ஆனந்தமாயிருக்கிறது ஸ்வாமீ!
மறுபடியும் உன்னைப் பற்றி எழுதுகிறேன் உன் அநுமதியால், அநுக்ரஹத்தால்.
இதைவிட ஆனந்தம் என்ன உண்டு?
கன்றுக்குட்டி தாய்ப் பசுவிடம் வந்து உராய்ந்து நிற்கிறது. கன்றுக்கு மட்டுமா அதில் ஆனந்தம்? காமதேதுத் தாய் நீயும் உவகை கொள்கிறாய்.
வரிகுழல் ஆட, விரி நயனத்தில் பிரேமை வரியோட, வெற்றிலைவாய் திறந்து,1 உனக்கே உரிய, “எப்ப வந்தாச்சு?” கேட்டு வரவேற்கிறாய்.
‘சமர்த்தாக என்னிடம் வந்துவிட்டாயே!’ என்கிற ஸந்தோஷமும் பாராட்டும் அந்த இரு வார்த்தைகளிலேயே தொனிக்கிறது.
அவ்வளவுதானா? “எப்ப வந்தே?” என்னாமல் “எப்ப வந்தாச்சு?” என்று ‘ஆச்சு‘ போடுவதில் தாயே குழந்தை மாதிரி ஆகிறாய்.
அந்த ‘ஆச்சு‘விலேயே பரம தாத்பரியமும் உள்ளிலகுகிறது. உன்னிடம் வந்தவுடனேயே நாங்கள் ‘ஆகி‘ விடுகிறோம் அதாவது, அற்றுப் போய் உன் மயமாகி விடுகிறோம் என்றும் தொனிக்கிறது.
2ஸ்வாமி தாம்பூலம் தரித்து வந்த காலத்தில் எழுதியது.
ஆயினும் நீ மட்டும் தனியொன்றாய் நின்றால் லீலை ஏது? பிரேமையைப் பொழிவதற்கு இடமேது?
அதனால் தாய்ப் பசுவான உன்னிலிருந்து, உன் தன்மைகளோடேயே பிறந்த கன்றுகளாயினும் ஒரேயடியாக ஒன்றி விடாமல் ஒட்டி நிற்கிறோம். ஆனந்…தமாக உன் அனந்த லீலைகளை, அலகிலா விளையாடல்களை ஆர ரஸித்த வண்ணம்.
நீ புனையும் லீலா நாடகத்தில் ஏராள அங்கங்களைத் தொகுத்து “ஸ்வாமி” என்ற உன் சரிதமாக, எங்கள் சரிதமாக, கருணையின் சரிதமாக மாலையாக்கி 1976 நவம்பர் தொடக்கத்தில் பூர்த்தி செய்து உனக்குச் சூட்டினேன்.
அதன்பின் 1979 ஜூலை வரை இரண்டரை ஆண்டு இடைவெளியில் நான் அறிய வந்த உனது புதிய பல லீலைகளைப் புகலுவதற்காக இப்போது உன் பக்கத்தே என்னை வருவித்துக் கொண்டிருக்கிறாய். உன் ஸங்கல்பத்தாலேயே உன்னிடம் வருவோரையும் தன்னால் வந்ததாக உயர்த்தி சிலாகிக்கும் சீலத்தால், “எப்ப வந்தாச்சு?” கேட்பதுதானே உன் வழக்கம்? அவ்விதமே இப்போதும் வினவுகிறாய்.
“வந்தது இருக்கட்டும். இனி என்றும் உன்னை நீங்காது தங்குவதாகட்டும்” என்று மனத்தில் பிரார்த்தித்துக் கொண்டே உள்மனத்தையும்தான் நீ அறிவாயே! இந்தப் பூக் குச்சத்தை உன்னிடம் ஸமர்ப்பிக்கிறேன்.
முன்னே “ஸ்வாமி”யை நீண்ட நெடும் நிலமாலையாக உன் கேசாதிபாதம் சூட்டினேன். உன் லீலா நாடகங்களை ஏராளமானவர் அறிந்து உயர்வு பெற வேண்டும் என்ற கருணையால், இனி அவ்வளவு பெரிய நிலமாலையாக இன்றி ஒரு சில ஆண்டுகளுக்கு ஒரு முறை சிறிய மலர்க் குச்சங்களாக நூல்கள் எழுத வேண்டும் என்ற உன் திருவுளம் அறிந்து இப்போது இந்த திருவிளையாடற் கொத்தினை உனக்குக் காணிக்கை ஆக்குகிறேன்.
“ஸ்வாமி” எழுதியதற்குப் பின் நீ புரிந்த புது லீலைகள் பலவற்றை நான் அறிந்தது மட்டுமல்ல; அதில் குறிப்பிட்டுள்ள விஷயங்களிலேயே கூடுதலாகவும், சற்றே மாறுதலாகவும் சில பல விவரங்களை அறியவும் அருளியிருக்கிறாய். இவற்றையும் இங்கு கூறப் புகுகிறேன்.
“ஸ்வாமி” வெளியானது ஈராண்டுகளுக்கு முன் (1977) ஹோலி பூர்ணிமா தினத்திலாகும். இந்த “லீலா நாடக ஸாயி” (1979) குரு பூர்ணிமா தினத்தில் தொடங்கப் பெறுகிறது.3 உத்தேசித்துச் செய்யாத, ‘தற்செயலானது‘ என்று தோன்றுகிற இப்படிப்பட்ட அற்புதப் பொருத்தங்கள் உன் அருளால் கூட்டுவிக்கப்படுவனவே!
‘இதிலே என்ன அற்புதப் பொருத்தம்? பிரேமக் கண்ணன் வண்ண வண்ண நீரை அடித்து லீலா நாடகக் கொட்டமடித்த ஹோலியன்று ஸாயிக்கண்ணனின் நானா பாவத் திருவிளையாடல்களை வெளிப்படுத்தியதுதான் பொருத்தமேயன்றி, லீலையும், நாடகமும், கொட்டமும் ஓய்ந்து, வண்ணம் யாவும் ஞான வெண்மையாகிவிடுகிற மோன குருவுக்கான பூர்ணிமையில் இப்படி ஒரு நூல் எழுதத் தொடங்குவதில் என்ன பொருத்தம்?’ என்று வாசகர்கள் கேட்கிறார்களா?
‘அப்படியில்லை. ஒரு நாணயத்தின் இரு புறம் போல, மோன ஞானமாக ஒரு பக்கத்தில் இருக்கும் அதே ஸத்தியம்தான் லீலைப் பிரேமையாக மறுபக்கம் இருக்கிறது என்பதை ஸாயீ, நீ நிதரிசனமாக நிரூபிக்கிறாய்.
41979 ஜூலைக்குப் பின், இந்த கைப்பிரதியை நான் சோதிக்கும் 1980 ஸெப்டெம்பர் வரையிலான பதிநான்கு மாத இடைக்காலத்திலேயே இன்னொரு சிறு நூல் படைப்பதற்கான மலர்கள் கிடைத்துள்ளன! 1979 ஜூலை 9ந் தேதி தொடங்கி இருபதே நாட்களில் இந்த நூலை முடித்தும் இத்தனை மாதங்களுக்குப் பின்பே இது அச்சகம் செல்வதும் சதாநாயகனின் ஒரு லீலா நாடகமே!
இரு பக்கங்கள் என்று பிரிப்பதுங்கூட ஸரியில்லை. வெள்ளை நீர் நீல அலையாகி அந்த நீல அலையில் வெள்ளை நுரை பூப்பதே போல, உன் சாந்த ஞான ஸாகரத்திலேயே பிரேமசக்தியின் லீலை அலைகள் வீச, அந்த லீலையிலும் முடிவாக அமைதி வெண்மையே கொழிக்கிறது.
மௌனத்திலேயே லீலை அடங்கும், ஞானத்திலேயே பிரேமை அடங்கும் என்பதைக் காட்டத்தான் போலும், சென்ற ஜூலை 9ல் எழுதியதை இந்த ஸெப்டெம்பர் 10ல் நான் ப்ரூப் பார்ப்பது மௌன பூர்ணரான பகவான் ஸ்ரீ ரமண மஹர்ஷிகளின் திவ்ய ஸந்நிதியில் நடக்கிறது; அசல ஞானம் அகிலப் பிரேமையாக விளங்கும் அருணாசலத்தில் நடக்கிறது.
இதனை உணர்த்தத்தானோ, பிரேமையின் வண்ணமான சிவப்பிலேயே ஆடையணியும் நீ லீலாலோலனாக ஊஞ்சலாடி டோலோத்ஸவம் கொள்கையில் ஞான அமைதியைக் காட்டும் வெள்ளாடை தரிப்பது?
நீ பிரேம காந்தனாகவும், லீலா பாலனாகவும், சாந்த ஞான குருவாகவும் ஒருங்கே இருக்கிறாய். குரு பூர்ணிமாவில் பூர்ண குருவான உன்னை வணங்கி உன் அமைதி வெண்ணிலவில் தோய வந்தால், அந்த நிலவிலேயே பிரேமாம்ருத பிந்துக்களையும் தெளித்து விளையாடுகிறாய். உன் குருத்வம் அதாவது கனம் எங்களை ஆழ்கடலின் அடிவாரமாக அழுத்தாதபடி அன்பினாலே எங்களைத் தூக்கி உன் லீலா விநோத அலை நுனியில் ஊஞ்சலாட்டுகிறாய்.
நாங்களும் மோன குருவான உன்னையே திருவிளையாடல் ஸரஸனாக எங்கள் இதய ஊஞ்சலில் ஆட அழைத்து, ‘லீலா நாடக ஸாயி‘ பாடுகிறோம்.
லீலா நாடக ஸாயி, லாலி ராஸ விலோலி
(விளையாட்டுக் கூத்து ஸாயிஊஞ்
சலாடு குரவை விநோதா!)
சீலா ஹாடக ஸாயி, லாலஸ மாநஸ சாயி
(ஆடுக, ஆடகப் பொற்குணனே!
கொஞ்சு நெஞ்சு துஞ்சுவோனே!)
ஹாலாஹலதர ஸாயி, சூலி, கபாலி, பாலி
(ஆலகால மிடற்றானே!
காவாய், சூல கபாலா)
ஹாலாஸ்யாலய மாயி, பாலா பார்வதி பாஹி
(ஆலவாய் அருமை ஆயி,
பாலை, பார்வதி, பாராய்!)
ஊஞ்சல் ‘பாடுகிறோம்‘ என்று இங்கே பன்மையில் வாசகர்களையும் சேர்த்துக்கொண்டு சொல்லியிருக்கிறேன். ஏனெனில் “ஸ்வாமி” முகவுரையில் நான் தெரிவித்திருப்பது போல இந்த நூலும் ஊர்ஜிதமான ஸத்ய ஸாயி பக்தர்களுக்கென்றே எழுதப்பட்டதுதான்.
உனக்கு முகமன் கூறி மனமுகப்பில் ஊஞ்சலமர்த்திக் கொண்டபின், நாங்கள் இப்படி வரவேற்கு முன்பே “எப்ப வந்தாச்சு?” என்று உன் இன்முகத்தால் கேட்டு எங்களை நீ பிரமுகராக்கிய பின் இந்த நூலுக்குத் தனியே முகவுரை தேவையில்லை. வாசகர்களையே பன்மையில் என்னோடு சேர்த்துக் கொண்டுவிட்டபின், இந்நூலுக்கு உதவி செய்து என்னில் மேலும் நெருங்கிச் சேர்ந்து விட்டவர்களைப் பெயர் சொல்லி நன்றி கூறுவதே அவர்களைப் பிரித்து வைப்பதாகத்தான் தோன்றுகிறது. இப்போது, இந்த நிமிஷத்தில் தோன்றும் இந்த ஆழ்ந்த உணர்ச்சிக்கு மதிப்புத் தந்துவிடுகிறேன்.
உன் ஆசி, அருள், அன்பு, அநுக்ரஹம் அத்தனையையும் அடக்கித்தான், “எப்ப வந்தாச்சு?” என்ற அந்த இரண்டு வார்த்தைகளைச் சொல்லிவிட்டாயே! அதில் தெரியும் உன் குளிர்ந்த இதயத்தால் எங்களுக்குப் பன்னீர் தெளித்து, வார்த்தைக்கேற்ப விரியும் நேத்ரத்தின் கடாக்ஷத்தால் கிருஷ்ண சந்தனம் பூசி, வாக்கு சொல்லும் தாம்பூல வாய்த் தரிசனத்தாலேயே எங்கள் நெஞ்சு சிவக்க வெற்றிலை தந்து, வசன மதுரத்தால் கற்கண்டும் வழங்கி அபார வரவேற்புக் கொடுத்து உன் லீலா நாடக அரங்குக்குள் எங்களை அழைத்துக்கொண்டு விட்டாய்.
அரங்கா! அன்புச் சுரங்கமாம் உன் கூத்தரங்கின் எண்ணிலாக் காட்சிகளில் சில காண வந்தோம். உன் பாதாரவிந்தத்தில் வந்தனத்தோடு.
வந்தனித்த தந்தப் பாதங்களில் பூசிய சந்தனம், அதிலே பட்ட எங்கள் சிரங்களை உன்னோடேயே ஒட்டிக் கொள்ள வைக்கிறது. ஆம், இந்நூலில் விரியும் லீலைகள் பெரும்பாலும் உன்னை எங்களோடு கிட்டியும் ஒட்டியும் உறவாடும் அன்பனாகவே காட்டுமாறு செய்திருக்கிறாய். ஏனையரின் நூல்களிலும், என் “ஸ்வாமி”யிலும்கூட, உன் மஹத்வமே அதிகமாக ஜ்வலிக்கும்படி வெளியான நீ, இச்சிறு நூலில் உன்னுடைய மதுரத்வமே சிறப்பாகப் பொலியும்படி அருள் கூர்ந்திருக்கிறாய்.
அந்த தெய்விக அருளை மதித்துக் கை குவிக்கும்போதே, அது வெளியிட ஸங்கற்பித்துள்ள மானுட இன்னியல்புடன் இசையக் கை கோத்துக் கொள்கிறோம். குரவைக்கூத்து எனும் ராஸ லீலையில் கண்ணன் கோபியரின் கைகளோடு தன் கை கோத்துத்தானே லீலா நாடகம் ஆடினான்?
ஆயினும், நீ எத்தனை அணுக்கமாக அன்பிலே பக்கம் வந்து நின்றாலும் உன் திவ்ய மகிமையை மறக்கக்கூடாது என்பதால் அப்படிப்பட்ட பேரனுபவ லீலையொன்றில் தொடங்குகிறோம்.