேட்ட கேள்விகளுக்கு விடையளித்து வரும்போது பரவசராகிப் பகர்ந்தார்:
“அவரே நான் அன்பு செய்யும் நண்பர்; நான் அஞ்சுகிற ஆண்டவர்; அந்தக் கண்ணனின் புதிர்க் கரங்களால் வெட்டுண்டு மாண்டு அமரத்வம் கொள்ளவே நான் ஆசைப்படுகிறேன்.”
கண்ணனை நண்பனாகச் சொன்னதும் அர்ஜுனன் நினைவும், அதைத் தொடர்ந்து ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மனின் உள் இயற்கையை ஸாரமாக வடித்து நமது பெருமாள் சொன்னதும் மனத்தின் முன் வருகின்றன. தனஞ்ஜயனுக்கு கீதோபதேசம் செய்த அச்சுதன், “இதே உபதேசத்தை மிகவும் ஆதியில் விவஸ்வானுக்கு (ஸூரியனுக்கு) அருளினேன். அவன் மனுவுக்கும், மனு இக்ஷ்வாகுவுக்கும் உபதேசித்தனர்” என்கிறான். அவனது மாயத்தால் அவனுடைய இறைமையை மறந்த அர்ஜுனன், தனக்கு ஸமகாலத்தவனாக உள்ள கண்ணன் எப்படி யுகாந்தரங்களுக்கு முந்தியே விவஸ்வானுக்கு உபதேசித்திருக்க முடியும் என வினவுகிறான். இந்தக் கிருஷ்ண சரீரத்தில் தாம் இருப்பது மட்டுமே தற்கால விஷயமென்றும், அதன் உயிரான உண்மை ‘தான்‘ ஆதியிலிருந்தே இருந்திருப்பதாகவும் இதற்கு உள்ளுறை பொருளாக விடை சொன்ன கோபாலன், “நீயும் இதற்கு முன் பல பிறப்புக்கள் எடுத்திருக்கிறாய். உனக்கு அவை தெரியவில்லை; எனக்குத் தெரிகின்றன” என்கிறான். இவ்வுரையாடல் கீதையிலேயே நாலாம் அத்யாயத் தொடக்கத்தில் உள்ளது.
இதற்கு மேல் கீதையில் இல்லாததை நம் நவீன நவநீதக் கள்ளர் சொல்கிறார். “உனக்கு நினைவில்லாமல் எனக்கு மட்டும் எப்படியிருக்கிறது என்றால், கேள். ஒரு வருஷத்துக்கு முன் இந்த நேரத்தில் நீ என்ன செய்தாய் என்று கேட்டால் உனக்கு நினைவு வராமல் விழிக்கிறாய். ஆனால் எத்தனையோ ஆண்டுகளுக்குமுன் நடந்த துரௌபதி ஸ்வயம்வரத்தைப் பற்றியும், அதற்கும் பல்லாண்டுகளுக்கு முன் நீ தநுர்வேதப் பயிற்சி தொடங்கியது பற்றியும் கேட்டால் ஒரு விவரமும் மறக்காமல் சொல்கிறாய். என்ன காரணமெனில், அவரவருக்கும் ஆழ்ந்த ஈடுபாடுள்ள எந்த விஷயமும் லேசில் மறப்பதில்லை. நானோ நான் செய்கிற ஸகல காரியங்களையும் சின்னது பெரியது என்ற பேதமின்றி ஒரே போன்ற பூர்ண ஈடுபாட்டோடு செய்கிறேன். அதனால் எனக்கு எந்த விஷயமுமே மறக்காமல் ஸகலமும் நினைவிருக்கிறது”. இப்படிக் கண்ணன் மொழியாகச் சொல்கையில் கர்மயோக சிகாமணியான கோவிந்தனின் ஸாரத்தை இதுவரை எந்தப் புராணமும் வர்ணிக்காத விதத்தில் நமது ஸ்வாமி வடித்துக் கூறுகிறார் தாமும் அவரேயானதால்தான்! (இங்கு ஸ்வாமிக் கண்ணன் தனது வியத்தகு ஞாபக சக்தியை தெய்விகமானதாகச் சொல்லிக் கொள்ளாமல், மனித மன ஈடுபாட்டின் சுத்தமான சிகர நிலையாகவே குறிப்பது கவனத்துக்குரியது.)
***
இரண்டாண்டுகளுக்கு முந்தைய கோகுலாஷ்டமியன்று ஒயிட்ஃபீல்ட் கல்லூரி மாணவர்களும், ஆசிரியர்களும், உடனிருந்த வேறு சில அடியார்களும் செய்த பாக்கியமே பாக்கியம். கண்ணனைப் பற்றி ஸ்வாமி நீளநெடுக வர்ணித்து, நுணுக்கமான விவரங்களைக் கொடுத்துக் கொண்டே போனார்.
கிருஷ்ணன் என்ற பெயரைப் பார்த்து அவன் கரிக்கட்டை போல முழுக் கறுப்பாக இருந்ததாக எண்ணிவிடக் கூடாது என்றார். “கிருஷ்ணனின் நிறம் சியாமளமானது. சியாமளம் என்றால் மூன்று பங்குக் கருநீலத்தில் ஒரு பங்கு வெள்ளையைக் கலந்த நிறம்” என்றார்.
“கண்ணனை வளர்த்த யசோதாநந்தகோபர்கள் விஷ்ணுபக்தர்கள். ஆகையால் அவர்கள் குட்டி கிருஷ்ணணுக்குத் திருநீறு அணிவித்ததில்லை. ஆனால் அக்காலத்தில் இன்றைய வைஷ்ணவ நாமமும் திருமண்காப்பும் கிடையாது. கண்ணனின் நெற்றி நடுவே யசோதை கஸ்தூரியே இட்டாள். ‘கஸ்தூரி திலகம்‘ என்று வருவதால் பொட்டாக இட்டாள் என்று நினைக்காதீர்கள். நெற்றி நடுவே ஒரு கீற்றாகவே கஸ்தூரியைத் தீற்றினாள்” என்றார். மேலும் சொல்வார்;
“கண்ணன் மஹா ஸுந்தரனாக இருந்தான். அதனால் அவனுக்கு திருஷ்டி தோஷம் ஏற்படக்கூடாதென்று கன்னத்தில் கரும்புள்ளி வைப்பார்கள். (ஸாயிக் கண்ணனின் கன்னத்திலுள்ள மறுவை அவருடைய கஸ்தூரி திலகம் என்றே ஸ்ரீ கஸ்தூரி கூறுவார்!) கண்படாமலிருப்பதற்காகப் பூர்வகாலத்தில் ஆண் பிள்ளைகளுக்கும் மூக்குக் குத்துவதுண்டு. குறிப்பாக முந்தைய குழந்தைகள்யாவும் மரித்த பின் பிறக்கிற பிள்ளைக் குழந்தைக்கு மூக்குக் குத்துவார்கள். கண்ணனுக்கும் இப்படிச் செய்திருந்தார்கள். (தேவகிவஸுதேவரின் ஏழு குழந்தைகளும் இறந்த பின்பே எட்டாவதாகக் கிட்டியவன் கிட்டன். ‘ஆனால் அவன் இடம்மாறி யசோதா நந்தகோபரிடம் வந்தபோது இதை வளர்ப்புப் பெற்றோர் அறிந்திருக்கவில்லையே!’ என வாசகர் வினவலாம். யசோதைக்குமே இதற்கு முன் பிறந்த பல குழந்தைகள் குழிக்குப் போனதாக ஸ்வாமி தெரிவித்தார் என்று ஓர் அன்பர் விளக்கம் தருகிறார்.) கண்ணனுக்கு மூக்கிலே ஒரு தங்கக் கம்பியில் முத்தைக் கோத்து வளைத்திருந்தார்கள். இதற்கு தத்வார்த்தமாக உட்பொருள் உண்டு. மனம் தியானத்தில் ஒருமைப்பட வேண்டுமானால் கண்களால் மூக்கு நுனியைப் பார்க்க வேண்டும் என்று கண்ணனே கீதையில் சொல்லியிருக்கிறான். அவனுடைய நாசி நுனியிலிருந்தது நல்முத்து. ‘முக்தம்‘ என்று ஸம்ஸ்கிருதத்தில் சொல்லப்படும் முத்து விடுபட்ட நிலையான முக்தியைக் குறிப்பது. இதுவே தியானத்தின் பயனாக அடைய வேண்டிய நிலை. சித்த அலைகள் வீசும் மனக்கடலில் ஒருமுகத் தியானம் என்பதால் உள்ளே முழுகி எடுக்கும் ஆக்மாநுபவமே அந்த முத்து.
ஆயர் வழக்கப்படிக் கண்ணனின் கையில் வெள்ளியாலான மூன்று ஜோடி வளைகள் போட்டிருந்தது. இவற்றுக்கும் உள்ளர்த்தம் உண்டு கீதையில் கண்ணன் மூன்று பிரதிக்ஞைகள் செய்திருக்கிறான். தன்னுடைய இம் மூன்று ஸங்கல்பங்களையும் நிறைவேற்றியே தீருவது என்று ஆதியிலேயே கங்கணம் கட்டிக் கொண்டான். இப்போதும் வைதிகச் சடங்குகளில், உத்தேசித்த ஸங்கல்பம் பூர்த்தியாவதற்காக முதலில் கங்கண தாரணம் செய்து கொள்ளப்படுகிறது. கண்ணன் தன்னுடைய மூன்று ஸங்கல்பங்களை வெளிக்காட்டு முகமாகவே மூன்று வெள்ளிக் கங்கணங்களை அணிந்து கொண்டிருந்தான். அந்த ஸங்கற்பங்கள் என்னென்ன? ஒன்று: ‘தர்ம ஸம்ஸ்தாபநார்தாய ஸ்ம்பவாமி யுகே யுகே‘ ‘அறத்தை நிலைநாட்டும் பொருட்டு யுகம் தோறும் அவதாரம் செய்வேன்‘. இரண்டு: ‘யோகக்ஷேமம் வஹாம்யஹம்‘ ‘(என்னையே பற்றியுள்ள மெய்யடி யாருக்கு இம்மை மறுமை இரண்டிலும்) செல்வங்களைக் கூட்டி வைத்துக் காத்துத் தருவேன்.’ மூன்று: ‘ஸர்வ பாபேப்போ மோக்ஷயிஷ்யாமி‘ (‘ஸர்வ தர்மங்களையும் விட்டு என்னையே சரண் புகுந்தவர்களை) ஸகல பாபத்திலிருந்தும் விடுவித்து அருளுவேன்.’
“நெற்றியில் கஸ்தூரிக் கோடு. கன்னத்தில் கரும் பொட்டு. மூக்கிலே முத்து நத்து. கையில் மூன்று வெள்ளிக் காப்பு. இதற்கெல்லாம் மேலாக மார்பிலே கௌஸ்துபப் பதக்கம் அணிந்திருப்பான் கண்ணன். அது மாத்திரம் மஹா விஷ்ணுவிடமிருந்தே அவன் கொண்டு வந்திருந்த தெய்விகமான அணியாகும். திருப்பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய ஆபரணம் அது. இதோ, கிருஷ்ணனாக இருந்த போது நான் அணிந்திருந்த கௌஸ்துபத்தையே இப்போது உங்களுக்கெல்லாம் காட்டுகிறேன்…”
கூடியிருந்த இதய கமலங்களெல்லாம் வெள்ள நீர்ப் பெருக்கினில் போலத் துள்ளின. ஸ்வாமியின் கமலக் கரம் ஒரு சுற்றுச் சுழல, கண்ணைப் பறித்தது ஒரு பசு நீல மின்னல் ஒளி. ஐயனின் கரதலத்தில் ஜ்வலித்தது பரம புனிதமான கௌஸ்துபாபரணம். நவரத்னங்களில் மரகதம் எனப்படும் பச்சை மணியையும், நீலம் எனும் நீலமணியையும் ஒன்றாகக் குழைத்தாற்போன்ற அதிசய வண்ணத்தில் ஒளிர்ந்தது அது. நீளச் சதுரத்தில் வெட்டிய அந்தப் பெரிய மணியைத் தங்கக் கட்டிடத்தில் பதித்திருந்தது. அதைச் சுற்றிப் பொடி வைரங்கள் இழைக்கப்பட்டிருந்தன. இந்த அரிய பதக்கம் கழுத்தில் அணிய வசதியாகப் பொற்சரட்டில் கோக்கப்பட்டிருந்தது.
ஸாயிக் கண்ணபெருமான் அற்புத உணர்ச்சி ஏதுமின்றி அன்புக் குழந்தையாகக் கௌஸ்துப ஸரத்தை ஏந்தியபடி, கூடியிருந்த ஒவ்வொருவரிடமும் வந்து அதை அவர்கள் நெருக்கத்தில் கண்டு மகிழக் காட்டினார்.
இதற்குமேல், தாமே அதை அணிந்தும் காட்டினால் கூடியிருந்தோரின் புண்யத்துக்குத் தாங்காது என்றெண்ணினாரோ என்னவோ, அத் திருவாபரணத்தைத் தாம் தரிக்காமலே அந்தர்தானமாக்கி விட்டார்.
உரையைத் தொடர்ந்தார்: “ஸாக்ஷாத் திருமாலின் கௌஸ்துபத்தையே தரித்த பாலக் கண்ணன் மற்றபடி ஸாமானிய ஆயப்பையன்களில் ஒருவனாகவே எளிமையாக இருந்தான். விஷ்ணுவின் மற்ற திருச் சின்னங்களான சங்க, சக்ர, கதா, பத்மங்களில் எதையும் அவன் கைக் கொள்ளவில்லை. முடியில் கிரீடம் போன்ற அணிகள் கூடச் சூடவில்லை.
மற்ற இடைப் பிள்ளைகளைப் போலவே தான் தானும் தன் முடியைச் சுற்றி ஒரு துண்டையே முண்டாசாகக் கட்டிக கொண்டிருந்தான்… எங்கே, யாராவது ஒரு ‘டவல்‘ இருந்தால் கொடுங்கள் உங்கள் தலைச் சுற்றளவுக்கு இருந்தால் போதாது; என்னுடைய இத்தனாம் பெரிய கேச வட்டத்தைச் சுற்றி வருகிற அளவுக்கு நீளமாயிருக்கணும்…”
ஸ்வாமியின் கைக்கு ஓர் அதிருஷ்டசாலியின் துண்டு போகிறது.
அனைவரும் வைத்த கண் வாங்காமல் பார்க்க, utterly unselfconscious என்பதற்கிலக்கணமாக, பலரது பார்வை தன் மீதே குவிந்திருப்பதில் கூச்சமுறாமலும், தாம் பூண இருந்த பரம எளிய கோலத்தைப் பற்றிக் குறுகல், பெருகல் இருவித உணர்ச்சியும் இல்லாமலும், வெள்ளை மனத்தராக மஹாபட்ட ஸத்ய ஸாயி பகவான் அந்தத் துண்டைத் தம் முடிசுற்றி முண்டாசாகக் கட்டிக் கொண்டார். ‘உனக்கே உரித்தான தனிச்செழிப்பு படைத்த நான் கைவரிசைக்கு அடங்குவேனா எனது வந்து பம்பைக் கேசம் வரிந்து கட்டிய துண்டையும் மீறிப் பிதிர்ந்து, ஜ்யோதி ப்ரபையாக இன்றி, கரு வட்டமாக நின்றது.
கண்ணனும் ஸத்யஸாயியும் செய்யும் பேரற்புதங்களை மட்டும் நினைத்தால், அவர்களை நெருங்க முடியா மலைப்பும் அச்சமும் ஏற்படும். ஆனால் இந்த இருவர்தான் மற்ற எந்த அவதாரத்தையும்விட அதிகக் குழந்தைத்தனத்தோடிருந்து, மிக மிக அதிகமான பக்தரை வெகு அருகே வந்து ஒட்டிக் கொள்ளச் செய்திருக்கிறார்கள். முண்டாசுக் கண்ண பாபா இதற்கு உருவகமாக நின்றார்.
நமக்கு இதை மானஸிகமாக மட்டுமே பார்க்கும் பாக்யம் உண்டு.21 அன்றோ உடனிருந்த அன்பர்கள் இதற்கும் மேல் தித்திப்புக் காட்சியும் கண்டனர். கேசத்தை எப்போதும் மூடியிருந்த ஷீர்டியவதாரத்துக்கு நேர்மாறாக எப்போதும் விரியவிடும் பர்த்தியவதாரர் இன்று அதில் பாதிக்கு மேலே வரிந்து கட்டிக்கொண்டு மறைத்ததே மநோஹரம் எனில் இதற்கு மேலும் ஒரு மாமதுரக் காட்சி காட்டினார். தலைப்பாகைக்கு இடப்புறம் பிதுங்கி வழிந்த கேசபாரத்தையும் வலப்புறம் பிதுங்கி நின்றதோடு சேர்த்து ஒரு கொண்டைபோல அமைத்துக் கொண்டார். கண்ணன் இப்படித்தான் சிகையை அமைத்துக்கொண்டு அதில் சிகி பிஞ்சம் (மயிற்பீலி) சூடியிருந்தான் என்று தெளிவு செய்தார். தாமே மயிலிறகு புனைந்த ஒயிலழகு காட்டாமல் நிறுத்திக் கண்ணனின் ஏமாற்றுகுணப்படி! “பிருந்தாவனத்தில் இருந்த ஏராளமான மயில்கள் மாதவனைப் பார்த்து மகிழ்ச்சி வெறியில் ஆடும்போது தாமாகவே உதிர்ந்த அவற்றின் பீலிகளைத்தான் கண்ணன் சூடிக்கொள்வான்” என்று மயிலிறகால் கோதித் தருவதே போன்ற கோமளக் குரலில் ஸ்வாமி கூற, அதில் விஷமக் கண்ணனாகவே நாம் அறிபவனுக்கு இருந்த உயிர்க்குல அன்பும் மென்மையும் இனிமையும் கமழ்ந்தன.
“அதே கண்ணனை, பூரணப் பிரேமையின் அவதாரனை உங்களிடை உலவுபவனாகப் பெற்றுள்ள நீங்கள் எத்தனை பாக்யசாலிகள்?” என்று யதார்த்தமாக வினவினார் யதுபதியின் புதுப் பிரதி.
22இப்படி எழுதியது 1979 ஜூனில். ஆனால் புத்தகம் உருவாகி வெளிவரும்போது பரம தயாளுவான ஸ்வாமி மனோசித்திரமாக இன்றிப் புகைப்படமாகவே இந்நூலில் தலைப்பாகை தரித்த தலைவனை தரிசிக்க அருள்கூர்ந்து விட்டார்! ஸ்வாமி முண்டாசு கட்டிக் கொண்ட அயனான ஸந்தர்ப்பத்தில் உடனிருந்து ‘கிளிக்‘கி விட்ட அமெரிக்கர் B. Barce எடுத்த அப்புகைப்படம் ஆசிரியருக்குக் கிடைத்து, முதற் பதிப்பில் வாசகர்களுக்கு வண்ண விருந்தாக முகப்பிலேயே முகமன் கூறியது ஓர் ஆச்சரியந்தான்! நிகழ் பதிப்பில் பின்னட்டையில் வெளியாகியுள்ளது. அப்போது மார்பளவில்; இப்போது முடி அளவில். பண்ருட்டியிலிருந்து வந்த பரமசிவ பொம்மைக்கு முண்டாசு கட்டியவர் பாபா (“ஸ்வாமி”, பகுதி 1, பக். 104). ஸ்ரீராமன் விவாஹத்தின்போது வெண்பட்டுத் தலைப்பாகை உடுத்தியதாகச் சென்ற அத்தியாயத்தில் கூறியவர் பாபா. இங்கே அவரே கண்ணனாகி நம்முடைய யோகக்ஷேம பாரத்தைச் சுமக்கச் சும்மாடு கட்டிக் கொண்டு கூலியாளின் எளிமையோடு தரிசனம் தருகிறார். அந்த எளிமை நம் இதயத்தையே கூலியாகத் தண்டிக் கொண்டு விடுகிறது. “அப்பா! எங்களை நீ கால்கட்டாக எண்ணாமல் தலைக் கட்டாகவே சிரஸால் வகித்து ரக்ஷிக்கிறாயா?”
***
இரண்டு கோலங்களில் உள்ள ஸ்வாமியின் இரு வண்ணப் புகைப்படங்கள் என்னை அள்ளியெடுத்து விட்டன! கண்ணனைக் கண்ணனே பார்த்துக் கொள்வது போல் அவ்விரு படங்கள் காட்சியளித்தன! அவன்தான் அப்படிப் பார்ப்பதும் தானாக, பார்க்கப்படுவதும் தானாக இருக்கிற பரம வேதாந்தத்தை, “ஆடுகின்றவனும் நீ; ஆடல் கண்டவனும் நீ” எனுமாறு விநோத விளையாட்டாகக் காட்டுவான். ‘கண்ணாக உள்ளவன் மட்டுமல்ல கண்ணனான நான். காணப்படுபவனும் நானே! காண்பவனாகவே என்னை நினைக்கிற உங்களுக்கு இங்கே காணப்படுபவனாக உள்ள தோற்றத்தில் அதிக கிருஷ்ணத்வம் காட்டுகிறேன் பாருங்கள்‘ என்றெல்லாம் அவன் சொல்லாமற் சொன்னான்.
ஸ்வாமியின் புகைப்படங்கள் தேர்வு செய்வதற்காக ஃபோட்டோ எம்போரியத்துக்குப் போயிருந்தேன். பல படங்களை எடுத்துப் போட்டார்கள். அவற்றில் எதிரும் புதிருமாக ஒட்டி விழுந்த இருவேறு கோலக் கலர்ப்படங்களே இவ்வாறு குறும்புக் கண்ணனை என்னுள் குறுகுறுத்துப் பாயவைத்தன.
இந்நூலில் முகப்புச் சித்ரமாகப் பிரசுரித்திருப்பது அவ்விரு புகைப்படங்களின் இசைப்புத்தான். மாட்டுக் காரப் பயலாகப் பின்னட்டையில் இருக்கும் கோகுலபாலனே இங்கே இரு தோற்றங்களில் மாட்சிமைக் கார த்வாரகா ப்ரபுவாகியிருக்கிறார். மஹாராஜ மஹத்துவத்தோடு மதுர மித்ரத்துவம்! மாதவனைப் போலவே மோஹனத்தில் ஒரு கபடம்! அத்தனையையும் தழுவும் மாத்ருபாவம்! இரண்டு படங்களில் அந்த இடப்புறக் கோலம் ஒன்று போதும், கோபியர் பாடிய கோபால லக்ஷணம் முழுதையும் வாரிக்கொட்ட:
ப்ரஹஸநம் ப்ரிய ப்ரேம வீக்ஷணம்
விஹரணம் ச தே த்யாந மங்களம்
ரஹஸி ஸம்விதோ யா ஹ்ருதி ஸ்ப்ருச:
குஹக நோ மன: க்ஷோபயந்தி ஹி
“பிரியனே! பிரியன் ஆயினும் கபடனே! முந்தி வரும் உன் முறுவல், அன்பு நிறைந்த் பார்வை, விளையாட்டு விநோதம், ஹ்ருதயத்தை ஸ்பர்சிக்கும் ரஹஸ்ய வாக்கு யாவும் தியானிக்க மங்களமாயிருந்து கொண்டே எங்கள் மனத்தைக் கடைந்தெடுக்கின்றன.”
கண்ணனது பிரியம் முட்டும் கபடம், முகுந்தனின் முந்திவரும் முறுவல், அச்யுதனின் அன்பு தவழ் பார்வை, விந்தனின் விளையாட்டு விநோதம் யாவற்றையும் இச் சித்திரத்தில் உன்னிப் பார்த்து உணரலாம். முறுவல் அதரத்தை உற்றுப் பார்த்தால் அதில் ஹ்ருதயத்தை ஸ்பர்சிக்கும் ரஹஸ்ய வாக்கு துளும்பி நிற்பதையும் கேட்கலாம். தன்னையறியாமல் கண் மூடுகிறது மங்களமான தியானம் கூடுகிறது. ஆனால் அந்த சாந்தியில் நாம் தோய்ந்துவிடாமல் குறும்பன் இனம் காணா இன்ப வேதனையில் உள்ளத்தைக் கடையத் தொடங்கி விடுகிறான்.
இந்த அனுபவம் தருவதும் போதாது என்று வள்ளல் வலப் புறத்தே இன்னொரு படமாக, கிருஷ்ணத்வம் பொலிகின்ற இன்னோர் இன்னுருவம் காட்டுகிறான். ஒரு படத்தில் உள்ள லலிதாமாதாவின் செம்மை மறு படத்தில் லலிதாமாதவனின் சியாமளம் ஆகிறது. ஒரு தோற்றத்தில் கௌரவமும் கனிவும் குறும்புக் குதூஹலத்தை ஓரிழை விஞ்சி நிற்க, மறுரூபத்தில் குறும்பும் குதூஹலமும் கௌரவக் குறும்பை இரண்டு இழைகள் விஞ்சி விளங்குகின்றன! ஒரு படம் Mischief in Majesty; மறு படம் Majesty in Mischief!
இத்தனை உணர்ச்சிகளையும் அப்பட்டமாகக் கொட்டிவிடாத அழுத்தம் இரு சித்ரங்களிலும் இலகுகிறது. ஸுகுமார ஸுகுமாரனாக இருந்து கொண்டே அழுத்தக் காரனாயிருந்த கண்ணனையன்றி எவர் இப்படி லீலா நாடகம் நடிக்க முடியும்?
ஷீர்டி பாபாவின் சித்ரத்துக்கு முன் நமது பர்த்தி பாபா நின்றபடி அவரிடம், “ஏனு ஜம்ப?” (“என்ன ஜம்பம்?”) என்று வினவிய இனிய நிகழ்ச்சியொன்று உண்டு (“ஸ்வாமி”, பகுதி 1, பக். 283). இங்கே பர்த்திக்காரரின் இந்த இரட்டைப் படங்களில் பரஸ்பரம் அவரே அவரிடம், “ஏனு ஜம்ப?” கேட்டுக் கொள்வது போன்ற முகக்குறி காண்கிறது!
ஒருபடத்திலே படைத்தவராக இருப்பவர், தம் படைப்பினத்தைத் தாமே கண்டு அன்பு செய்வதற்காகக் கண்ணனாக வரும் கோலத்தில், “எத்தனை விசித்ர ஸ்ருஷ்டி செய்திருக்கிறேன்?” என்று ஜம்பம் கொண்டாடிக் கொள்கிறார் போலும்! மறுபுறத்தில், படைப்பினமாக இருப்பவர், படைத்த கண்ணனேதான் தானும் என்று உணர்ந்ததிலேயே ஜம்பம் கொள்ளலாம்! அது மாத்திரமில்லை. இருவரும் ஒன்றேயாயினும் ‘பார்க்கிறவன் தான் லீலா நாடக ஸூத்ரதாரி; தான் அவனுடைய கைப்பாவைதான்‘ என்ற நிலையில் அவனிடம் இவன் ஜம்பத்தைக் காட்ட இடமில்லையெனினும், இந்தத் தாழ்விலேயே இன்னொரு தினுஸில் ஜம்பமுறலாம். “படைப்பினத்தைப் பார்க்கின்ற நீ என்னதானிருந்தாலும் உன்னைவிட சக்தியிலும் ஸௌந்தர்யத்திலும் ப்ரேமையிலும் குறைந்த ஸ்ருஷ்டியைத்தான் ரஸிக்க முடிகிறது; ஸ்ருஷ்டியான நானோ ஸகலத்திலும் என்னை விட சிரேஷ்டமான ஸாக்ஷாத் உன்னையே அல்லவா ரஸிக்கிறேன்?” என்று கூடுதலாகவே ஜம்பப்படலாமல்லவா?
பிரேமைக்காகவேதான் ஸ்ரீகிருஷ்ணன் அவதரித்தானெனினும், கோப கோபியரின் பிரேமைப் பிரவாஹத்தைப் பெற்றானெனினும், அவனுடைய ஆரா அன்பைப் பெற்றதில் அவர்கள் அடைந்த பெருமிதம் அவனுக்கு ஏது?