34. ‘ஓசைப்படாமல்’ ஓர் அற்புதம்!
வாசல் அறை, சமையல் அறை ஆகிய இரண்டே கொண்ட சிறிய வீடு அது. யாருடைய வீடு என்றால் ஒயிட் ஃபீல்ட் பஜனை கோஷ்டியிலுள்ள கிருஷ்ணஸ்வாமியுடையது. பெயர்ப் பொருத்தத்தோடு ஸாயி பக்தியிலும் பொருத்தம் கொண்ட அவரது மனைவி ருக்மிணி ஸ்டவ்வில் ப்ரெஷர் குக்கரை வைத்துவிட்டு, அதன் அருகேயே முதுகுப்புறம் திருப்பி ஏதோ செய்து கொண்டிருந்தார்.
குக்கரில் ஜலம் விட மறந்தாரோ, விட்ட ஜலம்தான் வற்றி விட்டதோ? ‘ரொய்ங்’ என்று அதன் குண்டு பிய்த்துக்கொண்டு அடுத்த அறையைத் தாண்டி வாசலுக்குப் பறந்தது! குக்கர் மூடியும் பிடுங்கிக் கொண்டு கிளம்பிச் சக்ராகாரமாகச் சுழன்று ‘பறக்கும் தட்டின்’ விசித்ரங்களைச் செய்து, சுவரிலே ஒரு மோது மோதி ஸிமென்டைப் பெயர்த்துத் தானும் விழுந்தது.
குக்கரிலிருந்த கொதிக்கும் சாதம் இவற்றுக்குத்தான் சளைத்துவிடக்கூடாதென்று அறையின் நான்கு சுவர்களிலும் வாரியடித்து அப்பிக் கொண்டது.
ஆச்சரியம் என்னவெனில் வாசலுக்குப் பறந்த குண்டு வெளியேயிருந்த கிருஷ்ணஸ்வாமியைப் பதம் பார்க்கவில்லை. அதைவிட ஆச்சரியம் ஸ்டவ்வின் அருகிலேயே இருந்த ருக்மிணியையும் அது தீண்டாததோடு பறந்த மூடியும் அவரைத் தாக்கவில்லை! வாரியடித்த அன்னத்திலும் ஒரு பருக்கைகூட அவர்மீது படவில்லை! இன்னமுங்கூட ஆச்சர்யம் என்னவெனில், அக்கம் பக்கத்தினர், ‘என்ன வெடிச் சத்தம்’ என்று அங்கு ஓடோடி வர, ருக்மிணிக்கோ அடியோடு அந்த ஓசை கேட்கவே இல்லை!
முடிவாக, பேராச்சரியம் – குப்பல் குப்பலாகச் சாதம் அப்பியிருந்த சுவரில்தான் நம் பகவந்தனின் படங்கள் மாட்டியிருந்தது. அவை ஒன்றிலாவது ஒரு சோறு கூடப் படாமலே அவற்றைச் சுற்றி மாத்திரம் அன்னா பிஷேகமாகியிருந்தது!
“பதத்ஸு சாபி சஸ்த்ரேஷு ஸங்க்ராமே ப்ருச தாருணே” – “மஹா கொடூர யுத்தத்தில் ஆயுதங்கள் விழுந்து கொண்டேயிருக்கும் சமயத்திலும்” அவை பாதிக்கா வண்ணம் துர்காதேவி பாதுகாப்பாளென்று “ஸப்தசதீ” கூறும். இதற்கு ஒரு ‘மேஜர்’ உதாரணம், “ஸ்வாமி” நூலில் (அத், 42) காணும் காயனாவின் கதை. ‘மீடியம் சைஸ்’ உதாரணம் இங்கே காணும் பஜனை காயகர் வீட்டு நிகழ்ச்சி.
35. ‘பழியஞ்சிய படலம்’
தொழிலில் சிக்கலுற்ற பக்தர்களுக்கு ஸ்வாமி சிக்கலெடுத்துத் தருவதில் என் அரிய ஸாயி ஸஹோதரர் டீ.ஏ. கிருஷ்ணமூர்த்தி கூறும் ஓர் அதி அற்புத திருஷ்டாந்தம்:
இவ்வநுக்ரஹம் பெற்ற அடியாரின் பெயரும் கிருஷ்ணமூர்த்திதான். அப்போது அவர் துறையூரில் முன்ஸீபாக இருந்தார். ஸிவில் ஸூட் ஒன்றில் எப்படி முடிவு கண்டு தீர்ப்புக் கூறுவது என்று அவருக்குப் புரிபடவேயில்லை. தள்ளிப்போட்டுக் கொண்டே வந்தார். எவ்வளவு காலம் தள்ளிப் போடுவது? ஸாயி பக்தரான தாம் ஏதோ முடிவு செய்து எப்படியோ தீர்ப்புக் கூறி விடக் கூடாது என்று அவர் வெகு கவனமாக இருந்ததாலேயே இப்படி இழுக்கடிக்க நேர்ந்தது.
‘எந்தத் தரப்புக்கும் அநீதி செய்துவிடக் கூடாதே என்ற தர்ம நியாய உணர்விலேயே தள்ளிப் போட்டுக் கொண்டு போனாலும், இதுவுங் கூட இரு தரப்புக்களையும் ஊசலாட்டத்தில்தானே வைத்திருக்கும்?’ – இந்த எண்ணம் அவரைப் பற்றிக் கொண்டது.
ஓரிரவு ஸ்வாமி படத்தைப் பார்த்து, “இப்படிப் புரிபடாமலிருக்கிறதே! நீ வழிகாட்டக்கூடாதா?” என்று வேண்டினார். “அப்படியொன்றும் தாபத்தில் துடித்து வேண்டவில்லை” என்றும் தம்மையே உள்ளபடி ‘ஜட்ஜ்’ செய்துகொண்டு அவர் சொன்னதாக டீ.ஏ.கே. கூறுகிறார்.
துடிக்காவிட்டாலென்ன? உலக மஹா ஜட்ஜுக்கு இம்மனிதரின் நீதிப் பற்றும், கடமையுணர்வும் ஸத்யமானவை என்று தெரியாதா என்ன? சிக்கல் அவிழ அற்புத அருளை அவிழ்த்து விட்டார்.
படத்திலிருந்து ஓர் ஒளிக்கதிர் புறப்பட்டது. அது இவருடைய மேஜைக்கு இறங்கிற்று. அதிலிருந்த பல புஸ்தகங்களில் ஒன்றின் பக்கவாட்டத்தில் குறிப்பாக ஓரிடத்தைத் தொட்டது. அது வழக்குகள் பற்றிய அட்டவணை போன்ற ஒரு நூல்.
கிருஷ்ணமூர்த்தி அந்தப் பக்கத்தைப் புரட்டினார். ஒளிக்கதிர் அவர் புரட்டிய பக்கத்தில் ஒரு வரியின் கீழ் படிந்தது. இன்ன கேஸ், இத்தனாம் வால்யூமில், இந்தப் பக்கத்தில் இருக்கிறது என்று அவ்வரியில் கண்டிருந்தது.
அதிசய டைரக்ஷன் பெற்ற நியாயாதிபதி அந்த வால்யூமை எடுத்துப் பக்கத்தைப் பிரித்தார்.
மெய்யாலுமே வெகு அதிசயம்தான்!
ஊர், பேர், தொகைதான் வித்தியாசமாயிருந்ததே தவிர, ஸாரமான மற்ற ஸகல அம்சங்களிலும் தற்போது இவர் முன் வந்திருந்த வியாஜ்யத்தை அப்படியே அச்சடித்தாற் போன்ற ஒரு வழக்கின் விவரமும், அதன் தீர்ப்பு எப்படிப் பைசல் செய்யப்பட்டது என்ற விளக்கமும் அதில் கொடுக்கப்பட்டிருந்தது.
அந்த அடிப்படையில் கிருஷ்ணமூர்த்தி சிந்தனை செலுத்திப் பார்த்ததில் சிக்கல் அவிழ்ந்தே விட்டது. தீர்ப்பு எப்படிக் கூறுவதெனத் தீர்வு கண்டுவிட்டார்.
என்ன வழியென்று கேட்கி லுபாயம்
இருகணத் தேயுரைப்பான்
என்று கண்ணனை பாரதி பாடியதை ‘அமென்ட்’ செய்து ‘அரைக் கணத்தே’ என்று கானம் செய்வோமா?
36. பிழைப்புத் தருவான், பிழையின்றி!
தொழிலில் உள்ள ஒருவருக்குச் சிக்கலில் உதவுவது மட்டும்தானா? எத்தனையோ பக்தர் ஒரு தொழிலில் அமரவும் அவன் அருள் செய்திருக்கிறானே!
நம் நண்பர் புருஷோத்தமனின் மூத்த மகன் உதயகுமார் மறைந்த பின் அக்குடும்பத்துக்குச் செய்த அருளை ‘ஒக சின்ன உதாஹரணமு’வாகப் பார்ப்போம்.
இரண்டாம் மகன் ரவிகுமார் பட்டப் படிப்பு முடித்து, உபாத்திமைப் பயிற்சியிலும் தேர்வு பெற்றார். தர்மபுரி அரசினர் பள்ளியில் உத்யோகம் கொடுத்து ஆர்டர் வந்தது. மூத்த பிள்ளையை ஊரைவிட்டு அனுப்பியது கோரத் துயரமாக முடிந்ததால் அடுத்தவனைப் பார்வையிலேயே வைத்துக்கொள்ளத் தந்தை மனம் விரும்பியது. அவ்வேலை வேண்டாமென்றே வைத்துவிட்டார். வேறு இரு இடங்களில் முயன்றார். இரண்டிலும் முயற்சி தோற்றது. வேதனையோடு வீடு திரும்பினார்.
வழியிலேயே மூன்றாவது மகன் முரளி செய்தி கொண்டு வந்தான். “அண்ணாவுக்கு அரசுப் பள்ளியின் நியமனம் வந்திருக்கிறது” என்றான்.
“மறுபடியுமா? இருக்காது. பழைய ஆர்டருக்கே இன்னொரு ‘காப்பி’ அனுப்பியிருப்பார்கள்!” என்றார்.
“இல்லை, அதை ரத்து செய்து, புதிதாகத் திருப்போரூரில் நியமனம் செய்திருக்கிறார்கள்” என்ற அதிசயத் தகவலைப் பிள்ளை கொடுத்தான். இதனால் சம்பளப் படிகளிலும் ரூ.115 கூடுதலாம்!
ஆம்! ஆதம்பாக்கத்திலுள்ள வீட்டிலிருந்தே ரவிகுமார் சென்று வர வசதியாக அதிகச் சம்பளத்தோடு இடம் மாற்றிப் போட்டிருந்தார்கள்.
அமைச்சர் மட்டம் போன்ற பலத்த சிபாரிசில் தான் தர்மபுரி திருப்போரூராகியிருக்க வேண்டுமென்று பலர் பேசிக் கொண்டார்களாம். அவர்களுக்குத் தெரியுமா. மன்னாதி மன்னன் சிபார்சு! சிபார்சா? நியமனமே அவன் ஸங்கற்பந்தான்! ‘டிஸ்–அப்பாயின்ட்’ செய்ய அறியாத ‘ஹிஸ் அப்பாயின்ட்மென்ட்!’
பாரதியின் கண்ணன் கொண்ட பல கோலங்களில் அவன் தோழனாக உள்ளபோதே “உழைக்கும் வழி” உதவுவது, சேவகனாக நமது அகில உலக ஸேவாதள நாயகனைக் கொஞ்சம் காண்போமா. இனி?