16. ஸவாலுக்கு ஜவாப்!
விமலா தன்னுடைய மூத்த மகள் திருமணமாகிப் பல்லாண்டாகியும் தாய்மை எய்தாதற்காக மிகவும் வருந்தினாள். நாஸ்திகத்திலிருந்து ஆஸ்திகத்துக்குத் திரும்பி, ஸாயி பக்தியையே ஆஸ்தியாக்கிக் கொண்டவளவள். ஆயினும் இஷ்ட மூர்த்தி அவள் பல காலம் வேண்டியும் செவி சாய்க்கவில்லை. தெரிந்தவர்களானால், ‘அந்த தெய்வத்துக்கு வேண்டிக்கொள்ளுங்களேன்; இந்த தெய்வத்துக்கு நோன்பு நோற்கலாமே; இன்னாரிடம் போய் சாந்தி செய்து பாருங்களேன்’ என்று சொன்னபடி இருந்தனர். இஷ்ட மூர்த்தியை விட்டு இன்னொன்றுக்குப் போவதா என்றிருந்தாலும், தனது தாய்மையன்பினால் மகள் தாய்மையுற்றுக் காணும் ஆர்வத்தில், விமலா அந்த உபாயங்களையும் நாடினாள் குற்ற உணர்வுடனேயே!
இவள் நாடினாலும் பர்த்திக்காரர் இதர மூர்த்திகளிடம் இவளது வேண்டுதல் நோன்புகள் பூர்த்தியாக முடியாமலே இடை மறித்தார்! ‘இருப்பது ஒரு தெய்வம். அது தனது ஸாயி ரூபத்தில் என்று கர்மாவைத் தீர்க்குமோ அன்றுதானே தீரும்? வேறு ரூபங்கள் மட்டும் விரைவுத் தீர்வு தந்துவிடுமா என்ன? இவள் அவற்றை வேண்டி உபவாஸமிருந்து பசி பட்டினிக் கஷ்டங்கள் படுவானேன், பொருளைச் செலவழிப்பானேன்? அப்புறம் அந்த ரூபங்களும் கருணை காட்டவில்லையென அவற்றை நொந்து கொள்வானேன்?’ என்பதாக ஸ்வாமிக்கு இவளிடமும், அந்த இதர ரூபங்களிடமுள்ள அன்பினாலேயே இப்படிச் செய்திருக்கலாம். ஆனால் நடை முறையில் அது ‘விடேன், தொடேன்’ விஷமமாகவே தெரிந்தது. தொடர்ச்சியாய் அவர் செய்த விஷம லிஸ்ட் ‘சௌந்தர்ய லஹரி’ கற்றுக்கொள்ள ஆரம்பித்தாள். எழுபத்தைந்தாவது ச்லோகத்துக்கு வந்தாள் அதாவது முக்கால்வாசி பூர்த்தி, ஆனால்…? பாதிக் கிணறு தாண்டுவதற்கும் முக்கால் கிணறு தாண்டுவதற்கும் வித்யாஸமுண்டா என்ன? ஸ்தோத்ரத்தில் முக்காற் பகுதி பாடமானபோது கற்றுக்கொடுத்த அம்மாள் நோய்வாய்ப்பட்டுப் பாடம் நின்றது. மீண்டும் அவர் உடல்நலம் பெற்று வகுப்புத் தொடங்கவிருந்தபோது அவரது கணவருக்கு ஒரு விபத்து ஏற்பட மறுபடியும் பாடத்துக்கு இடையூறு ஏற்பட்டது. ‘போதும், ஸௌந்தர்ய லஹரி’ என்று விமலா அதனிடம் விடை கொண்டாள்.
மந்திரசக்தியுள்ளவராகச் சொல்லப்பட்ட ஒரு மலையாளப் பெரியவரிடம் போனாள். அவர் சொற்படிக் கேரளத்திலுள்ள ஒரு கோயிலில் நாகராஜ பூஜைக்குத் தொகையனுப்பிப் பிரஸாதம் பெற்றால் மகப்பேறு உண்டாகிறதெனக் கேள்விப்பட்டுப் போனாள். அவரோ, “இப்போது தொகை அனுப்புவது மட்டும் போதாது. பூஜை முடிவில் ஸந்நிதானத்தில் ஒரு சட்டியைக் கவிழ்ப்பார்கள். குழந்தை பிறந்தவுடன் அதை எடுத்துச் சென்று அதன் கையால் சட்டியை நிமிர்த்தி வைக்க வேண்டும். அப்படிச் செய்வதாக இப்போதே வேண்டிக்கொள்ள வேண்டும்” என்றார். இவளுடைய மகள் வெளி நாட்டிலிருப்பவள். அவளது டாக்டர் கணவரே மகப்பேற்று மருத்துவத்தில் கெட்டிக்காரரானதால், அங்கே தனது ஆஸ்பத்திரியில்தான் அவர் டெலிவரி வைத்துக்கொள்வார். சட்டி திருப்புவதற்காக அவர்கள் தாயகம் வருவது அவ்வளவு சாத்தியமில்லை. அதைவிட முக்யமாக, மருமகப்பிள்ளை ஸாயிராமனே தனது ஒரே தெய்வமென, “இதர தெய்வமுலவல்ல இலநு ஸௌக்யமா?” என்றிருப்பவராதலால், மலையாளம் நாகதேவதை என்றாலே புஸ்ஸென்று சீறுவாராயிருக்கும்! இந்த உபாயத்துக்கும் கும்பிடு போட்டாள் விமலா.
உள்ளூரிலேயே ஒரு கோயிலைப் பற்றிக் கேள்விப்பட்டாள். அங்கு புற்றில் நெடுங்காலமாக ‘வாழும் பாம்பு’ உள்ளதாம். அதற்குப் பால் ஊற்றினால், யாரை உத்தேசித்து ஊற்றுகிறோமோ அவருக்கு ஸந்ததி வாய்க்கிறதாம். ஆர்வத்தோடு பாலும் கையுமாக அங்கே ஓடினாள் விமலா அங்கிருந்தவர்கள், “அடப் பாவமே! இப்போ போய் வந்திருக்கீங்களே! எம்மாம் காலமாவோ புத்துலே இருந்த பாம்பைக் கொஞ்ச நாளாகக் காணோமே!” என்றார்கள்.
இப்படி ஒவ்வொன்றாகப் பலவற்றுக்கு ஸ்வாமி விக்னம் விளைத்தபின் அவரிடமே போய் எப்படியேனும் பேட்டிக்கு முயன்று முறையிடுவதெனப் புட்டபர்த்தி சென்றாள். பதினைந்து நாள் காத்துப் பார்த்தும் பயனில்லை. மறுநாள் ஊருக்குப் புறப்பட வேண்டும். அன்று மாலை தரிசன ரவுன்டிலும் ஸ்வாமி கண்டு கொள்ளாமல் நகர்ந்ததும் விமலா, “ஸ்வாமீ! ‘அழுதாலுன்னைப் பெறலாமே’ என்கிறார்கள். ஆகையால் நீங்கள் இப்போது உள்ளே போனவுடன் நான் பஜனைக்குப் போகாமல் ‘ஃப்ளாட்’டுக்குப் போய், மனம் விட்டு நன்றாக அழுகிறேன். அப்போதாவது உங்கள் மனம் உருகட்டும்!” என்று உள்ளுக்குள் வேண்டிக் கொண்டாள்.
ஆனால் அப்போதே ஸ்வாமியின் மனம் உருகி அந்தக் குழந்தை அப்படி அழுமாறு விடக்கூடாதென எண்ணிவிட்டார் போலும்! தர்சனம் தந்து முடித்தபின் உள்ளே போகாமல் வராந்தாவிவேயே நெடு நேரம் உலாவினார்; அங்கிருந்த எவரெவரிடமோ உரையாடினார்; யாவரும் காணுமாறு வெறுமேயே வெகுநேரம் நின்றார். இப்படிக் கண்ணெதிரில் ஸ்வாமி இருக்க, அவரை விட்டு விமலா எப்படி ஃப்ளாட்டுக்குப் போவாள்? பஜனையும் ஆரம்பித்தது. ஸ்வாமி பஜனைக்கூடத்துள் சென்று ஸிம்மாஸனத்தில் அமர்ந்துவிட்டார். விமலாவின் கால்களும் தாமாக பஜனைக் கூடத்துக்கே அவளை இட்டுச் சென்றன! இப்படியாகத்தானே, பிற மூர்த்தியிடம் மட்டுமின்றித் தம்மிடமுங்கூட அவள் விரும்பியபடி வேண்டமுடியாதபடி விக்னமிழைத்தார் ஐயனார்!
இந்தப் பழைய கதை தாற்காலிகமாக ‘நிற்க’! இதைத் தொடர்ந்து வந்த புதுக் கதைக்கும், இங்கேயும் நமது விக்நேச்வரரின் விஷம லிஸ்ட்டுக்கும் வருகிறேன்.
இரண்டாவது மகளின் திருமணத்துக்காக விமலா நாடிய உபாயங்கள் தாம் புதுக் கதை. பிரதோஷ விரதமிருந்தால் மகளுக்கு விவாஹ ப்ராப்தி ஏற்படும் என்று அன்பர்கள் சொல்ல, விமலா நோன்பு நோற்றாள். அவளுடைய தாயார் அச்சமயம் வெளிநாட்டிலிருந்து வந்தார். நோயாளியான அந்த அம்மாளுக்குக் காலம் தப்பி உண்டால் உடம்புக்கு ஆகாது. அப்படியிருக்க அவர், ‘நீ பகலெல்லாம் பட்டினி கிடக்கும்போது எனக்கு ஆஹாரம் இறங்க மாட்டேனென்கிறது’ என்று மகளிடம் கூறி, தாமும் உபவாஸமிருக்க முற்பட்டார். விளைவு? விமலாவின் பிரதோஷ உபவாஸம் கொள்ளை போயிற்று! ஜோஸ்யரொருவரைத் தேடிப் போனாள். ஜோஸ்யர் கடையைக் கட்டிக்கொண்டு ஊருக்குப் போய்விட்டிருந்தார்! இன்னொரு ஜோஸ்யரைப் ‘பிடித்து’ அவரிடம் பெண் ஜாதகத்தைக் கொடுத்தும் விட்டாள்.
“அடுத்த வாரம் வாருங்கள். பலன் எழுதி வைத்திருக்கிறேன்” என்றாரவர். அப்படியே போனாள். ஜோஸ்யர் தேடு தேடென்று தேடியும் அவர் எழுதி வைத்திருந்த பலனைக் காணவில்லை. ஸாயி விக்நேசர் செய்த திரஸ்கரிணியோ?
விமலா புட்டபர்த்திக்குப் புறப்பட்டாள். அச்சமயம் “தெய்வத்துக்கு நேரே முறையிடுவதைவிட தெய்வத்தின் தலைசிறந்த பக்தருக்கு முறையிட்டால், அவர் நம் சார்பில் தெய்வத்திடம் வேண்டுவார். வேண்டுதலை மறுக்க முடியாமல் தெய்வம் செவிசாய்த்து விடும். ராமனை நேரே பிடிப்பதைவிட ஆஞ்ஜநேயர் மூலம் பிடிப்பது எளிது” என்று கேள்விப்பட்டாள். ஸாயிராமனையும் மாருதி வழி பிடிக்க எண்ணிப் பர்த்தியிலிருந்து திரும்பிய பின் வடைமாலை சார்த்துவதாக நேர்ந்து கொண்டாள்.
ப்ரசாந்தி நிலய பஜனையில் மாருதியைப் பாடி முடிக்கும் வழக்கமில்லை. ஆயினும் இவள் சென்ற அன்று காலை பஜனை நடுவிலேயே ஆச்சரியமாக ஒரு புது மாருதி நாமாவளி பாடப்பட்டது! தனது ஹநுமார் வழிபாடு நிச்சயம் பலிதமாகும் என்பதற்கு ஸ்வாமி காட்டும் அடையாளமே இது என்று விமலா உளம் நிறைந்தாள். நிறைவை நேர்மாறாக்கிவிட்டார். அன்று மாலை தர்சன ரவுன்ட் வந்த விக்நேசர்! விமலாவின் எதிரே நின்றுகொண்டு, ஆனால் அவளைப் பார்க்காமல், யாரிடம் சொல்கிறாரென்பதே புரியாமல், கடுமையான குரலில், ஆனால் குறும்பு நொடிப்பும் தோன்ற. “ரெ–க–மண்–டே–ஷன்” என்று எழுத்தெழுத்தாகச் சொல்லி, மேலே நடையைக் கட்டினார். வடைமாலைச் செலவை மிச்சப்படுத்திவிட்டார்! ஆம், அதற்கப்புறமும் சிபாரிசுக்கு அவள் மாருதியிடம் போவாளா என்ன?
மாருதி படத்துக்குப் பொட்டு வைப்பதுபோல, ஸ்வாமி படத்துக்கே வலப் பாதத்தில் தொடங்கி, ரூபத்தைச் சுற்றிக் கொணர்ந்து, இடப் பாதத்தில் பொட்டிட்டு முடிக்கும் பழக்கம் ஸாயியடியார்களிடம் உள்ளது. இந்த அஸ்திரத்தையும் தொடுத்துப் பார்த்தாள் நம் ஸஹோதரி. இம்முறையும் தவறாமல் அவர் விக்நாஸ்திரம் போட்டு அவளுக்குத் தோல்வி தந்தார். ஒரு சில பொட்டுக்களே மீதமிருந்தபோது அவள் வெளியூர் செல்ல நேர்ந்தது! அந்த வெளியூர் எது தெரியுமோ? ஸ்வாமியே இருக்கை கொண்டிருந்த ஓய்ட்ஃபீல்ட்தான்!
ஸமீபத்தில் விமலா என்னைப் பார்க்க வந்திருந்தாள். நான் அவசரமாக எங்கோ புறப்பட்டுக் கொண்டிருந்தேன். அந்த அவசரத்திலும் ஏனென்று எனக்கே தெரியாமல், ஸ்வாமியைப் பற்றி ஒரு துணுக்குச் சொன்னேன். ஓர் அடியார் ஸ்வாமியிடம், “எவ்வளவோ வேண்டியும் ஸ்வாமி அருள் செய்ய மாட்டேனென்கிறீர்களே?” என்றாராம். உடனே ஸ்வாமி கோபமா, குறும்பா, யதார்த்தமா என்று புரிபடாத குரலில், “இந்த ஸ்வாமியால் இவ்வளவுதான் முடியும். நீங்க வேணுமானா வேறே நல்ல ஸ்வாமியாப் பார்த்துக்கொண்டு போங்கோ!” என்றாராம். இந்தத் தகவல் துணுக்கை விமலாவிடம் போட்டுவிட்டுப் புறப்பட்டேன்.
துணுக்கு அவளுக்கு எவ்வளவு துணுக்கமளித்தது என்பதையும், விக்நேசன் பெயர் கொண்ட என் மூலமும் ஐயனார் இடையூறு லீலை புரிந்து விட்டாரென்பதையும் அடுத்த முறை விமலா வந்தபோதுதான் அறிந்தேன். முன்முறை அவள் வந்தபோது வெகு முனைப்பாக ஒரு வேண்டுதலில் ஈடுபட்டிருந்தாளாம். ‘ஏழுமலையானை மிஞ்சி ஒரு கலியுக வரதனில்லை அவனை வழிபடுங்கள். நடந்தே மலை ஏறி வருவதாக வேண்டிக் கொள்ளுங்கள்’ என்று தோழி ஒருவர் அடித்துக் கூறினாராம். அதிலே விமலா கொண்ட முனைப்பில், படியேறி வருவதற்கும் மேல் தீவிரமாக ஒரு படி ஏறி, திருமலையில் தான் முடியிறக்கிக் கொள்வதாகவும் முடிவு செய்து விட்டாளாம்.
அந்த முடிவைத்தான் முறித்து முடித்துப் போட்டு விட்டது, நான் என்னையறியாமல் சொன்ன துணுக்கு.
இனி முதல் மகளின் மகப்பேறு பற்றிய பழைய கதைக்குப் போகலாம்.
ஜைனகாலஜி’ நன்கறிந்த மருத்துவ மருகர் இனி அவளுக்குத் தாய்மை ஏற்படாது எனக் கருதினார். உத்தம உள்ளம் கொண்ட அவர் தத்து எடுத்துக் கொள்வதற்காக சென்னை அநாதாச்ரமமொன்றில் ஒரு பிள்ளை தேர்வு செய்யுமாறு விமலாவின் கணவருக்கு எழுதினார்.
அப்படிச் செய்யுமுன் மகளே தாய்மை வரம் பெற இறுதி முயற்சி என்ன செய்யலாமென யோசித்த விமலா, சாந்தி ஹோமங்கள் செய்வதில் பெயரெடுத்த ஒரு மந்திரவித்திடம் சென்றாள். அவர் பெரிய அளவில் ஏதேதோ சொல்ல அவை தங்களால் இயலாது என்று அவள் விட்டு விட்டாள். “பின் என்னதான் செய்ய உத்தேசம்?” என்று அவர் கேட்டார்.
“என்னமோங்க, எங்களுக்கு பாபாவிடம் ஒரு நம்பிக்கை. அவர் செய்யறபோது செய்யட்டும்னு விட்டு விடப்போறோம்” என்றாள் ஸோதரி.
உடனே மந்திரவித் பட்டென்று, “உங்க பாபாவால் இந்தப் பெண்ணுக்குப் புத்ரபாக்யம் தரமுடியாது” என்றார்.
விமலாவுக்கு அழுகையும் ஆத்திரமுமாக வந்தது. “உங்களால் முடியாது என்று இவர் ஸவால் விடுவதற்காகவாவது, நீங்கள் ‘முடியும்’ என்று செய்து காட்டத்தான் வேண்டும்!” என்று உள்ளுக்குள் பாபாவிடம் சூளுரைப்பது போலக் கதறினாள். தன் மகளுக்கு மகவு வாய்க்க வேண்டுமென்பதுகூட விமலாவுக்கு இப்போது முக்யமாக இல்லை. தன் ஸ்வாமிக்கு இந்த மந்திரவித் விட்ட ‘சாலஞ்ஜ்’ தவிடு பொடியாகவேண்டுமென்றே இருந்தது!
“முடியுமோ, முடியாதோ, எங்களுக்கு பாபா செய்வது போதும். உங்களை சிரமப்படுத்தியதற்கு மன்னியுங்கள்” என்று கூறிப் புறப்பட்டு விட்டாள்.
பாபாவுக்கு ரோஷம் வந்துவிட்டது போலும்! மந்திரவித்தின் ஸவாலுக்கு அவரது ஜவாபாகப் பத்தாம் மாதம் விமலாவின் மகள் ஓர் ஆண் மகவுக்கு அன்னையானாள்! ஜைனகாலஜிஸ்ட் தத்து எடுத்துக்கொள்ள அவசியமேற்படவில்லை. அவரது மெடிகல் ஸயன்ஸுக்குப் புரியா விதத்தில் மனையாள் கருத்தரித்து இனிதே பிரஸவமும் முடிந்தது.
இதிலே அழகு, அப்போது விமலா புட்டபர்த்தியிலிருந்தாள்! பேரன் ஜனனத்தைத் தெரிவிக்கும் தந்தி ப்ரசாந்தி நிலயத்திலேயே அவள் கைக்கு வந்தது. அதை பாபாவின் பாதத்தில் அர்ப்பிக்க வேண்டும் என்று நன்றியுள்ளம் துள்ள, இனிப்பு நிறைந்த தாலத்தில் வைத்து, தர்சனத்துக்கு வந்தாள். ஸ்வாமி தர்சனம் தரும்போதோ உணர்ச்சி மிகுதியில் அப்படியே சிலையாயிருந்து விட்டாள். அவரே குனிந்து பிடுங்கிக்கொள்ளாத குறையாகத் தந்தியை எடுத்துக்கொண்டு சென்றார் ‘பார்த்தாயா, ஸவாலை நான் திவாலாக்கியதை?’ என்று சொல்லாமற் சொல்லி!
‘விமலாவின் இரண்டாவது மகளின் ஜாதகக் கோளாற்றை பாபாவால் நிவிருத்தி செய்ய முடியாது என்று ஸவால் விடுக்க அவரது அருளே எவரையாவது அனுப்பி வைக்காதா? அதிலே விமலா பெறும் ரோஷத்தைத் தம்முடையது போலக் காட்டி அவளுக்கு இரண்டாவது மருகனை ஸ்வாமி அனுப்பமாட்டாரா?’ என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
***
கௌஸல்யா ராணியின் ரோஷத்தை ஸ்வாமி தமதாக ஏற்றுக் காட்டிய ஒரு லீலையும் உண்டு.
ராணியின் முதல் குழந்தை காயத்ரிக்கு ஒரு பெரிய கட்டி உண்டாயிற்று. ஆபரேஷன் செய்ய வேண்டுமென்று டாக்டர் சொன்னார். பயங்கரமான முன்னனுபவம் ஒன்று ராணிக்கு நினைவு வந்தது. எனவே, “ஆபரேஷனில்லாமல் குணமாக்க முடியாதா?” என்று கேட்டார். டாக்டர் கேலியாக, “நீங்கள்தான் பாபா, பாபா என்று தெய்வமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறீர்களே. அவர் வேண்டுமானால் குணப்படுத்தட்டும்!” என்றார்.
அதையே ராணி ஸவாலாக எடுத்துக்கொண்டு, குழந்தையுடன் வீடு திரும்பி, கட்டியின் மேல் விபூதி போடலானார். வைத்தியமே செய்யவில்லை. கட்டியும் இல்லை! ஆம், கரைந்தே போய்விட்டது!
வேண்டுமென்றே குழந்தையை டாக்டரிடம் இட்டுச் சென்று, “எங்கள் தெய்வ பாபா பற்றி இப்போது என்ன சொல்கிறீர்கள்?” என்று ராணி கேட்டார்.
ஆச்சரியமும் பச்சாத்தாபமும் ஒருங்கே கொண்ட டாக்டர், “நான் அன்று பேசியது தப்பு. எக்ஸ்க்யூஸ் மீ” என்றார்!
17. சுருக்க அருள் சுரக்கும் ‘சுருக்’!
பெரிய ஆபரேஷனில் அருளும் பெரிய அற்புத நிவாரண வைபவத்தைச் சின்ன இஞ்ஜெக்ஷனிலும் காட்டும் வல்லமை நம் நூல் நாயகனுக்கு உண்டு. ஸிம்பிள் வைத்தியத்துக்கு இரண்டு ஸாம்பிள்கள்.
ஜயலக்ஷ்மியம்மாள் மிகவும் துர்பலமானவர். ஆயினும் எந்த உடலுபாதை ஏற்பட்டாலும் நம்பவொண்ணாப் பொறுமையுடன் தாங்கிக்கொண்டு, தம்பாட்டுக்குக் காரியங்கள் செய்து வருவார். அவராலேயே தாங்க முடியாமல் அன்று இடுப்பில் பிடிப்பு வலி, வீக்கத்துடன் பாபா படத்தின் கீழே சுருண்டார். அப்போது வழக்கத்துக்கு வித்யாஸமான ஒருமுறையில் வேண்டினார்! படத்தைப் பார்த்தே வேண்டினார்.
அந்தப் படம் அப்போதுதான் வீட்டுக்கு வந்திருந்த புதிது. பிற்பாடு வழுவழுக் காகித ‘பரின்ட்’டாக உலக முழுதும் பரவிவிட்ட படம் அதுவெனினும் அன்று இவர்கள் வீட்டில் மட்டுமே பலர் கண்டு ஆனந்தித்த அபூர்வ வஸ்துவாக இருந்தது. அச்சமயம் ஜயம்மாளின் பிள்ளை எழுதிய ஒரு ஸாயி நூலும் வெளியாயிருந்ததால் நிறைய அடியார்கள் வந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் ஒருவாய்ப் பட்டாற்போல அப்படத்தில் பாபா அதிசயமான ஜீவ ஸாந்நியத்துடன் விளங்குவதாகச் சொல்லி நமஸ்கரித்துப் போவார்கள். இச்சூழ்நிலைதான் ஜயம்மாளை வித்யாஸமாக ப்ரார்த்திக்க வைத்தது.
“ஸ்வாமி! வருகிறவர்களெல்லாம் – இந்தப் படத்திலே நீங்கள் பூர்ணமாயிருப்பதாகச் சொல்கிறார்கள். உங்கள் வைத்ய ரக்ஷணையைப் பற்றிப் பையன் பக்கம் பக்கமாய் எழுதியிருக்கிற புஸ்தகமும் இப்போதுதான் ரிலீஸ் ஆகியிருக்கிறது. இந்த ஸமயத்தில் நான் டாக்டரிடம் போகிறேனென்றால் ‘அந்த அம்மாள் டாக்டரிடம் போகும்படியிருக்கிறதே!’ என்று மற்றவர்கள் சொல்வார்களென்றால் அவமானமாயிருக்கும் போல் இருக்கே!” என்று வேண்டினார்.
உடனே ஸ்வாமிக்கு ரோஷச் சூடு பிறக்க.
அம்மாளின் இடுப்பில் கால்ஷியம் க்ளூகனேட் ஊசி போட்டது போலச் சூடு பரவிற்று. தத்க்ஷணமே பிடிப்பு விட்டது, வீக்கம் வடிந்தது, வலி ஓடிப் போயிற்று!
***
ஸாயி பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக உள்ள என் அருமைத் தம்பி, ‘பாலாஜி’ என்று அழைக்கப்படுபவன், அவனுடைய அன்னையின் அனுபவம்: முதலில் அந்த அம்மாளுக்கு இரவில் இடது கை விரல்களில் மூன்று மரத்துப் போயின. பிறகு இடது வலதாகி, வலக்கை முழுதும் குத்தல், ‘கொறக்களி வாங்குவது’ என்னும் வலி ஏற்பட்டது. நிபுணரான டாக்டரிடம் அப்பாயின்ட்மென்ட் ஃபிக்ஸ் செய்தார்கள்.
மறுதினம் அவரிடம் சென்று காட்ட இருந்தபோது, முந்தைய இரவே நமது மஹா நிபுணர் அம்மாளின் கனவில் வந்தார். பயமுறுத்துவது போல, அவரை ஆபரேஷன் தியேட்டரொன்றுக்கு அழைத்துப் போனார். ஆனால் கத்தி கபடா போட்டு அறுவை செய்யாமல், ஊசி மட்டும் ‘சுருக்’கிட்டு, சுருக்க மறைந்து விட்டார்.
அம்மாள் எழுந்திருந்தபோது நோவு பெருமளவு குணமாயிருந்தது. படிப்படியாய் உபாதையிலிருந்து முழு விமோசனம் பெற்றார். வலக்கை இப்படி சரியாகும் போதே, இடக்கையின் தோளுக்குக் கீழே சற்று நெறி கட்டினாற்போல் வலி எடுத்தது. என்னவென்று பார்த்ததில் அங்கே ஊசி குத்தினால் ஏற்படுமே, அம்மாதிரிப் புள்ளியாய் ரத்தம் கட்டியிருந்தது!
உடலுக்கு மருந்தோடு சித்தத்துக்கு ஔஷதமும் கலந்தே ஊசி போட்டார் போலும்! இதன்பின் அம்மாள் பஜனைக்குச் சென்ற ஓரிடத்திலிருந்த ஷீர்டி ஸாயியின் படத்தில் அவரது முகத்தின் கீழ் பர்த்தி ஸாயி தெரிந்தார். படமாக இரு பரிமாணத்திலின்றி, கனவில் ஊசி போட்டவர் கன பரிமாணத்திலும் தெரிந்தார்! “இதென்ன விசித்ரப் படம்?” என்று அம்மாள் கேட்டார். “விசித்ரமொன்றும் இல்லையே! எல்லா இடங்களிலுமுள்ள ஷீர்டி பாபா படந்தானே இது?” என்று மற்றவர்கள் சொன்னார்கள்! ஊசி மஹிமையில் இதுபோல் வேறு சில திவ்யக் காட்சிகளும் அவருக்கு வாய்த்தன!
18. தோலோடு வாழைப்பழம்!
ஆதிகால பக்த சிகாமணி, உடல் மறைந்தாலும் ஸாயிப்பணியில் மறக்கவொண்ணா மஹநீயர் சேஷகிரிராவ், அவருக்கு முன்பே ஸாயியை வந்தடைந்தார் அவரது மகளான ஸுந்தரம்மா. ஸாயிக் கண்ணனின் யசோதையான புட்டபர்த்தி ஸுப்பம்மா இவர்களுக்கு உறவினர். எனவே பெங்களூர்வாஸியான ராவின் மனையாள் அங்கு சென்றார். அங்கே பதினாறு வயதுப் பரமனைக் கண்டார். ஸுந்தரம்மாவுக்கு அடுத்த பிரஸவத்தில் ஏற்படவிருந்த ஆபத்தையும், அது தம் அருளால் நீங்கும் என்பதையும் ஸ்வாமி அவரிடம் தெரிவிக்க, அவர் பெங்களூர் திரும்பிய பின் அதை மகள் ஸுந்தரம்மாவுக்குத் தெரிவித்தார்.
சில நாட்களிலேயே பால ஸாயி பெங்களூர் வந்தார். அவரை தரிசித்து வரலாமென ஸுந்தரம்மா தமது கணவர் சர்மாவிடம் கோரினார். சர்மாவுக்கு இதிலெல்லாம் நம்பிக்கை கிடையாது. எனவே, “அழைத்துப் போகிறேன். ஆனால் நான் உள்ளே வராமல் தெருவிலேயேதான் இருப்பேன். நீ போய்ப் பார்த்து வா” என்றார்.
அப்படியே பால ஸாயி தங்கியிருந்த இடத்தில் அம்மாள் மட்டும் உட்சென்றார். அவர் இவரது ஸமாசாரங்களை சகஜமாகச் சொல்லி ஆசி வழங்கினார்.
அப்புறம் கூடியிருந்த எவருக்குமே அவர் எங்கே போனாரென்று தெரியாமல் எப்படியோ மாயமாய் நழுவி விட்டார்! சிறிது நேரத்துக்குப் பிறகு உள்ளே வந்தார். தீங்குரலில் திவ்ய நாமாவளிகள் பாடி பஜனை செய்தார்.
பஜனையின் இடையில் ஸுந்தரம்மாவின் கணவர் உள்ளே வந்தார். அது மட்டுமில்லை. அவரது தாய், பெண் இருவரும் வேறு வந்தனர். இவர்தான் போய் அவர்களை அழைத்து வந்திருக்கிறாரென்று ஸுந்தரம்மா புரிந்து கொண்டாள். ஆனால் எப்படிக் கணவர் மனத்தில் இத்திடீர் மாற்றம் ஏற்பட்டதென அவருக்குப் புரியவில்லை .
பஜனை முடிந்து வீடு திரும்புகையில் அந்த அதிசயத்தை சர்மா அவருக்குச் சொன்னார். ஜாகையுள்ளே பால ஸ்வாமி காணாது போனாரல்லவா? அப்போது தெருமுனையில் குறுக்கும் நெடுக்குமாய்ப் போய்க்கொண்டிருந்த சர்மாவின் முன் திடீர் ஆவிர்பாவம் செய்திருக்கிறார்!
“அந்த கர்ப்பிணியம்மாவுடைய பர்த்தாதானே நீ? உனக்கு உடம்பெல்லாம் எக்ஸிமா. அவஸ்தைப் படுகிறாய். சொஸ்தம் பண்ணுகிறேன்” என்று கூறித் துளிர்க் கரத்தை அசைத்தார். அதில் ஒரு வாழைப்பழம் ‘வந்திருந்தது!’ “தோலோடு ஸாப்பிடு. வியாதி பறந்து போயிடும்” என்று கூறிப் பழத்தை சர்மாவுக்குக் கொடுத்தார் பிஞ்சில் பழுத்தவர்.
திடீர் ஆவிர்பாவத்தைப் போலவே திடீர் அந்தர்தானமானார்.
அதிர்ந்துபோன சர்மா அதிர்ச்சி நீங்கியபின் வாழைப்பழ வைத்தியரின் பக்தரானார். ஸாயியின் ஜாகை நோக்கி அவர் வர, பஜனையொலி கேட்டது! ஸாயிதான் பாடுவது என்று அறிந்தபின் ஓடோடிச் சென்று தாயையும் மகளையும் அழைத்து வந்திருக்கிறார்.
தோல் வியாதி தீரத் தோலோடு பழம் தின்னக் கொடுத்த விந்தையைச் சொல்லவா? தோல், நிணம், எலும்பு யாவற்றுக்கும் உள்ளேயிருக்கும் உயிரை அவ்வாழை தொட்டு சர்மாவை பக்தியில் வாழ வைத்த விந்தையைச் சொல்லவா?