பக்தர்களின் மனப் பக்குவ நிலையை உணர்ந்து அவர்களிடையே தியாக சிந்தையையும், பற்றற்ற தன்மையையும் வளர்க்கவே பாபா தட்சிணை பெற்று வந்தார் என்று கூறுவது தவறாகாது. பிறருக்கு பொருளுதவி செய்வதை கிடைப்பதற்கரிய பெரும் பேறாகவும், ஆண்டவனால் அளிக்கப்பட்டுள்ள ஒரு வாய்ப்பாகவும் நாம் கருத வேண்டுமே தவிர, “என்னிடம் இருக்கிறது” “நான் கொடுக்கிறேன்” “அவன் என்னையே நம்பியிருக்கிறான்” என்ற கர்வம் கொள்ளக்கூடாது. அபபடி நினைத்த ஒருவருக்கு ஒரு சமயம் பாபா கற்பித்த பாடத்தை ரேகே கூறுகிறார்.
நானா சாகிப் சந்தோர்கர் என்பவர் மகல்சபதிக்கு அடுத்தபடியாக பாபாவின் முக்கிய பக்தராகவும், சீடராகவும் விளங்கியவர். உயர் குடியில் பிறந்த அவர், தர்ம சாஸ்திரங்களைக் கற்றுணர்ந்திருந்தார். பட்டப்படிப்பு படித்து விட்டு, டெபுடி கலெக்டராகப் பணிபுரிந்து வந்தார். முற்பிறவிகளில் அவர் தமக்கு சீடராக இருந்திருக்கிறார் என்பதை அறிந்து ஷீர்டிக்கு வந்து தம்மைக் காணும்படி சொல்லி அனுப்பினார் பாபா.
பிறவியாலும், பழக்க வழக்கங்களாலும், இந்து மதத்தில் பற்றுக் கொண்டிருந்த சந்தோர்கர், “ஒரு முஸ்லீம் பக்கிரியைத் தரிசிக்க விரும்பவில்லை” என்றவர் பாபா மூன்று முறை சொல்லி அனுப்பிய பிறகே ஷீர்டிக்கு வந்தார். பாபாவைக் கண்டார். சரணாகதி அடைந்தார். உள்ளத்தால் உயர்ந்தார் உன்னத நிலையையும் அடைந்தார்.
பாபாவுக்கு தம் பக்தர்களின் எதிர்காலம் கண்ணாடியில் பார்ப்பதைப் போல் பளிச்சென்று தெரிந்திருந்தது. அவர்களுக்கு நெரப்போகும் அல்லது கெட்டது அனைத்தையும் அறிந்திருந்ததால், காரணத்தைக் கூறாமல் “இதைச்செய், இதைச் செய்யாதெ” என்று மட்டுமெ கூறி அவர்களை பாபா எச்சரிப்பது வழக்கம்.
சாதாரணமாக தரிசனத்திற்காக ஷீர்டிக்கு வருபவர்கள் பாபாவிடம் விடைபெற்றுக் கொண்ட பிறகே ஊருக்குத் திரும்பிப் போவது வழக்கம். சிலருக்கு உத்தரவு கொடுத்து அனுப்புவார். சிலரை “நாளைக்குப் போகலாம்” என்பார். சிலரிடம் “இப்போது என்ன அவசரம்? உன்னை அனுப்புவதற்கு எனக்குத் தெரியும். அதுவரியயில் இங்கேயே இரு” என்பார்.
பாபா “உதி” கொடுத்து “நீ போய் வா” என்று கூறினால் பயணத்தில் சிரமமேயிருக்காது. சௌகரியமாக வீடு போய் சேருவார்கள். அப்படி அவசரமாகப் போக வேண்டுமென்று நினைப்பவர்கள் பாபாவிடம் கேட்காமலோ அல்லது அவருடைய பேச்சை அலட்சியப்படுத்தி விட்டோ புறப்பட்டுப் போனால் வழியில் அதற்கான தண்டனையை நிச்சயம் அனுபவிப்பார்கள். குதிரைகள் தடுக்கி விழும், வண்டி குடை சாயும், திருடர்கள் வழி மறிப்பார்கள் அல்லது ரயில் தவறி விடும். இன்னும் இதைப் போல் எத்தனையோ விபத்துக்கள் நேரிடும்.
ஒரு சமயம் புரந்தரே என்ற பக்தர் பம்பாய்க்குத் திரும்ப வேண்டும் என்று பாபாவிடம் உத்தரவு கேட்டார். ஆனால் பாபா அவருக்கு அனுமதியளிக்கவேயில்லை. அன்று திங்கட்கிழமை, சந்தை தினம். ரயிலில் நெரிசல் தாங்க முடியாது. கோபர்கானிலிருந்து மன்மாடு செல்லும் ரயில் மாலை 6.30 மணிக்கு புறப்படுகிறது. மணியோ 4 ஆகி விட்டது. மாட்டு வண்டியில் பதினோரு மைல் போயாக வேண்டும். எப்போது புறப்படுவது, எப்போது ரயிலைப் பிடிப்பது? என்று தவித்துக் கொண்டிருந்தார் புரந்தரே. நாலரை மணிக்குத்தான் அனுமதி கொடுத்தார் பாபா. அவருக்கு மட்டுமல்ல, ரேகேயையும் புரந்தரேயுடன் புறப்பட்டுப் போகும்படி பணித்தார் பாபா.
புரந்தரேயிற்கு ரயில் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்லை. ரேகே நம்பிக்கையோடு இருந்தார். “பாபா சொல்லி விட்டார். கவலைப்படாமல் புற்பபடுங்கள் என்று அவருக்கு உற்சாகம் அளித்தார். இருவரும் மாட்டு வண்டியில் புறப்பட்டனர். கோபர்கான் வந்து சேர்ந்த போது மனி 7.45 ஆகி விட்டது. மன்மாடு செல்லும் ரயில் போய் விட்டிருந்தது. புரந்தரேவுக்கு ஒரே ஏமாற்றம். ரேகேயிக்கோ, “பாபா உத்தரவு கிடைத்தும் இப்படி நேர்ந்து விட்டதே” என்ற திகைப்பு.
என்ன ஆச்சரியம்! இது கனவா, நனவா?
ஏட்டே கால் மணிக்கு ஸ்டேஷனில் ஒரு ரயில் வந்து நின்றது. அதே நேரத்தில் வழக்கத்திற்கு மாறாக கோபர்கானுக்கு அப்படியோரு ரயில் வந்ததைப் பற்றி விசாரித்த போது அது ஒரு ஸ்பெஷல் ரயில் என்றும் அது எதிர்பாராமல் அங்கு நின்றது என்றும் தெரிய வந்தது. இருவரும் பாபாவின் கருணையையும், மகிமையையும் நினைத்துக் கண்ணீர் மல்கி, அவரது திருநாமத்தை உச்சரித்துக் கொண்டே ரயிலில் ஏறிக் கொண்டனர்.
புரந்தரேயின் தாயாருக்கு பண்டரிபுரம் சென்று விட்டோபாவைத் தரிசிக்க வேண்டும் என்று பேரவா. பயணத்துக்கு பாபாவிட்ம அனுமதி கேட்க வேண்டும் என்று காத்துக் கொண்டிருந்தார்.
இதையறிந்த பாபா, அந்த அம்மையாரிடம் “எப்போது பண்டரிபுரம் போவதாக உத்தேசம்?” என்று கேட்டார். அடுத்த கணம் பாபா நின்ற இடத்தில் பண்டரிநாதனையே நேரில் தரிசித்தாள் அந்தத் தாய்.
பண்டரிநாதா, புண்டரீக வரதா, என்று கன்னத்தில் போட்டுக் கொண்டு கண்களில் நீர் சொரிய கீழே விழுந்து கும்பிட்டார். பின்னர், பண்டரிபுரம் செல்லவில்லையா? என்று பாபா கேட்கும் போதெல்லாம் அந்த அம்மையார், “எனக்கு ஷீர்டியே பண்டரிபுரம், பாபாவே பண்டரிநாதன்” என்று கூறுவது வழக்கம்.
ஒரு சமயம் தென்னாப்பிரிக்காவிலிருந்து ஒரு டாக்டர் ஷீர்டிக்கு வந்திருந்தார். அவர் ராம பக்தர். மசூதியினுள் நுழைவதற்கும், ஒரு முஸ்லீம் சந்நியாசியை வணங்குவதற்கும் தயங்கி வெளியிலேயே நின்று கொண்டிருந்தார் அவர். அவருடைய உள்ளத்தை அறிந்து அவருக்கு ஸ்ரீ ராமனாகவே தரிசனம் தந்தார் பாபா.
“கோதண்டராமா, கல்யாணராமா” என்று கூவிக் கொண்டே பாபாவின் பாதங்களில் விழுந்து வணங்கினார் அந்த டாக்டர்.
ராம பக்தனான சமர்த்த ராமதாசருக்கு ஸ்ரீ ராமனாகத் தரிசனம் தந்தார் பண்டரிநாதன். பாபாவோ, பக்தர்களுக்கு பண்டரிநாதனாகவும், ஸ்ரீ ராமனாகவும் தரிசனம் கொடுத்திருக்கிறார்.
ரேகே மகராஜ், அவருக்கு ஸ்ரீ ராமர் பாபாவாக தரிசனம் தந்ததைக் கூறுகிறார். ஒரு சமயம் ரேகே நாசிக்கில் உள்ள காலா ராமர் கோயிலுக்குச் சென்றிருந்தார். சாயி பாபாவையே கடவுளாக கருதி வந்த அவருக்கு ராமர் அங்கு பாபாவாகவே காட்சி தந்தார். காலா ராமனைத் தரிசிக்க சென்ர ரேகே அங்கு பாபாவையே தரிசித்தார்.
ஸ்ரீ சாயிபாபாவைப் போல் ஜீவன்முக்தர்கள் உலகில் வாழ்ந்தாலும், இவ்வுலகத்தினின்று தனித்தே இருக்கிறார்கள். உலகப் பொருள்களில் அவர்கள் இச்சை கொள்வதில்லை. உடலிலிருந்து தங்களைப் பிரித்து, எந்நேரமும் பிரும்ம ஞானத்தில் லயித்திருக்கும் இத்தகய மகான்கள் தங்களது சௌகரியத்திற்காகவும், சுக வாழ்விற்காகவும் யாரிடமும் எதையும் எதிர் பார்ப்பதில்லை. ஆனால், ஆசாபாசங்களை வென்று, தியாக வாழ்வு மேற்கொண்டிருக்கும் இவர்களிடம் மனத்தைப் பறி கொடுக்கும் பக்தர்களோ, அவர்களது காலடியில் உலக்ப பொருள்களையெல்லாம் கொண்டு வந்து குவித்து விடுகிறார்கள். அன்புக்குக் கட்டுப்பட்ட அந்த ஆண்டிகளும், அடியார்களின் மனம் நோகக்கூடாது என்பதற்காக அவற்றையெல்லாம் ஏற்றுக் கொள்கிறார்கள்.
ஐம்புலன்களையும் அடக்கியாளப் பழகியவர்களின் ஆன்மாவை, எத்தகய சுக போகங்களும் தீண்ட முடியாது அல்லவா? அவர்களுக்குப் பட்டு மெத்தையும், மண் தரையும் ஒன்றாகத்தான் தோன்றும். உப்பில்லாக் கஞ்சியும் அறுசுவை விருந்தும் ஒரே ருசியாகத்தான் இருக்கும். பற்றற்ற பச்சிளங்குழந்தைக்கு மண் பொம்மை, மரகத மாலை இரண்டுமே விளையாட்டுப் பொருள்கள் தானே. அநாதையைப் போல் ஆலமரத்தடியில் அமர்ந்திருக்கும் ஆனைமுகத்தானுக்கு எருக்கம் பூ மாலை போட்டால் என்ன? தங்கக் கம்பியில் கோர்த்துக் கட்டிய நவரத்தின மாலை போட்டால்தான் என்ன?
பெற்றோரிய விட்டுப் பிரிந்து, உற்றார் உறவினர்களைத் துறந்து இச்சைகளை வென்று, தன்னலம் மறந்து வாழும் ஆன்ம ஞானிகளை என்றுமே போற்றி வணங்கிப் பெருமையடைந்துள்ளது நம் பாரத நாடு. இத்தகைய “தெய்வீகத் தியாகி”களின் பாதங்களில் பொன்னும் பொருளும், பட்டமும் பதவியும், அறிவும் ஆற்றலும் சரணாகதி அடைந்துள்ளதற்குச் சான்றுகள் நம் சரித்திரத்தில் மண்டிக் கிடக்கின்றன. உலக இன்பங்களைக் கால் தூசாக மதித்து, பெருவாழ்வு வாழ்பவர்களிங்கால் தூசுக்காக தவமிருந்து பழக்கப்பட்டவர்களாயிற்றே நம் மக்கள்!
எங்கோ பிறந்து, யாரிடமோ வளர்ந்து, யோக நிஷ்டையில் சிறந்து, ஷீர்டிக்கு வந்து, பாழடைந்த மசூதியொன்றில் தங்கியிருந்த ஸ்ரீ சாயி பாபா என்ற கோவணாண்டிக்கு இவ்வுலகில் சொந்தமுமில்லை, பந்தமுமில்லை. ஆனால், கருணை விழியாலும், அன்பு மொழியாலும் அனைவரியயும் ஆட்கொண்ட அந்த அருளாளரின் பொன்னடிகளில் பக்தர்கள் அடிமைகளாகக் கிடந்தனர். சாத்திரப் பண்டிதர்களும், செல்வச் சீமான்களும், சீரோடு வாழ்ந்தோரும், அந்தணப் பெரியோர்களும், அறிவுக் களஞ்சியங்களும், அதிகாரம் பெற்றிருந்தோரும், அண்ணலின் ஆணையை நிறைவேற்ற அல்லும் பகலும் கை கட்டிக் காத்திருந்தனர்.
ஆனால் நிறைவோடு வாழ்ந்தவருக்கு, குறையோடு வந்தவர்களிடம் பொருளாகக் கேட்பதற்கு ஒன்றுமேயில்லை. மாறாக, வந்தவர்களிடம் அன்பை வாரி வாரிச் சொரிந்தார் அந்த சத்குரு. குருவிடம் தளராத நம்பிக்கை வைப்பதோடு, எல்லையற்ற பொறுமையையும் கடைபிடிக்கும்படி கோரினார். “நான் இருக்க பயமேன்?” என்று அபயமளித்தார். “எல்லா ஜீவராசிகளிடமும் இருப்பது ஒரே ஆன்ம தத்துவம்” என்பதை உணர்த்தினார்.