தேவையான போது மக்களுக்கு அறிவு புகட்டுவதற்காக பாபா அற்புதங்களை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார். ஷீர்டிக்கு வந்த சில வருடங்கலில் பாபா ஒரு பைத்தியக்கார பக்கிரியாகத்தான் மக்களுக்கு காட்சி தந்தார். கந்தலான உடை அணிந்து , கிடைத்ததைத் தின்று கொண்டிருந்தார். சில சமயங்களில் காலில் சலங்கைக் கட்டிக் கொண்டு கபீர்தாஸின் பாடல்களைப் பாடிக் குதித்து ஆடுவார். வசீகரத் தோற்றத்துடன் காணப்பட்ட அந்த இளைஞனைக் கிராம மக்கள் ஓர் அதிசயப் பிறவியாகவே மதிக்கத் தொடங்கினார்கள்.
அதற்குப் பின்னர் சிறிதுகாலம் பாபா, பச்சிலை மூலிகைகள் முதலியவற்றைக் கொண்டு மக்களுடைய நோய்களைக் குணப்படுத்தினார். ஆனால் அதற்காக ஒரு சல்லிக்காசு கூட அவர் வாங்கிக் கொள்ள மாட்டார். அதுவரையில் எங்கெல்லாமோ அலைந்து திரிந்து கொண்டிருந்த பாபா பாழடைந்த மசூதியில் நிரந்தரமாகக் குடியேறினார். அந்த மசூதியில் அவர் நிறைய அகல் விளக்குகளை ஏற்றி வைப்பது வழக்கம். அதற்காக அங்கிருந்த இரு கடைக்காரர்களிடம் தினமும் எண்ணெய் யாசிப்பார். அவர்களும் பாபாவுக்கு இலவசமாக எண்ணெய் தருவார்கள்.
ஒரு நால் அந்த எண்ணெய் வியாபாரிகள் இருவரும் கூடிப் பேசினார்கள். தினமும் இந்தப் பக்கிரிக்கு இலவசமாக எண்ணெய் கொடுத்துக் கொண்டிருந்தால் அதற்கு முடிவே இருக்காது. யாரோ ஒரு பைத்தியத்தின் ஆசையை நிறைவேற்றுவதற்காக நாம் ஏன் வீணாக நஷ்டப்பட வேண்டும்? என்று சிந்தித்தார்கள். இனி பாபா வந்து கேட்டால் எண்ணெய் கொடுக்காமல் துரத்தி விட வேண்டும் என்றும் முடிவெடுத்தார்கள்.
அதன்படியே மறுநாள் பாபா வந்து கேட்ட போது, “எங்களிடம் எண்ணெய் இல்லை. போய் வா” என்று துணிந்து ஒரு பொய்யைச் சொல்லி அவரைத் துரத்தி விட்டார்கள். வேரு வழியில்லாமல் பாபாவும் மசூதிக்குத் திரும்பி விட்டார். விளக்கேற்ற தமக்கு எண்ணெய் கிடைக்கவில்லை என்ற துயரத்தை விட, ஓர் அற்ப விஷயத்திற்காக வியாபாரிகள் பொய் சொல்லி விட்டார்களே என்றுதான் பாபா மனம் வருந்தினார். சிந்தனை, சொல், செயல் மூன்றிலும் மக்கள் சத்தியத்தையே கடைப் பிடிக்க வேண்டும் என்று உலகிற்கு நல்லுபதெசம் செய்வதற்காக அவதரித்த பாபா அந்த வியாபாரிகளுக்கு அறிவு புகட்ட வேண்டும் என்று முடிவு செய்தார். அன்றுதான் எல்லோரும் காணும்படியாக முதன் முதலாக பாபா ஓர் அற்புதத்தை நிகழ்த்திக் காட்டினார்.
கடையிலிருந்து வழக்கமாக எண்ணெய் வாங்கி வரும் தகரக் குவளைகளைப் பார்த்தார் பாபா. அதன் அடியில் கொஞ்சம் எண்ணெய் மிச்சம் இருந்தது. அதில் சிறிது தண்ணீரை விட்டு குலுக்கினார். அதை அப்படியே குடித்தார். பின்னர் குவளை நிறியய மீண்டும் தண்ணீர் விட்டார். அதை அங்கிருந்த அகல்களில் நிர்பபினார். திரிகளை எடுத்துப் போட்டார். இதையெல்லாம் வியாபாரிகளும், கிராம மக்களும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். “இது என்ன பைத்தியக்காரத்தனம்? தண்ணீரில் விளக்கு எரியுமா?” என்று கேலி பேசினார்கள். அவர்களைப் பாபா திரும்பிக் கூட பார்க்கவில்லை. பொறுமையுடன் ஒவ்வொரு திரியாக ஏற்றினார். அத்தனை அகல் விளக்குகளும் இரவு முழுவதும் மிகப் பிரகாசமாக எரிந்தன.
இந்த அற்புதத்தைக் கண்டு ஊர் மக்கள் பிரமித்துப் போனார்கள். ஐயோ, இந்த மகானிடம் பொய் சொன்னோமே என்று வியாபாரிகள் உள்ளம் குமைந்தார்கள். பொய் பேசியதற்காக பாபாவின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டார்கள். மனம் திருந்தினார்கள். பாபா நிகழ்த்திய அற்புதம் கடைசியில் பலன் தந்து விட்டது.
பாபாவின் யோக சக்திக்கு உதாரணமாக மற்றொரு நிகழ்ச்சியும் உண்டு.
தூசியும், தும்பும் மண்டிக்கிடந்த மசூதியில் தரையில் ஒரு கந்தலை விரித்துத்தான் பாபா படுப்பது வழக்கம். இதைக் கண்ட பாபாவின் பக்தர் ஒருவர், ஆறடி நீளத்தில் ஒரு மரப்பலகையை செய்து பாபாவுக்கு அளித்திருந்தார். ஆனால், பாபா அதைக் கீழே போட்டு அதன் மீது படுக்கவேயில்லை. அந்தப் பலகையை ஊஞ்சலாகக் கட்டி தொங்க விட்டு அதில் ஏறிப்படுத்துக் கொண்டார்.
அந்த ஊஞ்சலை எப்படிக் கட்டினார்? நைந்து போன கந்தலைக் கிழித்து அந்தத் துணியால் கட்டியிருந்தார். அந்தப் பலகையை தாங்குவதற்கே அந்தத் துணிக்கு வலிவு போதாது. அப்படியிருக்க அதில் பாபாவும் ஏறிப் படுத்துக் கொண்டார். அந்தப் பலகை அறுந்து விழாதது பெரிய அதிசயமாகத்தான் இருந்தது. போதாக்குறைக்கு பாபா நான்கு அகல் விளக்குகளை ஏற்றி பலகையின் நான்கு மூலைகளிலும் வைத்திருப்பார்.
இதில் இன்னோர் ஆச்சரியமும் இருந்தது. அந்தப் பலகை எப்படி பாபாவைத் தாங்கியது என்ற வியபு ஒருபுறமிருக்க, அந்தப் பலகையில் எப்படி ஏறுகிறார்? அதிலிருந்து அவர் எப்படி இறங்குகிறார் என்பது பெரிய மர்மமாகவே இருந்தது. இந்த மர்மத்தை எப்படியாவது கண்டு பிடித்து விட வேண்டும் என்று பக்தர்கள் தலைகீழாக நின்றார்கள். இரவில் கண் விழித்துக் காவல் இருந்து உற்றுக் கவனித்தார்கள். ஒளிந்து நின்று பார்த்தார்கள். ஆனால் பலன் இல்லை. உயரத்திலிருந்த அந்தப் பலகையில் பாபா எப்படி ஏறினார்? எப்பொழுது ஏறினார்? என்று ஒருவராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. பாபா கீழே இருப்பது தெரியும். பின்னர் அவர் பலகையில் படுத்திருப்பது தெரியும். இடையில் என்ன நிகழ்ந்தது என்பதை ஒருவராலும் கண்டுபிடிக்கவே முடியவில்லை.
இந்த அற்புதத்தை வேடிக்கை பார்ப்பதற்காக மசூதியில் இரவில் கூடிய கூட்டம் அதிகரித்துக் கொண்டே போயிற்று. இது பாபாவுக்குப் பெரிய தொந்தரவாக போனதால் ஒரு நாள் கோபத்தில் அந்தப் பலகையை எடுத்து உடைத்துப் போட்டு விட்டார். அன்று முதல் மீண்டும் கந்தலை விரித்துத் தரையிலேயே படுக்கத் தொடங்கினார்.
பாபாவிடம் இருந்த மகத்தான சக்திகளை யாராலும் முழுமையாக அறிய முடியவில்லை. எல்லோர் இதயங்களிலும் பிரகாசிக்கும் ஆன்மீக ஒளியாக அவர் திகழ்ந்ததால் அனைவரது உள்ளங்களிலும் தோன்றிய உணர்வுகளையும் மனத்தில் ஓடிய எண்ணங்களையும் பாபா தெள்ளத் தெளிவாக அறிந்திருந்தார். உடல் என்ற் கூட்டுக்குள் அவரது ஆன்மா அடைபட்டுக் கிடந்தது போல் தோன்றினாலும், நினைத்த போது அது எங்கு வேண்டுமானாலும் சஞ்சரித்து விட்டு வந்தது. நடந்தது, நடப்பது, நடக்கப் போவது என்ற முக்கால நிகழ்ச்சிகளையும் அறிந்திருந்த ஞானப் பிரகாச மூர்த்தியாக அவர் வாழ்ந்திருக்கிரார். பாபாவின் லீலா வினோதங்களைக் கேட்கக் கேட்க அந்த சச்சிதானந்த சொரூபத்தில் மனம் ஒன்றி விடுவதில் வியப்பில்லை.
தம்மை தரிசிக்க வருபவர்களின் மனத்தில் இருக்கும் எண்ணங்களை அப்படியே அறியும் சக்தி வாய்ந்த பாபா ஒரு நாள் நிகழ்த்திக் காட்டிய மற்றோர் அற்புதத்தையும் அறிய வேண்டும்.
பாபா ஒரு மகான் என்று நம்பாத ஓர் ஆசாமி ஒரு சமயம் அவரைத் தரிசிக்க ஷீர்டிக்கு வந்தார். மூன்று நாட்கள் தங்குவதென்றும், அதற்குள் பாபா ஏதாவது ஒரு அற்புதத்தை நிகழ்த்திக் காட்டினால் அவரை ஒரு மகான் ஏன்ரு ஒப்புக் கொண்டு அவர் கால்களில் விழத் தயார் என்றும் அவர் நண்பர்களிடம் கூறியிருந்தார்.
எல்லோரையும் போல் அவரும் பாபாவை தரிசிக்க மசூதிக்கு வந்தார். உள்ளே நுழைவதற்கு முன் ஓர் ஓரமாகச் செருப்புகளை கழற்றி வைத்து விட்டு வந்தார். அவர் பாபாவின் அருகில் வரவில்லை. யார் என்று தன்னை அறிமுகம் செய்து கொள்ளவுமில்லை. தொலைவிலிருந்த படியே பாபாவைத் தரிசித்து விட்டு, செருப்புகளை விட்டிருந்த இடத்திற்கு வந்து பார்த்தார். அங்கு செருப்புக்களைக் காணவில்லை. அங்கிருந்தவர்களை விசாரித்துப் பார்த்து விட்டு மன வருத்தத்துடன் தங்கியிருந்த விடுதிக்குத் திரும்பி விட்டார்.
உடன் வந்திருந்த நண்பர்களுடன் உணவருந்தி விட்டு கையைக் கழுவ வெளியே வந்தார் அந்த ஆசாமி. அப்போது ஒரு மராத்திய சிறுவன் கையில் வைத்திருந்த ஒரு குச்சியில் அவரது செருப்புகளைக் கட்டி தொங்க விட்டுக் கொண்டு, “ ஹரி கா பேட்டா, ஜரி கா பேட்டா” என்று கூவிக் கொண்டே அந்தப் பக்கமாக சென்ரான்.
செருப்புக்களை இழந்த ஆசாமி பையனை அழைத்து இது என் செருப்பு. ஏன் அங்கிருந்து எடுத்தாய்? என்று கெட்டார். அதற்குப் பையன், “உங்கள் பெயர் ஹரியா? என்று கேட்டான்.
ஆமாம்!
உங்கள் அப்பாவின் பெயர் கனோபாவா?
ஆமாம்!
உங்களிடம் ஜரிகைத் தலைப்பாகை இருக்கிறதா?
ஓ, இருக்கிறதே! என்று சொல்லி விட்டு உள்ளே ஓடிப் போய் தனது ஜரிகைத் தலைப்பாகையை எடுத்து வந்து காட்டினார் அவர்.
உடனே பையன், “சரி அப்படியானால் இது உங்க செருப்புதான் இந்தாங்க” என்று அவரிடம் எடுத்துக் கொடுத்தான்.
அது சரி, நீ யார் தம்பி? என்று விசாரித்தார் அவர்.
பாபாதான் எங்கிட்ட, “இந்தச் செருப்புகளைக் கொடுத்து இவ்விதம் கூவச் சொன்னார். கனோபாவின் பிள்ளை ஹரி என்பவர் யார் என்று விசாரித்துப் பார் அவரிடம் ஜரிகைத் தலைப்பாகை ஒன்றும் இருக்கிறதா என்று கேட்டுப்பார். அப்படிப்பட்டவரிடம் இந்தச் செருப்புகளைச் சேர்த்து விட்டு வா, என்று சொன்னார், என்று கூறி விட்டு அந்தச் சிறுவன் ஓடி விட்டான்.
ஹரிக்கு உடம்பெல்லாம் ஒரு கணம் ஆடி விட்டது. தன் பெயரும், தன் அப்பாவின் பெயரும் பாபாவுக்கு எப்படித் தெரியும் என்று அதிசயித்தார். ஆகா! சோதிக்க வந்த தன் உள்லத்தை அறிந்து பாபா ஓர் அற்புதத்தை நிகழ்த்திக் காட்டி விட்டார். அவருக்கு ஆனந்தக் கண்ணீர் பொங்கி வந்தது. “பாபா, நீங்கள் ஒரு மகான்தான், தன்னை அறிந்த ஞானிதான். இனி உங்களை சந்தேகிக்கவே மாட்டேன். நான் உங்கள் அடிமை. இது சத்தியம்! என்று கதறிக் கொண்டே மசூதிக்குள் ஓடினார்.