சத்ய சாய் – 13

37. ஸமய ஸஞ்ஜீவிச் சமையற்காரர்!

ஸேவகக் கண்ணனை பாரதி சொன்னதெல்லாம் ஸாயி பாகவதத்தில் பிரத்யக்ஷமாகக் காண்கிறோம்:

கண்ணை யிமையிரண்டும் காப்பதுபோல் என் குடும்பம்
வண்ண முறக் காக்கின்றான்
வீதி பெருக்குகிறான்; வீடு சுத்தமாக்குகிறான்
பண்டமெலாஞ் சேர்த்துவைத்துப் பால் வாங்கி, மோர்வாங்கிப்
பெண்டுகளைத் தாய்போற் பிரியமுற ஆதரித்து
நண்பனாய், மந்திரியாய், நல்லா சிரியனுமாய்

அதெல்லாமிருக்கட்டும், “பெண்டுகளைத் தாய் போற் பிரியமுற ஆதரித்துஎன்பதொன்று போதுமே! எத்தனையெத்தனை வீடுகளில் என்னென்னவெல்லாம் ஸாயி செய்கிறார்? தோட்டியாய் டாய்லெட் கழுவக் கூடத் தயங்குவதில்லை. நமக்குத்தான் எழுதக் கை தயங்குகிறது!

***

சாந்தா கிருஷ்ணமூர்த்தி தமது சொந்த ஹோதாவிலேயே ஓர் உண்மையான ஸாயி ஸஹோதரிஅதாவது ஸாயி கூறும் ஸர்வஜீவ ஸஹோதரத்வம் முதலியவற்றில் தேறியவர். ஊறியவர். அன்பில் ஆணி முத்தான பிள்ளைகள் கண்ணன், பாலாஜியால் எனக்கு மும்மடங்கு சஹோதரியாயிருப்பவர். இவர் ஒருநாள் தலைவலி அவஸ்தையுடனேயே சமையற் காரியங்கள் செய்தார். ஆனால் முட்டைக்கோஸ் நறுக்கியதற்குமேல் அவரால் முடியவில்லை. தலையைக் கட்டிக்கொண்டு படுத்தார். தலைவலி விட்ட பின் அதைக் கறி சமைக்க வந்தார்.

அதுஆல் ரெடிதேங்காய், பருப்புப் போட்டுக் கொண்டு, தாளித்துக் கொட்டிக்கொண்டு கறியாகி அதற்குரிய பாத்திரத்தில் வீற்றிருந்தது!

***

திருச்சி பிருஹத்குசாம்பாள் வீட்டில் ஸ்வாமி அடிக்கும் விநோதக் கூத்து கொஞ்சம் நஞ்சமல்ல. ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பு அந்த அம்மாள் செய்வதானகால் அலம்பிச் சாதம் போடும்சிராத்தம் வந்த அன்று நடந்த லீலை பாருங்கள். அன்றே வேறோர் இடத்தில் ஸ்வாமிக்கு லக்ஷார்ச்சனை பக்தர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவர்களில் பலர் இவர் வீட்டு விசித்ர விளையாடல்கள் காண வருவார்கள். சிராத்த தினமாதலால் அவர்களுக்கு ஏதும் உணவு வகைகள் கொடுத்து உபசரிப்பதற்கில்லாமலாகி விட்டதே என்ற வருத்தத்துடன் முதல் நாளிரவு அம்மாள் படுக்கப் போனார்.

காலை எழுந்து வந்தால் ஒரே நெய் மணம்! பாத்திரமொன்றில்ஒன்றல்ல, இரண்டல்ல, கால் நூறு குஞ்சாலாடுகள் காட்சியளித்தன! யார் செய்து, கொண்டு வந்து வைத்தது என்பதில் கொஞ்சங்கூட சந்தேகப்படுவதற்கில்லாமல் அதனுடேயே கடிதமும் வைத்திருந்தது. தமிழில் எழுதியிருந்தார் தீராத திருவிளையாடலர்: “ச்ராத்த ப்ராம்மணர்கள் போன பிறகு அம்ருதம் அனுப்புகிறேன்!”

அவர்கள் உண்டது வெளி மனிதர்களுக்குக் கூடாது என்ற விதியை மதித்தே அவர்கள் போனபின் அனுப்பினாரா? அல்லது அந்த ஆசாரக்காரர்களை தர்ம சங்கடப்படுத்த வேண்டாமென்ற தாக்ஷிண்யத்தில் அப்படிச் செய்தாரா? அல்லது, பித்ரு லோக, புனர்ஜன்மத் தொடர்பு கொண்டம்ருத’ (மரண)த் தொடர்புள்ள திவஸம் முடிந்த பிறகே அம்ருதம் வருவது பொருத்தமெனக் கொண்டாரா?

38. தக்ஷிணை தண்டிக்கொண்ட ஸாயி சாஸ்திரிகள்!

முன்பு நாம் பார்த்துள்ள பார்த்தா இவ்வாண்டு தன்னுடைய பெற்றோருக்கு சிராத்தம் செய்யாமலே நைஜீரியாவுக்குப் புறப்பட வேண்டியதாயிற்று.

ஸாயி அருளில் நாங்கள் ஒரு நாராயண ஸேவை செய்கிறோம். அதில் நம் அருமை ஷீர்டிப் பக்கிரியே உணவு கொள்வதாக மகிழ்கிறோம். எனவே பார்த்தா, “நமக்கு திவசம் திங்களெல்லாம் தாத்தா காரியந்தான். அதனால் அடுத்த நாராயண சேவை என் அப்பா அம்மா ஞாபகார்த்தமாயிருக்கட்டும்என்று சொல்லிப் பொருள் கொடுத்தார்.

மசூதித் தாத்தாவே! நீ எங்களுக்கு சாஸ்திரிகள் ஆகிறாயா?” என்று கேட்டபடி அதைப் பெற்றுக் கொண்டேன். ‘நம்ம வாத்தியார்என்று பார்த்தா ஸாயியைச் சொல்வதுண்டு. இன்றுபண்ணி வைக்கும் வாத்தியாரா அவரைச் சொல்லி மகிழ்ந்தோம்.

அதை ஒட்டி ஆவணியவிட்டம் வந்தது. ரிக்வேத உபாகர்மத்துக்கு அன்றுவாத்தியார்கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டது. எனவே புஸ்தகத்தை வைத்துக்கொண்டு நானே செய்துவிட்டேன். ஆயினும் அந்தணாளருக்கு தக்ஷிணை தந்தால்தானே வைதிக கர்மா எதுவும் நிறைவு பெறும்?

ஸாயிதானேநம்ம வாத்யார்?’ எனவே அவருக்கு தக்ஷிணை ரூபத்தில் நாராயண சேவையில் சேர்க்கத் தொகை எடுத்து வைத்தேன். “தக்ஷிணை திருப்தியா? ‘அக்ஸெப்ட்பண்ணிண்டாயா?” என்று வினவியபடி. குழாயடியில் தாம்பாள ஜலத்தைக் கொட்டப் போனேன்.

குழாய் மூடியில் எழுதியிருந்த அதன் பெயர் – ‘ப்ரான்ட் நேம்’ – பளீரென்று கண்ணில் பட்டது. என்ன பெயர் தெரியுமோSAIFEE! ஸாயிக்கு ஃபீஸ்! ஸாயி சாஸ்திரிகளுக்கு தக்ஷிணைதான்!

இத்தனை காலமாக நான் கவனித்திராத அப்பெயர் இப்போது ஏன் பளிச்சிட வேண்டும்? எதையும் உளமார ஏற்கும் உத்தமன் இந்த துணையைஅக்ஸெப்ட்செய்துகொண்டு விட்டானென்று காட்டத்தான்!

39. ‘தீராத விளையாட்டுதீர்த்து வைத்த பிரச்னை

மேலே சொன்னாற்போல எழுத்து ரூபமாக அவன் அடியார்க்கு அருள் செய்வதை எத்தனையோ விதங்களில் அடியார் பலர் கண்டு வருகிறோம்.

பிரச்னையொன்றின்போது அவனை ஸ்மரித்து ஸாயி நூலொன்றைப் பிரித்தால், அதில் சரியாகப் பிரித்த இடத்திலே உள்ள வாசகம் அவன் தரும் விடையாக நமக்குப் பளீரிடுவதை எத்தனை முறை கண்டிருக்கிறோம்?

அண்மையில்கல்கியில் எழுதியதீராத விளையாட்டு ஸாயியில் இது பற்றிய எடுத்துக்காட்டுக்கள் சில கொடுத்திருக்கிறேன். அந்தத் தொடரே ஓர் எடுத்துக்காட்டானதை இங்கே சொல்லட்டுமா?

சைதாப்பேட்டையில் பல் டாக்டர் ஆர். பிரபாகர் இருக்கிறார். (Saidapet என்பதன் ஆரம்பத்தில் Sai என்று வருவதிலேயே அவருக்கொரு மகிழ்ச்சி.) குடியாத்தத்திலிருந்த அவரது ஸஹோதரரின் ஏழு மாதக் குழந்தைக்கு உடல்நிலை ஆபத்தாக ஆயிற்று. எந்த நிமிஷமும் அங்கிருந்து தந்தி வரலாமென்ற விசாரத்துடன் பிரபாகர் இந்த (1985) ஸெப்டம்பர் 12-ந் தேதி காலை உட்கார்ந்திருந்தார். அன்று குருவாரம். அக்கிழமையில்தான் காலையில்கல்கிவரும். பிரபாகர் ஸ்நானம் செய்து, ஸ்வாமிக்கு தீபமேற்றி வைத்து, பக்தி ச்ரத்தையுடன் தொடரைப் படிப்பார்.

பிரச்னைக்கு ஸாயி நூலில் பிரித்த பக்கத்தில் தீர்வு கிடைக்குமென்கிறார்களே! ஸ்வாமி! இன்று வந்துள்ளதீராத விளையாட்டுப் ஸாயியைத் தொடக்கத்திலிருந்து படிக்காமல், அதில் கண்போன இடத்திலிருந்து வாசிக்கிறேன். அதில் எங்கள் வீட்டு அருமைக் குழந்தையின் விதி குறித்துத் தங்கள் திருவுளத்தை எனக்குத் தெரிவித்தருளுங்களேன்என்று இன்று ப்ரபாகர் வேண்டி, கண்போன போக்கின்படித் தொடரில் ஓரிடத்தில் பார்வையைச் செலுத்தினார். அது 15.9.85 தேதிய ஏட்டில் வெளியான ஏழாம் அத்யாயத்தின் இரண்டாம் பத்தியின் கீழ்ப்பாதி. அங்கே கண்ட வாசகம்:

இனிமேல் நீ கொஞ்சங்கூட கவலைப்படக் கூடாது. எல்லாம் ஸரியாகிவிடும்என்றார். தொடர்ந்து துளிராய்த் துவளும் குரலில், “நான் முழுப்பொறுப்பும் எடுத்துக் கொண்டாகிவிட்டது. நீ வீட்டுக்குப் போபையன் நன்றாக குணமாயிருப்பதைப் பார்ப்பாய். (மூன்று விரல்களைத் தூக்கிக் காட்டி) மூன்று நாளில் பூர்ணமாகத் தேறி விடுவான் என்றார்.

அஸல் ஸமய ஸஞ்ஜீவினியாக, “பையன்மூன்று நாளில் பூர்ணமாகத் தேறி விடுவான்என்ற வாசகம் பாபாவே எதிர் நின்று கூறும் நல்வாக்காக பிரபாகருக்குப் பெரு நம்பிக்கையும் உத்ஸாஹமும் ஊட்டியது.

அன்று மாலை ஆறு மணிக்கு க்ளினிக்கைத் திறந்து பாபா படத்துக்குப் புஷ்பம் போட்டுக் கேஸ்கள் பார்க்க அமர்ந்தார். ஆறே காலுக்கு குடியாத்தத்திலிருந்து தந்தி வந்தது. குழந்தைக்கு ஸீரியஸ். ‘ஸ்டார்ட்என்றது தந்தி.

நம்பிக்கைக்கும் கவலைக்குமாக ஊசலாடிக் கொண்டு ஏழு மணிக்குள் கடையைக் கட்டிவிட்டு, மற்ற உறவினரோடு குடியாத்தம் புறப்பட்டார் ப்ரபாகர்.

நல்ல இரா வேளையில் இவரது தந்தை அந்த ஊர் பஸ் ஸ்டாண்டில் காத்திருந்து வயிற்றில் பால் வார்க்கும் செய்தி சொன்னார். அன்று பிற்பகல் குழந்தை இன்னும் ஒரு மணிதான் உயிரோடிருக்கும் என்று டாக்டர் சொன்னதன் மீதே தந்தி தந்தாராம். ஆனால் அந்தக் கெடுவுக்குப் பின் குழந்தை கண் திறந்து பார்த்தானாம். குழகன் திருக்கண் திறந்து பார்த்த விசேஷம்தான்! “இப்போது தெளிவாக இருக்கிறான்என்றார் தந்தை.அருளை வியந்தார் பிரபாகர். “பாருங்கள். மூன்று நாளில் குழந்தை முற்றிலும் குணமாகி விடுவான்” என்றார். என்றோ எவரிடமோ அப்படி மூன்றாம் நாள் நோய் நிவாரணத்தைக் கூறிய மதுரவாய்க்குச் சர்க்கரை தான் போடவேண்டும். மூன்று நாளில் பச்சைக் குழந்தை மெய்யாலுமே பசுமை கண்டது! பூர்ணமாக நோய் தீர்ந்தது!