சத்ய சாய் – 5

13. சடலம் பெற்ற உயிரில்லாத உயிர்!

யிரில்லாத உயிரா? அதை ஒரு சடலம் பெற்றதா? அப்படியென்றால்?” மேலே படியுங்கள் ஐயன்மீர், அம்மையீர்! புரிந்து கொள்வீர்கள். ஸ்வாமியின் வைத்திய விந்தைகளிலேயே இது ஒரு தனி க்ளாஸ்தான்!

***

ஸாயி பக்தரான அந்த டாக்டர் பம்பாய் ஜஸ்லோக் ஆஸ்பத்திரியில் மெடிகல் ஆபீஸராயிருந்தார். அவர் எவ்வளவு உண்மையான ஸாயி பக்தரெனில், ஸ்வாமி சொல்வதுபோலவே தாம் வேலை நிறுத்தம் செய்யாமலிருப்பது மட்டுமின்றி, வேலை நிறுத்தம் செய்யும் ஏனையோருடைய அச்சுறுத்தலுக்கும் அஞ்சாமல், ஸாயியின் ரக்ஷணையை நம்பி உயிர் காக்கும் தம் பணியைச் செய்வார்.

அன்று அப்படித்தான் மற்ற டாக்டர்கள் ஸ்ட்ரைக் செய்திருந்தும் இவர் ட்யூட்டிக்குச் சென்றிருந்தார்.

கிணற்றில் முழுகி மரணமடைந்த ஒரு கிறிஸ்துவரின் உடலம் நல்லடக்கம் செய்யப்படுமுன் டாக்டர் ஸர்ட்டிஃபிகேட்டுக்காகக் கொண்டுவரப்பட்டது. பொது விதிப்படி இரண்டு டாக்டர்கள் ஸர்ட்டிஃபை செய்ய வேண்டுமென்றிருந்தாலும், வேறெவரும் வேலைக்கு வராததால், ‘முழுகியதால்தான் மரணம்என்று நம் நண்பர் ஒருவரே சோதனைக்குப் பின் சான்றிதழ் தந்து, புதைப்பதற்கு அனுப்பி வைத்தார்.

அதோடு விஷயத்துக்கு அவர்தலை முழுகமுடியவில்லை! நாலு மாதம் பின் போலீஸார்புதைந்துபோகாமல் பிரச்னையைக் கிளப்பியதால் நண்பரை ஆபத்து தேடி வந்தது!

ஸப் இன்ஸ்பெக்டர் ஒருவரின் குற்றச்சாட்டுக்கு அவர் இலக்கானார். சவமாய் இவரிடம் வந்த நபர் உண்மையில் எதிரிகளால் கொலை செய்யப்பட்டு, அதன்பின் கொலையை மறைப்பதற்காகவே கிணற்றில் தள்ளப்பட்டதாகவும், கொலையாளிகளிடமிருந்து லஞ்சம் பெற்று அவர்களுக்கு உடந்தையாக நம் நண்பர் விதிக்கு விரோதமாகத் தனியொரு டாக்டராகவே சான்றிதழ் தந்து விட்டாரென்றும் குற்றச்சாட்டு! கிணறு வெட்ட, அல்ல, எவரோ கிணற்றில் விழுந்ததால், இவருக்கு இன்னல் தர பூதம் புறப்படுகிறது! தமது உபதேசத்தைக் காக்கவே ஸ்ட்ரைக்கிலும் கடமையை விடாதவரை பூதம் பாதிப்பதற்கு ஸாயி விடுவாரா?

கல்லறைப் பெட்டியைத் திறந்து மீளவும் சவச் சோதனை செய்யலாமா என யோசித்துப் போலீஸார் நம் டாக்டருடன்ஸெமிட்ரிக்குச் சென்றனர். ஸாயி ஸ்மரணையிலேயே அவர் முழுகியிருந்தார். சவப்பெட்டி திறந்து பார்க்கப்பட்டது. டாக்டர்கள் சடலத்தைப் பரிசோதித்தனர். நீரில் முழுகி மரித்ததற்கான சான்றுகளே அதில் காணப்பட்டனவேயன்றி, கொலையுண்டதற்கான அடையாளம் எதுவுமில்லை என்று உறுதி செய்தனர்.

உயர்பதவி வகிக்கும் நம் டாக்டரின் குண உயர்வு பற்றி உடன் வந்த போலீஸ் உயரதிகாரிக்கு நன்கு புரிந்து விட்டது. அவர்மீது குற்றம் சாட்டியதற்காக மனமார மன்னிப்புக் கேட்டுக்கொண்டார். அதோடு, குற்றம் சாட்டிய எஸ்.. மீது தம் போலீஸ் தோரணையைக் காட்டிக் கடிந்து கொண்டு, கையிலிருந்த குச்சியால் அவரை ஒரு தட்டு தட்டியும் விட்டார்!

ஸாயிராமா, காப்பாற்றினாய்!” என ஆச்வாஸமுற்று வீடு திரும்பிய நம் அன்பரிடம் மனைவி சொன்னார். “சற்றுமுன் எனக்கு ஒருவிஷன்’ (ஸுக்ஷ்மக் காட்சி) ஏற்பட்டது. ஸ்வாமி தோன்றினார். அவரது இடது கையில் ஒரு மீன் இருந்தது. வலது கையில் ஒரு குச்சி இருந்தது.”

நாம் அநுதாபம் காட்டுவதற்கில்லாத விசித்ரப் பிரகிருதிகளை queer fish, odd fish என்று ஆங்கிலத்தில் சொல்வர். அப்படிப்பட்ட ஒரு விநோத மீனே அந்த எஸ்.. என்பதைத்தான் ஸ்வாமி காட்டினாரோ?

திடுமென டாக்டரின் மனத்தில் ஒரு கேள்வி எழும்பியது. போலீஸார் எவர் மனத்திலும் எழும்ப முடியாமல் ஸ்வாமி அமுக்கிப்போட்டிருந்த அக் கேள்வியை இந்த பக்தர் மனத்தில் மட்டும் அவரே எழுப்பினாரென்றும் சொல்லலாம்! ‘சவப் பெட்டியைப் புதைத்து நான்கு நீண்ட மாதங்கள் ஓடி விட்டன. ப்ரேதத்துக்குக் காப்பாக மருந்து எதுவும் போட்டும் அவர்கள் புதைக்கவில்லை. அப்படியும் அதெப்படி இத்தனை நாள்களுக்குப் பிறகு அது கொஞ்சமும் அழுகாமல், மட்காமல் இன்றுதான் அடக்கமானாற் போலிருந்தது? இயற்கைப்படிப் பார்த்தால், பரிசோதனைக்கே இடம் தராத வகையில் அது எலும்புக்கூடாகத்தான் ஆகியிருக்க வேண்டும். அப்போது நாம் நிரபராதி என்பதும் ருஜுப்பிக்கப்படாமலே போயிருக்கும். இப்போதோ அதிசயமாக…’

ஸாயிராம ஜபத்துடன் டாக்டர். மீண்டும் ஸெமிட்ரிக்கு விரைந்தார். சவப்பெட்டியை எடுக்கச் செய்து திறந்து பார்த்தார்!

ஹா! வள்ளிசாய் நாலு மாஸம் வள்ளிக்கிழங்கு போலிருந்த சடலம், இப்போது இந்தச் சில மணிகளுக்குள் உருத்தெரியாமல் சிதைந்து கூடாய்க் கிடந்தது!

ஸாயிராமன்தான் சற்றுமுன் இவர்கள் திறந்த போது மட்டும் சிதைந்த சவத்துக்குப் புதுச் செழுமை ஊட்டியிருக்கிறான்! அவனுடையமிரகிள்களிலேயே ஒரு தனி க்ளாஸாக, சவத்துள் உள்ள ஜீவனை உயிர்ப்பிக்காமல் உடலுக்கு மட்டும் ஓர் உயிர்களை ஊட்டியிருக்கிறான்!

ஆம், இதுவே ஸத்தியம் என்று பின்னர் அந்த பக்தர் பர்த்தி வந்தபோது ஸத்ய ஸாயீசன் உறுதி செய்தான்! “அன்றைக்கு உன் மானத்தை ரக்ஷிப்பதற்காக நான்தான் ப்ரேதத்தை freshஆகச் செய்தேன்என்றான்!

பிணத்துக்கு விசித்ர வைத்தியம், ஸேவை மனத்துக்குக் கருணை வைத்தியம்!

14. பேற்றில் கைகொடுத்த பெற்றி பலம்

ன்னொரு டாக்டருக்கு மருத்துவத்திலேயே ஸாயி அளித்த சகாயம் பார்ப்போம். அந்த டாக்டர் ஒரு பெண்மணி. பேற்று மருத்துவத்தில் சிறப்புத் தேர்ச்சி பெற்றவள். அவள் ஆங்கிலமும் தமிழும் கலந்து மருத்துவ பரிபாஷைச் சொற்றொடர்களுடன் எழுதியிருப்பதை எனக்குப் புரிந்தவரையில் தெளிவு செய்கிறேன் (அல்லது குழப்புகிறேன்).

7.3.85 அன்று அவள் ஒரு பிரஸவ கேஸ் எடுத்தாள். அட்மிட் ஆன கர்ப்பிணி மூன்றாண்டுகளுக்கு முன்பு ஸிஸேரியனில் ஒரு மகவு ஈன்றவள். இப்போதும் பனிக்குடம் உடைந்து நெடுநேரமாகியும் வலி எடுக்காததால் நமது டாக்டர்ஸோதரி ஸிஸேரியனாக வயிற்றைக் கிழித்துக் குழந்தையை எடுக்க முடிவு செய்தாள்.

அப்பப்பா, அதற்கடுத்த இரண்டு மணிகள் தனக்கு அப்பேர்ப்பட்ட சோதனைக் காலமாயிருக்குமென ஸோதரி அப்போது சற்றும் எண்ணவில்லை. ஆனால் அதுவே ஸாயியை சரண் புகுந்து அரண்கொள்ளும் நம்பிக்கையில் இவளை ஆழ்த்தும் அரிய வரமாகவும் ஆயிற்றெனலாம். என்ன ஆயிற்று கேளுங்கள்!

அறுவை சிகித்ஸையில் வயிற்றை ஒவ்வொரு தோலடுக்காகக் கிழித்துப் போனால் மூன்றாவதற்குப் பின்பெரிடோனியல் காவிடிஎன்ற குழிப்பகுதி இருக்குமாம். இந்தக்காவிடியைக் கத்தியால் திறந்தால் கருப்பை என்ற மைய அமைப்பு தெரியும். இந்தக் கேஸில் கருப்பையில் பாதி பெரிடோனியத்தோடு ஒட்டியிருந்ததில், பையின் இடப்பாதி மட்டுமே தெரிந்தது. அதைக்கொண்டு, நம் டாக்டர்ஸோதரி கருப்பையின் கீழ்ப்பாகத்தைக் கிழித்தாள். உள்ளிருந்த சிசுவை வெளியே எடுப்பதற்காக இவள் கிழித்த இடத்தினடியே மிகவும் ஒட்டினாற்போல கொப்பூழ்க் கொடி இருந்ததால் அதை எடுத்து அகற்றினாள். தாயிடமிருந்து சிசுவுக்கு ஊட்டம் பாயும் இக்கொடியை அகற்றிய சில நிமிஷங்களுக்குள் சிசுவை வெளியே எடுக்காவிடில் அது வயிற்றிலேயே மரித்துவிடும். அம்மாதிரி இந்த சிசுவை எடுக்க ஸோதரி பட்டபாடு! இவள் திறந்திருப்பதோ பாதி கருப்பையை! சிசுவானால் ஸாதாரணக் குழந்தைகளைவிட மிகப்பெரிதாகப் பையை அடைத்துக் கொண்டு கிடக்கிறது! வேர்த்து விருவிருத்துக்கொண்டு ஸாயி நாம உள்ளோலத்தோடு பிரயத்தனப்பட்டாள். கடைசியில் நாலரை கிலோ எடையுள்ள (ஸாதாரணமாய் ஒரு குழந்தை இரண்டே முக்காலிலிருந்து மூன்று கிலோ எடைதானிருக்குமாம்) சிசுவை எடுத்துப் போட்டதுஅவன் க்ருபைதான்!” என்று எழுதியிருக்கிறாள்.

அதோடு தீரவில்லை சோதனை. குழந்தையை நல்லபடியாக எடுத்தபின், கிழித்த பகுதிகளைத் தைத்ததில் ஸோதரிக்குத் திடீர் என ஐயம் தோன்றிவிட்டது: ‘கருப்பையை சிறுநீர்ப்பையுடன் சேர்த்துத் தைத்து விட்டோமா என்ன? அப்படிச் செய்திருந்தால் சிறுநீர் ஸதா ஸர்வ காலமும் சொட்டத் தொடங்கிவிடுமே!’ இந்த ஐயப்பாட்டினால், கருப்பையை மூன்று தோலடுக்குகளில் மூடித் தைக்கும் வழக்கத்துக்கு மாறாக, ஸாயிராமன் தலையில் பாரத்தைப் போட்டுவிட்டு, ஒரே ஓர் அடுக்கில் மட்டும் தையல் போட்டு, விட்டுவிட்டாள்.

ஆபரேஷன் ஆனதை அடுத்து இத்தனை நேரமும் பிரஸவப் பெண்மணி ஏகத்தாறாகக் குருதி சாய்த்து விட்டாள். அவள் டிஸ்சார்ஜ் ஆகும் நாள்வரையில் நாடித் துடிப்பு 120-140-க்கு உயர்ந்திருந்தது என்பதிலிருந்தே அவளது சீர்கேட்டு நிலைமையை ஊகிக்கலாம். ஆயினும் அறுவையின் ரணத்தில் துவாரம் எதுவுமேற்படாமல் அந்த அம்சத்தில் நல்லபடியாக வீடு திரும்பினாள்.

சில நாள்கள் சென்றபின் அவள் எப்படியிருக்கிறாளோ என்னவோ என்று பார்த்து வர ஸோதரி சென்றபோதுதான் இக்கேஸில் ஸாயியற்புதத்தின் முழுமையை அவளால் கண்டு வியப்புற முடிந்தது. பரமஸுக ப்ரஸவம் பெற்ற தாய்மாரை விடவும்கூட நல்லாரோக்யத்துடன் சுருசுருவென்று வீட்டுக் காரியங்களைப் பார்த்துக் கொண்டிருந்த அப்பெண் உற்சாகமாக டாக்டர் ஸோதரியை வரவேற்றாளாம்!

விவரத்தை முடிக்கும் ஸோதரி, “எங்கள் தொழிலில் நாங்கள் சிரமங்களுக்கு ஆளாவதுநார்மல்தான்; ஆனால் இம்மாதிரிஅப்நார்மல்சிரமத்துக்கு ஆளாவதில்லை. அப்படிப் பட்டுப் பார்த்தவர்களுக்கே புரியும் கிருபையின் அருமைஎன்கிறாள்.

15. கருக் காக்கும் நாயகி!

ருந்தீச ஸாயியின் காப்புக் காப்பியத்தில் ஒரு கர்ப்பிணியின் கதை பார்ப்போம்.

கௌஸல்யா ராணி ராகவனுக்கு ஒரு ஸமயம் ரத்தப்போக்கு மிக அதிகமாகவும், விடாமலும் ஏற்பட்டது. பரீக்ஷை செய்ததில், ரத்தத்தை உறைய வைக்கும் ப்ளேட்லெட் அணுக்கள், இருக்க வேண்டிய அளவில் தசாம்சம்கூட இல்லையெனத் தெரிந்தது. “உடனே ஹாஸ்பிடலில் அட்மிட் செய்யணும். ஸ்ப்ளீன் எடுத்து ஆபரேஷன் செய்யவேண்டியிருக்கும். ஒன்று கவனமாயிருங்கள்அதாவது நீங்கள் கருத்தரிக்கக்கூடாதுஎன்று டாக்டர் கூறினார்.

உடனே மஹா பெரிய ஹாஸ்பிடலுக்கு ஓடி மஹா பெரிய டாக்டரைப் பார்த்தார் ராணி. ப்ரசாந்தி நிலயம்தான் அந்த மஹா ஹாஸ்பிடல், பாபாதான் மஹா டாக்டர் என்று சொல்லவும் வேண்டுமா?

மற்ற டாக்டர்கள் கருத்துக்கெல்லாம் மாறாக மஹா டாக்டர் பேசினார். “டாக்டர்கள் ஏதாவது சொல்வார்கள். உனக்கு அநுக்ரஹம் பண்ணுகிறேன். குழந்தையும் பிறக்கும். அதற்கு நாமகரணத்திலிருந்து எல்லாம் ஸ்வாமியே செய்கிறேன்என்று நல்வாக்குக் கூறினார்.

வாக்கின் உண்மை தெரியவோ என்னவோ, ராணி கருவுற்றார். டாக்டரிடம் சென்று காட்டவே பயந்து பேசாதிருந்தார். ஸ்வாமியின் அபய சக்தியில் அசையா நம்பிக்கை வைத்து பாலவிகாஸ் வகுப்பு உத்ஸாஹமாய் நடத்தினார். ராஜமஹேந்திரபுர பாலவிகாஸ் மாநாட்டுக்கும் சென்று வந்தார். இப்போது ஆஸ்த்மா வேறு இவரை வாட்ட ஆத்ம நாயகன் அருளால் அதிலிருந்து குணமானார். (ஆஸ்த்மா நிவாரணக்கதைஅன்பு அறுபதில் (அத். 46] காணலாம்.) பிறகு எட்டு மாத கர்ப்பிணியாக அந்த 1974-ம் வருஷத்திய ஸம்மர் கோர்ஸுக்கும் சென்று ஒரு மாதம் திவ்ய தர்சனம் பெற்றுத் திரும்பினார்.

இவரது உடல்நிலையில் ஹெமடாலஜிஸ்டிடம் மாதமிருமுறை செய்து கொள்ள வேண்டிய டெஸ்ட் உள்பட எதுவும் இக்காலத்தில் இவர் செய்து கொள்ளவில்லை. இந்நிலையில் பிரஸவத்துக்கு எந்த டாக்டரிடம் போய் நின்றால் கேஸ் எடுப்பார்கள்? எனவே ப்ரசாந்தி நிலய மருத்துவ மனையில்தான் அட்மிட்டாக வேண்டுமென ராணி முடிவு செய்திருந்தார். ஆனால் முடிவு செய்து, அதன்படியே முடித்துக்காட்ட முழுஅதாரிடிபெற்ற ஸ்வாமியோ அப்போது நடைபெற்ற பிரசாந்தி டவுன்ஷிப்பின் புனர் நிர்மாணத்தில் ஜாகைகளையெல்லாம் இடித்து விட்டாரென்று இடியான செய்தி வந்தது.

ஸ்வாமியிடமே முறையிடப் போன ராணியிடம் அந்த ஸ்வாமி, “டெலிவரிக்கு மெட்றாஸுக்குப் போஎன்று சொல்லிப் போய்விட்டார்.

படித்தறிந்த ஒரு பெண்மணியான ராணி பட்டிக்காட்டுப் பெண்போல மருத்துவ ஆலோசனையை மீறிக் கருத்தரித்து, அதன் பின்பும் அதற்கான சிகித்ஸை எதுவும் பெறாமல், இப்போதுஅட்வான்ஸ்ட்கட்டத்தில் தம்மிடம் வந்ததற்காகச் சென்னை டாக்டர் எரிமலையாய் வெடித்தார். கடைசியில் ஒருவாறு ஸமாதானமாகி இவரைஎக்ஸாமின்செய்தார். ஒரு தேதி கொடுத்து, அதற்குள் குழந்தை பிறக்க வேண்டுமென்றார்.

குழந்தையோ அந்தத் தேதிக்கு டிமிக்கி கொடுத்து விட்டு, மேலும் ஒரு மாதமாயும் வயிற்றிலேயே கல்லுப் பிள்ளையாராக இருந்தது.

இனி வளரவிட்டால் ஆபத்து; ஆபரேஷனும் உன் விஷயத்தில்ரிஸ்கிதான். ஆனாலும் ரத்தம் ஏற்றி, ஆக்ஸிஜன் கொடுத்து அறுவை செய்துவிட்டால்தான் நலம்என்றார் டாக்டர்.

மறுநாள் பாபா சென்னை வருவதாயிருந்ததால் அவரைக் கேட்டுக்கொண்டு ஆபரேஷன் செய்து கொள்ள ராணி எண்ணினார். டாக்டர் ஒப்பினார். ஆனால் அந்த ஒரு நாள் தான் கெடு தந்து, அதற்கு மேல் போனால் தாம் பார்க்க முடியாதெனச் சொல்லிவிட்டார்.

அடுத்த தினம். இம்மாதிரி சமயங்களில் நன்றாகச் சோதிக்கும் மாயாவி சென்னை வராமலே ஏமாற்றி விட்டார்! இதற்கடுத்த தினம் ராணி டெஸ்ட்களுக்காக மருத்துவமனை புகவேண்டியதுதான்.

அன்று பகல் பாபாவின் படத்தின் முன் நின்று மனமார, கண்சோர வேண்டினார் ராணி. தசராவின்போது ஸ்வாமியின் திருக்கரத்தால் ஷீர்டீசருக்குச் செய்த விபூதியபிஷேக ப்ரஸாதம் ராணியிடம் இருந்தது. என்னவோ ஓர் உள்ளுந்தல் பிறக்க, அத் திருநீற்றை ஒரு செம்பு ஜலத்தில் கலந்து அவ்வளவையும் உட்கொண்டார்.

வயிற்றுள்ளே உந்தத் தொடங்கிற்று. அதுவரை மந்தமாய்க் கிடந்த பிண்டம்!

டாக்டரே அதிசயிக்குமாறு அன்றே பரமநார்மல் டெலிவரியாக, கொழு கொழு குழந்தை பிறந்தாள்!நாமகரணத்திலிருந்து யாவும் செய்வதாகச் செப்பிய புண்யநாமர் 26.1.1975 அன்று அதிருஷ்டக் குழந்தையை மடிமேல் சார்த்திக்கொண்டு, டாலர் ‘எடுத்து’த் தந்து, பொருத்தமாக ‘ஸாயி கீர்த்தி’ எனப்பெயரிட்டார்!