சத்ய சாய் பாபா – 6

6. “ஈச்வராம்பாஸுத, ஸ்ரீமந்!”

பிள்ளைப் பெருமாள் என்றவுடன் அம்மாப் பெருமாட்டியோடு அவரைச் சேர்த்துப் பார்த்து அநுபவிக்க ஆசை உண்டாகிறது.

அன்னை ஈச்வரம்மாவுக்கு ஸாயிக் காவியத்தில் ஒரு தனி இடம் உண்டு. ‘அன்னையும் பிதாவும்என்று சேர்த்துச் சொல்லப்பட்டாலும் இங்கே பிதா வெங்கப்ப ராஜு எங்கோ பின்தங்கித்தான் நிற்கிறார்.

ஸ்வாமி மாதாபிதா இருவருக்கும் ஸமாதி அமைத்திருக்கிறார். புட்டபர்த்தியில் தந்தை பேரில் கல்யாண மண்டபமும் அன்னை பேரில் கல்விச்சாலையும் எடுத்திருக்கிறார். ஆனாலும் அன்னைக்கு மட்டும் ஒரு படி ஏற்றம் தந்து, அவளது மறைவு நாளான மே ஆறாந் தேதியன்று. ஆண்டுதோறும் நினைவுநாள் கொண்டாடி ஏழையருக்கு அன்ன வஸ்திரங்கள் அளிக்கிறார். தந்தை தினம் இவ்வாறு கொண்டாடப்படுவதில்லை.

ஈச்வராம்பா ஸுத ஸ்ரீமந்என்பதாக நாளைத் தொடங்கும்போது நாதனுக்கு ஸுப்ரபாதம் பாடுகையில், முதலில், பெற்றெடுத்த புண்யவதியைத்தான் சொல்கிறோம். ‘ஈச்வராம்பா தநயா‘, ‘ஈச்வராம்பா நந்தநா‘, ‘தந்ய ஹோ ஈச்வராம்பாஎன்பதுபோல் அநேக பஜன்களில் ஜனனி ஸாயியின் ஜனனியை நினைவு கூர்கிறோம். ஸ்வாமியின் தந்தையை ஸ்தோத்ரங்கள், பஜன்கள் எதிலும் குறிப்பிடுவதில்லை.

ஸ்வாமியின் திருவுள்ளம் ஸூக்ஷ்மமாகச் செயற்படுவதுதான் இதற்குக் காரணம் என்பதில் ஐயமேயில்லை. அவர் இப்படித் தந்தைக்கு மேலாகத் தாயை நினைக்கத் திருவுள்ளம் கொண்டதற்கு என்ன காரணம் என்று கேட்டால் அதை நிச்சயப்படுத்திச் சொல்ல முடியவில்லை. ஆனாலும் ஸ்வாமியின் அணுக்க அடியார் சிலரிடமிருந்து நான் கேள்விப்பட்ட வெகு வெகு நம்பகமான ஒரு விஷயம் சொல்கிறேன்.

இப்போது சொல்லும் வெகு முக்யமான விஷயத்தைப் பற்றி ஸ்வாமியிடமிருந்தன்றி வேறு யாரிடமும் உறுதிப்படுத்திக்கொள்ள இயலாது. இதுவரை அவ்வாறு உறுதிப்படுத்திக் கொள்ளாமலேதான் இதைத் தெரிவிக்கிறேன். (முன்னமேயே இவ்விஷயத்தை ஆங்கிலத்தில் ஒரு நூலிலோ கட்டுரையிலோ படித்த நினைவு. அதனால்தான் தமிழிலும் தயங்காமல் வெளியிடுகிறேன்.)

அதாவது: ஸ்வாமி ஈச்வரம்மாவின் மணிவயிற்றில் பத்து மாதம் குடிகொண்டிருந்து, திருவவதரித்தவர் என்பது முற்றிலும் உண்மையே ஆயினும், அவருக்குத் தந்தை எனப்படும் பெத்த வெங்கப்ப ராஜுவின் ஸம்பந்தமே இல்லையாம். ஈச்வராவதார தேஜஸ் நேராகத் தன்னால் ஈச்வரம்மாவின் கருவில் புகுந்துவிட்டதாம். இவ்வாறு ஸ்வாமியே ஒரு சில நெருக்கமான அடியார்களுக்கு ஐயம் திரிபறச் சொன்னதாக அறிகிறேன்.9

ஸ்ரீராமசந்திர மூர்த்தி தசரதனின் ஸம்பந்தமின்றி, யக்ஞத்தில் தோன்றிய பாயஸத்தில் கரைந்த அவதாரப் பிண்டமாக நேரே கௌஸல்யாதேவியின் கர்ப்பத்தில் சேர்ந்தவன் என்று சொல்வதுண்டு. இதற்கு ஆதாரம் வால்மீகி ராமாயணத்திலேயே இருப்பதாகக் காட்டுவார்கள். ஆன்மீகத்தில், பாலகாண்டம் பதினெட்டாம் ஸர்க்கத்தில் ஸ்ரீராமாவதாரத்தைச் சொல்லும்போது, “யக்ஞம் பூர்த்தியாகி ஆறு ருதுக்கள் கழிந்த பின்என்று சொல்லி, இதையே மீண்டும் சந்தேகமற, “பன்னிரண்டாவது மாதத்திலே”> என்றும் வலியுறுத்தி, அப்போது சைத்ர நவமியில் ஐயன் அவதரித்தான் எனக் கூறியிருக்கிறது (ததோ யஜ்ஞே ஸமாப்தே து ருதூநாம் ஷட் ஸமத்யயு: தச்ச த்வாதசே மாஸே சைத்ரே நாவமிகே திதௌ). இதற்குமுன் (பதினாறாம் ஸர்க்க முடிவில்) பாயஸத்தை ராணிமார்

10இந்நூல் முதலிரு பதிப்புக்கள் வந்தபின் கஸ்தூரி ஆங்கிலத்தில் எழுதிய ஈச்வரம்மாவின் சரிதையில் ஸ்வாமி அவள் வாயாலேயே இவ் விஷயத்தை வெளியிட்ட விவரம் தெரிவித்திருக்கிறார். அதனைப் பிற்பாடு இந்நூலாசிரியர் எழுதியஅற்புதம் அறுபதுஉள்ளடக்கியுள்ளது.

பருகியவுடன் அக்னிக்கும் சூரியனுக்கும் ஸமமான தேஜஸ் அவர்களது கருவில் புகுந்ததாக உள்ளது. அதன் பின் பத்து மாதங்களுக்குப் பதில் பன்னிரண்டு மாதங்களுக்குப் பிறகே ராமாதியர் அவதரித்ததற்குக் காரணம், தந்தை ஒருவனிடம் இவர்கள் இரண்டு மாதம் விந்துவாக இல்லாததாலேயே, அதையும் சேர்த்து வைத்துத் தாயாரிடமே இருந்ததுதான் என்று கூறுவர்.

வேறு சில மஹான்களின் சரிதத்திலும், பெற்றோர் நோன்பிருந்து அதன் முடிவில் அந்தணாளர்களுக்கு ஸந்தர்ப்பணை செய்ததாகவும், அதில் உச்சிஷ்டத்தை அன்னை உண்ணும்போதே மஹானாக உருவாகப்போகும் கரு அவளுள்ளே புகுந்ததாகவும் கூறியிருப்பதைக் காண்கிறோம்.

இயேசு கிறிஸ்துவின் அன்னை மேரி, தேக ஸம்பந்தமின்றி அவரைப் புனிதமுறையில் கர்ப்பம் கொண்டதைImmaculate Conceptionஎன்பதாக ரோமன் கத்தோலிக்கர்கள் ஒரு மறுக்கக்கூடாத கோட்பாடாகக் கொண்டிருக்கிறார்கள்.

நம் ஸ்வாமியும் இவ்விதம் ஜனித்திருக்கக் கூடியவர்தான். ஆனால் அப்படியில்லாவிடினும் அதனால் தெய்விகம் இல்லை என்று எண்ண வேண்டியதில்லை.

ஷீர்டி ஸாயியின் பிறப்புத்தான் இன்றளவும் மர்மப் புதிராக இருப்பதாக நினைத்திருக்கிறோம். பர்த்தி ஸாயியின் பிறப்பிலும் அப்படி ஓர் அம்சம் இருப்பது இப்போது தெரிகிறதல்லவா?

(புதிராக இருந்த ஷீர்டி மூர்த்தியின் பிறப்பு வளர்ப்பை நம் பர்த்தி மூர்த்தி அவிழ்த்திருக்கிறார். அந்தப் பரம புண்ய விருத்தாந்த விருந்தை அடுத்த அத்தியாயத்தில் சுவைக்கலாம்.)

***

வெங்கப்ப ராஜுவைப் பற்றிச் சிறப்பித்துச் சொல்ல எதுவுமில்லை. ஓரளவுக்கு அப்பாவி, அவதாரனின் தந்தை என்று அதிகம் அஹம்பாவம் பாராட்டாதவர் என்பது தவிர, சாமானிய கிராமாந்தர மாந்தரில் ஒருவராக அவர்கள்மாமூலாக்கிக் கொண்டுவிட்ட சில தப்பு வழக்கங்களோடுங்கூடத்தான் இருந்தார். பகவானைப் பற்றிய நூலில் எவரையும் குறைவாகச் சொல்லக் கூடாதுதான். அவருக்குப் பிதாவாகவே பார் கண்ட ஒருவரைத் தோஷம் கூறுவது இங்கு நோக்கமில்லை. இருந்தும் ஸ்வாமியின் பெருமை தெரிவதற்காக ஒன்றிரண்டு சொல்கிறேன்.

தம் தந்தை என்பதற்காக அவருக்கு அடியார்கள் அதிகப்படி மரியாதை செய்வதை ஸ்வாமி அனுமதிக்க மாட்டார். அதே சமயம் அவரையும் அடியாரில் ஒருவராகக் கருதி அநேகப் பயணங்களில் உடன் அழைத்துச் சென்றிருக்கிறார். ஆயினும் அப்போது தம் குழுவுக்கு மரியாதை குறையும்படி அவர் நாகரிகக் குறைவாக ஏதாவது செய்து விடாமல் நாசூக்காகத் தடுப்பார். “வைக்கிற இடத்தில் வைப்பதுஎன்பதற்கு நூற்றுக்கு நூறு மார்க் ஸ்வாமி தமது தந்தையை நடத்திய முறைதான்! அவரைத் தன் வாஸ ஸ்தானத்தில் இடம் கொடுத்து வைத்துக்கொள்ளவில்லை. ஆனால் இதனால் காழ்ப்பின்றி அவர் பாட்டுக்கு ஏனையோரைப்போல அங்கு வந்து போகும்படியாகவும் ஒரு நீக்குப்போக்குக் காட்டினார்.

ஓரளவு விட்டுக் கொடுத்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். பலப்பல ஆண்டுகளுக்கு முன் பர்த்தி சென்று வந்த என் தூரபந்துக்கள் சொல்வார்கள் அக்காலத்தில் வெங்கப்பர் ஒரு பலசரக்குக் கடை வைத்திருந்தாராம். (கோடீச்வரி ஸாகம்மாவும், சிஞ்சோலி ராணியும், வாண்டூர் கோர்படே மன்னரும் தம் காலில் கிடந்த நாளில், இளம் ஸாயி தம்குடும்பத்துக்காக அவர்களிடம் வசதி பெற்றுத்தராத தெய்விக நேர்மை இதில் சுடர் விடுகிறதல்லவா? இது ஒரு பக்கம் இருக்கட்டும்.) பலசரக்கு வியாபாரம் செய்த தந்தையார், ஸ்வாமியின் அந்நாள் ஆசிரமமான பாதமந்திரத்துக்குப் போகிறவர்களைத் தம்மிடம் சாமான் வாங்குமாறு கூவிக்கூவி அழைப்பாராம். அது மட்டுமில்லை; அவர் புக்கப்பட்டணம் போன்ற இடங்களுக்குச் செல்லும்போது, பஸ் ஸ்டான்டில் வந்திறங்குபவர்களிடம் புட்டபர்த்தியில் ஒரு ஸ்வாமியார் இருப்பதைச் சொல்லி, அவரைப் பார்க்க வரும்படியாக அழைத்துவிளம்பரப் படுத்துவாராம்! பல சரக்கோடு ஸ்வாமிக்கும் சரக்குப் பிடித்துத் தர முற்பட்டிருக்கிறார்! பக்தர்களுக்கு இதைப் பார்க்க வெட்கமாயிருக்கும். இதனால் புட்டபர்த்தியில் வெங்கப்ப ராஜுவை வைக்காமல் வெளியே எங்காவது ஸெட்டில் செய்துவிட வேண்டும் என்றுகூட ஆதிகாலத்தில்செல்வாக்குஉள்ள பக்தர்கள் நினைத்ததுண்டாம். ஆனால் அவர்களுடைய வாக்கு நம் பகவானிடம் செல்லவில்லை. ‘பிதாவின் போக்கால் அவர் பாதிக்கப்படவில்லை.

தந்தை என்பதற்காகத் தலையில் தூக்கி வைத்துக் கொள்ளவுமில்லை; அவர் செய்வது அவமானகரம் என்று நினைத்து அவரை அப்புறப்படுத்தவுமில்லை.

எவ்வளவு நியாய உணர்வு? நமக்கும் வெங்கப்பரின் போக்கில் ஓர் அப்பாவிக் கிராமவாசியின் அறியாமைதான் தெரிகிறதே அன்றி, துஷ்டத்தனமோ குற்றமோ தெரியவில்லை அல்லவா?

குற்றம் கண்ட இடத்தில் ஸ்வாமி எடுத்துச் சொல்லவும் இடித்துச் சொல்லவும் தயங்கவில்லை. மணியம்(gang)ஐப் பற்றி பாலஸாயி புனைந்த பாட்டில் தந்தையின் தப்பிதங்கள் இரண்டையும் உள்ளடக்கி, ‘பிள்ளையான தாம் இதை அவரிடம் குத்திக்காட்டாமல் சாதுரியமாக அவர் காதுக்கு எட்டும்படிச் செய்ததையும், பின்னர் அவர் கண் ஜலம் கொட்டும்படிப் பண்ணியதையும் முன்பே பார்த்தோமல்லவா?

ஈச்வரம்மா தன் கணவரைவிட குணவதி. அவளைப்பற்றித் தெய்விகமானவள், ஆன்மிகத்தில் உயர்ந்தவள் என்றெல்லாம் சொல்ல முடியாதாயினும் மொத்தத்தில் நல்லவள். கர்வமே இல்லாதவள், வெள்ளை உள்ளத்தவள், அந்தஸ்து கொண்டாடாமல் தன்பாட்டுக்கு இருப்பவள், உபகாரசிந்தை படைத்தவள், இனிய வாக்குச் சொல்பவள். ஸ்வாமியைப் பத்துமாதம் தாங்கிய கோயில் மேனியள் என்பதால் அவளை வணங்க வருபவர்களுக்குத் தன் பிள்ளைத்தேவுடுவை நம்பினால் அவர்கள் குறையெல்லாம் தீரும் என்று நம்பிக்கை தந்தவள். சுருக்கமாக, மனஸ்வினி. இதற்குமேல் தெய்விகம், ஆன்மிகம் என்ன இருக்கிறது என்று தோன்றுகிறதாக்கும்! அசோதைகூட இப்படித்தான் ஜபதபஸாதனை, கதவோபதேசம் என்றில்லாமல் ஸாமான்யத்திலேயே மான்யமாக இருந்திருப்பாள்!

தன் பிள்ளை தேவுடு என்று அவளுக்குத் தெரியும். பல சமயம் உறவு அதை மறைத்தும் விடும். கண்ணன்போல நம் மாயாவி ஸாயியேதான் மறைத்தும் விளையாடியிருக்க வேண்டும்.

கவடின்றி, விகல்பமின்றி ஸ்வாமியிடமே ஒரு முறை சொன்னாளாம்: “ஸ்வாமீ! நீ உன்னை பகவந்துடுன்னு சொல்லிக்கிறே. எனக்கும் ஒரு வயத்தினாலே அது ஊர்ஜிதம்தான். என்னன்னா, வசனம் சொல்வாங்க: மகவு பொறக்கறது எப்போன்னு மஹாதேவனும் சொல்ல முடியாதுன்னுவாங்க. நீயானா காஜமா, இன்னாருக்கு, இன்ன தினத்திலே, இன்ன குழந்தை பொறக்கும்னு சொல்றே; அப்படியே நடக்கறது. அதைப் பார்க்கறச்சே நீ தேவுடுதான்னு தோணறது. (ஸ்வாமியின் ஈச்வரத்வத்துக்கு எளிய ஈச்வரம்மா பனவைத்துள்ளடெஸ்ட்தான் என்னே? இப்படிப்பட்ட குழந்தையம்மா வயிற்றில் தவிர வேறெங்கு நம் குழந்தை பகவானின் பிண்டம் உருவாக முடியும்?) ஆனா ஸ்வாமீ, நீ பல பேருங்களுக்கு டாலர், மோதிரம், செயின், ஜபமாலை, ரூபாய் எல்லாம் தரதைப் பற்றி நாலு தினுஸாப் பேசிக்கறதைக் கேட்டா குழப்பமாயிருக்கு.”

நாலு தினுஸான்னா, என்ன சொல்லிக்கறா? சொல்லுஎன்று நகை தவழ் முகராகப் பிள்ளையார் கேட்கிறார்.

என்ன ஸ்வாமீ, உனக்குத் தெரியாததா?”

என்னை ஸ்வாமி இல்லேங்கறதுக்குத்தான் இப்போ ஏதோ ஸாக்ஷியம் கொண்டுவர ஆரம்பிச்சே; அப்பறம் எனக்குத் தெரியாததும் உண்டான்னு கேக்கறியே!” குத்தல் இல்லாமல் ஹாஸ்யமாகக் கேட்கிறார் ஸ்வாமி. “நாலு தினுஸுப் பேச்சைக் கேட்டு உனக்கு என்ன ஸந்தேஹம்னு சொல்லட்டுமா? இங்கே ரொம்பப் பணக்காரங்களா எங்கிட்ட வராங்களே, அவங்கதான் எனக்குக் காசும், பணமும், நகையும், நட்டும், டாலருமா கொண்டுவந்து கொட்டறாங்க; அதோ அந்த உள் ரூம் பீரோவிலே அதையெல்லாம் வெச்சுப் பூட்டியிருக்கேன்; ஏதோ ட்ரிக் பண்ணி இதுங்களை என் கையிலே வரவழைச்சு வெளிலே கொடுக்கறேன், நானா ஒண்ணையும் ஸ்ருஷ்டிச்சுத் தரதில்லை இதுதானே உன் ஸந்தேஹம்?”

ஈச்வரம்மாவுக்குக் குறுகுறுக்கிறது. “அப்படிநான் தீர்மானமாநினைக்கலை ஸ்வாமீஎன்று இழுக்கிறாள்.

ஆமாம் ஆமாம். தெரியும். நானும் உன்ஸந்தேஹம்னுதான் சொன்னேனே தவிர, ‘தீர்மானம்என்கவில்லையே! சரி, ஏன் ஸந்தேஹப்படணும்? இப்பவே போய் அந்த பீரோ, கீரோ எல்லாத்தையும் திறந்து பார்த்துக்கோ. எதலேயாவது ஏதாவது ஒளிச்சு வெச்சிருக்கேனா பாரு. உம், போ!”

இந்த தெய்வ மகனையா சோதனை போடுவது?’

ஒரு காசு செல்லுமா செல்லாதா என்று பார்ப்பதுபோல என்னைச் சோதித்தே ஏற்றுக்கொள்என்று சீடரிடம் பரமஹம்ஸ ராமகிருஷ்ணர் கூறினதுபோல் அம்மாசிஷ்யையிடம் பிள்ளை குரு பேசுகிறார்.

சந்தேகம் பொல்லாதது. நடுவிலே மறைஞ்சாலும் மறுபடி நெஞ்சிலே வந்து உறுத்திக் கொண்டேயிருக்கும். போய் பீரோவெல்லாம் திறந்து பாருஎன்று தூண்டினார் ஸ்வாமி.

ஈச்வரம்மா அந்த அறைக்குப் போய் எல்லா பீரோவையும் திறந்து பார்த்தாள்.

அத்தனையும் காலியாகவே இருந்தது!

அப்பாடா!” என்று ஒரு பாரத்தை இறக்கி வைத்தாற் போலிருந்தது. பிள்ளையிடம் வர அடி எடுத்து வைத்தாள்….

இல்லை, வைக்கவில்லை, வைக்க முடியவில்லை!

அவள் இருந்த இடத்திலிருந்து ஸ்வாமி இருந்த இடம் வரையில் க்ஷண காலத்தில் எப்படியோ பொற்கட்டி வெள்ளமாகக் கொட்டியிருந்தது! மஹாலக்ஷ்மிக்குத் துதி பாடாமலே கொட்டிய கனக தாரை!

அவற்றில் நவரத்தினங்களும் மின்னுகின்றன!

ஈச்வரம்மா விரல் வைக்க இடமில்லை!

வியர்த்துக்கொட்ட, அப்படியே பிரமித்து நின்று விட்டாள்.

என்னம்மாபீரோ எல்லாம் பார்த்துட்டியா? என்னவெல்லாம் ஒளிச்சு வெச்சிருக்கு? சொல்ல வா, வாஎன்று ஸ்வாமி கபடத்திலேயே நிஷ்கபடமாகக் குரல் கொடுத்தார்.

ஸ்வாமீ, நான் என்னமோ தெரியாம சொல்லிட்டேன். இப்போ எங்கே எப்படிக் காலை வெச்சு வருவேன்? ஸ்வர்ணத்தைக் காலால் மிதிக்கப் படாதே!” என்றாள் தாய்.

பரவாயில்லை, வா வாஎன்று பகவான் பகர, உடனே கனகக் கட்டிகளும் நவமணிக் குவியலும் மறைந்தன!

அருகே வந்து நின்ற அம்மாவின் பதற்றத்தையும், குற்ற உணர்வையும் அவளிடமிருந்து தட்டி விடுவதேபோல அன்புடன் அவளைத் தட்டிக்கொடுத்த பங்காரு பாப்பா, பங்காரு மழை பொழிந்த பாபா, “லக்ஷ்மிக்கும் குபேரனுக்கும் படி அளக்கிறது யாருன்னு இப்பத் தெரிஞ்சுதா?” என்று சிரித்தார்.

அந்தச் சிரிப்பு ஒரு கனக வர்ஷம்!

***

ஸ்வாமி ஜயந்திகளில் அவரது தனித்தன்மை பொருந்திய கேசபாரத்துக்குத் தைலம் வைப்பது ஈச்வரம்மாவுக்குக் கிடைத்த பாக்கியம். வெங்கப்ப ராஜுவுக்கும் இந்தப் பேற்றை அளித்துவந்தார் பகவான். பின்னாளில் அத்யந்த அடியார் சிலருக்கும் இந்த வரப்பிரஸாதம் கிடைத்தது.

ஸாயீச்வரனுக்கு ஈச்வராம்பா எண்ணெய் வைக்கும் புகைப்படம் ஒன்று உண்டு. அதிலே அவர் ஈச்வரனாக இருக்க மாட்டார். வணங்காத தம் முடியை வணக்கி, அன்னைக்கு சௌகரியமாக உடலையும் குனித்து முன்னே தள்ளி, தமது ஒரு கையால் இன்னொரு கையைப் பற்றிக்கொண்டு, அடக்கவொடுக்கமான சமர்த்துக் குழந்தையாகக் காட்சி தருவார்.

பிள்ளையாண்டான் இப்படி அடங்கிக் காட்டிய தால் வாஸ்தவமாகவே அவர் தங்கள் வீட்டுப் பிள்ளை, தங்களையெல்லாம் உறவினராகக் கொண்டவர் என்ற உரிமை மயக்கம் அம்மாவுக்கு ஏற்பட்டுவிட்டது போலும்! வெங்கப்பராஜு காலமானபின் நிகழ்ந்த ஜயந்தியில் இந்த உறவுரிமைக்காக ஒரு சிறு போராட்டப் புயலையே உண்டாக்கி விட்டாள்!

தந்தைக்குப்பின் தமையன்என்பார்களல்லவா? இதை வைத்து வெங்கப்ப ராஜுவுக்குப் பிறகு ஸ்வாமி தம் மூத்த ஸஹோதரரான சேஷம ராஜுவிடம் தைலம் வைத்துக்கொள்ள வேண்டும் என்றாள்.

நடக்காத காரியம்என்று ஒரே வார்த்தையில் சொல்லிவிட்டார் ஸ்வாமி. போனால் போகிறது என்றும், உலகுக்கு உதாரணமாகவும் அம்மா அப்பா உறவு நாடகம் ஆடினார் என்பதற்காக, அண்ணா, அப்புறம் அக்கா, அதன் பின் வேறு பந்துக்கள் என்று நீட்டிக்கொண்டே போவதா என்ன?

அன்று ஏனோ நல்ல அம்மாவை மாயை ஒரேயடியாக மூடியிருந்தது. “சேஷம் ராஜு வேண்டாமென்றால் நானும் எண்ணெய் வைக்க வரவில்லைஎன்று சொல்லி விட்டாள்.

விழா ஏற்பாடுகளைக் கவனிக்கும் முக்யஸ்தர்கள் பதறினார்கள். மென்று விழுங்கிக்கொண்டு, ஸ்வாமியிடம் வந்து அம்மா சொன்னதைத் தெரிவித்தார்கள்.

அவரோ இம்மி கலக்கமில்லாமல், “வேண்டாமே!” என்று கூறிவிட்டு தரிசனத்துக்குப் புறப்பட்டு விட்டார்.

முக்யஸ்தர்களால் அப்படி விட்டுவிட முடியவில்லை. ‘ஆயிரமாயிரம் மக்கள் ஆவலுடன் பார்ப்பதல்லவா அன்னை செய்யும் அப்யங்கனம்? அதோடு சயந்தி நன்னாளில் இப்படி ஓர் உரசல் என்று கேள்விப் பட்டால் பக்தர் அனைவர் மனமும் விரிசல் விடாதா?’ என்று எண்ணினர். ஈச்வரம்மாவின் காலில் விழுந்து மன்றாடி, அவளை மன்றத்துக்கு அழைத்து வந்தனர்.

ஸ்வாமி ஏதும் நடக்காதது போல் தமது திருக்குழற்கற்றையைத் தாய்க்குச் சாய்த்துக் காட்டினார்.

முடி சம்பந்தமாக அன்னையையும் பிள்ளையை முடிபோடும் இன்னொன்று. முன் சொன்னது போலன்றி, மதுரமான நிகழ்ச்சி. 1972ல் அன்னை காலமாவதற்குச் சில மாதங்கள் முன்னால் நடந்த ஸம்பவம்.

லக்ஷ்மிக்கும் குபேரனுக்கும் படி அளப்பவனாகக் கண்டவனையே சேஷம ராஜுவின் தம்பியென நினைத்து மயங்கினாளல்லவா? இன்னொரு ஸமயமும் ஸ்வாமியின் ஸ்வாமித்துவத்தில் அவளுக்கு ஐயம் வந்துவிட்டது. பிள்ளை பிறப்பது பற்றி அவர் தப்பாது சொல்வதிலேயே அவரது இறைமையை உணர்ந்த அவளது எளிமையையே இந்த ஐயத்திலும் காண்பீர்கள்!

ஸ்வாமி பகல் போஜனம் செய்து கொண்டிருந்தார், உணவு மேஜைக்கெதிரே நாற்காலியில் அமர்ந்தவாறு.

பக்கத்தில் தரையில் உட்கார்ந்துகொண்டிருந்தாள் தாய்.

வழக்கமாக இப்படி அவர் உண்கையில் அருகே அமர்ந்திருக்கும் அம்மாவின் கண்களிலிருந்து நீர் தாரை தாரையாகக் கொட்டியபடி இருக்கும்.

ஸ்வாமியோ அதைக் கண்டும் காணாதவராக முறுவல் செய்தபடி, தம் வழக்கப்படி நாலு கவளம் கொரித்து, சாப்பிட்டதாகப் பேர் பண்ணிவிட்டுக் கை கழுவி விடுவார்.

அம்மா அழக் காரணங்கள் உண்டு. எந்த அம்மாவானாலும் அந்தக் காரணங்களுக்காக அழாமலிருக்க முடியாது.

ஒன்று: அதென்ன அவதார ரகசியமோ, அன்னை சமைத்தோ பரிமாறியோ எதையும் ஸ்வாமி உட்கொள்வதில்லை. ஆதியில் உரவகொண்டாவில் அவர் உறவை முறித்து, வீட்டை விட்டு ஓடியபின், அன்னை வந்து கண்ணீரும் கம்பலையுமாக வேண்டியதில் மனமிளகி, மீண்டும் ஒரே ஒரு வேளை வீட்டுக்கு வந்தார். அப்போது அவள் தன் இதயத்தையே கலந்து படைத்த அன்ன வகைகளையெல்லாம் கதம்பமாகக் கலந்து பிசைந்தார். தமது அம்புஜமான குஞ்சுக் கையை நீட்டி, “ம், போடுஎன்றார். ஆனந்தமும் ஆராத் துயரமும் ஒருங்கே கலந்து அவளுடைய கண்கள் பிரவாஹமிட, அவள் ஐயன் கையில் ஒன்று, இரண்டு, மூன்று என்று சாத உருண்டைகளை வைக்க, மூன்றோடு போதும் என்று எழுந்து விட்டது செல்வம். “இதோடு பந்தம் விட்டதுஎன்றும் செப்பு வாயால் செப்பிவிட்டது.

மகனுடைய அந்தப் பதிநாலாம் வயஸுக்குப் பிறகு அவனுக்கு உணவிடும் பாக்கியம் அன்னைக்குக் கிடைக்கவேயில்லை.

எத்தனையோ பக்தைகள் வகை வகையாகச் சமைத்துப் பிரசாந்தி நிலய மாடிக்கு நிவேதனமாக அனுப்பி வைப்பார்கள்.11 ஒரு பக்ஷியளவே புசிக்கும் உண்டி சிறுத்த உடையவனுக்கு மேஜை கொள்ளாமல் அவற்றைப் படைத்திருக்கும். அன்றைக்கு எவரெவருக்கு பாக்கியமிருக்கிறதோ அவர்களது நைவேத்தியங்களில் துளித்துளி, உலகடங்கும் ஸ்வாமியின் திவ்ய குக்ஷிக்குள் போகும். ஆனால் பெற்றெடுத்த அன்னைக்கு மட்டும் இந்த பேறு இல்லை என்றால் அழுகை வராதா?

12இந்த வழக்கம் நிறுத்தப்பட்டுவிட்டது.

இன்னொரு காரணம்: ராப் பகல் ஊருக்காக இப்படி உழைக்கிறானே பிள்ளை, ஊர் ஊராகச் சுற்றுகிறானே, ஆயிரம், பதினாயிரம் குடும்பங்களுக்கு நேராகவும், அருள் திறனாலும் ஆஹாரம் போட்டு ரசிக்கிறானே, அவன் மட்டும் ஏன் இப்படிக் குருவி கொரிக்கிற மாதிரி அல்பமாகச் சாப்பிட வேண்டும்? வந்து உட்கார்ந்த மூன்றாம் நிமிஷமே வெற்றிலைக்குச் சுண்ணாம்பு தடவ ஆரம்பித்து விடுகிறான்! இப்போது எழுந்திருந்து போகிறவன் கொஞ்சம் சிரம பரிகாரமாவது, பண்ணிக் கொள்வானா? மாட்டான். ஊர் பாடெல்லாம் கால்பாடாக இழுத்துப் போட்டுக் கொள்வான். தூக்கமா, அடியோடு கிடையாது. தனக்குத் தூங்கவே தெரியாது என்கிறான்! ‘தனக்குன்னு மநுஷாள் மக்கள் இல்லாம, கொழந்தை இப்படி ஆகாரமில்லாம, நித்ரையில்லாம…’ நினைத்து நினைத்து அழுவாள் தாய்.

அவர் சாப்பிடுவதாகப் பேர் பண்ணும் கண்றாவியைப் பார்க்கமாட்டாமல்தான், அவர் நாற்காலியில் அமர இவள் தரையிலே குந்தியிருப்பாள்.

இத்தனை துக்கத்தை வரவழைத்துக்கொண்டு இவள் அந்த போஜன அறைக்கு வராமலே இருக்கக் கூடாதா என்றால், தான் இப்படி வந்து கண்காணிப்பதால்தான் மகன் அந்த நாலு பிடியாவது சாப்பிடுகிறான் என்று அவளுக்கு எண்ணம்! தாய்மை தந்த பிரேமைப் பிரமை!

அதோடு, உலக காரியம், பக்தர் காரியம் இவற்றிலேயே முழுகிய ஸத்புத்ர மாணிக்கம் உணவுக்கு உட்காரும் இந்தச் சில நிமிஷங்களில்தானே அவளுக்குக் கிடைக்கிறான்? அதனால் தவறாமல் அச்சமயம் வந்து, தவறாமல் அழுதுவிட்டுப் போவாள்!

அழுதபடி அமரும் அம்மாவுக்கு இன்று அமரனிடம் புதிதாக எழுந்த தன் ஐயத்தைத் தெரிவிக்கத் தோன்றியது.

என்ன ஐயம்? அமரனுக்கு இன்னொரு லக்ஷணம் அஜரனாக இருப்பது அதாவது தெய்வ புருஷருக்கு மூப்பு வரக்கூடாது. (உள் மூப்பு, வெளி மூப்புக்களைப் பற்றி அவள் கண்டாளா?) அதனால் கேட்டாள்:

ஏன் ஸ்வாமீ, நீ உனக்கு ஜரையே (மூப்பே) வராதுன்னு சொல்லுவியே! இப்பப் பார்த்தா கொஞ்சம் கொஞ்சம் உன் தலையிலே நரை வராப்பலே இருக்கே…”

ஆம், அச்சமயத்தில், அதாவது ஏழெட்டாண்டுகளுக்கு முன், ஸ்வாமிக்கு சுமார் நாற்பத்தைந்தாவது வயதில், அநேக பக்தர்கள் இதைக் கவனித்திருக்கலாம். அது வரையில் ஆழ் கறுப்பாக இருந்த அவரது அடர்முடி அப்போது ப்ரௌனாக மாற ஆரம்பித்தது. “விரித்த செஞ்சடைஎன்பது இதைத்தானோ என்று வியந்திருக்கிறேன். இடையிடையே ஊதா, பச்சை முதலான சாயங்கள்கூடத் தோன்றியிருக்கின்றன. கண்ணன் வானவில்லின் வண்ண விசித்ரம் கொண்ட மயிற்பீலி சூடினானெனில் இவருக்கோ சூடமே எல்லா வர்ணமும் காட்டுகிறதே என்று வியந்ததுண்டு. அவற்றிடை வெள்ளி இழைகளும் ஒன்றிரண்டு கண்டதுண்டு. ‘தமக்கு நரை திரை இல்லை என்று ஸ்வாமி சொல்வதை பௌதிகமாகப் பொருள் கொள்ளக் கூடாது. வானவரைப் போல பூர்வகால அவதாரர்களான ராம, கிருஷ்ணாதியருக்கு ஜரை ஏற்படாவிடினும், நவகாலத்தில் அவதரித்தவர்களான ரமணர், ராமகிருஷ்ணர், ஷீர்டி ஸாயி, காஞ்சிப் பெரியவாள் முதலானோர் மூப்பும் உற்றுத்தானே இருக்கிறார்கள்? ஸ்வாமியும் இப்படியே ஆகலாம் என்று எண்ணியிருக்கிறேன்.

இது விஷயமாகத்தான் அவரிடமே கேட்டாள் அன்னை. “உன் தலையில் நரை வராப்பலே இருக்கே!” என்று அவள் சொல்ல,

ஸ்வாமி, “அப்படியா? நரையா இருக்கு? எங்கே பாருஎன ஸாதாரணமாகக் கூறியபடி நாற்காலியிலிருந்தவாறே முகத்தை நன்றாகக் குனிந்து அம்மாவின் முன் கேசத்தை விரியவிட்டார், குலுகுலுவென்று.

கேசவரின் கேச பாரம் கொந்து கொந்தாக அப்படியே அம்மாவின் முன் பரவியது.

என்ன ஆச்சரியம்! ஒரு வெள்ளி மயிரில்லை! செம்பட்டை, பச்சைச்சாயல், ஊதா எதுவுமில்லை! முன் போலக் கறுப்பாகாமல், முன்னை விடவும் வெல்வெட் கறுப்பில் வெண்ணெய் பூசினாற்போல் கார் குழலாகி விட்டிருக்கிறது! அம்மாவுக்குக் குழந்தையாகத்தான் பார்க்கப் பிடிக்கும் என்பதால் முதுமை அறிகுறியை அடியோடு போக்கிக் கொண்டுவிட்டார் போலும்!

அந்தக் கணத்திலிருந்து அப்படியே நிலைத்து விட்டது ஐயன் குந்தளத்தின் கன ச்யாம வண்ணம். அவரது ஸுந்தர ரூபத்துக்கு முடி சூட்டினாற்போல் அமைந்த முடியின் கருமையழகு ஈச்வரம்மாவால் நம் எல்லோருக்கும் மீண்டும் கிட்டியுள்ள அழகுப் பிரஸாதம். அதற்காகவே அவளை நமஸ்கரிக்கலாம். தைலம் வைக்கும் விஷயமாக அன்னை மகவுக்கு ஏற்பட்ட பிணக்கைக் குறித்துச் சுணக்கம் கொண்ட நம் மனத்துக்கு இந்த நிகழ்ச்சி இதமாக இருக்கிறதல்லவா? தாய்க்காக க்ஷணகாலத்தில் தம் கேசத்தை மாற்றிக்கொண்டதில் கருமையே ஸத்வகுண அருமையாகிறது!

***

ரவு வெகு நேரமாகி விட்டது.

பிரசாந்தி நிலயத்தில் ஸ்வாமி அறை உள்பட எங்கும் விளக்கணைத்தாகிவிட்டது.

அத்தனை லேட்டாகத்தான் அன்று வெளியூர் பஸ் ஒன்று புட்டபர்த்திக்கு வந்தது. ஒவ்வொரு விநாடியும் ஒரு யுகமாக வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு அந்த பஸ்ஸில் ஒரு பெற்றோர் வந்தனர். நோயுற்ற தங்கள் குழந்தையின் பொருட்டே அவர்கள் பர்த்திப் பயணம் மேற்கொண்டது. போதாத காலம், பயணத்தின்போதே அச் சிசுநெடும் பயணத்துக்குத் தயாராகி விட்டது!’

குற்றுயிரான குழந்தையுடன் பெற்றோர் பிரசாந்தி நிலயத்தில் பிரவேசித்தனர். ஆனால் அந்த நடு நிசியில் என்ன செய்வது? பாபா தூங்குவதில்லையாயினும், தாம் விழித்துக் கொண்டிருப்பதாகத் தெரியும் வரையில் பக்தர்களும் படுக்கப்போகமாட்டார்கள் என்பதால் பத்து மணிக்குத் தம் அறை விளக்கை அணைத்துவிட்டு, அதன்பின் வெளி வரமாட்டாரே! நாளை காலை அவர் தரிசனம் தரும்வரை கால பாசம் குழந்தையை விட்டு வைக்கும் என்று சற்றும் நம்புவதற்கில்லையே!

என்ன செய்யலாம்?’ என்று புரியாமல் அசாந்த மனத்தினராகப் பிரசாந்தி மந்திரத்தைப் பிரதக்ஷிணம் செய்ய ஆரம்பித்தனர் அந்தப் பெற்றோர்.

மந்திரத்தின் பின்புறம் வலம் வருகையில் ஈச்வரம்மாவின் குடிலைக் கண்டதும் அவர்களுக்கு ஏதோ ஒரு வேகம் வந்தது.

சிசுவைத் தூக்கிக்கொண்டு அங்கே ஓடி, “அம்மா, அம்மா!” என்று அழைத்தார்கள்.

ஈச்வரம்மாவும் சிணுங்காமல் சுணங்காமல் என்னவென்று விசாரித்தாள்.

குழந்தை குணமாவதற்காக வந்தோம். ஆனால் வந்த இடத்தில், ஸ்வாமியைப் பார்க்குமுன்பே நேரக் கூடாதது நேர்ந்து விடுகிற நிலைக்குக் குழந்தை வந்து விட்டது. தாயே, நீதான் எப்படியாவது பகவான் கடாக்ஷம் இதன் மேல் படும்படியாகப் பண்ண வேண்டும்ஈச்வரம்மாவை வேண்டினர் பெற்றோர்.

இதுமாதிரி விஷயங்களில் இதுவரை அம்மா தலையிட்டதேயில்லை. தலையிட்டால் தலைவனிடம் எடுபடாது என்றறிவாள்.

ஆனால் இன்று, இந்த வேளையில், பெற்ற உள்ளங்கள் இரண்டு பரிதவித்து, மூச்சொடுங்கும் ஒரு குழந்தையை முன்னே கொண்டு வந்து போட்டபோது, அவளுக்கு ஓர் அதிசய வேகம் வந்துவிட்டது.

தன்னுடைய பெற்ற தாய்த்துவம் அவளுள் பூரித்தது. அதிலே ஸ்வாமி ஸாயி பாபா குழந்தை ஸத்யா ஆனார்.

அவர்களை அழைத்துக்கொண்டு பிரசாந்தி மந்திரத்தின் அருகே வந்தாள்.

ஸத்யா!” என்று பெரிதாகக் குரல் கொடுத்தாள்.

ஸ்வாமி என்றே அழைக்கிறவள் இன்று ஸத்யா எனக் கூப்பிட்டாள்!

பிரசாந்தி நிலயம் கேட்டறியாதஸத்யாஎன்ற விளிவாசகம் இரவின் மௌனத்தைக் கிழித்துக்கொண்டு தாபக் கனிவோடு பரவியது.

அந்த விநாடியே மாடியறையில் விளக்கு மின்னியது.

மின்னலாகக் கீழே வந்து நின்றார் இன்னல் தீர்க்கும் கன்னலர்.

பரம்பொருள் தனது உயர்வற, உயர்நல உச்ச நிலையிலிருந்து கீழே நம் மட்டத்துக்கு இறங்கி வருவதற்குத்தான் அவதாரம் என்றே பெயர். எவள் வயிற்றிலிருந்து அவதரித்தானோ அவளுக்காக இப்போது ஜடுதியில் ஒரு குட்டி அவதரணம் புரிந்தான்!

கன்றின் குரலைக் கேட்டுக் கனிந்து வரும் பசுவாக இன்றி பசுவின் குரலைக் கேட்டுக் கனிந்து வரும் கன்றாக அன்னையிடம் வந்து நின்றார்.

என்ன அம்மா, என்ன வேணும்?” என்று பரிவு பொங்கக் கேட்டார்.

ஈச்வரம்மா தயக்கமில்லாமல் கணீரென்று சொன்னாள். பக்தையாகப் பிரார்த்திக்காமல் தாயாராக அழுத்திப் பேசினாள். “நீ என்ன பண்ணுவியோ, ஏது பண்ணுவியோ? கர்மா, அது, இதுன்னெல்லாம் சொல்லாம, இந்தக் குழந்தைக்கு நீ உயிர் கொடுத்தாகணும்.”

, அப்படியே!” என்று மறு பேச்சில்லாமல் ஒப்புக்கொண்டார் ஐயன், மாதாவுக்கு அடங்கிய மதலையாக.

விபூதி ஸ்ருஷ்டித்துக் குழந்தைக்குப் பூசினார்.

அப்புறம் கேட்பானேன்? குமுகுமு என்று அதற்குள் பிராணசக்தி வியாபித்தது!

தந்தை சொல் மிக்க மந்திரமில்லைஎன்பதைஅன்னை சொல் மிக்க மந்திரமில்லைஎன்று ஆக்கி நம் பகவான் மாத்ரு வாக்ய பரிபாலனம் செய்த இந்த நிகழ்ச்சி அதி மாதுரியமில்லை?

***

1972ம் ஆண்டு, மே மாதம்.

ஸ்வாமி பிருந்தாவனத்தில் முதல் ஸம்மர் கோர்ஸ் நடத்துகிறார்.

அன்னையையும் உடன் அழைத்து வைத்துக் கொண்டிருக்கிறார்.

அவளுக்குப் பெருமையான பெருமை! இதுவரை தன் குமாரச் சக்ரவர்த்தி நடு நாயகமாகத் திகழ்ந்த எத்தனையெத்தனையோ விழாக்களைப் பார்த்தவள்தான் அவள். இருந்தாலும் இந்தக் கோடைப் பயிற்சி முகாமில் இத்தனை மாபெரும் பேராசிரியர்களும், பண்டிதர்களும், வெள்ளையர்களும் ஸ்வாமியைக் கொண்டாடுவதைப் பார்த்து அவளுக்கு ஏகப் பூரிப்பு. உடனிருந்த பஜனைப் பெண்டிரிடம், “ஸ்வாமி மஹத்வம் இப்பத்தான் எனக்கே புரியறது. பள்ளிக்கூடப் படிப்பிலே ஸ்வாமி பத்தாவது கூடப் பாஸ் பண்ணலை. ஆனா இன்னிக்கு ரொம்ப ரொம்ப படிச்சவங்க சொல்றதுக்குமேலே அவரேதான் சொல்றார்னு அவங்களே திரும்பத் திரும்பச் சொல்லிக் காது குளிரக் கேட்டுட்டேன். தினம் அவங்க பண்ணற லெக்சரையெல்லாம் சேர்த்து, அதுக்கும் மேலே ஒரு படி போய் உபந்நியாஸம் பண்ணறதாகக் கொண்டாட நாங்களே!” என்று பிடிபடாத பெருமை கொண்டாள் சான்றோன் எனச் சான்றோரே சொல்லக் கேட்டு ஈன்ற பொழுதில் பெரிதுவந்த தாய்!

என்ன லெக்சர் அடிச்சிண்டிருக்கே? இன்னிக்கு என்ன லெக்சர்லாம் கேட்டே? சொல்லு, பார்க்கலாம்என்று அவளிடம் வந்து வாயைக் கிண்டுவார் ஸ்வாமி.

இப்படி ஐந்து நாட்கள் ஆனந்தமாகப் போயிற்று. தன் பிள்ளை அருளாளன் என்று முன்னரே முற்ற அறிந்திருந்த அன்னை, அவன் அறிவாளிகளெல்லாம் போற்றும் அறிவாளன் என்றும் தீரத் தெளிந்து மனம் நிறைந்து விட்டாள். அவளை இப்படி நிறைவிப்பதுதானே ஐயன் உத்தேசம்?

அம்மா நாற்காலியில் உட்கார்ந்து பக்தையருடன் உரையாடிக் கொண்டிருப்பதைக் கண்ட பகவான், “என்ன, ஸிம்மாஸனத்திலே ஆரோஹணிச்சுண்டூட்டியா?” என்று மலர்ந்து கேட்டுக்கொண்டே போனார்.

அவர் வாய் முஹூர்த்தம், அந்த மே ஆறாம் தேதி, ஈச்வரம்மா சரீர யாத்திரையை அநாயாஸமாக முடித்து, ஸ்வர்க்காரோஹணம் செய்துவிட்டாள்!

உலகின் ஆரோஹணத்துக்காகவே அவரோ ஹணம் செய்ய எந்த உடலில் பத்து மாதம் குடியிருந்தாரோ அதற்குரிய உயிரை அவர் உச்சகதிக்கு அனுப்பாதிருந்திருப்பாரா?

***

பெற்ற தாய் ஈச்வரி ஸ்வாமியிடம் ஸ்வாதீனமாக இருந்ததை விடவும் அழகு, வேறு சில தாய்மார்கள் அவரிடம் பாராட்டிய பாத்தியதை. ஆதியில் கர்ணம் மனைவி ஸுப்பம்மா. அந்தப் பரம உத்தமி பற்றிஸ்வாமியில் நிறையச் சொல்லியிருக்கிறேன்.

ஸுப்பம்மாவின் சக்களத்தி கமலம்மாவும் ஸ்வாமிக்கு மாறு அறியாத ஒரு மாற்றாந்தாயாக அன்பு செய்து, அன்பு பெற்றவளாவாள்.

ஸத்ய ஸாயியாக அவர் ஆன பதிநாலாம் பருவத்திலிருந்து பல தாய்மார்கள் வாய்த்திருக்கிறார்கள். கண்ணனுக்கு யசோதை ஒரே வளர்ப்புத் தாய் எனில், ஸ்வாமியால் வளர்க்கப்பட்ட தாயர் அநேகர்!

ஸாகம்மாவில் ஆரம்பம். துரதிருஷ்டவசமாக ஸாகம்மா பேகம்மாவாகக் கதையை முடித்துக் கொண்டாள். ஆனால் பூர்வத்தில் அவள் ஸ்வாமிக்குப் பார்த்துப் பார்த்து அருமை பெருமை செய்தது சொல்லத்தரமன்று.

பெத்த பொட்டு, நரஸம்மா இவர்களும் அவரது பிள்ளையன்புக்குப் பாத்திரமானவர்கள். ஆனால் இவர்கள் பொதுவாக அடங்கியே இருப்பார்கள்; அவரிடம் ஸ்வாதீனமாகப் பழகமாட்டார்கள். ஸ்ரீ கஸ்தூரியவர்களின் தாய் ஜானகியம்மாள் பக்தி, பற்றுரிமை இரண்டுடனும் ஸ்வாமியிடம் பழகியவர்களில் ஒருவர். ஹைதராபாத்தைச் சேர்ந்த செல்வமிக்க மூதாட்டி ஒருத்தி ஸ்வாமியை இன்றைக்கும்அவன், இவன்என்று ஏக வசனத்தில்தான் சொல்வாள். மரியாதைக் குறைவாகவே தெரியாது. ஆண்டாண்டுகளுக்கு முன்பிருந்து ஆண்டவனிடம் அன்னையாகப் பழகிய அன்பே அதில் தெரியும். தற்போது ஜாம்நகர் ராணி ஜாம்ஜாமென்று ஸ்வாமிக்கு மாத்ரு ஸ்தானத்தில் திகழ்கிறார்.

ஒயிட்ஃபீல்டில் ஒரு பெரிய ஹாஸ்டலே கட்டிக் கொடுத்திருக்கிறாளே, அந்தக் கிழவி எல்ஸீ கவனும் பகவனும் பழகுவதைப் பார்த்தால் தாயும் சேயுமாகத்தான் இருக்கும். ஒரு விழாவுக்கு வந்து கொண்டிருக்கும்போதுஎல்ஸீயின் சால்வை கீழே விழ, ஸ்வாமியே குனிந்து அதை கொடுத்து அவளுக்குப் போர்த்திவிட்டார்!

இவளது கணவர் வால்டர் கவன் 1971ம் ஆண்டு அறிவது கிறிஸ்துமஸ் தினத்தில் சென்னையில் மரித்தேவிட்டதாக எண்ணப்பட்டபோது ஸ்வாமி அவருக்குப் புனர்ஜீவன் தந்து பத்தொன்பது மாதங்களுக்குப் பிறகு தம்மிடம் ஐக்கியம் செய்து கொண்டது ஸாயி பக்தர்கள் நன்கறிந்த கதை அச்சமயத்தில் அவருக்குத் தாம் உயிர்ப்பிச்சை போட்டதற்கு ஒரு காரணமே எல்ஸீயிடம் தமக்குள்ள பரிவுதான் என்று ஸ்வாமி தெரிவித்திருக்கிறார். தன்னுடைய வயோதிக காலத்தில், எங்கோ வெளி நாட்டுக்குச் சென்ற இடத்தில் கணவரைப் பறிகொடுத்துவிட்டு, பிரேதத்தை எடுத்துக்கொண்டு தாய்நாடு திரும்புவதென்றால் எல்ஸீ எப்படி ஆடிப் போயிருப்பாள் என்பதைக் கருதியும் வால்டருக்கு புனர் வாழ்வு தந்ததாகச் சொன்னார்.

எல்ஸீ குறித்து ஒரு ரஸமான நிகழ்ச்சி பக்தியின் பல ரஸங்களில் வாத்ஸல்யம் என்பது ஜீராவாகச் சொட்டுவதாகும்.

ஐந்தாண்டுகளுக்கு முன் ஒரு நாள் ஸ்வாமி பிருந்தாவனத்தில் அணுக்க அடியாரிடம் உரையாடிக் கொண்டிருக்கையில் ஒரே பிரம்மமே புருஷபிரகிருதி அல்லது சிவசக்தி என்று இரண்டாவதையும், இந்த சக்தி பிரம்ம, விஷ்ணு, ருத்ரர்களிடம் ஸரஸ்வதி, லக்ஷ்மி, பார்வதி என்றாவதையும் பற்றி உபந்யஸித்தார்.

முடிவாக, “பக்தி பாவத்தில் இப்படியெல்லாம் பிரித்துச் சொன்னாலும் இந்த அனுபவத்தோடு நின்றுவிடக் கூடாது. இந்த எல்லா சக்திக்கும் ஆதாரமான ஏகப் பிரம்மமே நாம் என்பதை உணர்வதுதான் நம் லக்ஷ்யமாக இருக்க வேண்டும். இதுதான் உண்மையில் உண்மை. உங்கள் அனைவருக்குள்ளும் ஒரே கடவுள் தான் இருக்கிறார். கடவுள்தான் எல்லாமும். நீங்கள் எல்லோருமே அந்தக் கடவுள்தான்என்றார்.

பாபாவைப் பரமாத்மனாகவும் நம்மை ஜீவாத்மனாகவும் பிரித்து வைத்துப் பரமப் பிரேமையுடன் பக்தி புரிவதிலேயே நிறைவு காணும் எல்ஸீ கவனுக்கு இந்த அத்வைதம் சகிக்கவில்லை! நாமும் கடவுள் என்று உணர்ந்தால் பாபாக் கடவுளை எப்படி பக்தி புரிவது? அதனால், நாம் அனைவருமாக ஆகியிருப்பது அவர் ஒருத்தர்தான் என்பது. மெய்யே ஆயினும் அதை அவர் மட்டுமே தெரிந்து கொண்டு கடவுளாக இருக்கட்டும்; தெரிந்து கொள்ளாத பக்தர்களாகவே நாம் இருப்போம் என்று எண்ணினாள். பகவத் சக்தி முழுதையும் பாபாவிடமே கண்டு, அதற்கு நாம் (அவர் விரும்பும் அத்வைதப்படி) ஸமதை கோராமல் அடங்கித்தான் கிடக்க வேண்டும் என்று எல்ஸீ எண்ணியதே அவளுடைய தாயுரிமையில் அதிகார வாசகமாக விசித்ர பரிணாமம் அடைந்தது! ஸ்வாமியை நேர நெடுக நோக்கி அவள் அழுத்தம் திருத்தமாகச் சொன்னாள்: “நீங்கள் தான் எல்லாமும்! இதையே திருப்பி எங்களிடம் சொன்னீர்களோ, தெரியும் சேதி!” (“You are the all! Now don’t answer back!”)

ஆஹாஹா! ஆனானப்பட்ட ஸ்வாமியிடம் ஒருவர் இப்படி அதட்டிப் பேசுவதா?’ என்று அதிர்ந்து ஐயனது முகத்தைப் பார்த்தால், அவரது செவ்வதரத்திலே எல்ஸீயின் அன்பதிகாரத்தை ரஸிக்கும் அரைச் சிரிப்பு அலையோடுகிறது!

***

மாதுஸ்ரீ நாகமணி பூர்ணையாவைப் பற்றி ஸாயி பக்தர்கள் நிறைய அறிவர். “அம்மா! நீ பழுத்த பழமாக ஆவாய். அப்போ உன்னை நானே பறிச்சு முழுங்கிடறேன்என்று பாபா இந்த அம்மாளிடம் சொன்னதைஸ்வாமியில் குறிப்பிட்டிருக்கிறேன். சென்ற ஆண்டு (1978) ஸ்வாமி அவளைமுழுங்கிவிட்டார்!

அதற்கு முன் அவள் பழுத்த பழமாகிவிட்டாள் என்பதையும் சந்தேகமறக் கண்டேன். மாதக் கணக்கில் இப்படி அப்படி நகர முடியாமல் அவள் பாரிசவாயுவுற்றுக் கிடந்தபோதும் ஸ்வாமியிடம் குறைப்பட்டுக் கொள்ளவில்லை. ஆதியில் தன் வீட்டிலேயே கிடந்து கொட்ட மடித்தவர் இன்று எட்டமாகிவிட்டாரே என்று குற்றம் சொல்லவில்லை. அவரது ஆதி லீலையையே தன் அந்திமம் வரை நினைத்து, அந்த நினைப்பிலேயே அது இன்றும் நனவாக நடப்பது போல உவகையுற்று வந்தாள். நா இழுத்துப்போன நிலையிலும் நாதன் புகழைக் கோணக் கோணச் சொல்லிப் பூரித்தாள். தேகத்தில் எல்லையற்ற வேதனையிருந்தபோதும் நாதனின் திருவிளையாடல்களை நினைவுகூர்ந்து கலீர் கலீர் என்று சிரித்தாள்.

அந்தப் பாட்டியினுடையதைப் போன்ற ஒரு குழந்தை உள்ளத்தை அபூர்வத்திலும் அபூர்வமாகத்தான் பார்க்க முடியும்.

பாட்டியிலேயே குழந்தை; அதன் அரும்புத் தன்மையிலேயே பழுத்த பழம்! இந்தக் கனிந்த கனியை ஸ்வாமி தமக்குள்ளேதான் அடக்கிக்கொண்டிருப்பார்; ஸ்ரீமதி பூர்ணையாவுக்கு பூர்ணத்வம் தந்திருப்பார்; ஐயமில்லை.

இந்தக் குழந்தைக்கும் குழந்தையாக இருந்திருக்கிறார் பாபா.

வாத்ஸல்யம் என்ற பக்தி மார்க்கப்படி அநுபவ பர்வதங்களான சுகரும், லீலாசுகரும், பேயாழ்வாரும், கவிச்செல்வரான பாரதியும்தான் பகவானைச் சுவைக்க முடியுமென்பதில்லை. ஸாதாரண மக்களான நாகமணி போன்றோருக்கும் அது சாத்தியம்தான். அன்பினால் கைகூடாதது எது?

முப்பதாண்டுகளுக்கு முன் முல்லைக்கொடியாக இருந்த இளசு பாபாவுக்கு நாகமணி பட்டுப் புடவை கட்டி, ஒட்டியாணமும் காசுமாலையும் போட்டு, நெற்றிக்குக் குங்குமமிட்டு அலங்காரம் பண்ணி அழகு பார்த்திருக்கிறாள்.

அவரது இண்டைச் சடையை இண்டு இடுக்கின்றி வாரிச் சீவிச் சிங்காரித்திருக்கிறாள்.

சாப்பிடாமல் அடம் பண்ணுவார் குழந்தை ஸ்வாமி. “கதை சொன்னால்தான் சாப்பிடுவேன்என்பார்.

கணவர் பூர்ணையாவுடன் தான் ஐரோப்பாவுக்குப் போய் வந்த கதைதான் குழந்தைக்குப் பிடித்தமானது என்று அவளுக்குத் தெரியும். பலமுறை அதையே சொன்னதால் அவளுக்கு அலுப்பாக இருக்கும். ஆனால் ஸ்வாமிக் குழந்தைக்கு அது அலுக்கவே அலுக்காது. அதிலும் ஸ்விட்ஜர்லாந்தில் சிகரத்துக்குச் சிகரம் கிடு கிடு பள்ளத்தின் மேலே, ஒற்றைக் கம்பியில் நகரும் ஊர்தியில் அவள் சென்றபோது பட்ட பாட்டைச் சொல்லும்போது, “இன்னம் சொல்லு, இன்னம் சொல்லுஎன்று ஒவ்வொரு முறையும் அவர் வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரிப்பதும் கைகொட்டிக் குதூஹலிப்பதும் உண்டே! அப்போதுதான் முதல் முறை கேட்பதுபோல் எத்தனாவதோ முறை கேட்கும்போதும் அல்லோல கல்லோலப்படுத்துவார். பழைய நினைவால் விஷயங்களை வாட விடாமல் அவ்வப்போதும் புது மலராக அநுபவிக்கும் குழந்தைத்தன்மை பற்றி ஸ்ரீ ஜே. கிருஷ்ணமூர்த்தி சொல்லும் தத்வத்துக்கு மூர்த்தியாக இப்படி ரஸித்தார் பகவான்.

நாகமணி அவதிப்பட்ட கதைகளாக, அவஸ்தைப்பட்ட கதைகளாகக் கேட்டுக் கேட்டுச் சிரித்து மகிழ்ந்தார். ‘ஸாடிஸம்அல்ல, வாசக பக்தர்களே! அவளதுஸாட்னெஸ்யாவும் போக்கிய மாய விநோதமே! இதன் பலன்தான், இறுதியில் அவள் அவதியும் அவஸ்தையும் பட்டபோது, தானே சிரித்துச் சிரித்து மகிழ முடிந்தது!

கடைசிக் காலத்தில் ஸ்வாமி அவளுக்கு ஸ்தூலத்தில் மிகக் கிட்டியவராக இல்லைதான். ஆனால் அவளை என்றும் மறக்காமல் தம் இதயத்தில் வைத்துக் கொண்டிருப்பதற்கு அடையாளங்கள் காட்டிக்கொண்டேயிருந்தார். அதிலேயே அவளும் பொங்கி மகிழ்ந்தாள்.

பொன்விழாவின் பல அலுவல்களுக்கிடையே, பெங்களூரிலிருந்த அம்மாளுக்குப் புட்டபர்த்தியிலிருந்து பகவான் எழுதிய கடிதத்தை ஒவ்வோர் அக்ஷரமும் அன்பில் முக்கியெடுத்து வரைந்த லிகிதத்தை பெருமை பெருமையாக அவள் படித்துக் காட்டியதுண்டே!

நடமாட முடியாத நிலையிலும் ஜயந்திக்குப் புட்டபர்த்தி சென்றாள் நாகமணி. தள்ளுவண்டியில் மாலையும் கையுமாக உட்கார்ந்திருந்தாள். லக்ஷோபலக்ஷம் ஜனங்களுக்கிடையே அவளை ஸ்வாமி தேடி வந்து ஹாரத்தை வாங்கி அணிந்து கொண்டார்.

இன்னொரு கடிதம் அவளுடைய இறுதிக்குச் சிறிது காலம் முன்பு ஸ்வாமி எழுதியிருந்தார். ஒரு குறிப்பிட்ட தினத்தன்று இரவு இத்தனை மணிக்குத் தாம் அவளது வீட்டுக்குக் காரில் வந்ததாகவும், அப்போது வீட்டு விளக்கெல்லாம் அணைத்திருந்ததாகவும், பன்முறை ஹார்ன் செய்தும் யாரும் எழுந்திருக்காததால், அலுத்துத் தூங்கும் அவளை ஆயாஸப்படுத்த வேண்டாமென்று தாம் திரும்பிவிட்டதாகவும், அவளை ஒருபோதும் மறவாமல் ஆசீர்வதிப்பதாகவும் அக் கடிதத்தில் ஸ்வாமி கூறியிருந்தார்.

நாகமணியின் தாதி இந்தத் தெலுங்கு வாசகங்களைப் படித்து எனக்குத் தமிழ்ப்படுத்திச் சொல்லும்போது நெஞ்சுருகி, கட்டிலிலிருந்த அம்மாளைப் பார்த்தேன். உருக்கத்தில் அவள் ஆறாகக் கண்ணீர் விடுவாள் என்று எதிர்பார்த்தேன்.

ஆனால் அவளோ பீங்கான் பாத்திரங்கள் மோதிக் கொள்வதுபோன்ற, தனக்கே உரிய கலீர்ச் சிரிப்பொன்றைச் சிரித்து, “புளுகு, புளுகு! வந்தாராம், லைட் இல்லையாம், ஹார்ன் பண்ணினாராம், யாரும் எழுந்திருக்கல்லியேன்னு போயிட்டாராம்! அத்தனையும் பொய்! ஸ்வாமி அங்கே வாசல்லே நின்னா இங்கே எனக்குத் தூக்கம் வந்திருக்குமா? என் திருப்திக்காகக் கதை கட்டியிருக்கார்!” என்றாள். மீண்டும் விழுந்து விழுந்து சிரித்தாள் ஸ்வாமியின்புளுகைஎண்ணி!

இவளிடம் புளுக அவருக்கு ஸர்வ உரிமையும் உண்டுதான்! அவர் புளுகாமல், நிஜமாக இவளுடைய வீட்டுக்கு வந்திருந்தால்கூட, ‘தேடி வந்த தெய்வத்தை உபசரிக்காமல் விட்டேனே!’ என்று மன்னிப்புக் கேட்காமல், அவர் சொல்வதே புளுகு என்று அடித்துச் சொல்ல இவளுக்கும் ஸகல ஸ்வதந்திரம் உண்டுதான்! அன்பு என்ற பரம ஸத்யத்தைப் பரஸ்பரம் புரிந்து கொண்டவர்களல்லவா?” என்றெண்ணிச் சிலிர்த்தேன்.

இவள் சொன்னாற்போல் ஸ்வாமி மெய்யாலும் வராமலே புனைந்துதான் கூறியிருக்கட்டும், கோடி அலுவலுள்ள பெருமான் இப்படியொரு கதை கட்டி, அதைத் தமது முத்தெழுத்திலேயே பக்கம் நிறைய எழுதி, பக்ஷம் நிறைய ஆசி கூறுகிறார் என்றால் அதுவே அவர் நேரே வருவதற்கு ஸமமான பிரேமாநுக்ரஹம்தானே?

கை கால் வழங்காமற் போன பிற்பாடும் காரிலே நாகமணி ஒயிட்ஃபீல்டுக்குப் போவதுண்டு. அவளைத் தள்ளு வண்டியில் வைத்து ஏனைய நோயாளியரோடு பக்தரின் கூட்டத்துக்குக் கொண்டுவர பாபாவின் பிள்ளை மனம் அனுமதிப்பதில்லை. (இந்தப் பிள்ளை மனம் கல் அல்ல, கல்கண்டேயாகும்.) அதனால் அவளைக் காரிலேயே வைத்திருக்கப் பணித்தார். தரிசனம் தரத் தாம் வரும்போது நேரே அந்தக் காருக்குத்தான் செல்வார். கதவைத் திறந்து கொண்டு அதற்குள் தம் பாதி உடம்பை நட்டுக்கொண்டு அம்மாளிடம் அளவளாவுவார்.

தூரத்திலிருந்து பார்க்கும்போதே தந்தக் குச்சி போல், ஒரு கிழவி, அவள் எதிரே தங்கக் கையை ஆட்டி ஆட்டி ஏதோ சொல்லும் செவ்வங்கிச் சேய் இருவரையும் எட்டத்தில் காணும்போதே நெஞ்சுக்குள் ஏதோ ஒன்று கரையும், கண் நிறையும். இத்தனைக்கும் பகவானும் பக்தையுமாக அவர்கள் தெரியாமல் ஒரு தாயும் பிள்ளையுமாகத்தான் தெரிவார்கள்.

அநேக முறை இப்படி உரையாடுகையில், உறவாடுகையில் அவளுக்கு விபூதி ஸ்ருஷ்டித்துக் கொடுத்திருக்கிறார்.

ஒரு தரம் அவர் அங்கியைத் தள்ளிக்கொண்டு அங்கையைச் சுழற்றியெடுத்து அவள் கையில் அருமையாகப் போட்ட வஸ்துவைப் பார்த்த நாகமணிக்குச் சிரிப்பு வந்தது.

அது குன்றிமணிக்குச் சற்றே பெரிதான ஒரு சின்ன வெல்ல உருண்டை!

கிலுங் கிலுங் என்று தன் பீங்கான் சிரிப்பைச் சிரித்து ஸ்வாதீனமாகக் கேட்டாள்: “என்னா ஸாமி! உலகத்துக்கெல்லாம் அள்ளிக் கொடுக்கிற உங்க ஸாயி ஸ்டோர்ஸிலே பஞ்சம் வந்துடுத்தா?”

பகவான் அதற்குப் பதில் சொல்லாமல் விகாஸமுடன், “சும்மா ஜமாய், நாகமணிபாய்!” என்றார்.

வெல்லத்தை வாயிலிட்டுக்கொண்டு அன்பு வெல்லத்தைச் சுவைத்தாள் ஸ்படிகம் போன்ற அந்த அம்மை. நாகத்தின் மணியான ரத்தினச் சிவப்பாக ஸ்வாமியின் அன்பை எப்போதும் பிரதிபலித்த ஸ்படிகம் அது!

***

குழந்தையின் தெய்விகத்தை, தெய்வத்தின் குழந்தைத்தன்மையை நன்கு உணர்ந்து நயம்பட உரைத்த ரவீந்திரரின் வாக்கோடு இந்த அத்தியாயத்தைப் பூர்த்தி செய்யலாம்:

குழந்தைத் தேவதை

எல்லோரும் கூசலிடுகிறார்கள், பூசலிடுகிறார்கள், ஐயுறுகிறார்கள், நம்பிக்கையற்று நைகிறார்கள். தங்களுடைய சர்ச்சைச் சளசளப்புக்கு அவர்கள் முடிவே கண்டாரில்லை.