பாபாவின் அத்யந்த பக்தர்களில் ஸ்ரீ காசிநாத் கோவிந்த உபாசனி சாஸ்திரி என்பவரும் ஒருவர். அவர் மஹாராஷ்டிரத்தைச் சேர்ந்த ஒரு வைதிக குடும்பத்தில் பிறந்தவர். பரம்பரை பரம்பரையாக வந்த சமயப் பற்றும், கடவுள் பக்தியும் அவரிடமும் குடி கொண்டிருந்தன. ஆனால், அவருக்கு பள்ளிப் படிப்பு ஏறவில்லை. இள வயதிலேயே திருமணமாகி, மனைவியை பறி கொடுத்தார். மறுமணமும் செய்து கொண்டார்.
பிழைக்கத் தெரியாத சாஸ்திரி, வீட்டை விட்டு வெளியேறி, ஊர் ஊராக சுற்றித் திரிந்தார். அவருக்கு உத்தியோகம் கிடைக்கவில்லை. உள்ளத்தில் அமையுமில்லை. பசியும், பட்டினியும் அவரை வாட்டின. வேறு வழியின்ரி வீட்டுக்கு திரும்பி விடுவது என்று முடிவு செய்தவரை, விதி வேறொரு பக்கமாக அழைத்துச் சென்றது.
அடர்ந்த காடு, அதன் நடுவே மலைகள், மலையுச்சியில் ஒரு குகை, அதற்குள் சென்று அமர்ந்த காசிநாத் பட்டினி கிடந்து உயிரை விடுவது என்று முடிவு செய்தார். உண்ண உணவு இல்லை. அருந்த நீரில்லை. உறக்கமுமில்லை. இரண்டு நாட்கள் கழிந்தன. அவர் எதிர்பார்த்த மரணம் கிட்டவில்லை. நேரத்தை வீணாக்க மனமின்றி உள்ளத் தூய்மையுடன் ஆண்டவனின் திருநாமத்தை உச்சரிக்கத் தொடங்கினார்.
சிந்தையைக் கட்டுப்படுத்தினார். சுற்றுப்புறத்தை மறந்தார். சமாதியில் ஆழ்ந்து விட்டார்.
மாதங்கள் கழிந்தன. சமாதி கலைந்து, கண் விழித்துப் பார்த்தார். உடல் மெலிந்து, தோல் சுருங்கி, அங்கங்களெல்லாம் மரத்துப் போயிருந்தன. தாகத்தால் தொண்டை வறண்டிருந்தது. தண்ணீருக்கு எங்கே போவது? கிடைத்தாலும் அதை எப்படி அருந்துவது?
கடவுளின் கருணையால் திடீரென்று வானில் கருமேகங்கள் சூழ்ந்தன, முழங்கின. மழையைப் பொழிந்தன. மழை நீர் குகை வாயிலில் குளமாகத் தேங்கி நின்றது. சிரமப்பட்டு வலது கையை நீட்டி, மட்ககி, நீரை எடுத்து மூன்று நாட்களைக் கடத்தினார் காசிநாத்.
சட்டென்று ஒரு பயங்கரக் காட்சி தோன்றியது. ஒரு இந்துவும், முகம்மதியரும் அவருடைய தோலை உரித்தனர். தெய்வீக ஒளி வீசிய உள் தேகத்தை அவருக்குக் காட்டினர். “இதோ பார் உன் உடலை. நீ சாக வேண்டும் என்றா நினைக்கிறாய்? உன்னை நாங்கள் சாக விட மாட்டோம். நாங்கள் உன்னைக் காப்பாற்றியே தீருவோம், என்று கூறி விட்டு அவர்களிருவரும் மறைந்து விட்டனர்.
வாழ்ந்துதான் ஆகவேண்டும் என்று முடிவான பிறகு குகையிலிருந்து வெளியே வரும் வழியைத் தேடினார் காசிநாத். ஒரு மரக்கிளையைப் பற்றிக் கீழே குதித்து, மலைச்சரிவில் உருண்டு, காடுகளில் புரண்டு, தட்டுத் தடுமாறி, திண்டாடி, தவித்து, பிச்சையெடுத்து, பேயாக அலைந்து, உடல் நலம் குறி, சடானாவில் இருந்த தன் இல்லத்திர்கு வந்து சேர்ந்தார். அப்போது அவருக்கு இருபது வயதே ஆகியிருந்தது.
புது அனுபவங்கள் அவருக்குப் புத்துணர்ச்சி அளித்திருந்தன. கடும் தவம் புரிந்து திரும்பியவர், இல்லறத்தின் கடமைகளை நிறைவேற்றுவதில் முனைந்தார். ஆனால், சோதனைகள் குறிக்கிட்டன. தந்தையை இழந்தார். பாட்டனாரைப் பறி கொடுத்தார். இரண்டாவது மனைவியும் சுமங்கலியாகவே போய்ச் சேர்ந்தாள். வீட்டில் வறுமை சூழ்ந்தது. ஓர் ஆண்டு பாலகங்காதர திலகர் காசிநாத் குடும்பத்திற்கு பொருளுதவி செய்து பெரும் ஆதரவாக இருந்தார்.
காசிநாத்தின் வாழ்க்கையில் மற்றொரு திருப்பம் ஏற்பட்டது. ஆயுர்வேத மருத்துவ முறையையும், வடமொழி இலக்கணத்தையும் அவர் பயில ஆரம்பித்தார் காசிநாத். பண்டிதர் காசிநாத் ஆனார். அமராவதியிலும், நாகபுரியிலும் தம் வைத்தியத் தொழிலை திறம்பட நடத்தினார். நம்பிக்கையுடன் அவரை நாடி வந்த நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. செல்வம் குவிந்தது. அப்போது அவர் மூன்றாம் முறையாக திருமணம் செய்து கொண்டார்.
பத்து ஆண்டுகள் ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்தார் டாக்டர் காசிநாத். ஆனால், ஆன்மீக வாழ்க்கையில் அவர் மறக்கவில்லை. பூஜை, ஜபம், பாராயணம் எதையுமே விடவில்லை. புராணங்களையும், சாத்திர நூல்களையும் படித்துப் பயனடைந்தார். மத சம்பந்தமான உபந்நியாசங்களும் செய்து வந்தார். மூன்றாவது மனைவிக்கு ஒரு குழந்தை பிறந்து, ஒரு மாதத்திற்குள் அது இறந்தும் விட்டது.
பிற்காலத்தில் துறவு மேற்கொள்ளத் தூண்டுவதற்காக துன்பம் அவரை விடாமல் துரத்தியது போலும்.
மருத்துவத் தொழிலில் ஈட்டிய செல்வத்தை மேலும் பெருக்க நினைத்து தம் தொழிலை விட்டு விட்டு, ஈராயிரம் ஏக்கர் நிலத்தை வாங்கி, பண்ணை நடத்தி, பணத்தைப் பாழாக்கினார். மீண்டும் மருத்துவத் தொழிலுக்கு திரும்பியவருக்கு, பெரும் ஏமாற்றமெ காத்திருந்தது. அவரிடம் மருந்து கேட்டு வருவோரும் இல்லை. சுற்றித் திரிந்தும் அவரது மருந்து விற்பனையாகவில்லை. வருமானம் குன்றியதுடன் உடல் நலமும் குன்றியது. மீண்டும் இல்வாழ்க்கை கசந்தது அவருக்கு. 1910-ம் ஆண்டு, தமது நாற்பதாவது வயதில், மனைவியுடன் புனித யாத்திரை கிளம்பிவிட்டார்.
நர்மதைக் கரையிலிருக்கும் பெரிய ஓம்கார லிங்கத்தைத் தரிசிக்கச் சென்ற தம்பதி, அதனடியிலேயே அமர்ந்து விட்ட்னர். மனைவி தியானத்தில் ஆழ்ந்திருந்த போது, காசிநாத் பிராணாயாமத்தில் ஈடுபட்டார். சற்றைக்கெல்லாம், மூர்ச்சையாகி கீழே சாய்ந்து விட்டார். நடுநடுங்கிப் போன மனைவி கணவன் முகத்தில் நீரை எடுத்துத் தெளித்தார். சுய நினைவு திரும்பியது. கண்களைத் திறந்தார். ஆனால், சுவாசம் வரவில்லை. இதையறிந்த காசிநாத், கைகால்களை உதைத்துக் கொண்டார். அவரால் மெள்ள மெள்ள மூச்சு விட முடிந்தது. ஆனால் அது ஒழுங்காக இல்லை. முனகல் ஒலியுடன் மிக சிரமத்துடனேயே அவரால் சுவாசிக்க முடிந்தது.
நாக்பூருக்கு திரும்பினார். எல்லா வைத்தியங்களும் செய்து பார்த்தார். பயனில்லை. தாயும், மூத்த சகோதரரும், வசித்து வந்த ஊருக்குச் சென்றார்கள். சமய சடங்குகளும், விரதங்களும் ஏராளமாக நடைபெற்றன. இந்தச் சுவாச உபத்திரவம் விடுவதாக இல்லை. எந்தக் கணமும் தனக்கு மரணம் ஏற்படலாம் என்ற பயத்திலேயே வாழ்ந்தார். இல்லறத்தையே வெறுத்தார். உறவினருக்கு இனியும் ஒரு தொல்லையாக இருக்க விரும்பவில்லை. யோகிகளைச் சந்தித்து நலம் பெறலாம் என்ற நம்பிக்கையில் தன்னந்தனியாக வீட்டை விட்டுக் கிளம்பி விட்டார்.
அகமத்நகர் அருகில் யோகி குல்கர்னி என்ற மகானைச் சந்தித்தார். காசிநாத்திற்கு எவ்வித நோயும் இல்லை என்றும், தம்மையுமறியாமல் ஹடயோகத்தின் இறுதி நிலையை அவர் அடைந்திருக்கிறார் என்றும் கூறிய அந்த மகான், ஷீர்டிக்குச் சென்று சாயி பாபாவை தரிசிக்கும்படி அவரை வற்புறுத்தினார். முஸ்லீம் பக்கிரியின் காலில் விழமறுத்து விட்டார் அந்தணரான காசிநாத். பின்னர், வயதான ஒருவர் காசிநாத்திடம் வந்து, அவரை வாட்டுவது ஒருவிதமான வாதநோய் என்றும், தாகம் எடுக்கும் போதெல்லாம் சுடுநீர் அருந்தினால் குணமாகிவிடும் என்றும் கூறினார். முதலில் அந்த யோசனையை அலட்சியப்படுத்தியவர், பின்னர் வெந்நீர் அருந்தியதால் நோய் தீர்ந்து சாதரணமாக மூச்சு விட ஆரம்பித்தார். மகிழ்ச்சியுடன் ஊருக்குத் திரும்பும் வழியில் யோகி குல்கர்னியைச் சந்தித்தார். சாயி பாபாவை தரிசித்து விட்டுப் போகும்படி அந்த மகான் அவரை மீண்டும் வற்புறுத்தினார். இல்லை, விதி அவரை விரட்டியது.
பண்டிட் காசிநாத் உபாசனி, 1911-ம் ஆண்டு ஷீர்டிக்கு வந்து பாபாவைத் தரிசித்தார். இரண்டு நாட்கள் கழித்து ஊருக்குத் திரும்ப வேண்டும் என்று உத்தரவு கேட்ட போது பாபா மறுத்து விட்டார்.
நீ இங்கேயே தங்கி விடு. நான் உன்னை கவனித்துக் கொள்கிறேன்.
“முடியாது, நான் இல்லற வாழ்க்கை நடத்த விரும்புகிறேன். நான் ஊருக்குச் போய்த்தான் ஆகவேண்டும்.”
அப்படியானால் ஒன்று செய். நீ போய் விட்டு தாயையும், மனைவியையும் பார்த்து விட்டு, எட்டு நாட்களில் ஷீர்டிக்குத் திரும்பி விடு.
“அதெல்லாம் முடியாது. நான் போனால் திரும்பி வரவே மாட்டேன்.”
“சரி, அப்படியானால், உன் இஷ்டப்படி செய்.”
காசிநாத் ஷீர்டியை விட்டுக் கிளம்பினார். நேரே ஊருக்குப் போகாமல் பதினான்கு மைல்களுக்குள்ளேயே சுற்றிக் கொண்டிருந்து விட்டு, ஏதோ சக்தியால் மீண்டும் ஷீர்டிக்கே அழைத்து வரப்பட்டார். மசூதிக்குள் நுழைந்ததும், அவர் பாபாவின் கால்களில் விழுந்து கும்பிட்டார்.
“அடேடே! நீ வந்து விட்டாயா? நீ எந்த கிழமை ஷிர்டியை விட்டுக் கிளம்பினாய்?”
வியாழக்கிழமை.
எத்தனை மணிக்கு?
மூன்று மணிக்கு.
இன்று என்ன கிழமை?
வியாழன்.
இப்போது மணி என்ன ஆகிறது?
மூன்று மணி.
நீ இங்கிருந்து போய் எத்தனை நாட்கள் ஆகின்றன?
இன்றோடு எட்டு நாட்கள்.
அப்படியா? நீ போகும் போது எட்டு நாட்களில் திரும்பி வர முடியாது என்று சொல்லி விட்டுப் போனாயே!
நான் எப்படித் திரும்பி வந்தேன் என்று எனக்கே தெரியவில்லை. இவையெல்லாம் நிச்சயமாக உங்களுடைய லீலையாகத்தான் இருக்க வேண்டும்.
அப்பனே, கடந்த எட்டு நாட்களும், நான் உன்னுடனேயேதான் இருந்தேன். போ, போய் தீட்சித் வாடாவில் தங்கு. உன்னை நான் கவனித்துக் கொள்கிறேன். உன் ஆன்மீக வாழ்க்கையை சீராக அமைக்கும் பொறுப்பை நான் ஏற்றுக் கொள்கிறேன். நீ கவலைப்படாதே.
பாபாவின் அன்பு வலையில் காசிநாத் சிக்கிக் கொண்டு விட்டார்.
மற்றொரு நாள், வாதநோய் தீர்வதற்காக சுடுநீர் அருந்தும்படி முன்பு வயோதிகர் உருவில் தாமே வந்து அவருக்கு ஆலோசனை கூறிய விவரத்தையும் பாபா காசிநாத்திடம் கூறினார். பாபா ஒரு சித்த புருஷர் என்பது அவருக்குத் தெளிவாகி விட்டது.
நான் இருக்கப் பயமேன் என்று சாயிபாபா அபயம் அளித்து விட்டார். காசிநாத் உபாசனி மகராஜை, தமது சீடனாக ஏற்றுக் கொண்டார். கந்தோபா கோயிலில் தங்கியிருக்கும்படி அவரியப் பணித்தார். நீ ஒன்றுமே செய்ய வேண்டாம். பேசாமல் இரு. உனக்கு எது நல்லது என்பது எனக்குத் தெரியும். உன் தேவையறிந்து, நான் உனக்கு உதவி செய்கிறேன் என்று சமர்த்த சத்குரு சாயிநாதன் சீடருக்கு அருளுபதேசம் செய்தார்.
சோதனைகள் தொடர்ந்தன. உலகப் பந்தங்களிலிருந்தும், குடும்பப் பற்றிலிருந்தும் உபாசனி மகராஜின் மனத்தைத் திருப்பினார் பாபா. குருவையே முழுமையாக சரணாகதியடையவும், அகம்பாவம் அகலவும் அவரைப் பட்டினி போட்டார். செலவுக்குக் கூடப் பணமின்றி திண்டாட வைத்தார். உயர் வாழ்க்கைக்கும் இல்லற இன்பத்திற்கும் ஏங்கிய உபாசனி மகராஜுக்கு, துன்ப வாழ்வைத் தாங்கும் மனோதிடம் இல்லை. இன்னும் வைராக்கியம் பிறக்கவில்லை. எதிரில் வந்தவர்களையெல்லாம் ஏசினார். கையில் கிடைத்ததையெல்லாம் தூக்கியெறிந்தார். உயிர் போனாலும் உணவை உட்கொள்ளுவதில்லை என்று பிடிவாதமாக உபவாசம் இருந்தார். சிறுவர்கள் நையாண்டி செய்தார்கள். பைத்தியம் என்று கருதி கற்களால் அடித்துத் துன்புறுத்தினார்கள். பாவம் நரக வேதனைதான்.
புறவாழ்வில் காசிநாத் அவதியுற்றதாகப் பிறருக்குத் தோன்றினாலும், பாபாவின் கருணையினால் அவர் ஆன்மீகப் பாதையில் முன்னேறிக் கொண்டிருந்தார்.
உபாசனி மகராஜுக்கு பாபாவின் அருள் பரிபூரணமாக இருக்கும். இல்லற வாழ்க்கைக்காக அவரது இதயம் ஏங்கிற்று. ஊருக்குத் திரும்ப வேண்டும் என்று மீண்டும் மீண்டும் பாபாவிடம் கேட்டுப் பார்த்தார். அவரது வேண்டுகோளை பாபா நிராகரித்து விட்டார். தம் மனைவிக்கு உடல் நிலை மோசமாக இருக்கிறது என்று கடிதம் வந்த போது அவர் பாபாவிட்ம கெஞ்சிப் பார்த்தார். ஒரு வாரம் கழித்து அவள் இறந்து விட்டாள் என்ற செய்தி வந்த போதும் பாபாவிட்ம மன்றாடினார். அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை. பாபாவின் எண்ணத்தை யாரால் அறியமுடியும்?
உபாசனி மகராஜ் விரக்தியடைந்தார். அவருக்கு வைராக்கியமும் பிறந்தது. சாயிபாபாவைத் தவிர தமக்கு வேறு கதியில்லை என்பதை உணர்ந்தார். அவர் மீது ஆரத்திப் பாட்டுக்கள் எழுதினார். தொழுதார். தம் கையால் சமைத்து அவருக்கு நைவேத்தியம் எடுத்துச் செல்வதேன்று முடிவும் செய்தார்.
ஒரு நாள் நைவேத்தியத்தை எடுத்துக் கொண்டு, அவர் கோயிலை விட்டுக் கிளம்பிய போது பின்னாலேயே கருநீர நாய் ஒன்று அவரைத் தொடர்ந்து வந்தது. அதை அடித்துத் துரத்தி விட்டு பாபாவிட்ம சென்றார்.
பாபா கேட்டார். இந்த வெய்யிலில் ஏன் உணவை எடுத்துக் கொண்டு வந்தாய்? நான் கோயில் அருகிலெயே காத்துக் கொண்டிருந்தேனே!
மகராஜுக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. உண்மையாகவா? நீங்கள் எங்கேயிருந்தீர்கள்? நீ சமைத்துக் கொண்டிருக்கும் போது, நான் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்தேன்.
ஒரு கறுப்பு நாயைத் தவிர அங்கே வேறே யாருமில்லையே பாபா.
ஆமாம்! அந்தக் கறுப்பு நாய் நானேதான் என்று புன்முறுவலுடன் மொழிந்தார் பாபா.
உபாசனி மகராஜ் தம் தவற்றை உணர்ந்து கண்கலங்கி நின்றார்.
மறுநாள், கோயிலில் சமைத்துக் கொண்டிருந்த போது உபாசனி மகராஜ் அங்கு கீழ் சாதியைச் சேர்ந்த ஒருவர் நின்று கொண்டிருப்பதைக் கண்டு அவனை விரட்டினார்.
மசூதியில் பாபாவிடம் நைவேத்தியத்தை வைத்த போது பாபா கூறினார்.
காசிநாத், உணவை இங்கு ஏன் எடுத்து வந்தாய்? நேற்று எனக்கு உணவு அளிக்க மறுத்து விட்டாய். இன்றொ அங்கு பசியுடன் நின்றிருந்தவனை விரட்டி விட்டாய். இனிமேல் உன் உணவு எனக்குத் தேவையில்லை.
என்ன….அங்கே நின்று கொண்டிருந்தது….?!
ஆமாம், அந்தக் கீழ்சாதிக்காரன் நானேதான். நான் எல்லோருக்குள்ளும் – எல்லாவற்றிலும், அவற்றுக்கு வெளியிலும் இருக்கிறேன். இதை நினைவில் வைத்துக் கொள் – என்று பாபா “ஆகம்பிரும்மாஸ்மி” என்ற தத்துவத்தை விளக்கினார்.
காசிநாத் மகராஜுக்கு ஞானம் பிறந்தது. யோகத்தில் சிறந்திருந்தவர் தற்போது பூஜைக்குரியவராகி விட்டார். எனவே, அவருக்கும் நித்திய பூஜைகள் செய்யும்படி பாபா சில பக்தர்களை அவர் தங்கியிருந்த கந்தோபா கோயிலுக்கு அனுப்பி வைத்தார்.
ஒரு சாதாரண ஆயுர்வேத வைத்தியரை ஆன்மீக ஞானவள்ளலாக்கிக் கொண்டிருந்தார் சாயிபாபா. நான்கு ஆண்டுகள் ஷீர்டியில் தங்கியிரு. பிறகு இந்த உலக்ம உன்னை கடவுளாக மதித்து வணங்கும்படி செய்கிறேன் – என்று வாக்களித்திருந்தார் அந்த சத்குரு. ஆனால், என்ன காரணத்தாலேயோ, மூன்று ஆண்டுகள் கழிந்ததுமெ, 1914-ம் வருடம் உபாசனி மகராஜ் ஷீர்டியை விட்டுப் புறபட்டு விட்டார்.
இரண்டு மூன்று ஆண்டுகள் ஷிண்டி, கரக்பூர், பூனா என்று யாத்திரை சென்று விட்டு, 1917-ம் ஆண்டு இறுதியில் உபாசனி மகராஜ் ஷீர்டிக்கு மூன்று மைல் தொலைவிலுள்ள சகுரி என்ற கிராமத்தில் ஓர் இடுகாட்டில் வந்து தங்கினார்.
அவதூதராக வாழ்ந்த அவர், அந்த இடத்தில் ஒரு சிறு குடிசையை அமைத்துக் கொண்டார். பக்தர் கூட்டம் அதிகரிக்கவெ இடுப்பில் ஒரு கோணித் துணியைச் சுற்றிக் கொள்ள ஆரம்பித்தார். சிறுகச் சிறுக அங்கு ஆலயங்களும், கட்டடங்களும் தோன்றி, தற்போது அந்த இடம் ஒரு பெரிய ஆசிரமமாக வளர்ந்துள்ளது.
அடிக்கடி சஞ்சாரம் செய்து கொண்டிருந்தாலும், உபாசனி பாபா, இருபத்தி நான்கு ஆண்டுகள் சகுரியிலேயே வாழ்ந்து விட்டு, 1941-ம் ஆண்டு அங்கேயே மகா சமாதி ஆனார்.
தற்போது ஷீர்டி எப்படியிருக்கிறது?
விடியற்காலை, நான்கு மணி, ஷீர்டியில் விதவிதமான புள்ளினங்கள் கூவுகின்றன. ஸ்ரீ சத்குரு சாய் பாபா கண் மலரும் நேரம் அது. பக்தர்கள்
உடா உடா ஸ்ரீ சாயிநாத குரு சரண கமல தாவா!
ஆதி – வ்யாதி பவதாம வசருநீ, தாரா ஜட ஜீவா…
பாபாவின் முக கமலம் கற்பூர ஒளியில் ஆயிரம் கோடி சூரியனாக பிரகாசிக்கிறது. கண்களிலிருந்து பொங்கும் அருள் வெள்ளம், அண்ட சராசரங்களையும் ஆனந்தத்தில் ஆழ்த்துகிறது. அனைத்து பக்தர்களும், பாண்டுரங்க விட்டலா, துவாரகா நாதா, தசரத ராமா, த்ரியம்பகேசுவரா, ஆஞ்சநேய மூர்த்தே, ஆபத்பாந்தவா, அநாத ரட்சகா – என்று கண்களில் நீர் தளும்ப பாபாவை வணங்குகின்றனர்.
ஓம் ஸ்ரீ சர்வ சத்குரு சாயிநாத் மகராஜ் கீ ஜெய்!!