52. கோட்டய வழியில் ஒரு காப்புக் கோட்டை
பகவானின் பக்த வாத்ஸல்யத்தைப் பல விதத்திலும் பெற்ற அரிய வத்ஸர் ஸ்ரீ பால பட்டாபியை கொங்கு வட்ட ஸாயியன்பர்களும், “ஸ்வாமி” நூல் வாசகர்களும் நன்கறிவர். அவர் 22.2.1970-ல் கோட்டயத்தில் நடந்த ஸாயி ஸமிதி ஆண்டு விழாவில் கலந்து கொள்ளவிருந்தார். அதற்காகத் தம் ஊரான உடுமலைப்பேட்டையிலிருந்து திருச்சூர் சென்றார். திருச்சூரிலிருந்து எர்ணாகுளத்துக்கு பஸ்ஸில் போய், அங்கிருந்து கோட்டயம் செல்வது அவர் உத்தேசம். திருச்சூரில் பஸ் ஸ்டான்டில் ஏறுவதைவிட, அதற்கு முன் பஸ் புறப்படும் ஒர்க்–ஷாப்பிலேயே ஏறினால் இடம் வசதியாய்க் கிடைக்கும் என்று ஒரு ஆட்டோக்காரர் சொன்னார். அப்படியே பாலபட்டாபி ஒர்க்–ஷாப் சென்றார். எதனாலோ பிப்ரவரியிலேயே உக்ர வெயில் அடிக்கும் பிற்பகலாக அன்று இருந்தது. பஸ்ஸில் ஏறி அமர்ந்தவருக்குத் தாகம் தாளவில்லை. கைப்பையை பஸ்ஸிலேயே வைத்துவிட்டு – என்ன போதாத வேளையோ? செருப்புக்களையும் அதிலேயே விட்டுவிட்டு – எதிரே உள்ள ஹோட்டலுக்குச் சென்றார்.
தண்ணீர் குடித்துத் திரும்பினால் – ‘ஹாட் ட்ரிங்க்’ குடித்துத் திரும்பிய எனக்குச் சிக்கபளாப்பூரில் நேர்ந்ததே பாலப்பட்டாபிக்குத் திருச்சூரில் நேர்ந்தது. அதை விடவுங்கூட இவரது நிதிநிலைமை அப்போது மோசமாயிருந்தது. ஏதோ ‘ஸ்மால் சேஞ்ஜ்’ கையிலிருந்தது தவிர, பர்ஸ் பையோடு, பஸ்ஸோடு போய்விட்டது!
அந்த விரைவு வண்டி போகும் அஸுர வேகத்தில், இவர் வேறெந்த வாஹனத்தின் மூலமும் அங்கிருந்து மூன்று மைல்களுக்கப்பாலுள்ள ஸ்டான்டுக்குப் போய் அதைப் பிடிக்க முடியாது என்று எல்லோரும் சொன்னார்கள். (இரண்டு ரூபாய்க்கும் குறைவான ஐவேஜியே கைவசமுள்ள இவர் எந்த வாஹனம் பிடிக்க முடியும்?)
தார் உருகியோடும் ரோட்டில், “உன் காரியமாய் வந்து இப்படிக் கோட்டயத்தைக் கோட்டை விட்டு நிற்க விடுவாயா? ஸாயிராம், ஸாயிராம்!” என்று உள்ளத்தை உருக்கி ஜபித்தவாறு நின்றார் பட்டாபி.
ஒரு டாக்ஸி வந்து அணித்தே நின்றது. “முதலாளி! எவட போகணும்.” என்று டாக்ஸியோட்டி வினவினார்.
டாக்ஸி பேசும் லக்ஷணத்திலா இவர் இருந்தார்? எனவே பதில் கூறாது நாம ஜபத்திலேயே இருந்தார்.
மறுபடியும் மறுபடியும் டாக்ஸியோட்டி தம் வினாவைத் திருப்பினார்.
கடைசியில், டாக்ஸியில் செல்ல தம்மிடம் பைஸா இல்லை என்று பட்டாபி விண்டு சொன்னார்.
அதிசய விடாக்கண்டராக டாக்ஸியோட்டி சொன்னார். “சாரமில்ல; அவட போயி. தந்தால் மதி” (பரவாயில்லை; அங்கே போய்க் கொடுத்தால் போதும்)
எங்கே போய், என்ன கொடுப்பாரிவர்?
ஆயினும் சற்று யோசித்ததில், ‘கை மாற்றுக் கேட்கக்கூட ஆள் தட்டுபடாத இவ்விடம் விட்டு பஸ் ஸ்டாண்ட்தான் போவோமே! அங்கே எவரிடமாவது உபகாரம் கேட்டுப் பெற்று உடுமலைக்கேயாவது திரும்பி விடுவோம்’ என்று தீர்மானித்தார். இவர் டாக்ஸியில் ஏறப்போக, அதன் ஓட்டுநர் பரமவிநயமாக கதவைத் திறந்துவிட்டு ‘முதலாளி’யை ஏற்றிக்கொண்டார்.
அடுத்த விநாடி பறக்கத் தொடங்கிவிட்டது டாக்ஸி. எங்கு போகவேண்டுமென்று கேட்காமலே ஓட்டினார் ட்ரைவர். இவரும் ஏனோ சொல்லவில்லை.
சிறிது தூரம் சென்றபின் ஓட்டி, “சென்ற கொல்லம் ஸ்டேடியம் க்ரவுன்டில் ப்ரபாஷணம் செய்த தறியும்” என்றார்.
‘ஓ, அப்படியா? இதற்கு முன் ஆண்டு திருச்சூர் ஸ்டேடியம் மைதானத்தில் ஸமிதி விழாவில் தாம் ஸாயி பற்றிப் பேசியதை ட்ரைவர் கேட்டிருக்கிறாரா? அதனால்தான் இப்போது வலிந்து உதவுகிறாரா?’ உடனே பட்டாபிக்கு அப்போது தம்மை வரவழைத்த அவ்வூர் ஸமிதித் தலைவரான கருணாகர மேனனின் நினைவு வந்தது. ‘அவரிடம் சென்றால் உதவி பெறலாமே!’ மேனன் வீட்டுக்கு ஓட்டுமாறு ட்ரைவரிடம் கூறினார்.
அந்த விடாக்கண்டரோ காரை அப்படி விடாமல் “இப்போழ் எவட போகண்டவே, பரயு!” என்றார். இவர் ஒரிஜனலாகப் போக உத்தேசித்த இடத்துக்குத்தான் அந்த ஓட்டுநர் போவாரேயொழிய, நடுவே மாறுதலாகத் தோன்றிய இடத்துக்குப் போக விரும்பவில்லை! இதென்ன விந்தை! மேலும் விந்தை, ‘ஒரிஜினல் இடம்’ என்ன என்று தெரியாமல் இவரைக் கேட்டுக்கொண்டே அந்தத் திசையில்தான் அவர் பறந்து கொண்டிருந்தார்!
பட்டாபி கதை முழுதும் கூறினார்.
அவ்வளவுதான்! டாக்ஸியின் பறப்பு இவர் அஞ்சும்படி மேலும் வேகம் கொண்டது! இப்படி சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கு மேல் அது சென்று 3.50க்குச் சாலக்குடியை அடைந்தது. இவர் போகவிருந்த எக்ஸ்ப்ரெஸ் ஸ்டேட் பஸ் கண்ணுக்கெட்டியது. பிடித்தும் விட்டார் அதை சூரரான நம் ஓட்டுநரன்பர்.
அவர் ‘ஹார்ன்’ செய்தும் பஸ் ட்ரைவர் அதை நிறுத்தவில்லை. இவரோ விடாக்கண்டராயிற்றே! பஸ்ஸை ஓவர்–டேக் செய்து அதன் குறுக்கே தம் வண்டியை மறித்து நிறுத்தினார்.
பஸ் நின்றது. அதிலே ‘முதலாளி’யை ஏற்றினார் அன்புத் தொழிலாளி – அதாவது அன்புத் தொழில் புரியவே ஆளுருக் கொண்டவர்!
பட்டாபியின் கைப்பையும் காலணியும் பஸ் ஓட்டுநரிடம் பத்திரமாயிருக்கிறது என்று கண்டக்டர் சுபச் செய்தி கொடுத்தார்.
பையில் பர்ஸும் பத்திரமாயிருப்பதறிந்து மேலும் ஸந்தோஷித்த பட்டாபி, அதிலிருந்து ஐம்பது ரூபாய் உருவி எடுத்தார். இதற்குள் டாக்ஸியோட்டி, குறுக்கே நிறுத்தியிருந்த வண்டியை எடுக்கச் சென்றுவிட்டார். பஸ் புறப்பட ஆயத்தமாயிருந்ததால் அதற்குள்ளிருந்தவாறே பட்டாபி டாக்ஸியோட்டியிடம் தொகையை வீசிவிட்டு பஸ்ஸின் உள்ளே உட்கார நகர்ந்தார்.
டாக்ஸியோட்டியோ அதை பஸ் ஓட்டுநரிடம் திரும்ப வீசினார். அதைப் பட்டாபியிடமே சேர்க்குமாறும், பட்டாபி திரும்பி வருகையில் திருச்சூரில் தாம் பெற்றுக் கொள்வதாகவும் கூறித் தமக்கே உரிய சண்ட மாருத வேகத்தில் பறந்து விட்டார். ஆயினும் டாக்ஸி நம்பரைப் பட்டாபி கவனமாகக் குறித்துக்கொண்டு விட்டார்.
எர்ணாகுளத்தில் ஸமிதி முக்யஸ்தர்களான எராடி முதலானோரிடம் பட்டாபி விஷயங்களைச் சொல்ல அவர்களுக்கும் டாக்ஸியோட்டுனரைக் குறித்து ‘ஸந்தேஹம்’ வந்தது. உடனேயே திருச்சூர் ஆர்.டி.ஓ. (சாலைப் போக்குவரத்து நிறுவன) அலுவலகத்துக்குத் தொலைபேசி, பட்டாபி குறித்து வைத்திருந்த நம்பருக்குரிய டாக்ஸி பற்றிக் கேட்டனர்.
“அந்த நம்பரில் டாக்ஸி எதுவும் கிடையாதே! லாரியல்லவா இருக்கிறது?” என்று பதில் வந்தது!
53. பக்தர் ஏறாமல் வண்டி போகுமா?
பகவான் பாடத் தாம் பக்கவாத்யம் வாசிக்கும் பாக்கியம் பெற்றவர் வயலின் வி, ஸேதுராமய்யா. ஒரு தசராவில் இவர் புட்டபர்த்தியில் கான கைங்கர்யம் செய்தார். விஜயதசமியன்று பிற்பகல் மூன்று மணிக்கு அவர் தர்மாவரத்தில் ரயில் பிடித்து பெங்களூர் சென்று, இரவு மெயிலில் சென்னை திரும்ப வேண்டும்.
‘தர்மாவரத்தில் மூன்றுக்கு ரயிலாச்சே! இன்னும் ஸ்வாமி உத்தரவு தரவில்லையே!’ என்று ஒன்றரை மணிக்கே இவரது மனசு துரித கதியில் வாசித்தது! ஸ்வாமியோ விளம்ப கதியில் மேலும் ஒன்றரை மணி சும்மாயிருந்து விட்டு மூன்று மணிக்குத்தான் இவரை அழைத்தார். கை நிறைய ஸம்மானம் வழங்கி, “நீ போகாமல் அந்த ரயில் போக ஸ்வாமி விடுவேனா?” என்று ஓர் அயனான கேள்வி கேட்டார். “ரயில் லேட் நீ தர்மாவரம் போய் இறங்கவும் அது ஸ்டேஷனுக்கு வரவும் கரெக்டாயிருக்கும். பெங்களூரில் ரிஸர்வேஷனைப் பற்றியும் ‘ஓர்ரி’ வேண்டாம். அங்கே ஒரு கண் தெரியாத டீ டீ ஈ. இருப்பார், ‘ஸீட் இல்லை’ என்பார். அதற்காக பயப்படாதே! ‘ஏ.ஸி’ யில் ‘பி’ காம்பார்ட்மென்ட்டில் ‘பெர்த்’ இருக்கே–ன்னு கேளு! என்று கூறி நமது வழித் துணைநாதர் அவரைக் காரில் தர்மாவரம் அனுப்பினார்.
அப்புறம் யாவும் அந்தக் கருணாஸேது சொன்னாற் போலவே நடந்தது. கார் தர்மாவரம் ஸ்டேஷனில் நிற்கவும் ரயில் அவுட்டரில், “பாபா சொல்படியே வந்திருக்கேன்” என்று கூஊஊஊவவும் ‘கரெக்டாக இருந்தது! பெங்களூரில், பார்வை மிக மங்கிய டீ.டீ.ஈ.யும் ‘பாபா சொற்படி’ ஸீட் இல்லை என்ற அவர் வாக்குக் கூறினார். இப்படி எவரோகூட பாபா சொற்படி நடக்க அடியார் சேதுராமையா பின் நிற்பாரா? “ஏ.ஸியில் பி பெட்டியில் இருக்கிறதே!” என்றார்.
“அப்படியா? எல்லாம் ‘புக்’ ஆகிவிட்டிருந்தனவே!” என்ற டீடீஈ. விசாரித்துவரச் சென்றார். திரும்பியவர், “ஆமாம், நீங்கள் சொன்னதற்கு நிமிஷம் முந்திதான் ஒரு பெர்த் கான்ஸல் ஆகியிருக்கிறது” என்றார்!
வாழ்க்கைப் பயணத்தில் துணை வந்து எங்கள் ‘பர்த்’களை கான்ஸல் செய்யும் ஸாயீ! இன்று இப்படி இவருக்கு ஸீட் கிடைப்பதற்கு நீ என்று எவர் பேரில் ஒரு பெர்த் ரிஸர்வ் செய்து, சென்ற நிமிஷம் அதை எந்த உருவில் வந்து கான்ஸல் பண்ணினாய்? முதல்முறையாக இவரைக் குளுகுளுப் பெட்டியில் பயணம் செய்விக்க நீ உள்ளம் குளிர்ந்தேதான் அதற்கு இவ்வாறு ஏற்பாடு செய்து, செலவுக்கும் ஸம்மானம் அள்ளித் தந்தாயா?
54. அவயவ அதிசயம்!
மானுடமாகவே ஸ்வாமி காட்டும் சரீரத்தில் ஓரொரு சமயம் ஓரொரு பக்தருக்கு என்னவெல்லாம் திவ்யாத்புதம் காட்டுகிறார்? இப்படிச் சில முந்தைய நூல்களில் சொல்லி விட்டேன். மேலும் சில இங்கு பாருங்கள். பார் ஸ்வாமியின் பொற்பாதத்துக்கு மஞ்சளிட்டுப் பதிவு செய்து கொண்டனர் காலஞ்சென்ற வேங்கடகிரி மன்னரும் அவரது சோதரரும். மன்னரின் பதிவில் அப்பாதத்தில் சங்க – சக்ரச் சின்னங்கள் ஸ்பஷ்டமாயிருந்தன. சோதரருடையதில் இல்லை.
ஸோதரரின் குமாரர் மதனகோபால் ஸ்வாமியின் திருமார்பில் ஸ்ரீவத்ஸ மச்சம் கண்டிருக்கிறார். ஸ்வாமியின் கல்லூரியைச் சேர்ந்த செல்லப் பிள்ளைகள் அந்த வக்ஷ ஸ்தலத்தில் கௌஸ்துபம் போன்ற நீல ஒளித்திட்டு கண்டதை “அன்பு அறுப”திலும் (அத். 26) ஜாம்ஷெட்பூர் ஞான சோதி கருட முத்ரை கண்டதை இந்நூலிலும் (அத். 48) சொல்லியிருக்கிறேன்.
***
ஒரு மாந்திரிகரிடம் அவரது குரு, “நீ மந்திர ஜபம் செய்து கொண்டே பாபாவின் பாதத்தைத் தொட்டாயானால் அவருடைய சக்தி முழுதையும் இழுத்துக் கொண்டு விடலாம்” என்றார்.
மாந்திரிகர் அப்படியே பார்த்தி வந்தார். பாபாவும் அவர் எதிரில் போய் கிட்டத்தில் திவ்யமாய் நின்றார். தமது வழக்கப்படி ஓரிரு நொடியில் நகராமல் சாவதானமாகவே நின்றார். ஆயினும் மாந்திரிகர் மேலும் கீழுமாக, குறுக்கும் நெடுக்குமாக எத்தனை துழாவியும் பாபாவுக்குப் பாதங்கள் இருப்பதாகவே தெரியவில்லை!
முக்திக்காகப் பற்ற வேண்டிய பாதத்தைச் சக்திக்காகப் பிடிப்பேனென்றால்? அடி காண முடியாதுதான்!
***
பால லீலையான நீல ஒளிப் பந்துக் கதையில் ராம சர்மா பார்த்தோமே, அவர் குறிப்பாக அம்பாள் உபாஸகர் ஆவார். அதனால் ஸ்வாமியை “சிவதாயி” (சிவத்தாய்) என்றே சொல்வார். பேட்டியில் இவர் ஸ்வாமியிடம் பாதம் பாலிக்க வேண்டினார்.
“ஊம், எடுத்துக்கோங்கோ” என்றது தன்னையே தரும் தனிப்பெரு நலம்.
ராம சர்மா இரு கையும் சேர்த்து அழுந்தப் பற்றினார். ஆனால் அவர் எத்தனை முறை முயன்றும் இடது பாதம் ஒன்றே வந்தது. இந்த அடியார் ‘வாம பாக மகிழ் ஸுந்தரி’யிடமே ஈடுபாடு கொண்டிருந்ததால் இப்படித் திருவடி விசித்ரம் நடந்தது!
***
ஒரு முறை அன்பர் சிலரிடம் பேசிக்கொண்டே இருக்கையில் ஸ்வாமி லேசாகத் தம் முகம், கை, கால்களைத் தடவிக்கொள்ள ‘கம்’மெனப் பரவியது மஞ்சள் மணம்! ஸ்வாமியின் கையில் ஈர மஞ்சட்பொடி சிறு உருண்டையாகத் திரண்டிருந்தது. மாதாவாக மனோஹரச் சிரிப்புச் சிரித்து, “அகிலாண்டேச்வரிக்கு மஞ்சள் அபிஷேகம் நடந்து கொண்டிருக்கிறது” என்றார்!
***
மேஜர் ஜெனரல் மஹாதேவனிடம் மூன்றாண்டுகளுக்கு முன் ஸ்வாமி உரையாடுகையில், “என்ன வயசு?” என்று கேட்டார்.
“ஐம்பத்தேழு.”
“அப்டீன்னா, நானும் நீயும் ஒரே வயசு.”
“இல்லை ஸ்வாமி! நீங்க இருபத்தியேழு வயசுதான்.”
“எப்படி?”
“முடியே சொல்கிறதே!”
“முடியா இது? ஒவ்வொரு கேசமும் ஒரு டிவோடிக்கான ஏரியல்–னா!”
***
பத்தமடை கிருஷ்ணஸ்வாமிக்கும், (அவருக்கு ஏதோ பிரமையல்ல என்று ஊர்ஜிதம் செய்வது போல்) அவர் மனைவிக்கும் ஒரு முறை ஸ்வாமி பளிச்சென்று நெற்றியில் மூன்று கோடு விபூதி குழைத்துப் போட்டுக் கொண்டது போலக் காட்சி தந்திருக்கிறார்.
அநேக புகைப்படங்களில் அவர் விரற் பருமனுக்கு விபூதி இட்டுக் கொண்டிருப்பது போலக் காணும் விந்தையை அவரே கஸ்தூரியிடம் ‘பெருமையடித்து’க் கொண்டதுண்டு: “நீங்கள்ளாம் விபூதி இட்டுக்கணும். இட்டுக்காமலே ஸ்வாமி ஃபோடோவில் எப்டி விழறார் பார்த்தியா?”
அவதார ஸ்வரூப அற்புதங்களை ஆரே அறிய வல்லார்?