58. ‘சபரிகிரி நாயகனே! ஸாயி, வரதாயகனே!’
மனிதராக வந்த தெய்வம் தெய்வமாக மனிதரை மாற்றும் உச்ச அற்புதத்துக்கு அடிகோலுவதாக அநேக அடியாருக்கு ஆன்மிய ஸாதனைகளில் அற்புதங்களை விளைவித்திருக்கிறது. குண்டலிநீ யோகம் முதலிய சிக்கலான ஸாதனைகளிலிருந்து எளிய நாமஜபம் வரையில் பலவித ஸாதனைகளிலும் ஈடுபட்டுள்ள அடியார் இவ்வித ஆத்மிக அத்புதங்கள் கண்டுள்ளனர். அவற்றிலே ஸ்வாமி தமது ஸர்வ தேவ ஸ்வரூபத்வம் தெரியுமாறு பற்பல இறை மூர்த்திகளாக தர்சனம் தந்திருப்பதற்கு ஒரு தனியிடமுண்டு. “ஸ்வாமி”, “லீலா நாடக ஸாயி” ஆகியவற்றில் நான் கொடுத்துள்ள எடுத்துக் காட்டுக்களில் வராத ஐயப்ப ஸ்வாமி, நம் ஸ்வாமி பஜனைகளில் மங்கள பூர்த்தியாக முடிக்கும் ஷண்முகநாத ஸுப்ரஹ்மண்யம், மங்கள நிறைவு ஸ்தான மூர்த்தியாயுள்ள ஆஞ்ஜநேய ஸ்வாமி ஆகிய மூவரைப்பற்றி மட்டும் இந்நூலில் சொல்லி முடிக்கிறேன்.
லோகநாத முதலியாரின் திருவல்லிக்கேணி வீட்டின் உடைமையுரிமை துரதிருஷ்டவசமாக ஒரு வழக்குக்கு ஆளாயிற்று. வழக்கு வெற்றிகரமாய் முடிந்தால் சபரிமலைக்கு வருவதாக முதலியார் ஏதோ ஓர் உணர்ச்சியெழுச்சியில் வேண்டிக் கொண்டார் – இப்போது அவர் ஸாயீசனையே “ஸர்வ பரிபூர்ண அகண்ட தத்வ”மாகக் கண்டுவிட்ட போதிலும்! வழக்கு பல்லாண்டு இழுக்கடித்தது. முதலியார் கண் மூடும் வரையில் அது தீரவில்லை. கண் மூடு முன்பு அவர் அருமைப் புதல்வி லீலாவிடம் தமது சபரிமலை ஸங்கல்பத்தைச் சொல்லி, தாம் நேர்ந்துகொண்ட சபரிமலை நோன்பை வீடு ‘பொஸஷ’னுக்கு வந்தால் மகள் நிறைவேற்ற வேண்டுமென்றார். “மகள் தந்தைக்கு ஆற்றும் உதவி இவள் தந்தை என்ன நோற்க விரும்பினாரோ அதனைப் பூர்த்தி செய்வதே” எனக் குறள் மாறுகிறது! அப்படியே செய்வதாக மகள் வாக்களித்தார். தந்தை காலமானார்.
அநேக ஆண்டுகளுக்குப் பின்தான் வழக்கு தீர்ந்தது – சாதகமாகவே! அப்பாவுக்களித்த வாக்குப்படி மகள் சபரிமலை செல்ல வேண்டுமெனினும் மாதாந்தர அசுத்தம் நீங்காமல் அந்த யாத்திரை செய்வதற்கில்லாமலிருந்தது. இதனால் மேலும் காலம் தள்ளிப் போயிற்று பிற்பாடு லீலா அத்தகுதியும் பெற்றார்.
ஆனால் கிட்டி முட்டி யாத்ரை மேற்கொள்ள வேண்டுமென்னும்போது கேள்விகள் புறப்பட்டன: “நடமாடும் தெய்வ ரூபத்தில் ஸத்ய ஸாயீசனுக்கென்றும், சிலா ரூபத்தில் கிண்டி ஆலய ஷீர்டி ஸாயீசனுக்கென்றுமே தன்னைத் ‘தீர்த்து’க் கொண்டு விட்டபின், இப்போது ஐயப்பனுக்கு வேண்டுதல் செலுத்தத்தான் வேண்டுமா? தந்தை வேண்டிக்கொண்டதைத் தாம் நிறைவேற்றாவிடில் குற்றமா? அல்லது நிறைவேற்றினால் தான் ஸாயியிடம் அனன்ய பக்தி பூணாத குற்றமாகுமா?”
ஸாயிநாதனிடமே கேட்டார். “மநுஷ்யங்களுக்கு ஸங்கல்ப ஸத்யமும், வாக்கு ஸத்யமும் முக்யமாச்சே! அதனால்தான், நானே எல்லாம் என்று அப்பாவுக்குத் தெரிந்த பிறகும், பூர்வ சங்கல்பப்படி சபரிமலா ப்ரார்த்தனையையும் பூர்த்தி பண்ண நினைச்சார். அதே மாதிரி, நீயும் அப்பாவுக்குக் கடைசிக் காலத்தில் வாக்குக்கொடுத்தபடிப் பண்ணறதில் தப்பே இல்லை. இதற்காக ஏன் ‘ஓர்ரி’ பண்ணிக்கணும்? பக்தர்கள் மனஸ் ஸ்வாமிக்குத் தெரியாதா? நீ சபரிமலா போகிறதை ஸ்வாமி ஏன் தப்பாக நினைக்கப் போறேன்? போய் வா. ஸ்வாமியே கூட வரேன்” என்று பரிவொழுக ப்ரபு கூறினார். யாத்திரைக்கு மாலையும் அவரே போட்டார்.
ஐயப்ப ஜ்யோதி தெரியும் மகர ஸங்கிரமணத்தின் பெரும் கூட்டத்தில் செல்ல லீலா விரும்பவில்லை. மற்றொரு முக்ய தினமான பங்குனிப் பூர்ணிமைக்குச் செல்ல உத்தேசித்தார். கிண்டி ஆலயத்தை ஒட்டியுள்ள டீக்கடை நாயரின் துணை அப்பயணத்தில் கிடைக்க இருந்ததில் தெம்பு பெற்றார்.
ஆனால் புறப்பட வேண்டிய ஸமயத்தில் நாயருக்கு அம்மை வார்த்து, அவர் வர முடியாமலாயிற்று. முற்பரிசயம் இல்லாதவர்களுடன், எங்கோ உள்ள சபரி யாத்ரை மேற்கொண்டார் லீலா. “கூட வறேன்” என்று ஸ்வாமி சொல்லியும், அதற்குச் சான்று தெரியாததால் உத்ஸாஹமின்றியே பஸ்ஸில் ஏறினார்.
ஆனால் ஸ்வாமி வாக்கு ஸத்யம் தவறுவாரா? வழியில் இவர்கள் பஸ்ஸை நிறுத்திய ஓரிடத்தில், “லீலாம்மா, லீலாம்மா!” என்று கூவிக் கொண்டாக்கும் இன்னொரு பஸ்ஸில் இதே யாத்ரை மேற்கொண்ட ஒரு ஸாயியடியார் கூட்டம் வந்தது! அப்புறம்? ஸாயி ஸங்கத்துக்கே உரிய அன்பின்பத்துடன் சோதரி சபரிகிரி யாத்ரை தொடர்ந்தார்; அந்த க்ஷேத்ரத்தைச் சேர்ந்தார்.
சபரிகிரி ஸந்நிதானத்தில் மாலை நாலரைக்கு நின்ற லீலா, ஐயப்ப ஸ்வாமியின் திருமுகம் நோக்கினார்.
நம் ஸ்வாமியின் முகமே தெரிந்தது!
குந்தி அமர்ந்திருந்த காலும், மேனியும், கரங்களும் ஹரிஹரபுத்ர விக்ரஹத்துடையவைதான்! ஆனால் கழுத்துக்குமேல் திருமுகம் மாத்திரம் ஹரிஹரனேயான பாபாவுடையது! மானுட உடலும் யானை முகமுமாய் கணேசன் இருப்பதுபோல, உடல் ஐயப்பனும், முகம் நமது அம்மையப்பனுமாகக் கண்டார் லீலா.
அதிலே அவர் மகிழவில்லை. ஸ்வாமியிடம் அன்புரிமையுடன் பேசும் அவர் இப்போது கேட்டார்: “உங்களுடைய ஸத்யஸாயித் திருமுகத்தைத்தான் நான் எவ்வளவோ பார்த்திருக்கிறேன்; இனியும் பார்க்கப் போகிறேன். ஆனால் எவ்வளவோ குழப்பத்தில், உங்களாலேயே குழப்பம் நீங்கி எங்கிருந்தோ இந்த ஸந்நிதானத்துக்கு வந்திருக்கிறேன் – வாணாளில் ஒரே ஒரு தரிசனம் பெற! அப்படி வந்தபின் இவ்விடத்துக்கு என்றுள்ள மூர்த்தியின் முகக் காட்சி பெற முடியாமல் நீர் எதற்கு ஐயா வந்து முகம் காட்டுகிறீர்?”
பம்பைக் கரை வந்து பந்தள இளவரசான பரம குமாரனைக் காணவே நம் ஸோதரி விரும்பினோரேயன்றி ‘பந்துள குந்தள’ப் பம்பை முடியரை அல்ல!
ஆனால் மஹிமாவதாரி தன் மாயாவித்தனத்தை விட மறுத்தார்! மாலை நாலரையிலிருந்து இரவு பத்தே கால் வரை, சுமார் ஆறு மணி லீலா திரும்பத் திரும்பத் திருமுகம் பார்த்தும் பம்பை முடியரேதான் காட்சி தந்தார்.
‘போம் ஸ்வாமி நீர்!’ என்று குறையோடேயே சோதரி விடை கொண்டார்.
மறுநாள் காலை ஸுப்ரபாத ஸேவைக்கு ஸந்நிதானம் வந்தார்.
ஆஹா! கருணாவதாரி மாயாவித்தனத்தை விட்டு விட்டார். ‘ஈச்வராம்பாளத’ராக இன்றி ‘ஹரிஹரஸுத’ராகவே இன்முகம் காட்டியருளினார்!
சபரிகிரி நாயகனே, சரணம் ஐயப்பா!
ஸாயி, வரதாயகனே, சரணம் நீ பாபா!
59. முருக ஸாயி
முருகாவதாரமாகவே பல அநுபூதிச் செல்வர் கண்டுள்ள ஸ்ரீ ரமண பகவானின் வேல் வெட்டுக் கண் வீச்சுப் பெற்றார், இளைஞரான மாணிக்கவாசகம். அதை அருள் வெட்டெனப் புரிந்துகொள்ளாமல் மாய மந்திர சக்தியோ என்று பயந்தார். அதனால் ‘சாமியார்கள் சமாசாரம்’ என்றாலே காத தூரம் ஒதுங்கினார். பிற்காலத்தில் அவர் வழக்குரைஞராகப் பெயரெடுத்த பின் நம் ஸ்வாமித் தொடர்புடைய ஓர் ஆலய வழக்கில் அவரது உதவி நாடப்பட்டது. சாமியார் சம்பந்தமிருப்பதால் அவர் கேஸ் எடுக்க விரும்பவில்லை. ‘சாமியாரோ’ அவரையே பிடிவாதமாகத் தருவித்தார். அவர் விருப்பப்படி அவர் தமக்கு நமஸ்காரம்கூடப் பண்ண வேண்டாம் என்று விட்டுக் கொடுத்துச் சொல்லி அவரை வருவித்தார். இவ்விஷயங்கள் “அன்பு அறுப”தில் (அத். 33) விரிவு கண்டிருக்கின்றன. அதிலே சொல்லாதது இதோ:
ஆலய நிர்வாகியுடனும், ஸ்வாமியிடம் ஓரளவு ஈடுபாடு கொண்டிருந்த தம் மனைவியுடனும் மாணிக்கவாசகம் ஆழ்வார்பேட்டையில் பாபா தங்கியிருந்த ஜாகைக்கு வேண்டா வெறுப்பாக வந்தார். மாடிப்படி ஏறி ‘மேலவ’ரைக் காணச் சென்றார்கள்.
ஆழ்பக்தி கொண்ட ஆலய நிர்வாகியும் ஆரம்ப பக்தி நிலையிலுள்ள ‘மாணிக்கவாசகி’யும் ஸத்ய ஸாயியைக் கண்டு ஒரு மரியாதையுணர்ச்சியின் எழுச்சியை உணர, பக்தியே இல்லாத மாணிக்கவாசகமோ அவர்களையும் விட உள்ளெழுச்சி பெற்று உணர்விழந்த பெரு நிலைக்கே ஏறி தண்டாகாரமாக விழுந்து பணிந்தார்!
விந்தையில் விந்தையாக, தம்மை ஒரு ஸ்வாமியார் என்றுகூட மதிக்க விரும்பாதவருக்கு நம் ஸ்வாமி, ‘ஸ்வாமி’ என்ற நாமதேயத்தை தனக்கேயான சிறப்புப் பெயராகக் கொண்ட குமாரஸ்வாமியாக தர்சனம் சாதித்து விட்டார்! ‘மேலவர்’ வேலவராக, பழநி மூலவராகக் காட்சி தந்து மாணிக்கவாசகத்தின் உள்ள முழுதிலும் பஞ்சாம்ருதம் பாய்ச்சி விட்டார். அன்று ரமணராகப் பாய்ச்சிய கடாக்ஷ வேல் இன்றுதான் இவரது கர்மாவை ஒட்ட விரட்டி யோட்டியது போலும்!
எவனது எழில்வளக் கொழிப்பினைக் காண “நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகனே” என்று அடியார் வருந்தினாரோ, அந்த “முழுதும் அழகிய உம்பர்தம் தம்பிரானை”க் கண்முன்னே கண்டபின், அத் தண்டபாணி முன் தண்டாகாரமாக விழாதிருக்க முடியுமா?
வைதாரை வாழவைக்கும் வையாபுரிப் பெருமாள் ஏனையோரை அனுப்பிவிட்டு, மாணிக்கவாசகத்துக்கு மட்டும் அந்தரங்கப் பேட்டி தந்தார். ‘ஸ்கந்தரங்க’மான அப் பேட்டி பற்றி அடியார் வெளியிட்டது இவ்வளவே.
“நான் சமாளித்துக் கொண்டபின் கேஸ் ஃபைல்களைப் புரட்டி விஷயம் சொல்லப் போனேன். ஸ்வாமி அவற்றை வாங்கி அப்படியே கீழே போட்டுவிட்டு, இதற்காக நான் உன்னை வரவழைக்கவில்லை இதற்காகவே வரவழைத்தேன் என்று சொல்லி என் ஹ்ருதயத்தைத் தட்டிக் காட்டினார்.”
குறுமுனியைக் கொள்ளைக் கொண்ட ரூபம் காட்டி மாணிக்கவாசகத்தின் இதயத்தை ஸ்வாமி தட்டிக்கொண்டு போய்விட்டார். திருவாசகம் பாடிய மாணிக்க வாசகரை வலிந்து ஆட்கொண்ட வரிசையை வழக்கு வாசகம் சாடிய மாணிக்கவாசகத்துக்கும் வழங்கிவிட்டார்!
60. ஸிந்தூர மாருதியும் சிருங்கார மாநிதியும்!
திருச்சி டாக்டர் பீ.ஏ.எஸ். ராகவன் வீட்டில் ஸ்வாமி செய்துள்ள தொடர் லீலா விநோதங்கள் உண்டே! 1-5-1965-லிருந்து 6-2-1970வரையிலும் நாலே முக்கால் வருஷத்தில் நூற்றுக்கணக்கான தெய்விகம் ததும்பும் திருவிளையாடல்கள் புரிந்திருக்கிறார். ஸாயி பக்தர் வட்டத்துக்கென அவற்றை தினசரிக் குறிப்பாகத் தட்டெழுத்தில் அடித்துப் படி எடுத்து அவ்வீட்டினர் கொடுத்திருப்பதைக் காணக் காண மனத்துக்கு வியப்பின்பம் ஏற்படுகிறது.
தொடக்க லீலை பி.ஏ.எஸ். ஆரின் பூஜையறையிலுள்ள ஆஞ்ஜநேயரின் படங்களிலெல்லாம் ஸிந்தூரம் பூத்திருந்ததுதான்!
“விநாயகரில் தொடக்கி ஆஞ்ஜநேயரில் முடிப்பதாயிருக்க இதென்ன பூர்த்திஸ்தான மூர்த்தியில் ஆரம்பம்?” என்று கேட்பதற்கில்லாமல்தான் ஸிந்தூரத்தைத் தெளித்திருக்கிறார் சிங்கார ஸாயி! விநாயகரும் ஸிந்தூர கணபதியாகத் திகழ்பவரே அல்லவா? முதலில் கற்றுக் கொடுக்கப்படும் கீதத்திலேயே அவரை “ஸிந்தூர வர்ண, கண ஸேவித, ஸித்தி விநாயக”ராகத்தானே சொல்லியிருக்கிறது?
விநாயகர் தமது பெருமேனி முழுதும் தடவிய ஸிந்தூரம் என்னவெனில் ஸிந்தூராஸுரனின் குருதியாகும். ஆனால் மாருதி தம்முடைய திருமேனியின் பூசியதோ குருதியல்ல; குங்குமம். அசோகவனத்தில் அவன் கண்ட அன்னை அனைத்து அலங்காரங்களும் நீக்கியிருந்தாலும் அவள் நெற்றியில் மட்டும் ஸிந்தூரம் செவ்வொளி வீசியது. “இந்த அலங்காரம் மட்டும் ஏன் தாயே?” என மாருதி கேட்டான். “அப்பனே! இது பத்னியின் நெற்றியிலிருப்பதே பதிக்கு நலம் தரும். என் ப்ரபுவின் நலனுக்காகவே, மங்களத்துக்காகவே நான் அணிய வேண்டியது இது” என்றாள் மைதிலி. “இதை அணிந்தால் நம் ஆண்டவருக்கு க்ஷேமம் எனில் என் உடல் முழுதும் பூசிக் கொள்வேனே!” என்று சொல்லி தாஸ சிகாமணி தலையோடு கால் ஸிந்தூரம் பூசி ப்ரேம ஸிந்துவானான். செக்கராடை அன்பு மூர்த்தமான நம் ஸ்வாமி ஆஞ்ஜநேய சித்ரங்களில் ஸிந்தூரம் அப்பிக் கொண்டது எத்தனை பொருத்தம்?
அன்று 1965 மே முதல் தேதி. மே தினம். உரிமையே தெரியாமல் கடமையே உருவாயிருந்த மஹா தொழிலாளி ராமதாஸ் மாருதி அன்று அன்பின் சிவப்பைச் சிந்தினான்!
அப்புறம் ஒரு நாள் புதிதாகவே ஒரு ஸிந்தூர ஆஞ்சநேய விக்ரஹம் தோன்றிற்று. ‘ஒரு நாள்’ என்று சொல்லி, விட்டு விடலாமா? அது 1968 தீபாவளித் திருநாள். அதற்கேற்ப ஸ்வயம்புவான இந்த ஸிந்தூர மூர்த்தியின் கண்கள் பளிங்குகளாக தீப ஒளி சிந்தன!
கல்லுக்குழி ஹநுமாரிடம் விசேஷ பக்தி பூண்ட இவர்கள் இல்லத்தில் ஹநுமத் ஜயந்தி தோறும் ஸ்வாமி சிறப்பு லீலைகள் புரிந்தார். ஹநுமன் சித்திரத்திலிருந்தே வடையும் பொங்கலும் தேங்காயும் பழமுமாகக் கொட்டி, தீபத்தைத் தானாகவே ஏற்றிக்கொண்டு தீபாராதனை பெறவும் செய்திருக்கிறார்.
ஸீதாதேவியின் ஸிந்தூர குங்குமத்தில் தொடங்கிய திவ்விய விநோதங்களை 6-2-70 பூர்த்தி செய்த போது, பரிவே உருவான அப்பரம மங்களையின் கரத்தில் அக்குங்குமம் பொங்கச் செய்தார்!
தாம் கூறும் ப்ரேமை, பக்தி, ஸேவை, தூய்மைகளுக்கு ஆதரிசமாக ஸ்வாமி காட்டுவது அஞ்ஜனைச் செல்வனைத்தான் – அன்னை ஜானகிக்கே செல்வனாக ஆனவனைத்தான். அவள் அவனுக்கு வெற்றிச் சிந்தூர மிட்டு வாழ்த்துவதே போல் ஸாயியன்னை நம் நெற்றியில் தன் திருவிரலாலேயே திவ்ய குங்குமமிட்டு அண்ணன் அனுமந்தனின் அடிச்சுவட்டில் அனுப்பி வைப்பதாக பாவித்து மகிழ்ந்து வணங்குவோமாக!
சுபம்