சீரடி சாய் சரிதம் – 3

கண்டோபா கோயிலின் பூசாரியாக, மகல்சபதி என்பவர் இருந்தார். அந்த நேரத்தில் தான் பாபா அங்கு வந்தார்.  அவர்தான், பாபாவை சாயி என்று பெயரிட்டு அழைத்தவர்.  பாபாவின் முதல் சீடரும் இந்த மகல்சபதி தான்.

ஏதோ ஒரு முஸ்லிம் பக்கிரி என்று நினைத்து பாபாவை முதலில் விரட்டினாலும், நாள் ஆக ஆக பாபாவிடம் மகல்சபதிக்கு பெரும் மதிப்பும், மரியாதையும் ஏற்பட்டது.  நெறி தவறி, வாழத் தெரியாமல் இருந்த அவர், பாவாவின் வைராக்கியத்தையும், ஒழுக்க சீலத்தையும் தன்னலமற்ற தன்மையையும் வியந்து அவருக்கு பணிவிடைகள் செய்ய ஆரம்பித்தார்.  பொற்கொல்லரான அவர் நாளடைவில் தமது குலத் தொழிலை விட்டு விட்டு, கண்டோபா கோயிலின் ஆராதனையிலும், பாபாவின் சேவையிலுமே வாழ்க்கையைக் கழித்தார். பாபாவும் மகல்சபதியின் மீது அளவு கடந்த அன்பைச் சொறிந்தார்.

மசூதியிலும், சாவடியிலும் பாபாவுடனேயே மகல்சபதி உறங்குவது வழக்கம். சில சமயங்களில் ஒரே துணியில் ஒரு பாதியில் பாபாவும், மற்றொரு பாதியில் மகல்சபதியு உறங்குவார்களாம். பாபாவுடன் அத்தனை நெருங்கிப் பழகியவர் மகல்சபதி.

பாபாவிய இந்து முறைப்படி வழிபடுவதற்கும் முன்னோடியாக திகழ்ந்தவர் மகல்சபதியே. பாபாவின் கால்களிலும், கழுத்திலும், பின்னர் நெற்றியிலும் சந்தனப் பொட்டு வைத்து, பூக்கள் போட்டு பூஜை செய்தார். அதைப் பாபாவும் அனுமதித்தார். அப்படி ஆராதிக்க வேறு யாருக்கும் பாபா இடம் கொடுக்கவில்லை.

1886-ம் ஆண்டு ஒரு நாள் பாபா மகல்சபதியை அழைத்து “நான் கடவுளைக் காணச் செல்கிறேன். திரும்பி வரும் வரையில் என் உடலைப் பாதுகாத்துக் கொண்டிரு. மூன்று நாட்களுக்குள் நான் திரும்பி வரவில்லையென்றால் என்னை இந்த வேப்பமரத்தடியில் புதைத்து விடு” என்று கூறித் தம் உடலை விட்டுப் பிரிந்து சென்று விட்டார்.

பஞ்சாயத்தார்கள் பரிசோதனை செய்து பார்த்து விட்டு பாபா இறந்து விட்டார் என்று தீர்ப்புக் கூறினார்கள். உடனே சடலத்தைப் புதைப்பதற்கான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர். ஆனால், மகல்சபதி பாபாவின் உடலைக் கட்டித் தழுவிக் கொண்டு, “இதைப் புதைப்பதற்கு அனுமதிக்க மாட்டேன்” என்று பிடிவாதமாக கூறி விட்டார். அவருடைய பைத்தியக்கார பக்தியை நினைத்து ஊரார் சிரித்தனர்.

மூன்று நாட்கள் பாபாவின் உடலை மகல்சபதி கண்ணிமைப் போல் காத்து வந்தார். மூன்று நாட்கள் முடிவதற்குள் பாபா மீண்டும் உயிர் பெற்று எழுந்து விட்டார். பின்னர் முப்பத்திரண்டு வருடங்கள் அவர் வாழ்ந்தார்.

ஸ்ரீ சாயி பாபா என்ற பெயரைக் கேட்டதும் அவர் யோக சக்தியால் அற்புதங்களை நிகழ்த்திக் காட்டிய ஒரு சித்த புருஷர் என்றுதான் அவரைப் பற்றி அதிகம் அறிந்திராத மக்கள் நினைப்பது வழக்கம். ஆனால் அவருடைய சத்திய விளக்கத்தை அறியும் போது மாயையில் சிக்கி உழலும் உலக மாந்தரின் அஞ்ஞான இருளைப் போக்க வந்த ஒரு ஞான மூர்த்தியாகவும் பாபாவை போற்றி வணங்க வேண்டும்.

பாபாவைப் போன்ற அன்புத் தெய்வங்களுக்கு எல்லா பக்தர்களும் ஒன்றுதான். வெண்டியவர், வேண்டாதவர் என்ற வேற்றுமையே இருக்க முடியாது. தம்மை நாடி வரும் அடியார்களிடம் பாரபட்சமற்ற ஒரே நோக்குடன் அம்மகான் நடந்து கொண்டாலும், சிலருடன் மிக அன்னியோன்னியமாக பழகுவார்கள். அன்பை வாரி வழங்குவார்கள். பந்த பாசத்தை அறுத்தெறிந்து விட்டு, ஆசாபாசங்களற்று வாழும் அத்தகய ஆதர்ச புருஷர்களும் சில சமயங்களில் மக்களிடையே உணர்ச்சியால் உருவாகும் ஒரு வித பாசத்தை வளர்த்து விடுவார்கள்.

பாபா அப்படி ரேகே என்ற தனது பக்தரிடம் தூய பாசத்தை வளர்த்துக் கொண்டிருந்தார். பக்தியில் கரைந்து பண்பட்ட அவரது உள்ளம், பாபாவின் கருணையால் கட்டுண்டு அவரது காலடியில் வீற்றிருந்த போதெல்லாம் மெழுகாய் உருகியிருக்கும் என்பதில் சந்தேகமேயிருக்க முடியாது.

பாபாவும் ரேகேயைத் தமது செல்லக் குழந்தையாகவே மதித்து பரிவு காட்டியிருக்கிறார். ரேகேயை “பாலா, குழந்தை” என்றே வாய் மணக்க, நெஞ்சினிக்க தேனொழுக பாபா அழைப்பாராம்.

நாங்கள் பாபாவிடம் அத்தனை நெருங்கிப் பழகிய அவரிடம், பாபா நிகழ்த்திய அற்புதங்கள் பற்றி கேடுகும் போது, அற்புதங்கள் என்றால் எதைக் கூறுகிறார்கள்? மந்திரத்தால் விக்கிரகங்கள், விபூதி, குங்குமம் வரவழைப்பது போன்ற் மாயா ஜால வித்தைகள் எதையும் பாபா செய்ததில்லை. இம்மதிரியான “மிராக்கிள்” என்பனவற்றை பாபாவால் எளிதாக செய்திருக்க முடியும். ஆனால் இவர்றை விட மகத்தான சாதனைகளெல்லாம் புரிந்திருக்கிறார். சிலருடைய வாழ்க்கை முறையையே தலை கீழாக மாற்றியமைத்திருக்கிறார். ஒரு பார்வையால், ஒரு சொல்லால், ஒரு புன்னகையால் தனிப்பட்டவர்களின் வாழ்க்கையில் பெரும் புரட்சியே செய்திருக்கிறார்.

தாஸ் கனு என்ற பாபாவின் அடியார் ஒரு சாதாரண போலீஸ்காரராகத்தான் இருந்தார். ஆரம்பத்தில் பாபாவை தரிசிக்கக் கூட அவர் மறுத்தார். ஆனால் அவர் மீது பாபாவின் திருஷ்டி விழுந்தது. அவ்வளவுதான். அவரைப் பல சோதனைகளுக்குள்ளாக்கி போலீஸ் இலாகாவை விட்டே விலகும்படி செய்து, பின்னர் தம்முடைய முக்கியமான சீடர்களில் ஒருவருவராக்கிக் கொண்டு விட்டார்.

அது மட்டுமா? கேளிக்கைப் பாட்டுகள் பாடி கிராமத் தெரு கூத்துகளில் நடித்துப் பழக்கப்பட்டிருந்த தாஸ் கனுவைத் தமது சங்கற்பத்தாலும், அனுக்கிரக விசேஷத்தாலும் புகழ் பெற்ற புராண பிரவசனகர்த்தாவாக மாற்றி விட்டார் பாபா. பிற்காலத்தில் தாஸ் கனு ஊர் ஊராகச் சென்று மகான்களின் வரலாறுகளைக் காலட்சேபங்களாகச் சொல்லி லட்சக்கணக்கான மக்களை பக்தி மார்க்கத்தில் ஈடுபடச் செய்தார். நாளடைவில் அவர் பாபாவின் சரித்திரத்தையும், லீலைகளையும் பற்றிப் பாட்டுக்களைப் பாடி மக்களிடையே பாபாவின் புகழைப் பரப்பினார். அவர் கதையைக் கேட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஷீர்டிக்கு வந்து பாபாவைத் தரிசித்து புண்ணியம் பெற்றார்கள்.அதிகம் படித்திராத இந்தத் தாஸ் கனு மகராஜ் ஈசோபநிஷத்துக்கு வியாக்கியானம் ஒன்று எழுதியிருக்கிறார். பாபாவின் கருணையால் தான் இதையெல்லாம் செய்து முடித்ததாக அவரே கூறியிருக்கிறார். இவ்வாறு பாபா தம்மை நாடி மசூதிக்கு வந்தவர்களில் பலரை உயரிய எண்ணங்கல் கொண்ட உயர்ந்த புனிதர்களாக மாற்றியதோடு, சமூகத்திலும் பயனுள்ள பண்பாளர்களாகப் படைத்துத் தந்திருக்கிறார். இதை விட பெரிய அற்புதம் வேறென்ன இருக்க முடியும் என்று ரேகே மகராஜ் கேட்கிறார்