சீரடி சாய் சரிதம் – 7

அஞ்ஞான இருள் அத்தனை சீக்கிரம் நீங்கி விடுமா? நிலையில்லாதவற்றையே நிரந்தரம் என்று நம்பி வாழும் மாந்தர், தாங்கள் விரும்பும் பொருள்களையெல்லாம் தெய்வத்திற்கு அளித்து நிம்மதி பெற நினைக்கிறார்கள் அல்லவா?

துவாரகாமாயியில் வாழ்ந்த அந்த ஆண்டியை அரசனாக்க நினைத்தனர் பக்தர்கள். கந்தல் கோணியில் அமர்ந்திருந்தவருக்கு வெள்ளிச் சிம்மாசனம்  செய்து வைத்தனர். தலையில் அழுக்குத் துணியை அணிந்திருந்தவருக்கு, மணி மகுடம் அணிவித்து மகிழ்ந்தனர். சாய்ந்து கொள்வதார்காக பட்டுத் திண்டுகள், படுப்பதற்கு பட்டு மெத்தைகள், வெய்யில், மழையிலிருந்து பாதுகாக்க பட்டுக் குடை, ராஜ மரியாதையைக் காட்ட ஜரிகை மேலங்கிகள், அலங்காரக் குதிரை, வெள்ளித் தடிகள், சத்ர சாமரங்கள்! சாவடியில் செயற்கைச் சந்திரன் பிரகாசிக்கும் சயன அறை எங்கும் வாசனை திரவியங்களின் நறுமணம். மலர்த் தோரணங்களின் அலங்காரப் பந்தல், மங்கள வாத்தியங்களின் இன்னிசை, “ஸச்சிதானந்த சொரூப சமர்த்த சத்குரு சாய்நாத் மகராஜ் வருகிறார், பராக், பராக்.

ஆடம்பரம், ஆரவாரம், கோலாகலம், குதூகலம், உணர்ச்சியின் பரபர்பபு, மகிழ்ச்சியின் கொந்தளீப்பு!

அருள் முனிவரோ, இத்தனைக்குமிடையே தாமரை இலைத் தண்ணீராக வாழ்ந்தார். ஓட்டிலிருந்து விலகி உள்ளுக்குள்ளேயெ சுழலும் விளாம்பழத்தைப் போல் உடலிலிருந்து பிரிந்து வாழும் வைராக்கிய புருஷராக அவர் காட்சியளித்தார்.

பாபாவை ஆண்டவனின் அவதாரமாகவே மதித்த மக்கள், மூன்று வெளையும் ஷோடச உபசாரங்களுடன்  அவரை ஆராதித்தனர். முதலில் இதற்கு சம்மதம் அளிக்காத பாபா, இது வேண்டும், இது வேண்டாம், இது இருக்கலாம், இது கூடாது என்று சரீர அபிமானத்தையும் கடந்த நிலையில் தூய பக்திக்குக் கட்டுப்பட்டுத் தமக்கு மக்கள் ஆரத்திப் பாடி மகிழ்ந்ததைப் பொருட்படுத்தாததில் ஆச்சரியமில்லை.

உற்சாகம் மேலிட்ட சில பக்தர்கள் இந்த அர்ச்சாவதார மூர்த்தியை பல்லக்கில் ஊர்வலமாக அழைத்துச் செல்லவும் திட்டமிட்டார்கள். அதற்காக ஒரு பல்லக்கையும் வாங்கி வந்து விட்டார்கள். ஆனால் அதில் ஏறுவதற்கு பாபா கண்டிப்பாக மறுத்து விட்டார். எனவே, அந்தப் பல்லக்கு மசூதிக்கு வெளியிலேயே வைக்கப்பட்டிருந்தது.

ஒரு நாள் ஒரு பக்தர் பாபாவிட்ம ஓடி வந்து, “பாபா, நேற்று இரவு அந்தப் பல்லக்கிலிருந்து இரண்டு சிறு வெள்ளிக் குதிரைகளை யாரோ திருடிக்கொண்டு போய் விட்டார்கள்” என்று குறைப்பட்டுக் கொண்டார்.

பாபா சிரித்தார்.”அவன் குதிரையை மட்டும்தானா திருடிக் கொண்டு போனான்? அந்தப் பல்லக்கையே ஏடுத்துக் கொண்டு போயிருக்கக் கூடாதோ” என்று கேட்டாராம்.

பின்னர் ஒரு நாள் ரேகேயும், அவஸ்தி என்ற பக்தரும், பாபாவுக்காக ஒரு மரத்தேர் செய்து கொண்டு வந்தார்கள். அதில் சத்குரு சவாரி செய்து பார்க்க வேண்டும் என்ற ஆசை அவர்களுக்கு. அந்தத் தேரை மசூதிக்கு வெளியே கொண்டு வந்து நிறுத்தி விட்டு, பாபாவை அழைத்து வந்து காட்டினார்கள். அப்போது அதைப் பற்றி ஒன்றுமே சொல்லாமல் ஒரு புன்னகை புரிந்து விட்டுச் சென்று விட்டார் பாபா.

மறுநாள் அதிகாலையில் தரிசனத்திற்கு வந்த தாஸ் கனு மகராஜிடம், “இந்த அநியாயத்தைப் பார்த்தாயா? என் பக்தர்கள் என் சவத்தை ஏற்றிச் செல்வதற்கு ஒரு வண்டி செய்து வைத்திருக்கிறார்கள். இது தூய பக்திக்கு அடையாளமா? என்ரு கேட்டார் பாபா.

தாஸ்கனுவுக்கு கோபம் வந்து விட்டது. “பாபா, நீங்கள் இதற்கெல்லாம் இடம் கொடுக்கக் கூடாது” என்று கூறி விட்டு, அந்தப் பக்தர்களை வாயில் வந்தபடி ஏசினார். சற்று நேரம் கழித்து பாபா சிரித்து விட்டு, “உனக்குக் கண் இல்லையா? அதோ பார், வெளியே தேர் நிற்கிறது. அதில் ஏறிக் கொண்டு நான் உலகம் முழுதும் சுற்றப் போகிறேன்” என்று தாஸ்கனுவிடம் கூறினார்.

அப்படிக் கூறினாரே தவிர, அந்தத் தேரில் பாபா ஏறவேயில்லை. துவாரகாமாயியில் அந்தத் தேர் இப்போதும் நிற்கிறது.

ஒரு திருட்டு வழக்கிலும் பாபா சாட்சி சொல்லியிருக்கிறார்.

ஷீர்டியில் தங்க நகைகளைத் திருடியதற்காக ஒருவனைக் கைது செய்து கோர்ட்டில் விசாரித்தார்கள். அவனோ சாயி பாபாதான் தனக்கு நகைகளைக் கொடுத்ததாகக் கூறினான். சாட்சியம் சொல்லக் கோர்ட்டுக்கு வரும்படி பாபா அழைக்கப்பட்டார். ஆனால், சில பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க, மாஜிஸ்திரேட், மசூதிக்கெ வந்து பாபாவை விசாரிக்க ஒப்புக் கொண்டார்.

“மாஜிஸ்திரேட்:  உங்கள் பெயர் என்ன?”

பாபா: “சாயி என்று மக்கள் அழைப்பார்கள்”

மாஜி: “உங்கள் தந்தையின் பெயர் என்ன?”

பாபா: அல்லா.

மாஜி: எங்கு வசிக்கிறீர்கள்?

பாபா: “எல்லா இடங்களிலும்”

மாஜி:  “இந்த நகைகளை நீங்கள் தான் இவனுக்குக் கொடுத்தீர்களா?”

பாபா: “வேறு யார் கொடுத்திருக்க முடியும்?”

இத்துடன் விசாரணை முடிந்து விட்டது. கடவுளுடன் ஐக்கியமாகிவிட்ட ஒருவரின் வேதாந்தப் பேச்சு இது என்பதை மாஜிஸ்திரேட் புரிந்து கொண்டு விட்டார். இதை ஏற்றுக் கொள்ளச் சட்டம் இடம் தராததால் திருடனுக்குத் தண்டனையும் அளித்து விட்டார். இதைப் பற்றிப் பின்னர் பாபாவிட்ம யாரோ கூறியபோது, “மாஜிஸ்திரேட் தண்டனை அளிக்கவில்லை. அவனுக்கு யார் நகைகலைக் கொடுத்தாரோ, அவரே தண்டனையையும் அளித்து விட்டார்” என்று பதில் அளித்தார் பாபா.

பாபா மகா சமாதி அடைவதற்கு முன் மூன்று நாட்களாகவே, அவர் அசதியுடன் காணப்பட்டார். அதிக நடமாட்டம் இல்லாவிட்டாலும், தம்முடைய அன்றாட அலுவல்களை அவர் சிறிதும் குறைத்துக் கொள்ள வில்லை.

அந்த அக்டோபர் பதினைந்தாம் தேதி விஜய தசமி தினம் வந்தது. அன்று சந்நியாசிகள் ஊர் எல்லையைக் கடந்து விஜய யாத்திரை செல்வார்கள். பாபாவும் அன்று உடல் என்ற எல்லையைக் கடந்து சென்று விட்டார்.

“பாபா தமது பூத உடலை விட்டுப் பிரியும் வரை சுய நினைவுடந்தான் இருந்தார். அன்று காலை முதல் எல்லோருடனும் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார். அடிக்கடி “எனக்கு துவாரகாமாயியில் இருக்கப் பிடிக்கவில்லை. “பூத்தி வாடாவிற்கு (அடுத்துள்ள சத்திரத்திற்கு) போய் விடுகிறென்” என்று கூறிக் கொண்டிருந்தார். பகல் ஒரு மணியிருக்கும். அங்கு பணி புரிந்து வந்த ஒரு பெண்மணியை அழைத்து, “நான் உனக்குத் தர வேண்டிய பாக்கி இது” என்று கூறி, சட்டைப் பையிலிருந்து ஆறு ரூபாய் எடுத்துக் கொடுத்தார். மறுபடியும் அவளை அழைத்து மேலும் மூன்று ரூபாய் கொடுத்தார். பின்னர் மசூதிக்கு வெளியே நின்றிருந்த ஒரு பிச்சைக் காரனை அன்புடன் அழைத்து, இந்தாப்பா, உனக்கு நான் தர வேண்டிய பாக்கி, என்று கூறி ஆறணாவை எடுத்துக் கொடுத்தார்.

“மணி சுமார் இரண்டு இருக்கும். அருகிலிருந்த பக்தர் ஒருவரை அழைத்து, புகை பிடிப்பதற்கான மண் குழாயை எடுத்துவரும்படி பணித்தார். அவர் ஓடோடிச் சென்று அதை எடுத்துக் கொண்டு வந்தார்.

ஆனால், புகை பிடிக்க அங்கே பாபா இல்லை. உடல் என்ற சட்டையை கழற்றி எறிந்து விட்டு, அவர் விஜய யாத்திரையாகப் புறப்பட்டு விட்டார்”.

பாபாவின் சமாதி அமைந்த இடத்தை அவரே தேர்ந்தெடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இள வயதில் ஷீர்டியில் பாபா வசித்த போது, அவர் ஓர் இடத்தைப் பண்படுத்தி தினம் மாலையில் நீர் ஊற்றி, அங்கு மலர்த்தோட்டம் ஒன்று போட்டதாக கூறப்படுகிறது. பின்னர் பாபாவின் பரம பக்தர்களில் ஒருவரான பெரும் பணக்காரர் பாபு சாகிப் பூத்தி என்பவர் அந்த நிலத்தை வாங்கினார். ஷீர்டிக்கு வரும் பக்தர் கூட்டம் நாளும் பெருகி வந்ததால், அங்கு ஒரு சத்திரம் கட்டலாம் என்று அவர் திட்டமிட்டு, அதற்கு பாபாவிட்ம அனுமதி கோரினார்.  பாபா சத்திரம் கட்டுவதற்கு ஆசி வழங்கினார்.  ஆனால் நடுவில் ஒரு சிறு இடத்தைக் காலியாக விட்டு விடும்படி கேட்டுக் கொண்டார். “எதற்காக?” என்று கேட்டபோது, அங்கே நான் ஒரு கோயில் கட்டப் போகிறேன் என்று பதிலளித்தார் பாபா.

“என்ன கோயில் கட்டப் போகிறீர்கள்?” என்று சிலர் கேட்டனர். அதற்கு பாபா, “இங்கே ராதாகிருஷ்ணன் கோயில் கட்டப்  போகிறேன் என்று பதில் கூறினார். பின்னர் அந்தப் பக்கமாகப் போகும் போதெல்லாம் பாபா, அந்தக் காலி இடத்திற்கு முன்னல் நின்று தம் கையிலிருக்கும் சிறு குச்சியால் இப்படியும், அப்படியும் சைகை காட்டி விட்டுப் போவாராம்.

பாபாவின் வாக்கு ஒரு போதும் பொய்யாகாது. அவர் கூறியபடியே அந்த இடத்தில் இப்போது ஓர் அன்புக் கோயில் எழும்பியிருக்கிறது. அன்புத் தெய்வமாக வாழ்ந்த பாபா நிரந்தரமாக உறையும் சமாதி அன்புக்கோர் ஆலயமாகத் திகழ்வதில் ஆச்சரியமில்லை.