சத்ய சாய் – 15

43. கொள்ளையரைக் கொள்ளை கொண்ட ஐயர்!

மாகுமாரிதன்னையே மையமாய்க் கொண்டு, தன் வினையும், தன் தாய்மைத் தாகமும் தணிய வேண்டுமென்பதற்காகவேபத்மாவை ஸ்வாமி மாற்ற வேண்டுமென வேண்டியது போலில்லை இது.

மாற்றப்பட வேண்டியவர்பத்மாவைப் போல் பக்தையாயின்றி மிகவும் தாழ்நிலையிலிருந்தவர். ஆனால் அவள் மாதிரி மனத்தை மாற்றிக் கொள்வதில்லை என்று அடைத்துக்கொண்டு பிடிவாதமாயில்லாதவர்.

இம்மாதிரி, தன்னை மையமாய்க் கொள்ளாமல் மாற்றப்பட வேண்டியவரின் நலனை மையமாய்க் கொண்டே இன்னொருவர் மனமுருகிப் பிரார்த்தித்தால்,

அம்மனமாற்றத்தை நல்கிப் பித்தம் தெளிவிக்கும் மருந்தாகத் தன்னால் இருக்க முடியுமென்று ஸ்வாமி காட்டுவதற்கு,

ஓர் அரிய உதாஹரணம் பார்க்கலாம்.

யுவான் மூர் எனும்கறுப்பு அமெரிக்கர்’ (என்கப்படாநின்ற நீக்ரோ) கருமையிலும் கருமையான தொழிலில் ஈடுபட்டவர்.

எப்பேர்ப்பட்ட இனிமையிலிருந்து அவர் அந்தக் கருமைக்குப் போனாரென்று பார்த்தால் கருமத்தின் வன்மை தெரியும். (கடைசியில்வன்மக் கருமத்தையும் கருவறுத்தகருணையின் அருமையும் தெரியும்.)

ஸெய்ன்ட் லூயியைச் சேர்ந்த அவர் ஆழ்ந்த மதாபிமானக் குடும்பமொன்றைச் சேர்ந்தவராதலால், சிறு வயதிலேயே இறைப்பற்றுக் கொண்டிருந்தார். பன்னிரண்டாம் வயதில் சர்ச்சின் திவ்ய இசையில் உள்ள நாட்டத்துக்காகவே ஒரு மெதடிஸ்ட் சர்ச்சில் சேர்ந்து அதன் இசைக் குழுவான க்வீரில் (Choir) சேர்ந்தார். ஆண்டவனில், கிறிஸ்துவில் இசைமூலம் அமிழ்ந்தாடினார். அதன் கொடையாக, சர்ச்சின் வண்ணக் கண்ணாடியில் தம் கண் பதிந்தபோதெல்லாம் அதில் கிறிஸ்துவே நிற்பதாகக் கண்டு மகிழ்ந்தார்!

ஆனால் பாலப் பிராயம் காளைப் பருவமான போது இவ்வினிய தளிர்ப்பு வற்றத் தொடங்கியது. சர்ச்சுக்கு வருபவர்கள் அதற்கு வருவதற்கு முதல் நிமிஷமும், அதிலிருந்து வெளியேறிய மறு நிமிஷமுமே கிறிஸ்துவின் உபதேசங்களுக்கு முற்றிலும் மாறாக நடப்பதைப் பார்த்துத் துவண்டார், யுவர் யுவான். அவர்களிடம் சினம் கொண்டார். கண்ணாடியில் தெரிந்த கருணாமயனிடம் சினம் கொண்டார். கருணாமயனாக உலகைத் திருத்திக் காவாமல், அவர் ஏன் சர்ச்சுக்கு வரும் வேஷதாரிகளைப் பார்த்துக்கொண்டு வெறுமே நிற்கிறார் என்கிற சினம்! சர்ச்சை விட்டு வெளியேறினார்.

வீட்டு நிலவரமும் சரியாயில்லை. பெற்றோர் விவாஹரத்தில் பிரிந்தனர். வளர்ப்புத் தந்தையிடம் வாழ்ந்த பதினைந்து வயது யுவானுக்கு அவரிடம் அன்பாதரவு கிடைக்கவில்லை. வீட்டையும் விட்டு வெளியேறினார், அதனால் படிப்பையும் விட்டு, ஜீவனோபாயமாக ஒரு தொழிலில் புக வேண்டியதாயிற்று.

ஹோட்டல் ஒன்றில் தட்டு கழுவும் பணியாளாய்ச் சேர்ந்தார்.

மனோரீதியில் மட்டுமின்றி வெளி வாழ்விலும் இனிமையிலிருந்து கருமைக்குச் சென்று கொண்டிருந்த யுவானுக்கு இதன்பின் வெளிவாழ்வில் வெளிவாழ்வில் மட்டுமேஅதிருஷ்டத் திருப்பங்கள் பல ஏற்பட்டன. முடிவில் கறுப்பு மனிதர் யுவான் வெள்ளையரின் கிளப் ஒன்றில் உதவி மேலாளர் ஆனார். வெள்ளைக்காரி வர்ஜீனியாவை 1972-ல் தமது முப்பதாம் வயதில் வாழ்க்கைத் துணை கொண்டார்.

அப்புறம் ஒரு பெரிய சறுக்கல், மேலாளராக இவருக்கே கிடைத்திருக்க வேண்டிய பதவி உயர்வானது இவர் நம்பிக்கை வைத்திருந்த ஒருவரின் விச்வாஸ த்ரோஹத்தால் ஒரு வெள்ளையரைச் சென்றடைந்தது.

இனப் பகைமையின் அச்செயல், ஏற்கெனவே கெட்டிருந்த இவரது உள்ளினிமையில் மேலும் புகையை ஏற்றியது. க்ளப்பை விட்டு வெளியேறினார். கறுப்பர்கள் கட்டுக்கோப்போடு ஒன்று சேர்ந்து தாங்களே தங்களுக்கெனத் தொழிலகங்கள் எழுப்பிக் கொள்ளாததுதான் அவர்கள் இழிவுப்படுத்தப் பெறுவதற்கு மூல காரணமெனக் கருதினார். அவர்களை ஒரு கட்டுக்கோப்பில் கொண்டுவர முயற்சி எடுத்தார். முடியவில்லை. முடிவில், அவர்களில் கட்டுப்பாடேயில்லாத போதைப் பொருள் அடியார்களான ஒரு கூட்டத்தில் யுவானும் ஒருவரானார்!

குடியும், கொக்கெய்னுமாகக் கும்மாளி போட்டார். பாலப் பருவத்தில் ஈசனைப் பாடி யேசுவைக் கண்டவர். கறுப்பு ஹிப்பிகளில் ஒருவராக விசித்ர உடைபோட்டு, விசித்ர பாஷை பேசி மகிழ்ந்தார். விதியின் விசித்ரந்தான்!

ஆதிகாலத்திலிருந்து உள்ளூறிய தொழில் முறைமையினால் இப்போதும் பலரை ஒன்று சேர்த்து ஏதோ ஒரு தொழிலில் ஈடுபடவேண்டும் என்ற ஆர்வம் இருந்துகொண்டேயிருந்தது. தமது அற்புத சகாக்களைக் கொண்டு அவர் இவ்வாறு உருவாக்கக் கூடியதாக இருந்த ஒரே தொழில் கொள்ளையடிப்பாகத்தான் இருந்தது!

பாவம் கொள்ளைக்கூட்டத் தலைவரே ஆகிவிட்டார் யுவான் மூர்!

அதே போதில், அதற்கு வேண்டிய பயங்கர ஸாஹஸ ஊக்கத்தைக் குலைக்கும் ட்ரக்குகளின் ஆதிக்கத்துக்கும் ஆளாகி, புத்தி மந்தமானார். எம்ஃபெஸிமா நோய்க்கு ஆளாகி ரத்தம் கக்கத் தொடங்கினார்.

இவர் கதை இப்படி இருக்கஇவரிடம் அதிசயக் கற்பு விச்வாஸம் கொண்டு, தின க்ரமேண இவர் அக்ரமத்தில் முன்னேறுவது கண்டு தவித்த வெள்ளைக்கார வர்ஜீனியாவின் கதைச் சுருக்கம் பார்ப்போம்.

தியஸாஃபிகல் ஸங்கத்தைச் சேர்ந்த அவளைக் கலிபோர்னியாவிலிருந்த அவளது சஹோதரன் ஒரு ஸாயி பஜனைக்கு அழைத்துச் சென்றான். அன்றே அப்போதே அவள்அவதார்ஸாயியின் அடியாளாகிவிட்டாள்.

ஸாயி நூல்கள் நிறையப் படிக்கலானாள். அவற்றிலிருந்து ஐயனது மணிவாசகங்கள் பலவற்றைப் பொறுக்கியெடுத்து, அட்டைகளில் எழுதி வீட்டின் பல பகுதிகளிலும் வைத்தாள்அதில் எதுவேனும் கொள்ளைக் கணவனின் ட்ரக் போதையையும் மீறி அவர் கண் வழியே கருத்துள் புகாதா என்ற தாபத்தினால்! வாய் வார்த்தையாக இவளே எடுத்துச் சொல்லக்கூடாதா என்றால், இப்போது அத்யாவசியமாக ஒரு சொல், இரு சொல் பேசிக் கொள்வது தவிர தம்பதியரிடை உரையாடலே நடக்க முடியாத உறைபனி இறுக்கம். இத்தனைக் கூத்தும் அவர்களுக்குத் திருமணமாகி ஓராண்டளவிலேயே நடந்திருந்தது!

யுவான் பூர்வத்தே கை தொழுத தெய்வத்தின் காப்புக் கரமும் ஒரு மூலையில் செயற்பட்டே வந்தது. கொள்ளைத்தொழிலிலும் ஸரி, ஹிப்பிக் கோஷ்டியின் வெறியாட்டத்திலும் ஸரி, பயங்கரத் தாக்குதல்கள் ஸஹஜமாக நடப்பதுண்டு. இவரது பன்னிரண்டு ஸகாக்களில் பத்துப் பேர் இவற்றிலொன்றில் ஏற்பட்ட தாக்குதலில் சில ஆண்டுகளுக்குள்ளேயே இறந்து போயினர். இவர் மட்டும் ஒருவரையும் ஒருபோதும் தாக்கியதில்லை, இவரையும் ஒருவரும் ஒருபோதும் தாக்கியதில்லை!

மணமான ஓராண்டுக்குப் பின் யுவான் ஒரு பெரும் பாங்குக் கொள்ளைக்குத் திட்டமிடலானார். மூன்று ஸகாக்களோடு சேர்ந்து ஒரு குட்டை மேஜையின் பக்கத்தில் தரையில் உட்கார்ந்து கொண்டு கொள்ளைத் திட்டத்தின் ()கார்ய ()க்ரமத்தை நுணுக்கமாக உருவாக்கலானார்.

ஆனால்யமப் போடு’ (big kill) என்று இவர் ஆர்வமாய் எதிர்பார்த்த கொள்ளைமுஹுர்த்தம்வந்தபோது மூன்று ஸகாக்களும் இவருக்குக் கை கொடுக்காமல் அஞ்சியோடித் தலைமறைவாகி விட்டனர். அதன் விளைவாக, வெள்ளையர் க்ளப்பில் போலவே, ‘சொந்தக் கறுப்பரின் கொள்ளைக் கூட்டம் குறித்தும் யுவானுக்கு அலுப்பு. எரிச்சல், ஆசாபங்கம் மூண்டன.

இவற்றையெல்லாம் மறக்க ட்ரக் தேவதையிடமே முன்னிலும் பக்தியாக சரன் செய்தார்.

போதையுச்சியில் கடவுளிடம் கடுமையாக வாதம் செய்தார். வாதம் செய்தபடித் தம் வீட்டினுள் தள்ளாட்ட தடுமாற்ற நடையில் வீறு ஏற்றிக்கொள்ள முயன்றவாறு அலைந்தார். “என்னய்யா கடவுள் நீ, உலகத்தைக் கவனித்துக் கொள்ளக் கொஞ்சங்கூடத் துப்பில்லாமல்?”

தள்ளாட்டத்தில் வீறு ஏற்றச் செய்த முயற்சி பலிக்கவில்லை. தலைசுற்றித் தடுக்கி விழுந்தார். யமப்போடு போடத் திட்டம் தீட்டினவரே, குட்டை மேஜை விளிம்பில் நெற்றி மோத, நெடுமரமாகச் சாய்ந்தார்.

தலையில் பட்ட அடியே அவருடைய தலைச் சுற்றலைச் சற்றுத் தெளிவித்தது. மேஜை மீது வர்ஜீனியா வைத்திருந்த மணிவாசகம் அவரது அறிவுப் புலனின் பிடிப்புக்கு வந்தது.

அட்டையிலிருந்து ஸாயிநாதன் மணி மொழி புகன்றான்: “I am God – there is no one who can stop My work” “நான் இறைவன்என் காரியத்தை நிறுத்த எவருமில்லை.”

ஆம், யுவானாலேயே தடுத்து நிறுத்த முடியாதபடி அவரை ஆட்கொள்ளும் காரியத்தை இறைவனவதாரர் நிறைவேற்றத்தான் போகிறார். ஏனென்றால், வர்ஜீனியா ஸ்வயமையமாயின்றி, கல்லானாலும் கணவன் என்று அக்கல்லை மையமாக்கி அது கனிவதற்கு ஸ்வாமியிடம் இதய பூர்வமாக வேண்டி வருகிறார். இந்தக் கல்லும் ஸந்தர்ப்ப நெரிசலாலே அப்படியான ஒரு மலர்தான். இப்போது அதை மீண்டும் மலராக்கி அப்புறம் கனியாக்கலாம். ஏனெனில்கல்லாகவேதான் இருப்பேன்என்ற பிடிவாதம் அதற்கில்லை. மனக் கதவை அது தாழ்போட்டுக் கொண்டுவிடவில்லை. அதனாலதான்நான் இறைவன்என்ற அட்டை எழுத்துக்களின் வழியே விதியின் எழுத்தை அழிக்க வித்திட்டார் வித்தகர்.

நெற்றியில் முட்டிய காயத்திலிருந்து யுவானின் குருதி சொட்டிற்று குருதி மட்டுமல்ல, அதில் ஊறியிருந்த போதைப் பொருளின் அஸூர பல மோஹத்தையும் அச் சொட்டுக்களின் மூலம் ஸ்ரீ ஸாயிநாதர் வடித்து வெளியேற்ற ஸங்கற்பித்திருந்தார்.

வர்ஜீனியாவை அழைத்துக் கேட்டார் யுவான், “Hey! Who is this guy – SAY BABY?… When did he die?” “அடியே, யார் இந்த ஆசாமிஸேய் பேபிஎப்போ அவர் செத்தார்.”

யுவான் இப்படித் திருவாய் மலர்ந்ததையே அந்தக் கல்லும் மலராக வாய்ப்புண்டு எனக் காட்டும் அறிகுறியாகக் கொண்டு வர்ஜீனியா மகிழ்ந்தோடி வந்தாள் ஏனெனில், போதையில் கிறங்கிய யுவானும் ஒரு வாசகத்தைப் படித்துப் பார்த்து, அதை இன்னார் சொன்னாரென்று ஒரு தப்புப் பெயரிலாவது புரிந்து கொண்டு, மேல் விவரம் கேட்கிறாரே! நெடுநாளுக்குப் பின் அவளைக் கூப்பிட்டு, அவள்தான் அந்த அட்டை அங்கு வரக் காரணம் என்று புரிந்து கொண்டு, கேள்வி கேட்கிறாரே!

பாபா யார் என்று யுவான் கேட்டதுதான் தாமதம், அதற்காகவே காத்திருந்த வர்ஜீனியா அவரது அருமை, பெருமை, இனிமை, மஹிமைகனைக் கூற ஆரம்பித்து விட்டாள்.

விதியின் எழுத்தைக் கிழித்தாச்சு; முன்னே விட்ட குறை வந்து தொட்டாச்சு என்று யுவானும் பாபா பிரபாவத்தில் முழுகலானார். ஸாயி நாமப் பிரவாஹத்தைப் பருகலானார்.

ஆரமு துண்ணுதற் காசைகொண்டார் கள்ளில்
அறிவைச் செலுத்து வாரோ

என்பதற்கேற்ப நாமாம்ருத பானம் செய்தவர் மதுவையும், ட்ரக்கையும் தொலைத்துத் தலை முழுகினார்.

ஸத்ய ஸாயியின் நித்ய அற்புதங்களிலும் வெகு அபூர்வமேயான உள்மன மாற்றம் பெற்று, பத்தரை மாற்றுத் தங்கமாகும் பாதையில் முன்னேறும் பாக்கியம் கறுப்பருக்குக் கிடைத்தது. “பரிசித்து வேதி செய்து பத்து மாற்றுத் தங்கமாக்கியே பணி கொண்ட பக்ஷத்தை என் சொல்லுகேன்?” என்று ஸாயிக் கருணையை வியந்த வண்ணம் அவரிடம் உள்ளத்தைக் கொள்ளை தந்தார் கொள்ளைக்காரக் கறுப்பர். அப்பாதையிலே காக்கும் கரம் அவரை எப்படி அழைத்துப் போயிற்று என்று அடுத்த அத்தியாயத்தில் காண்போம்.

44. கறுப்பரின் களிம்பு தேய்த்த காதை

னையாள் மூலம் யுவான் மஹிமாவதாரி பற்றிக் கேட்கத் தொடங்கிய மூன்றாம் நாளிரவு. அவருடைய கனவில் ஒரு பிரம்மாண்டமான கரம் தெரிந்தது. பிரம்மாண்ட நாயகனின் கரம்தானென ஐயமறப் புரிந்து கொண்டார். அதுவா!” என இவரை அழைத்தது.

மறுநாள் காலைதான் அத்தனாம் பெரியதாய்க் கனவில் வந்த அத்தனின் அத்தம் இவருக்குத் தெரியாமலே இவருள்ளே போய் என்ன அற்புத கிருத்யம் செய்து விட்டதென்று தெரிந்தது! இவருடைய சித்தத்திலிருந்த மது தாகம். ட்ரக் வேட்கை, புலால் மோஹம் ஆகியவற்றையெல்லாம் அந்தக் கை அப்படியே அழுந்தத் துடைத்து அப்புறப்படுத்தியிருக்கிறது! அதற்கெல்லாம் மேலாகத் திருட்டுப் புரட்டு எண்ணத்தை அந்தத் திருட்டுக் கை அப்படியே புரட்டிப் போட்டுவிட்டது! ஹிப்பியின் விசித்ர ஆடை, விசிதர மொழி ஆகியவற்றையும் அவ்விசித்ரக் கை யுவானிடமிருந்து கொய்து கொண்டு போய்விட்டது!

இந்நாள் வரை இவரது சகபாடிகளாக இருந்தவர்களிடம் இவரது சக உணர்வு தேய, அவர்களுக்கும் இவரது திடீர்ஆசாரம்புரியாமல், பிடிக்காமல், தாங்களாகவே விலகினார்கள்,

விமோசனப் பாதைக்கு வந்தார் யுவான்.

இதற்கெல்லாம் தூண்டுகோலாயிருந்த உத்தம ஸதியாள் வர்ஜீனியாவின் புண்யத்தில் ஸத்ஸங்கத்தில் புது ஸஹபாடிகளைப் பெற்றார் யுவான். ஸெயன்ட் லூயியின் ஸத்ய ஸாயி கேந்திரத்தில்தான்.

கேந்திரத்தில் இவர் தொடர்பு கொண்ட ஓரிரு நாளிலேயே அதை நடத்திய தலைவர் இவரிடம் ஓர் ஆச்சரியமான கோரிக்கை விடுத்தார்: “இனிமேல் இந்தக் கேந்திரத்தை உங்களுடைய வீட்டில் நடத்துங்களேன். நான் கலிஃபோர்னியாவுக்குப் போகிறேன். இனி இங்கே ஸாயி ஸங்கம் உங்கள் பொறுப்பில் வளரட்டும்என்றார்!

யுவானுக்கு இப்பேறு கிட்டுவதில் மட்டற்ற மகிழ்ச்சி ஏற்பட்டது. ஆயினும் உடனேயே ஒரு யோசனை, தயக்கம், கலக்கம் உண்டாயிற்று. இவரது வீட்டு மாடியில் இவரை விடவும் பெரிய ஒரு பயங்கரக் கொள்ளைக் கூட்டத்தலைவர், ‘காங்க்லீடர்எனப்படுபவர், வாடகைக்கு வஸித்து வந்தார். அப்படிப்பட்டவருள்ள வீட்டில் ஸத்ய ஸாயி ஸத்ஸங்கமா? அவரைக் கிளப்பலாமே என்றால், இவர் அம்முயற்சி செய்யப் போய் அவர் இவரை உலகத்தை விட்டே கிளப்பிவிட்டாரானால்? இந்தத் தயக்கம் ஏற்பட்டாலும் ஸாயிநாதனிடம் உண்டாயிருந்த நம்பிக்கையினால் தம் இல்லத்தில் கேந்திரம் வைத்துக் கொள்ள யுவான் ஸம்மதம் தெரிவித்துவிட்டார்.

பாபா பற்றியமூவிபார்த்து பக்தியிலேமூவ்ஆகி, கட்டுக்கட்டான பாபா படங்களுடனும், விபூதிப் பாக்கெட்டுகளுடனும் யுவான் வீடு திரும்பினால்

வாசலிலே ஒரு லாரி. அதிலே ஒரு வீட்டுக்கான சகல ஃபர்னிசர், மற்ற உடைமைகள் யாவும் அதி அவசரமாக ஏற்றப்பட்டு வந்தன. பரபரவென்று யுவானிடம் காங்க்லீடர் ஓடிவந்தார். “என் தலைக்கு மேலே ஆபத்து! நான் விரைவில் தப்பி ஓடினால்தான் உண்டு. அதனால்தான் நீ வரக்கூடக் காத்திராமல் போர்ஷனைக் காலி செய்து, கிளம்பத் தயாரானேன்,” என்று படபடத்து விட்டு வாடகைப் பணத்தையும் திணித்து விட்டே லாரியில் ஏறிப் பறந்தார் காங்க்லீடர்!

திருடர் தலைவர் புறப்பட்ட பின்பே, “திருடர் தலைவா” – “தஸ்கராணாம் பதிஎன வேதம் சொல்லும் பிரபஞ்ச லீடர் படங்கள் உருவில், விபூதிப் பாக்கெட் வடிவில் யுவானின் வீட்டுள் புகுந்த அழகை என்ன சொல்ல?

இவர் வீட்டில் அவர் புகுந்தது இவருக்குப் போதவில்லை. “வா!” என்று விச்வாகாரமான கரம் காட்டி அழைத்தாரே, அதனால் அவரது வீடான ப்ரசாந்தி நிலயத்துக்குப் போகும் ஆசை யுவானுக்குத் தீவிரமாக மூண்டது. ஆனால் அவர் இவர் வாழ்வில் பிரவேசித்தவுடன் இவரது கொள்ளைத் தொழில் கொள்ளை போய்விட்டதே! இந்தியாவுக்குச் சென்று திரும்பும் செலவை இப்போது இவர் எப்படி எண்ணிப் பார்க்க இயலும்?

இவர் எண்ண முடியாததைச் செய்ய எண்ணம் கொண்டார் ப்ரசாந்தி வீட்டுக்காரர். இவரது ட்ரக் விழுங்கிச் சகபாடியரில் ஒருவரான க்ரேடா வாரன் என்பவள் இவர் ஸாயி பக்தரானது தெரியாமலோ என்னவோ, இவரைப் பார்க்க வந்தாள். தமது போதைப்பழக்கத்தை ஸாயி விழுங்கி விட்டதை இவர் அவளிடம் சொன்னார். அவரைப் பற்றி யுவானும் வர்ஜீனியாவும் சொன்னதைக் கேட்கக் கேட்க அவளுக்கு வியப்பாகி விட்டது. ‘அவதார்என்றா சொல்லிக்கொள்கிறார்? தாம் இறைவனென்றும், தம் காரியத்தை யாரும் நிறுத்த முடியாது என்றுமா சொல்கிறார்? யுவான்! நீ ஒன்று செய்யேன்! அவருடையஆஷ்ரமுக்கேதான் போய்ச் சிறிது நாளிருந்து அவர் சொல்லிக் கொள்ளும் தெய்வ தன்மை மெய்யாலும் அவருக்கு இருக்கிறதா என்று பார்த்து வாயேன். “செலவுக்கு நான் தருகிறேன்என்றாள்.

இப்படியாகத்தானே க்ரேடா தேவியின் புண்யத்தில், அல்லது ஸந்தேஹத்தில், யுவானை ப்ரசாந்தி வீட்டுக்கு வீட்டுக்காரர் தருவித்துக் கொண்டார்.

நான் இறைவன்என்ற அட்டை வாசகத்தைக் கண்ட மூன்றே வாரத்தில், 1974 பிப்ரவரி 28-ந் தேதி அமெரிக்க பக்த கோஷ்டி ஒன்றோடு யுவான் மூர் இந்தியாவுக்குப் பறந்தார்.

பாபா தரிசனத்தில் மூர் பெற்ற உணர்ச்சியை அவர் எத்தனை எழில் மொழியில் தெரிவிக்கிறார்? ஹிப்பியையும், கொள்ளையனையும் பாபா அமுக்கிப் போட்டு ஆதிகால ஆன்மவின்ப சர்ச்இசைக் கலைஞரை மறுபடி எப்படி மலர்த்தி விட்டார், இடையிலே கல்லானதை மீண்டும் எவ்வாறு மலராக ஆக்கி விட்டார் என்பதற்கு இந்த அழகு மொழியே அத்தாட்சி.

இவர் ஸாமானியப் பிறவியல்ல எனக் கண்டேன். ஸாமானிய மானுடரொருவரால் அத்தனை அழகாக இருக்க முடியாது! அவரைப் பார்த்ததுதான் தாமதம், என் ஆவியே கிட்டத்தட்டப் பிய்த்துக்கொண்டு புறப்பட்டு விட்டது. மிகவும் மெதுவாக நடந்தார். ஆயினும் நூறு மைல் வேகத்தில் நடப்பது போல் காணப்பட்டார். அவர் நடை பயில்வதை ஸங்கீதத்தின் ஸஞ்சாரம் என்றே சொல்லலாம்.”

சிவராத்ரிக்காக வந்த அமெரிக்க கோஷ்டியுடன் யுவான் வந்திருக்கிறார். எனவே நிலயத்தில் கூட்டமான கூட்டம். அப்படியிருந்தும், பஜனையின் போது பாபா ஆதனத்து அமர்ந்திருந்தபோது, யுவானுக்குத் தவறான எண்ணம் எழுந்த போதொல்லாம், “கூடாதுஎன்றுணர்த்தும் கையாட்டலைத் தாளம் போடும் பாவனையிலேயே பளிச்சுப் பளிச்செனக் காட்டினார்! கனவில்வாஎன்று சைகை செய்த ப்ரம்மாண்டக் கரம் குஞ்சுக் கையாகச் கோமளம் காட்டினாலும் அதன் ஆட்டலில் ஆண்டையின் அதிகாரத்வம் முற்றவும் இருந்தது. க்ரேடா விரும்பியகன்ஃபர்மேஷன்யுவானுக்கு நிமிஷந்தோறும் கிடைத்தது.

மஹாசிவராத்ரிப் பிரார்த்தனையில் முப்பதாயிரம் பேர் குழுமியிருக்கையில் சிவசக்தி ஸ்வரூபன யுவானிடம் வந்து, “வாட் டூ யூ வான்ட்என்றார்.

இவர் வாயடைத்து நிற்க அவர் மீண்டும் மென்மையாக அதே கேள்வியைக் கேட்டார்.

விபூதி, மாஸ்டர்!” என்று தம்மையறியாது கேட்டார் யுவான்.

கோ இன்ஸைட்என்று பாபா பேட்டியறைப் பக்கம் கை காட்டினார்.

நிறுத்த முடியாத காரியக்காரரிடம் பன்னிரண்டு பாக்யசாலிகளுடன் அன்று பேட்டி பெற்றே விட்டாய், பதினாயிரம் மைலுக்கப்பாலிருந்து அவரால் இழுத்துக் கொள்ளப்பட்ட முன்னாள் கொள்ளையர்.

விபூதி கேட்ட தாஸரைமாஸ்டர்உள்ளறைக்கு இட்டுச் சென்றதும் சட்டையைக் கழற்றச் சொன்னார். தாஸரைக் கனவிலேவாஎன்று அழைத்த கரம். இப்போது அவரை வரவழைத்துக் கொண்டபின் விபூதியைவரவழைத்தது’. கருப்பரின் உரம் வாய்ந்த மார்பில் புஷ்பமான பொற்கரம் அவ்விபூதியைத் தேய்த்தது தேய்த்துக் கொண்டேயிருந்தது. பூர்வ வாஸனை முழுதையும் தேய்க்க வேண்டுமே, அதற்காக! தேய்க்கத் தேய்க்க அக்கரத்தில் திருநீறு மேன்மேலும் திரண்டு கொண்டேயிருந்தது. யுவான் தலையோடு கால் விபூதி அபிஷேகம் பெற்றாக்கும் வெளியே வந்தார்!

மஹா சிவராத்ரியில் பரமேச்வர ஸ்வரூபமான ஷீர்டித் தாத்தனுக்கு விபூதி அபிஷேகம் செய்யும் பாத்தீர்வரர் ஒரு மாஜி கொள்ளையரையும் திருநீற்றில் முழுக்காட்டிய அன்பு மாஜிக்கை என்ன சொல்வது?

ஷீர்டிப் பரமேச்வரருக்கு விபூதி அபிஷேகம் செய்த பாபா அப்போது வானின் கண்களுக்கு நீலமாகத் தெரிந்தார்! அது மட்டுமல்ல, தமது கண்கள் அருவி பொழியுமாறு இன்னொன்று கண்டார். “ஸாயி பகவானுள் நாம் யாவரும் பார்க்கத் தாபமுறும் தாயைக் கண்டேன்என்கிறார்! பரமேசனைப் பரதேவதையன்றி யார் திருமுழுக்காட்ட முடியும்!

இன்னொரு கோஷ்டிப் பேட்டியிலும் இடம் பெற்று ஸாயியின் இறைமையில் ஸர்வ நிச்சயத்துடன் அமெரிக்கா திரும்பினார் யுவான். என்னே அற்புத மாற்றம் அவரிடம்? நித்யபூஜை, தினமும் நான்கு முறை பிரார்த்தனை, ஆழ்ந்த த்யானம் என்றிப்படி தினசரியை மாறிற்று. உண்ணாவிரதமும் அவ்வப்போது இருந்தார். எப்போதைக்கும் பிரம்மசர்ய விரதமும் பூண்டார்!

மனத்தைத் தூய்மை செய்யும் ஸாயியற்புதம் வெற்றிப் பாவட்டா வீசுகிறது யுவானின் பரிணாமத்தில்!

45. “நீயாகவே வந்தால் வா!”

யுவான் மூரின் வீட்டில் அதிசயமான முறையில் கட்டுக் கட்டான படங்களின் உருவில் பிரவேசித்த பிரசாந்தரைப் பார்த்தோம். வேறு பல அன்பர்களுக்கும் தமது படப் பிரவேசத்திலேயே அவர் அருளற்புதம் காட்டியிருக்கிறார். ஒக சின்ன உதாஹரணமு:

டில்லி வி.என். வைத்யநாதன், அவரது மனையாள் பத்மா இருவருமே அன்பில் குழைந்த உள்ளத்தினர். அதனால் வைத்யநாதனின் பூஜையில் ஸாயி படம் எதுவும் தக்கி நின்றதில்லை. உள்ளக் குழைவினால் இப்படி ஆவானேன் என்கிறீர்களா? “உங்களிடம் ஸ்வாமி படம் இருக்குமா?” என்று யார் கேட்டாலும் உடனே அவர் குழைந்து பூஜையிலுள்ளதைத் தூக்கிக் கொடுத்து விடுவார்! அப்புறம் இன்னொரு படம் வைப்பார்.

ஒரு ஸமயம் ஒரு படம் புறப்பாடு கண்டபின் இன்னொரு படம் வருகை காணாமலே நாள்கள் பல ஓடின. நண்பரொருவர் யாரிடமிருந்தோ ஒரு நல்ல படம் தருவித்துத் தருவதாகச் சொன்னார். சொல்லிக் கொண்டேயிருந்தாரே தவிரப் படம் வரக் காணோம்.

வைத்யநாதனுக்கு (அம்)மாதான் ஸாயி. பிள்ளையாக பஹு ஸ்வாதீனத்தோடு பேசுவார்; சண்டைகூடப் பிடிப்பார். இப்போது அவளிடம் சொன்னார். “ ஸாயிமா! உன் படத்துக்காக இனிமேல் நான் யாரையும் கேட்கப் போவதில்லை. யாரோ தந்துதான் நீ வருவாயானால் வரவே வேண்டாம். நீயாகவே வந்தால் வா. அவ்வளவுதான்!”

இப்படி அவர் சொன்ன அன்று பஸ்ஸிலே போகும்போது பக்கத்து ஸீட் பயணிஇல்லஸ்ட்ரேடட் வீக்லி படித்துக்கொண்டு வந்தார். அவர் படித்த கட்டுரை ஸ்வாமியைக் கண்டனம் செய்து ஸ்ரீ நரஸிம்மையா எழுதியிருந்தGod or Fraud?” (“கடவுளா? மோசக்காரரா?”) அதில் பாபாவின் படமும் வெளியாகியிருந்தது. அந்தப் படத்தைப் பார்த்த வைத்யநாதனுக்கு ஒரு நிமிஷம், “எப்படி வேணா நெனச்சுண்டு போயேன்!” என்று பாபா சொல்வது போன்ற பாவனையாகத் தோன்றிற்று, மறுநிமிஷமே, “பாவம்! இப்படி நெனச்சுட்டியே!” என்று பாவம் மாறினாற் போலிருந்தது.

அப் பயணியிடம் அதைக் கேட்டு வாங்கிப் படிக்க ஆர்வமிருந்தாலும் கூச்சமாயிருந்தது. அதுவுமன்றி அன்றுதான், “யாரையும் கேட்க மாட்டேன். நீயே வந்தால் வாஎன்றது இதற்குந்தானே? எனவே கேட்கவில்லை. படிக்காத தாபத்துடனேயே மாலை வீடு வந்து சேர்ந்தார்வீட்டு நாற்காலியில்ஸாயிமா வீற்றிருந்தாள் இரட்டை பாவம் காட்டிய அதேவீக்லிபடமாக! இப்போது மூன்றாவது பாவம் நம் அன்பருக்குக் காட்டினாள். “நீ சொன்னாப்பலே நானே வந்துட்டேன் பாத்தியா, கொழந்தே!”

குழைந்த உள்ளக் குழந்தைக்கு அம்மாவின் அன்பில் அழுகையே வந்து விட்டது.

படத்திடம் போய்ப் பார்த்தார். புத்தம் புதுவீக்லித்தாள் பாக்கெட்டாக உருவெடுத்திருக்கிறது. அந்தப் பாக்கெட்டில்தான் அவரது ஸாயிமா வந்திருக்கிறாள்!

அவருடைய தந்தையைப் பார்க்க அவருடைய தங்கை காலை பத்து மணிக்கு வந்திருக்கிறாள். அவள் வாங்கி வந்த ஆப்பிள்களைக் கடைக்காரர் போட்டுக் கொடுத்த பாக்கெட்தான் அது!

ஆண்டவனின் ஆணையை நம்பாமல் ஆதமும் ஈவாளும் உண்டு அதம நாசம் கண்டது ஆப்பிள் பழத்தின் வினையால்தான். தின்னத்தகாத அந்த forbidden fruit ஏந்தியே கண்டனக் கட்டுரையோடுகூட, கண்டிக்கப்பட்ட காருண்யமா வந்ததில் எத்தனை உட்பொருள்?

இந்தக் குட்டி லீலையில் இன்னும் இரு அதிசயம் அன்பர் சொல்கிறார். எந்தக் காகித பாக்கெட் வந்தாலும், அதில் என்ன விஷயம் அல்லது படம் இருக்கிறதென்று கூடக் கவனிக்காமல், அடுப்பிலிருந்து பாத்திரம் இறக்குவதற்காக அவரது அப்பா தாளைத் துண்டங்களாகக் கிழித்துவிடுவாராம். இதை அப்படி அவர் செய்யாதது எப்பேர்ப்பட்ட அதிசயம் என்று தம் வீட்டாருக்கே தெரியும் என்கிறார்! அப்பாவின்கைங்கர்யம் அதில் சேராதது போலவே இவரது பசங்களின்கால்கர்யம் அதில் சேராதது அதனினும் அதிசயமாம். நாற்காலியில் புஸ்தகமா, வேறு பண்டமா எது இருந்தாலும் அதை நகற்றாமலே அதன் மேலேறி உட்கார்ந்து, நசுக்கி, இவருடைய பசங்கள் திட்டு வாங்காத நாள் கிடையாதாம். அப்படியிருக்க, அன்று காலை பத்து மணிக்குத் தங்கை ஆப்பிளை எடுத்து வைத்தபின் ஆப்பிளைப் பார்ஸல் செய்ததால் நசுங்காமலும் கசங்காமலும் நாற்காலியில் போடப்பட்ட மா அப்புறமும் ஏழு மணி நேரத்துக்கு மேல் பசங்களின் நசுக்கலுக்கும் ஆளாகாமல் ஒய்யாரக் காட்சி தந்தது பேரற்புதமே என்கிறார்!