46. பிரேம ஸாயியின் பிரமிப்பு ஸாதனை
ஒரு கறுப்பர் யுவான் மூரின் மனத்தை மட்டுந்தானா பாபா மாற்றியிருக்கிறார். எத்தனையோ கறுப்பு உள்ளங்களைப் பொன்னாக மாற்றியிருக்கிறார்! மெஸ்மெரினமாக மனஸை ஆக்ரமித்துச் செய்யாமல், மனஸுக்குரியவர்களே பிரியப்பட்டுச் சிறிது சிறிதாக மாறுமாறு ‘பெர்ஸுவேஷன்’ முறையைக் கையாண்டு அவர் விளைத்துள்ள மனமாற்றந்தான் உலகை உத்தரிக்கும் அவரது அவதாரப் பெரும் பணியான மஹத்தான உண்மை யற்புதம். கலியின் கரியைத் தங்கமாக்க வேண்டும் என்ற பொன் மனப் பிரேம ஸங்கல்பத்திலேயே அவதாரம் கொண்டிருக்கிறார். பிரேம சக்தியை நேராக உணர்ந்து வாங்கிக் கொள்ளத் திறனற்றோரை அதிலே கவர்வதற்காகவேதான் அவர் புரியும் ஆயிரம், பதினாயிரம், லக்ஷம் மிரகிள்களும்! மிரகிள்களினால் ஆகர்ஷிக்கப்பட்டு அவரிடம் வந்தோர் அதன்பின் ப்ரேமாகர்ஷணத்தில் இழுபட இழுபடப் பக்குவம் காண்கின்றனர். தாங்களும் கொஞ்சமோ நஞ்சமோ அன்பு வழி தொடலாகின்றனர். அவ்வழியே ஸத்ய, தர்ம, சாந்தி, பிரேமை, அஹிம்ஸைகளையும் சிறிது சிறிதாகப் பயில ஆரம்பிக்கின்றனர்.
ஒரு தனி மனித மனத்தை அடியோடு உயர்த்தி மாற்றி, அப்புறம் அதன் அடிச்சுவடே இன்றி, “மனதற்ற பரிசுத்த நிலை” என்று தாயுமானவர் சொன்ன அத்வைத மோக்ஷ ஆத்ம ஸாக்ஷாத்காரத்தில் பாபா நிலைநாட்டியிருப்பதற்குச் சான்றுகள் சிலவே இருக்கும். ஏனெனில் இங்கு பூர்ணமாக ஒரு ஜீவன் தன் மனஸை அவருக்கு அர்ப்பித்து, தன் விருப்பு, தன் முனைப்பு என்பதே இல்லாத பூர்ண சரணாகதி செய்ய வேண்டியுள்ளது. அப்படிப்பட்ட உண்மை சரணாகதரின்றி, மற்ற எவர் மனஸிலும் முற்றும் புகுந்து அடியோடு மாற்றுவது ‘மெஸ்மெரிஸம்’ என்றே நமது தர்ம நியாய மஹாபுருஷர்கள் கருதுவர். மேலும் பரமனின் பெரும் கொடையாகவும், பெரு விசித்ர ஸ்ருஷ்டியாகவும் ஒரு ஜீவன் பெற்றுள்ள (அவனை ஒரு தனி ஜீவனாகக் காட்டுவதற்கே காரணமான) தனி மனஸை அதுவாகவே விரும்பித் திருந்த ஊக்கம் மட்டும் அளிப்பதுதான் அதற்கு கௌரவம் என்றும், ‘அது தானாக உருப்படாது’ என்று தீர்மானித்து ஆக்ரமித்துத் திருத்துவது மனித குலத்திடமே அவநம்பிக்கை காட்டுவதாகுமென்றுமே கருதுவர்.
எனவே தனி மனிதராக அடியோடு மனம் மாறி பூர்ணத்வம் பெற்றவரை ஸாயியடியாரில் அபூர்வமாகவே நாடுகளில் இப்படி ஏராளமானவரின் நோய் தீர்க்கும் அதீந்திரிய வைத்தியர்களில் பலர் நமது ஸாயி பகவந்தனின் துணையிலேயே இச்சாதிப்பைச் செய்கின்றனர். இங்கு வெளியுலகுக்கு ஸாயியே நோய் நிவாரண கர்த்தர் என்று தெரிவதில்லை. அந்த அதீந்திரிய மருத்துவர்களே சொன்னால்தான் தெரிகிறது. ஹவர்ட் மர்ஃபெட்டின் Sai Baba: Invitation to Glory படித்துப் பாருங்கள், தெரியும்!
இனி அவரது தர்மஸம்ஸ்தாபன அற்புதம்! ஒழுக்கக் கட்டுப்பாடென்பது ஸ்வதந்திரம் என்ற மோஹினிப் பிசாசுக்கும்; நேர்மை, உண்மை என்பவை முன்னேற்றம் என்ற மாயப் பேய்க்கும் பலியாகி வரும் இக்காலத்தில் பிசாசை ஓட்டி பேயை இறக்கி எத்தனை பேரைச் சீரிய வாழ்வில் கொண்டு சேர்த்திருக்கிறார்?
அவரருளால் வறட்சி மனத்தர் பலர் அன்பீரம் கண்டுள்ளனர்; ஸ்வயகார்யப் புலிகள் பரநலத் தொண்டராகியுள்ளனர்; எக்காரிய ஈடுபாடுமில்லாத் தூங்கு மூஞ்சிகள் கடமையூக்கம் பெற்றுள்ளனர்; அழுமூஞ்சிகள் உத்ஸாஹ ஜீவராகியுள்ளனர்; கருமிகள் கொடுத்து இன்புற அறிந்திருக்கிறார்கள்; பேராசைப் பறப்பாளர்கள் பேரமைதி நாடலாயிருக்கின்றனர்; விடாக்கண்டர்கள் தாக்ஷிண்யம் பெற்றிருக்கிறார்கள்; வம்பர்கள் வாயடைத்திருக்கிறார்கள்; கோபிஷ்டர்கள் குளிர்ச்சியாய் நடக்கத் தொடங்கியிருக்கிறார்கள்; காமிகள் புலனடக்கம் எய்தியுள்ளனர்; அஹங்காரிகள் எளிமை தொட்டிருக்கிறார்கள்; மனத்தை அடைத்து வைத்துக்கொண்டவர்கள் திறந்து போடக் கற்றிருக்கிறார்கள். ஒவ்வொன்றுக்கும் “இதோ இன்னார், இன்னார்” என்று திருஷ்டாந்தங்கள் காட்ட முடியும்.
பெரும் சோகத்தை, படுதோல்வியை சாந்தமாக ஏற்கச் செய்யும் விந்தையை எந்தை எத்தனை பேரிடம் விளைவித்திருக்கிறார்?
எத்தனை ஆழ்ந்த வாதங்களை, பிடிவாதங்களைப் பலர் விடுமாறு எளிதே செய்திருக்கிறார்?
முழு மனத்தையும் அடியோடு மாற்றாமலே இப்படிப் பல, பலப்பல, பலருக்குச் செய்துள்ளார் சேவகர்!
படலம் படலமாய் நீளுமே – சூதாட்டம், குடி, ட்ரக், புகைப் பிடிப்பு, புவாலுணவு, காமக் கேளிக்கை ஸினிமா முதலியவற்றை அவரருளால் விட்டோரது பட்டியல்!
அப்புறம், தனி மனிதரையன்றி, கூட்டமாக ஒவ்வொரு வர்க்கத்தை மேம்படுத்துவதில் ஸாயியின் சக்தி என்னவெல்லாம் அற்புதம் சாதித்துள்ளது!
***
குறிப்பாக இரு கூட்டங்களை ஸ்வாமி ‘திருத்திப் பணி கொண்ட’தைப் பார்ப்போம்.
ஒன்று, பிரசாந்தி நிலய அன்பர்கள் சொன்னது ஹிப்பி கோஷ்டி ஒன்று வேடிக்கை பார்க்கவோ, அல்லது கேலி செய்யவோ ப்ரசாந்தி நிலயத்துக்கு வந்து, தங்களது ஹிப்பித்தனத்தை அங்கும் விடாமல் அசாந்தி விளைவித்து வந்தது. சில நாட்கள் ஸ்வாமியும் வேடிக்கை பார்த்தார். அப்புறம் ஒரு நாள் அவர்களுக்குப் பேட்டி அளித்தார். அரை மணிப் பேட்டி என்ன அற்புதம் செய்து விட்டது? குரங்குக் குட்டிகளைக் காமதேனுவின் கன்றுகளாக அல்லவோ ஆக்கிவிட்டது. அவர்கள் அடுத்த தரிசனத்துக்கு வந்த போது க்ளோஸ் கட் முடியும், தூய வெண் ஜிப்பா–பைஜாமா உடையும், அமரிக்கையான நடவடிக்கையும், அமைதி பூத்த முகமுமாக வந்தனர். இந்த கோஷ்டி அந்த ஹிப்பியர் பெற்ற உருமாற்றமே என்று பலர் புரிந்து கொள்ளக்கூட முடியவில்லையாம்!
இன்னொன்று, பலர் சொல்லி, அப்போது கர்நாடக கவர்னராயிருந்த ஸ்ரீ கோவிந்த நாராயணும் வியந்து பாராட்டியதாகும்:
குழந்தைகளுக்கு உயர் பண்புகளை போதிப்பதற்கு முன்பு அதற்கான ஆசிரியர்களே அப் போதனை பெற வேண்டுமென்ற நோக்கத்துடன் ஒய்ட்ஃபீல்டில் அடிநிலை ஆசிரியர்களுக்கு ஸ்வாமி ஒரு பயிற்சி முகாம் நடத்தினார். அதில் கலந்துகொள்ள சுமார் ஆயிரம் ஆரம்பப்பள்ளி ஆசிரியரை அன்றைய ஆந்திர முதல்வர் சென்னா ரெட்டி அனுப்பி வைத்தார். முதல்வர் அனுப்பிவிட்டாரே என்று வேறு வழியின்றி முனகிக் கொண்டுதான் அவர்களில் பெரும்பாலோர் வந்தனராம். பிற்பாடு அவர்களே கூறிய உண்மை இது. ஸ்வாமியின் நியமமான கட்டுத்திட்டம், பக்தி, பஜனை, புராணம், வேதாந்தம், தர்ம சாஸ்திரம் எதுவுமே அவர்களுக்கு அங்கு வந்தபோது அடியோடு ஏற்கவில்லை. ஆனால் ஆறே வாரங்களுக்குப் பின் திரும்பியபோது அத்தனை நூறு ஆசிரியர்களும் அறு ஜன்மாவில் பெறமுடியா மாறுதலைப் பெற்றுவிட்டார்கள்! கண் ஜலம் விட்டு விம்மியபடியாக்கும் அவர்கள் ஸ்வாமியிடமிருந்து விடை கொண்டனர்!
ஸமீப காலத்தில் ஸ்வாமியின் சிறப்பு மிகவும் பரவலாகப் போற்றப்படுவது இளைஞர் குலத்தை அவர் இன்னியல்புகளில் திருப்பி விட்டிருப்பதற்காகவேயாகும். ஏனையோர், ‘நற்பண்புகள் இவர்களிடம் ஏறவே எறாது’ என்று கருதி அருகே செல்லவே பயந்த எத்தனை இளைஞரை அழகுச் சிற்பங்களாகச் சமைத்திருக்கிறார்?
அத்தனை தர்மத்துக்கும் மூலம் பெண் குலமே என்பார்கள். அப்படிப்பட்ட உண்மைப் பெண்ணாகப் பலரைப் பண்படுத்தியிருப்பதில் புண்ணியன் பண்ணியுள்ள பணிக்கு அவனை எத்தனை பணிந்து தமஸ்கரித்தாலும் போதுமோ?
வர்க்க பேதங்களைக் களைவது! அப்பப்பா, இப்படி பேதப்படுத்துவதே கலக யுகமான கலியின் கோலாஹலம்! இந்த ஆலஹாலத்தையும் அடக்கிக் காட்டியிருக்கிறான் அவதாரன் – அவதாரனன்றி ஆராலும் முடியாத காரியம்!
வெறும் இடைவெளியாக, gap–ஆக இன்றி, பெரிய மலைப் பள்ளத்தாக்கான canyon–ஆகவே பிரிந்து நிற்கும் முன்–பின் தலைமுறைகளை அவன் அன்புப் பாலம் கொண்டு இணைத்திருப்பதாலேயே பல நூறு குடும்பங்களில் இன்று பெற்றோர்க்கும் மக்களுக்குமிடையில் இன்னுறவு தழைத்திருக்கிறது; ஆசிரியர் நிர்வாகத்தினருக்கும் மாணவருக்குமிடையில் நல்லுறவு தளிர்த்திருக்கிறது.
ஏன்! பாம்பும் கீரியுமே என்று உலகம் வைத்து விட்ட முதலாளி தொழிலாளி வர்க்கங்களுங்கூடத் தாயும் குழந்தையுமாகச் சேர்ந்துள்ள அதிசயங்களும் ‘ஸாயி பாகவத’த்தில் ஓர் அத்தியாயமாகுமே! பெரம்பூரில் ரயில் ஊழியர் சங்கமொன்று வேலை நிறுத்தம் செய்வதில்லை என்று பாபாவிடம் ஸத்தியம் செய்து தருமளவுக்கு அவரது ஸாதனை பழுத்திருக்கிறது! இத்துறையில் நம் துரையின் ஸாதனைக்கு இன்னொரு சான்றும் பார்ப்போம். அத்தியாயத் தொடக்கத்திலிருந்து பொதுப்படை உண்மைகளையே படைத்து விட்டதற்கு மாற்றாக, ஜீவித உதாரணக் கதையொன்று காண்போம்.
***
ஒரு கறுப்பர் யுவான் மூரின் மனத்தை மட்டுந்தானா பாபா மாற்றியிருக்கிறார்? எத்தனையோ கறுப்பு உள்ளங்களைப் பொன்னாக்கியிருக்கிறார்!
உடலில் கறுப்பான அவர்களை உள்ளத்தில் கறுப்பாக்கியது வெள்ளைத்தோல் போர்த்திய உள்ளக் கறுப்பர்கள்தான். அவர்களை என்றால் எவர்களை? அந்த ஜிம்பாப்வே எஸ்டேட் தொழிலாளர்களை!
அப்போது அந்த நாடு அதன் ஸ்வதேசிகளான கறுப்பர் சொந்த மொழியில் இட்ட ஜிம்பாப்வே என்ற பெயரில் வழங்கப்படவில்லை. வெள்ளையரான ரோட்ஸின் பெயரில் ‘ரொடீஷியா’ என்றே வழங்கப்பட்டது. வெள்ளையரான இயான் ஸ்மித் ஆட்சியில் ஸ்வதேசிக் குடிகள் பட்ட இன்னலும், அவமரியாதையும் சொல்லி முடியாது. அதன் விளைவாக அவர்களும் ஒத்துழையாதவர்களாக, வன்மப் பழி பூண்டவர்களாக, ஆயினர்.
அச்சூழ்ச்சியில் அநேக எஸ்டேட்களில் ஆனது போல் குறிப்பிட்ட ஒன்றிலும் முதலாளியான வெள்ளையர் தொழிலாளரான கறுப்பரைச் சந்திக்கவே முடியாதபடி இருவரிடையே திரை விழுந்தது. ஏதோ சில வெள்ளை மானேஜர்களே தொழிலாளரிடம் சிறிதளவு தொடர்புகொள்ள முடிந்தது. மற்றபடி தொழிலாளர் வைத்ததே சட்டமாயிருந்தது. அத்தொழிலாளரும் காவல் துறையினரின் கொடூரங்களை ஏற்க வேண்டியதாக இருந்தது.
இச்சமயம் பார்த்து, ஒற்றுமைக்குள் உய்யவே – நாடெல்லாம் (உலகெல்லாம்)
ஒருபெருஞ் செயல் செய்வான்
அந்தக் கள்ளக் கறுப்புள்ள வெள்ளை முதலாளிக்குப் புள்ளி வைத்து, அவரைப் புட்டபர்த்திக்கு இழுத்தார்.
பர்த்திநாதன் ட்ரீட்மென்டில் வெள்ளை முதலாளி மெல்ல மெல்ல மனம் வெளுக்கலானார். அன்பு, ப்ரேமை, சர்வஜன சஹோதரத்வம் ஆகியவற்றில் கொஞ்சம் கொஞ்சமாக நெஞ்சம் கனியலானார்.
ப்ரேம பகவான் அவரை நாஸுக்காகப் பாலிஷ் போட்டார். “டியர் ஸன்” என்று அவரையும் பிரிய புத்ரனாகக் கூப்பிட்டு, “கறுப்பு, வெளுப்பு எல்லாம் எனக்கு ஒன்றே. எல்லாம் என் குழந்தைகளே. ஆகையால் யாவரிடமும் ஸம பாவனையோடு இரு, டியர்!” என்று, முதலாளியின் உள்ளே உபதேச ஜூஸை இறக்கினார்.
‘கறுப்பர், வெளுப்பர் யாவருள்ளும் உறையும் இறைவன் ஒருவனே. அவனையே நம்மை ஆளவிட்டு, அதிலே காணும் இன்பம்தான் நிஜமான ஸ்வதந்திரத்தின் நித்யப் பேரின்பம். அதை விட்டு ஆட்சியாளரென்றும், முதலாளியென்றும் ஒரு இனம் போலாகி, தொழிலாளர் என்ற எதிர் இனத்தை அடக்கி ஆளும் அதர்ம இன்பத்தை நாடுவானேன்?’ – இந்த ஸாயிக் கொள்கை நம் ரொடீஷிய வெள்ளையருக்கு ஏற்புடையதாகி விட்டது.
தைரியம் பிறந்தது. தர்மமும் ப்ரேமையும் தந்த தைரியம். ‘பாபா சொல்லும் தர்மத்தின் சக்தியை, அன்பின் ஆற்றலை நம்பி ஊர் திரும்புவோம். நம் உடன் பிறந்தாரேயான தொழிலாளருக்கும் நமக்குமிடை தொங்கும் பேதத் திரையை ஸாயியின் ஆயுதமான ஒற்றுமைக் கத்தியால் கிழித்துப்போடுவோம்’ என முடிவு செய்தார் அம் முதலாளி.
வாஸ்தவமான அன்புடனே அத்தொழிலாளரைக் கண்டு பேசி உறவாடத் தாபம் கொண்டார். எவரிடம் த்வேஷமும் பயமும் அருவருப்புமே கொண்டிருந்தாரோ அவர்களையே தம் எஸ்டேட்டை வாழ்வித்து வளமுறுத்துபவர்களாக உணர்ந்தார். ‘என்ன பாடுபட்டு உழைத் திருக்கிறார்கள்? எத்தனை கொடிய அடக்கு முறையில் அடிமைப்பட்டு அடிபட்டிருக்கிறார்கள்?’ என்று தம் தொழிலாளர்பால் பரிவும் பரிதாபமும் கொண்டார்.
இப்படியாகத்தானே உருமாற்றம் – உள்ள மாற்றம் – பெற்று அம் முதலாளி நாடு திரும்பினார்.
அங்கு அவரது மானேஜர்கள் கூறிய செய்தி அவரை வியப்பில் ஆழ்த்தியது; ஸாயியிடம் நன்றியில் அவரை மேலும் ஆழ்த்தியது! இவர் புட்டபர்த்தி சென்று சிறிது காலத்திலிருந்தே தொழிலாளிகளின் போக்கு வெகுவாக மாறத் தொடங்கி விட்டதாம்! அவர்களுடைய நடத்தையில் ஓர் இனிமையும் பணிவும் காண்கிறதாம். விட்டுக் கொடுக்கிறார்களாம். ஒத்துழைக்கிறார்களாம்.
அன்று மாலையே அவர்களைச் சந்திக்க முதலாளி ஏற்பாடு செய்தார்.
எதற்கும் தமக்குக் காப்பாக இருக்கட்டும் என்று பெரிய ‘தளவாடங்’களாக ஸாயியின் ஆளுயரப் படங்களைச் சுருட்டி எடுத்துக் கொண்டார். எதிரிப் பாசறையாகவே அவர் இதுகாறும் பயந்துவந்த தொழிலாளர் கூடத்துக்குச் சென்றார்.
அவர்கள் இவரை – இவரது வாழ்வின் புது அநுபவமாக – இன்முகத்தோடும், மரியாதையோடும் வரவேற்றார்கள்.
ஆதியிலிருந்தே அவர்களோடு ஒரு குடும்பமாகப் பழகியது போன்ற உணர்வுடன் இவரும் மனம் விட்டுக் கதை பேசலானார். புட்டபர்த்திக் கதைதான். அங்கே தாம் கண்ட ஸ்ரீ ஸத்ய ஸாயீசன் என்ற பிரேமப் பெருங்காவியத்தைப் பற்றிய கதைதான். அவர் இவருக்கு உபதேசித்த ஸஹோதரத்துவ உபநிஷத்தை இவர் தொழிலாளருக்கு உரைத்தார்.
கதையின் க்ளைமாக்ஸாக, “அந்த பாபாதான் நம் எல்லோருக்கும் தந்தை; வாழுந்துணை. அவர் எப்படியிருப்பார் பாருங்கள்” எனக்கூறிப் படத்திலொன்றைப் பிரித்துக் காட்டினார்!
இவர் நினைத்த க்ளைமாக்ஸ் ஒன்று; நடந்த க்ளைமாக்ஸ் வேறொன்று!
அட, இவருதானா இந்தியாவிலே இருக்கற அந்த பாபா? நமக்கு நல்லாத் தெரிஞ்ச சாமியாராச்சுங்களே!” என்று அந்த நீக்ரோத் தொழிலாளர்கள் ஆர்ப்பரித்தனர்.
முதலாளி அதிசயத்தில் அதிர்ந்தார்.
இப்போது தொழிலாளிகள் அவருக்குக் கதை சொன்னார்கள். பாபாக் கதைதான். புட்டபர்த்தியில் அவர் பாபாக் கதை கண்டு கொண்டிருந்த அதே போதில் அந்த பாபா இங்கே அவரது எஸ்டேட்டிலேயே நடத்திய கதையைச் சொன்னார்கள்.
“நீங்க அங்கிட்டுப் போயிருக்கச்சே, இங்கிட்டு இந்த சாமியாரு நெதமும் வந்துகிட்டிருந்தாரு. நெதம் நாங்க வேலைக்கு ஒண்ணு சேந்த ஒடனே தொடுவானத்திலே இவரு தெரிவாரு. ‘ஒலகத்துலே எல்லாம் நல்லா ஆயிடும். கவலைப்படாதீங்க’ன்னு ஆசீர்வாதம் பண்ணுவாரு. ஒவ்வொரு சமயம் அப்படியே அங்கிட்டிருந்து சேத்துலேயும் சகதியிலேயும் நடந்து வந்து எங்ககிட்டேயே வந்துடுவாரு. ப்ரியம்ம்ம்மா ஒபதேசம் பண்ணுவாரு. ‘நீங்க மட்டும் அன்பாயிருங்க. உண்மையா நடங்க. எல்லாம் நல்லா ஆயிடும். சொதந்திரம், சொதந்திரம்னு யாருகிட்டேயோ வெறுப்பா இருந்துகிட்டு சண்டை போட்டுக்கிட்டு இருக்கீங்களே! இதிலே இல்லாத நெம்மதி, ஸந்தோசம் அன்பாயிருகறதுலே எப்படி ஏராளமாக் கெடைக்குமுன்னு நீங்களே பாத்துக்குங்க!’ – அப்டீன்னு ரொம்பக் கனிவாச் சொல்லுவாரு. தெய்வமாயிருக்கற அவரு கரைச்சுக் கரைச்சுத்தான் எங்க மனஸும் மாறிச்சு” என்று ரொடீஷியக் கறுப்புத் தொழிலாளிகள் கற்பனைக்கப்பாற்பட்ட கருணை அற்புதத்தின் கதை சொல்லி முடித்தார்கள்.
47. கல்லும் மலரும் மணமும்
யுவான் மூர் கதையில் கல் மனஸை மலராக்குவது, அப்புறம் மலரைப் பழமாக்குவது என்றெல்லாம் எழுதிய போது நினைவில் கிளர்ந்த ஒரு லீலை சொல்கிறேன்.
“அன்பு அறுப”தில் (அத், 49) ஸ்ரீ கோகாக் அன்பு வழியில் படுவதற்குக் காரணமாக அவர் கண்ட ஒரு கனவைக் கூறியிருக்கிறேன். அக்கனவில் பாண்டிச்சேரியிலுள்ள ஸ்ரீ அரவிந்தர் ஸமாதியில் கோகாக் மலரலங்காரம் செய்கிறார். அரவிந்தரின் இதய ஸ்தானத்தில் இவர் வைக்கும் ரோஜா அங்கு நிற்காமல் நகர்ந்து சென்று விழுகிறது. தாம் அன்பில் மலராததே இதற்குக் காரணமென கோகாக் அறிவுறுத்தப்படுகிறார். அந்தக் கதை இருக்கட்டும்.
துளஸம்மா என்று கல்வித்துறையில் பணிபுரிந்த ஓர் அம்மாள் பெங்களூரில் இருக்கிறார். இவர் வீட்டில் ஸ்வாமி மழையாகப் பொழிந்திருக்கிறார் – தெய்வ விக்ரஹங்களையும், பிற சமயங்கள் உட்பட்ட பல மதச் சின்னங்களையும், அந்த அம்மாள் அரவிந்தாச்ரமம் சென்றார். கனவில் அல்ல. நனவிலேயே!
அங்கே வழக்கம்போல் ஸமாதியை வண்ணமுறப் புஷ்பாலங்காரம் செய்திருந்தது. அதில் ஒரு புஷ்பம் துளஸம்மாவின் சிந்தையைக் கவர்ந்தது. தன்னையும் மீறிய ஓர் உந்தலில் அவர் அப்பூவைச் சட்டென்று எடுத்துக் கைக்குட்டையில் சுற்றிக்கொண்டார்.
உடன் வந்தவர்கள், “என்ன இப்படி முறை தப்பிச் செய்கிறீர்கள்? ஸமாதி அலங்காரத்தைக் கலைக்கவே கூடாதே!” என்றனர்.
“நான் என்ன செய்வேன்? என்னையும் மீறிய ஏதோ வேகத்தில் செய்து விட்டேன்” என்றார் துளஸம்மா.
“அதென்ன அப்படிப்பட்ட அதிசயப் பூ?” என்று அவர்கள் கைக்குட்டையை வாங்கிப் பிரித்துப் பார்த்தனர்.
அத்தனை கண்களும் ஆச்சர்யத்தில் குத்திட்டன.
லாக்கெட்டாக உருமாறியிருந்தது அந்தப் பூ.
லாக்கெட்டில் பூ–இதயப் புருஷோத்தமன் பாபா!
கல் மனஸை மலராக்குபவன் மலரைக் கெட்டி உலோகமும் எனாமலும் கொண்ட லாக்கெட்டாக்கி, அந்தக் கெட்டிக்குள்ளேயே தமது புஷ்ப இதயத்தையும் காட்டி விட்டான்!
ஆனாலும் இப்போது அந்தப் பூ மணமற்ற பண்டமாகிவிட்டதே! இதற்கும் அந்தப் புஷ்ப ஹ்ருதய புருஷோத்தமன் முன்கூட்டியே நஷ்ட ஈடு செய்திருக்கிறான். ஆம், பதின்மூன்றாண்டுகளுக்கு முன் துளஸம்மாவுக்கு அவன் ஒரு மோதிரம் தந்தான். கெட்டியான வெள்ளி மோதிரம். அதிலும் பூ இதயன் அபய ஹஸ்தனாய் நிற்பான். அது மாத்திரமல்ல. கெட்டியாய் உலோஹத்தாலான அந்த மோதிரம் கமகம என்று பரிமள மணம் வீசும்! அந்த மணத்திலேயே ஒரு தெய்விகம் இருக்கும். பாபா ‘அம்ருதம்’ என்பதாக அளிக்கும் அதிசய திரவத்தின் மணத்தையே இறுக்கினாற்போலிருக்கும் மோதிர வாஸனை!
துளஸியம்மனைத் துதித்த தியாகராஜர், “…நீ பரிமளமுது கநி… தாமரஸ தள நேத்ருடு… ப்ரேமதோ சிரமுந பெட்டு கொந்நாட்ட.” “உன் நறுமணம் கண்டு தாமரைக் கண்ணன் உன்னைச் சிரத்தில் அணிந்து கொண்டுள்ளான்” என்றார். ஸாயிக் கண்ணனோ துளஸம்மா கையில் அணிய பரிமள மோதிரம் தந்தான்!
48. ‘வெறும்’ விளையாட்டு!
‘ஹக்கிள்பெர்ரி ஃபின்’ என்ற நாவலைப் பற்றி அதன் ஆசிரியரான மார்க் ட்வைன் சொன்னார்: “இந்தப் புஸ்தகத்தில் ஏதேனும் நோக்கமிருக்கிறதா என்று காண முயல்வோரின் மீது வழக்குத் தொடுக்கப்படும்! இதிலே ஏதும் நீதி காண முயல்வோர் பஹிஷ்காரம் செய்யப்படுவர்! இதில் திட்டமிட்டு விரித்த கருத்தமைப்பு எதுவும் கண்டுபிடிக்கப் பிரயத்னம் செய்வோர் சுடப்படுவர்!”
குறிப்பாக ஒரு நோக்கம், நீதிப் படிப்பினை, ஒரு ஸாரக் கருத்தின் விவரிப்பு தெரியாமலே வெறும் விளையாட்டாகவும் மஹாவதாரன் பச்சைக் குழந்தையைப் போல் எத்தனையோ செய்கிறார். அதற்காக அவை பயனற்றவை எனலாமா? “ஹக்கிள்பெர்ரி ஃபின்” படித்து எத்தனை பேர் கவலை மறந்து களித்துச் சிரித்திருக்கிறார்கள்? அந்தச் சிரிப்பைவிட உத்தமமான திவ்ய ப்ரேமைச் சுவை ஏறிய சிரிப்பை அல்லவா ஐயனின் வெறும் விளையாட்டு உண்டாக்குகிறது? அது குற்றமற்ற ஆனந்தம் தருகிறது; தெய்வத்தின் ஆனந்த கேளியை நினைவூட்டி, அதில் பங்குகொள்ளும் ஆனந்தத்தையாக்கும் தருகிறது! அதோடு தெய்வப்பிறவி எத்தனை லேசாய், குறும்பாய் விளங்கி மனஸை அபஹரிக்கிறாரென்று காட்டுகிறது. “மனஸை அபஹரிப்பது” என்பதால் அவரது ஜீவனான ப்ரேம தத்வத்திலாக்கும் கொண்டு நிறுத்துகிறது! இதற்கு மேல் என்ன நோக்கம், என்ன நீதி, என்ன ஸாரமான கருத்துக் கரு அமைப்பு வேண்டும்? ஸத்ய ஸாயி செய்வது அனைத்துமே ஹ்ருதயத்துக்கு இனிப்பதாதலால் இதுவும் இனிக்கிறதே! இதற்கு மேல் என்ன வேண்டும்?
வல்லபாசார்யர் கண்ணனைக் குறித்த ஸர்வமும் இனியது, “அகிலம் மதுரம்” என்றார். அதிலே அவனது ‘வமனம் மதுரம்’ என்கிறார். ஆம், அவன் வாந்தி செய்தால்கூட, யமுனா நதி நீரை வாயால் கொப்பளித்தால் கூட, அதுவும் இனிய செயலாகவே இருக்கிறதாம்!
***
திருச்சி பிருஹத்குசாம்பாள் வீட்டில் ஸ்வாமி படத்துக்கு அவர் நிவேதிக்கும் காபியை ஸ்வாமி மெய்யாலுமே பருகி டம்ளரைக் காலியாக்குவார். ஒரு நாள் எவரோ, ஏதாவது பூனை, கீனை குடித்திருக்குமென்றார். அவர் அப்படிச் சொல்கிறாரே என்று பக்தை வேதனைப்பட்டார். உடனே படத்தின் வாயிலிருந்து ‘குபுக்’கென்று அத்தனை காபியும் வெளி வந்தது! இப்போது தெரிகிற தோல்லியோ, வமனமும் மதுரமாயிருக்க முடியுமென்று?
***
1982–ல் ஜெர்மன் ஏடு ஒன்றில் வெளிவந்த விஷயம். பெர்லின் அருகே ஒரு தோப்புக்குள் வசிக்கும் ஒருவருக்கு ஆன்மியப் பற்று அதிகமுண்டு. ஆயினும் அவர் பாபா பற்றிக் கேள்விப்பட்டதில்லை. ஒருநாள், “ஸாயி பாபா பேசுகிறேன்” என்று அவருக்கு ஃபோன் வந்தது. இவர் தம் முகவரி தராவிட்டாலும் அந்த ஸாயி பாபா அதற்கப்புறம் இவருடைய வீட்டுக்கே வந்து விட்டார். இவர் கூறும் அங்க வர்ணனையிலிருந்து – குறிப்பாக முடி வர்ணனையிலிருந்து நம் ஸத்ய ஸாயி பாபாதானென்று நன்றாகத் தெரிகிறது. இவரது நிகழ் பிறவி, முற்பிறவிகளைக்கூட அவர் சொன்னதிலிருந்து இது மேலும் உறுதியாகிறது.
அவர் தம்மையும் குறித்து, “நான் ஷீர்டி என்ற இடத்தில் முற்பிறவி கொண்டு இப்போது புட்டபர்த்தியில் இருக்கும் யுகாவதாரன்” என்றும் சொல்லியிருக்கிறார். முடிவாக ஒரு மெடலும் ‘வரவழைத்து’ பெர்லின்வாஸியின் கையில் போட்டு, அவர் ஆச்சரியத்திலிருந்து விடுபடு முன்னரே பேராச்சரியமாக அந்தர்தானமும் ஆகியிருக்கிறார்.
பிற்பாடு பாபா படங்கள் கண்டபின் பெர்லின் வாஸிக்கு, “இவரேயல்லவா நம்மோடு ஃபோனிலும் நேரிலும் தொடர்பு கொண்டவர்?” என்று தெரிந்தது.
இதில் ‘வெறும்’ லீலையாக ஒரு அம்சம் பாருங்கள்: நவகால ஆடை விசித்ரங்களைச் சாடும் பாபா அப்போது தாமே ஜீன்ஸும், டீ ஷர்ட்டும் அணிந்தாக்கும் சென்றிருக்கிறார்! அப்படித்தான் பெர்லின்காரர் வர்ணிக்கிறார்.
***
மலேஷியாவிலிருந்து வந்து ஜாம்ஷெட்பூரில் குடியேறியுள்ள ஸ்ரீமதி ஞானசோதிக்கு ஸ்வாமி பல கனவு தரிசனங்கள் தந்திருக்கிறார். அவற்றில் முதலில் பரம சாஸ்திரோக்தமாக வேஷ்டி கட்டிக்கொண்டு, வெற்றுடம்பராகச் சென்று தம் வக்ஷஸ்தலத்திலுள்ள கருடச் சின்னம் காட்டினார். அப்புறமெல்லாம் ‘பர்த்தி’க்குப் பழிவாங்குகிறாற்போல நூதன நூதனமான ‘mod’ உடுப்புக்களிலே காட்சி கொடுத்திருக்கிறார் நம் பர்த்திநாதர்!
(“அப்போ எங்களை மட்டும் ஏன் கண்டிக்கிறாராம்?” என்று கேட்கும் நாகரிகப் பிரியர்களே! அவர் போல உங்களாலும் பெர்லினில் தோன்றவும் மறையவும் முடிந்தால், அவர் ஞானசோதிக்கு அருளும் பிரச்னைத் தீர்வுகளை உங்களால் அளிக்க முடிந்தால், அப்போது உங்கள் ஸூக்ஷ்ம ரூபத்திலும், ஸ்வப்பன தேகத்திலும் தாராளமாக ‘மாட்’ உடை போட்டுக் கொள்ளுங்கள்!)
***
ஃபிஜியில் ஸாயி பஜனைக்கூடத்தில் விளக்கு எரிய எரிய அதில் வார்த்திருந்த எண்ணெய் மேன்மேலும் பெருகி வழியத் தொடங்கியிருக்கிறதே! ‘இயற்கை விதி என்ற மஹாசக்தி எப்படி என் விளையாட்டுக்கெல்லாம் வளைந்து கொடுக்கிறது. பார்!’ என்று அவதாரன் காட்டுவது போலில்லை? மலைக்கக் காட்டாமல் லேசாய்க் காட்டுகிறான் இறையாற்றலை!
லோவென்பெர்க் டர்பனில் வஸித்தபோது அவரது பூஜையறை ஊதுவர்த்தியொன்றில் சாம்பல் அழகாக ‘S’ உருவில் வளைந்து உருவாயிற்று. அது அப்படியே ஒன்பது மாதங்கள் தொங்கிக் கொண்டிருந்தது!
***
அன்புள்ளத்தோடு அன்னையாய் லீலா விநோதம் காட்டுவதற்கு ஒரு எடுத்துக்காட்டு:
பாத மந்திர* நாள்கள். ஜயலக்ஷ்மி கோபிநாத்தும் அவரது தாயும் அங்கு பூரி இட்டுப் பொறித்துக் கொண்டிருந்தார்கள். யௌவன ஸாயி குழந்தை ஸாயி போலே வந்தார். கொஞ்சம் மாவை எடுத்தது குஞ்சு விரல். ஐயனே அதைப் பூரியாக இட்டார். இட்டதை வாயால் ஊதினார். அந்த ஊதலிலேயே அது பூரித்து, எண்ணெயில் போடாமலே, பூரியாயிற்று! இன்னமும் விளையாட்டு வேண்டியிருந்தது குழந்தைக்கு! பூரியை எண்ணெயில் நாசூக்காக விட்டார். அது பொறிந்தவுடன் எடுத்தால் – உள்ளே பூர்ணம் வைத்த இனிய ஸோமாஸாக ஆகியிருந்தது!
* 1950-ல் தற்போதுள்ள பிரசாந்தி நிலயம் அதன் மூல உருவில் கட்டப்பட்டதற்கு முன்பு ஸ்வாமி இருக்கை கொண்ட ஆச்ரமம்.
உள்ளே மதுர பூர்ணம்; அதுவே அகிலமும் மதுரமாக்குகிறது – இதுதானே நம் அருமை ஸ்மாமி?