எல்லையற்ற அன்புக்கு மறுபெயர்தான் பாபா. உள்ளத்தில் தூய அன்பு இருந்து விட்டால், மனிதன் மனிதனைப் புரிந்து கொள்ளவும், உற்ற தோழனாக ஏற்று உறவாடவும் வேறு மொழியே தேவையில்லை.
ராதாகிருஷ்ண ஆயி என்ற பாபாவின் பரம பக்தையின் கதை உருக்கமானது. இளம் வயதில் கைம்பெண்ணாகி தன் வாழ்நாளைப் பாபாவின் சேவைக்கே அர்ப்பணித்த அந்தத் தூய பெண்மணியின் வரலாறு ஒரு சோகக் காவியம்.
அகமத் நகரைச் சேர்ந்த அந்த மங்கையின் பெயர் சுந்தரி பாய். பெயருக்கேற்ற பேரழகி. அந்தக் கால வழக்கப்படி இளவயதிலேயே மண வாழ்க்கையை மேற்கொண்டாள். கண் நிறைந்த கணவனோடு கருத்தொருமித்து குடித்தனமும் நடத்தினாள். ஆனால், இல்லற வாழ்க்கையெல்லாம் இருபது வயதிற்குள்ளேயே முடிந்து விட்டது. காலனுக்கு என்ன அவசரமோ? கைப்பிடித்த கணவனைக் கவர்ந்து சென்று விட்டான். எழில் ஓவியமாய்த் திகழ்ந்தவளின் வாழ்க்கை, கண்ணீரில் தீட்டிய காவியமாய், அமங்கலக் கோலமாய் மாறிவிட்டது. சுந்தரிபாய், நிம்மதியழந்து நிர்க்கதியாய் நிராதரவாய் நின்றாள்.
தூய அன்பு, தூய பக்தியாகப் பரிணமித்தது. தூய்மையான சேவைக்கு அவளது உள்ளம் ஏங்கிற்று. இனி தெய்வ வழிபாட்டுக்கே இந்த உடல் பயன்பட வேண்டும் என்று உருதி பூண்டாள். உன்னத லட்சியம் பிறந்ததும், வீட்டை விட்டே பறந்து விட்டாள்.
எத்தனைத் தொலைவிலிருந்தாலும், என் பக்தர்களை நான் என்னிடம் அழைத்துக் கொண்டு விடுவேன் என்று அடிக்கடிக் கூறும் பாபா, சுந்தரி பாயை தன் இருப்பிடமான ஷீர்டிக்கே அழைத்துக் கொண்டது முற்பிறவியின் தொடர்பாகத்தான் இருக்க வேண்டும்.
அன்பு சேவைக்காக ஏங்கிய மங்கை, அன்புத் தெய்வத்திடம் அடைக்கலமானாள். வாழ்க்கையை பாபாவின் பொன்னடிகளுக்கே அர்ப்பணிப்பது என்று சபதம் ஏற்றாள். அவளுக்கென்று ஒரு தனி இல்லம் ஒதுக்கப்பட்டது. சுந்தரிபாய், ராதாகிருஷ்ண ஆயி – பிரேமைக்கொரு தாய் – என்று அழைக்கப்பட்டாள்.
அவள் 1907-ம் ஆண்டில் ஷீர்டிக்கு வந்தாள். அப்போது அவளுக்கு வயது இருபத்திரண்டு இருக்கும். வாழ்க்கையில் இன்பம் துய்க்க வேண்டிய வயதில், வைராக்கிய சிந்தையுடன் துறவி போல் வாழ்ந்தாள்.
மாசற்ற அந்தப் பெண்ணரசிக்கும் பாபாவுக்கும் இருந்த உறவு, ஜீவாத்மா-பரமாத்மா தத்துவத்தின் அடிப்படையில் நிலவிய எல்லையற்ற பிரேமையாகும். ராதாகிருஷ்ண ஆயி, ஒரு பக்தையின் லட்சணங்களுடன் பாபாவுக்குக் கைங்கரியம் செய்து வந்தாள்.
பாபா வெளியில் சென்றிருக்கும் நேரம் பார்த்து, மசூதியைக் கழுவிச் சுத்தம் செய்வாள். அவரது பாத்திரங்களைக் கழுவி துப்புரவாக வைப்பாள். ஆண்டுக்கொரு முறை புகைப்பிடித்த சுவர்களை தெய்த்து வெள்ளையடிப்பாள். பாபா, லெண்டித் தோட்டத்திற்கு செல்லும் போதெல்லாம் வீதிகளைப் பெருக்கிச் சுத்தம் செய்வாள். பாபா செல்லும் வழி நெடுகிலும், குனிந்த தலை நிமிராமல் சுத்தம் செய்த இடத்தில் மீண்டும் தனது காலடி படக்கூடாது என்பதர்காக பின்னோக்கி நடந்து கொண்டு பெருக்குவாளாம். பாபாவின் பாதங்களை அத்தனை புனிதமாகப் போற்றி வணங்கினாள்.
ராதா கிருஷ்ண அன்னைக்குக் குயில் போன்ற சாரீரம். தம்புராவை மீட்டி, பக்தி ததும்ப, மெய் மறந்து பாடும் போது, மீராவே உயிர் பெற்று வந்து விட்டது போல் தோன்றும். ஆலயமணியின் தேனோசையும், ஆவின் பாலின் அதி மதுரமும் கலந்து அருவியாய் உள்ளத்தில் பாயும் அப்பாடல்களைக் கேட்போர் நெஞ்சம் நெகிழும்; மெய் சிலிர்க்கும். மனம் ஒன்றித்திளைத்து, பாகாய் உருகிப் பரவசமாகும். பல நேரங்களில் அவள் தன்வயம் இழந்த நிலையில் மூர்ச்சையாகி பேரானந்தத்தில் லயித்து போனதுண்டு.
அன்பில் இளகி, பக்தியில் கரைந்து போனாலும், வைரம் பாய்ந்த நெஞ்சம் அவளுடையது. மனத்திடத்தைப் போலவே உழைப்புக்கு அஞ்சாத உடல் பலமும் அன்னையிடம் இருந்தது. ஸ்ரீ ராம நவமி, கோகுலாஷ்டமி, குரு பூர்ணிமா போன்ற திருவிழாக்களின் போது, ராதாகிருஷ்ண அன்னையின் வீட்டிற்கு வருவோரும், போவோருமாக எக அமர்க்களப்படும். அங்குதான் பிரசாதங்கள் தயாரிக்கப்படும். திருவிழாவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெறும். புதிய புதிய திட்டங்கள் வகுக்கப்படும். அந்தப் பெண்ணரசியின் தூய்மையான பக்தியியக் கண்டு செல்வந்தர்களெல்லாம் மனம் மாறி, கேட்டதையெல்லாம் வாரி வழங்குவார்கள்.
சாயி சமஸ்தானம் ஒன்றை அமைக்க முதன் முதலில் திட்டமிட்டது ராதாகிருஷ்ண அன்னைதான். சிறுகச் சிறுக பலரிடமிருந்து பொருள்களை வாங்கிச் சேர்த்தார். பாபவின் சாவடி ஊர்வலத்தை மகாராஜாவின் பவனி போல் உருவாக்கித் தந்த பெருமையும் அன்னைக்கு உண்டு. ஒன்று விட்டு ஒரு நாள், பாபா படுக்கச் செல்லும் சாவடியைக் கண்ணாடி, மலர்கள், ஓவியங்கள் முதலியவற்றைக் கொண்டு அலங்கரித்து அருமையானதொரு சயன அறையாக மாற்றினார். சாவடியில், பாபாவுக்குத் திருப்பள்ளியெழுச்சியும் சயனார்த்தியும் தொடங்கியதே ராதாகிருஷ்ண அன்னைதான்.
இது அந்தரங்கமான பக்தி, படோபத்திற்காகவோ, விளம்பரத்திற்காகவோ செய்யப்பட்டதல்ல. அன்னை, பாபாவின் தர்பாருக்கு வரமாட்டார். தத்துவ சந்தேகங்களைக் கேட்டதில்லை. மந்திரோபதேசமும் கோரியதில்லை. ஆனால், சிந்தனா சக்தியாலேயே பாபா அவரிடம் உரையாடினார், உபதேசங்களும் செய்தார்.
அந்தப் பக்தையின் மீது பேரன்பைப் பொழிந்து அவரது ஆன்மீகப் பசியைப் போக்கியது போலவே, அவரது வயிற்றுப் பசியையும் பாபாதான் தீர்த்து வைத்தார். தாம் தினமும் பிச்சை எடுத்துச் சேகரித்த உணவில் ஒரு பகுதியை ராதாகிருஷ்ண அன்னைக்குக் கொடுத்து அனுப்புவார். பாபாவின் பிரசாதம் வந்தால் தான் அன்னை சாப்பிடுவார். இல்லாவிட்டால், பட்டினியிருந்து விடுவார். அன்னை தனக்காக தன் இல்லத்தில் அடுப்பெரித்தது கிடையாது. இப்படி ஒன்பது ஆண்டுகள் ஒப்பில்லா வாழ்வு வாழ்ந்த இந்த உத்தமி, ஒரு களங்கத்துடன் உயிர் நீத்த சோகக் கதையுண்டு.
முதன் முதலில் ரேகே, பாபாவைத் தரிசிக்க வந்தது 1910-ம் ஆண்டில். அப்போது ரேகேயிக்கு இருபத்திரண்டு வயது. தரிசனம் ஆன பிறகு பாபா, ரேகேயை ராதாகிருஷ்ண அன்னையின் இல்லத்திற்கு செல்லும் படிப் பணித்தார். “எனக்கும், உனக்கும் அவள்தான் தாய்” என்று பாபா கூறி அறிமுகம் செய்து வைத்த அன்று முதல் அந்தப் பெண்மணியைத் தெய்வத் தாயாகாவெ ஏற்று, அன்பு செலுத்தி, பண்புடன் பழகி வந்தார் ரேகே.
ரேகேயை விட ராதாகிருஷ்ண அன்னை மூன்று வயதுதான் மூத்தவர். இருப்பினும், இருவருக்குமிடையே தாய்-சேய் உறவுதான் நிலவி வந்தது. ஷீர்டிக்கு வந்த போதெல்லாம் ரேகே தன் தாயுடனேயே தங்குவது வழக்கம். ரேகே ஷிர்டியிலிருக்கும் போது, அவருக்கும் சேர்த்தே பாபா அன்னையின் இல்லத்திற்கு உணவு அனுப்புவாராம்.
பாபா தன் கையாலேயே சமைத்து ஏழைகளுக்கு அன்னதானம் செய்த இரண்டு அண்டாக்கள், அவர் தினமும் பிக்ஷை வாங்கிய குவளைகள், நீர் அருந்திய கூஜாக்கள் மூன்று ஜதை காலணிகள், குளிக்கும் போது உபயோகிக்கும் சோப்பாக பயன்படுத்திய வழுவழுப்பான கல் முதலியன பக்தர்கள் தரிசனத்திற்காக இன்றும் வைக்கப்பட்டிருக்கிறது. சாவடி ஊர்வலத்தில் பயன்படுத்தப்பட்ட சாமரங்கள், கொடிகள், மாலைகள், விசிறிகள், பாபா அணிந்த நீள சட்டைகள், ஒரு கோட்டு முதலியனவும் பக்தர்கள் பார்வைக்காக வைக்கப் பட்டுள்ளன. பாபாவுக்காக பக்தர்கள் செய்து தந்த வெள்ளி சிம்மாசனம், வெல்வெட்டு படுக்கை, திண்டுகள், தலையணைகள் அப்படியே இருக்கின்றன. பாபா புகை பிடித்த மண் குழாய்கள் நிறைய அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. ஓர் அழகிய ஆஞ்சநேயர் விக்கிரகமும் அங்கே உள்ளது.