பாபா நம் வேதங்களையும் தர்ம சாஸ்திர நூல்களையும் இதிகாசப் புராணங்களையும் அறிந்திருந்தார். அவற்றை மேற்கோள்கள் காட்டிப் பக்தர்களுக்கு உபதேசங்கள் செய்திருக்கிறாரா என்று கேட்டால், அதற்கு பதில், பாபா புத்தகங்களைப் படித்து யாரும் பார்த்ததில்லை. அவர் தம் புனிதக் கரங்களால் தொட்டுத் தர வேண்டும் என்பதற்காக யாராவது பாகவதம், ராமாயணம், பகவத்கீதைபோன்ற நூல்களைப் பாபாவிடம் கொண்டு வந்து கொடுப்பார்கள். பாபா அவற்றை வாங்கிப் புரட்டிப் பார்த்து விட்டு தமது நல்லாசிகளுடன் திருப்பித் தந்து விடுவார். சிலர் தாங்கள் எழுதிய கவிதைகளையும், சாஸ்திர வியாக்கியானங்களையும் கொண்டு வந்து பாபாவிடம் சமர்ப்பிப்பார்கள். அவற்றைப் படித்துப் பார்க்காமலேயே, சிலவற்றை பிரசுரம் செய்யச் சொல்லுவார். சிலவற்றை நிராகரித்து விடுவார். தாஸ் கனு மகராஜ் ஒரு சமயம் பாபாவின் சரிதத்தை எழுதிக் கொண்டு வந்திருந்தார். அப்போது பாபா கால்களை நீட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்தார். தாஸ் கனு தாம் எழுதியதைப் பாபாவின் பாதங்களில் வைத்ததும, பாபா தமது கால்களைச் சட்டென்று மடக்கிக் கொண்டு, அந்தப் புத்தகத்தை எடுத்துத் தமது தலையின் மீது வைத்துக் கொண்டு திருப்பிக் கொடுத்தார். தாஸ் கனு எழுதியிருந்ததை தான் முழு மனத்துடன் ஏற்றதாகவே அதற்குப் பொருள்.
தாம் பாபாவுடன் இருந்த சமயங்களில் அவர் மத சம்பந்தமாக நம் புராண நூல்களைப் பற்றி யாருடனும் விவாதித்து நான் பார்த்ததில்லை. ஆனால் ராம விஜயம், ஏகநாதரின் பாகவதம், ஞானேஸ்வரி பகவத்கீதை, விஷ்ணு சஹஸ்ரநாமம் போன்ர நூல்களை அவர் பாராயணம் செய்யும்படி பாபா பக்தர்களிடம் கூறுவதுண்டு.
பாபா என்றுமே யாருக்குமே உபதேசம் என்று எதையும் தனியாகக் கூறியது கிடையாது. அவ்வப்பொழுது அவர் கூறும் கதைகளாலும் வேடிக்கைப் பேச்சுக்களாலும், நிகழ்த்திக் காட்டும் விளையாட்டுக்களின் மூலமாகவும், நமக்குத் தேவையான ஞானத்தை புகட்டி விடுவார்.
ஒரு சமயம் மசூதியில் நான்கைந்து பேர் பாபாவைச் சுற்றி அமர்ந்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு பக்தர் தட்டு நிறைய செவ்வாழைப் பழங்கள் கொண்டு வந்து பாபாவின் முன் வைத்தார். அங்கிருந்த ரேகே மகராஜிற்கு செவ்வாழைப் பழம் என்றால் உயிர். அதன் மீது அவர் கவனம் சென்றது. நாக்கில் ஜலம் ஊறியது. ஆசை வளர்ந்தது. பாபா வழக்கபடி அருகில் இருந்தவர்களுக்கு பழங்களை விநியோகிப்பார். அப்போது தனக்கும் இரண்டு பழங்கள் கிடைக்கும் என்று ரேகே நினைத்தார்.
பாபா ஒரு பழத்தை எடுத்தார் உரித்தார். பழத்தை வேறு ஒருவருக்குக் கொடுத்தார். தோலை எடுத்து ரேகே யிடம் போட்டு, “சாப்பிடு, சாப்பிடு” என்றார் சிரித்துக் கொண்டே. ரேகேயும் தோலைத் தின்றார். மற்றொரு பழத்தை எடுத்தார் பாபா. முன் போலவே பழத்தை வேறொருவருக்குக் கொடுத்து விட்டு, தோலை என்னிடம் கொடுத்துத் தின்னச் செய்தார். கடைசியாக பாபா, ஒரு பழத்தை எடுத்து, உரித்து பாதியைக் கடித்துத் தின்று விட்டு, மற்றொரு பாதியை ரேகே யிடம் கொடுத்துத் தின்னச் சொன்னார். “ருசியாக இருக்கிறதா?” என்று கேட்டார் விஷமச் சிரிப்புடன்.
அதற்கு என்ன அர்த்தம் தெரியுமா? நீ ஒரு போதும் வெளிப்பகட்டில் மனத்தைப் பறி கொடுக்கக் கூடாது. அவற்றுக்கு ஆசைப்பட்டால் இப்போது தோலைத் தின்பது போல் கஷ்டப்படத்தான் வேண்டும். உலகப் பொருள்களின் பளபளபைக் கண்டு மனத்தை கலங்க விட்டால் துன்பம்தான் வந்தடியயும் என்ற பெரிய வேதாந்த தத்துவத்தை தனக்கு பாபா உபதேசித்ததாகவே ரேகே மகராஜ் கருதினார்.
மற்றொரு சமயம், ரேகே பாபாவுக்காக எலுமிச்சைப் பழ சர்பத் தயாரித்தார். பாபாவின் மீது எனக்குத்தான் அதிக பக்தி என்ற அகங்காரம் என்னுள் இருந்ததால் சர்பத் நன்றாக இருக்கிறதா, தித்திப்பு போதுமா என்று ருசி பார்த்து விட்டு பாபாவிடம் கொடுத்தேன். பாபா அதில் பாதியை எதிரில் அமர்ந்திருந்த தீட்சித் என்பவரிடம் கொடுத்து அருந்தச் சொன்னார்.
சர்பத்தைச் சாப்பிட்ட பாபா, முகத்தை சுளித்தார். “சே, ஒரே புளிப்பாக இருக்கிறது. சகிக்க வில்லை. என் பக்தன் என்று பெருமையடித்துக் கொள்ளும் ஒருவன் கலந்த சர்பத்தா இது? ஏன் என்னை இவர்கள் இப்படி வைதைக்கிறார்களோ? என்று கடிந்து கொண்டார். எதிரில் உட்கார்ந்திருந்த பக்தரும், சர்பத் ரொம்பவும் புளிக்கிரது என்று கூறினார். ரேகேயும் வாங்கி ருசித்தார். தாங்க முடியாத புளிப்பு.
ரேகே வுக்கு ஒன்றுமே புரியவில்லை. முதலில் ருசி பார்த்த போது சர்பத் நன்றாகத்தானே இருந்தது? இத்தனை அக்கறையோடு சர்பத்தைத் கலந்த தன்னை பாபா கடிந்து கொள்ளும்படி நேர்ந்து விட்டதே, தான் செலுத்தும் பக்தியிலும், செய்யும் செயலிலும் ஏதோ குறையிருக்கிறது. தனக்கு இன்னும் தன்னடக்கம் தேவை என்று ரேகே மகராஜ் மனம் வருந்தினார்.
பாபா தனக்கு புத்தி புகட்டி விட்டதாக ரேகே கருதினார். குரு சேவையில் பரிபூரண சரணாகதி இருக்க வெண்டும். “நான்” என்ற அகங்கார சிந்தை கூடாது என்று என் மனம் தெளிவு பெற்றதும், பாபா சிரித்தார். “பாவம், வருத்தப்படாதே, நீ நன்றாகத்தான் கலந்திருக்கிறாய், இப்போது சாப்பிட்டுப் பார், தித்திக்கும்” என்றார். சர்பத்தைக் குடித்துப் பார்த்தார் ரேகே. என்ன அதிசயம்! இப்போது நா இனித்தது. என்றார்.
ஸ்ரீ சாய் பாபா எந்த ஆண்டு பிறந்தார், எந்த ஆண்டில் ஷீர்டிக்கு வந்தார் என்று இது வரையில் ஒருவராலும் நிச்சயமாக நிர்ணயிக்கமுடியவில்லை. 1918-ம் ஆண்டு அக்டோபர் 15-ந் தேதி விஜய தசமி தினத்தன்று மகாசமாதி அடியயும் போது அவருக்கு வயது என்ன என்பதும் ஒருவருக்கும் தெரியாது. ஆனால், அவர் ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு மேல் அந்த கிராமத்தில் வசித்தார் என்பது மட்டும் தெரிகிறது.
பாபாவின் பிறந்த இடம், பெற்றோர், வயது, மதம், ஜாதி எல்லாமே ஒரு மர்மமாக இருக்கிறது.
அறிந்தும், அறியாமலும், உணர்ந்தும், உணராமலும், கண்டும், காணாமலும், புரியாத புதிராக உருவமெடுத்து உலவி வந்த பாபா, தம்மை அரைகுறையாக அறிமுகப்படுத்திக் கொண்டு மனிதர்களோடு மனிதராக பழகிய போதிலும், முற்றும் துறந்த முனிவராக, முக்காலத்தையும் உணர்ந்த ஞானியாக முழுமையான வாழ்வு வாழ்ந்திருக்கிறார். பயனுள்ள அந்த வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும், ஒவ்வொரு நிமிடத்தையும், ஒவ்வொரு செய்கையின் பொருளையும், ஒவ்வொரு பேச்சின் விளக்கத்தையும், ஒவ்வொரு மௌன மொழியின் தத்துவத்தையும், ஒவ்வொரு யோகப் பார்வையின் ஆனந்தத்தையும், நேரில் அனுபவித்தவர்கள் முற்பிறவியில் புண்ணியம் செய்தவர்கள் அன்றோ!
ஷீர்டிக்கு வந்த பாபா, பல வருடங்களுக்கு யாரிடத்தும் கை நீட்டி பணம் வாங்கியது கிடையாது. ஆனால் கடைசி பத்து பதினைந்து வருடங்களில் தம்மை தரிசிக்க வரும் பக்தர்களிடம் பாபா “தட்சிணை” கேட்டு வாங்கும் பழக்கத்தை மேற்கொண்டார். அதற்கு முன்பு உள்ளூர் மக்களும் அடுத்து கிராமங்களில் வசித்தவர்கள் மட்டுமே பாபாவைத் தரிசிக்க வந்து கொண்டிருந்தனர். மசூதியில் அமர்ந்திருந்த அவர், சந்நியாச தர்மத்திர்கு ஏற்ப, தினமும் ஐந்து வீடுகளுக்குச் சென்று உணவு யாசித்து உண்டு வந்தார். பின்னர், பாபாவின் பெருமையும், மகிமையும் வெளியுலகுக்கு பரவி உயர் குடியில் பிறந்தவர்களும் சிறுக சிறுக ஷீர்டிக்குப் புனித யாத்திரை வந்தார்கள். பணக்கார பக்தர்களின் கூட்டம் பெருகப் பெருக பாபா அவர்களிடம் தட்சிணை வசூலிக்க ஆரம்பித்தார்.
ஆனால், எல்லோரிடமும் பாபா தட்சிணை கேட்கவில்லை. சிலரிடம் மட்டுமெ கேட்டார். அவர்கள் ஒவ்வொரு முறை தரிசனத்திற்கு வரும் போதும் கேட்டார். ஒரே நாளில் ஒருவரிடம் பல முறை கேட்டார். அதன் காரணத்தைப் பாபா ஒருவரே அறிவார்.
வசூலிக்கும் பணத்தை பாபா சேர்த்து வைக்கவில்லை. காலையில் வசூலான தொகையை மாலைக்குள் ஏழைகளுக்கு விநியோகம் செய்து விடுவார். யார் யாரிடமோ வாங்கி, வேறு யார் யாருக்கோ தானமாக கொடுத்து வந்தார். ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய் வசூலானாலும், இரவு படுக்கப் போகும் போது பாபா பிச்சைக்காரனாகத்தான் இருந்தார். அவரது இறுதி நாட்களில் பாபாவின் பாதங்களில் பணமாகக் கொண்டு வந்து குவித்தார்கள். அத்தனை செல்வத்தையும், இல்லாதவர்களுக்கு வாரி வாரி வழங்கினார் அந்த வள்ளல். பாபா மகாசமாதியான மறுதினம் துவாரகாமாயியில் மிச்சம் இருந்த பணம் மொத்தம் பதினாறு ரூபாய்களே.
பார்த்த போதெல்லாம் பாபா தட்சிணை கேட்கிறார் என்று அஞ்சி, சிலர் தரிசனத்திற்கு வருவதையெ நிறுத்திக் கொண்டார்களாம்! அவர்களெல்லோரும் உலகப் பொருள்களில் பற்றும் பாசமும் கொண்டு பேரின்பத்தைத் துய்க்கத் தவறியவர்கள். பணத்தைத் தெய்வமாக வணங்கி, ஆண்டவனின் அருளைப் பெற முடியாமற் போன அஞ்ஞானிகள்.
மற்றும் சிலர் கொண்டு வந்த பணத்தில் ஒரு பகுதியை மறைத்து வைத்துக் கொண்டு, என்னிடம் இதுதான் இருக்கிறது என்று அரை மனத்துடன் தட்சிணை கொடுத்தார்கள். பாபாவை ஏமாற்றி விடமுடியுமா? நமக்குள்ளே உறைபவரும் அவராகவே இருப்பதால் நம்மிடம் எவ்வளவு இருக்கிறது என்று அவருக்குத் தெரியாதா? “உன் பையில் இருக்கும் அந்த ஐந்து ரூபாயையும் கொடுத்து விடு” என்பாராம். வேறு வழியில்லாமல் முகத்தில் அசடு வழிய அவர்கள் அதையும் எடுத்துக் கொடுத்து விட்டு எழுந்து வந்து விடுவார்கள்.
வேறு சிலரோ பாபாவின் உண்மையான பக்தர்கள். அதாவது பாபாவையே முழுமையாக் நம்பி “எல்லாம் அவருடைய பணம்” என்ற மனப்பான்மையில் மனம் நோகாமல், அகமும் முகமும் மலர, கையில் கொண்டு வந்ததையெல்லாம் அவர் மலரடிகளில் குரு காணிக்கையாக சேர்ப்பித்து விட்டுப் போன உத்தம சீலர்கள்.
இவ்வாறு பக்தர்களிடம் தட்சிணை கோருவதைப் பற்றி பாபாவே சில சமயங்களில் விளக்கம் கொடுத்திருக்கிறார். “நான் எல்லாரிடமும் தட்சிணை கேட்பதில்லை. சிலரிடம் கேட்டு வாங்க வேண்டும் என்று எங்ககு “அல்லா” (கடவுள்) உத்தரவிடுகிறார். அவர்களிடம் மட்டுமே கேட்கிறேன். அவர்கள் எந்த பிறவியிலேயோ கடன் பட்டதை நான் இந்தப் பிறவியில் வசூலிக்கிறேன். ஆனால், நான் ஒரு பங்கு வசூலித்து இவர்களுக்கு நான்கு பங்காக திருப்பிக் கொடுத்து விடுகிறேன். அது மட்டுமல்ல, இந்தப் பணத்தை வசூலித்து, நான் கடன் பட்டவர்களுக்கு திருப்பிக் கொடுத்து விடுகிறேன்” என்றெல்லாம் பாபா கூறியுள்ளார். குருவின் பரிபூரண அருளும் ஆசியும் இருந்தால்தான் இம்மாதிரியான விளக்கங்களின் முழுப் பொருளையும் நாம் புரிந்து கொள்ள முடியும்.