என் குழந்தே! உன் ஜீவன் அவர்களிடையே ஓர் ஒளிக்கொழுந்தாக வரட்டும் ஆடாத, அசையாத பரிசுத்த ஜோதியாக வரட்டும். அவர்களை ஆனந்தத்தில் ஆழ்த்தி மௌனமாக்கட்டும்.
பேராசையிலும் பொறாமையிலும் அவர்கள் கொடூரமாகி விட்டார்கள். அவர்களுடைய வார்த்தைகள் மறைத்து வைத்த கத்திகளாக ரத்த தாகம் கொண்ட கத்திகளாக உள்ளன.
என்னுடைய குழந்தாய்! துவேஷத்தில் நெரிந்த அந்த இதயங்களுக்கு நடுவில் நீ போய் நில். உன்னுடைய மிருதுவான நயனம் அவர்கள் மீது படியட்டும் பகல் போதின் குமுறலுக்கு மீது மன்னித்தருளும் மாலையின் சாந்தி படிவதே போல.
அவர்கள் உன்னுடைய முகத்தைப் பார்க்கட்டும், என் குழந்தையே! அதிலிருந்து எல்லாப் பொருளையும் தெரிந்து கொள்ளட்டும். உன்னை அன்பு செய்யட்டும். அதனால் தங்களை ஒருவருக்கொருவர் அன்பு செய்து கொள்ளட்டும்!
7. பத்ரிநாதர் பாலகாண்டம்: பர்த்திநாதர் பகர்ந்தது
பர்த்திநாதர் என்பது புட்டபர்த்தி நாயகனான ஸ்வாமி என்பது எவருக்கும் புரியும். பத்ரிநாதர் என்பது பதரிநாராயணன் என்று எண்ணினால், அது தப்பு. இது Badrinath அல்ல. Pathri என்ற கிராமத்தில் அவதரித்த ஷீர்டி ஸாயிதான் இங்கே சொல்லும் ‘பத்ரிநாதர்‘. பூர்வாவதாரத்தில் பத்ரியில் பிறந்தவரே இப்போது பர்த்தியில் உதித்ததாக ஸ்வாமி சொல்வார்.
ஷீர்டி ஸாயி பகவானை ஷீர்டிவாஸியாகத்தான் உலகம் அறியும். ஏகாங்கி இளைஞராக அவர் ஷீர்டி வந்து தங்கியதற்கு முன்பு அவர் யார், எங்கிருந்தார், அவரது பெற்றோர் எவர், அவருடைய பூர்வாசிரம விருத்தாந்தம் என்ன என்பதெல்லாம் எவருக்குமே தெரியாது. மாயக் கிழவர் இவை பற்றிக் கடைசிவரையில் எதுவும் கூறாமலே மூடி மறைத்துவிட்டார். ஆயினும் அவர் பத்ரி (Pathri) கிராமத்தில் அவதரித்து, சேலு (Selu) என்ற இடத்தில் மஹாத்மாவான வெங்கூசா என்பவரிடம் சிஷ்யரைப்போல இருந்துவிட்டுப் பின்தான் ஷீர்டி வந்தடைந்தார் என்று ஊகிக்க இடம் தந்தார். தாம் பிறப்பால் ஹிந்துவா, முஸ்லீமா என்றுகூட அவர் தீர்மானமாகத் தெளிவு செய்தாரில்லை. ஹிந்துவாகப் பிறந்து முஸ்லீம் வீட்டில் வளர்ந்தவரென்றும், முஸ்லீமாகப் பிறந்து ஹிந்து வீட்டில் வளர்ந்தவர் என்றும் இருவிதமாக ஹேஷ்யம் செய்ய இடம் கொடுத்து ஹாஸ்யத்தை ரஸித்தார்.
பர்த்தியவதாரத்திலாவது இந்த மர்மத்தை அவர் மடலவிழ்த்துக் காட்டமாட்டாரா என்று பக்தர்கள் நீண்ட நாட்களாக ஆர்வத்துடன் காத்திருந்தனர். ஊஹூம்! சண்டப் பிரசண்டமாகப் பேசும் ஸ்வாமி இவ்விஷயத்தில் மட்டும் ஏனோ மௌன விரதம் பூண்டிருந்தார்!
கடைசியாகச் சில ஆண்டுகளுக்கு முன் ஒருநாள் (14.1.74) அது நமக்குப் பரம சுப நாள் ஸ்வாமி மாலை வேளையில் தமது ஒயிட்ஃபீல்ட் கல்லூரி மாணவர்களுடனும் ஆசிரியர்களுடனும் பொழுது போக்கிக் கொண்டிருந்தபோது, யாராவது ஏதாவது கேள்வி கேட்க விரும்பினால் கேட்கலாம் என்றார்.
நம் பாக்கியவசமாக அன்று ஸ்ரீ வி.கே. கோகாக் அங்கிருந்தார். உடனே அவர், கிடைத்தது தருணமென்று, ஷர்டி ஸாயி பாபாவைப் பற்றிக் கேட்கலாமா என்று வினவினார்.
ஸ்வாமி அனுமதியளித்தார்.
வெங்கூசா என்பவர் ஷீர்டி பாபாவின் குருவா என்று கேட்டார் கோகாக். இதற்கு மட்டும் ஒரு வாக்கியத்தில் நம் ஸ்வாமி பதில் சொல்லி முடித்திருக்கலாம். ஆனால் எதனாலோ நமது நல்லதிருஷ்டத்தாலும், ஸ்வாமியின் கிருபா ஸங்கல்பத்தாலுந்தான் எனலாம் கோகாக்கின் சின்ன வினா ஓர் ஆழ்ந்த மலைச் சுனையின் ஊற்றுக் கண்ணைக் கீறிவிட்டாற் போலாயிற்று. இரண்டு அவதாரத்திலுமாக ஒரு நூற்றாண்டுக்கு மேல் ஸ்வாமி அடைத்து வைத்திருந்த ஊற்றுக்கண் அன்று சட்டென்று வெடித்துப் புனல் பீய்ச்சத் தொடங்கியது. அல்லது, அவர் மூடி வைத்திருந்த மொட்டு அன்று பட்டென்று திறந்துகொண்டு பட்டு மணத்தை வீசத் தொடங்கிவிட்டது.
இதுகாறும் லோகம் அறிந்திராததான ஷீர்டி ஸாயியின் ஜனனம், வளர்ப்பு முதலியவற்றிலிருந்து அவரது வெங்கூசாத் தொடர்புவரையிலான விஷயங்களை மதகு திறந்த வெள்ளமாக ஸ்வாமி மடமடவென்று வெளியிட்டார்.
கோகாக் அவர்கள் இதனை ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டிருக்கிறார். அவருக்கு எனதும், உங்களதுமான நன்றியை அளித்து இங்கே அவர் கூறியதை அடியொற்றித் தமிழிலே திவ்யமான ஷீர்டி பால காண்டத்தைக் கூறுகிறேன். பிறிதொரு சமயம் ஸ்வாமி இது குறித்துத் தந்த வேறு சில விவரங்களையும் பேரன்பர், அமரர் ஆர். நாகராஜன் உதவியபடி இதிலே இசைத்திருக்கிறேன்.
***
மஹாராஷ்டிரத்தில் மன்மாத் என்ற ஊருக்கு அருகே உள்ள ஒரு கிராமம் பத்ரி. அங்கே பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் கங்கா பவேதியா என்பவர் வசித்து வந்தார். அவர் படகுகள் வாடகைக்கு விடுபவர். தேவகிரியம்மா என்பவள் அவரது மனையாள். இருவரும் நற்குணம் நிரம்பியவர்கள். கணவருக்குப் பரமேச்வரன் இஷ்ட தெய்வம். மனைவிக்குப் பார்வதி தேவி இஷ்டா.
இந்த நல்ல தம்பதிக்கு நீண்ட நெடுங்காலம் புத்ர பாக்கியம் கிட்டவில்லை.
அப்போது பவேதியாவுக்கு நாற்பத்தாறு வயது. ஒருநாள் மாலை வீடு திரும்பும்போது அவர் அடி வானத்தில் மழைச்சூல் கொண்ட மேகங்கள் சூழ்ந்து பரவுவதைக் கவனித்தார். காற்றும் ஊளையிட்டுக்கொண்டு வீசலாயிற்று. பகலிலேயே படகு வலிக்கும்போது ஆற்று மட்டம் உயர்ந்து வருவதாகத் தாம் கண்டது அவருக்கு நினைவு வந்தது. ‘சரி, சரி, இரவு புயலும் வெள்ளமும் வரப் போகிறது‘ என்றெண்ணினார்.
அவர் பயந்தபடியே ஆயிற்று.
அன்றிரவு சண்டமாருதம் அடித்து வீச, ஆறு அலைவீசி வெள்ளம் பெருக்கும் ஓசை பவேதியாவின் குடிசையிலேயே கேட்டது.
தாம் கரையிலே கட்டி வைத்திருந்த படகுகள் அடித்துப் போகாமல் பத்திரப்படுத்துவதற்காகப் பேய்க் காற்று மழையில் விரைந்தார் பவேதியா.
கோர நிசியில் தனியாக வீட்டிலிருந்தாள் தேவகிரியம்மா.
அப்போது முன்பின் தெரியாத ஒரு கிழவர் அங்கே வந்தார்.
உணவு படைக்குமாறு அவர் கேட்டார்.
ஏழ்மையிலும் தயாள குணம் கொண்ட தேவகிரியம்மா, குடிசையிலேயே வராந்தாவாக முன்னே தடுத்திருந்த பகுதியில் அதிதியை அமர்த்தி போஜனம் அருத்தினாள்.
“இந்தப் புயலில் நான் எங்கே போவேன்? எனக்குப் படுக்கவும் இடம் உதவ வேண்டும்” என்றார் அதிதி.
“வராந்தாவிலேயே படுத்துக்கொள்ளுங்கள்” என்று அவருக்கு இடம் கொடுத்துவிட்டு, உள் கதவைத் தாழிட்டுக் கொண்டாள் அம்மாள்.
சிறிது நேரத்துக்கெல்லாம் கதவு தட்டப்பட்டது.
என்னவோ, ஏதோ என்று அம்மாள் திறந்தாள்.
விருந்தாளிக் கிழவர் விசித்திரமானதொரு விருப்பம் தெரிவித்தார்! அவருக்குத் தூக்கம் வரவில்லையாம்; அதனால் யாரேனும் ஒரு பெண்மணி அவர் காலைப் பிடித்துவிட வேண்டுமாம்!
தன்னந்தனியாகத் தான் வீட்டிலிருக்கும்போது இப்படி ஓர் ஆடவர் கேட்கிறாரே என்று அம்மாள் பயந்தாள். இருந்தாலும் அக்காலத்து நன்மக்கள் “அதிதி தேவோ பவ” என்ற வேத வாக்கியத்தைக் கடைப் பிடித்தவர்களாதலால் விருந்தாளியின் எந்த இஷ்டத்தையும் பூர்த்தி செய்யப் பாடுபடுவர்.
எனவே மழைப் புயலிருட்டிலே அதிதியின் இச்சையை நிறைவேற்றுவதற்காக தேவகிரியம்மா புறப்பட்டாள். அக்கிராமத்திலிருந்த விலைமகளிர் இருவரில் ஒருத்தியை அழைத்துவந்து விருந்தாளியின் கால் பிடிக்கச் செய்யலாம் என்பதே அவள் எண்ணம்.
ஆனால் துரதிருஷ்டம் (துரதிருஷ்டமா, பேரதிருஷ்டமா எனப் பின்னால் தெரியும்) இரண்டு வேசைகளும் அவளுக்குக் கிடைக்கவில்லை.
வீட்டுக்குத் திரும்பினாள். அதிதி விரும்பியதைத் தராதது தெய்வக் குற்றம் என்று நடுங்கினாள். தன் இஷ்ட தெய்வமான பார்வதி தேவியிடம் உள்ளுருகிப் புலம்பி, இக்கட்டிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டினாள்.
பின்புறக் கதவைத் தட்டும் ஓசை கேட்டது.
அம்மாள் சென்று திறந்தாள்.
வனப்பு மிகு வனிதை ஒருத்தி அங்கே நின்று கொண்டிருந்தாள். இவள் சென்று வந்த இரு வீட்டில் ஒன்றைச் சேர்ந்தவள்தானாம் அவள். தேவகிரியம்மா தேடி வந்ததையறிந்து இப்போது வந்திருக்கிறாளாம்.
அம்மாளுக்கு நிம்மதி பிறந்தது. அவளை வராந்தாவிலுள்ள விருந்தாளிக் கிழவரிடம் விட்டு விட்டுக் கதவைத் தாழிட்டுக்கொண்டு உள்ளே படுத்தாள்.
சிறிது நேரத்தில் மறுபடி கதவு மெல்லத் தட்டப்பட்டது. தாஸி தன்னிடம் சொல்லிக்கொண்டு புறப்படுகிறாளாக்கும் என்றெண்ணியவாறு கதவைத் திறந்த தேவகிரியம்மா நம்பவொண்ணா திவ்யக் காட்சி கண்டு ஸ்தம்பித்துவிட்டாள்.
ஸாக்ஷாத் பார்வதி பரமேச்வரர்கள் அவள் முன் நிற்கின்றனர்!
அவளது பதியின் இஷ்ட தெய்வமான ஈசனேதான் கிழவராக வந்து நீசமான இஷ்டத்தைத் தெரிவித்து அவளைச் சோதித்திருக்கிறான்! சோதனையிலிருந்து அவளைக் காக்கவே அவளது இஷ்டாவான பாவன பரதேவதை தன்னைப் பரத்தையாகச் சொல்லிக்கொண்டு வந்திருக்கிறாள்! மொத்தத்தில் தேவகிரியம்மாவும் அவள் கணவனாரும் செய்த எளிய ஆராதனைக்கு இறங்கி ஆதி தம்பதியர் செய்த நாடகம்!
“நாதா! இந்த சுத்தாத்மாவுக்கு நாம் வரம் கொடுக்கலாம்” என்றாள் பார்வதி தேவி.
பரமேச்வரன் சிரித்தான். “வேண்டாம், நாம் சேர்ந்து வரம் தரவேண்டாம். தனித்தனியாகத்தானே வந்தோம்? அதனால் தனித்தனியாகவே ஆளுக்கொரு வரம் தரலாம்” என்றான்.
உடனே உலகத் தாய் மலடியான தேவகிரியம்மாவுக்குத் தாய்மை அநுக்ரஹித்தாள். “உனக்கு இரண்டு குழந்தைகள் பிறக்கும்” என்று வாழ்த்தினாள்.
அன்னையையும் ஒரு படி விஞ்சி அப்பன் வரம் தந்தான். “மூன்றாவது குழந்தையாக, பிள்ளைக் குழந்தையாக, நானே உனக்குப் பிறக்கிறேன்” என்றான்.
திவ்ய தம்பதியர் மறைந்தனர்.
படகுகளை பத்திரமாகக் காவல் காத்து பவேதியா திரும்பும்போது புயலடங்கி, சாந்தமான வைகறை தவழ ஆரம்பித்திருந்தது.
ரோமஹர்ஷணம் உண்டாக்கும் நிகழ்ச்சியைப் பதியிடம் தெரிவித்தாள் தேவகிரி. ஆனால் பவேதியாவுக்கு மயிர்க்கூச்சு உண்டாகவில்லை. மனைவிக்கு புத்தி மாறாட்டம் ஏற்பட்டிருப்பதாக நினைத்தார். “புயலில் நான் வெளியில் போனேனே என்று நீ தூங்காமலே இருந்திருக்கிறாய். அப்புறம் நீயும் வெளியில் சுற்றியலைந்து விட்டுத் திரும்பியிருக்கிறாய். இதனால் உனக்குச் சற்று அறிவுக் கலக்கம் உண்டாகியிருக்கிறது. கொஞ்சம் ஓய்வு எடுத்துக்கொள், சரியாகும்” என்றார்.
ஆனால் இதை அடுத்தே அந்த நீண்ட கால மலடி கருத்தரித்தபோது அவருக்கு ஆச்சரியமாயிற்று. காலக்கிரமத்தில் ஒரு மகவு பிறந்தது. பிறகு இரண்டாம் சிசுவும் உண்டாயிற்று.
மஹாதேவ அவதாரமாக வரவேண்டிய மகவும் மூன்றாவதாக முகிழ்க்கப் போவதற்கு அறிகுறிகள் தோன்றின.
இதனிடையில் பவேதியாவிடம் ஓர் அதிசயமான ஆத்மிக பரிணாமம் உண்டாயிற்று. படகுத் தொழிலிலும் வீட்டு வாழ்க்கையிலும் அவருக்கு விரக்தி ஏற்பட்டது. ஸம்ஸாரத்தின் அக்கரையிலுள்ள நிஜமான வீட்டைச் சேர ஞானப் படகு பிடிக்க வேண்டும் என்ற அக்கறை ஆர்வ வேகத்துடன் பிறந்தது. குடும்ப பந்தத்தை முறித்துப் புறப்பட்டு ஈச்வர தத்வத்தை நேருக்கு நேர் அநுபவிக்க வேண்டுமெனப் பறந்தார்.
“ஈச்வரனை அறிவதற்காக நீங்கள் வீட்டை உதறிப் புறப்படுவானேன்? ஈசனேதான் இந்த வீட்டில் பிள்ளையாகப் பிறப்பதாக வாக்குக் தந்திருக்கிறானே!” என்று கேட்டாள் பதைப்புற்ற பதிவிரதை.
“இறைவன் இங்கே குழந்தையாக வந்தாலும் என் ஆவி திருப்தியுறாது. அப்போது மானுட முகமூடியில்தானே நான் மாதேவனை அநுபவிக்கும்படியாகும்? நான் விரும்புவது இதல்ல. தெய்விக பரத்வம் சற்றும் நலியாத ஆதி ஜோதியாகவே ஐயனை அறிய ஆசைப்படுகிறேன்” என்றார் பவேதியா.
அதற்காகத் தனித்துத் தவமிருக்க எண்ணிக் கிளம்பியும் விட்டார்.
‘ஒரு புறம் கணவர், மறுபுறம் இரு கண்மணிகள், தானோ இப்போது கர்ப்பிணி‘ என்ன செய்ய என்றறியாமல் சற்றே தவித்துத் தடுமாறினாள் தேவகிரி. கடைசியில் கற்புநெறி தாய்மை வெறியையும் வென்றது. கண்மணியர் இருவரையும் தன் பிறந்தகத்தில் சேர்ப்பதற்கு தக்க ஏற்பாடு செய்துவிட்டுப் பதியைப் பின்தொடர்ந்தாள்.
வள்ளுவரையும் அவ்வையையும் பெற்ற ஆதியும் பகவரும் போல தேவகிரியும் பவேதியாவும் வனத்தில் சென்று கொண்டிருக்கும்போது அவளுக்குப் பேற்று நோய் கண்டது.
தொடர முடியாத நிலையிலுள்ள தன்னை விட்டுப் போகாமல் காத்திருக்கும்படிக் கணவரை வேண்டினாள் அபலை.
ஆனால் அவருக்கு மூண்டிருந்த வைராக்கியத்திலோ மனிதர்களாகப் பிறந்தவர்கள் தங்களுக்குள் ஒருவருக்கொருவர் துணையாக முடியாது என்றும், ஈசன் ஒருவனே துணை என்றும் தோன்றியது. அந்தத் துணையை நம்பி மனையாளை விட்டுவிட்டு, அவர் தன் வழி சென்று கொண்டேயிருந்தார்.
இறைவன் அதிகம் சோதிக்காமல் விரைவே தேவகிரியின் திரு வயிற்றிலிருந்து வெளி வந்து விட்டான்.
ஆஹா, பதிவிரதா தர்மத்தின் தீவிரத்தைத்தான் என்ன சொல்வது? எந்தத் தாய்க்குமே தான் பெற்ற செல்வத்திடம் பிரேமபாசம் பொங்கும். அதுவும் குழந்தை பிறந்த நிமிடத்தில் பூர்ணிமைக் கடலாகவே பொங்கும். அதோடு ஈசனே புத்திரனாக ஜனித்தானென்றால் எத்தனை அன்பு பெருகும்? ஆனால் தேவகிரியம்மாவோ தெய்வக் குழந்தையின் திவ்ய முகத்தைக்கூடப் பார்க்கவில்லை. அவளது பிரஸவ கூடமாக இருந்த ஆலமரத்தடியிலே ஆலமர் நீலகண்ட பாலனை விட்டாள். ஆலிலைக் கண்ணனைப்போல அவ்விலைகளையே பரத்திக் குழந்தையை அதன்மேல் விட்டு, இலைத் துளிர்களாலேயே மூடினாள்.
அதோடு தாய்மைக் கடமை தீர்ந்தது. அக்னி ஸாக்ஷியாக உயிருள்ளவரை பிரியாதிருப்பதாக எடுத்துக் கொண்ட கற்புக் கடமையை ஆற்றுவதற்காக தியாகி, பிரஸவித்த களைப்பும் தீராமல், கணவன் சென்ற திசை நோக்கி விரைந்தாள்.
பாட்டீல் என்று ஒரு இஸ்லாமியர். அவர் மாமியார் வீட்டிலிருந்த தமது பீபியை அழைத்துக்கொண்டு டோங்காவிலே தம்முடைய கிராமத்துக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். இந்தக் காட்டுச் சாலை வழியாக வண்டி வந்து கொண்டிருந்தது.
பீபிக்கு வயிற்றில் நீர் முட்டியது. “அந்த ஆலமரத்தடிக்குப் போய் வருகிறேனே!” என்றாள் கணவரிடம்.
டோங்கா நிறுத்தப்பட்டது.
விருக்ஷத்தடிக்கு பீபி வர, பேபியின் ‘குவா குவா‘ அவளை அழைத்தது.
பச்சை இலைகளை விலக்கிய அப்பெண்மணி பச்சைப் பசும் குழந்தையைப் பார்த்து ஆச்சரியமும் ஆனந்தமும் அடைந்தாள். கொப்பூழ்க் கொடியும், சிசுவின் உடம்பிலிருந்த ரத்தக் கறைகளும் அது புத்தம் புதிதாக உதித்த புத்திர ரத்தினம் என்று பறைசாற்றின.
உணர்ச்சிக் கிளர்ச்சியோடு பாட்டீலிடம் ஓடி வந்தாள் அவள். அவரையும் அழைத்துச் சென்று குழந்தையைக் காட்டினாள்.
குழந்தையின் தாய் வருவாளோ என்று இருவரும் காத்துப் பார்த்தனர். வருவாள் என்ற நம்பிக்கை மறைந்த போது தாங்களே அந்தக் குழந்தையை எடுத்துச் சென்று வளர்ப்பது என முடிவு செய்தனர்.
அவர்களுக்கு அதுவரை புத்ர பாக்கியமில்லை. “அல்லாவே நமக்கு இந்தக் குழந்தையை அளித்திருக்கிறார்” எனக்கொண்டு அதை எடுத்துச் சென்றனர்.
அந்த அல்லா நேரே இவர்களுக்கு ஸந்தானத்தைத் தராமல், இன்னொருவருக்குக் கொடுத்துப் பறித்தது என்ன விளையாட்டோ? அல்லது வினைக் கணக்கோ?
பாபு என்றழைத்துப் பிள்ளையை வளர்த்து வந்தனர் அத்தம்பதி. சில காலத்திலேயே வளர்ப்புத் தந்தை இறைவனடி சேர்ந்தார்.
பீபியே பாபுவை வளர்க்கும் பொறுப்பை எடுத்துக்கொள்ள வேண்டியதாயிற்று. அது சாதாரணப் பொறுப்பாக இல்லை. ஏனெனில் பாபு அசாதாரணமான பாலகனாக இருந்தான்! அவன் செய்யும் காரியங்கள் விசித்திரமாகவும் வளர்ப்புத் தாய்க்கு விசாரமூட்டுவதாகவும் இருந்தன.
மசூதிக்குச் செல்பவன் அங்கே ஒரு சிவலிங்கத்தை வைத்து வணங்குவான். அதோடு விட்டானா? ஹிந்துக்களின் தேவாலயத்துக்கும் செல்வான். சரி, முழு ஹிந்துவாகவேயாவது இருந்தானா? அதுவுமில்லை. ஹிந்துக் கோயிலில் குரானைக் கடகடவென ஓதுவான். எங்கே, எப்போது கற்றுக் கொண்டான்?
ஹிந்துக்கள், முஸ்லீம்கள் ஆகிய இருவருமே அவனது இறைமையைக் காணத் தவறினர். தாங்கள் ஸஹோதரராக இறுக வழிகாட்டவே அவன் வந்திருக்கிறான் என்று உணர மறுத்தனர்.
அவதாரமெடுத்தாலும் இதுதானே பெரிய அவஸ்தை? அவதாரனே மக்கள் மனத்தில் புகுந்து அதை மாற்றுவதில்லையே! இப்படி மாற்றுவதானால் அதற்கு மநுஷ்ய ரூபத்தில் வரவேண்டியதும் இல்லையே! தான் பரம்பொருளாக இருக்கும்போதே, ‘மக்கள் மனம் மாற வேண்டும்‘ என்று ஸங்கல்பித்து விட்டால் போதுமே! இப்படி ஸங்கல்ப மாத்திரத்தில் செய்வதென்றாலோ அதில் லீலா நாடக விநோதமில்லாமல், யந்திரகதியில் ஜடப் பொருள்களைக் கையாள்கிற காரியமாக அல்லவா இருக்கும்? அது பரமாத்மனுக்குப் பிடித்தமில்லை! மக்கள் தாமாக மனமுவந்து நல்வழிப்படத் தூண்டுமுகமாகத்தான் மானுடமாக அவதரித்து, படிப்பினைகள் நிறைந்த ஆதரிச வாழ்வை நடத்திக் காட்டுகிறான். ஆனால் அவர்களோ அகந்தையிலும், பலவிதமான பற்றுக்களிலும் மயங்கி அவன் காட்டும் ஸங்கேதங்களைத் தவறவே விடுகிறார்கள்.
ஹிந்துக்கள் – முஸ்லீம்கள் இருவருமே தத்தம் கோயிலை பாபு களங்கப்படுத்துகிறான் என்று கருதினர். வளர்ப்புத் தாயிடம் வந்து குறைகூறி அவனைக் கண்டித்து வைக்கச் சொன்னார்கள்.
ஆனால் இவள் கண்டித்து அவன் கேட்கிறவனாக இல்லை.
மத்தளம்போல் இரு ஸமுதாயத்தினரின் அடிக்கும் ஆளான பீபி இதற்குத்தானா இந்த அநாதையை எடுத்து வந்து வளர்த்தோம் என்று அலுத்துக் கொள்ளலானாள். ஆயினும் அவனிடம் முரட்டுத்தனமாக நடந்து கொள்ளாமல், எப்படி நயமாகப் பக்குவம் செய்வது என்றும் தெரியாமல் திண்டாடியபடி இருந்தாள்.
ஒருநாள் ஊரில் பணம் கொழுத்த ஸாவுகாரின் வீட்டுப் பிள்ளையோடு கோலி விளையாடினான் பாபு. ஸாவுகார் பிள்ளை அதில் எல்லா கோலிகளையும் பாபுவிடம் தோற்றுவிட்டான். அவன் மனத்தில் இன்னும் ஒரு கோலி வீட்டிலிருப்பதாக நினைவு வந்தது. வீட்டுப் பூஜையிலிருந்த ஸாளக்ராம உருண்டைதான் அது! மஹாவிஷ்ணுவின் வடிவமான ஸாளக்ராமத்தைக் கொண்டுவந்து கோலியாக விளையாடினான். இந்த கோலியையும் பாபு ஜயித்து எடுத்துக்கொண்டுவிட்டான்.
“நீ அழுகுண்ணி ஆட்டமாடி அதை எடுத்துக்கிட்டே! இதை நான் ஒப்புக்கமாட்டேன். திருப்பிக்கொடு” என்று வம்பு செய்தான் ஸாவுகார் மகன்.
“மாட்டேன்” என்ற பாபு அதை அவன் பிடுங்காத வண்ணம், ‘லபக்‘கென்று வாயில் போட்டுக்கொண்டு விட்டான்.
ஸாவுகார் பிள்ளை தாயிடம் சென்று ஒப்பாரி வைத்தான், அவள் பூஜையில் வைத்திருந்த கோலியின் கதியைச் சொல்லி.
அவள் துணுக்குற்றாள். கோலியா? இறைவன் மூர்த்தமல்லவா அது?
ஓடோடி வந்தாள் வாசலுக்கு. பாபுவைப் பிடித்துக்கொண்டு ஸாளக்ராமத்தைத் திருப்பித் தரச் சொல்லி நயமாகவும் பயமாகவும் வற்புறுத்தினாள்.
பாபு வாயை இறுக மூடிக்கொண்டு மௌனம் சாதித்தான்.
ஸாவுகார் மனைவியே அவன் வாயில் கைவிட்டுத் திறக்கும்படிச் செய்தாள், ஸாளக்ராமத்தை எடுத்துக்கொள்வதற்காக.
திறந்த வாயில் ஸாளக்ராமத்தைத் தேடினாள்.
ஆனால் அவள் கண்டதென்ன?
ஸாளக்ராமம் எந்தத் திருமாலுக்கு மூர்த்தியோ அவனது விச்வரூபத்தையே பாபுவின் வாயில் கண்டாள்!
கிடைக்குமா அந்தக் காட்சி? என்றோ ஓர் அசோதைக்கு மண்ணுண்ட அச்சுதன் காட்டினான். இன்று இந்த ஸாவுகார் பத்னிக்கு அந்த பாக்கியம் கிடைத்திருக்கிறது. ஆனால் பாக்கியத்தை அவள் ஆழ உணர்ந்தாளா? கோலிக்குப் பதில் அகில கோளங்களும் பாலன் வாய்க்குள் சுழலக் கண்டு அவள் தலை சுழன்றது. மாயம் தீர்க்கும் காட்சியையே மாயாஜாலம் என்றெண்ணினாள்.
ஜாலத்தை மறைத்தான் பாலன். ஆனால் ஸாளக்ராமத்தை வாயில் காணவில்லை.
தவித்த அம்மணியை நோக்கி மணிச் சிரிப்புச் சிரித்த பாபு, “ஸாளக்ராமம் உன் பூஜையறையிலேயே வெச்சது வெச்சபடி இருக்கு” என்றான்.
அவள் போய்ப் பார்த்தாள். அப்படியே இருந்தது!
அப்போதுதான் அவளுக்கு உதயமாயிற்று, பாபு ஒரு தெய்வப்பிறவி என்று.
வாசலுக்கு வந்து சின்னஞ்சிறியன் முன் விழுந்து வணங்கினாள் அவதாரனின் பெருமையை உணர்ந்த அந்த முதல் வியக்தி.
அதன்பின் அவள் தினமும் ஸ்ரீமதி பாட்டீலின் வீடு சென்று பாபுவின் பாதத்தைத் தொட்டுப் பணிந்து வரலானாள்.
ஆனாலும் ஊராருக்கு உறைக்கவில்லை இறைவனின் விளையாடல். இது ஏதோ தந்திரம் என்றே எண்ணினர். ஏமாற்றுக்காரப் பிள்ளையை ஸாவுகார் மனைவி வணங்கக் கூடாதென்று அவளையும் கண்டித்தனர். கண்டனத்துக்கு அவள் கட்டுப்பட வேண்டியதாயிற்று. ஆனால் கண்ட அநுபவம் அவளுக்கு மறந்துவிடவில்லை. அதன்பின்னும் மானஸீகமாக பாபுவை வணங்கி வரலானாள்.
இவளுடைய பாக்கியம் பாபுவின் வளர்ப்புத் தாய்க்கு வாய்க்கவில்லை. பிள்ளையின் ‘அதிகப் பிரஸங்கித் தன‘ங்களையும் ‘அதிக்ரம‘ங்களையும் பற்றி கிராமமே குறை கூறினால் என்னதான் செய்வாள் ஒரு கைம்பெண்? மனம் குழம்பினாள். ஊராருக்கிசைந்தபடி பிள்ளையைக் கட்டுப்படுத்தவும் முடியவில்லை; வளர்ப்புத்தானே என்று விரட்டியடிக்கவும் மனம் வரவில்லை.
கடைசியில் ஒரு தீர்வு கண்டாள். சிறிது தூரத்தில் சேலு என்ற இடத்தில் வெங்கூசா என்ற ஸாது ச்ரேஷ்டர் அமைத்திருந்த ஆச்ரமத்தைப் பற்றிக் கேள்விப்பட்டாள். அதிலே அநாதைச் சிறுவர் பலரை வைத்து அவர் பராமரிக்கிறாராம். உயர் குணத்தவரான அவர் அநாதைகளுள் ஹிந்துமுஸ்லீம் என்று பேதம் பாராட்டமாட்டாராம்.
பாபுவை வெங்கூசாவின் ஆச்ரமத்தில் சேர்ப்பதுதான் ஒரே வழி எனக் கருதினாள் பீபி.
அவள் பிள்ளையை அழைத்துக்கொண்டு சேலுவுக்குச் சென்றதற்கு முதல்நாள் இரவு வெங்கூசா ஒரு கனவு கண்டார்.
ஸ்வப்பனத்தில் சிவபெருமான் தரிசனம் தந்தார். மறுநாள் காலை பத்து மணி அளவில் தாம் வெங்கூசாவிடம் வருவதாகச் சொல்லி மறைந்தார்.
விடிந்ததிலிருந்து பத்தாவது மணியை எதிர்பார்த்து ஆர்வத்தில் இதயம் துடித்துக் கொண்டிருந்தார் வெங்கூசா.
கடிகார முள் பத்தை நெருங்கும் அயனான நேரத்தில் ஸ்ரீமதி பாட்டீல் பாபுவுடன் ஆச்ரமத்துள் நுழைந்தாள். பிள்ளையைப் பார்த்தவுடனேயே புரிந்து கொண்டார் வெங்கூசா, பரவசரானார்.
ஆச்ரமத்தில் சேர்த்துக் கொள்வாரோ மாட்டாரோ என்றெண்ணிய வளர்ப்புத்தாய் ஆச்சரியப்படும்படி ஆசார உபசாரம் செய்து, “வருவானா வருவானா என்று எவனை உத்தேசித்துக் காலம் காலமாகக் காத்திருந்தேனோ அவன் வந்துவிட்டான்!” என்று ஆர்த்து வரவேற்றார் வெங்கூசா.
பாபுவை சேலு ஆச்ரமத்தில் விட்டுவிட்டுத் திருப்தியுடன் திரும்பினாள் வளர்ப்புத்தாய்.
வெங்கூசா பாபுவிடம் அலாதிப் பிரீதி வைத்துப் பராமரித்தார். சீடனாக இன்றி தெய்வ புத்ரனாகவே அருமைக்கிட்டார்.
இதனால் மற்ற மாணாக்கர்களுக்கு அவனிடம் பொறாமை உண்டாயிற்று. முன் ஊராரின் எரிச்சலைப் பெற்றவன் இப்போது சக மாணவரின் அசூயைக்குப் பாத்திரமானான். (இரு அவதாரங்களுக்கும் எவ்வளவு ஒற்றுமை?)
குருவை விட்டு பாபு தனியாக இருக்கும் சந்தர்ப்பம் கிடைக்குமானால் உடனே அவனை நையப் புடைக்கவேண்டும் என்று அவர்கள் திட்டம் போட்டனர்.
அப்படிப்பட்ட ஸந்தர்ப்பமும் ஒருநாள் வாய்த்தது. அன்று வெங்கூசா வில்வ பத்திரங்கள் பறித்துக் கொண்டு வருமாறு பாபுவைத் தோப்புக்கு அனுப்பினார்.
காடு போன்ற தோப்பிலே ஸஹாயம் எவருமின்றி பாபு தனியாக வில்வம் சேகரிக்கும்போது ஏனைய மாணவர்கள் அவனைச் சூழ்ந்துகொண்டு தாக்கினர்.
பாபு ஏதுமே எதிர்த்துச் செய்யாமல் தாக்குதலைத் தாங்கிக் கொண்டான்.
ஒரு முரட்டு மாணவன் அவன் மேல் ஒரு செங்கல்லை எறிந்தான். அது பறந்து வந்து பாபுவின் நெற்றி உச்சியில் இடித்தது. அப்போதும் சிவாவதாரி நெற்றிக் கண்ணைத் திறந்து ஜ்வாலை பொழியவில்லை. குருதிதான் பொழிந்தது குதறிய நுதலிலிருந்து.
மேலும் தாக்கினால் பாபு இறந்து போய், அதனால் தங்களுக்கு விபரீதம் வந்துவிடப் போகிறதே என்று பயந்து மாணவர்கள் நிறுத்திக்கொண்டனர்.
பாபு, செந்நீர் தோய்ந்த செங்கல்லை எடுத்துக் கொண்டு ஆச்ரமத்துக்குத் திரும்பினான்.13. போகும் வழியெல்லாம் நெற்றியிலிருந்து ரத்தம் சொட்டிக்கொண்டேயிருந்தது.
வெங்கூசாவிடம் பாபு ஏதும் கூறவில்லை. ஆயினும் குருதி பாய்ந்த அவனது விரிநுதலையும், ரத்தத்தில் மேலும் சிவப்புற்ற அவன் கைச் செங்கல்லையும் கண்டவுடன் அவரே புரிந்துகொண்டார்.
ரத்தம் சிந்தியதால் தம் சீடர்கள் செய்த மாபாபத்தைக் கழுவுவதுபோல், கழுவாயாகத் தாம் அந்தச் செங்கல்லை முகத்தில் ஒற்றிக்கொண்டு அதன்மேல் கண்ணீர் வடித்தார். உலகை உயர்த்துவதற்காக இறைவன் உருவெடுத்து வந்தால் அவனையே மாந்தர் ரத்தம் கக்கச் செய்யும் கொடுமையை எண்ணி வெதும்பினார்.
வேட்டியைக் கிழித்துத் தமது பேரன்புக்குரிய பாபுவின் நெற்றிப் புண்ணைச் சுற்றிக் கட்டினார்.
என்ன காரணமோ, அந்தக் கட்டு ஏற்பட்ட நாளிலிருந்து இறுதிவரை ஷீர்டிநாதர் உச்சி நெற்றி சேரச் சிரத்தைத் துணியால் கட்டியவராகவே காட்சியளித்தார்.
14புட்டபர்த்தியில் வேணுகோபால வடிவான நாகத்தை அடித்து, அதன் ரத்தக் கறையுண்ட கல் வழிபடப் பெறுவது வாசகருக்கு நினைவு வரலாம்.
பாபுவின் ரத்தம் ஊறிய செங்கல் வெங்கூசாவுக்கு சிவலிங்கம் போன்ற புனித வஸ்துவாயிற்று. அதைத் தாமே எப்போதும் உடன் வைத்துக்கொண்டார்.
பிற்பாடு பாபுவும் இந்தக் கல்லை விடாமலே வைத்துக் கொண்டிருந்தார்.
சேலு பாபு ஷீர்டி பாபாவாக ஆன பிற்பாடும் செங்கல்லை ஒருவிதமான பிரேம பாசத்துடனேயே அவர் எப்போதும் உடன் வைத்திருந்தார்.
இவரது சிவத்தன்மையின் சிவப்பு ஊறியதாக அதை வெங்கூசா போற்றினார் எனில், இவரோ உலகத்துக்கு குரு பக்தியை உதாரணம் காட்டவே போலும், வெங்கூசாவின் அன்புக்குச் சின்னமாகவே அதை நாளும் நவநிதி போலக் காத்து வந்தார்.
கல்லானாலும் கணவன் என்பார்கள். இங்கோ கல் ஒருவருக்கு இறைவனாகவும், அந்த இறைவனுக்கே குருவின் ஞாபகார்த்தமாகவும் இருந்திருக்கிறது!
இதில் விந்தை, வெங்கூசா தம்மை பாபுவின் குரு என எண்ணாமல் அவனே ஆதிகுரு என்றுதான் கருதினார். ஆயினும் பிற்காலத்தில் ஷீர்டி பாபாவோ வெங்கூசாவை குருஸ்தானத்திலேயே கூறி வந்தார்.
உறவாசை, பொருளாசையே இல்லாத ஷீர்டி ஸாயி பாபா ஒரு செங்கல்லை ஜீவனுள்ள வஸ்து போலக் கருதி உறவாடிய விநோதம் அவரது பக்தர்களுக்குப் புரியவேயில்லை. குரு பக்திக்குச் சின்னமாக மட்டுந்தானா அவர் அதைக் கருதினார்? புரியாப் புதிராக அவர் செய்த எத்தனையோ விசித்ரங்களில் இது ஒன்று என்றே எண்ணினார்கள்.
ஷீர்டீசர் சில சமயங்களில் அந்தச் செங்கல்லைச் சுவரோடு வைத்து அதன் மேல் சாய்ந்துகொள்வார். சில போது அதன்மீது தம் கையை ஊன்றிக்கொள்வார். அதைத் தம் தலையணையாக வைத்துக்கொண்டு அவர் சயனிப்பதும் உண்டு.
பஞ்சினும் மென்மையான தாயின் மடிபோல அந்தச் செங்கல்லை ஷீர்டி நாதர் உவந்ததன் உட்பொருளை யாரே முற்றிலும் அறிவர்?
நம்முடைய பர்த்திநாதர் ஒருவர்தான் அறிவார்.
ஆனால் அவரோ எத்தனையோ நாள் அடைத்து வைத்திருந்த ஷீர்டி சரிதத்தை அவிழ்த்துவிடுகையில் இந்த இடம் வந்ததும் சட்டென்று நிறுத்திவிட்டார். மறுநாள் மாலை கோகாக் அவரிடம் விட்ட இடத்திலிருந்து தொடருமாறு கோர, “சும்மா ஸ்வய புராணம் பாடிக்கொள்வது ஸந்தோஷமாக இல்லை. வேறு ஏதேனுமொரு மஹானின் கதை சொல்கிறேன்” என்று ஒரு போடு போட்டுத் திசை திருப்பிவிட்டார்.அதென்ன தேவ ரஹஸ்யமோ?