சத்ய சாய் – 4

10. ஸுதர்சன ஸாயி

நிகில துஷ்கர்ம கர்சந! நிகம ஸத்தர்ம தர்சந!
ஜய ஜய ஸ்ரீ ஸுதர்சந! ஜய ஜய ஸ்ரீ ஸுதர்சந!

ஸ்ரீ வேதாந்த தேசிகரின்ஸுதர்சநாஷ்டகம்

மேற்சொன்ன மனநோய்களின் வரிசையிலேயே வரும் ஒன்றிலிருந்து ஸமீபத்தில் ஒரு பெண்மணி விடுதலை பெற்ற அற்புதத்தைச் சொல்ல வேண்டும். ஸ்தூலத்தில் தோன்றாமல் ஸுக்ஷமமாய் செய்த அருள் லீலை.

இருபத்தைந்து வயது இளைஞன் உதயகுமார் திருநெல்வேலி மாவட்டத் தாழையூத்தில் நுகர் பொருள் வாணிபக் கழகத்தில் பகுதிப் பொறியாளராக இருந்தான். திருமணமாகாத அவனுக்குச் சென்னையிலிருந்த தாயிடம் மிகவும் பற்றுதல். தாய்க்கு ஏழுமலையானிடம் பற்றுதல். தாழையூத்திலிருந்து அடிக்கடி லீவ் போட்டு விட்டுச் சென்னை வருவான் பிள்ளை. அம்மாவையும் அழைத்துக் கொண்டு திருப்பதி சென்று, பிறகு அவளைச் சென்னையில் விட்டு ஊர் திரும்புவான். அடிக்கடி லீவ் போடுவதால் வேலைக்குக் குந்தகம் செய்துகொள்ளப் போகிறானே என்று தந்தை புருஷோத்தமன் விசாரப்பட்டார். அப்படி நடக்கவில்லை. ஆனால் வேறு விதத்திலே விதி அதைவிட பயங்கரமாகச் சிரித்து விட்டது!

1976 ஏப்ரலில் உதயகுமார் வழக்கம்போல் லீவ் போட்டுச் சென்னைக்கு வந்தபோது தாழையூத்து அலுவலகத்தில் சுமார் 250 ரூபாய் பெறுமானமுள்ள பொருட்கள் களவு போய்விட்டன. வேலைக்குத் திரும்பிய உதயகுமார் ஸஸ்பென்ட் ஆனான். திருட்டுக்கு அவன் உடந்தையாயிருந்திருக்க வேண்டும் என்றும், எனவே இது குறித்த விசாரணை முடியும் வரை அவனை வேலை நீக்கியிருப்பதாகவும் அவனுக்குமெமோகொடுக்கப்பட்டது.

ஸாதுப்பிள்ளை, மானமிக்க பிள்ளை அதைப் பார்த்து அப்படியே நிலை குலைந்தான். சென்னைக்கு ஓடி வந்தான். ஆனால் தகப்பனாரின் முகத்தில் விழிக்க தைரியமில்லை. நண்பனொருவனிடம் சென்றுஅப்பாரை எப்படிப் பார்ப்பேன்?” என்று கதறினான். நண்பன் ஏதோ ஆறுதல்கூறி அவனைத் தன்னுடனேயே தங்க வைத்துக் கொண்டான்.

ஸாதுப்பிள்ளை நிரந்தர அறுதலுக்கான தீர்வு என நினைத்து ஒரு பயங்கரத்தைச் செய்துவிட்டான், நண்பன் படுக்கப்போனபின், அவன் மூட்டைப் பூச்சி மருந்து அருந்தி விட்டான். காலையில் நண்பன் பார்க்கும் போது நினைவிழந்து கிடந்தான். ஜெனரல் ஆஸ்பத்திரியில் அவனைச் சேர்த்தான் நண்பன்.

நண்பகலில் உதய குமாரனின் இளவாழ்வு அஸ்தமித்து விட்டது!

மாநகராட்சி நடுநிலைப் பள்ளியொன்றின் தலைமை ஆசிரியராயிருந்த தந்தைக்கு மகனின் மரணச் செய்தி இரண்டாவது மகன் ரவிகுமார் மூலம் சென்றது. வீட்டுக்கு வந்த அந்தத் துயரத் தகவலை அந்தப் பிள்ளை தாயிடம் தெரிவிக்கத் தயங்கி, தந்தையிடமே அவரது பள்ளிக்குச் சென்று தெரிவித்தான். ஆசிரியர்கள் சூழ தந்தை புருஷோத்தமன் ஜி.ஹெச் சவக்கிடங்குக்குச் சென்றார். கோரமான உண்மையைக் கண்ணெரிய நேரே கண்டார்.

எப்படியோ சமாளித்துக்கொண்டு, துர் மரணம் குறித்து ஆஸ்பத்திரியில் செய்ய வேண்டியவற்றை முடித்து, உற்றாருக்குத் தந்தி கொடுத்து, பிறகே ஆதம்பாக்கத்திலுள்ள வீட்டுக்குத் திரும்ப முடிவு செய்தார்.

உடன்வந்த ஆசிரியருள் ஒருவரான கமலாவும் ஆதம்பாக்கவாஸிதாம். சடலத்தைப் பார்த்ததுமே வீட்டுக்குப் புறப்பட்ட அவர் நேரே புருஷோத்தமனின் வீட்டுக்குச் சென்று அவரது மனைவியிடம் புத்திரனின் காலகதி பற்றிக் கூறினார்.

இங்குதான் இவ்வத்தியாயத்துக்கான விஷயம்!

செய்தி கேட்டாளோ இல்லையோ, அந்தத் தாயின் மூளை பாதிக்கப்பட்டது.

என் மகன் செத்துப் போனான் என்று எப்படிச் சொல்வாய்? என்னைத் திருப்பதிக்கு அழைத்துக்கொண்டு போக இருந்தவனல்லவா அவன்? அவன் மட்டும் அங்கே போய்விட்டான். இதோ நானும் அங்கே போய் அவனை அழைத்துக்கொண்டு வருகிறேன். அப்போது பார், ராக்ஷஸி! அவன் செத்துப் போனதாகக் கூசாமல் புளுகுகிறாயேஎன்று கமலாவை ஏகமாக ஏசித் துரத்தி விட்டாள்.

அது மட்டுமின்றி, மாலை மயங்கி வந்த அவ்வேளையில் மெய்யாலுமே தன்னந்தனியாகத் திருப்பதிக்குப் புறப்பட்டும் விட்டாள்!

இரண்டுநாள் சென்றபின், பிள்ளை நல்லடக்கம் பெற்று, பால் ஸஞ்சயனமும் ஆன பின்னரே, மாலை ஐந்து மணிக்குத் திருப்பதியிலிருந்து வீடு திரும்பினாள் தாய்.

நடு வீட்டில் தேங்காய் உடைத்துப் படம் வைத்திருப்பதைப் பார்த்தாளோ இல்லையோ கோபாவேசமாகக் கத்தோ கத்து என்று கூப்பாடு போடலானாள். “யார் இப்படி அக்கிரமம் செய்தது? மகன் திருப்பதியிலே சொஸ்தமாக இருக்கிறானே! பெருமாள், தாயார் பக்கத்திலேயே அவன் பஜனை பண்ணிக் கொண்டிருப்பதை இந்தக் கண்ணாலே பார்த்துவிட்டு வருகிறேன்; இங்கே அடாத கார்யம் செய்திருக்கிறதே!” என்றாள்!

மூளைக்கோளாற்றிலேயே இப்படி நல்ல ரகமாயிருப்பதற்குக் காரணம்பஜனைஎன்றாளே, அதில்தான் இருக்கிறது. புருஷோத்தமன் ஸத்யஸாயி பக்தர். நாஸ்திகராயிருந்து திடீர் மனமாற்றம் கண்ட பக்தர். உதயகுமாரும் அந்த பக்தியில் கவரப்பட்டு, ஸாயி பஜன்களும் பாடுவான். அதுதான் இத்தனை கொடுமையிலும் வேப்பம்பழத் தித்திப்பு காட்டியது. ஆனாலும் வினை வழி போலும், கொடுமை நடக்கவே செய்தது.

இதன்பின் தந்தை புருஷோத்தமன் அந்தத் தாயிடம் பட்டபாடு! திருப்பதியில் உள்ள மகனை அழைத்துவர அவர் எந்த ஏற்பாடும் செய்யவில்லை என்பதற்காக அவரை அவள் கண்டபடி காய்ச்சலானாள். அதிகாலையிலேயே ஆரம்பித்துவிடும்அர்ச்சனை!’ சொல் அர்ச்சனை மட்டுமல்ல; கல் அர்ச்சனையுமே! கல்லானாலும் கணவனல்ல; கணவனுக்கானாலும் கல்தான்!

1978-ல் புருஷோத்தமன் உத்தியோக ஓய்வு பெற்றபின் வீட்டிலேயே தங்கியதில் தம் ஓய்வை மனையாளிடம் அடியோடு இழந்தார்! மனையையே இரண்டுபடுத்தி விட்டாள் விசித்ர மனையாள். கணவருக்கு உணவிடப் பிடிக்காமல் இரண்டு பெண்மக்களை மட்டும் உடன் வைத்துக்கொண்டு தனிச் சமையல் தொடங்கி விட்டாள். புருஷோத்தமனும் இரு ஆண் மக்களும் ஹோட்டலில் உண்டும், தாங்களே பொங்கிப் போட்டுக் கொண்டும் எப்படியோ காலம் தள்ளலானார்கள்.

இவர் அழைத்து வராத மகனைத் தான் அழைத்து வருவதாகச் சொல்லி, மாதம் ஒருமுறை, இருமுறை அந்த அம்மாள் திருப்பதி சென்று வருவாள். அந்த நாள்களில் இவருக்குஅர்ச்சனைமிச்சமானாலும், பொருளை மிச்சப் படுத்த முடியாமல் செலவாயிற்று! ஒவ்வொரு முறையும் மகனைப் பெருமாளின் ஸந்நிதியில் கண்டதாகச் சொல்வாள். இப்படி ஒரு சில ஆண்டுகளில் 77 முறையாக்கும் திருப்பதி யாத்திரை செய்தாள்! ஏழு மலையானுக்கு ஏகாதசி விசேஷம். ஏழை ஏகாதசத்தால் பெருக்கினால் 77!

இத்தனையிலும் புருஷோத்தமன் ஸாயி பக்தியை விடவில்லை. இப்போதுதான் அப்பிடிப்பை மேலும் கெட்டியாக்கிக் கொண்டார். ஸாயி ஸாந்நித்யம் அபாரமாகப் பொலிகின்ற, பொழிகின்ற கிண்டி பாபா ஆலயத்தில் நிரம்பப் பொழுதைச் செலவிட்டார். வெளியிலே பட்ட மொத்துக்களுக்கெல்லாம் அங்கே ஆறுதல் கண்டார்.

1983 ஜனவரியில் பாபா சென்னைக்கு விஜயம் செய்தபோது கிண்டி ஆலயத்திலுள்ள ஷீர்டீச மூலவருக்கு மீண்டும் அஷ்ட பந்தனம் செய்தார். அப்போது தமது கையசைப்பில் ஸுதர்சன சக்கரம்வரவழைத்துஅம்மூர்த்தியின் அடியில் அதை ப்ரதிஷ்டை செய்தார்.

அந்த ஸுதர்சனத்தின் வழியே பாய்ந்த ஸாயியின் அருட் பிரகாசத்தை என் சொல்ல? எந்த தேவதைக்கான யந்திரமுமே சக்ராகாரமாயிருப்பதால்சக்ரம்என்று வழங்கப்பட்டாலும், ஸுதர்சனந்தான் அசலே சக்ரமாகும். திருமாலின் ஜ்யோதித் திருவாழிக்கே ஸுதர்சனம் எனப் பெயர். உட்பகை, வெளிப்பகை ஆகிய அனைத்தையும் துரத்தித் துரத்திச் சென்று அறவே அழிப்பதில் அபரிமித வல்லமை பொருந்தியது அது. ‘கால தத்வத்தின் ரூபம்; இருளையழிப்பதான ஒளிமுதல்; தீய சக்திகளை வென்று அவற்றின் குருதி தோய்ந்த திகிரி; அப்படிப்பட்ட இச்சக்ரம் நமக்கு எக்காலும் பெருநலம் பயப்பதாக!’ என்று சங்கரர் போற்றுவார் தமதுவிஷ்ணு பாதாதி கேசாந்த ஸ்தோத்ரத்திலே.

நூறெழுத்துக் கொண்ட ஸுதர்சன மஹா மந்த்ரமோ மஹாமேருவாய் சக்தி பெற்றது.

பாபா இச் சக்ர ப்ரதிஷ்டை செய்த விசேஷம் பாருங்கள்: கிண்டி கோயிலையே புகல் கொண்ட இன்னோர் அடியாரான, ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி ஆர்.என். ஐயர் பல ஆண்டுகளுக்கு முன் ஸுதர்சன மந்திர உபதேசம் பெற்றவராயினும் அதன் ஜபத்தை இதுவரை நிறுத்தியிருந்தார். ஆனால் இப்போது மந்திரம் அவரை திடுமெனப் பிடித்துக்கொண்டு ஆவேசமாகத் தனது ஜபத்தில் ஈடுபடுத்தியது. தாம் ஜபிப்பது மட்டுமின்றி ஏனைய ஸாயி பக்தர்களையும் ஸுதர்சன மஹா மந்திர ஜபத்தில் ஐயர் ஈடுபடுத்தினார். இவர்களுள் தீவிர ஈடுபாடு பெற்ற ஒருவர் நமது புருஷோத்தமன், அவ்வீடுபாடு ஸாயியின் கொடையே என அவர் உணர்ந்தார்.

தினமும் அதிகாலை ப்ராம்ம முஹூர்த்தத்தில் புருஷோத்தமன் பத்மாஸனத்தில் அமர்ந்து ஸத்ய ஸாயியின் அருள் ஜோதி வட்டமாகவே ஸுதர்சன சக்ரத்தை பாவித்து மந்திர ஜபம் புரியலானார்.

அதிலிருந்து மெல்ல மெல்ல மனைவியின் மன நோய் தெளியலாயிற்று; கணவர் மேல் அவளுக்கிருந்த த்வேஷப் பேய் நலியலாயிற்று. அதோடு, தனது எழுபத்தேழாவது யாத்திரையோடு, திருமலைப் பயணத்தைமலையேற்றிவிட்டாள்! ஏன்? “இதோ பெருமாள் வந்து சக்கரம் சுழற்றுகிறாரே!” என்று அடிக்கடி அவள் கூவும் படியாக வீட்டிலேயே அவள் கண்ணுக்கு மெய்யாய் ஸுதர்சனத்தின் தர்சனம் பெற்றதுதான் காரணம்! ஒரு முறை புருஷோத்தமனே அவள் திருப்பதி போகப் பணம் கொடுத்தனுப்பியும், சுமார் நூறு கெஜம் சென்றவள், “நாராயணன்அங்கே வராதேஎன்கிறார்!” என்று கூறித் தொகையைக் கணவரிடமே வீசிவிட்டாளென்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இது ஸத்ய நாராயண ஸாயியின் அருள் விளையாட்டே எனக் காண்கிறார் அக்கணவர்.

முன்பு, “மகனைத் திருப்பதியிலிருந்து அழைத்து வருகிறாயா, இல்லையா?” என்று கணவரை மிரட்டி உருட்டி வந்தவள் அதையே கெஞ்சுதலாக வருத்தத்தோடு கேட்கத் தொடங்கினாள். பின்னர் மெல்ல மெல்ல அந்த வேண்டுதலும் குறைந்தது! இந்த ஆகஸ்ட் முடிவிலே புருஷோத்தமனிடமிருந்து நான் பெற்ற தகவலின்படி பிள்ளையின் நினைவு அவளுக்கு மறக்கவில்லையாயினும் அதிலே உபாதையம்சம் இல்லை. மற்றபடி அவள் முற்றிலும் குணமாகிவிட்டாள். இரட்டைச் சமையல் மீண்டும் ஒற்றையாயிற்று. முதலில் ஜாடைமாடையாகப் புருஷனுக்குச் சிற்றுண்டி மட்டும் வைத்துப் போனாள். காலக்கிரமத்தில் அல்லது காலச் சக்ரத்தின் சுற்றலில், அதாவது பெருமாள் சுழற்றும் ஸுதர்சனத்தின் சுற்றலில் இவளது மூளைச் சுற்றல் திருந்தித் திருந்தி, பிறகு கணவருக்கு ஒவ்வொரு வேளையும் தானே உணவு பரிமாறலானாள். அவர் எங்காவது சென்று இரவு பத்து, பத்தரை மணிக்குத் திரும்பினால்கூட முணமுணக்காமல் கவனித்துப் பரிமாறலானாள்.

தம் வீட்டைக் கவ்வியிருந்த இருளை ஸுதர்சன ஜோதி காட்டி ஸாயிநாதனே விலக்கி ஒளி வளம் காட்டுவதாக உருகி உணர்ந்து கூறுகிறார் நல்லன்பர் புருஷோத்தமன்.

கொன்றுயி ருண்ணும் வியாதி பகை பசி தீயன வெல்லாம்
நின்றிவ் வுலகில் கடிவான் நேமிப்பிரான்!

நம்மாழ்வார்

11. மலர் மருத்துவம்

கிண்டி ஆலயப் பணிக்கே தம்மை ஆன்ம அர்ப்பணம் செய்து கொண்டுள்ள ஸஹோதரி லீலா பி.எஸ்ஸி படித்துக் கொண்டிருந்த காலம். ஸத்ய ஸாயி அஸ்திவாரமிட்ட கிண்டி கோயிலை லீலாவின் தந்தை லோகநாத முதலியார் பக்தி ச்ரத்தையோடு நிர்மாணித்து வந்த சமயம். திருத்தமாகச் சொன்னால், 1948-ம் ஆண்டு ஆரம்பம்.

காந்தி மஹாத்மா அந்த ஜனவரி 30 மதவெறிக்குப் பலியானதற்காக வருந்தி லீலா அழுதாளோ அழுதாள், அப்படியோர் அழுகை அழுதாள். அப்போது வடியத் தொடங்கிய கண்ணீர், அவளது துயரம் வடிந்த பின்னும் நிற்கும் வழியாயில்லை. கண்ணில் ஏதோ கோளாறாகி, குத்தல் வலிகண்டு, ஓயாமாரியாகக் கொட்டலாயிற்று. அது ஸெப்டிக் ஆகி, உடம்பே நீலம் பறித்தது. டாக்டர் ஜான், ‘ப்ளட் பாய்ஸன்என்றார். பெனிஸிலின் ஊசி போடப் பட்டது. ஆனால் அது லீலாவுக்கு ஒத்துக்கொள்ளவில்லை. பார்வை நலிந்து கொண்டே வந்தது.

இளம் பாபாவிடமிருந்து லீலாவின் தந்தைக்குக் கடிதம் வந்தது. “உங்கள் குமாரத்திக்கு உடம்பு சரியாயிருக்காது. நான் குப்பத்தில் ஒரு கல்யாணத்துக்கு வருகிறேன். அங்கே அழைத்து வரவும்என்று அக்கறையோடு எழுதியிருந்தார் அமுதர்.

அப்படியே போனார்கள்.

யௌவனப் பருவமாயினும் பாலர் போல இளசாயிருந்த ஸாயியின் திருவடிகளில் லீலா வணங்கினாள். அப்போது அவளது கண்ணீர் நேரே பாத கமலத்தில் சித்தி முத்தாய் உருண்டது. ஸ்வாமியின் அருளிதயமும் அப்போது கண்ணீர் உகுத்திருக்க வேண்டும்.

அடியாளின் கண் துளி அடிமலர்த் தூளியில் கலந்த அந்த நொடியே குத்தல் வலி சடக்கென நின்றது!

வலி நின்றாலும் நோய் மூலம் தீர்க்கப்படவில்லை. கர்மாவை ஒரேயடியாய் தீர்ப்பாரா என்ன?

மறுதினம் கட்டியாக விபூதி ஸ்ருஷ்டித்துத் தந்தார், கட்டிக் கரும்பர். “கண் மேலே வெச்சுத் தேச்சுக்கோஎன்றார். அயோடின் நெடி வீசிய அக்கட்டியை அவ்விதமே லீலா கண்ணில் தேய்த்துக் கொண்டாள்.

நெடிக்கு ஈடாக நறுமண மருத்துவம் செய்ய பாபா எண்ணினார் போலும்! கர மலரசைப்பில் மல்லிகை மலர்களை வருவித்தார்! காம்புகளைக் களைந்தார். இதழ்ப் பகுதி மட்டும் கொண்ட சிறு குவியலை லீலாவின் கையில் போட்டார். “கண்களில் வைத்து டவலால் கட்டிக்கொள். கட்டைப் பிரிக்காமல் ஊருக்குப் போ. ஸென்ட்ரல் ஸ்டேஷனுக்குப் போனவுடன் அவிழ். நேரே பரீக்ஷை எழுதப்போ!” என்றார்.

கண்மலர் சார்த்துவதுவிந்தையுருக் கொண்டது!

விநோதமான மல்லிகை பான்டேஜுடன் லீலா ரயில் பயணம் செய்து, ஸென்ட்ரல் அடைந்ததும் கட்டை அவிழ்த்தாள். நோய்க் கட்டும் அவிழ்ந்தே போயிருந்தது! மல்லிகை நகை மல்லிகார்ஜுன ஸாயியின் கருணை கட்டிக் காத்ததில் லீலாவின் கண்கள் புதுமலராய் புத்தொளி பெற்றிருந்தன! நேரே பரீக்ஷை கொடுக்கப் போனாள்.

ஸ்வாமியின் அற்புத வைத்தியத்தில் மேலும் சில இனி பார்ப்போம்.

12. சுவர் வழி புகுந்த அருட்சூறாவளி!

ஹாங்காக்கில் ஓர் வர்த்தகச் செல்வந்தர் பகவான் தாஸ் தாஸ்வானி. ஸிந்தியர். பாபாவிடம் பிடிமானமில்லா விடினும் மாமியாரை அழைத்துச் செல்ல வேண்டியிருந்ததால் 1975 குரு பூர்ணிமையின் போது புட்டபர்த்தி வந்தார். ஸத்குரு தேவனின் கரம் வழங்கிய லட்டு ப்ரஸாதம் பெற்றார். அச்சமயம் ஸ்வாமி அவரை கவனிக்கவில்லைஅல்லது அப்படிக் காட்டிக் கொள்ளவில்லை.

மறு வருஷம், ஒய்ட்ஃபீல்ட் ஸாயிக் கல்லூரியில் படிக்கும் தமது இரண்டாவது பிள்ளையைப் பார்ப்பதற்காக பிருந்தாவனம் வந்தார். அந்தப் பிள்ளை யாரெனில்அன்பு அறுபதில் 26-வது, 35-வது அத்தியாயங்களில் சந்துருவாகவும், ஸாயி சந்திரசேகர் தாஸ்வானியாகவும் நாம் கண்டுள்ள இளைஞர்தான்.

ப்ருந்தாவனத்தில் தரிசனம் தர பகவான் வெளி வந்தார். பகவான்தாஸ் ஒரு மரத்தடியே நின்றுகொண்டிருந்தார். ஸ்வாமி அவரிடம் சென்றார். அடடா, பகவான்தாஸின் பாக்யத்தை என்ன சொல்ல? அவரை அன்போடு அணைத்துக்கொண்டார் அன்னையனையர். “ஹவ் ஆர் யூ ஹாங்காங் ஃபாதர்?” என்றார். (சந்துருவை ஸ்வாமிஹாங்காங்என்றே அழைப்பார்!)

கேட்டாரேயன்றி, இவருடையஹவ்முழுதும் இவர் சொல்லாமலே தமக்குத் தெரியும் என்பதையும் வெளிப்படுத்தினார்! இவரைப் பற்றிய விவரமெல்லாம் அவரே சொல்லி, “ஸ்வாமி ஹரிதாஸ் உன் குரு. அவரும் என் பக்தர்தான். இப்போது மேல் லோகத்திலிருக்கிறார்என்றார்.

அந்த க்ஷணமே பகவான்தாஸ் தாஸ்வானி நமது ஸாயி பகவானின் தாஸாநுதாஸரானார். இனி தாஸருக்கு வைத்யநாதனாக ஸ்வாமி ஆன கதை:

1977 மே பத்தாம் தேதி ஹாங்காங்கில் பகவான் தாஸுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. ராணி மேரி மருத்துவமனையில் சேர்த்தார்கள்.

பதினொன்றாம் தேதி அதிகாலையில் இங்கே சந்துருவிடம் ஸ்வாமி விளையாட்டாக நிறையப் பேசினார். விபூதி ப்ரஸாதம் கொடுத்தார். “ஹாங்காங்குக்குப் போய் வா. ஒன்றுமில்லை. அப்பாவுக்குக் கொஞ்சம் ஹார்ட் ட்ரபிள்என்று லேசாகச் சொல்லி, ஆனாலும் தீர்மானமாக அவனை அனுப்பி வைத்தார்.

விமானபுக்கிங்கிடைத்து அவன் விரைவே ஹாங்காங் சேர்ந்ததும் ஒரு ஸாயியற்புதம்தான்!

சந்துரு ஹாங்காங் ஆஸ்பத்திரி சேர்ந்தபோது பகவான்தாஸ் மரித்து இரு நிமிஷங்களாகி விட்டன! வைத்தியர்களின் மாஸ்ஸேஜுடன் வைத்தியநாதனின் திருநீறும் சேர்ந்து, மாண்டவரை மீண்டுவரச் செய்தது! ஆம் குப்பம் ராதாகிருஷ்ணா, வால்டர் கவன் ஆகியோரைப்போல, இறந்தவரைப் பிழைப்பிக்கும் ஸாயியற்புதமே பகவான்தாஸ் குறித்தும் நடந்ததாகக் கருதப்படுகிறது.

புத்துயிர் பெற்றுச் சில தினங்களான பின், கவனைப் பலவே தாஸ்வானியின் உடல் நிலையும் மறுபடி மிகவும் சீர்கேடுற்றது. மீண்டும் கவனுக்குக் கவசமாக ஸ்வாமி நின்றது போலவே இப்போதும் துணைக்கு வந்தார் அதனினும் விநோதமிக்க முறையில்!

ரத்தக் குழாய்கள் உடைந்து ஏகமாகக் குருதியிழந்து குற்றுயிராகக் கிடந்த பகவான்தாஸ், மே 25, காலை மணி 4-10-க்கு அதிசயக் காட்சி ஒன்று கண்டார். அறைச் சுவரின் வழியாக ஸ்வாமி உள்ளே வந்தார்! அவர் கையிலிருந்து வெள்ளமாக வந்த வெண்ணீறை பகவான் தாஸின் உடல் பூராவும் வீசினார். குற்றுயிராகக் கிடந்தவர் விபூதியபிஷேகம் பெற்றதும் புத்துயிர்ப்புப் பெற்றார்.

ஆயினும் நடப்பதனைத்தும் நனவுதானா என அவருக்கு நம்பிக்கைப்படவில்லை. “பாபா, நீங்கள் நிஜமாகவே இங்கே இருக்கிறீர்களா? அல்லது நான் கனாக் காண்கிறேனா?” என்று கேட்டார்.

நிஜமாகத்தான் இங்கே இருக்கிறேன்என்றார் பாபா. ஆனால் தாம் இப்படிச் சொல்வதும் ஸ்வப்னத்தில்தானென்று நோயாளி எண்ணிவிடக் கூடுமல்லவா? எனவே தமது நனவான வருகைக்குச் சான்று காட்டுமாறு தாம் ஏதேனும் செய்ய வேண்டுமா என்று வினவினார். என்ன பரிவு, ஈடுபாடு, தாக்ஷிண்யம் அப்பனுக்கு?

அப்படியானால், என்னை இந்தப் படுக்கையிலிருந்து அதோ அந்தப் படுக்கைக்கு மாற்றிப் போடுங்களேன்!” என்றார் பகவான்தாஸ்.

அவ்வளவுதான்! இதய நோயில் இளைத்த பின்னும் 173 பவுண்ட் (79 கிலோ) எடையிருந்த அந்தகனவானைகுறளுருவ ஸ்வாமி அலாக்காகத் தூக்கி இன்னொரு படுக்கையில் கிடத்தினார்அவர்மீது சொருகியிருந்த ட்யூப்கள் எதுவும் இடம் பெயராதபடி அத்தனை நாசூக்காக!

சுவர் வழியாகவே பிறகு மறைந்தார், “கன்னம் வைத்து நம்தன் கருத்தில் புகுபவர்”.

பகவான்தாஸ்காலிங் பெல்லை அழுத்தினார். நர்ஸ் படை வாரிப் புடைத்துக்கொண்டு ஓடி வந்தது. கை காலை அசைக்கவும் சக்தியற்றுக் கிடந்த நோயாளி கட்டில் மாறி உத்ஸாஹமாகப் படுத்திருப்பதை விழி பிதுங்கப் பார்த்த நர்ஸ்கள், “எப்படி இடம் பெயர்ந்தீர்கள்? இதென்ன எங்கே பார்த்தாலும் வெள்ளைத் தூசி?” என்று வியந்து கேட்டனர். ‘இன்டென்ஸிவ் கேர் யூனிட்டில் தூசு தும்பு இருக்கவேகூடாதே!

ஸ்வாமி மஹிமையைப் புரிந்துகொள்ள இயலாதவரென பகவான்தாஸ் கருதும் எவரிடமும் அவர் ஸ்வாமி பற்றி வாய் திறக்கவே மாட்டார். எனவே அப்போதும் நர்ஸ்களுக்குத் தெளிவாக விடை சொல்லாமல் மழுப்பிவிட்டு, “ஏன் என்ன என்றெல்லாம் கேட்காமல் இந்த வெள்ளைத் தூசியைத் திரட்டி எனக்குக் கொடுங்களேன்என்றார்.

அப்படியே அவர்களும் திரட்ட ஒன்றரை கிலோ விபூதியாக்கும் பகவான்தாஸ் கைக்கு வந்தது!

அவர் இடம் மாறிய அற்புதம், அதன்பின் அன்றிலிருந்து அதிவிரைவில் அவர் குணமாகி நாலு நாள்களில் தாமாக அடுத்த வார்டுக்கு நடந்து சென்ற அற்புதம் ஆகியன பற்றி டாக்டர்கள் அவரைக் குடை குடை என்று குடைந்து விசாரித்தனர். பிற்பாடு ஆஸ்பத்திரியின் சான்று தேவைப்பட்டாலும் அதற்கு உதவியாயிருக்கட்டுமென்பதால் இந்தியரான ஒரு டாக்டரிடம் மட்டும் பகவான்தாஸ் நடந்ததைக் கூறினார்.